இளைஞர்களுக்கு இதோ என் பதில்

This entry is part 11 of 24 in the series 1 நவம்பர் 2015

  நவநீ

வாழ்ந்து முடித்துவிட்ட களைப்பு, எல்லா திசைகளிலிருந்தும் கல்லெறி பட்டது போன்ற விரக்தி, தம்மைச்சுற்றிலும் கடன் தொல்லை, வறுமை, பணிப்பளு, பெருந்தோல்வியடைந்துவிட்டது போன்றதொரு பிரம்மை… இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவையும் தாங்க முடியாமல், சகித்துக்கொண்டு ஏதோ வாழ்க்கை ஓடுகிறது. எங்களுடைய சிரமம் யாருக்கு புரியப் போகிறது என தாங்களாகவே தங்கள் மீது சுய பச்சாதாபப்பட்டுக்கொண்டு வலம் வருகிறவர்கள் முக்கால் வாசி இன்றைய இளைய தலைமுறைகள், குறிப்பாக டீன்ஸ் என்று சொல்லக்கூடிய பள்ளி, கல்லூரி இளைஞர்-இளைஞிகளே ! இவர்களுக்கு என் பதில் இதோ…..
“நேரத்திற்கு வீட்டுக்குப் போங்கள், சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள், குறைந்த பட்சம் சமைக்கும் அம்மா அல்லது அப்பாக்களுக்கு உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுங்கள், ஜன்னல், கதவு, தொலைக்காட்சி, காலணிதாங்கி, பால்கனி போன்றவற்றை சுத்தம் செய்யுங்கள். வீடு முழுக்க அங்கங்கு கழன்ற நிலையில் இருக்கும் போல்ட்டுகளை சரி செய்யுங்கள். தனியாக உங்கள் துணிகளையும் சேர்த்து துவைக்கும் அம்மாவிடம் அவற்றை வாங்கி வெயிலில் உலர்த்துங்கள். வீட்டைச் சுற்றி செடிகள், புல் தரையிருப்பின் அவற்றுக்கு தண்ணீர் விடுங்கள். அதிகம் வளர்ந்துள்ள புல்லை வெட்டி சீராக்குங்கள். வாகனங்களை கழுவி சுத்தம் செய்யுங்கள். பரணியில் இருக்கும் பழைய புகைப்படங்களையும், புத்தகங்களையும் தூசி தட்டுங்கள். இரும்புப் பெட்டிக்குள் இருக்கும் தாத்தா பாட்டியின் வெற்றிலை பாக்கு இடிக்கும் உலக்கை – உரலை ஒருமுறை தட்டிப் பாருங்கள். உடல் நலமின்றி இருக்கும் உறவினர், நண்பர்களைப் போய் பார்த்து நலம் விசாரியுங்கள். உங்கள் பாடங்களை படியுங்கள். படித்து முடித்திருப்பின் நல்ல புத்தகங்களை வாசியுங்கள். உங்கள் கைப்பேசி, கம்ப்யூட்டர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கூடப்பிறந்தவர்களோடு கொஞ்சி குலாவுங்கள், ஓடி ஆடி விளையாடுங்கள். அவர்களோடு அமர்ந்து வீட்டுப் பாடங்களுக்கு உதவுங்கள். உங்கள் வயதில் உங்கள் பெற்றோர்களுக்கு, இன்று உங்களுக்குக் கிடைத்துள்ள கேளிக்கை, பொழுதுபோக்கு, வசதி, வாய்ப்புகள் கிடைத்திருக்கவில்லை. ஆனால், உங்களுக்கு கிடைத்திருப்பதைப் பற்றி பெருமிதம் கொள்ளுங்கள். நீங்கள் வசிக்கும் இந்த அற்புதமான உலகம் உங்கள் விருப்பத்திற்கிணங்க, உங்களுக்கு எதுவும் சிறப்பாகச் செய்திருக்கவில்லையென உணர்வீர்களாயின் நீங்கள் அந்த உலகுக்கு அதனை செய்ய முற்படுங்கள். உங்கள் உலகம், நேரம், திறமை, முயற்சி எல்லாமே உங்களிடமே உள்ளன. போரிட்டு, வருந்தி, வென்று பெற வேண்டிய அவசியமேதும் இல்லை. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின்… வளர முயலுங்கள். அழுவதை நிறுத்துங்கள். உங்கள் மீதான பச்சாதாபத்தை தூர வீசுங்கள். குறை காணுவதை தவிருங்கள். ஆடுங்கள், பாடுங்கள், மழையில் நனையுங்கள், விளையாடுங்கள், சிரியுங்கள், உறங்குங்கள். கனவுக்குள் மூழ்குங்கள். கண்ணை மூடி இந்த பிரபஞ்சத்தின் சப்தங்களை சற்று உணருங்கள். உங்கள் தவறான விரக்தியுறும் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இந்த மண்ணுக்கு மகத்தான விசயங்களை செய்ய முற்படுங்கள். பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், இந்த சமூகம் நமக்கானவற்றைத் தரவில்லையே என குற்றம் சாட்டுவதை நிறுத்தி விட்டு அவற்றை அவர்களுக்குத் தர நீங்கள் முற்படுங்கள். இந்த மண்ணுக்கு நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதைப் பற்றி சற்றே சிந்தியுங்கள்! பொறுப்பற்றவர்கள் அல்ல நீங்கள். மிகுந்த பொறுப்பு வாய்ந்தவர்கள், நீங்கள் இந்த மண்ணுக்கு மகத்தானவர்கள். இந்த சமூகத்திற்கு உங்கள் தேவை மிகுதியானது. உங்கள் சேவை அளப்பரியது. தூரம் அதிகமில்லை, நேரம் நிறைய இல்லை. நாம் ஏற்கனவே தாமதித்திருக்கிறோம். யாரோ வருவார், எவரோ எப்பொழுதாவது எல்லாவற்றையும் பூர்த்தி செய்வார் என்று புலம்பி அமர்ந்திருப்பதைத் தவிர்த்துவிட்டு, “எழுங்கள், விழுங்கள், பிறகும் எழுங்கள்… அந்த எப்பொழுதோ… இதோ இப்பொழுதே! அந்த யாரோ…. வேறு யாருமல்ல… இதோ நீங்களே !

இவற்றை தெரிவிக்கிறார்… அமொிக்கா, நார்த்லேண்ட் கல்லூரி முதல்வர் ஜான் டபேன். தொடர்ந்து உளவியல் சார்ந்த பல பிரச்சினைகளோடு வரும் விடலை மற்றும் இளைஞர், இளைஞிகளைச் சந்தித்து அவர்களிடம் உரையாடிய அனுபவத்தின் வாயிலாக ‘இப்படிக் கூறியவர் ஒரு பிரபல அமெரிக்க நீதிபதி.’

மூலம் : ஆங்கில பதிவு
தழுவல் – தமிழாக்கம் : நவநீ

Series Navigationதொடுவானம் – 92. பெண் தேடும் படலம்கவிதைகள் – நித்ய சைதன்யா
author

நவநீ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *