இரண்டாவது திருமணம்

This entry is part 1 of 25 in the series 28 செப்டம்பர் 2014

ஜானவாச ஊர்வலம் கிளம்பிவிட்டது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சின்ன கார். சுற்றிலும் கேஸ் லைட்டுகள். அடுத்துப் பெண்களும் அடுத்து ஆண்களும் தெருவை அடைத்துக் கொண்டு சென்றது ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்காரர்களுக்குப் பெருந்தொல்லையாக இருந்தது.

மாப்பிள்ளை சந்திரன் முகமலர்ச்சியுடன் அமர்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் கார் நிறையக் குழந்தைகள். அக்குழந்தைகளின் நடுவில் சந்திரனின் ஐந்து வயது மகன் குமாரும் உட்கார்ந்திருந்தான்.

”ஏன் சார், இது இரண்டாவது கல்யாணம் தானே?”

“ஆமாம், அதுக்கு என்ன இப்போ?”

”இல்ல, ஜான்வாசம்லாம் எதுக்குன்னு கேட்டேன்.” என்று இழுத்தார் கேட்டவர்.

“நான் எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் வேண்டாம்னு; கேட்டால்தானே”

”யார் கேக்கலே சார்?”

“அவன்தான்; சந்திரன்தான்; கண்டிப்பா ஜானவாசம் இருக்கணும்; அதுவும் கார் வைக்கணும்னு சொல்லிட்டான்”

“அது என்ன அவ்வளவு ஆசை?”

“அவன் மூஞ்சியப் பாரேன். சந்தோஷக்களை தாண்டவமாடுது. இப்பதான் முதல் முதல் கல்யாணம் பண்ணிக்கறவன் மாதிரி”

இந்தக் கடைசி வார்த்தைகள் வேண்டுமென்றே உரக்கச் சொல்லப்பட்டு சந்திரனின் காதில் எதிரொலித்தன. திரும்பிப் பார்த்தவன் சொன்னவர் தனது பெரியப்பா என்பதை உணர்ந்தான். ஏன்? நேற்று கூட தன் அம்மா சொன்னதை மனத்தில் நினைத்துப் பார்த்தான்.

“காதும் காதும் வைச்ச மாதிரி ஒரு கோயில்ல தாலி கட்டிடலாம்; ஆடம்பரமே வேண்டாம்.”

“ஆமாண்டா சந்திரா, விமரிசையா செஞ்சா அதுக்குள்ளாறவா மொத பொண்டாட்டிய மறந்துட்டான்னு கேப்பாங்க?”—–இது அண்ணா.

சந்திரன் நினைவோட்டத்தைக் கலகலவென்ற சிரிப்பொலி கலைத்தது. திருமண மண்டபத்தின் வாயிலில் கார் நிற்பதை உணர்ந்தான். மண்டபத்தின் மாடி ஜன்னல் வழியாய் மணப்பெண் அகிலா ஒரு கதவைத் திறந்து பார்ப்பதைக் கண்டான். உடனே மேல்நோக்கிக் கையை அசைத்தான். அங்கிருந்த இளவட்டங்களின் கூக்குரல் ‘ஓஹோ’ வென்று எழுந்தது.

மறுநாள் திருமணத்தின் போதும் இதே பேச்சுகள்தாம். அவனது சந்தோஷப் புன்னகையைக் குத்திக் காட்டிப் பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்தனர்.

“சாயந்திரம் நலங்கு கூட உண்டா?” யாரோ இவன் காதுபடக் கேட்க, “ஆமாம் மாமி, நிச்சயம் உண்டு, நீங்களும் வந்திடுங்க” என்று இவனே பதில் சொன்னான். கேட்டவருக்கே ஏன் கேட்டோமென்றாகி விட்டது.

“பையனைக்கூட மறந்துட்டாம்பா, புதுக்கல்யாணத்துல இப்படி ஒரு ஆசையா?” என்று யாரோ சொன்னார்கள். அதுவும் இவன் காதில் விழுந்தது. இருந்தாலும் இவன் அகிலாவை அடிக்கடி சீண்டிக் கொண்டிருந்தது அனைவருக்கும் வேடிக்கையாய் இருந்தது.

மறுநாள் இரவில்தான் அகிலா அந்தக் கேள்வியைக் கேட்டாள்.

“ஏங்க நான் ஒண்ணு கேக்கறேன். தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே?”

”கேளும்மா”

“எல்லாரும் உங்களை எப்படிக் கிண்டல் செஞ்சு கேலி பேசினாங்க தெரியுமா?”

“எதுக்கு?”

”முந்தா நேத்து ராத்திரி நான் மாடியிலேந்து காரில் இருந்த உங்களைப் பார்த்தபோது கை ஆட்டினீங்களே! அப்ப என் கூட இருந்தவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? பாருடி இப்பதான் புதுசா கல்யாணம் பண்னிக்கறவரு மாதிரி ஆர்ப்பாட்டம் செய்யறாருன்னு சொன்னாங்க. செத்துப் போனவள அதுக்குள்ள மறந்துட்டீங்களாம். இத கூட சொன்னாங்க……….ஏங்க?” என்று மேலும் தொடர்ந்தவளைச் சந்திரன் இடைமறித்தான்.

“அகிலா, நான் சந்தோஷமா இருந்ததே உனக்காகத்தான்; இந்த ஜானவாசமும் எந்த சடங்கும் விட்டுப் போகக் கூடாதுன்னு சொன்னேன். போட்டோவும் அதுக்காகத்தான் ஏற்பாடு செஞ்சேன். ஏன் தெரியுமா? எல்லாரும் எனக்கு இது இரண்டாவது கல்யாணம்னு நெனச்சுப் பாத்தாங்களே தவிர உனக்கு இது முதல் கல்யாணங்கறத மறந்துட்டாங்க: உன்னை யாரும் நெனச்சே பாக்கல; ஒரு பொண்ணு தன் மொத கல்யாணத்தப் பத்தி எவ்வளவு கனவு கண்டு வச்சிருப்பா; எனக்கு அவ சொல்லிட்டுப் போயிருக்கா; அதனாலதான் எதையும் விட்டுவிடாமல் முதல் கல்யாணம் மாதிரி செய்யச் சொன்னேன். அதுக்காகத்தான் அகிலா, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவ நெனவு வந்தபோது நான் என் மனசைக் கல்லாக்கிக்கிட்டு முகத்தை சந்தோஷமா காட்டிக்கிட்டேன். அதனாலதான் நீயும் சந்தோஷமா இருந்தே; நெனச்சிப்பாரு; நான் உம்முன்னு மூஞ்சை வச்சிக்கிட்டு இருந்தா முதல் கல்யாணத்தின்போது உனக்கு எப்படி இருந்திருக்கும்? இது தெரியாம யார் யாரோ என்னென்னெமோ பேசினாங்க, அவங்க பேசிட்டுப் போகட்டும்…” என்று சொல்லிக் கொண்டு போன சந்திரனின் கண்களிலிருந்து இரு சொட்டுகள் விழுந்தன.

அகிலா அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

——————————————————————————————————–

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *