இந்த வார நூலகம்

This entry is part 4 of 40 in the series 12 பிப்ரவரி 2012

உயிர்மையின் பிப்ரவரி இதழைக் கண்ணுறும் வேளை கிட்டியது. எஸ். ராமகிருஷ்ணனின் தொடர் கட்டுரை சுவாரஸ்யமாக இருந்தது. இந்திப் படங்களைப் பற்றி எழுதிவிட்டு, ‘ஏழை படுத்தும் பாடு, தமிழ் திரைப்படத்தைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார். பயனுள்ள விசயங்கள். இந்தி திலீப் குமாரின் கண்கள், காதல் காட்சிகளில் பேசும் என்று கமலஹாசன் சொன்னதாகத் தகவல். திலீப்குமாரின் கண்கள் பேசினால், நம்மூர் சிவாஜியின் ஒவ்வொரு அங்கங்களுமே பேசுமே! ஊட்டி வரை உறவு பாடல் (ஹேப்பி இன்று முதல் ஹேப்பி ) காட்சியில் கே ஆர் விஜயா ஆடுவதை ரசித்துக் கொண்டே, கை தட்டுவதும், கண்களில் ஒரு ரசிப்புத் தன்மை இருப்பதும் பார்க்கத் தெவிட்டாத காட்சியல்லவா?
வா.மு. கோமு நிரந்தர உயிர்மை எழுத்தாளர் ஆகிவிட்டார் போலிருக்கிறது. அவரது குட்டிப் பிசாசு 2 என்று ஒரு சிறுகதை வந்திருக்கிறது. 2 என்றவுடன் தொடர்கதை என்று எண்ணிவிட்டேன். சிறுகதைதான். இதுவும், இன்னமும், கோமு தீவிர இலக்கியத் துக்கு மாறவில்லை என்றே காட்டுகிறது. அதாவது, இந்தக் கதையும் பாலியல் தூக்கலாக..
கல்யாணம் ஆகி குழந்தை பெற்றுவிட்ட பொன்னுசாமி, பழைய காதலி, கல்யாணம் ஆகாத, 27 வயது கீதாஞ்சலியை மீண்டும் சந்திப்பதாகக் கதை. கீதாஞ்சலிக்கு இப்போது ஒரு புதிய நண்பன் இருக்கிறான். சுதாகர். அவளுக்காக பணம் செலவு பண்ணுகிறான். அடிமையாக இருக்கிறான். ஆனாலும் பணமே இல்லாத பொன்னுசாமியின் மேல் அவளுக்கு இன்னமும் கிக் குறையவில்லை. வள வளவென்று வசனங்கள் தான். கதை எங்கேயும் நகர்வதாகக் காணோம். ஆனாலும் 15 நாள் கருவைக் கலைக்க இலவச மருத்துவ ஆலோசனை, பெண்கள் தண்ணியடிப்பதைப் பற்றி போகிற போக்கில் ஒரு காமெண்ட் என்று கதையை ஓட்டுகிறார். கடைசியில் கதை ‘ சப் ‘ என்று முடிகிறது. அட இதுவும் பாலியல் போல இருக்கிறதே.
கோமுவை ஒரு விசயத்துக்குப் பாராட்ட வேண்டும். ஆங்காங்கே மனுஷ்யபுத்திரனைக் கிண்டல் செய்கிறார். தன் நூலின் போதிய பிரதிகள் கொடுக்காததற்குச் சாடுகிறார். ஓசியில் வாங்கிக் கொண்டு போன ‘ பணக்கார ‘ நண்பர்களை நக்கல் செய்கிறார். இத்தனைக்கும் தொடர்ந்து அவர் கதைகளை வெளியிட்டு நூலாகவும் போடுகிறது உயிர்மை. ம.பு.வுக்கு ஒரு ஆலோசனை. கோமுவின் கதைகளை மலையாளத்தில் வெளியிட்டால், அவர் அங்கே ஒரு சாருநிவேதிதா ஆகலாம். அதற்கான ‘ பின்புலம்’ இருக்கிறது அவரிடம்.
சே! அவ்வளவுதானா என்று, மூட யத்தனிக்கும்போது, கடோசி கடைசியில் முத்துலிங்கத்தின் ‘ தீர்வு ‘ சிறுகதை. உக்கோ என்கிற இஸ்லாமியச் சிறுவனைப் பற்றியது. போராளி படத்தின் பாதிப்பு போல இருக்கிறது. வரலாற்று உண்மையும் இருக்கலாம்.
உக்கோவின் அப்பாவுக்கு மூன்று மனைவிகள். உக்கோ இரண்டாவது மனைவியின் மகன். நன்றாகப் படிப்பவன். இத்தனைக்கும் காசு வேண்டும்போது, அவன் தந்தை, அவனை படிப்பை நிறுத்தி, யாரிடமாவது விற்றுவிடுவார். சம்பளம் கிடையாது. சாப்பாடு, உறைவிடம் உண்டு. வீட்டு வேலை செய்வது, காலணிகளைத் துடைப்பது என்று பல வேலைகள் அவனுக்கு. மருந்துக் கடையில் வேலை செய்யும்போது, பழைய மருந்துகளை, பணம் கொடுத்து புதுப்பிக்கும் ( தேதியை மாற்றித் தரும் ) வேலையைச் செய்கிறார் முதலாளி. இதற்கு ஒப்பாத உக்கோ, காலாவதியான மருந்தினை ஒரு நோயாளிக்குத் தர மறுக்கிறான். வேலை போகிறது. பெரிய பங்களாவில் அடுத்த வேலை. முதலாளி மகள், இவனைவிட இரண்டு வயது பெரியவள், ஆனால் இவன் வகுப்பே படிக்கிறாள், அவள் மேல் ஒரு ஈர்ப்பு. வகுப்பின் முதல் மாணவனான உக்கோவுக்கு பெரிய கிளாஸ் படிக்க அரசு உதவி கிடைக்கிறது. அம்மா மரணப் படுக்கையில். என்னை விட்டுப் போகாதே என்கிறாள். ஆசிரியர் எதிர்காலத்தைத் தொலைத்து விடாதே என்கிறார். சஞ்சலத்தில் உக்கோ. பேருந்து நிலையத்தில் நாய் சுற்றிக் கொண்டிருக்கிறது. பத்து நிமிடத்தில் நாய் சுற்றி தன்னருகே வந்தால், படிப்பு வேண்டாம் என்று நினைத்துக் காத்திருக்கிறான் உக்கோ.
ஒரு அழுத்தமான கதை. பல தகவல்கள். சுவாரஸ்யமான நடை. பெரிய விருந்தில் முதலில் பசிக்கு சூப் வைப்பார்கள். அது வயிற்றை நிரப்பாது. பின்னால்தான் பிரியாணி. கோமு சூப் என்றால், முத்துலிங்கம் பிரியாணி. நெஞ்சு நிரம்பிவிட்டது.
உயிர்மை நூல்களை பாக்கெட் பதிப்பாக போட்டிருக்கிறார்களாம். ஆனால் அதைப் பற்றிய விலை விபரம் ஏதும் இல்லை. மப்பு கவனத்திற்கு.
0
புதிய பார்வை – பிப் 1-15 இதழ்

வண்ணதாசனின் தொடர்க்கட்டுரை. அவரது இயற்பெயர் ராமச்சந்திரன். ராயப்பேட்டையில் பாப்பையாவின் வீட்டில் தங்கியிருக்கிறார். அதே காலகட்டத்தில், நம்பிராஜன் ( விக்கி? ) ஓட்டலில் சர்வராக இருக்கிறார். பதிப்பகத்திலோ, பத்திரிக்கையிலோ வேலை தேடிக் கொண்டிருக்கிறார். தினமும் அண்ணாச்சி (பாப்பையா) வீட்டில் சிற்றுண்டி, திருவல்லிக்கேணி வரை நடை, தீபம் நா.பா.வுடன் சந்திப்பு, அவரே மாலைச் சிற்றுண்டி வாங்கித் தருதல் என கழிகிறது வாழ்க்கை. இடையில் நம்பிராஜனுக்கு எழுத்து பத்திரிக்கையில் செல்லப்பா வேலை தருதல். ஐந்து ரூபாய்காக தன் நாவலை கவிதா பதிப்பகத்துக்கு விற்றதோடு கட்டுரை முடிகிறது. மாம்பலம் பாண்டி பஜாரில் அப்போது வானதியும் இன்னம் ஒரு பதிப்பகமும் இருந்ததாகத் தகவல். அப்போதுதான் கவிதா ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான் பதிப்பகத்தாரின் கை ஓங்கியிருந்தது. நல்ல படைப்புகளும் வந்தன. டிடிபி வந்தபிறகு, கணிணி வைத்திருப்பவன் எல்லாம் புத்தகம் போடுகிறான், கத்தி வாங்கினால், கவிச்சி கடை என்பது போல.. நாறுது.
புதியபார்வையில் பெரிதாக இதைத் தவிர இலக்கியம் ஏதுமில்லை. வண்ணப் படங்களில் நடராசன் தான் காட்சி தருகிறார். கூடவே அரசியல் பக்கங்கள். நிறைய விளம்பரங்கள். சினிமா செய்திகள் சில பக்கங்களை ஆக்கிரமிக்கின்றன. அசை போட ஏதுமில்லை. எல்லாம் சதைதான்.
0

Series Navigationஅள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்பேஸ்புக் பயன்பாடுகள் – 2
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *