இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?

This entry is part 3 of 29 in the series 5 ஜனவரி 2014

rajidகாலையில் எழுந்தவுடன் முதலில் விழிப்பது இந்த திரைச்சீலையில்தான். திரைச்சீலை என்றால் புரியும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் தூய தமிழில் சொல்லிவிடுகிறேன். ‘ஸ்க்ரீன்’. அதன் காதுகள் கழன்றுகொண்டு அரைக்கம்பத்தில் பறந்து துக்கத்தைச் சொல்லும் தேசியக்கொடிபோல் தொங்குகிறது. எழுந்து மீண்டும் அந்தக் காதுகளை ஒழுங்காக வைத்து அமுக்கிவிட்டால் இரவு படுக்கைக்குப் போகும்போது மீண்டும் அரைக்கம்பத்தில் பறக்கும் கொடியாகிவிடும். காலை எழுந்ததும் பல் தேய்த்து முகம் கழுவுவதுபோல் இந்தத் திரைச்சீலையைச் சரிசெய்வது வாடிக்கையாகிவிட்டது. ஒரு திரைச்சீலைக்கு ஏழு காதுகள். அந்தக் காதுகளின் இரு முனைகளிலும் பட்டையாக ஒரு துணி தைக்கப்பட்டிருக்கிறது. பனித்துளிகளை ஒன்றுகூட்டி வைத்ததுபோல் நைலான் கண்ணிகள் ஒரு முனையிலும் மிருதுவான பட்டை மறு முனையிலும் இருக்கிறது. இரண்டையும் சேர்த்துவைத்து அழுத்தினால் ஒட்டிக்கொள்கிறது. பிறகு நாமே பிரிக்க முயன்றாலும் கொஞ்சம் சிரமப்படவேண்டிதான் இருக்கிறது. ஆனாலும் எப்படி தானாகவே கழன்று கொள்கிறது என்பதுதான் புரியவில்லை. ‘இது என்ன ஏதோ காலைக்கடன் இரவுக்கடன் மாதிரி. கழட்டிக்கிட்டுப்போய் ஒரு டைலர்ட்டே குடுத்து ப்ரஸ் பட்டனோ அல்லது பட்டன் காஜாவோ வைத்து தைத்து வாங்கிட்டு வாங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் செய்யணுமா’ என்றார் மனைவி சித்ரா. அப்போதுதான் அந்த தையல்காரர் என் நினைவுக்கு வந்தார்.

என் வீட்டுக்கு அருகில்தான் சிராங்கூன் சாலை. சாலையின் ஒரு பக்கம் உணவகங்கள், ஆயத்த ஆடையகங்கள், தொலைபேசி அட்டை விற்கும் கடைகள், இந்திய வங்கிக் கிளைகள், மளிகைக் கடைகள் நகைக் கடைகள். எப்போதும் சுழித்தோடும் நீரின் சுறுசுறுப்பு. வாடிக்கையாளர்கள் நடந்துபோகும் பாதையில் எப்போதுமே இடித்துக்கொண்டு நகரும்படியான கூட்டம்தான். அவர்களுக்கு காசு பொருளாக வேண்டும். கடைக்காரர்களுக்கு பொருள் காசாக வேண்டும். இரண்டும் ஜோராக நடந்துகொண்டிருக்கும். மக்கள் நடக்கும் பாதையின் வெளி ஓரத்தில் சிலர் தையல் எந்திரங்களோடு பின்னிக் கிடக்கின்றனர். அதில் ஒருவர்தான் என் மனதையும் லேசாக தைத்துப் போட்டவர். எப்போதும் நாலுநாள் தாடி. தலைமுடியும் அதே அளவுதான். நிமிர்ந்து சுற்றுமுற்றும் பார்க்கவேண்டிய அவசியமே இல்லாதது போன்ற ஒரு மனிதர். ஒரு நாளைக்கு அவரை இரண்டு மூன்று தடவை பார்க்கிறேன். அவரை நான் பார்ப்பது அவருக்குத் தெரியவே தெரியாது. அவர் மட்டும் என்னைக் கவர்ந்ததற்குக் காரணங்கள் உண்டு. அவர் சட்டைக் காலரில் வெளிப்பக்கமாக தைக்கப்பட்டிருக்கும் ‘சங்கர் டைலர்ஸ், பொன்னமராவதி’ என்ற விளம்பர வில்லை ஒரு முக்கியமான காரணம். இது என்ன கன்றாவி. சட்டைக்கு மேல் பனியன் போட்டதுபோல் விளம்பர வில்லையை வெளியே வைத்து தைத்திருக்கிறான் என்று நினைத்ததுண்டு. அந்த பொன்னமராவதி என் சொந்த ஊர் நற்சாந்துபட்டிக்கு பக்கத்து ஊர். அவரிடம் நற்சாந்துபட்டியைப் பற்றி கேட்கவேண்டும். ‘ மழை பெய்ததா? நச்சாங்கம்மாயில் தண்ணி கெடக்கா? ஆலயம்னு சொல்வோமே அந்த ஆலமரம் நல்லாயிருக்கா? அதுக்குக் கீழே நாலு பேர் எப்போதும் சீட்டு ஆடுவாங்கலே இப்பவும் ஆடுறாங்களா? என்றெல்லாம் கேட்கவேண்டுமென்ற ஆசைதான். ஆனாலும் இங்கே முன்பின் தெரியாதவர்களோடு அப்படி பேசிவிடமுடியாது.

2

அவர் தைக்கும் எந்திரம் சொந்தமா இல்லை வாடகையா? யாரிடமும் வேலை பார்க்கிறாரா அல்லது சுயதொழிலா? வேலை அனுமதியா அல்லது வேறோர் இடத்து அனுமதியில் அங்கே வேலையா? இல்லை வேறு மாதிரியா? எதுவுமே தெரியவில்லை. நாம் பேசப்போனால் சுதந்திரமாய்த் திரியும் எலி பொறிக்குள் அகப்பட்டதுபோல் கலவரப்படலாம். அதற்கு நாம் ஏன் காரணமாயிருக்க வேண்டும் என்று நினைத்துத்தான் அவரிடம் பேசுவதையே தள்ளிப்போட்டேன். அந்த மனிதர்மேல் நான் இரக்கப்பட்டேன். காரணம் அவரின் தோற்றம் முதலாவது. அவரின் ஊர் இரண்டாவது.

அன்று அந்த சாலையில் மக்கள் நடக்கும் அந்த வராண்டா கழுவிவிட்டதுபோல் கிடந்தது. எதிரேயுள்ள கோயிலில் எல்லா மக்களும் திரண்டிருந்தார்கள். இது என்ன மக்களுக்கு திடீரென்று பக்தி பெருக்கெடுத்துவிட்டது. விசாரித்தேன். உள்ளே நடிகை நமீதா சாமி கும்பிடுகிறாராம். நடிகையோடு சாமி கும்பிட்டால் கேட்கும் வரம் உடனே கிடைக்குமென்று இவர்களுக்கு யார் சொன்னது? இவர்களை வைத்துத்தான் புதியதோர் உலகம் செய்ய நாம் திட்டமிடுகிறோமா? கோயிலுக்குக் கூட ஒரு நடிகையால்தான் செல்வாக்கா? என்னமோ இதெல்லாம் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அன்றுகூட எதுவுமே நடக்காததுபோல் பொன்னமராவதிக்காரர் எந்திரத்தோடுதான் அட்டைப்பூச்சியாய் வளைந்து கிடக்கிறார். தொழிலில் அவ்வளவு பக்தியா? இவருக்கு நாம் ஏதாவது செய்தாகவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவர் என்னை ஈர்த்ததற்கு அதுவும் இன்னொரு காரணம். அந்தத் திரைச்சீலையை அவிழ்த்துக்கொண்டுபோய் ஒரு டைலரிடம் கொடு என்று சித்ரா விரட்டியபோது இவரைத்தான் நினைத்துக்கொண்டேன்.

அந்த திரைச்சீலையை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். ‘ஐயா’ என்றேன். ‘தம்பீ’ என்றுகூட அழைத்திருக்கலாம். எனக்கு வயது 60. அவருக்கு 40 இருக்கலாம். நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் வளைந்துவிட்டார் என்முகம் அவருக்குக் கலங்கலாகக்கூட நினைவில் நிற்கமுடியாது. ஏன் கூப்பிட்டேன் என்றுகூட கேட்கவில்லை. மனித இயல்பில் இதை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாமல் விழித்தேன். மீண்டும் அழைத்தேன். ‘ஐயா’.

‘எதுவா இருந்தாலும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு வாங்க’

என்று நிமிராமலேயே சொல்லிவிட்டு எந்திரத்தை ஓட்டினார். ஒரு ‘அண்ணே’ அல்லது ‘சார்’ கூட்டிச் சொல்லியிருந்தால்கூட நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். எனக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் என் வயதுக்கு ஒரு மரியாதை வந்திருக்க வேண்டும். ஆனாலும் வரவில்லை. அவரை நான் விடுவதாக இல்லை.

‘கொஞ்சம் கேட்டுவிட்டு தையுங்களேன்.’

‘இன்னும் அரைமணி நேரத்தில் இந்த கஸ்டமர் வருவார். அதற்குள் இது ரெடியாக வேண்டும். ஒடச்சுச் சொன்னாத்தான் விளங்குமா? அரைமணி கழிச்சு வாங்க’

சே! இது என்ன அவமரியாதை. இவருக்காகவா இப்படி இரக்கப்பட்டேன்? சரி. நாம் போகக்கூடாது. இன்னும் அரைமணிநேரம் காத்திருப்போம் என்று முடிவு செய்தேன். கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டு சுற்றுப்புற இயக்கங்களில், வாகனங்களில், மக்களில்,

3

அவர்களின் இயல்பில் அவர்களின் உரையாடல்களில் அவர்களின் மனச்சுமைகளில் நகைச்சுவையில் நேரத்தைக் கழித்தேன். கொஞ்சம் அவர் நிமிர்ந்தால் நான் காத்துக் கொண்டிருப்பதை பார்த்திருக்க முடியும். அரைமணிக்கு முன்பேகூட என்னைக் கூப்பிட்டு என்ன ஏது என்று கேட்டிருக்கக் கூடும். மனிதன் நிமிரவே இல்லை. உண்மையிலேயே தொழில்பக்திதானா? அரைமணிநேரம் முடிந்தது.

‘அரைமணி ஆகிவிட்டதய்யா. இங்கேதான் நின்றுகொண்டிருக்கிறேன். இப்பவாவது என்னான்னு கேளுங்களேன்’.

‘சரி. என்ன?’ என்றார். அந்த அண்ணே என்ற வார்த்தையை இப்பவும் எதிர்பார்த்து ஏமாந்துபோனேன்.

‘நீங்கள் சொன்னபடி உங்க கஸ்டமர் யாரும் வரலியே’

‘அது கெடக்கட்டும். உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.’

நான் உடனே சொல்ல ஆரம்பித்துவிட்டேன். இல்லாவிட்டால் மீண்டும் குனிந்துகொண்டுவிடுவார். அவரை பிறகு நிமிர்த்துவது பெரும்பாடாகிவிடும். என் திரைச்சீலை கதையை சொன்னேன். அதை வாங்கிக்கூட அவர் பார்க்கவில்லை. அது ஏன் கழன்றுவிடுகிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவரிடம் எந்த ஒரு ஆர்வமும் இல்லை.

‘சரி. புரிஞ்சுக்கிட்டேன். பிரஸ் பட்டன் வைக்கலாம். ஒரு ஜோடி ஒரு வெள்ளி. தைக்க ஒரு வெள்ளி. ஆக 14 காதுக்கும் 28 வெள்ளி. ஆனால் இன்னிக்கு முடியாது.நாளக்கி சனி ஞாயிறு. முடியாது. திங்கட்கிழமை எடுத்துட்டு வாங்க அன்னிக்கு சாயங்காலம் வாங்கிக்கலாம்.’

.’பட்டன் தச்சு காஜா கட்றதா இருந்தா என்ன சார்ஜ்’

‘காஜா எடுக்கிற மிஷினு இல்ல. அதெல்லாம் முடியாது’

’14 காஜாதானே. லேசா கத்தரில்ல கீறிவிட்டு கையாலேயே தச்சுறலாமே. பத்துபதினஞ்சு நிமிஷந்தானே ஆகும்.’

‘இவ்வளவு வெவரம் தெரிஞ்சிருக்கீங்க. நீங்களே செஞ்சுறலாமே. ஏன் இவ்வளவு மெனக்கெட்டு என்கிட்டே வந்தீங்க’

என் கோபத்தில் வார்த்தைகள் வெடித்திருக்க வேண்டும். நல்லவேளை அடக்கிக்கொண்டேன்.

‘உங்களுக்கு ஒரு வேலை தரணுமேன்னுதான் கொண்டுவந்தேன்’.

‘இந்த வேலையெல்லாம் செய்றதும் ஒண்ணுதான். செய்யாததும் ஒண்ணுதான். எனக்கு எதுவும் பெரிய மிச்சமில்லை இந்த வேலையில்.’

சே! இவரைப்பார்த்தா இரக்கப்பட்டேன்? அவரை விடவில்லை.

4

‘சரி. பட்டனை மட்டும் கட்டிக் கொடுங்க. காஜா நானே கட்டிக்கிறேன்.’

‘பட்டன் கட்டினாலும் 28 வெள்ளிதான்.’

சித்ராவுக்கு போன் செய்தேன். சித்ரா சரியான லொள்ளு. கத்தரிக்கா வாங்கிட்டு வாங்கண்ணுதான் சொல்லுவார். வாங்கி வந்ததுக்குப் பிறகுதான் சொல்லுவார். ’இது தைவான் கத்தரிக்காயில்ல. சீக்கிரம் வேகாதே. இந்தோனேஷியா கத்தரிக்காதான் நாம வாங்குவோம்னு தெரியாதா?’ என்பார். கோழி ஒன்னு வாங்கிட்டு வாங்கண்ணுதான் சொல்வார். வாங்கி வந்ததற்குப் பிறகுதான் சொல்வார். ‘ஏன் 8 துண்டு போடச் சொன்னீங்க. 12 துண்டுதான் நாம் எப்போதும் போடச்சொல்வோம்னு தெரியாதா?’ என்பார். இந்த விவகாரம் பிடித்த மனுஷன் சொல்றதை சித்ராகிட்டே சொல்லாமல் இருக்கக் கூடாதென்று நினைத்தேன். நமக்கு ஒரு பாதுகாப்பு வேண்டுமே. உடனே போன் செய்தேன். ‘ப்ரஸ் பட்டன் தைக்க 28 வெள்ளியா? உங்களுக்கென்ன பைத்தியமா? அந்த ஸ்கிரீனே 20 வெள்ளிதான். நீங்க நேரா தேக்கா மார்க்கெட் மாடிக்குப் போயி பிரஸ் பட்டனோ சாதா பட்டனோ வாங்கிட்டு வாங்க. நாமே தச்சுடலாம்’ என்றார். நான் அந்த தையல்காரரிடம் சொன்னேன். ‘ திங்கட்கிழமை காலைல கொண்டுட்டு வாரன்யா’ அவர் நிமிர்வார் என்று எதிர்பார்த்து அது நடக்காது என்று அறிந்து தேக்கா சந்தைக்கு புறப்பட்டேன். தேக்கா சந்தை இரண்டாம் தளத்தில் தையல் சாமான்களுக்கென்றே இரண்டு மூன்று கடைகள். ஒரு கடைக்குப் போனேன்.

‘ப்ரஸ் பட்டன் பெரிய சைஸ் இருக்கா?’

‘இருக்கிறது. ஒரு அட்டை 1 வெள்ளி 50 காசு’

‘ஒரு அட்டை என்றால் எத்தனை’

‘3 டஜன்’

‘அதாவது 36 பட்டனா?’

‘ஆம்’

’36 பட்டனும் 1 வெள்ளி 50 காசு. அப்படித்தானே.’

‘ஆம்’

அடப்பாவி. ஒரு பட்டன் 4 காசுதானே ஆகிறது. ஒரு பட்டன் 1 வெள்ளி என்றானே நான் இரக்கப்பட்ட அந்த தையல்காரர். இந்தக் கடையில் ஒரு சீனர்தான் எனக்கு பட்டனை எடுத்துக் காட்டினார். அவரின் தோற்றம் எந்த உணர்வையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. அவர் ஒரு சராசரி மனிதர்தான். வயது 70 இருக்கும். ஆடம்பரமில்லாத கடமையுணர்வு. நான் கேட்பதை தந்துவிட்டால் அவருக்கு காசு கிடைக்கும். ஆனாலும் அவர் காசைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னிடம் கேட்டார்.

‘எதற்கு அந்த பட்டன்’

5

‘இதோ இந்த ஸ்கிரீனுக்கு. காது கழன்றுகொண்டு விழுந்துவிடுகிறது’

‘இங்கே கொடுங்கள் பார்ப்போம்’

எடுத்துக் கொடுத்தேன். ஆனால் அந்தத் தையல்காரர், நான் இரக்கப்பட்ட அந்த பொன்னமராவதிக்காரர் பார்ப்பதற்கே அரை மணி கழித்து வரச்சொன்னதை நினைத்துக் கொண்டேன். இந்த 70 வயது மனிதருக்குத்தான் எத்தனை அக்கரை. ஸ்கிரீனைப் நன்றாகப் பார்த்தார். பின் சொன்னார்.

‘இது கொஞ்சம் ஓவர்வெயிட். அதனால்தான் கழல்கிறது. ப்ரஸ் பட்டன்கூட நிற்காது. பெரிய பட்டன் 14 தருகிறேன். ஒரு பட்டன் 10 காசுதான். நீங்களேகூட தைத்துக் கொள்ளலாம். ஏன் காசை வேஸ்ட் செய்கிறீர்கள்’

ரொம்ப நன்றி. கொடுங்கள்’

1 வெள்ளி 40 காசு மட்டும் கொடுத்து பட்டனை வாங்கி வந்தேன். அரை மணி நேரத்தில் 14 பட்டனையும் கட்டி 14 காஜாவும் எடுத்துவிட்டோம். இப்போது அந்த திரைச்சீலை மிக அழகாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாமே தன் இயல்பை தோற்றத்திலேயே காட்டிக்கொண்டுதான் வாழ்கின்றன. மனிதனைத் தவிர.

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

4 Comments

  1. Avatar
    புனைப்பெயரில் says:

    வித்தியாசமான கோணம். சம்பவங்களின் கதாபாத்திரங்களை அங்கேயே அப்படியே விட்டு நகர்ந்தாலும், அக் கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் மனபாதிப்பு அடுத்த கதை நகர்விலும் கூடேயே வருவது அற்புதம். கதை சொல்லியின் திறமையும் அற்புதம்..

  2. Avatar
    ameethaammaal says:

    ‘படைக்கப்பட்ட உயிரினங்கள் எல்லாமே தன் இயல்பை தோற்றத்திலேயே காட்டிக்கொண்டுதான் வாழ்கின்றன மனிதனைத் தவிர’ கடைசி வரி கச்சிதம் இயல்பான கதை.

Leave a Reply to புனைப்பெயரில் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *