இருள்

This entry is part 7 of 44 in the series 30 அக்டோபர் 2011

சட்டென தொலைந்த மின்சாரத்தில், மிதந்துகொண்டிருந்த ஒளியும், கசிந்து கொண்டிருந்த ஒலியும் தீர்ந்துபோனது. எங்கு நோக்கினும் அடர் இருள். சாலையில் கால் பதித்தபோது, நடுஇரவிலும் பரபரப்பாய் இயங்கும் நகரத்தின் மற்றொரு முகமாய் அமைதி நீண்டு கிடந்தது. நிலவில்லாத வெளுத்தவானம். குறை இயக்கத்தில் இருக்கும் நீண்ட சாலையைப் பார்க்கும்போது அந்த அமைதி சலனமில்லாமல் உறங்கும் ஒரு குழந்தையைப் போலிருந்தது.

ஓசை போன்றே வெளிச்சமும் அமைதியைத் தின்றுவிடுவதாகத் தோன்றியது. வெளிச்சம் மிகு இடத்தைவிட குறை வெளிச்சத்தில் அதிக அமைதியை உணரமுடிவதாகத் தோன்றியது. அது மனதுக்குள் தோன்றுவது மட்டும்தான், உண்மையாக இருக்க முடியாது. வெளிச்சம் இருக்கும் இடத்தில் பரபரப்பு மிகுவதால் மட்டுமே அமைதி இருப்பதில்லை என்பதை புத்தி திரும்பத் திரும்பச் சொன்னாலும் மனதிற்குள் மட்டும் அப்படியே தோன்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் அடர்த்தியான இருளே பெரும்பாலும் அமைதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இருள் எப்போதும் மிரட்சியை கொடுக்கிறது, அதே இருள்தான் அற்புதமான தனிமையையும் கொடுக்கிறது.

பரபரக்கும் சாலையும், என்னேரமும் இடமும் வலமும் மனிதர்களாலும், வாகனங்களாலும் மிதிபடும் வீதியும் தன்மேல் மென்மையைப் போர்த்திக் கொண்டதுபோல் தோன்றியது. சட்டென மின்சாரம் தொலையும் பொழுதுகளில், மனிதர்கள் சுதாரித்து தங்கள் இயக்கத்தைத் தொடரும் வரையிலான அமைதியென்பது அலாதியானது, கனமானது, சிற்சில நேரம் பயமூட்டுவதும் கூட. மின்சாரம் தொலைந்த பின்னிரவு நேரத்து நகர்புறத்தின் அமைதி அழுத்தமானது.

வாகன வெளிச்சத்தில் மட்டும் எப்போதாவது முகம்பார்க்கும் அந்தச் சாலையில் திரும்பினேன். இருபக்கச் சாலையின் ஒருபக்கத்தில் தடுப்பு வைத்து மூடி, ஒருபக்கச் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிருந்தன. சிறிது தூரம் கடந்தபின் புரிந்தது, மூடப்பட்டிருந்த சாலையில், சாலை செப்பனிடும் பணி விறுவிறுப்பாய் நடந்து கொண்டிருந்தது. மின்சாரம் தொலைந்ததின் சுவடு ஏதுமில்லை அங்கு. சரக்குந்தின் முகப்பு வெளிச்சத்தில் பரபரப்பாய் இயந்திரங்களும், மனிதர்களும் எல்லோரிடமிருந்தும் தனித்து, இருளிலிருந்து வெகுதூரம் தங்களைப் பிரித்து, தங்களுக்கான உலகத்தில் வெகுவாய் இயங்கிக் கொண்டிருப்பதாகப் பட்டது

பயமுறுத்தும் இருளை விடிய விடிய ஒளியேற்றி பசியாற்றிக் கொண்டேயிருக்கின்றோம். இருளில் சுழலும் மர்மங்களும் சளைக்காமல் ஒளியைத் தின்று தீர்க்கின்றது. இருள் நிரந்தரமானது, அவ்வப்போது ஒளி தோன்றுகிறது அல்லது எதாவது ஒரு வகையில் ஏற்றிக்கொண்டிருக்கிறோம் என மனதிற்குப்பட்டது.

நினைவோ, புனைவோ எதை எழுத்தில் கொண்டுவர நினைத்தாலும், அதற்கு இரவுகள் பெரும்பாலும் உகந்த நேரமாக அமைந்துவிடுகின்றன. முன்னிரவிலிருந்து படியும் இருள் தன்னோடு அமைதியையும் துளித்துளியாய் படியச்செய்கிறது. அமைதி தவழ்ந்தோடும் மனதில் சிந்தனைகள் ஆனந்தமாய் விளையாடத்துவங்கும். விளையாடும் எண்ணங்கள், மனதிற்குள் தளும்பித்தளும்பி விரல்கள் வழியே எழுத்தாகச் சிந்துகிறது.

அதே சமயம் இரவுகளில், உறக்கம் சூழும் தருணத்திற்குச் சற்றுமுன்பாக பளிச்செனத் தோன்றி, காலையில் எழுதிக்கொள்ளலாம் என தன்னம்பிக்கையோடு(!) எழுதாமல், குறிக்காமல் விட்டு, உறக்கம் தின்றதில் இழந்த அற்புதமாக வரிகள் நிறைய உண்டு. விடிந்து எழுந்து யோசிக்கும்போது, இரவு தோன்றியதன் சுவடுகள் அற்றுக்கிடக்கும்.

இருளில் தொலைவதுமுண்டு, மீள்வதுமுண்டு. தொலையத் தூண்டிய இருள் மிரட்டி மீட்டுக்கொடுத்த சுவாரசியமும் உண்டு. ஏதோ ஒரு மனநெருக்கடி எரிக்கும் துன்பத்தில், சுற்றங்களிலிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள ஓடமுயல்கிறார். அடர்த்தியாய் சூழ்ந்திருந்த இருள், தனக்குள் பதுக்கி வைத்திருக்கும் அச்சப் பேய்கள் மூலம் எழுப்பிய ஓசையில், மிரண்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்புகிறார். எந்த இருள் தன்னைச் சுற்றம் நட்பிலிருந்து தனித்துக்கொள்ளத் தூண்டியதோ, அதே இருள்தான் வேறொரு ரூபத்தில் மீட்டும் கொடுத்திருக்கிறது.

இருள் குறித்து அடர்த்தியாய்ச் சிந்திக்க, எப்போதோ எழுதிய கவிதையொன்று நினைவிற்கு வருகிறது.

பழகிச் சலித்த இடமெனினும்
கோரப்பல் கூரிய நகமென
எதையாவது மனக்குகையில்
நிரப்பித்தான் வைக்கிறது
புதிதாய் புகுந்தாளும் இருள்…

மெதுவாய் பாதம் பாவி
கலைக்காமல் கைகள் துழாவி
இருளில் சுற்றும் மாயப்பிசாசை
கண்கள் தின்று தீர்க்க
கரைகிறது அச்சக்குன்று…

இருளே ஆதியும் அந்தமும்
கருவறையோ கல்லறையோ
உடனிருப்பது இருளேயெனினும்
இடைவந்த வெளிச்ச மோகம்
இருளைத் தின்று வாழ்கிறது!

இருளைப் புரிந்துகொள்ள, பழகிப்பார்க்க, அனுபவிக்க, ஓடியலைந்து தேடித்திரிய வேண்டியதில்லை. இன்று இரவு நிச்சயம் இருள் வரும். வந்த இருளை வரவேற்க ஏற்றிய விளக்கை எட்டி அணைத்துவிட்டால் போதும். இருள் இறுக அணைத்துக்கொள்ளும். இருளோடு கூடலாம், கொஞ்சலாம், சண்டையிடலாம், சவால் விடலாம், விழித்திருக்கலாம், உறங்கலாம், சிந்திக்கலாம், சிரிக்கலாம்.

இன்னும் சில மணிகளில் இன்றைய தினத்தின் இருள் ஒட்டுமொத்தமாக வடியப்போகிறது. இரவை உறங்கித் தீர்க்கும் நாமும் இன்னொரு தினத்திற்கு இன்னொருமுறை விழிப்பை நோக்கி நகரலாம். நகர்தல் வெளிச்சத்திலும் நிகழும். எவ்வளவு நகர்ந்தாலும் அது அந்த தினத்தின் இருளை நோக்கித்தான்.

நகர்வோம்.
~

Series Navigationஎல்லார் இதயங்களிலும்மழையாகிவிட்ட தவளையின் சாகசம்
author

ஈரோடு கதிர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *