இந்தியா – குறைந்த விலை பூகோளம்

This entry is part 48 of 53 in the series 6 நவம்பர் 2011

இந்தியாவுக்கு விஜயம் செய்யும் மேலை நாட்டு உயர் அதிகாரிகள் பாடும் பல்லவிகள் உடைந்து போன பழைய ரிக்கார்டு போல அலுப்பூட்டுபவை. முதலில் இந்தியர்களின் ஆங்கில அறிவை புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியா உருவாக்கும் ஏராளமான விஞ்ஞான மற்றும் பொறியியல் பட்டதாரிகள் பற்றி ஓஹோ என்று புகழ்வார்கள். அடுத்தபடி இந்தியாவில் தொழில் ஆரம்பிக்க போவதாகவும் பல ஆயிர இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு என்பார்கள். பிறகு, மேலை நாட்டில் படித்த இந்தியர் ஒருவரை மேலாளராக அறிமுகப் படுத்திவிட்டு விமானம் பிடித்து அவர்கள் ஊருக்கு போய்விடுவார்கள். செய்தித்தாளில் இது போன்ற செய்திகளைப் படித்து விட்டு, “நம்முடைய பெருமை தொரைக்கு புரிஞ்சா மாதிரி நம்மவர்களுக்கு புரியவில்லையே” என்று அங்கலாய்ப்போம். அடுத்த மேலை நாட்டு அதிகாரி வந்து இதே பல்லவியை வேறு வார்த்தைகளில் பாடுவார்…..
நமக்கு ஆங்கிலம் என்ற அண்ணிய மொழி அறிவு பற்றி அப்படி ஒரு பெருமை. தாய் மொழி சரியாக தெரியாவிட்டால் அதற்குகூட ஒரு தனி சமூக அந்தஸ்தையே நம்மில் உருவாக்கி விட்டோம். ஏன் மேலை நாட்டுக்காரர்கள் நம் ஆங்கில அறிவை புகழ்கிறார்கள்? அவர்களுக்கு வேலை ஆக அது ஒரு முக்கியத் தேவை. நமது ஈகோ அவர்களுக்கு பயன்படுகிறது. ஜப்பானில் இப்படி புகழாரம் சூட்டினால் வேலை ஆகாது – இதை மேல்நாட்டவர் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். பல பின்னலுவல் மையங்கள் மற்றும் கணினி மென்பொருள் அமைப்புகளுக்கு ஆங்கில அறிவு தேவையாகி விட்டது. அதுவும் மேலை நாட்டு நிறுவனங்களுக்கு வேலை செய்து கொடுக்கும் பொழுது மிகவும் அவசியம். மேலை நாட்டவர் பார்வையில், கணினி மற்றும் பின்னலுவல் வேலைகளுக்கு ஆங்கில மற்றும் அடிப்படை கணித அறிவு தேவை. 90 சதவீத வேலைகளுக்கு மேல்நிலைப் பள்ளிப் படிப்பு போதுமானது. ஒரு உயர்கல்வி (முதுநிலைப் பட்டதாரி) படித்தவ்ர் மேலை நாட்டவரின் சொத்தை மேலைகள குறைந்த சம்பளத்திற்கு செய்து கொடுத்தால் என்ன அவர்களுக்கு கசக்குமா? புகழாரம் சூட்டிவிட்டு அடுத்த விமானத்தைப் பிடித்து தங்கள் ஊருக்கு சென்று விடுகிறார்கள். இந்தியாவை அவர்களுக்குள் எப்படிக் குறிப்பிடுகிறார்கள்? – குறைந்த விலை பூகோளம் – low cost geography.
5,000 டாலர்கள் கொடுத்து கஷ்டப்பட்டு வேலை வாங்க வேண்டும் – ஒரு மேலை நாட்டு குமாஸ்தாவிடம். 1,000 டாலர்கள் (50,000 ரூபாய்) கொடுத்தால் விரட்டி வேலை வாங்கலாம் இந்தியர்களிடம். இதிலும் 40,000 ரூபாய்க்கு செய்து கொடுக்கப் போட்டி போடும் இந்திய நிறுவனங்கள் வேறு! அதுவும் முதுநிலைப் பட்டதாரிகள் வேலை செய்யத் தயார். புகழாரம் சூட்ட என்ன கசக்குமா இவர்களுக்கு? அதுவும் ஒன்றுக்கு பதில் 5 பேரை வேலைக்கு எடுத்தாலும் மேலைநாட்டுக் கணக்குபடி இன்னும் லாபமே!
கடந்த 20 ஆண்டுகளாக அமர்க்களமாக நடக்கிறது இந்த வியாபாரம். இந்தியர்களுக்கு மேலை நாட்டு விடுமுறைகள், கலாச்சாரம் நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்தியப் பிரச்சனைகள் இவர்களுக்கு மெதுவாக மறந்து விடுகிறது. இந்திய அரசாங்கமும் எளிதாக வரும் வரிப்பணத்தைப் பார்த்து மேலும் இது போன்ற வியாபாரங்கள் வளர ஊக்குவிக்கிறது. இந்திய அரசியல் தலைவர்களுக்கு தொலை நோக்கு பற்றி என்று கவலை இருந்திருக்கிறது? இந்த கூத்தில் மிகவும் வருந்தத்தகு விஷயம் என்னவென்றால், இந்திய தொழில் தலைவர்களும் தொலை நோக்கற்று கிடைத்தவரை லாபம் என்ற குறிக்கோளுடன் இயங்குவதுதான்.
சற்று யோசிப்போம். நாம் ஏராளமான பொறியியல் மற்றும் விஞ்ஞான பட்டதாரிகளை உருவாக்குவதாக மேலை நாட்டவர்கள் சொல்லுகிறார்கள். அமெரிக்காவில் சோளம் ஏராளமாக உற்பத்தியாகிறது என்று புத்தகங்களில் நாம் படிப்பதைப் போன்றது இது. நாம் உருவாக்கும் விஞ்ஞான பட்டதாரிகள் அப்படி என்ன விஞ்ஞான ஆராய்ச்சி செய்து படிப்பைக் கொடுத்த நாட்டுக்கு உதவியிருக்கிறார்கள்? பொறியாளர்கள் படித்தவுடன் பொறியியலைத் தொலைக்கத் துடிக்கிறார்கள். சோளம் பல நூறு உணவுப் பொருள்களை தயாரிக்க உபயோகப் படுகிறது. நம் பட்டதாரிகள் பல நூறு குமாஸ்தா வேலைகளுக்கு உபயோகமாக இருக்கிறார்கள். கசப்பாக இருந்தாலும் உண்மை அதுதான். ஏன்னென்றால் நாம் ஒரு ” குறைந்த விலை பூகோளம்”.
ஆரம்பத்தில் என்னவோ நாம் ஒரு குறைந்த விலை பூகோளமாகத் தான் தொடங்கினோம். பல வகை துறைகள் – மருந்து நிறுவனங்கள், கணினி மென்பொருள், மருத்துவ பின்னலுவல், சட்ட பின்னலுவல், காப்பக பின்னலுவல், பங்கு சந்தை பின்னலுவல் என்று தொடங்கி பல துறைகளிலும் அதிகம் படிப்பு தேவை இல்லாத வேலைகளை ஏராளமான படிப்புடன் செய்து மேலை நாட்டவரிடம் பெயர் வாங்கினோம். ஆனால் போகப் போக நம்முடைய நிலமை மாறி, பல விதத்திலும் சிக்கலில் மாட்டி இருப்பதாக என் பார்வையில் எனக்கு தோன்றுகிறது.
என்ன சிக்கல் என்று நாம் அலசுவதற்கு முன் நம்முடைய வேலை முறைகளை சற்று ஆராய்வது உதவும். பொதுவாக, செய்யும் வேலையை நன்றாக ஆறிந்து கொண்டு அதில் ஒரு நிபுணராக இருப்பது நம்முடைய குறிக்கோளாக இருப்பதில்லை. பதவியில் உயருவது நமக்கு மிகவும் முக்கியம். அதில் வரும் சமூக அந்தஸ்து மிக மிக முக்கியம். 29 வயதில் ஒருவர் மேலாளர் என்பது நமக்கு மிகவும் சமூக அந்தஸ்து அளிக்கும் ஒரு விஷயம். ஆனால், 29 வயதில் புதிய மென்பொருள் நிரல் ஒன்றை உபயோகமாக உருவாக்கியவர் என்பது நமக்குப் பெரிதாகப் படுவதில்லை. எத்தனை இளையராஜாக்களை உருவாக்கியிருக்கிறோம்?. 35 ஆண்டுகளுக்கு முன் செய்த அதே வேலையைத்தான் இன்றும் அவர் செய்கிறார். ஆனால் அவர் செய்யும் வேலையில் நிபுணர் என்பது உலகம் அறிந்த செய்தி. நம்மில் எத்தனை பேர்கள் அவர்களது துறைகளில் இளையராஜாக்கள் ஆக ஆசைப் படுகிறோம்? ஒரு 5 சதவீதம் கூட தேறாது. அவர் இசை பிடிக்கும், ஆனால் அவரைப் போல வேலை செய்ய பிடிக்காது!
குறைந்த விலைக்கு பலவித சேவைகளை செய்து தருகிறோம் என்ற நோக்கு, தொலை நோக்கற்ற ஒரு தாற்காலிக அணுகுமுறை. இன்றைய இந்திய சேவைகள் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் செய்த சேவைகளை விட விலை கூடுதல் தான். அத்துடன் பின்னலுவல் மற்றும் கணினி மென்பொருள் துறைகளில் வேலை பளு அதிகம். விலைவாசிக்கேற்ப மற்றும் பதவி உயர்வுகளை கணக்கெடுத்தால் இந்திய சேவைகளின் விலை கூடிக்கொண்டே போகிறது. மேலும், இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனை, கம்பெனிகள் மற்றும் ஊழியர்களுக்குமிடையே விசுவாசமின்மை. ஊழியர்கள் சற்று அதிக சம்பளம் கிடைத்தால், அடுத்த நிறுவனத்திற்கு போய் விடுகிறார்கள். இதனால் என்ன? வேலை திறமையற்றவர்கள் வெளியேறியவர்கள் வேலையை சரியாக செய்யாமல் சொதப்புகிறார்கள்.
அடுத்த இந்திய பிரச்சனை பின்னலுவல் மற்றும் கணினி மென்பொருள் நிறுவனங்கள் ஒரு பெரிய ராணுவத்தைப் போல செயல்படுகின்றன. நல்ல நுட்பம் அறிந்தவர்கள் மேலாளர்களாக உயர்த்தப்பட்டு ஊழியர் மேலாண்மை (people management) என்று தங்களுடைய நுட்பங்களை துறக்க வழி செய்கின்றன இவ்வகை நிறுவனங்கள். ஏராளமான அனுபவம் தேவையான பல கணினி மென்பொருள் வேலைகள் தரத்தில் பெரிதும் பாதிக்கப் படுகின்றன. இந்திய கணினி மென்பொருள் ஊழியர் ஒருவரை, “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டுப் பாருங்கள். “நான் மென்பொருள் programmer” என்று யாராவது பதில் சொன்னால் உங்கள் செல்ஃபோனில் பதிவு செய்து அனுப்புங்கள் – உங்களுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் இலவசம்! நான் கேட்டவரை, தான் ஒரு மேலாளர் என்றே சொல்லிக் கொள்வார்கள். உண்மையில் கணினி மென்பொருள் துறையில் உள்ள உருப்படியான தொழில் programmer. இதில் நமக்கு என்ன குறையோ தெரியவில்லை.
பல அருமையான மென்பொருள்களை உருவாக்கிய மேலை நாட்டவர் தங்களை programmers என்று சொல்லிக் கொள்வதில் எந்த வித தாழ்வு மனப்பான்மையும் காட்டுவதில்லை.
இந்திய அரசாங்கத்திற்கு கட்டமைப்பு தேவைகளுக்கு (infrastructure requirements) ஏராளமான பணம் தேவைப்படுகிறது. பின்னலுவல் மற்றும் கணினி மென்பொருள் நிறுவன ஊழியர்களின் வரிப்பணம் அதற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதனால், இந்திய அரசாங்கம் வரிப்பணத்தை மட்டும் குறியாக பார்த்து செயல்படுகிறது. மேலை நாட்டவர்கள், இத்தனை இந்தியர்களுக்கு வேலை என்றவுடன் இந்திய அரசாங்கம் ஆனந்தம் அடைய இதுவே காரணம்.
சரி, அப்படி என்ன தொலை நோக்கு என்று நாம் விளக்கவே இல்லை. இது போன்ற பின்னலுவல் மற்றும் கணினி மென்பொருள் சேவைகள் நமக்கு பணம் ஈட்டினாலும், நம்முடைய இரு தனித்திறமைகள் சில ஆண்டுகளே நீடிக்கும் தன்மை கொண்டவை. உதாரணத்திற்கு, இன்றைய மேலை நாட்டு சிந்தனை, மலேசியா செக் நாடு, புல்கேரியா என்று விரியத் தொடங்கி விட்டது. அவர்களும் ஆங்கிலம் கற்றுக் கொண்டு விட்டார்கள். அவர்களுக்கும் திறமை இருக்கிறது. நம்முடைய சேவைகள் எது வரை மேலை நாட்டவர்களுக்கு தேவை? நம்முடைய விலையைப் பொறுத்தது. கிழக்கு ஐரோப்பாவில் நம்மளவிற்கு பறந்த திறமைகள் இல்லை. இதனால், சில ஆண்டுகள் நாம் காலம் தள்ளலாம். ஆனால், 5 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஒரு போட்டியாகவே கருதப்படவில்லை.
(http://knowledge.wharton.upenn.edu/article.cfm?articleid=1100)
இந்திய நிறுவனங்கள் என்னதான் செய்திருக்க வேண்டும்? தொடர்ந்து பொருளும் பெயரும் ஈட்டும் மென்பொருள் பொருட்களை (software products) உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு ஏராளமான பொருட் செலவாகும் என்பது உண்மை. ஆனால், பல இந்திய சேவை நிறுவனங்களிடம் பெரிய மேல்நாட்டு நிறுவனங்களைவிட அதிக பணமிருக்கிறது. முதலீடு செய்யும் தைரியமில்லை, சந்தையில் ரிஸ்க் எடுக்கும் நோக்கமில்லை. இந்திய அரசாங்கமும் இவர்களின் இவ்வகை முதலீடுகளுக்கு வரிச் சலுகை அளித்து ஊக்குவிப்பதும் இல்லை.
நம்முடை இந்த வகை தொலை நோக்கற்ற அணுகுமுறை, இதைப் போன்ற தொழில்களை ஒரு தாற்காலிக வெற்றித் தொழில்களாக உருவாக்கும் அபாயம் உள்ளது. இதனால், நம்மிடையே வேலைவாய்ப்புகள் குறையவும் வாய்ப்பிருக்கிறது.

நம் நாட்டிற்கு தேவையான பொருட்களை உருவாக்குவது நம் முதல் நோக்காக இருக்க வேண்டும். ஏற்றுமதி என்பது தேவையானது. ஆனால், ஏற்றுமதியே ஒரு நாட்டின் பொருளாதாரம் என்று மாறினால் அது அபாயகரமானது. குறைவான விலை என்பது என்றுமே ஒரு பலமாக இருக்காது. ஏனென்றால், இன்னொரு நாட்டவர் நம்மை விட குறைவான விலையில் சேவைகள் தரத் தொடங்கி விட்டால், குறைந்த விலை பூகோளமாக இந்தியா என்றும் ஜொலிக்க முடியாது.

ரவி நடராஜன்

Series Navigationகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மீட்டெழுச்சி நாள் (The Resurrection Day)) (கவிதை -51 பாகம் -5)பஞ்சதந்திரம் தொடர் 16 ஏமாந்துபோன ஒட்டகம்
author

ரவி நடராஜன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    தங்கமணி says:

    //அடுத்த இந்திய பிரச்சனை பின்னலுவல் மற்றும் கணினி மென்பொருள் நிறுவனங்கள் ஒரு பெரிய ராணுவத்தைப் போல செயல்படுகின்றன.//

    உண்மை!

  2. Avatar
    A.K.Chandramouli says:

    மிகவும் சரியான ஆய்வு . நாம் நம்மை சுற்றியுள்ள ஆபத்தைப் புரிந்தகொள்ள வேண்டும். நம்நாட்டிற்குப் பயன் படுவதை செய்வது என்ற எண்ணம் வளர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *