இரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 2 of 14 in the series 30 ஏப்ரல் 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

மன்னார்குடி அருகில் மேலவாசல் கிராமத்தில் இவரது ஆசிரியர் பணி தொடங்கியது. தற்போது ஒரு
பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறையில் துணைப் பேராசிரியராக இருக்கிறார். ‘ கணவனான போதும்… ‘
இவரது முதல் கவிதைத் தொகுப்பு. ‘ ஙப்போல் வளை ‘ இரண்டாவது தொகுப்பு. இது தவிர ஒரு சிறுகதைத் தொகுப்பு , ஒரு விமர்சனத் தொகுப்பு எழுதியுள்ளார்.
மனிதநேயம் , யதார்த்தம் , கிராமத்தின் மண் வாசனை ஆகியவற்றை மொழியில் நகலெடுக்கும்
முயற்சிதான் காமராசு கவிதைகள்.
‘ பிள்ளைச் சிநேகம் ‘ யதார்த்தக் காதல் கவிதை. விளக்கம் சொல்ல ஏதுமில்லை. உணர்ந்து ரசித்தால்
கிராமத்து வெள்ளை மனம் பளிச்சிடுகிறது.
அம்மா அப்பாவாய்
சோறு குழம்பாக்கி
கண்ணாமூச்சி விளையாடி
ஆடு மேய்க்க
தழை ஒடிக்க
மிரட்டி விரட்டி
அழுது சிரித்து
ஜோடியாய் வலம் வந்து
— என்று முதல் பத்தி தொடங்குகிறது. அடுத்து , பிள்ளைச் சிநேகம் மெல்ல மெல்ல வளர்வதை
அவசியமான சொற்களால் வடிவமைக்கிறார் காமராசு.
ஒன்றாய்
புத்தக மூட்டை சுமந்து
வீட்டுக் கணக்கு பார்த்தெழுதி
தலையில் குட்டு வைத்து
மனப்பாடம் செஞ்சு
லேட்டாகப் போனதிற்கு
மணல்மேல் முட்டிபோட்டு
ஒரே சீசாவில்
தண்ணீர் உறிஞ்சி…
அஞ்சாம் கிளாசுவரை
காலம் விரட்டிற்று
— சம்பவங்களை அடுக்கும் விதத்தில் அழகான கட்டமைப்பு உருவாகியுள்ளது. எளிமையும் யதார்த்தமும்கவிதைக்கு எப்போதும் அழகு சேர்ப்பவை என்பது இங்கே உண்மையாகிவிட்டது.
பூப்போட்ட
பாவாடை சட்டையில்
தோள்மேல் கை போட்டு
எங்கும் தொடர்ந்தவளைக்
காணவில்லை
— பிள்ளைச் சிநேகத்தில் காலத்தின் கோடரி விழுந்தது.
அதிரடியாய்
மேளம் கொட்ட
பதினேழு தட்டுக்களில்
பூ பழம்
புடவை கல்கண்டு
சோப்பு பவுடர் என
எல்லாம் தாங்கி
பெண்கள் சூழ
பட்டுக்கோட்டை மாமன் வந்தான்
கரண்ட்காரன் மைக் செட்
‘ பூவரசம்பூ பூத்தாச்சு ‘
புதுச்சேதி சொன்னது
— அடுத்து , கவிதையின் முத்தாய்ப்பு வெள்ளை மனங்களின் நேசத்திற்கு முடிவுகட்டிவிட்டதைக்
காட்டுகிறது.
‘ நாளைக்கு
வீரன் கோயில்ல
புள்ளக்கி காதுகுத்து
வந்துட்டு வரலாம் வாங்க ‘
முகத்தில் கூச்சம் தாங்கி
கூப்பிட்டுப் போனாள் அவள்
போயிட்டு வரணும்.
— கவிதை முடிந்ததும் வாசகன் மனம் கனக்கிறது. ஓ ! எந்த உறவுதான் நிரந்தரமானது ? காலம்
ஏற்படுத்திவிட்டுப் போன சுவடுகளில் அந்தப் பிள்ளைச் சிநேகம் என்றும் வாழும் !
‘ இரைச்சல் ‘ என்றொரு கவிதை. உலகம் அதிக இரைச்சல்கல் உடையதாக இருக்கிறது எனப் புகார்
சொல்கிறது கவிதை.
இரைச்சல்களின்
உலகமிது
வாகனங்கள்
எந்திரங்கள்
கட்ளைகள்
அறிவுரைகள்
முழக்கங்கள்
முனகல்கள்… என
எங்கெங்கும்
— எனத் தொடங்குகிறது. தூங்கும் போதாவது அமைதி கிடைக்குமா ?
இரைச்சலைத்
தூக்கத்திலாவது
தொலைக்கலாமென்றால்
கனவுக் கத்தல்களுக்கு
காதுகள் போதவில்லை
— கவிதையின் கருப்பொருள் புதுமையாக இருக்கிறது.
ஒரே வகுப்பில் படிப்பவர்கள் எல்லோருக்கும் வாழ்க்கைப் பாதை ஒரேமாதிரி அமைவதில்லை.
இக்கருத்தைப் பேசுகிறது ‘ சுசூகி வண்டியும் தங்கச்சங்கிலியும் ‘ என்ற கவிதை .

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ‘ கணவனான போதும்… ‘ ஓர் ஏழைக் குடும்பத்தைப் பற்றிப் பேசுகிறது.
குடும்பத்தின் வறுமையைச் சில வரிகளில் விளக்குகிறார் கவிஞர் .
நான்கு முழத்தில்
சேலை கட்டி
விறகு பொறுக்கி
நெல் அவித்து
சம்பளம் வாங்கா
வேலைக்காரியாய் அம்மா
— அப்பா எப்படி ?
சுருட்டு பிடித்து
சதா சத்தம் போட்டு
காளை மாட்டோடு
மலரும் நினைவுகள் பேசும் அப்பா
— இக்கவிதையில் கேட்பது ஒரு பெண் குரல். அவள் மனம் திறப்பதுபோல் இக்கவிதை முடிகிறது.
என் பிரியமான தோழனே
கருத்துக்களில் மட்டும்
எனக்கானவை சில உண்டு
நீ கணவனான போதும் …
— பெண் மனம் பூடகத்தன்மையுடன் பேசுகிறது. சுயம் பேணுதல் எல்லோருக்கும் இயல்புதான்.
‘ மூதேவிகள் ‘ என்றொரு கவிதை.
செய்வாய் தோஷம்
மூல நட்சத்திரம் …
மாமனாரை விழுங்க வந்த எமன்
— என்று பெண் தூற்றப்படுவதைக் கண்டிக்கிறது இக்கவிதை. ‘ குடை ‘ என்ற கவிதையில் …
வானத்தின் சந்தோஷம்
மழையாய்
மொழி பெயர்ந்து வந்தது
— என்ற நயம் காணப்படுகிறது. அதே கவிதையில் ,
நூறு குடைகள்
சேர்ந்து நிற்பதுபோல்
விரிந்து நின்ற ஆலமரம்
— என்று புதிய படிமத்தைக் காட்டுகிறார் காமராசு.

இக்கவிதைத் தொகுப்பு 1997 – இல் வெளியானது. காமராசு கவிதைகள் எளியவை. விழிப்புணர்வு
தரத்தக்கவை. மொழிநடையில் அமைந்துள்ள சொற்செட்டு இவர்கவிதைகளின் பலம் என்றால்
மிகையாகாது.

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – அத்தியாயம் 10செவ்விலக்கியங்களில் சுற்றுச்சூழல் பதிவுகள்
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *