இறுதிப் படியிலிருந்து – காந்தாரி

author
2
0 minutes, 59 seconds Read
This entry is part 10 of 15 in the series 1 ஆகஸ்ட் 2021

 

                                      ப.ஜீவகாருண்யன்

வஞ்சனைக்கு ஆட்படுகின்ற பலவீனமான மனிதர் யாரும் தனக்கு வஞ்சனை செய்தவர்களை எதிர்க்க முடியாத இயலாமையில் தன்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்படும்படியான காரியங்கள் ஏதேனும் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. குறிப்பிட்ட இந்த உண்மையின் வழியில்தான் காந்தாரி நானும் ‘என்னை வஞ்சித்தவர்கள் வெட்கப்பட வேண்டும்!’ என்னும் எண்ணத்துடன் எனது கண்களைக் கட்டிக் கொண்டேன்.

மனைவி கங்கையைத் துறந்த சந்தனுவுக்கு கங்கையின் வயிற்றில் பிறந்தவராயிருந்தும், ‘திருமணம் செய்து கொள்ள மாட்டேன்! எந்நாளும் ராஜ்ஜியத்தின் ஆட்சி-அதிகாரத்தில் பங்குக் கோர மாட்டேன்!’ என்னும் உறுதி மொழிகளையெல்லாம் கொடுத்து, ‘தந்தை விரும்புகிறார்’ என்னும் காரணத்தில் மீனவப் பெண் சத்யவதியை அவருக்கு மணமுடித்து வைத்து  ‘சத்திய விரதன்’ என்னும் பெயருடன் தியாகசீலராகி விட்ட பீஷ்மர் வெட்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காந்தாரி நான் எனது கண்களைiக் கட்டிக் கொண்டேன். ‘உண்மை எப்போதுமே சிறுபான்மையைச் சார்ந்தது’ என்னும் உண்மையில் எனது இந்த உண்மைக்கூற்றை நம்புபவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள்.

’ ‘காந்தாரி கண்களைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் வெட்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்!’ என்றால் காந்தாரியின் கண்கட்டு கண்களற்ற கணவன்   திருதராஷ்டிரனுக்காக இல்லையா?’ என்று என்னிடம் நியாயமாகக் கேள்வியை வைப்பவர்களுக்கு எனது பதில், ‘கண்களற்ற கணவருக்காகக் காந்தாரி கண்களைக் கட்டியவளில்லை!’ என்பதுதான்.

‘காந்தாரி, எதற்காக நீ உன் கண்களைக் கட்டிக் கொண்டாய்?’ என்னும் கேள்வி  மாமி அம்பிகா மூலம்  முதன் முதலாக எழுந்தது. பிறகு பாட்டி சத்தியவதி என்னும் வரிசையில் பலரிடமிருந்தும் பல விதமாக உயர்ந்தது.

‘அத்தை, என் கணவருக்கு இல்லாத ஒன்று எனக்கெதற்கு? கணவருக்கு இல்லாத காட்சித் திறன்- காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம்!’

‘ராஜ மாதா, வெறும் கண்களா பார்க்கின்றன? அனைத்தையும் அறிவது-அறியத் துடிப்பது மனமல்லவா? பிறகு நான் கண்களைக் கட்டிக் கொண்டதற்கு கவலையெதற்கு?’ என்று மாமிக்கும் பாட்டிக்கும் பதிலளித்தவள் மற்றவர்களின் கேள்விகளுக்கு ‘மெளனம்’ என்னும் மகத்துவம் மிகுந்த மொழியையே பதிலாகக் கொடுத்தேன். காந்தாரி எனது கண்கட்டுக்கான காரணத்தை ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப, ‘ஓஹோ! இப்படித்தான் இருக்கும்! இதற்காகத்தான் இருக்கும்!’ என்று அவரவர் மன நிலைக்கேற்ப யூகித்துக் கொண்டார்கள்.

’கணவர் குருடராக இருக்கும் காரணத்தில் தன்னையும் குருடியாக மாற்றிக் கொண்ட கற்புக்கரசி!’ என்றார்கள்.

‘காலம் முழுவதும் திருதராஷ்டிரனுக்கு வண்டுக் குடைச்சலாக மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் கண்களைக் கட்டிக் கொண்டாள்!’ என்றார்கள்.

‘அன்றாடம் அரண்மனையில் எழும் ஆயிரம் சிக்கல்களில் சிக்காமல், ‘குருடி எனக்னென்ன தெரியும்?’ எனக்கூறித் தப்பித்துக் கொள்ள செய்து கொண்ட ஏற்பாடு!’ என்றார்கள்.

‘ஏமாற்றப்பட்டதன் பின்னணியில் கன்னி, ரத்தத்தின் கோபம், கொதிப்பு, ஆவேசம் கண்களைக் கட்டிக் கொள்ள வைத்து விட்டது. போகப் போகச் சரியாகிவிடும். தலைப் பிள்ளை பிறந்தால் கண்கட்டு தானாகக் கழன்று விடும்!’ என்றார்கள். இன்னும் என்னென்னவோ சொன்னார்கள். காந்தாரி எனது கண்கட்டுக்குக் காரணமாக எதையெதையோ சொன்னவர்கள், ‘இவ்வளவுதானா இந்த மனிதர்களின் சிந்தனை!’ என்று ஆச்சரியப்படும் அளவில் உண்மையை உணர முடியாதவர்களாக இருந்து விட்டார்கள்.

திருமணம் முடிந்து திருதராஷ்டிரர் என்னைப் பள்ளியறையில் எதிர் கொண்ட பொழுது  கேள்வி தொடர்ந்தது.

’கண்களை ஏன் கட்டிக் கொண்டாய், காந்தாரி?’ என்ற திருதராஷ்டிரர் கட்டுகளை அவிழ்த்தெறியச் சொன்னார்.

‘காந்தாரி, மனைவியின்  முகத்தைக் கூடப் பார்க்க முடியாதவனாகி விட்ட பாவி நான். பார்வை இழத்தல் அதிலும் பிறந்ததில் இருந்தே பார்வையில்லாமல் இருத்தல் பிறவிப் பெரும் பிணி! சொல்லொணாத் துன்பம்! இந்தத் துன்பத்தை எனக்காக ஏன் நீ படவேண்டும்? இது உன் கனவுகளைக் கெடுத்த எனக்கு நீ செய்யும் எதிர் வினையா? குற்றவாளி என்னை மேலும் மனம் குறுக வைக்காதே! கட்டுகளை அவிழ்த்தெறி!’

கட்டிலில் கணவரின் கருத்தை மறுத்து ஏதேதோ உரைத்து ஏற்றுக் கொண்ட சபதத்தில் மாறாதவளாக இன்று வரை கண்கட்டுக் காரியாகவே இருந்து விட்டேன்.

ஆனால் இன்று அன்று நான் ஏற்றுக் கொண்ட சபதத்துக்கு நெருக்குதல் நேர்கிறது.

போர் முடித்துப் பதினைந்து ஆண்டுகள் பாண்டவர்கள் ஆட்சி செய்ததைப் பார்த்து விட்டு வானப்பிரஸ்தம் புறப்பட்ட தம்பதியர் எங்களுடன், நாங்களும் உடன் வருவோம்!’ என்று எள்ளுடன் காயும் எலிப் புழுக்கைகளாய்ப் பிடிவாதமாக விதுரர், குந்தி, சஞ்சயன் மூவரும் இணை சேர்ந்து கொண்டனர். குருடருடன் குருடியாக பயணப்பட்டு நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் திருப்தியுற்ற அடுத்த ஒரு சில நாட்களில் நான் ஆசிரம வாசலில் அமர்ந்தபடி ஆசுவாசப் பெருமூச்சு விட்டேன்.

திருதராஷ்டிரர் என்னிடம் நயமாகக் கேட்டார்.

‘காலங் கடந்து இப்போது பெருமூச்சு விடுவதால் என்ன பயன், காந்தாரி?’

கணவரின் கரங்களை இறுகப் பற்றியவள் அவரது கேள்விக்கு  மென்மையாகப் பதிலளித்தேன்.

‘அரசே, எனது பெருமூச்சு  துக்கத்தினால் எழுந்ததல்ல. கீழிருந்ததற்கும் அதிகமாக இங்கே மேலே குளிர்ந்த மலைக் காற்று உடம்பை ஊசியாய்த் துளைக்கிறது. கூர்மையான சுள்ளிகளைப் போல தேவதாருவின் காய்ந்த இலைகள் கால்களை உறுத்துகின்றன. சுற்றிலுமிருக்கும் தேவதாரு மரங்களிலிருந்து மேலோங்கும்  நறுமணம் நாசித் துளைகளை ஆக்ரமிக்கிறது. காற்றின் வேகம் அதிகமாகும் போது காடு முழுவதும் பெருமூச்சு விடுவதைப் போல எழும் தேவதாரு மரங்களின்  ‘சலசல’ ஓசை, பகலிரவாக ஓய்வில்லாமல் பாய்ந்தோடும் நதியளிக்கும் புனலோசை இவையெல்லாம் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் விட்டு விலகி வந்த காந்தாரத்தை  நினைவு படுத்துகின்றன. என்னையும் மீறியதாக பெருமூச்சு வெளிப்படுகிறது.’

ஒளிவு மறைவு இல்லாத எனது உண்மை விளக்கத்தில் தழுதழுத்துப் போன திருதராஷ்டிரர், ‘நீ சொல்வது உண்மை, காந்தாரி. பிறந்த வீட்டின் நினைவுடன் நீ போராடிக் கொண்டிருக்கிறாய். குருடனுடன் வாழ நேர்ந்தது உன்னுடைய கெட்ட நேரமாயிற்று!’ என்றார்.

கம்மிய குரலில் நான் கணவருக்கு பதிலிறுத்தேன்.

‘அரசே, என்று உங்களுடன் திருமணம் நடந்ததோ அன்றே எனது பிறந்த வீட்டு நினைவு என்னுள் புதையுண்டு விட்டது. இன்று எனது நினைவில் வந்தது காந்தார தேசம். மாறாக  எனது பிறந்த வீடோ, பிறந்த வீட்டு மனிதர்களோ அல்ல.’

‘காந்தாரி,  ‘குருடன் நான்’ என்னும் உண்மை உனக்குத் தெரியாத வகையில் உன்னை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டேன். உனது பிறந்த வீட்டினரும் பீஷ்மரும் நானும் மற்றும் சிலரும் உனக்குக் கோடி கோடியாகக் குற்றம் இழைத்து விட்டோம். எப்போதோ நேர்ந்து விட்ட தவறு. இப்போதாவது என்னை மன்னிக்கக் கூடாதா?

‘காந்தாரி, குருடனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்து விட்ட கோபத்தில் நீ கண்களைக் கட்டிக் கொண்டு எத்தனையோ ஆண்டுகள் ஓடிவிட்டன. வாழ்ந்து முடித்து வானப்பிரஸ்த வாசிகளாக இமயத்தின் மடியிலிருக்கின்ற இந்த நிலையிலும் இன்னும் ஏன் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் என் மீது ஏற்பட்ட கோபம் இன்னுமா தீரவில்லை?  இன்னும் நாம் உயிருடன் இருக்கப் போவது எத்தனை காலமோ? ஏன் இந்தப் பிடிவாதம்? கண்கட்டை அவிழ்! எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இளம் பிராயத்தில் நீ கண்டு களித்த இந்த உலகத்தை இன்னும் சிறிது காலம்–மரணம் உன்னை எதிர் கொள்ளும் காலம் வரையேனும் கண்டு களி!’

உரையாடலை வளர்த்துக் கொண்டே வந்த திருதராஷ்டிரர், ‘காந்தாரி, என்னை நீ மணந்த அன்றே, நான் ஆணையின் வழியில் உனது கண்கட்டை அவிழ்த்து விட்டிருக்க முடியும்? ஆனாலும்,  ‘நொந்து போயிருக்கும் பெண்மனதை மேலும் நோகடிக்க வேண்டாம்.’ என்னும் எண்ணத்துடன் அன்று நான் அமைதியாய் இருந்து விட்டேன். காலம் போய் விட்டது. காலனின் வாசலில் காத்திருக்கிறோம். இன்னும் எதற்குப் பிடிவாதம்? இப்போதாவது கண்கட்டை அவிழ்த்துக் கொள்! எப்போதோ பார்த்துப் பரவசப்பட்ட இந்த உலகத்தை இறப்பதற்கு முன் மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்துக் கொள்!’ என்றார்.

திருதராஷ்டிரரைக் குந்தி வழி மொழிந்தாள்.

‘ஆமாம், அக்கா! இப்போதேனும் அரசர் சொல்வதைக் கேளுங்கள்! இன்னும் மிச்சமிருக்கும் நாட்களையேனும் வெளிச்ச நாட்கள் ஆக்குங்கள்! கண்கட்டை அவிழுங்கள்!’ என்றாள்.

கணவர் மற்றும் குந்தியின் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை. கட்டை அவிழ்த்துக் கொண்டேன். கண்களிலிருந்து கட்டு நீங்கிய பிறகும் நீண்ட நேரம் உலகம் இருள் மயமாகவே இருந்தது எனக்கு. ’நீண்ட கால கண்கட்டின் காரணத்தில் நிரந்தரக் குருடியாகி விட்டேனா?’ எனத் திகைத்துப் போனவள் கண்களை மூடி மூடித் திறந்த முயற்சியில் மெல்ல மெல்ல மெல்லியதொரு அரும்பு மலர்வது போன்ற தன்மையில் எதிரில் அதிசயமாகத் தோன்றிய காடு, மலைகளின் காட்சி விந்தையில் அளவற்றுத் திகைத்துப் போனேன். ‘அடடா! குருடனுக்கு ஏமாந்து வாழ்க்கைப் பட்ட காரணத்திற்கு எதிர் வினையாக கண்களைக் கட்டிக் கொண்டு எத்தனை கோடி காட்சி இன்பங்களை இழந்து போனேன்!’ என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

இறுதி நிலையிலிருக்கும் இந்தத் தறுவாயிலும் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மரணித்து விட்ட பீஷ்மரின் மீது கோபம் பொங்குகிறது எனக்கு.

பேரரசர்கள் அரசர்களை, அரசர்கள் சிற்றரசர்களை, சிற்றரசர்கள் செல்வம் படைத்தவர்களை, செல்வம் படைத்தவர்கள் ஏழை எளியவர்களைக் கேள்வி முறையின்றி–நியாயமின்றி தங்களுக்கு ஆட்படுத்திக் கொள்ளும் வழக்கத்தில் என்னுடன் சேர்த்துப் பதினோரு பெண்களுக்குத் தந்தையாயிருந்த காந்தார தேசத்துச் சிற்றரசன் சுபலன், பெரியதோர் ராஜ்ஜியத்தின் ஆளுமை மனிதர் பீஷ்மர் தனது சிற்றன்னையின் மகனான தம்பி விசித்திரவீரியனின் மகனுக்கு பெண் கேட்கிறார் என்றவுடன் எதிர்க் கேள்வியற்றவராக சுபலா, வசுமதி என்னும் செல்லப் பெயர்கள் கொண்ட என்னையும் எனது தங்கைகளையும் திருதராஷ்டிரர் குருடர் என்றறியாமலே (ஒரு வேளை திருதராஷ்டிரர் பிறவிக் குருடர் என்பது எனது தந்தைக்கு தெரியுமோ?) தாரை வார்த்து விட்டார்.

‘சிற்றரசனின் மகள்தானே ஒழிய காந்தாரிக்கென்ன எழிலரசி அவள்!’ என்பதுதான் என்னைக் குறித்து எனது நாட்டு மக்களின் பொதுக்  கருத்தாக இருந்தது.

’கொடி போல உடல், வட்ட நிலா முகம், கரு வண்டுக் கண்கள், கோவைக் கனி உதடுகள், கூர்த்த மாதுளம் பிஞ்சுகளாக மார்பகங்கள், ‘இருக்கிறதோ இல்லையோ’ என்று அய்யமேற்படுத்துவதான இடை, அன்னத்தை நாணமுறச் செய்யும் அழகு நடை, குக்கூ கூவென கொஞ்சும் குயிற் குரல், பொன்னையுருக்கி வார்த்தது போன்ற நிறத்தில் வடிவான தேகம்!’

எனப் பலவாறு மக்களின் கருத்துக்கிசைந்தவளாக, நொடிக்கொரு விதமாக எனது அழகைப் புகழ்ந்து கொண்டிருந்த எனது ஆருயிர்த் தோழி, திருதராஷ்டிரரை மணம் புரிவதற்காக வண்டிகளில் அஸ்தினாபுரம் வந்தடைந்த என்னுடன் எனது தங்கைகளுடன் சேர்ந்து வந்து, அரண்மனையைச் சுற்றிப் பார்க்க ஆசையுடன் சென்று, சென்ற சீக்கிரத்தில் அலறியடித்தவளாக என்னிடம் சேர்ந்தாள்.

‘அய்யோ! மோசம் போனோம், இளவரசி! மோசம் போனோம்! அஸ்தினாபுரத்து பீஷ்மக் கிழவர் வண்டி வண்டியாக பொன், பொருள், பட்டுப் [பொதிகளைக் கொண்டு வந்து கொடுத்து உனது தந்தையை ஏமாற்றி விட்டார். உனது தந்தையுடன் சேர்த்து உன்னை, உனது தங்கைகள் அனைவரையும் ஒரு சேர ஏமாற்றி விட்டார். பிறவிக் குருடரான தம்பி மகன் திருதராஷ்டிரருக்குப் பேரழகி உன்னையும் உனது தங்கைகளையும் அநியாயமாக அபகரித்துக் கொண்டு வந்து விட்டார்.’

தோழியின் உண்மை விளக்கத்தில் துடித்துத் துவண்டு போனேன் நான்.

ஆமாம், பீஷ்மர் எனது தந்தை சுபலனிடமிருந்து என்னை மட்டுமல்ல எனக்கடுத்த வயதுகளில் எழிற்சித்திரங்களாக இருந்த எனது தங்கைகள் சத்யவிரதை, சத்யசேனை, சுதேட்சனை, சம்மிதை, தேஜச்ரவை, சச்ரவை, நிக்ருதி, சுபை, சம்படை, தசார்னை ஆகிய பதின்மரையும் கொள்ளைப் பொருளைக் கொண்டு வருவது போல அஸ்தினாபுரம் கொண்டு வந்து சேர்த்து விட்டார். பெண்களின் விருப்பு, வெறுப்புப் பற்றிக் கொஞ்சமும் கவலையில்லாமல் ஒற்றைக் குருடருக்கு உயிர்ச் சித்திரங்களாகப் பதினோரு பெண்களைப் பலியாக்கி விட்டார்.

பெண் என்பவள் தன்னைப் போலவே ரத்தமும், சித்தமும் கொண்டதொரு ஜீவன் என்பதை மறந்து பெண்களை வெறும் போகப் பொருளாகக் கருதிய காரணத்தில் பெண்களைக் கவர்ந்து வருவது சிறுபிள்ளை விளையாட்டாகி விட்டது, பீஷ்மருக்கு.

‘கண்களற்ற ஒரு மனிதருக்குக் கட்டழகுச் சித்திரங்களாகப் பல மனைவியர் என்கின்ற போது கட்டழகி திரெளபதி அய்ந்து ஆண்களைக் கணவர்களாகக் கொண்டது தவறில்லை!’ என்னும் எண்ணம் இப்போது எழுகிறது.

.பெண்ணை, பெண்களை மனதாலும் துய்த்தறியாதவராக, பெண்ணின் உடலை மட்டுமல்லாது உள்ளத்தையும் அறிந்து கொள்ளவியலாதவராக வாழ்ந்து விட்ட பீஷ்மர் தனது தம்பியின், ‘குருட்டு மகனுக்கு வாழ்க்கைப்பட இருக்கும் வாழைக் குருத்துகள் போன்ற இந்த இளம் பெண்களின் மனங்கள் இது குறித்து-குருட்டு இளைஞனுக்கு மனைவிகளாகப் போகும் அவலம் குறித்து- என்ன பாடு படும்?’ என்னும் எண்ணம் சிறிதும் அற்றவராக எங்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்தினார்.

ஆண் எனும் அகந்தையில் பெண் எனக்கு, எனது தங்கைகளுக்கு பீஷ்மர் பெரும்  பிழை செய்து விட்டார்; எனது வாழ்க்கையில் தனது விருப்பம் போல விளையாடி விட்டார். பீஷ்மர் எனது வாழ்க்கையில் மட்டும் அவரது விருப்பம் போல விளையாடவில்லை. அவர் எனக்கு முன்பே அம்பை, அம்பிகை, அம்பாலிகை வாழ்க்கையிலும் என்னையடுத்து மாத்ரியின் வாழ்க்கையிலும் தனது மனம் போன போக்கில் விளையாடி விட்டார்.

சித்தி சத்தியவதியின் இளைய மகன் – தம்பி  விசித்திரவீரியனுக்காக சுயம்வர மண்டபத்திலிருந்து காசி அரசனின் மகள்கள் மூவரைக் கவர்ந்து வந்த விஷயத்தில், ஏற்கனவே சால்வ அரசனைக் காதலித்து வந்த அம்பையின் தற்கொலைக்குக் காரணமான பீஷ்மர், என்னை ஏமாற்றிக் கொண்டு வந்ததையடுத்து குந்தியைக் கைப் பிடித்திருந்த பாண்டுவுக்கு பாண்டுவே ஆச்சரியப்படும் அளவில் மத்ர தேசத்து சிற்றரசனின் மகள்,  காணும் கண்களைக் கொள்ளை கொள்ளும் கட்டழகுப் பெண் மாத்ரியைத் தான் கொடுத்த பொன், பொருள், பட்டுப் பொதிகளுக்கு மாற்றுப் பண்டம் போல வலிந்து அஸ்தினாபுரம் கொண்டு வந்தார். இரட்டையர் நகுலன், சகாதேவனுக்கு தாயான சீக்கிரத்தில், வாழ வேண்டிய வயதில் வாழ்வை முடித்துக் கொள்ளும் கொடுமைக்கு அந்த அழகுப் பெண் ஆட்படக் காரணமானார்.

‘காந்தாரி, நீ அஸ்தினாபுரத்துக்கு புதியதொரு விளக்காக வருகை செய்திருக்கிறாய்! பரத வம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டியது உனது பொறுப்பு!’ என்று அஸ்தினாபுர அரண்மனையில் காலெடுத்து வைத்த நாளில் பேரரசி சத்தியவதி வரவேற்பு செய்ததை விட பீஷ்மரின் வரவேற்புப் புகழுரை வார்த்தை ஜாலம் கொண்டதாக இருந்தது.

 ‘குழந்தாய்! உனது உதார குணம், மேலான ஒழுக்கம், பெரியவர்களிடத்திலான பணிவு, பரிவு, ஆகியவை உன்னை அஸ்தினாபுர அரண்மனையின் மருமகளாக்கியிருக்கிறது. இந்த அரண்மனைக்குள் எல்லாச் செல்வமும் இருக்கிறது. கூடவே கொஞ்சம் குறையும் இருக்கிறது. அரண்மனையில் மங்களம் இல்லை. அம்மாவும் பேரரசியுமான சத்தியவதிதி தாயார் சொன்னது போல நீதான் குரு வம்சத்தை-குரு தேசத்தை பிரகாசிக்கச் செய்ய வேண்டும்!’

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பீஷ்மர் என்னைப் புகழ்ந்துரைத்த இந்த உரை இன்று இந்த இறுதித் தருணத்தில் உரைத்ததாகத்தான் இப்போதும் எனது நெஞ்சில் நிழலாடுகிறது. பீஷ்மரின் அன்றையப் புகழுரையில் புலன் மயங்கியது குறித்து அதன் பிறகு எத்தனையோ முறை வெட்கப்பட்டிருக்கிறேன்; இப்போதும் வெட்கப்படுகிறேன். கண்களற்ற  கணவனுக்கு வாழ்க்கைப்பட நேர்ந்த கோபத்தில் கண்களைக் கட்டிக் குருடியாகிக் காணற்கரிய காட்சிகளையெல்லாம் காண இயலாதவளாக–இழந்தவளாகப் பல பத்தாண்டுகளைக் கழித்து விட்டேன். துச்சலை பெண்ணொருத்தி உட்பட இறுதி வரையிலும் நான் ஈன்றெடுத்த பதினான்கு குழந்தைகளின் முகம் பார்க்க முடியாத மோசமான தாயாக இருந்து விட்டேன்.

இறுதிப் படியிலிருக்கிறேன்.

புரிகிறது.

‘பெண்ணெனக்கு நேர்ந்து விட்ட-யாருக்கும் நேரக் கூடாத-பெருங் கொடுமைக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட பீஷ்மரை இப்போது நொந்து நோவதில் பயனில்லை. இனி ஆகப் போவது ஒன்றுமில்லை. குருடருக்கு வாழ்க்கைப்பட நேர்ந்த அவலத்தில் கோபித்துக் கண்களைக் கட்டிக் கொண்டு நெடுங்காலம் குருடியாக வாழ்ந்தது நான் செய்த தவறு’ என்பது இப்போது புரிகிறது. பட்டுக் கெட்ட பிறகு எனக்கு ஞானம் ஏற்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்து போன கொடூரப் போரின் பின்னணியில் உலகம் காந்தாரி என்னை இழித்துப் பேச எத்தனையோ நிகழ்வுகளைச் சாட்சிக் கூறுகளாகக் காலத்தின் முன் நிறுத்த வழியிருக்கிறது. 

ஆனாலும் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் என்றில்லாவிட்டாலூம் ஏதோ சில தருணங்களில் காந்தாரி நான் நியாயத்தின் பக்கம் நின்றிருக்கிறன். குறிப்பாக திரெளபதி துச்சாதனனால் அவையில் அவமானப்பட்ட போது நான் திருதராஷ்டிரரிடம் நியாயத்தை எவ்வளவோ நயமாக எடுத்துச் சொன்னேன்.

‘அரசே, புத்திர பாசத்தால் நான் துரியோதனனின் எத்தனையோ தவறான காரியங்களைக் கண்டிக்காமல் இருந்திருக்கிறேன். ஆனாலும்  ‘இன்று திரெளபதிக்கு அவையில் நடந்தது அநியாயத்திலும் அநியாயமான காரியம்!’ என்று மனம் கலங்கிப் போயிருக்கிறேன். நீங்கள் தொடர்ந்து துரியோதனனின் தவறுகளை ஊக்குவித்து குற்றம் செய்கிறீர்கள்! துரியோதனனின் துர் நடத்தைகளைத் தொடர்ந்து அங்கீகரித்து குரு வம்சத்தைக் குற்றப் பெருங்கடலில் மூழ்கச் செய்யாதீர்கள்! துரியோதனனின் அநியாயங்களை ஆமோதித்து குலத்தின் அழிவுக்குக் காரணமாகாதீர்கள்! இனி மேலாவது துரியோதனனையும் அவன் தம்பிகளையும் உங்கள் கட்டுக்குள் கொண்டு வாருங்கள்!’

‘குரு ராஜ்ஜியத்தின் அரசியல் போக்கு சரியில்லை!’ என்னும் வருத்தத்துடன் பாட்டி சத்தியவதியும் மாமி அம்பிகாவும் வானப்பிரஸ்தம் ஏகிய பிறகு நான் திருதராஷ்டிரரிடம்  கூர்மையாய்க் கேட்டேன்.

‘அரசே, துரியோதனன் செய்யும் எல்லாப் பாவங்களுக்கும் நீங்கள் துணை போவதாகத் தெரிகிறதே!’ என்றேன்.

‘காந்தாரி, நீ சொல்வது உண்மை. நான் பாசத்துக்கும் பாவத்துக்கும் துணை போகிறேன். பிள்ளைப் பாசம் என்னை நல்லதை-நியாயத்தை உணர முடியாதவனாக ஆக்கி விடுகிறது!’ என்ற கணவரின் பதிலில் அன்றே வெறுப்புற்றவள் பிறகு ஒரு நாள் திருதராஷ்டிரரிடம் கோபத்தில் கொந்தளித்தேன்.

‘அரசே, வாழ்நாளெல்லாம் பகைத்து, அவமானத்துக்கும் தலைகுனிவுக்கும் நீங்கள் ஆட்படுத்தியவர்களின் ஆட்சியை-ஏற்பட்டிருக்கும் துன்பங்களையுங் கடந்து- தர்ம ஆட்சியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். உங்கள் ஆதரவுடன் பாஞ்சாலிக்கு அன்று ஒருநாள் அவையில் நேர்ந்த அவமானம் மக்களிடமிருந்து உங்களை நிரந்தரமாக வெகுதூரம் விலக்கி விட்டது. ‘அநியாயக்காரனுக்கு-குருடனுக்கு அரண்மனை ஆசை போகவில்லையா?’ என்றும் இன்னும் பலவாறும் அவ்வப்போது பீமன் இழித்துரைக்கும் அவலத்துடன் இன்னும் எதற்கு நமக்கு இந்த அரண்மனை வாழ்க்கை? அமிர்தமே ஆனாலும் எதற்காக பாண்டவர்களின் பிச்சைக் கைச்சோறு? இனியும் தாமதம் வேண்டாம். புறப்படுங்கள் முன்னோர்களின் வழியில் வானப்பிரஸ்தம் போவோம்?’

பெண் எனது கோபக் கொந்தளிப்பின் தொடர்ச்சியில் காடுகள்-மேடுகள் கடந்தடையும் வானப்பிரஸ்தம் கணவன் மனைவி எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்களுடன் சேர்ந்தவர்களாக மேலும் மூவருக்கும்  சித்தியாகி விட்டது. கங்கை நதிக்கரையில் ஆசிரமம் கொண்ட இந்த வானப்பிரஸ்த வாழ்க்கை, அரண்மனை வாழ்க்கையை விட சுகமாகத்தான் இருக்கிறது.      

ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது போல் தெரிகிறது. சஞ்சயன் அலறிக் கொண்டு வருகிறான்.

‘அரசே, இங்கிருந்து சற்றுத் தூரத்தில்-நமது ஆசிரமத்திற்கு வெகு அருகில் காடு தீப்பற்றி எரிகிறது.. எழுந்திருங்கள்! இங்கிருந்து விரைந்து வெளியேற வேண்டும்!’

திருதராஷ்டிரர், சஞ்சயனைத் திகைக்க வைக்கிறார்.

‘இங்கிருந்து என்னால் எங்கும் நகர முடியாது, சஞ்சயா! ’என்றேனும் ஒரு நாள் காட்டுத் தீ ஏற்படும். அதில் பலியாகக் கூடாது!’ எனத் தெரிந்துதான் ஞானி விதுரன் வேறெங்கோ சென்று தனது முடிவைத் தேடிக் கொண்டான் போல் தெரிகிறது. எனக்காகத் தயங்காதே! காந்தாரி, குந்தியை அழைத்துக் கொண்டு புறப்படு! சீக்கிரம் புறப்படு!’

‘அரசே, தயவு செய்து என் வார்த்தையைக் கேளுங்கள்! காட்டுத் தீ வேட்டை நாயின் வேகத்தில் நம்மை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது! தாமதிக்காதீர்கள்! புறப்படுங்கள்!’

சஞ்சயனின் வேண்டுதலை திருதராஷ்டிரர் ஏற்பவராகத் தெரியவில்லை.

சஞ்சயன் என்னை நோக்கி இறைஞ்சினான்.

‘அம்மா, புறப்படுங்கள்!’

நான் சஞ்சயனிடம் சொன்னேன்.

‘சஞ்சயா, ஏற்கனவே-எப்போதோ முழுதாக எரிந்து போன என்னைப் புதிதாக இந்தக் காட்டுத்தீ என்ன செய்து விட முடியும்? அரசரின் முடிவுதான் எனது முடிவும். நானும் இங்கிருந்து புறப்படுவதாயில்லை. ஆகவே, குந்தியை அழைத்துக் கொண்டு புறப்படு!’

திகைத்துப் போன சஞ்சயனும், குந்தியும் குழப்பத்துடன் என்னைக் கூர்ந்து நோக்குகிறார்கள். 

எதிரே காடு, என்றோ எரிந்தழிந்த எனது இளம் மனம் போல் கனன்று எரிந்து கொண்டிருக்கிறது.

                      ***                     

                             

                           

                  

Series Navigationநாய்க்குட்டிஇறுதிப் படியிலிருந்து – துரியோதனன்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    S.Ramachandran says:

    ஜீவா காந்தாரி மனத்தை சிறப்பாக எழுதியுள்ளீர்கள்
    பாராட்டுக்கள்.அன்புடன் உங்கள்
    எஸ்ஸார்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *