இவ்வாண்டின் “ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது “ பெற்ற சுப்ரபாரதிமணியனின் “நீர்த்துளி ” நாவல்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 25 of 37 in the series 2 செப்டம்பர் 2012

 “  உதிரி மனிதர்களின் உலகமும்,      சூழல் கேடற்ற நகரக் கனவும்”  

                                                   பிரபஞ்சன்

திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார். உதிரி உதிரியான பாத்திரங்கள், கலங்கலான கதாபாத்திரங்கள் , விளிம்பு நிலை மக்களை இந்த நாவலில் நிறைத்திருக்கிறார்.இடம்பெயர்ந்து வந்து வேலைக்காக அந்த நகரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்ட மக்களின் வாழ்க்கையைச் கூர்ந்து பார்த்து எழுதியிருக்கிறார். அதில் ஒரு மணமாகாத ஆணும், மணமாகி கணவனின் கொடுமையால் தனித்து வாழும் பெண்ணும் சேர்ந்து வாழ விரும்பும்  வாழ்க்கை பற்றி இந்த நாவல் பேசுகிறது. அவர்கள் உடல் உறவு சார்ந்து லாட்ஜிகளைத் தேடிப்போகிறார்கள். அதில்தான் எவ்வளவு சிக்கல்கள்.எவ்வளவு போலீஸ் தொந்தரவுகள்.இந்த போலிஸ்காரர்களைப் போல் சாதாரண மக்களுக்குத் தொல்லை தருகிறவர்கள் யாருமில்லை. பிறகு ஒரு வாடகை வீடெடுத்து வாழத்துவங்கும்போது அவர்களை இந்தச் சமூகம் பார்க்கும் போலீஸ்காரப்  பார்வை.., சுற்றுசூழல் பிரச்சினையால் சாயப்பட்டறைகள் மூடப்படுதல், அதனால் வரும் பொருளாதரப்பிரச்சினைகள், விவாகரத்து பெற முடியாமல் அப்பெண் தன்னை மனச்சிதைவுக்கு ஆட்படுத்திக் கொள்வது என்பது பற்றி  கலை அனுபவங்களுடன் நுணுக்கமாகப் பேசுகிறார். லிங்கம் என்ற ஆண்  பிரதானமாக இருந்தாலும் நுணுக்கமான உதிரி உதிரியான கதாபாத்திரங்கள். விளிம்பு நிலை மனிதர்களால் நிறைக்கப்படும் சமூகத்தை முன் வைக்கிறார். இன்றைய தொழில் நகரம் சார்ந்த முன் மாதிரி நகரம் அது. நொய்யலில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாயக்கழிவுகளெல்லாம் இல்லாமல் போகிற சுற்றுச்சூழல் கனவு பற்றியும் இந்த நாவல் பேசுகிறது.அந்த நகர மனிதர்களும் நொய்யலின்  சாயக் கழிவு இல்லாமல் போவது போல் நல்ல சுத்தமான மனிதர்களாக வேண்டும் என்ற ஆசையின் படிமமாக அதைக் கட்டமைத்துக் கொள்ளலாம். தமிழ் படைப்புலகில்  தொடர்ந்து சுப்ரபாரதிமணியன் தீவிரமாக  இயங்கி வருவதன் அடையாளம் இந்நாவல்.

————————————————–

”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்

( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியிடு

ரூ 160)

————————————————–

 

Series Navigationஓடும் பஸ்ஸில் ஒரு நாடகம்..!மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -10
author

Similar Posts

Comments

  1. Avatar
    R.Karthigesu says:

    அண்மையில்தான் “நீர்த்துளி” படித்தேன். ஒரு பத்து பக்கம் படித்துவிட்டால் மனதை அப்படியே கவ்விக்கொள்ளும் கதை. பெரும்பாலும் உரையாடல்களையே வைத்து நகரும் கதை. உரையாடல்கள் மிக யதார்த்தம். நம்மோடு பேசுவது போல.

    சாயப்ப்ட்டறை பற்றி அவர் அதிகமாகப் பேசவில்லை. அது ஒரு பெரும்பாலும் அசையாத் திரையாக பின்னால் இருக்கிறது. ஆனால் அதில் ஏற்படும் சினனஞ்சிறு அசைவுகளும் இந்த நாயக – நாயகியைப் பாதிக்கின்றன. இவர்கள் வாழ்க்கை துன்ப மயமானது. ஆனால் அதற்குள் அவர்கள் காணும் சின்னச்சின்ன சுகங்களை சுப்ர மிக அழகாக உருவாக்கி வாசகர்களையும் கிளுகிளுக்க வைக்கிறார். காமக்காட்சிகள் அனைத்தும் அத்தனை இலேசாக விரசம் தொனிக்காமல் கடந்து போகின்றன. இயலாமையில் ஆரம்பித்து இயலாமையில் இவர்கள் பிரியும் சோகம் மனதில் தங்கி நிற்கும்.

    நாவல் கலையில் ஒரு புதிய பரிமாணம் என்று கொள்ளத்தக்க படைப்பு.

    நாவலை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு பிரபஞ்சனுக்கு நன்றி.

    ரெ.கா.

Leave a Reply to R.Karthigesu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *