இறப்பின் விளிம்பில். .

This entry is part 11 of 38 in the series 5 ஆகஸ்ட் 2012

இந்த வழ்க்கையை வாழ்ந்து தீர வேண்டியிருப்பதால் கட்டிலில் காட்சிப் பொருளாய் நான்…மக்கள் என்னைப் பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் கழுத்தைப் பார்க்கிறேன். இல்லை; அது இல்லை. ஐயோ… அது வேண்டும். கட்டாயம் வேண்டும். எப்படிச் சொல்வது? புரிந்து கொள்வார்களா?

அவர்களுக்குச் சொல்ல என்னிடம் நிறைய இருக்கிறது. என் கண்கள் அவர்களைப் பார்த்து ஆயிரமாயிரம் பேசுகின்றன. அவர்கள் என் பார்வைக் குத்தலிலேயே நான் சொல்ல நினைப்பதையெல்லாம் உணர்ந்து கொண்டிருப்பார்கள். நினைவுகளின் ஆழத்தில் விழுவதும் பின் எழுவதுமாக இருக்கிறது என் கவனத்தவளை.

சக்தியற்றுக் கிடக்கிற என் முகத்தில் எறும்புகள் ஊர்கின்றன. கால்கள், கைகள், உடலெங்கும் எறும்புக்கூட்டம் என்னை மொய்க்கிறது. காதுகளுக்குள்ளும் எறும்புகள் ஊர்கின்றன. எல்லாவற்றையும் வழித்தெறிந்து விட்டு வாரிச்சுருட்டி எழுந்து ஓட முடியாமல் கிடக்கிறேன். இயலாமை என் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து விசுவரூபம் எடுத்து நிற்கிறது. கடைசி முயற்சியாக மண்ணைப்பிளந்து கொண்டு விதை முளைவிட்டதைப்போல, முட்டையை பிளந்துகொண்டு குஞ்சு வெளிவந்ததைப்போல நானும் முயற்சித்துப்பார்க்கிறேன். அட இதென்ன ஆச்சரியம் என் தலை அசைகிறதே? திருப்ப முடிகிறதே? கைகளைக்கூட அசைக்க முடிகிறதே? பக்கத்தில் பார்க்கிறேன் என்னைப்போலவே பலர் அங்கே படுக்கைகளில் கைகால்களிலும், தலையிலும் கட்டுப்போடப்பட்டு மல்லாந்து கிடக்கிறார்கள். மருத்துவனைக்காற்று அதன் பிரத்தியேக மணத்தைச் சுமந்து அலைகிறது. அதென்ன சிகப்புத்திரவம்? நாக்கு தன்னிச்சையாக சப்புக் கொட்டுகிறது….உப்புக் கரிக்கிறது….முகத்தைச் சுளிக்கிறேன்…ஓ இரத்தம் ஏற்றுகிறார்கள்..எதிர்க்கண்ணாடியில் அது நானா? உருளுகிற அந்தக் கருவிழிகளுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது அத்தனை சக்தி? அது உருண்டு உருண்டு செய்திகளை உமிழ்ந்து கொண்டிருக்கிறது.

என்னைக்கிடத்தியிருக்கிற படுக்கை சற்றே சாய்த்து இடுப்புக்கு மேல் 45 டிகிரி அளவுக்கு நிமிர்த்தியிருக்கிறது. அதனால் எதிரில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் சீரழிந்து போன என் முகத்தைப் பார்க்க முடிகிறது. மூக்கு கோணிப்போய் இருக்கிறது. உதடு நடுவில் கிழிந்து இருபுறமும் வீங்கித் தொங்குகிறது. முன் பற்களைக் காணவில்லை. தலையில் கட்டு. உடம்பெங்கும் டியூப்களைச் சொருகியிருக்கிறார்கள். கையில் சொருகியிருக்கிற டியூப் வழியாகச் சொட்டுச்சொட்டாய் சக்தி ஏறுகிறது. இன்னொரு புறம் இரத்தம் ஏறுகிறது. கால்களை அசைக்கமுடியவில்லை. இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை. வெள்ளைத்துணி மார்பு வரை மூடியிருக்கிறது. மூக்கில் பிராணவாயுக்குழாய் உறுத்துகிறது. என் உடம்பில் ஒருவித நடுக்கம் பரவுகிறது. கட்டுப்படுத்த முயல்கிறேன். மூளையின் உத்தரவுகளை உடம்பு ஏற்க மறுக்கிறது. நடுக்கம் அதிகமாகிறது. உடம்பு தூக்கித் தூக்கிப் போடுகிறது. வெள்ளை உடுப்பு மனிதர்கள் என்னை அழுத்திப்பிடிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அவள் என் கையில் ஊசியைக் குத்துகிறாள். என்னைப் பார்த்துக்கொண்டு சென்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாகி என் விழித்திரையிலிருந்து மறைகிறார்கள். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் நினைவு தப்புகிறது.

எங்கும் இருட்டு.. என்ன இது? நான் எங்கே இருக்கிறேன்? நான் எங்கே…? கடைசியாய் என்ன நடந்தது? ஒன்றையும் சிந்திக்கமுடியாமல் வருகிறது. குரலெடுத்துக் கத்தப் பார்க்கிறேன். குரல் வரவில்லை. மூச்சு முட்டுகிறது. மூக்கின்மீதும் வாயின் மீதும் கனமான ஒன்று அழுத்திக் கொண்டிருக்கிறது. கைகளால் தள்ளிவிட நினைக்கிறேன். கைகளை உருவ முடியாமல் என்னவோ தடுக்கிறது. விரல்களை அசைக்க முடிகிறது. கால்கள் தொடை எல்லா உறுப்புக்களிலும் நூறுபேர் ஏறி உட்கார்ந்திருப்பது போல இருக்கிறது. உடம்பை ஆணியால் அறைந்து அசைக்க முடியாமல் செய்து விட்டது போல உணர்கிறேன். விரல்களை மெதுவாக அசைத்துத் தடவுகிறேன். நரநர என்று கல்லும் மண்ணுமாக இருக்கிறது. நாக்கைத் துளாவ அது சொரசொரப்பான பாறையை நக்குவது போல இருக்கிறது. தலையிலிருந்து ஏதோ பூச்சிகள் ஊர்வது போல இருக்கிறது. கண்களை விழித்து இருட்டைப் பழக்கப்படுத்திக் கொண்டு ஏதாவது தெரிகிறதா பார்க்கிறேன். கண்களுக்கு மிக அருகில் ஏதா ஒரு சுவர் போல இருக்கிறது. அது அசையாமல் இருக்கிறது. நெற்றியிலிருந்து பூச்சிகள் ஊர்ந்து மூக்கு, கன்னம், என முன்னேறுகின்றன. வாய்ப்பக்கமாய் வரும் போது நாக்கால் வளைத்துப்பிடிக்க வேண்டும். வா வா என்று நாக்கு துளாவிக்கொண்டே இருக்கிறது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம். ஆம் இதோ இதோ பூச்சியை வளைத்துவிட்டது நாக்கு. ஐயோ இது என்ன? பூச்சியில்லை. உப்புக்கரிக்கிறது? இரத்தம் வடிந்து வந்திருக்கிறது நாம் பூச்சி என நினைத்துவிட்டோம். வயிறு பசிக்கிறது. அதென்ன அப்படியொரு பசி. இதுதான் கோரப்பசியா? எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை எனத் தோன்றுகிறது இரத்தம்தானே, நக்கிக்கொள் நாக்கே என்று மூளை உத்தரவிடுகிறது. ஆனால் தலைப்பகுதியிலிருந்து பூச்சிகள் கன்னத்தின் வழியே ஊர்ந்து வழிகின்றன. தலையை அசைத்து இரத்தம் வாய்க்கு வருகிற மாதிரிசெய்ய முயல்கிறேன். அசைக்கமுடியாமல் தலை வலிக்கிறது. உடம்பின் எல்லாப்பகுதிகளையும் அசைக்க மீண்டும் மீண்டும் எத்தனிக்கிறேன். ஒன்றும் சாத்தியமாகாமல் போகிறது. அய்யோ இது என்ன கொடுமை? பசி கொல்லுகிறது. பெருங்குரலெடுத்து அழ முயற்சிக்கிறேன். அதுவும் முடியாமல் போகிறது. சிறிது சிறிதாய் முனகப் பார்க்கிறேன். ம்ம..ம்ம..ம்ம ம்ம..ம்ம..ம்ம கொஞ்சமாய்ப் பத்தில் ஓரு பங்கு சாத்தியமாகிறது..இல்லை நூறில் ஒரு பங்கு தொண்டை அடைக்கிறது. முனகல் கொஞ்ச நேரம் தொடர்கிறது. பின் தேய்ந்து அடங்குகிறது.

தூக்கத்திலிருந்து கண்கள் படாரென சுவிட்ச் போட்டது மாதிரி விழித்துக் கொள்கிறேன். தாதி கூப்பிடுகிறாள். ‘சார் 10 ஆம் நம்பர் பேசண்ட் விழிச்சுக்கிட்டாரு’. டாக்டர் என் பக்கம் வருகிறார். ‘நீங்க ஓகே..மிஸ்ட்டர்..பொழைச்சுக்கிட்டீங்க..’ என்று என்னைப்பார்த்துக் கைக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். ‘நான் செத்தே போயிருக்கலாம்.!.’ என்று நினைத்துக்கொள்கிறேன். ‘அவரால் பேச முடிகிறதா பாருங்கள். அவர் பெயர், விவரங்களைக் கேட்டுக் குறித்துக் கொள்ளுங்கள். அவரிடம் பட்டியலைக் காட்டுங்கள்’ என்று தாதியிடம் சொல்லிவிட்டு அவர் பக்கத்துப் படுக்கைக்குச் செல்கிறார். தாதி பக்கத்து அறைக்குள் செல்கிறாள். அவள் வருவதற்குள் என் மூளை யோசிக்கிறது. நான் யார்? என்பெயர் என்ன? நான் கந்தாசாமியா? ராமசாமியா? ஆண்டனியா? அப்துல் காதரா? யார் நான்..? என்ன நடந்தது எனக்கு? எப்படி இங்கே வந்தேன்? எல்லாக் கேள்விகளும் என்னைத் துரத்துகின்றன. நான் ஓடுகிறேன். கேள்விகள் மேலும் பெரிதாகி பெரிய பந்து போல உருண்டுகொண்டு வருகின்றன. நான் ஓட முடியாமல் கீழே விழுகிறேன். கேள்விப்பந்து என்மேல் ஏறி என்னை அழுத்துகிறது. நான் புதைந்து கொண்டிருக்கிறேன். தரை நழுவுகிறது. கீழே இன்னும் கீழே போய்க்கொண்டே இருக்கிறேன். தரை தட்டுகிறது. ‘நங்’ என்று விழுகிறேன். என் தலை எதன்மீதோ மோதி பலமாய் அடிபடுகிறது. என்மேல் கூடைக்கற்களைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். ‘அய்யோ…அம்மா’ கத்துகிறேன். என் கத்தல் அப்போது எழுகிற பெரும் சத்தத்தில் அமுங்கிப் போகிறது. எங்கும் ஒரே புகை மூட்டமாய் இருக்கிறது. சற்று நேரத்தில் எல்லாம் இருட்டாகிப்போகிறது. மூச்சு அடைக்கிறது. காற்று எங்கே? காற்று எங்கே? காற்று வேண்டும்! அய்யோ…என்னைக் காப்பாற்றுங்கள்…என் உயிர் என்னைவிட்டுப் பிரியப்போகிறதோ? வாயால் ஆவ் ஆவ் என்கிறேன். எப்படிப் பிழைக்கப் போகிறேன்? என்மேல் கவிந்திருக்கிற எல்லாவற்றையும் உதறித்தள்ளிவிட வேண்டும். என் சக்தி அத்தனையும் திரட்டி தலையை, கை, கால்களை அசைக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. என் கண்களில் நீர் வழிகிறது. மூச்சு…மூச்சு…ஆவ்…ஆவ்…ஆவ்…ஆவ்…ஆவ்… கிடைக்கிற இடைவெளிகளை இணைத்து ஊடுறுவிக் கொண்டு கொஞ்சமாய்க் காற்று உள்ளே வருகிறது. உயிரின் கடைசி இழையில் தொங்கிக் கொண்டிருக்கிறேன். நான் சாகக்கூடாது..ஆவ் ஆவ் ஆவ் நான் பத்துமுறை ஆவ் செய்தால் ஒரு ஆவிற்கு பிராணவாயு கிடைக்கிறது. தொடர்கிறது என் ஆவ் ஆவ்…ஆவ்.

யாரும் இடைவெளிகளை அடைத்து விடாமல் இருக்க வேண்டும். ஆவ் ஆவ் ஆவ் ஆவ் என் உயிர்ப் போராட்டத்தின் கடைசி இழையையும் அறுத்து விடுகிற மாதிரி சிமெண்டுப் பலகை போன்ற ஒன்று என் மூக்கிலும் வாயிலும் விழுந்து மூக்கை நசுக்கி, உதட்டைக் கிழித்து பற்களை உடைத்து மேலும் அழுத்துகிறது. நான் ஒன்றும் இயலாதவனாகி அதிர்ச்சியில் மூர்ச்சையாகிறேன்.

கையை யாரோ தட்டி உசுப்புகிற மாதிரி இருக்கிறது. ‘சார்..சார் கொஞ்சம் முழிச்சுக்குங்க..’ என்காதுகளுக்குள் தாதியின் குரல் ஒலிக்கிறது. கண்களை மெல்லெத் திறக்கிறேன். தாதி கையில் குறிப்பேடும் பேனாவும் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

நீங்கள் குணமடைந்து கொண்டு வருகிறீர்கள். உங்கள் பெயர், விவரங்களைச் சொல்லமுடியுமா? எனக் கேட்கிறாள். இன்னும் எனக்கு மயக்கமாகவே இருக்கிறது. பதில் சொல்ல முயற்சிக்கிறேன். வாயைத் திறக்கமுடியவில்லை. அவளுக்கு என் இயலாமை புரிந்திருக்க வேண்டும். நான் பேசுவது உங்களுக்குக் கேட்கிறதா? என்று கேட்கிறாள். சைகை செய்து காட்டுகிறாள். நான் ஆமாம் என்பதாகத் தைலையை ஆட்டுகிறேண். ‘உங்களால் பேச முடியவில்லையா?’ என்கிறாள். அதற்கும் என் தலை ஆடுகிறது. ‘சரி நீங்கள் ஓய்வெடுங்கள். நான் பிறகு கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அவள் சென்றுவிடுகிறாள். பேச முடிந்தால் மட்டும் என்னால் என்ன சொல்லிவிட முடியும்? என்று நினைத்துப் பார்க்கிறேன். நினைவுகள் வறண்டு போய் பாறையும் கற்களும் மண்ணுமாய் அல்லவா போய்விட்டது. கண்களில் கண்ணீர் ததும்பி ஒன்று திரண்டு காதுகளின் ஓரமாக மெல்லக் கீழிறங்குகிறது. பின்மண்டை நனைந்து தலையணை ஈரமாகிறது. நனைந்து போன நினைவுகளை மூளை வருடிப்பார்க்கிறது. ஈரம் விரிந்து பரவி முதுகுப்பகுதி முழுவதையும் நனைக்கிறது. கால்கள் கைகள் என எல்லாப் பகுதிகளுக்கும் ஈரம் பரவி நிற்கிறது. என்ன இது? வெதுவெதுப்பான ஈரம்? தண்ணீரா? இல்லை இல்லை இது மூத்திரவாடை. சந்தேகமே இல்லை இது மூத்திரம்தான். ஐயோ..இதென்ன தாங்க முடியாமல் ஒரு முடைநாற்றம். இல்லை வேறு ஏதோ நாற்றமும் கலந்து வீச்சமடிக்கிறதே? எலி செத்தவாடையாய் இருக்குமோ? இல்லை இது பிணவாடையேதான் சந்தேகமேயில்லை. யாருடைய பிணம்? நான் தான் இன்னும் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்கிறேனே? இந்த நாற்றத்திற்கு நான் பிணமாகியிருக்கலாம். நினைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது?

உச்சந்தலையைக் கடப்பாறையால் பிளந்தது போல இருக்கிறது. சுரீர் சுரீர் என வலிக்கிறது. முட்டிக்குக் கீழே நடுக்காலில் இரும்புச்சட்டம் போல ஒன்று விழுந்து அய்யோ அம்மா ..ஆ ஆ ஆ ஆ உயிரே போய்விடும் போல வலிக்கிறது. ஆனால் உயிர்தான் போக மறுக்கிறது. கழுத்தில் ஒரு சயனைட் குப்பி இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும். சட்டென்று அதனை விழுங்கி உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அதற்கும் வழியில்லை. கைகளை, கால்களை அசைக்க முடியல்வில்லை. தீடீரென ஆயிரம் அடி ஆழக்கிணறு. அதில் சொய்ங் சொய்ங் ..என்று விழுந்து கொண்டிருக்கிறேன்.. கண்கள் சொருகுகின்றன. உடம்பில் இறக்கை முளைத்தது போல இருக்கிறது. காதுகளில் ங்கொய்ங், ங்கொய்ங் என்று ஒரு சத்தம். அது பேரிரைச்சலாக மாறி என்னைச் செயலிழக்கச் செய்கிறது.

பத்திரிக்கைக்காரனா? ஒருவன் புகைப்படம் எடுக்கிறான். Flash லிருந்து பளீரென ஒரு மின்னல் வெட்டுகிறது. கால்களுக்கு அடியிலிருந்து சூரியன் உதிப்பது போல ஒளிப்பந்து எழும்புகிறது நெருப்புத்தூள்கள் கால்களில் பட்டுத்தெறிக்கின்றன. ஒரே வெப்பமாய் இருக்கிறது. நெறுப்புச் சுட்ட இடங்கள் எறிகிறது. கால்களை உதறச் சக்தியில்லை. சுற்றிலும் புகை பரவுகிறது. கண்கள் கூசுகின்றன. கண்களைத்திறக்க முடியவில்லை ‘உய்…உய்’யென்று ஒரு சத்தம். மனிதக்குரல்கள் சன்னமாய்க் கேட்கிறது. என்ன பேசுகிறார்கள். மெதுவா, மெதுவா, பாத்து பாத்து, இங்க ஒரு பாடி கெடக்கு. கொஞ்சம் இரு. இல்லப்பா..உயிர் இருக்கு, வெல்டிங் டார்ச் வேண்டாம் கொஞ்சம் நிறுத்து. ஒன்னொன்னா அகற்றுங்க. தலை அங்கதான் இருக்கு. தலைல நல்லா அடிபட்டிருக்கு. சீக்கிரம் சீக்கிரம் ஸ்ட்ரெட்சரக் கொண்டுவாங்க….அதன்பிறகு ஒன்றும் கேட்க வில்லை ஊய்ங்ங்… ஊய்ங்க்ங்……என்று மிகப்பெரிய ஊளைச்சத்தம்.

‘அ…அம்…அம்மா’ தாடையை மெதுவாக அசைத்துச் சொல்லிப் பார்க்கிறேன். பேசமுடிகிறது. மூக்கில் சொருகி இருக்கிற குழாயை நகர்த்திக்கொண்டு மீண்டும் பேசிப்பார்க்கிறேன் ‘என்னால் பேசமுடிகிறது’. தாதி வந்து கேட்டால் பதில் கேள்வி கேட்க வேண்டும். அதோ அவளே வந்து விடுகிறாள். ‘ என்ன மிஸ்ட்டர் உங்களால இப்ப முடியுமா?’ எனக்கேட்கிறாள். ‘சரி’ என்கிறேன். ‘வெரிகுட்.. இதோ வந்துவிடுகிறேன்..’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறாள். எனக்குள் அவளுக்கு நான் ‘என்ன சொல்லப்போகிறேன்?’ என்று யோசனை ஓடுகிறது. அவள் கையில் பத்திரிக்கையுடன் வருகிறாள். “ மிஸ்ட்டர்.. உங்கள் படமும் செய்தியும் பத்திரிக்கையில் வந்திருக்கிறது” என்று என் அருகில் வைக்கிறாள். அவளே தொடர்கிறாள், ‘சார் ரெம்பொ ஆச்சரியம்.. நீங்க உயிர் பிழைச்சது. 12 நாட்கள் எப்படி உயிரக் கையில புடிச்சுக்கிட்டுக் கிடந்தீங்களோ தெரியலை. உணவு தண்ணி இல்லாமெ? அதைத்தான் பெரிசா எழுதியிருக்காங்க. சமீபத்துல இங்க ஏற்பட்ட 7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்துல பல நூறு பேர் இறந்துட்டாங்க. இந்த பகுதியில இருந்த எல்லாக் கட்டடங்களும் தரைமட்டம் ஆயிருச்சு. அந்த இடிபாடுகளுக்குள்ள இருந்து கடைசியா காப்பாற்றப்பட்டவர் நீங்க. உயிர் பிழைச்சவங்கள இங்கே இரண்டு மூன்று முகாம்களில் தங்க வெச்சிருக்காங்க. ஆனா இதுவரைக்கும் உங்களைத் தேடி ஒருத்தரும் வரலை. நீங்க இந்தப்பகுதியில குடியிருந்தவரா? இல்லை.. தற்செயலா இந்தப்பகுதிக்கு வந்து பேரிடர்ல சிக்கிக்கிட்டீங்களான்னு தெரியலை. நீங்கள் உங்க பேரு, முகவரி, எல்லா விவரங்களையும் இப்பச் சொல்லுங்கள்….”என்று சொல்லி விட்டு என்னைப்பார்க்கிறாள்.

நான் அவளையே பார்க்கிறேன் ஒன்றும் சொல்லாமல்.

‘சொல்லுங்க சார்’ என்கிறாள்.

‘எனக்கு ஒன்னுமே நினைவுல இல்லம்மா?’ என்று சொல்லிவிட்டு கைகளை விரித்துக்காட்டி அழுகிறேன்.

அவள் என்னையே பரிதாபமாகப் பார்க்கிறாள். ‘ அழாதீங்க..இந்தப்பட்டியலைப் பாருங்க. இதுல உங்க பெயர் இருக்கான்னு பாருங்க? நல்லா ஞாபகப்படுத்திப்பாருங்க சார்.

‘என் பெயர் என்ன? என்று என்னையே கேட்டுப்பார்க்கிறேன்..‘அதிகமாய்ப் பாவம் செய்தவன்’..ஆம் அதுதான் எனக்குச் சரியான பெயர். சித்ரவதைகள் மீண்டும் மீண்டும் மேல் தளத்துக்கு வந்து துடித்துக் கொண்டிருக்கிற எனக்கு அந்தப் பெயர் பொருத்தமானதாகத்தான் இருக்கும். சின்ன ஞாபக இழையைத் தொலைத்து விட்டு அலைகிறது எனது தேடல். நினக்க நினைக்க என் கண்கள் தழும்புகின்றன.

அந்தப்பெண் சொல்கிறாள்.. ‘சார் ஒன்னும் கவலைப்படாதீங்க…தலையில அடிபட்டதால அப்படி இருக்கும். நினைவு கொஞ்சம் கொஞ்சமா திரும்பிடும்..பத்திரிக்கைச் செய்தி பார்த்துட்டு உங்களைத் தெரிங்சவங்க கட்டாயம் வருவாங்க சார். நம்பிக்கையோட இருங்க சார்..

அந்த நம்பிக்கையைத் தான் திட்டத் தோன்றுகிறதெனக்கு. உயிரை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருந்த அந்த நம்பிக்கையைச் சபிக்கிறேன். உடனேயே இறந்து போயிருக்கலாமே? இத்தனை வேதனை அனுபவித்திருக்க வேண்டாமே? மறக்கக்கூடாதவற்றை எல்லாம் மறந்து விட்டேன். மறக்க வேண்டியவைகள் என் தேடலில் வெளிப்பட்டு என்னைக் இறப்பின் விளிம்பிற்கு அழைத்துச் சென்ற வண்ணம் இருக்கின்றன.

12 நாட்களுக்குப் பிறகு அவர்கள் என்னை இடிபாடுகளுக்குள்ளிருந்து தோண்டியெடுத்துப் பிழைக்க வைத்துவிட்டார்கள்..ஆனால் நான் இன்னமும் என் நினைவுகளுக்குள் என்னைத் தோண்டிக்கொண்டே இருக்கிறேன். நான் இன்னமும் வாழ்ந்து தீர வேண்டிருக்கிறது!

————-

Series Navigationஎஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்ஒரு தாயின் கலக்கம்
author

இராம.வயிரவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *