இரணகளம் நாவலிலிருந்து….

This entry is part 11 of 13 in the series 10 டிசம்பர் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா
(விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…)
மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் ! என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் சன்னற்கதவுகளின் தப்பிய பகலொளி, அறைக்குள் குருத்தோலைபோல கட்டிலுக்கு இணையாகச் சரிந்து தரையைத் தொட்டிருந்தது. ஒளிக்குருத்திற்குள் உயிர்ப்புள்ள நுண்ணுயிர்களாக தூசுகள் பறந்தன. மீண்டும் கதவுத் தட்டப்பட்டது. « எழுந்திருடா, இன்னுமா தூங்கற ! » -கணேசன். காலையில் எழுந்து, புதுச்சேரிக்கு சீக்கிரம் திரும்பவேண்டும் என்று அவனிடம் உத்தரவிட்ட நானே பொறுப்பின்றி வெகுநேரம் உறங்கியதை நினைத்து வெட்கப்பட்டேன். வேகமாகச் சென்று தாழ்ப்பாளையும் பின்னர் கதவையும் திறக்க கணேசன் நுழைந்த வேகத்தில் கையிலிருந்த இரண்டு நாளிதழ்களையும் அலங்கோலமாகக் கிடந்த கட்டிலின் மீது எறிந்தான். நாற்காலில் அமர்ந்தவன் பார்வை நான் பார்க்கவேண்டும் என்பதற்காகவே தலைப்புச் செய்தியில் ஊன்றியிருந்தது. ராஜிவ் காந்தியின் மார்பளவு படத்தைப் போட்டிருந்தார்கள். உதடுகளைப் பிரிக்காமல் மகிழ்ச்சியைக் கசியவிடும் சிரிப்பு. வலதுப்பக்கம் தலைக்குமேலே அப்படத்துடன் பொருந்தாமற் ஒரு செய்தி.
« ராஜிவ் காந்தி படுகொலை ».
பதற்றத்துடன் எழுந்து « எங்கே, எப்போ » எனக்கேட்கிறேன்.
« இரவு பதினோருமணிக்கு ஸ்ரீபெரும்பூதூரில் நடந்திருக்கிறது, குண்டுவெடிப்பில் இறந்துட்டதாகவும், விடுதலைப்புலிகள்தான் கொண்ணுட்டாங்கன்னும் சொல்றாங்க »
– எப்படி ?
– உண்மை என்னன்னு யாருக்குத் தெரியும் மாலைச் செய்தித் தாளில் கூடுதலாகத் தகவல் இருக்கலாம். இல்லை ரேடியொவில என்ன சொல்றாங்கன்னு ஃபாலோ பண்ணனும். அண்ணன்களுக்குத் தெரிஞ்ச பத்திரிகையாளர்களை விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கலாம். ஆனா அவங்கள இந்த நேரத்திலே பிடிக்கவும் முடியாது, பெருசா எந்தத் தகவலையும் உடனடியா அவங்களால சொல்லவும் முடியாது. கொலைசெய்யப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் பின்புலத்தில இருக்கலாங்கிற தகவலை லாட்ஜ் ரிசப்ஷன்ல இருக்கிற ரேடியோ செய்தியும் சொல்லுது. இப்ப நமக்குள்ள பிரச்சினை, புதுச்சேரிக்குத் திரும்பனும், எப்படி எப்போதுங்கிறதுதான்.
– ஏன் ?
– சன்னற் கதவைத் திறந்து வெளியே எட்டிப் பாரு !
எழுத்து சென்று சன்னற்கதவுகளை விரியத் திறந்து கம்பிகளில் முகத்தை அழுத்தி வெளியிற் பார்த்தேன். கடைகளின் கதவுகள் இறக்கப்பட்டிருக்கின்றன. சைக்கிள் விற்பனை செய்யும் நிறுவனம்போலிருந்த ஒன்றில், இறக்கி நவ்-தால் பூட்டு போட்டிருந்த பெரிய சுருள்கதவை யொட்டி, நடுத்தரவயதைக்கடந்த பெண்மணியொருத்தி படுத்திருந்தார். வறுமை அவர் வயதை அதிகரித்திருப்பதுபோல பட்டது. இடக்கையைத் தலைக்குக் கொடுத்து, முட்டுக்கொடுக்காவிட்டால், மார்புகளிரண்டும் பாரம் தாங்காமல் கீழே விழுந்துவிடுமோ என்றஞ்சியவைபோல முழங்கால் மூட்டுகள் வயிற்று மடிப்பில் புதைந்திருக்கின்றன. அவர் உதட்டில் அமர்ந்திருந்த ஈக்களை, விரட்ட தெரு நாய் ஒன்று நெருங்கி, பின்னர் விலகிச் செல்கிறது, கடையையொட்டி மாநில கட்சியொன்றின் வெட்டிச் சாய்க்கப்பட்டக் கொடிக்கம்பம். மனிதர்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்த சாலையின் நடுவில் அசைபோட்டபடி படுத்திருக்கும் ஒரு பசுமாடு. காங்கிரஸ் கொடியுடன் கும்பலொன்று ஒவ்வொரு கடையாய் நோட்டம் விட்டபடி செல்கிறது. ராஜிவ் காந்திக்கு மாலைபோட்டு நாற்காலியில் உட்காரவைத்து, வாழைப்பழத்தில் ஊதுபத்திக் கொளுத்தியிருந்த கடையில், ரேடியோவைச் சத்தமாக வைத்திருந்தார்கள். காப்பியும் டீயும் மும்முரமாக வியாபாரமாகிக் கொண்டிருந்தன. தன்னிச்சையாக எனது கண்கள் எங்கள் காரைத் தேடின. விடுதியின் நுழைவாயிலையொட்டி, நாங்கள் இறங்கினால் கண்ணிற் படுமாறு எங்கள் சாரதி, வாகனத்தை நிறுத்தியிருந்தார். ஆனால் தற்போது அவருமில்லை வாகனமுமில்லை.
– நம்ம காரையும் காணோம், டிரைவரையும் காணோம், என்றேன்.
– காலையில் கடைகளை மூடச்சொல்லி ஒரே கலாட்டா. நம்ம அம்பாஸடர் மட்டுமல்ல அங்கே நிறுத்தியிருந்த டாக்ஸிகள், ஆட்டோக்களையெல்லாங்கூட காணலை.மெயின் ரோட்டிலிருந்தா வாகனங்களுக்கு ஆபத்தென்று,மறைவா எங்கனாச்சும் கொண்டுபோயிருப்பாங்க. நம்ம டிரைவரும் அப்படி போனவனாதான் இருக்கனும், வந்திடுவான். பயப்படவேண்டியதில்லை.
– அப்ப நம்ம புதுச்சேரி பயணம் ?
– இப்பத்திய நிலமையிலே புறப்படறது நல்லதில்லைன்னு தோணுது. வழியெல்லாம் நிலமை இப்படித்தான் இருக்கும். நாம இரண்டுபேர் மட்டுமில்லை. அம்மா வேற இருக்காங்க. அவங்களையும் பார்க்கணும். பதட்டம் கொஞ்சம் தணிஞ்சதும் கிளம்பிடுவோம். என்ன சொல்ற.
– நான் என்ன சொல்லப் போறன். அப்படித்தான் செய்யனும். அம்மாவுக்கு சாப்பிட ஏதாவது ஏற்பாடு பண்ணியா.
– அவங்க மட்டுமில்லை நாம்பளும்தான் சாப்பிடனும். லாட்ஜ் பையனை அனுப்பி ஏதாவது கிடைக்குதான்னு பாக்கச்சொல்றன். இல்லைன்னா பிஸ்கட் கிடைச்சாக்கூட போதும். டிரைவரையும் கண்டுபிடிக்கனும்.
– நான் பேப்பர் படிக்கிறேன். நீ போய் முதலில் அம்மாவைக் கவனி. வேண்டுமானால் பதினோருமணிக்கு அறையைப் பூட்டிக்கொண்டுவறேன். தயாரா இரு, இரண்டுபேருமா கீழே இறங்கி போய் பார்த்துட்டு, அப்படியே ஏதாவது சாப்பிடக் கிடைச்சால் வாங்கிட்டு வரலாம். தவிர என் வொய்ஃபுக்கும் நிலமையை விளக்கி, சாயந்திரம் புறப்பட்டுவருவதாகச் சொல்லனும்.
கணேசன் தலையாட்டிவிட்டு வெளியேறியதும், கதவைச் சாத்திவிட்டு, கட்டிலில் உட்கார்ந்து முதல் பக்கத்தைப் பிரித்து வாசிக்க முயன்றேன். ராஜிவ் காந்தி படுகொலை என்ற தலைப்புச் செய்தியைக் கண்கள் வாசித்த மறுகணம் ‘அக்காள்’ என்று உதடுகள் முனுமுனுத்தன. ‘தற்கொலையைத் தவிர எல்லா மரணங்களுமே ஒருவகையில் கொலைதான்’ என்று அக்காள் வாதிட்டது நினைவுக்கு வந்தது. « மனிதர்கள் பிரம்மாக்கள் மட்டுமில்லை எமன்களும்தான் » என்பாள் அவள். « இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் யுத்தங்களும், உயிர்ப்பலிகளும் இல்லையென்றால் கொண்டாடுவோமா ? », எனக் கேட்டிருக்கிறாள். அகால மரணங்களில் நமக்குள்ள ஆர்வமே சிலப்பதிகாரம். அதன் படைப்பாளிக்குக் கோவலன் கொலைக்கும், மதுரை எரிப்பிற்கும் வேறு காரணங்கள் இருந்திருக்காதென்பது அவள் வாதம். தலைவர்கள் கொலைகளைப் பற்றிய அவள் கருத்தும் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல. 1989ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆறாந்தேதியோ அல்லது எழாம் தேதியோ என்று நினைக்கிறேன். இந்திராகாந்தியின் கொலையாளிகளில் எஞ்சியிருந்த ஒருவரையும், கொலைக்கு உடைந்தையாக இருந்த மற்றொருவரையும் தூக்கிலிடப்பட்ட செய்தி, நாளேட்டில் வந்திருந்தது. அதுபற்றிய பேச்சில் : « ஆட்சியாளர்கள் வரலாற்றில் திடீரென்று இடம் பிடிப்பதில்லை, குறுக்கு வழியோ நேரான வழியோ எதுவென்றாலும் இடையில் பலகாலம் காத்திருக்கிறார்கள். பதிலாக அவர்களின் கொலையாளிகள் ஒரு நாளில் ஓர் இரவில், சட்டென்று அந்த இடத்திற்குத் தாவி விடுகிறார்கள். இந்திராகாந்தியின் வரலாற்றுடன் அவரைக் கொலைசெய்தவரும் சாகாவரம்பெற்றுவிடுவார். இதற்காகவே செய்யாத கொலையை தாம் செய்ததாகப் பொறுப்பேற்கும், மனிதர்களும் இருக்கக்கூடும். » என்ற அவள் கருத்தும் சரியானதுதான். அவள் படித்தது எட்டாம் வகுப்புக்குவரைதான். அந் நாட்களில் எங்கள் ஊர் பெண்களுக்கு அதுவே அதிகம் என்ற நிலமை. ஆனால் எதைப்பற்றியும் தனக்கென்று ஓரு கருத்தை உருவாக்கிக்கொள்ள அவளால் முடிந்தது. இருத்தல், இன்மை போன்ற மேற்கத்திய நுட்பமானத் தத்துவச் சொற்களையோ ; பிறப்பு இறப்பு,ஊழ்வினை, கர்மம்போன்ற கீழைத்தேய சொல்லாடல்களையோ கையாளாமலேயே, தம்மைச் சுற்றியுள்ள சமூகதத்தின் செயல்பாடுகளிலிருந்து கற்றவைகளை அவளால் சமையலுக்குக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டோ, அரிசி களைந்துகொண்டோ , வாணலியில் முறுக்கைப் பிழிந்துகொண்டோ, நெற்றியில் விழும் முன் கேசத்தை முழங்கையால் ஒதுக்கியபடி பகிர்ந்துகொள்ள இயலும்.
அகால மரணங்கள் எதுவென்றாலும் ஒருவகையில் கொலைதான். குதிரை தள்ளிவிட்ட து, இறந்தான். பேருந்து பள்ளத்தில் உருண்டது பயணிகளிகளில் ஐந்துபேர் செத்தார்கள், அறுவை சிகிச்சைப் பலனளிக்கவில்லை நோயாளி இறந்தார் என்றாலுங்கூட குதிரை, பேருந்து, சாரதி, மருத்துவர் ஆகியோருக்கு நடந்த உயிர்ப்பலிகளில் பங்கிருக்கிறது. திட்டமிட்டு ஏற்படுத்திய மரணம், திட்டமிடாது ஏற்படுத்திய மரணமென்று வேண்டுமானால் வகைப்படுத்தி,நீதிக்கு உதவலாம். கொலயுண்ட தலைவர் ஒரு நாட்டின் பிரதமர். அந்த நாடு உலகமெங்கும் வெவ்வேறு காரணங்களால் அறியப்பட்ட நாடு. அம்மரணத்தை முன்னிட்டு ஊடகங்கள் கட்டமைக்கும் மாயைகள், நிச்சயமற்ற அரசியல் சூழல், தலைவனின் இறப்பைக் கலவரமாக அடையாளப்படுத்த முனையும் தொண்டர்கள், முன்னெச்சரிக்கை என்றபேரில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள், ஆயிரக்கணக்கில் குவிக்கப்படும் போலீஸ்காரரர்கள் எல்லாம் சேர்ந்து இவர்களின் மரணத்திற்கு ஹீரோ தகுதியைக் கொடுத்துவிடுகிறது. இத்தகைய தலைவர்களின் அகால மரணத்தினால் சராசரி குடிமகனின் ஒருவேளைச் சாப்பாடு, மறுநாள் இல்லை என்று ஆகிவிடுமா ? என்னிடத்தில் இக்கேள்விக்குத் தெளிவான பதிலில்லை. ஆனால் நாட்டின் வேறொரு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சிலருக்கு சில கோடிகள் கூடுதலாக கிடைக்கும் அல்லது கிடைக்காமற்போகலாம், என்பது மட்டும் நிச்சயம். அந்த ஒரு சிலருக்குத் தலைவர்களின் மரணங்கள் ஏற்படுத்தும் தாக்கம் அரசியல் பொருளாதார வல்லுனர்களின் விவாதத்திற்குரியது. செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் இறந்த தலைவர்கள் மட்டுமல்ல அவர்கள் இறப்புக்குக் காரணமானவர்களும் முக்கியத்துவம் பெற்று விடுவார்கள். ஒரு தலைவர் அகாலமரணமடையும் தினத்தில் எத்தனை எத்தனை மரணங்கள் : சாலை விபத்தென்ற பேரில் கொலையுறுபவர்கள். மருத்துவமனைகளிலும், காவல்துறையிலும் கொடுக்கப்படும் பலிகள், யுத்தங்களில் கொல்லப்படும் உயிர்கள் ; அரசியல் காழ்ப்புகள், தொழிற்போட்டிகள், குடும்பப்பிரச்சினைகள் என்று நிகழும் அகால மரணங்களுக்குத்தான் எத்தனையெத்தனை காரணங்கள். இதுபோன்ற மரணங்களில் இறப்பவர், அந்த இறப்புக்குக் காரணமானவர்கள் என நம்பப் படுவர்கள் அனைவரும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றின் கருணையால், பொதுவெளியில் திடீரென பிறப்பெடுத்து, பிறப்பெடுத்த வேகத்திலேயே மறைந்தும்போகிறார்கள். அக்காளுக்கு அந்த அதிஷ்டம்கூட இல்லை, எனவேதான் கணேசன் உதவியோடு இதை எழுத உட்கார்ந்தேன்.
அக்காள் மரணம் கீட்ஸ் கொண்டாடும் மரண வகைஅல்ல, சிறுகச் சிறுக அரங்கேற்றப்பட்ட மரணம். அவள் இந்திரா காந்தியைப் போலவோ, கென்னடியைப் போலவோ வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவள் கிடையாது. காந்தியைப்போல இலண்டனில் பாரீஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்தவளுமில்லை. ஊர்பேர் தெரியாத கிராமத்தில் காலையில் சாணம் தெளித்துக் கோலம்போடப் பிறந்தவள். பதினெட்டு வயதில் திருமணம், முப்பது வயதில் நான்கு பிள்ளைகள். நாற்பது வயதில் பாட்டி, அறுபது வயதில் காசநோயில் செத்தாள் என்று வாழ்க்கையை முடித்திருந்தால் அவளைப்பற்றி எழுத ஒன்றுமில்லை. வாகனத்தில் அடிபட்டு சாலையில் இரத்தமும் சதையுமாகக் காய்ந்துகிடக்கும் நாயைப்பற்றியோ, பூனையைப்பற்றியோ என்ன அபிப்ராயம் உங்களுக்கு வந்திருக்கும், எத்தனை நொடிகள் அந்த அனுபவம் உங்களோடு வாழ்ந்திருக்கும் அதுபோலத்தான் அக்காளின் மரணமும் முடிந்திருக்க வேண்டியது. அவள் இந்தியாவின் பிரதமர், இஸ்ரேலின் கோல்டாமேயர், பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோ என்றெல்லாம் நாட்டை ஆண்டவள் இல்லை. தமிழ் நாட்டில் ஒரு கிராமத்தில் பிறந்து, பெரிய பட்டங்கள் ஏதுமின்றி, கணவர் விட்டுச் சென்ற வியாபார நிறுவனங்களைத் துணிச்சலாகக் கையிலெடுத்தவள், சரித்திர புருஷி கிடையாதென்றாலும் இச்சமூகத்தின் மனுஷி. அவளுடைய பிறப்பைக்குறித்து பேச எதுவுமில்லை, ஆனால் அவளுடைய மரணம் குறித்து பேச இருக்கிறது.
—————————————–

Series Navigationநல்ல நண்பன்இராணி பத்மினியும் ஜாலியன் வாலாபாக்கும்.
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *