இரு கோடுகள் (இரண்டாம் பாகம்)

This entry is part 3 of 23 in the series 27 நவம்பர் 2016

olgaதெலுங்கில் : ஒல்கா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

எப்போதும் நிதானத்தை இழக்காத அந்தப் பெண்ணின் முகத்தில் பதற்றத்தைப் பார்த்தபோது சாந்தாவுக்கு இரக்கமாக இருந்தது, ஆனால் இது நாலுபேருடன் கூடிய விவகாரம். முதலில் ஐநூறு ரூபாய் வரையில் செலவழித்து இருக்கிறார்கள். அதன் விஷயம் என்ன? எல்லோரும் என்ன சொல்லுவார்கள்?

சாந்தாவுக்கு பதற்றத்துடன் பயமும் ஏற்பட்டது. முதல்முறையாய் ஷோபா வகுப்புக்கு மட்டம் போட்டாள். பி.எஸ்.ஸி. இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவிகளில் முக்கியானவர்கள் மரத்தின் அடியில் கூட்டம் கூடினார்கள்.

பி.ஏ. மாணவிகளை போட்டி இல்லாமல் ஜெயிக்க வைப்பதில் யாருக்கும் விருப்பம் இல்லை. ஷோபா அல்லாமல் வேறு யார் போட்டியின் நின்றாலும் பி.ஏ. மாணவிகளின் வாக்குகளை பிரிக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை. தெர்தளில் நிற்தற்கு யார்தான் தயாராக இருக்கிறார்கள்? வீட்டில் எல்லோருக்கும் ஒன்றுபோல்தான் இடைஞ்சல். போட்டியே இல்லாமல் எதிரணியை ஜெயிக்க விடுவதா?

இந்தப் பிரச்சனையை முன்னிறுத்தி கொஞ்சம் விவாதம் நடந்தது. தேர்தலில் பங்கு பெறுவதாக இருந்தால் யாரை நிறுத்துவது என்று கொஞ்ச நேரம் வாதம் புரிந்தார்கள். இதுவரையில் செலவழித்த பணம் ஐநூறு பற்றி என்ன செய்வது என்று சிலர் அழுத்தமாக கேள்வி கேட்டார்கள்.

ஷோபாவின் முகத்தில் இதுநாள் வரையில் தென்படாத குற்ற உணர்வை பார்த்து சாந்தாவின் இதயம் கரைந்து விட்டது. ஷோபாவின் பக்கம் கட்சி சேர்ந்து கொண்டு அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்..

“வீட்டில் வேண்டாமென்று கச்சிதமாக சொல்லிவிட்ட பிறகு யாராக இருந்தாலும் என்ன செய்ய முடியும்? உங்கள் வீட்டிலும் மறுப்பார்கள் என்று நீங்களும் இப்பொழுதான் சொன்னீங்க. தன் வீட்டார் மறுப்பார்கள் என்று ஷோபா நினைக்கவில்லை. போட்டி என்று வந்ததும் அவள் பெற்றோர்கள் பயந்து விட்டார்கள். வீட்டாரை எதிர்த்துகொண்டு அவளால் எப்படி போட்டியில் நிற்க முடியும்?  அப்படிச் செய்யக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? ஐநூறு ரூபாய் நஷ்டமாகி விட்டது உண்மைதான். ஆளுக்கு ஐந்து பத்து என்று அந்த நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ள வேண்டியதுதான். நீங்கள் ரொம்பவும் பிடிவாதம் பிடித்தால் வீட்டில் கெஞ்சி கூத்தாடி எப்படியோ அந்த ரூபாயை உங்களுக்குத் திருப்பிக் கொடுத்து விடுவாள்.”

ஷோபாவை அதுபோல் தீனமான நிலையில் பார்ப்பதை யாராலும் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஷோபாவை விட்டு விடுவதற்கும், ஐநூறு ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக் கொள்வதற்கும் எப்படியோ தயாராகி விட்டார்கள். ஆனால் பி.ஏ. மாணவிகளுக்கு பிரசிடென்ட் பதவியை விட்டுக் கொடுப்பதற்கு மட்டும் யாரும் சுமுகமாய் இல்லை.

எல்லோரும் சேர்ந்து சாந்தாவின் மீது படையெடுத்தார்கள். சாந்தா மட்டும் தேர்தலில் நின்றால் ஐந்தூறு ரூபாயும் நஷ்டம் ஆகாது என்று ஒரு பெண் தன்னுடைய திட்டத்தைச் சொன்னாள்.

துண்டுப் பிரசுரத்தின் மீதும், டைம் டேபிள் மீதும் இருந்த ஆங்கில எழுத்துக்களை கொஞ்சம் திருத்தினால் போதும், ஷோபா சாந்தாவாகி விடுவாள். எப்படி மாற்ற வேண்டுமென்று எழுதியும் காண்பித்தாள்.

அதையே விநியோகம் செய்ய முடியும் என்றதும் எல்லோருக்கும் புதிய உற்சாகம் வந்துவிட்டது. ஸ்கெட்ச் பேனாவை எடுத்துக் கொண்டு கலர் கலராக பெயரைத் திருத்தி விட்டால் போதும் என்ற பாயிண்டை பிடித்துக் கொண்டு சாந்தா நிற்பதைத் தவிர வேறு வழி இல்லை என்று பிடிவாதம் பிடித்தார்கள். எப்படியாவது பாடுபட்டு சாந்தாவை ஜெயிக்க வைப்பதாக சொன்னார்கள். ஷோபாவும் சாந்தாவின் கைகளைப் பற்றிக்கொண்டு கெஞ்சினாள்.

சாந்தா ஒப்புக்கொண்டாள். அன்று மதியம் வகுப்புகளுக்கும் மட்டம் போட்டுவிட்டு எல்லோருமாகச் சேர்ந்து ஷோபாவின் பெயரை சாந்தாவாக திருத்தி விட்டார்கள்.

அதற்கு பிறகு பதினைந்து நாட்களும் கல்லூரியிலும், வீட்டிலும் சாந்தாவுக்கு ஒய்வு என்பதே இருக்கவில்லை. கல்லூரியில் ஒவ்வொரு பெண்ணையும் சந்தித்து வாக்கு கேட்பது, பாடம் முடிந்ததும் வகுப்புகளுக்குச் சென்று எல்லோருடனும் பேசுவது..

மதியம், மாலை நேரங்களில் மாணவிகளை ஒவ்வொரு குரூப்பாக கூட்டம் கூட்டி தங்களுடைய கொள்கைகளைப் பற்றிச் சொல்வது…. இவற்றுடன் பகல் முழுவதும் கழிந்து விடும்.

மாலையில் வீட்டுக்கு போகும் போது எப்படியும் தாமதம் ஆகிவிடும். வீட்டில் சாந்தாவின் தாய் சுந்தரி, மகளை வசை பாடத் தொடங்குவாள். தந்தை நரசிம்மன் வரும் வரையில் அந்தம்மாள் ட்யூட்டியில் இருக்கும் கானிஸ்டேபிளை போல் சாந்தாவை விட்டு வைக்க மாட்டாள்.

நரசிம்மன் இரவு நேரத்திலே எப்போது வந்தாலும் கடமை தவறாத அதிகாரியைப் போல் சாந்தாவைத் திட்டித் தீர்ப்பார். கல்லூரியை விட்டு நிறுத்தி விடுவேன் என்று மிரட்டுவார்.

அண்ணன் சேஷாத்ரியின் கேலி பேச்சுக்கள் ஒரு பக்கம். புதிதாக வேலையில் சேர்ந்திருப்பதாலோ என்னவோ தான் சம்பாதிப்பவன் என்றும், சாந்தா உதவாக்கரை என்றும் நிரூபிப்பதற்கு அடிக்கடி முயற்சி செய்து கொண்டே இருப்பான்.

அந்த பதினைந்து நாட்களும் வீடு காவல்நிலையம் போல் தோன்றியது சாந்தாவுக்கு. காவல்நிலையத்தில் எத்தனை துன்புறுத்தினாலும் அடி பணிந்து போகாத, அப்ரூவர் ஆக மாறாத புரட்சிவீரனை போல் சாந்தா பெற்றோருக்கு அடிபணிய வில்லை. ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டு, அவமானத்தில் தகித்துப் போய்க்கொண்டு சுயகௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக போராடினாள்.

ஷோபா வீட்டார் பயந்தது போலவே ஆண்கள் கல்லூரியிலிருந்து மாணவர்கள் சிலர் வந்தார்கள். முதல் முதலில அவர்கள் சாந்தாவைத் தேடி வந்த போது, அந்த சமயத்தில் பக்கத்தில் ஷோபா இருந்தது நல்லதாகி விட்டது.

“எங்கள் தங்கைகள், உறவினர்கள் இந்த கல்லூரியில் இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்குகளை உங்களுக்கு வாங்கித் தருகிறோம்” என்று ஒரு கல்லூரியினர் முன்னுக்கு வந்தார்கள்.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சாந்தா தடுமாறிய போது ஷோபா அவர்களை விசிட்டர்ஸ் ரூமில் உட்கார் வைத்து சமாதானமாகப் பேசினாள்.

“நீங்கள் எங்களுக்கு உதவி செய்வதற்காக வந்திருக்கீங்க. எங்களுக்கு அதில் சந்தோஷம். நாளைக்கு வேறு கல்லூரியிலிருந்து வருவார்கள். உங்கள் விஷயத்தை அவர்களிடம் சொன்னால் அவர்கள் பி.ஏ. மாணவிகளின் சார்பில் போட்டியிடும் பாரதியின் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்வதாகச் சொல்வார்கள். நீங்கள் இருவரும் நடுத்தெருவில் எங்களுக்காகக் சண்டை போட்டுக்கொள்வீர்கள். அதனால் எங்களுக்கு எத்தனைப் பிரச்சினைகள் வரும் என்று உங்களுக்குத் தெரியாது. ஏற்கனவே எங்கள் வீட்டார் பயந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் இதை பெரிய பிரச்சையாக்கினால், படித்த வரையில் போதும் வீட்டில் உட்காருங்கள் என்று சொல்லி விடுவார்கள். அதனால் எங்களுடைய தேர்தலில் நீங்கள் தலையிடாதீர்கள். எங்களுக்குள் யார் ஜெயித்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான். போட்டியோ, போறாமையோ இல்லவே இல்லை. ஏதோ ஜாலியாக போட்டி போடுகிறோமே ஒழிய எங்களுக்குள் பகைமை எதுவும் இல்லை.”

ஷோபா இப்படி சமாதானமாக பேசிக் கொண்டிருந்த போது சாந்தா போய் பிரின்சிபாலை அழைத்து வந்தாள். அவளும் மாணவர்களை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்று குளிர்பானம் வழங்கி ஷோபா சொன்னதையே மேலும் விலாவாரியாகச் சொன்னாள்.

வந்தவர்கள் இந்த மரியாதைக் கண்டு பூரித்துப் போய் விட்டார்களோ, அல்லது பேச்சில்தான் சமாதானமடைந்தார்களோ தெரியாது. வேறு எதுவும் பேசாமல் எல்லாவற்றுக்கும் தலையை அசைத்து விட்டு மலர்ந்த முகத்துடன் போய் விட்டார்கள்.

பிரின்சிபால் பாரதியையும் அழைத்து மாணவர்கள் யார் வந்தாலும், அவர்களை இந்த தேர்தலில் தலையிட வேண்டாம் என்று சொல்லச் சொன்னாள்.

கல்லூரியில் ஆயிரம் மாணவிகளுக்குள் போட்டியின் நிற்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட இடைஞ்சல்களை சந்திக்க வேண்டுமென்றும், எவ்வளவு போராட்டம் நடத்த வேண்டுமென்றும் சாந்தாவுக்குப் புரிந்தது.

அந்தப் போராட்டம் எவ்வளவு கஷ்டமாக இருந்ததோ அவ்வளவு பிடித்தமானதாகவும் இருந்தது.

ஷோபாவை போல் கரையில் நிற்பது தனக்கு ஒருபோதும் சாத்தியமில்லை என்று நினைத்துக்கொண்டே அந்தப் போராட்டத்தில் முழுவதுமாக முழுகிவிட்டாள் சாந்தா. சாந்தாவின் பெயரில் இருந்த துண்டுப் பிரசுரங்கள் எவ்வளவு ஜாக்கிரதையாக விநியோகம் செய்தாலும் மாணவர்களின் கைக்குச் சென்றன. ராக்கெடுகளாய் மாறி திரும்பவும் சாந்தாவையே வந்து தாக்கின. வழக்கம்போல் அவற்றுக்குப் பின்னால் தரக்குறைவான வார்த்தைகள், வசனங்கள்!

கோபம், துக்கம், அவமானம் இவற்றால் பிடிவாதம் மேலும் வளர்ந்தது. சாந்தா துணிச்சலுடன் நின்றாள். வேறு யாராவதாக இருந்தால் வாழ்க்கையில் ஒரு போதும் இப்படி பொதுவில் தம் பெயர் அடிபடுவதை கனவில் கூட சகித்துக்கொண்டிருக்க மாட்டார்கள்.

பாரதியின் நிலைமையும் அதுதான். ஆனால் அந்தப் பெண்ணின் வீட்டில் அவ்வளவு எதிர்ப்பு இருக்கவில்லை. அவளுடைய தந்தை பெண்பிள்ளைகள் கூட மனிதர்கள்தான் என்று நினைக்கும் இனத்தைச் சேர்ந்தவர்.

சாந்தாவின் வீட்டில் அப்படியில்லை. நித்தியமும் வேள்வி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அண்ணன் சேஷாத்ரி தன்னால் இயன்ற சமித்துக்களை அதில் போட்டுக் கொண்டிருந்தான்.

“இவளைப்பற்றி ஊரில் வம்பு பேசுகிறார்கள்.  என்னால் கடைத்தெருவில் தலை நிமிர்ந்து நடக்க முடியவில்லை” என்று தாயிடம் புகார் பட்டியலிடுவான். அத்துடன் சுந்தரி பிலாக்கணம் பாடத் தொடங்குவாள்.

சாந்தா அவமானத்தால் கொந்தளித்துப் போய் விடுவாள். அந்த மாதம் இரவு நேரத்தில் அவள் உணவு உட்கொண்ட நாட்கள் மிகவும் குறைவு.

எது எப்படி இருந்தல் என்ன? தேர்தல்கள் நடந்தேறி விட்டன. சாந்தா வெற்றி பெற்றுவிட்டாள். சாந்தாவை விட ஷோபா தான் அதிகமாக சந்தோஷப்பட்டாள். ஆனாலும்கூட அவள் அன்றைக்கு ஐந்து மணிக்கே வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். சாந்தாவும் மற்ற சிநேகிதிகளும் கெஞ்சி கேட்டுக் கொண்டாலும் தங்கியிருக்கவில்லை. சினேகிதிகள் எல்லோருமாகச் சேர்ந்து ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு இனிப்புகளை வரவழைத்து சிறிய பார்ட்டி கொண்டாடினார்கள்.

சாந்தாவுக்கு காற்றில் மிதப்பது போலவே இருந்தது. எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பிப் போன பிறகும் அவளுக்கு வீட்டுக்குப் போக பிடிக்கவில்லை. ஆனால் போகாமல் இருக்க முடியாது. இறுதியாக இந்த விஷயத்தைப் பற்றி வசவுகளை வாங்கிக் கட்டிகொள்ளாமல் இருக்க முடியாது. எல்லோரையும் விட தாமதமாக கிளம்பி நிதானமாக நடந்து போகும்போது ராம்குமார் கண்ணில் பட்டான். ராம்குமார் தென்பட்டால் நன்றாக இருக்கும் என்று சாந்தா மதியம் முதல் நினைத்துக் கொண்டுதான் இருந்தாள்

ராம்குமார் ஏ.ஸி. கல்லூரி மாணவனாக மட்டுமே அல்லாமல் கவிஞனாக, நடிகனாக கொஞ்சம் பெயர் பெற்றிருந்தான். கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் பேச்சுப் போட்டியில், நாடக விழாவில் சாந்தாவின் கண்களில் தென்பட்டுக் கொண்டிருந்தான்.. கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை சந்தித்திருக்கிறான். ரொம்ப நன்றாக பேசுவான். புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவான். சாந்தாவுக்கு அவனிடம் தனிப்பட்ட பிரியம் ஏற்பட்டது. ஷோபாவிடம் அவனைப் பற்றிச் சொன்னாள்.

“உன்னுடைய ராம்குமார்” என்று கிண்டலடிப்பாள் ஷோபா. தன்னுடைய வெற்றியின் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளக் கூடிய நண்பனாய் மதியம் முதல் மனதில் நினைத்துக் கொண்டிருந்த ராம்குமார் கண்ணில் பட்டதும் சாந்தாவின் முகம் மலர்ந்தது.

அவன்கூட மிகுந்த உற்சாகத்துடன் வாழ்த்துக்கள் தெரிவித்தான். “காபி குடிப்போம். வாங்க” என்று அழைத்தான்.

“வேண்டாம்” என்றாள் சாந்தா. அவளுக்கு அவனுடன் சேர்ந்து காபி சாப்பிட்டபடியே அரைமணி நேரமாவது பொழுது போக்க வேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் யாராவது பார்த்து விட்டால்? அந்த பயம் மனதில் எழும்பி அவளைப் பின்னால் இழுத்துக் கொண்டிருந்தது.

“பரவாயில்லை வாங்க. பத்து நிமிஷங்கள் போதும். இன்றைக்கு நீங்க எனக்கு காபி வாங்கித் தருவதை விடுத்து நான் கூப்பிட்டாலும் வரமாட்டேன் என்று சொல்றீங்களே” என்று மேலும் வற்புறுத்தினான்.

விருப்பமில்லாமலேயே நடப்பது போல் நடந்தாள் சாந்தா. நாற்காலியில் உட்கார்ந்து தண்ணீர் குடித்த பிறகும் அவள் முகத்தில் அந்த சங்கடம் நீங்கவில்லை.

“உங்களை ரொம்ப சங்கடப் படுத்தி விட்டேன் போலிருக்கு.” சாந்தாவின் முகத்தை கூர்ந்து பார்த்து விட்டு கேட்டான்.

“கொஞ்சமாவது?  நிறையவேதான்.”

“எந்த வித்ததில்?”

“என் வீட்டார் யாராவது பார்த்துவிட்டால் ரகளையாகி விடும்.”

“இது இருபதாவது நூற்றாண்டு. வீரேசலிங்கம் அவர்கள் பெண்களுக்குக் கூட ஞானம் இருக்க வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கி நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் நீங்க வீட்டில் ரகளையாகி விடும் என்று பயப்படுறீங்க.” இது சரியில்லை என்பது போல் சொன்னான்.

“ஞானம் வேண்டும் என்று சொன்னாரே ஒழிய ஆண்களுடன் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் காபி குடிக்கணும் என்று சொல்லவில்லை இல்லையா?” சாந்தா சிரித்தாள்.

“பின்னே ஞானம் எப்படி வரும்?”

“ஏன்? உங்களுடன் சேர்ந்து காபி சாப்பிட்டால் தவிர எனக்கு ஞானம் வராதா?”

“ஞானம் பல விதமாய் இருக்கும். நீங்கள் கல்லூரியில் படித்து ஞானத்தை சம்பாதிக்கிறீங்க. இப்படி ஹோட்டலுக்கு, கடைத்தெருவிலும் சுற்றி வந்து கூட சமுதாயத்தை கவனித்து வந்தால் ஞானம் கிடைக்கும். ஒன்று மற்றொன்றுக்கு உதவியாகவும் இருக்கும்.” கிண்டல் செய்வது போல் சிரித்தான் ராம்குமார்.

“ஆமாமாம். ஆண்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டால் சோப்ளாங்கி! வீட்டிலேயே உட்கார்ந்து இருந்தால் எப்படி உலக ஞானம் வரும் என்பார்கள். பெண்பிள்ளைகளை மட்டும் ஆயிரம் கண்களுடன் காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். வாசற்படியைத் தாண்ட விட மாட்டார்கள்.”

ராம்குமார் எதுவும் சொல்லாமல் காபி கோப்பையை எடுத்துக் கொண்டான்.

“ஆனால் உண்மையிலேயே எனக்கு உங்களுடன் சேர்ந்து கொஞ்ச நேரம் இருக்க வேண்டும், பேச வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் திரும்பவும் ஏதோ பயம். தவறு செய்கிறேனோ என்ற சந்தேகம். இதில் தவறு என்ன இருக்கு என்ற எதிர்ப்பு! இரண்டுக்கும் நடுவில் பெரிய போராட்டம். என் அமைதியின்மைக்கு எல்லைகள் இல்லை. எங்கள் ஷோபாவுக்கு அப்படி இல்லை. செய்யக் கூடாத காரியம் என்று அவளுக்கே தோன்றினாலும், பெரியவர்கள் சொன்னாலும் உடனே அந்த வேலையை செய்யாமல் இருந்து விடுவாள். நிம்மதியாக இருப்பாள். என்னால் அப்படி இருக்க முடியாது. எப்போதும் ஏதோ ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விடுவேன்.“ சாந்தா மளமளவென்று தன் மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் சொல்லிவிட்டாள்.

ராம்குமார் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“உண்மையிலேயே உங்களுக்கு என் வேதனை புரியாது. ஒரு கப் காபியைக் குடிப்பதற்கு இந்த அளவுக்கு மனப் போராட்டம் நடத்தவேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. உங்களுக்கு இது ரொம்ப சின்ன விஷயம். ஆனால் எங்களுக்கு அப்படி இல்லை. இதற்காக கூட நாங்கள் எத்தனையோ போராட வேண்டும். எங்கள் குணநலனை முடிவு செய்யும் அம்சம் ஒரு கப் காபி என்றால் கூட வியப்படைய வேண்டியது இல்லை. “அந்தப் பெண் எப்போதும் பசங்களுடன் சேர்ந்து ஹோட்டல்களுக்குப் போவாள்” என்ற பழி வந்து விட்டால்? எனக்கு கெட்டப் பெயர் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றும். கெட்டப் பெயர் என்றால் எதிர்த்து போராடுவதுதான்! எனக்கு எல்லோரையும் எதிர்த்து நிற்க வேண்டும் போல் தோன்றுகிறது.”

என்ன சொல்வது, என்ன பேசுவது என்று தெரியாதவன் போல் ராம்குமார் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

“இனி நான் கிளம்புகிறேன்” என்று விடுவிடென்று நடந்து போய்விட்டாள் சாந்தா.

அந்த வருடம் வேறு எந்த ரகளையும் இல்லாமல் கழிந்து விட்டது. சாந்தா, ஷோபா இருவரும் சேர்ந்துதான் பரீட்சைக்கு படித்தார்கள். இருவருக்கும் முதல் வகுப்பு வரும் என்ற நம்பிக்கை இருந்தது. மேற்கொண்டு படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் ஷோபா அந்த விஷயத்தை பெற்றோரிடம் விட்டு விட வேண்டும் என்று முடிவு செய்தாள்.

சாந்தாவால் அப்படி விட முடியாது என்பதால் பெற்றோருடன் போராடுவதற்கு தயாராகி கொண்டிருந்தாள் இருவருடையதும் நடுத்தரமான  குடும்பங்கள்தான். மகளுக்கு கல்யாணம் முடித்து பாரம் இறங்கி விட்டது என்று நினைக்கும் குடும்பங்கள்!

ஷோபா மூத்தவள் என்பதால் அவள் பெற்றோர் முன் ஜாக்கிரதையாய் நிறைய பணத்தை சேமித்து வைத்திருந்தார்கள். சாந்தாவின் தந்தைக்கு மகனுக்கு கிடைக்கப் போகும் வரதட்சிணை  தன் கைக்கு வரும் என்ற தெம்பு இருந்து வந்தது.

அதனால்தான் ஷோபாவின் திருமணத்திற்காக அன்னபூர்ணா பரபரத்தது போல் சுந்தரி அவசரப்படவில்லை. ஷோபா திருமணம் செய்துகொள்ள தயாராகி கொண்டிருந்தபோது சாந்தா கேட்டாள்.

“அப்படி என்றால் நீ எம்.எஸ்.ஸி. படிக்க மாட்டாயா?”

“சரியான வரன் கிடைக்கவில்லை என்றால், வரன் கிடைத்தாலும் அவர்கள் வீட்டில் சம்மதித்தால் மேற்கொண்டு படிபேன்.”

ஷோபாவைப் பிடித்து நன்றாக உதைக்க வேண்டும் போல் இருந்தது சாந்தாவுக்கு. “உனக்கு படிக்க வேண்டும் என்று இருக்கிறதா இல்லையா?”

“இல்லாமல் என்ன?”

“அந்த எண்ணம் இருந்தால் இப்போது உடனே திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொல்லலாம் இல்லையா?”

“ஏன் சொல்ல வேண்டும்? எம்.எஸ்.ஸி. பாஸ் செய்த பிறகாவது கல்யாணம் செய்துகொள்ளாமல் இருக்க முடியாது இல்லையா? ஒருக்கால் இப்பொழுது ஒரு நல்ல வரன் வந்தால் அதை விடுவானேன்?”

“உங்க அம்மாவைப் போல் பேசாதே.” சாந்தா கோபித்துக்கொண்டாள்.

“அம்மா சொன்ன வார்த்தைகள்தான் இவை. எனக்கு உண்மைதான் என்று பட்டது. எவ்வளவு படித்தாலும், எந்த வேலைக்குப் போனாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற வேண்டும். அதுதானே முக்கியம். அப்படி இருக்கும் போது அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பற்றி யோசிப்பது நல்லது இல்லையா.”

சாந்தா எதுவும் பேசவில்லை. நான்கு நாட்களில் ஷோபாவை பெண் பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டார் வரப் போகிறார்கள் என்று தெரிந்த பிறகு மேற்கொண்டு பேச என்ன இருக்கிறது?

பெண்பார்க்கும் நாளன்று ஷோபாவின் பதற்றத்தைக் கண்டு சாந்தாவுக்கு வியப்பாக இருந்தது. ஷோபா ஒரு நாளும் இதுபோன்ற பதற்ற நிலையில் இருந்தது இல்லை. அது பரீட்சையாகட்டும், போட்டியாகட்டும், நாடகமாகட்டும், வேறு எதுவாக இருந்தாலும் சரி அளவுகடந்த நம்பிக்கையுடன், தளராமல் நிற்கக் கூடிய ஷோபா தளிர் இலையைப் போல் நடுநடுங்கி விட்டாள்.

எந்தப் புடவையைக் கட்டிக்கொள்வது? பொட்டு பெரிசாக வைப்பதா? சின்னதாகவா? மை இட்டுக்கொள்வதா விட்டு விடுவதா? பதக்கம் வைத்த சங்கிலி போதுமா? நெக்லெசும் அணிய வேண்டுமா?

எல்லாம் சந்தேகங்கள்தான்! எல்லாவற்றுக்கும் பயம்தான்.

எல்லா விதமாகவும் முயற்சி செய்தாள். மையை இட்டுக்கொண்டு அழித்தாள். பொட்டு சிறியதாக வைத்து விட்டு அதை மேலும் பெரிதாக்கினாள்.

“எது சரியாக இருக்கு என்று சொல்லக் கூடாதா?” சாந்தாவைக் கடிந்து கொண்டாள்.

“நீ எப்படி இருந்தாலும் நன்றாக இருப்பாய். பதற்றப்படாமல் பரீட்சை எழுதுவது போல், போட்டியில் பங்கு பெறுவது போல் போ.”

“பாழாய் போன ஜோக்கும் நீயும்.” ஷோபாவின் பயம் மேலும் அதிகரித்தது.

மாப்பிள்ளை டாக்டர். தடிமனாக இருந்த மூக்குக்கண்ணாடி அவன் முகத்தை பெரும்பாலும் மறைத்து விட்டது.

ஷோபா வரும் வரையில் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவர்கள் அவள் வந்ததும் பேச்சை நிறுத்திவிட்டு கண்களுக்கு வேலையைக் கொடுத்தார்கள். எல்லோரின் கணகளிலும் ஒரு விதமான இளக்காரம். ஏதோ பரவாயில்லை என்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் மௌனம் அங்கே ஆட்சி புரிந்தது. யாரும் எதுவும் பேசாமல் வாயை இறுக்கி மூடிக் கொண்டிருந்தார்கள்.

“நீங்க என்ன படிக்கிறீங்க?”

இறுதியில் ஷோபா தன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையின் தங்கையிடம் கேட்டாள். அது மாபெரும் தவறாகி விட்டது. அந்தப் பெண் அந்த வருடம்தான் ப்ளஸ் டூ எழுதிவிட்டு பெயிலாகி இருந்தாள். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

மாப்பிளை தாயாரின் முகத்தில் எரிச்சல் வெளிப்படையாய் தென்பட்டது.

சூழ்நிலை மேலும் இறுகியதும் ஷோபா மேலும் கலவரமடைந்து விட்டாள்.

“இனி நாங்கள் கிளம்புகிறோம்” என்று மாப்பிள்ளையின் தாயார் எழுந்துகொண்டாள். அவளுடன் மற்றவர்களும் எழுந்துகொண்டார்கள். அவர்கள் போனதும் ஷோபாவின் தாய் மகளை கடிந்துகொண்டாள்.

“அவர்கள் ஏதாவது கேள்வி கேட்பார்கள். நீ பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறை. நீ ஒரு அவசரக்குடுக்கை! அந்தப் பெண் என்ன படித்தால் உனக்கு எதுக்கு? பெரிய மனுஷியைப் போல் விசாரிப்பானேன்?”

“யாருமே பேசவில்லையே? மரியாதையாக இருக்காதே என்று சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்” என்று புலம்பினாள் ஷோபா.

“உன் மரியாதைகளை தூக்கி உடைப்பையில் போடு. உனக்குத்தான் மரியாதை செய்யத் தெரியுமா? எங்களுக்குத் தெரியாதா?” இப்படியே நீண்டுகொண்டு போயிற்று அந்த படலம்.

ஷோப அழுதுகொண்டே படுத்திருந்தாள். ஷோபா கண்ணீர் விடுவதை முதல்முறையாக பார்த்தாள் சாந்தா. யாராலும் ஒரு வார்த்தை கேட்டிராத ஷோபா… யாரையும் நோகடிக்காத ஷோபா… தன்னுடைய தவறு எதுவும் இல்லாமலேயே இப்படி அழ வேண்டிய நிலைக்கு உள்ளாவதை சாந்தாவால் மட்டுமே புரிந்து கொள்ள முடிந்தது. பத்து நாட்கள் கழித்து பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கடிதம் வந்தது. தோல்வியே கண்டிராத ஷோபா முதல்முறையாய் தோற்று விட்டாள். ஷோபாவின் தோல்வி சாந்தாவை அந்த தேர்வுக்கே சுமுகமாக இல்லாமல் செய்து விட்டது.

ஷோபா பெற்றோரின் தவிப்பு அதிகரித்தது. ஒரு மாதத்திற்குள் இன்னொரு வரனை கொண்டு வந்தார்கள். பையன் எம்.எஸ்.சி. படித்துவிட்டு ஹைதராபாதில் ரிசெர்ச் லாபில் சைண்டிஸ்ட் ஆக பணி புரிகிறான்.

இந்த முறை ஷோபா பெண்பார்க்கும் நிகழ்ச்சியில் குனிந்த தலை நிமிரவில்லை.

நன்றாக படித்திருந்த போதிலும் ஷோபா எவ்வளவு பணிவும் அடக்கமும் நிறைந்த பெண் என்றும், வீட்டு வேலைகளை எல்லாம் எவ்வளவு நேர்த்தியாக செய்வாள் என்றும் பலவிதமான வார்த்தைகளில் விவரமாக சொன்னார்கள் ஷோபாவின் பெற்றோர். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை பிடித்திருக்கிறது என்று அந்த இடத்திலேயே சொல்லி விட்டார்கள். மாப்பிள்ளையின் தாய் கொஞ்சம் வெகுளி போலும். “பெண்ணுக்கு என்ன? தங்கப் பதுமையாய் இருக்கிறாள்” என்று வாய்விட்டு சொல்லவும் செய்தாள்.

“ஜெயசுதா சாயல் இருக்கு”  என்றாள் மாப்பிள்ளையின் தங்கை.

எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். முகூர்த்தம் பார்த்தார்கள். ஷோபா உற்சாகத்துடன் கல்யாணத்திற்கு வேண்டிய புடவை நகை வாங்கினாள். அழைப்பிதழ்களை வினியோகித்தாள்.

நேற்றிச்சுட்டி, ஓட்டியாணம் இவற்றுக்காக உறவினர்களிடம், சிநேகிதிகளிடம் விசாரித்து சேகரித்து வைத்துக் கொண்டாள். அவற்றை அணியவில்லை என்றால் மணமகள் தோற்றம் எடுப்பாக இருக்காது என்றாள். பத்திரிகைகளில் வரும் மணமகளின் படங்களை கத்தரித்து கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள்.

எந்த பொட்டு வைத்துக்கொள்ளணும்? புடவை என்ன கலர்? நகைகள் என்ன? மருதாணி இட்டுக்கொள்ள வேண்டுமா? நெயில் பாலிஷ் போடணுமா? கால்களுக்கு என்ன அணிவது?  எந்த மாதிரி வளையலை அணிய வேண்டும்?

ஒரு கட்டுரையை தயாரிப்பதற்கு, ஒரு பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு எவ்வளவு கஷ்டப்படுவாளோ, எத்தனை புத்தகங்களை தேடுவாளோ இப்பொழுதுகூட அந்த அளவுக்கு கஷ்டபட்டாள்.

வித்தியாசம் ஒன்றுதான். அப்போது பதற்றம் அடைந்தது இல்லை.  இப்போ மணமகளின் அலங்காரத்துக்கு மட்டும் அளவு கலந்த டென்ஷன்.

திருமண நாளன்று சினிமா நடிகையை மிஞ்சும் அளவுக்கு அலங்காரம் செய்து கொண்டாள். திருமணம் என்றால் இந்த அலங்காரம்தான் என்று அவள் நினைக்கிறாளோ என்பது போல் தயாரானாள்.

சாந்தாவுக்கு இதெல்லாம் போலித்தனமாகத் தோன்றியது.

‘ஷோபாவைப் பற்றி இவர்கள் யாருக்கும் தெரியாது. வரப்போகும் மாப்பிள்ளைக்கு அசலுக்கே தெரியாது. பதுமையைப் போல் இருக்கும் இவள் ஷோபா இல்லை. இனி நாளடைவில் ஷோபா இறந்து விடுவாள் போலும்.’ தன்னுடைய யோசனையைக் கண்டு தானே திடுக்கிட்டாள் சாந்தா.

நாளை முதல் ஷோபா கல்லூரிக்கு வரமாட்டாள். நூலகத்தில் புத்தகங்களைத் தேடமாட்டாள். விளையாட மாட்டாள். பாட்டு பாட மாட்டாள்.

இட்லி, தோசைக்கு மாவு அரைப்பாள். சமைப்பாள். வயிற்றைத் தூக்கிக் கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வாள். இந்த வேலைகளை எல்லாம் செய்ததற்கு ஷோபாவுக்கு எந்த மதிப்பும் கிடைக்காது. கல்லூரியில் ஷோபாவுக்கு கிடைத்த அங்கீகாரம் சமையல் அறையில் இருக்கும் ஷோபாவுக்கு இருக்காது. திருமண மண்டபத்திலிருந்து எங்கேயாவது ஓடிப்போய் தனியாய் ஒரு இடத்தில் உட்கார்ந்து வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது சாந்தாவுக்கு.

திருமணம் ஆன பத்து நாட்கள் கழித்து ஷோபா கணவனுடன் சேர்ந்து ஹைதராபாதுக்கு போய் விட்டாள். போகும் முன்னால் சாந்தாவின் வீட்டுக்கு வந்தாள்.

இருவரும் சேர்ந்து நிறைய பேசிக் கொண்டார்கள். “நீயும் அவரும் நல்ல நண்பர்களாகி விட்டீர்களா?” சாந்தா கேட்டாள். ஷோபாவின் வாழ்க்கை கடந்த பத்து நாட்களாக எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளுக்கு.

“நண்பர்களாவது? அவரிடம் எனக்கு பயம் இன்னும் போகவில்லை” என்றாள் ஷோபா. அவள் குரலில் பயம் வெளிப்படையாகத் தெரிந்தது.

“பயமா?” சாந்தா வியப்புடன் கேட்டாள்.

“ஆமாம். பயம்தான். அவருக்குக் கொஞ்சம் கோபம் அதிகம். எந்த விஷயத்தில், எப்போ கோபம் வருமென்று எனக்கு இன்னும் புரிபடவில்லை. மெதுவாய் அவருக்கு எது பிடிக்குமோ, எது பிடிக்காதோ தெரிந்து கொள்ள வேண்டும்.“ ஏதோ மாபெரும் கடமையை தரிசனம் செய்துகொள்வது  போல் பயபக்தியுடன் சொன்னாள் ஷோபா.

“முத்தமிட்டுக் கொள்ளும் போது கூட பயமாக இருக்குமா?” சாந்தா திடீரென்று கேட்டாள்.

“சீ போ” என்று வேட்கபட்டாள் ஷோபா.

“உண்மையிலேயே தெரிந்துகொள்ள வேண்டுமென்றுதான் கேட்கிறேன். முத்தம் இடும் போதுகூட பயமாக இருக்குமா?” ஆர்வத்துடன் கேட்டாள் சாந்தா.

“ஊம். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும்.”

“செக்ஸ் எப்படி இருக்கும். நன்றாக இருக்குமா?”

“என்னவோ? எனக்கு எதுவும் தெரியாது. கொஞ்சம் அருவருப்பாக இருக்கும். சீக்கிரம் முடிந்து விட்டால் போதும் என்று தோன்றும்.” சிறிது சங்கடபட்டுகொண்டே சொன்னாள் ஷோபா.

“பின்னே கதைகளில், நாவல்களில் அப்படி எழுதுகிறார்களே?” சாந்தா ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள். “எல்லோரும் பொய்தான் எழுதுகிறார்களா?”

“ஆண்களுக்கு நன்றாக இருக்குமோ என்னவோ. அவர்கள்தானே எழுதுகிறார்கள். விட்டேன் அந்தப் பேச்சை. உன் படிப்பு விஷயம் என்ன? மேற்கொண்டு படிக்கப் போகிறாயா?”

“இங்கே பி.ஜி. சென்டரில் சீட் கிடைத்தால் படிக்கிறேன். சீட் கிடைக்கவில்லை என்றால் வைசாக் சென்று படிக்கும் வாய்ப்பு மட்டும் இல்லை.”

அதற்குள் சாந்தாவின் தாய் வந்தாள். “வாம்மா ஷோபா! மாமியார் வீட்டுக்குப் போகிறாயா? எங்கள் சாந்தாவுக்கு அந்த அதிர்ஷ்டம் எப்போது வருமோ?” என்றபடி அங்கேயே உட்கார்ந்து கொண்டாள். சினேகிதிகள் இருவரின் சங்கடத்தை அவள் கவனிக்கவில்லை.

“உன் வீட்டுக்காரருக்கு எவ்வளவு வரதட்சிணை கொடுத்தார்கள்?” என்று பேச்சைத் தொடங்கினாள்.

“உனக்கு எதுக்கு? சும்மா இரேன்” என்று சாந்தா கடிந்து கொண்டாலும் பொருட்படுத்தவில்லை.

“அப்பா என் பெயரில் ஒரு லட்ச ரூபாய் வங்கியில் டிபாசிட் போட்டார்கள்.” பணிவுடன் சொன்னாள் ஷோபா.

“உன் வீட்டுக்காரருக்கு எதுவும் வாங்கித் தரவில்லையா? ஸ்கூட்டரோ வேறு ஏதாவதோ?”

“ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்தார்கள். வீட்டுக்கு வேண்டிய சாமான்கள், பர்னிச்சர் எல்லாம் அம்மா ரொம்ப நாளாக சேர்த்து வைத்திருக்கிறாள். அதையெல்லாம் எடுத்துக்கொண்டு போகிறேன்.”

பர்னிச்சர், வீட்டுச் சாமான்களைப் பற்றி சாந்தாவுக்கு மூன்று வருடங்களாக தெரியும். ஷோபாவின் தாய் அன்னபூர்ணா எப்போதும் இரண்டு மூன்று சீட்டு கட்டிக்கொண்டு வந்தாள். அந்த பணம் வந்த போதெல்லாம் சோபா, பீரோ,  டபுல்காட், பிர்ஜ் என்று ஒவ்வொன்றாக வாங்கி வந்தாள்.

எல்லாம் ஏற்கனவே அவர்கள் வீட்டில் இருப்பவைதான். “திரும்பவும் ஏன் வாங்கினீங்க. வீட்டில்தான் இருக்கே?” முதலில் விவரம் தெரியாமல் சாந்தா கேட்டுவிட்டாள்.

“எல்லாம் ஷோபாவுக்குத்தான். கல்யாணம் தகையும் போது எல்லாம் ஏற்பாடாக இருந்தால் நமக்குக் கொஞ்சம் சுலபமாக இருக்கும்” என்றாள் அன்னபூர்ணா. வாங்கிய பொருட்களை எல்லாம் துணியைப் போர்த்தி பத்திரப்படுத்துவாள். இது போன்ற பெரிய சாமான்களை எல்லாம்தான் கடந்த மூன்று வருடங்களில் ஏற்பாடு செய்தாள். மற்ற சில்லறை சாமான்களை எல்லாம் ஷோபாவின் ஏழாவது வயது முதல் சேர்த்து வந்திருக்கிறாள்.

ஷோபா ஒரு தடவை சொன்னாள். “அம்மா எனக்காகக் எவ்வளவு தூரம் யோசிப்பாள் என்று என்னால் சொல்ல முடியாது சாந்தா! ஒவ்வொரு நிமிடமும் என்னைப் பற்றித்தான் யோசிப்பாள். எனக்கு ஏழு வயது ஆகும் போது வீட்டில் இருந்த சின்னச்சின்ன வெள்ளி கிண்ணங்கள், குங்குமச் சிமிழ்களை எல்லாம் அழிக்கச் செய்து மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து வெள்ளியில் பூக்கூடையை பண்ணவைத்தாள். அம்மாவை பெத்த பாட்டி பட்டுப் புடவை வாங்கிக் கொள்வதற்காக அம்மாவுக்குக் கொடுத்த பணம் அது. ஏற்கனவே எங்கள் வீட்டில் வெள்ளியில் பூக்கூடை இருந்தது. திரும்பவும் எதுக்கு அம்மா என்றுகேட்ட போது, உனக்காகத்தான். கல்யாணம் வருவதற்குள் ஒவ்வொரு சாமானாக சேர்ந்து வைக்க வேண்டாமா என்றாள். புதிதாக ஏதாவது பாத்திரம் வந்தாலும் முதலில் அம்மா என்னைப் பற்றித்தான் யோசிப்பாள். அம்மாவுக்கு என்னிடம் எவ்வளவு பிரியம்! அம்மாவை நோகடிக்கும் காரியத்தை ஒரு நாளும் செய்யக் கூடாது என்று தோன்றும்.”

ஷோபாவின் பேச்சைக் கேட்ட பிறகு சாந்தாவின் மூளை குழம்பி விட்டது. பிரியம் என்று ஷோபா சொன்ன விஷயம் சாந்தாவுக்கு கொடூரமாய் தோன்றியது. “எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட நன்றாக இல்லை” என்றாள் அமைதியற்ற குரலில்.

“எது நன்றாக இல்லை? அம்மா என்னைப் பற்றி யோசிப்பதும், நான் அம்மாவை நேசிப்பதுமா? உண்மையிலேயே நீ ஒரு பைத்தியம்தான்” என்றாள் முறுவலுடன்.

“அது இல்லை. உன் அம்மா உனக்காக அப்படி சாமான்களை வாங்கி வருகிறாள் என்றால் அந்த சாமான்களுடன் நீ வேறு வீட்டுக்கு போக வேண்டும் என்றுதானே. “நீ இந்த வீட்டுப் பெண் இல்லை. உன் சாமான்களை எல்லாம் உனக்காக தனியாக எடுத்து வைக்கிறோம்” என்று சொல்வது போல் இல்லையா? உனக்கு வருத்தமாக இருக்காதா? எங்க அம்மா மட்டும் அப்படிச் செய்தால் அந்த சாமான்களை எல்லாம் உடைத்து தூக்கிப் போடுவேன்.”

“நல்ல ஆள்தான் போ. சாமான்களை வாங்கினாலும், வாங்கவில்லை என்றாலும் நாம் எப்போதுமே இங்கே இருந்து விடுவோமா? மாமியார் வீட்டுக்குப் போக மாட்டோமா?”

“அம்மா வீடு, மாமியார் வீடு இந்த இரண்டும்தானா நமக்கு? நமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா? அந்த வீட்டில் நமக்கு வேண்டிய சாமான்களை நாமே வாங்கிக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?” யோசனையில் மூழ்கியபடி சொன்னாள் சாந்தா.

“அந்த வீட்டில் நீ ஒருத்திதான் இருப்பாயா?” ஷோபா வியப்புடன் கேட்டாள்.

“ஆமாம். நான் ஒருத்தி மட்டும்தான் இருப்பேன். என் இஷ்டம் வந்தது போலிருப்பேன். விரும்பிய போதெல்லாம் படிப்பேன். இஷ்டப்பட்ட போது சாப்பிடுவேன். எப்போது தூங்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது தூங்குவேன். எழுந்துகொள்ள வேண்டும் என்று தோன்றினால் எழுந்துகொள்வேன். என் வீட்டுக்கு எனக்கு விருப்பமானவர்களைத்தான் அழைப்பேன். எனக்கு விருப்பம் இல்லாதவர்களை வீட்டுக்குள் வர விட மாட்டேன்.“ ஏதோ கனவுலகில் இருப்பவளைப் போல் பேசினாள்.

“யாரையும் வர விட மாட்டாயா? உன்னுடைய ராம்குமாரைக் கூடவா?” கலகலவென்று நகைத்தாள் ஷோபா.

அதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தது.

“ஊர்பட்ட சாமான்களுடன் ஷோபா மாமியார் வீட்டுக்கு போகப் போகிறாள்” என்றாள் சாந்தா நகைத்துக் கொண்டே.

ஷோபா கிளம்புவதற்காக எழுந்துகொண்டாள். “நாளை காலையில் எங்கள் வீட்டுக்கு வா சாந்தா!” ஷோபா அழைத்தாள்.

“எதற்கு? உன் வீட்டுக்காரரை அறிமுகம் செய்து வைக்கப் போகிறாயா?”

சுந்தரி ஷோபாவுக்கு மஞ்சள் குங்குமத்துடன் வாழைப்பழம் வைத்துக் கொடுத்தாள்.

அன்று இரவு முழுவதும் சாந்தாவுக்கு உறக்கம் வரவில்லை. “ஷோபா இந்நேரம் பயந்து கொண்டே கணவனின் அருகில் சென்று படுத்துக் கொள்வாள். அவன் முத்தமிடுவான். பயந்து கொண்டே அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்றுக்கொள்வாள். முத்தமிட்டால் எப்படி இருக்கும்? பயத்தைத் தவிர வேறு எதுவும் இருக்காதா?”

சாந்தாவின் உடலும், மனமும் இனம் தெரியாத சஞ்சலனத்திற்கு உள்ளாயின. ராம்குமார் நினைவுக்கு வந்தான். ராம்குமார் தன்னை முத்தமிட்டால்?

‘என்ன யோசனை இது? எனக்குப் பைத்தியம் பிடிக்கப் போகிறது’ என்று நினைத்துக் கொண்டே கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்க முயன்றாள்.

Series Navigationவந்துவிடு வனிதா.. !விளையும் பயிர் (நிக்கோலா டெஸ்லா)
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *