இடைச் சொற்கள்

1
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 28 in the series 26 ஆகஸ்ட் 2012

திடீரென ஒன்றும் வரவில்லை.

சொல்லிவிட்டுத்தான் வந்தான்.

எத்தனையோ வருடங்களுக்கு முன்

சொல்லிக்கொள்ளாமலேயே

போனவன்

எவ்வளவோ அருகிலிருந்தும்

கண்ணிலேயே படாதவன்

இப்போது

எவ்வளவோ தூரத்திலிருந்து வந்து

கதவைத் தட்டுகிறான்.

 

கண்களை இடுக்கிக்

காக்கை நகம்

கீறினதாய்ப் படிந்த

நயனச் சிரிப்பில்

அவன் உள்ளத்தின்

வெண்மை தெரிந்தது.

 

அவன் வாழ்வை

மிகவும் மெதுவாகச்

செதுக்கிக்கொண்டிருந்த விதி

சில வருடங்கள்

அவனையே மறந்துபோனதில்

ஒதுங்கிக்கிடந்த நாட்களின்

சூன்யத்தை

புதிது புதிதான வார்த்தைகளில்

என்னிடம் வடித்துக்கொண்டிருந்தான்.

 

சேர்ந்துகொண்ட நோய்களை

சேராமலே போன உறவுகளை

இழந்து பெற்றவைகளை

பெற்றும் இழந்தவைகளை

பெறாமலேயே இழந்தவைகளை

இழக்காமல் பெற்றவைகளை

எனத்தொடர்ந்து கொண்டிருந்த

அவன் பேச்சு

சுழல் மிக்க நதியின்

பயணத்தைப் போல

என்னை இழுத்துச்

சென்றுகொண்டிருந்தது.

 

 

என்னுடன் இருந்த நேரத்தின்

ஒரு துளியைக் கூட

அவன் மௌனத்தை இட்டு

நிரப்பவில்லை.

 

காலத்தை

முன்னும் பின்னும்

மேலும் கீழும் இழுத்து

அவன்

தீட்டிவிட்டுப் போன

சித்திரம்

நாங்கள் பிரிந்திருந்த நாட்களை

வரைந்து காட்டியது போலுமிருந்தது

வரையாது விட்டது போலுமிருந்தது!

 

     —  ரமணி

 

Series Navigationகார்த்திக்-சலீம்-அஷோக் மற்றும் நான்
author

ரமணி

Similar Posts

Comments

  1. Avatar
    ponkanthasamy says:

    அற்புதமாக இருந்தது கவிதை.சேர்ந்த நோய்களும் சேராத உறவுகளும் நல்ல படப்பிடிப்பு.இருப்பும்,இழப்பும் கொண்ட வாழ்வை நினைவூட்டுகிறது வந்த உறவு.முடிவு அருமையாக வந்துள்ளது.

Leave a Reply to ponkanthasamy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *