இலக்கிய வெளியில் சர்ச்சையை கிளப்பிய குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’

author
0 minutes, 8 seconds Read
This entry is part 9 of 19 in the series 10 ஏப்ரல் 2022

 

 
சுலோச்சனா அருண்
 
சென்ற ஞாயிற்றுக் கிழமை (3-4-2022) இலக்கிய வெளியின் 19வது இணைய வழிக்கலந்துரையாடலில் ‘சிறுகதை நூல்களைப் பற்றிப் பேசுவோம்’ என்ற தலைப்பில் புலம்பெயர்ந்தோரின் 4 சிறுகதைத் தொகுப்புக்கள் திறனாய்வுக்கு எடுக்கப்பட்டன. முறையே வ.ந.கிரிதரனின் ‘கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்’ பற்றி சு.குணேஸ்வரன், குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி முனைவர். கோவிந்தராயூ (இனியன்), சாத்திரியின் ‘அவலங்கள்’ பற்றி தானாவிஷ்ணு, சயந்தனின் ‘பெயரற்றது’ பற்றி ந.குகபரன், ஆகியோர் உரையாற்றினார்கள். புலம்பெயர்ந்த மண்ணில் தங்கள் நேரத்தைச் செலவிட்டு இதுபோன்ற மிகச்சிறந்த சிறுகதை வடிவங்களைத் தமிழில் உருவாக்கித் தந்த எழுத்தாளர்களையும், இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கு செய்து நடத்திய எழுத்தாளர் அகில் அவர்களையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டினார்கள். சிலர், தமிழ் இலக்கியம் இன்னும் செழித்து வளர, இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம் பெறவேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார்கள்.
 
கேள்வி நேரத்தின் போது பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக வெளிவந்த குரு அரவிந்தனின் ‘சதிவிரதன்’ பற்றி, நிகழ்வில் பங்குபற்றிய ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி சர்ச்சைக்குரியதாக எடுக்கப்பட்டுப் பலராலும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சிறுகதை நூல் பற்றித் திறனாய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கோவிந்தராயூ அவர்கள், மொத்தமாகப் 17 கதைகள் இதில் இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டு, எல்லாக் கதைகளுமே மிகவும் சிறப்பாக, வெவ்வேறு கோணத்தில் அமைந்திருக்கின்றன, ஆனாலும் நேரம் கருதி சில கதைகளை மட்டுமே தெரிந்தெடுத்து தனது கருத்துக்களைச் சொல்வதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக நூலில் இடம் பெற்ற சுமை, 401, சிந்துமனவெளி, சௌப்படி, அட மானிடா நலமா?, சதிவிரதன் போன்ற கதைகளைப் பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
 
இலங்கையில் நடந்த யுத்தத்தின் பின் நடந்த ஒரு சம்பவத்தைச் ‘சுமை’ என்ற கதை குறிப்பிடுகின்றது. வறுமைச் சூழ்நிலை காரணமாக, சிறையில் வாடிவதங்கி முதுமையின் இயலாமையோடு வெளிவந்த அப்பாவியான பெற்ற தகப்பனையே, சுமையாக நினைக்கும் மகளைப் பற்றியது. சிறை வாழ்க்கையும், வறுமையும் எவ்வளவு கொடியது என்பதை எடுத்துக் காட்டும் கதையிது. இந்தக் கதையின் கடைசி வரிகள் தன்னை உறைய வைத்து விட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் கதை கனடா தமிழ் வானொலி நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. உதயன் பத்திரிகையிலும் வெளிவந்தது. இன்னுமொரு கதை ‘சிந்துமனவெளி’ என்பது, கணவன் மனைவிக்கான உறவைக் குறிப்பது. சந்தேகம் எவ்வளவு பொல்லாதது என்பதை எடுத்துக் காட்டுகிறது கனடா உதயனில் வெளிவந்த, இந்தக் கதை. 
 
 
‘சௌப்படி’ என்ற கதை தமிழகத்தில் இருந்து வெளிவரும் ‘இனிய நந்தவனத்தில்’ வெளிவந்தது. வயதுக்கு வந்த பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் இருட்டறைக்குள் ஒதுக்கி வைத்து, சிறைக் கைதிகள்போல, ஆண்கள் மட்டுமல்ல மூத்த பெண்களும் சேர்ந்தே வேடிக்கை பார்த்த அன்றைய சமூகத்தின் மனநிலையை எடுத்துக் காட்டும் கதையிது. இன்றும் தமிழ் நாட்டில் சில இடங்களில் இதுபோன்ற கொடுமை நடக்கிறது என்று இனியன் அப்போது குறிப்பிட்டார். ‘அட மானிடா நலமா?’ கூர்க்கனடாவில் வெளிவந்தது. ஆறறிவு கொண்ட மானிடரைவிட அறிவில் கூடிய ஒரு கூட்டத்திடம் தற்செயலாக அகப்பட்ட ஒரு இளம் பெண்ணையும், ஆணையும் பற்றிய கதையிது. இந்தக் கதையின் முடிவிலும் ‘நலமெடுத்தல்’ என்ற அழகான தமிழ் சொல்லை ஆசிரியர் பாவித்திருக்கின்றார். ‘மானிடருக்கு மகிழ்ச்சி தருவதில் உடலின்பமும் முக்கிய இடம் வகிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அதையும் வேண்டுமென்றே எடுத்து விட்டால் வாழ்வதில் என்ன பயன்?’ என்ற கேள்வியை அப்போது எழுப்பினார்.
 
நூலின் தலைப்பாக இடம் பெற்ற கதை ‘சதிவிரதன்.’ என்னதான் அறிவியல் முன்னேறினாலும், இயற்கையின் தேவைகள் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் குறுக்கிடத்தான் செய்யும் என்பதை எடுத்துச் சொல்லும் கதையிது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் ‘இனிய நந்தவனம்’ இதழில் சர்ச்சைக்குரிய இந்தச் சிறுகதை வெளிவந்திருந்து.
 
மெய்நிகர் நிகழ்வில் பங்குபற்றிய ஒருவர் இந்தத் தலைப்பு ஏற்படையதாக இல்லை என்று தனது கருத்தை முன்வைத்தார். காரணம் ‘சதிலீலாவதி என்று ஒரு படம் வெளிவந்தது, அது போல எதையாவது வைத்திருக்கலாம், ‘சதிவிரதன்’ என்ற ஒரு சொல்லே இல்லை, அதற்கு ஒரு அர்த்தமும் இல்லை’ என்று குறிப்பிட்டார்.
 
 
அப்போது முனைவர் கோவிந்தராயூ ‘அதனால்தான் எழுத்தாளர் குரு அரவிந்தன் அந்த சொல்லைப் புதிதாக உருவாக்கி இருக்கின்றார். கணவனுக்கு உண்மையாக மனைவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது போல, மனைவிக்கு உண்மையாகக் கணவனும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லையே’ என்று சுட்டிக்காட்டி, ‘சதிபதி’ என்ற சங்க இலக்கியச் சொல்லை முன்வைத்து, ‘பதிவிரதை’ என்ற சொல்லின் எதிர்ப்பால்தான் ‘சதிவிரதன்’ என்று விளக்கம் தந்தார்.
 
 
ஆனாலும் முனைவரின் விளக்கத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அவர் ‘ஆளுக்காள் இப்படியான புதிய சொற்களைத் தமிழ் மொழிக்கு அறிமுகப் படுத்துவதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது, ‘சதி’ என்றால் ‘சூழ்ச்சி’ என்றுதான் பொருள் படுமே தவிர மனைவியை அல்ல’ என்று உடனே வாதிட்டார். ‘எங்களால்’ என்று அவர் யாரைக் குறிப்பிட்டார் என்பது தெரியவில்லை.
 
‘ஒரு எழுத்தாளனுக்குப் புதிய சொல்லை உருவாக்குவதற்கான உரிமை உண்டு. சங்ககாலத்தில் இருந்து இப்படியாக உருவாக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள்தான், குறிப்பாக வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள் மற்றும் புலவர்கள், சான்றோர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சொற்கள்தான் இன்று அகராதியில் இடம் பெற்று இருக்கின்றன. எழுத்துக்களைப் படைப்பவன் என்பதால்தான் எழுத்தாளனைப் ‘பிரமன்’ என்கிறோம். படைப்பாளி என்ற வகையில் எழுத்தாளர் குரு அரவிந்தனுக்கு அந்த உரிமை உண்டு.’ என்று முனைவர் சுப்ரமணிய ஐயா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது,
 
‘பேசாப்பொருளைப் பேசுவது எழுத்தாளனுக்கு மிகவும் அவசியமானதாகும். ஒரு காலகட்டத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகச் சொல்லத் தயங்கியதை ஜெயகாந்தன் துணிந்து பேசவந்ததால்தான் ஜெயகாந்தனை நோக்கி இலக்கிய ஆர்வலர்களின் பார்வையும் திரும்பியிருந்தது. அது போலத்தான் குரு அரவிந்தனின் சிலகதைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன. அதனால் சமுதாயத்திற்கு நன்மை தருமெனில், சீர்திருத்தம் பெறுமெனில் அதில் தவறில்லை.’என்று குறிப்பிட்டார்.
 
 
‘தமிழர் பண்பாட்டில் பயிற்றப்படாத பண்புநிலைகளைத் தமிழர் இயைபாக்கம் செய்ய முற்படும் போது, ஏற்படும் இன்னல்களை ஆசிரியர் குரு அரவிந்தன் எழுத்திலே திறம்படப் பதிவு செய்துள்ள புனைதிறன் பாராட்டிற்குரியது’ என்று முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் இந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆசிரியரைப் பற்றிய அறிமுக உரையில், ‘குரு அரவிந்தன் போன்ற நவீன எழுத்தாளர்கள் வரலாற்று உண்மைகளையும் இழைத்து நவீன புனைவுகளுடாக கொண்டு வரும் போது, அவர் கல்கியின் இடத்திற்குத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கின்றார். மண்ணையும், உயிர்களையும், தாவரங்களையும், இயற்கையையும் கூடவே ரசித்தவராகவும் அவற்றுக்காக ஆதங்கப் படுபவராகவும் குரு அரவிந்தன் தன்னை இயற்கைசார் கலைஞராகவும் காட்டுகின்றார்’ என்று முனைவர் பார்வதி கந்தசாமி அறிமுக உரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
 
 
இந்த நிகழ்வில் பங்குபற்றியவர்களில் ஒருவரான எழுத்தாளர் அகில், ‘தமிழில் ஒரு சொல்லுக்குப் பல அர்த்தங்கள் உண்டு. சதி என்றால் சூழ்ச்சி என்பது மட்டுமல்ல, மனைவி என்ற அர்த்தமும் உண்டு. ‘சதி’ வழமை என்பது முற்காலத்தில் ‘பதி’ யான கணவனுடன் சேர்ந்து உடன் கட்டை ஏறுவது, 1800 களின் தொடக்க காலத்திலும் சில இடங்களில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது’ என்று இணையத்தளத்தில் இருந்த விளக்கத்தையும் தந்தார். எழுத்தாளர் வ.ந. கிரிதரன், எழுத்தாளர் போல் ஜோசெப் ஆகியோரும் முன்னாள் பேராசிரியர் முனைவர் சுப்ரமணிய ஐயாவின் கருத்தை ஆமோதித்து தமது கருத்துக்களையும் முன்வைத்தனர்.
 
இந்த மெய்நிகர் நிகழ்வின் மூலம், எழுத்தாளர் குரு அரவிந்தன் உருவாக்கிய ‘சதிவிரதன்’ என்ற சொல் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, தமிழ் இலக்கியப் பரப்பிற்கு ஆரோக்கியமானது என்றே நான் கருதுகின்றேன். இது போன்று இன்னும் பல புதிய சொற்களை எழுத்தாளர் தமிழுக்குத் தரவேண்டும் என்று வாசகர் வட்டத்தின் சார்பாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
 
 
—-
 
Series Navigationகவிச்சூரியன் ஐக்கூ 2022நான் கூச்சக்காரன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *