உன்னுள் இருந்து எனக்குள்

This entry is part 12 of 12 in the series 24 ஜூலை 2022

 

 

தெலுங்கில்: எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

 

“சரஸம் என்றால் என்ன?” கேட்டான் என் கணவன்.

திகைத்துப் போய் விட்டேன். எந்த கணவனும் முதலிரவில் தன் மனைவியுடன் தொடங்கும் முதல் உரையாடலில் முதல் கேள்வியாக இப்படிக் கேட்டிருக்க மாட்டான்.

தூய்மையான உருது மொழியில் அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமாக இருந்து விட்டேன்.

என் குழப்பத்தைப் புரிந்து கொண்டவன் போல் அவன் மெலிதாக சிரித்துவிட்டு, “நீ அறைக்குள் வருவதற்கு தாமதம் ஆனதால், ஒரு கவிதையை எழுதுவோம் என்று உட்கார்ந்தேன், ‘சரஸம்’ என்ற வார்த்தைக்கு சரியான பொருள் தெரியவில்லை. வந்ததுமே இப்படி கேட்டதற்கு பதற்றம் அடைந்து விட்டாயா?” என்றான்.

நானும் சற்று தேறிக்கொண்டு, “அதெல்லாம் ஒன்றும் இல்லை” என்றேன். கொஞ்சம் ஆர்வம் கலந்த ஆச்சரியத்துடன், “நீங்கள் கவிதை எழுதுவீர்களா?” என்று கேட்டேன்.

“ஆமாம். உன் கவிதையைப் படித்துதான் உனக்காக இந்தியாவில் விசாரித்தேன்” என்றான்

பழமைவாத முஸ்லிம் குடும்பம் எங்களுடையது. கோதாவரிக்கு மேற்கில் கொவ்வூருக்கு நூறு கி,மி, தொலவில் இருக்கும் ஒரு குக்கிராமம். எங்கள் குடும்பங்களில் பெண்ணின் கருத்துகளுக்கு மதிப்பு தரமாட்டார்கள். அதிலேயும் அவ்வளவு உயர் பதவியில் இருக்கும் ராணுவ அதிகாரி தானாக தேர்ந்தெடுத்து, விரும்பி முன்வந்து பண்ணிக் கொள்வதாக சொன்னதுமே என் பெற்றோர்கள் துள்ளிக்குதிக்காத குறையாக சம்மதம் தெரிவித்தார்கள். அந்த விதமாக என் விருப்பு வெறுப்பு பற்றிய பிரஸ்தாவனை இல்லாமல் ஆசிப் அகமத்தின் மனைவியாகி விட்டேன்.

எங்களைப் போன்ற சில முஸ்லிம் பிரிவுகளில்  ஜல்வா முடிந்ததும், மணமகள் கணவனின் வீட்டிற்கு வந்து விடுவாள். ஹிந்துக்கள் போன்று அல்லாமல், சுஹாக் ராத் (முதலிரவு) மணமகன் வீட்டில் நடக்கும். அந்த விதமாக நான் திருமணம் ஆனதுமே மேற்கு கோதாவரி மாநிலத்திலிருந்து பாகிஸ்தானுக்கு வந்து விட்டேன்.

சொல்ல மறந்து விட்டேன். என் கணவர் பணி புரிவது பாகிஸ்தான் ராணுவத்தில்!

முதலிரவு அறைக்குள் அனுப்பும் முன் செய்யும் சடங்கை கரீமா என்பார்கள். ஆஜானுபாகுவாக, எப்போதும் கம்பீரமாக இருக்கும் ஆசிப் சின்னக் குழந்தை போல் பூப்பந்துகளுடன் விளையாடுவதைப் பார்த்து சிரித்துக் கொண்டேன். முதலிரவில் மல்லிகைப் பூக்களை அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று புத்தகங்களில் படித்திருக்கிறேன். ஆனால் எங்கள் சமூகத்தில் ரோஜா இதழ்களை, அத்தரை அதிகமாக உபயோகிப்பார்கள். அந்த நறுமணம் மல்லிகையை போல் மயக்கத்தில் ஆழத்தாது. இதமாக இருக்கும். காமத்திற்கும், சிருங்காரத்திற்கு உள்ள வித்தியாசம் போல் தோன்றும்

படுக்கையின் மீது படர்ந்திருந்த ரோஜா இதழ்களை விலக்கி ஒரு புத்தகத்தை எடுத்து, அதிலிருந்த கவிதையை எடுத்து எனக்குக் காண்பித்துவிட்டு, “இது நீ எழுதியதுதானே?” என்றான். அது நான் எழுதியதுதான். ஜிஹாத் என்ற உருது பத்திரிகையில் பிரசுரமாயிற்று. அந்தப் பத்திரிகை  அகமதாபாத்லிருந்து வெளி வருகிறது. ஜிஹாத் என்றால் போர் என்று அர்த்தம். பெயர்தான் போர் என்றாலும் அதில் எல்லா விதமான கதைகளை, கவிதைகளை பிரசுரித்து வந்தார்கள். நான் எழுதிய கவிதையை அவர்கள் பிரசுரித்தது, மேலும் பத்து ரூபாய் சன்மானம் அனுப்பியது எனக்கு அபூர்வமான அனுபவம்.

“இந்தியாவிலிருந்து வரும்போது என் நண்பன் இந்த பத்திரிகையைக் கொண்டு வந்தான். உன் போட்டோவை பார்த்ததும் என் மனம் வசம் தப்பி விட்டது. கவிதையைப் படித்ததும் மனதை தொலைத்து விட்டேன்.”

“என் கவிதையை புகழறீங்களா? அல்லது இகழுறீங்களா?” சிறுகோபத்துடன் கேட்டேன்,

அவன் திகைத்துப்போய், “நன்றாக இல்லை என்றால் வேற்று நாட்டில் இருக்கும் பெண்ணை தேடித்தேடி எதற்காக கண்டு பிடிக்கப் போகிறேன்?” என்றான்.

உண்மைதானே என்று தோன்றியது. அதற்குள் அவனே மேலும் சொன்னான். “எனக்கும் இந்தக் கவிதை பைத்தியம் இருக்கிறது. இருவரின் ரசனைகளும் ஒத்துப்போகும் என்று தோன்றியது. பெயரைப் பார்த்தேன். நூர்ஜஹான் என்று இருந்தது. என் நண்பனைக் கொண்டு விசாரித்தேன்.”

அதன் பிறகு நடந்த விஷயங்கள் எனக்குத் தெரிந்தவைதான். என் பெற்றோர் பூரித்துப்போய் விட்டார்கள். என்னதான் மறுத்தாலும் எங்கள் வீட்டாருக்கு பாகிஸ்தான் என்றால் பிரியம்தான். எங்கள் தாத்தா (தாயின் தந்தை) கராச்சியிலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு குடிபெயர்ந்து வந்தார். என் தாயும், பாகிஸ்தான் மாஜி பிரதமர் ஜுல்பிகர் ஆலி புட்டோவும் ஒரே நாளில் (1928) பிறந்தவர்கள். ஐம்பத்தோரு வயதான புட்டோவை பாகிஸ்தான் ராணுவம் தூக்கில் போட்டபோது என் தாய் வருந்தியது எனக்கு இப்போதும் நினைவு இருக்கிறது.

ஆசிப் அகமதுடன் என்னுடைய திருமணத்திற்கு இரு அரசாங்கத்திலிருந்தும் ஏதாவது ஆட்சேபணை வரக்கூடும் என்று நாங்கள் பயந்தோம். ஆசிப் ராணுவத்தில் உயர் பதவியில் இருந்ததால், முக்கியமாக பாகிஸ்தான் சார்பில் ஏதாவது ஆட்சேபணை இருக்கக்கூடும் என்று நினைத்தார்கள். ஆனால் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. விசா சுலபமாகவே கிடைத்து விட்டது.

“ராணியார் என்ன யோசித்துக்கிட்டு இருக்கீங்க?” என்ற கேள்விக்கு நினைவுகளிலிருந்து மீண்டு வந்து சிரித்தேன்.

“நான் ஏதோ கவிதை எழுதுவதாவது? அதைப் பத்திரிகைக்கு அனுப்புவதாவது? அதை நீங்கள் படித்து, திருமணத்திற்கு தூது அனுப்புவதாவது? கோதாவரி கரையிலிருந்து, இண்டஸ் நதி கரைக்கு நான் வருவதாவது?” என்றேன்.

தன்னுடைய நாட்டின் நதியைப்பற்றி பிரஸ்தாவித்ததும் அவன் விளையாட்டாக கண்ணிமைகளை உயர்த்தி, “ஓ… நீ ஹிஸ்டரி கிராட்யுயேட் இல்லையா!” என்றான். அவன் என் கையை தன் கையில் எடுத்துக் கொள்ளும்போது போன் ஒலித்தது. அவன் நெற்றியைச் சுளித்துக் கொண்டான், மறுமுனையில் இருப்பவர் ஏதோ சொன்னதும், “சரி… சரி” என்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு போனை வைத்து விட்டான்.

“எங்கிருந்து போன்?” என்றேன்.

“ஜெனரல் அலுவலகத்திலிருந்து” என்றான். “உங்கள் பிரதமர் பஸ்ஸில் லாஹோர் வருகிறாராம். செக்யூரிட்டி சீஃப் ஆக என்னை நியமித்து இருக்கிறார்கள்” என்றான்.

கண்கள் மின்ன, “கங்கிராட்ஸ்!” என்றேன். “வாஜ்பேயி எங்களுக்கு மிகவும் பிடித்த பிரதமர்.”

அவனுள் அவ்வளவாக உற்சாகம் தென்படவில்லை. “சரி. அதைப்பற்றி இனி மறந்து விடுவோம்” என்று சற்று குனிந்து இதழ்கள் மீது முத்தம் பதித்தான்.

அவ்வளவு திடீரென்று அவன் அப்படி முத்தமிட்டதும் பதற்றமடைந்தேன். அவனிடமிருந்து என்னுள் ஏதோ சக்தி பாய்ந்து வருவது போன்ற உணர்வு ஏற்பட்டது. தன்னுடைய எல்லா உறுப்புகள் சார்பிலும் தன்னுடைய நாக்கை தூதாக நியமனம் செய்து, என்னுடைய மேனி கோட்டைக்குள் அனுப்பியிருக்கிறான் போலும். அந்த தூதுவன் என் மேனியின் ரகசியங்களை துப்பறியும் பொறுப்புக்கூட எடுத்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அந்த சிலிர்ப்பின் நறுமணம் உடல் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் போது, அவன் ஒரு பக்கம் முத்தமிட்டுக்கொண்டே தன்னுடைய யோசனைகளில் எங்கேயோ நழுவி விட்டதை கவனித்தேன். கொஞ்சம் விலகி, “என்ன யோசிக்கிறீங்க?” என்றேன்.

அவன் சிரித்துவிட்டு, “எங்களைப் பற்றிதான்!” என்றான்.

“அப்படி என்றால்?”

“எதிரிக்கு செக்யூரிட்டி கொடுக்க வேண்டியிருக்கிறது பார்த்தாயா?”

“எதிரி என்றாலும் அவர் நம்முடைய விருந்தாளி இல்லையா!” என்றேன். ‘நம்’ என்ற வார்த்தையைச் சொன்னது எனக்கு வேடிக்கையாக இருந்தது.

அவன் பேசவில்லை. மூட் மாற்றுவதற்காக, உருதுவில் கவிதை சொல்வதுபோல் “அந்த விருந்தாளியை தவிர பக்கத்தில் இருக்கும் மணப்பெண்ணைப்  பற்றி யோசிக்க மாட்டீர்களா?” என்றேன்.

அவனுக்குப் புரிந்துவிட்டது. ஆவேசத்துடன் சட்டென்று அருகில் இழுத்துக் கொண்டான்.

அதுதான் எனக்கு முதல் ஆணின் தொடுகை. பஸ் ஸ்டாண்டுகளில் நிகழும் தொடுகை பற்றி இல்லை நான் சொல்ல வந்தது. மனமும், உடலும் முழு ஒப்புதலுடன் வரவேற்கும் நிலையில் ஏற்படும் தொடுகை அது!

எல்லோரும் இதுபோன்ற சந்தர்பங்களில் பெண்ணின் உடலை வீணையுடன், ஆணை அந்த வீணையின் கம்பியை சுருதி செய்பவனுடன் ஒப்பிடுவார்கள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஒளிவுமறைவு இல்லாமல் சொல்கிறேன். எனக்கு ஏனோ பருத்தியை சுத்தம் செய்பவன் நினைவுக்கு வந்தான். எங்கேயோ தந்தியை மீட்டுவான். டங் என்ற சத்தத்துடன் துகள் தூகளாக பஞ்சு அறை முழுவதும் பரவும். அவன் கை என் முதுகெலும்பு நுனியை அடைந்தபோது எனக்குத் தோன்றிய ஒப்பீடு அது!

என் கழுத்தின் வளைவிலிருந்து வேறொரு வளைவுக்குள் அவன் முகம் இறங்கியபோது, உடல் முழுவதும் எழும்பி, என் இடுப்பு அலையாய் மாறியது. என்னுள் அவ்வளவு விருப்பம் புதைந்து இருப்பது அதுவரையில் எனக்குத் தெரியாது.

அவன் வயதில் சிறு பிள்ளையாகி முப்பது வருடங்கள் பின்னோக்கிப் போனான். ‘பசி’ ஒன்று தான் வித்தியாசம்!

ஆணுக்குக் கூட ஒரு தனிப்பட்ட நறுமணம் (இதுபோன்ற நேரத்தில் அவ்வளவு பண்பு நிறைந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லைதான்) இருக்குமென்று எனக்கு முதல் முறையாக தெரிந்தது.

வெட்கத்தின் ஒவ்வொரு படிமமும் என்னைத் துறந்து கட்டிலுக்கு பக்கத்தில் விழுந்து கொண்டிருந்தது.

திருமணம் ஆன பின் ஒவ்வொரு இரவிலும் பெண் பூமாதேவியாக மாற வேண்டுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். சிருங்காரத்தில், பாரமும், பொறுப்புகளும்கூட சந்தோஷம் தருபவையாகவே இருக்கும் என்று புரிந்தது. பாரத்தின் விஷயத்தை ஒதுக்கிவிட்டு, கூட்டாளியாக என் பங்கு பொறுப்பை தொடங்கும் நேரத்தில் நிழந்தது அது!

பெரிய ஷாக்!

என்ன நடந்தது என்று உணரும் முன் என்னைவிட முன்னாடியே அவன் அதை உணர்ந்து விட்டதுபோல் களையிழந்துவிட்ட முகத்தை வளைவில் புதைத்துக்கொண்டான். என் மேனியின் வளைவில் இல்லை. தலையணையின் வளைவுக்குள்!

இது நடந்து ஒரு வாரம் கடந்து விட்டது.

என் கணவன் ஆண்மையற்றவன் இல்லை என்று என் மனம் ஆழமாக சொல்லிக் கொண்டிருந்தது. இருந்தாலும் இப்போது என் பிரச்னை அது இல்லை. தான் புதிதாகத் தெரிந்துகொண்ட கசப்பு உண்மையை ஜீரணித்துக் கொள்வதற்கு அவனுக்கு கொஞ்சம் அவகாசத்தை கொடுக்க வேண்டும். தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் தற்போது என்னுடைய கடமை!

அதனால் நான் சாதாரணமாக இருப்பதுபோல் தென்படுவதற்கு முயற்சி செய்தேன்.

“இது வரையில் எனக்கு எந்தப் பெண்ணுடனும் அனுபவம் இருந்தது இல்லை.” சொன்னான் அவன். “ஆனால் எனக்கு நன்றாகவே தெரியும். என்னிடம் எந்த குறையும் இல்லை. ஏனோ அந்த நேரத்தில் சோர்வோ, ஆர்வக்குறைபாடோ தோன்றுகிறது. மருத்துவரை பார்க்க வேண்டுமா, மனநல நிபுணரை பார்க்க வேண்டுமா என்று புரியவில்லை.”

“இப்போது என்ன அவசரம்? கொஞ்ச காலம் பொறுத்துப் பார்ப்போம். பிறகு தானாக சரியாகி விடும்.” மனப்பூர்வமாகவும் நேர்மையாகவும் சொன்னேன்.

ஏனோ இந்த பிரச்னை தற்காலிகமானதுதான் என்று தோன்றியது. ஒரு விதமாக இது எங்களுக்கு இடையே உறவு பலப்படுவதற்கு உதவி செய்யும் என்று தோன்றியது.

இதற்கு நடுவில் ஆசிப் தாய் எங்களை ஹனிமூனு(?)க்குப் போகச்சொல்லி அவசரப்படுத்தினாள்.

 

(இரண்டாம் பகுதி)

பாகிஸ்தானுக்கு கிழக்கே இமயமலைகளின் விளிம்பில் ‘ஸ்கார்டூ’ என்ற இடம் இருந்தது. மலை சிகரத்தின் மீது இளகிய பனி, ஹூஷே நதியாக மாறி கிழக்கில் பாய்ந்து இண்டஸ் நதியுடன் இணைகிறது. பசுமையான சமவெளி, தொலைவில் வெள்ளை நிறத்தில் மலைகள், நடுவில் நதி, சுற்றிலும் தோட்டங்கள்… ரொம்ப அருமையாக இருந்தது அந்தக் காட்சி.

ஆசிப் என் கையைப்பற்றி அருகில் இழுத்துக்கொண்டே, “இவ்வளவு அற்புதமான இடம் உலகத்தில் வேறு எங்கேயும் இல்லை!” என்றான்.

நான் அவனை கொஞ்சம் டீஸ் செய்து கொண்டே, “எங்கள் கோதாவரி மாநிலம் இதைவிட ஆயிரம் மடங்கு அழகாக இருக்கும்” என்றேன்.

அவன் முகம் நிறம் மாறியது. “இருக்கக்கூடாது. இருப்பதற்கு வழி இல்லை!” என்றான்.

நான் அவன் முகத்தை நேராக பார்த்துக்கொண்டே, “உங்களால் எப்படி சொல்ல முடியும்? நீங்கள் ஒரு இடத்தை மட்டும்தான் பார்த்திருக்கீங்க. இரண்டு இடங்களையும் பார்த்திருப்பது நான். ஆகையினால் என் வாதம் தான் சரி!” என்றேன். அவன் அடி அங்கியது போல் என்னைப் பார்த்துவிட்டு, சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்து விட்டான். அவன் சார்ப்பில் வாதம் எதுவும் இருக்காது என்று எனக்கு தெரியும்.

ஆனாலும் தோற்றுப்போவதற்கு விருப்பம் இல்லாதது போல் குரலை கொஞ்சம் உயர்த்தி, “ஒவ்வொன்றையும் கண்ணால் பார்த்து, அனுபவித்து சொன்னால்தான் உண்மையாகி விடுமா என்ன?” என்றான்.

அவனுடையது முட்டாள்தனமான வாதம் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் முகம் செக்கச்சிவப்பாக மாறி விட்டிருந்தது.

அதுபோன்ற முகத்தை நான் அடிக்கடி எங்கள் வீட்டில் பார்த்துக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். அதனால் நான் உடனே அடையாளம் கண்டுகொண்டு விட்டேன். அந்த முகம் என் தந்தையோடது!

ஏறத்தாழ ஐம்பது வருடங்களுக்கு முன் கராச்சியிலிருந்து கட்டிய உடைகளுடன் வந்து விட்டதற்கு என் தந்தைக்குத் தன் மீதும், சமுதாயத்தின் மீதும் வெறுப்பு வளர்ந்து விட்டிருந்தது. தினமும் அளவுக்கு மீறி குடிப்பது பழக்கமாகி விட்டிருந்தது. எரிச்சலும் சலிப்பும் அதிகம் ஆனால் காரணம் இல்லாமலேயே கோபம் வந்து விடும். என் தாயுடன் சண்டை போடுவார். அந்த சண்டையில் எந்த பலமும் இல்லா விட்டாலும் ஆண் என்பதால் வெற்றியும் பெறுவார். என் தாய் அவர் கையில் அடியும் வாங்கி இருக்கிறாள். அப்படி அடிக்கும்போது என் தந்தையின் முகம்கூட இதேபோல் சிவப்பு நிறத்திற்கு மாறுவது எனக்கு நினைவு இருக்கறது.

என் கணவருடன் காரணம் இல்லாமல் வாதத்தை நீட்டிப்பதில் விருப்பம் இல்லாததால், தொலைவில் இருக்கும் மலைகளை காண்பித்துக்கொண்டே, “அந்தப் பக்கம்தானே பாரத நாடு” என்றேன்.

“ஆமாம். அதனை கார்கில் என்பார்கள். விரைவில் அங்கே போர் நடக்கப் போகிறது” என்றான். உரையாடலை திசை திருப்புவதில் அந்த விதமாக வெற்றி பெற்றதில் சந்தோஷமாக இருந்தது.

விரைவிலேயே ஆசிப் சொன்ன வார்த்தை உண்மையாகி விட்டது. இந்திய பிரதமர் வாஜ்பேயி வந்து விட்டு போன சில மாதங்கள் கழித்து போர் தொடங்கி விட்டது. நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆனால் ஆசிப்க்கு மட்டும் தாங்க முடியாத பேரிடி! அவனுடைய உயிர் நண்பனும், சக ராணுவ அதிகாரியும் ஆன இக்பால் அந்த போரில் இறந்து விட்டான். போருக்கு போவதற்கு முதல் நாள்தான் இக்பால் எங்கள் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருந்தான். இருவரும் சேர்ந்துதான் புறப்பட்டார்கள். அவன் மரணத்தினால் என் கணவன் பகைமையினால், ஆக்ரோஷத்தினால் கொந்தளித்துப் போய்க் கொண்டிருப்பதை கவனித்தேன். இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அவன் நண்பன் போரில் இறந்துபோன போது அந்த பிணத்தை ‘தங்களைச்’ சேர்ந்ததாக அடையாளம் காண்பதற்கு பாகிஸ்தான் மறுத்து விட்டது. அதை ஒரு அநாதை காஷ்மீரி ராணுவ வீரனின் பிணமாக அடையாளம் கண்டு, பாரத ராணுவ வீரர்கள்தான் புதைத்தார்கள்.

அந்த போருக்குக் காரணம் பாகிஸ்தான் சர்வ ராணுவ அதிகாரி முஷாரப். கார்கில் மீது அவன் செய்த எல்லை மீறிய ஆக்கிரமிப்பு பற்றி அந்த நாட்டு பிரதமர் நவாப் ஷரீப்க்குக்கூட தெரியாது என்று அப்போது சில பத்திரிகைகள் எழுதி இருந்தன. தெரிந்திருந்தால் போருக்கு ஒப்புக்கொண்டு இருந்திருக்க மாட்டாராம். தெரிந்ததுமே போரை நிறுத்திவிட்டு, (ஏற்கனவே இந்திய ராணுவத்தின் கையில் செத்து சுண்ணாம்பாகிவிட்ட) ராணுவத்தை பின்னால் வரவழைத்தாராம்.

அதனால்தான் என் கணவனுக்கு பிரதமர் நவாஜ் என்றால் ரொம்ப கௌரவம். முஷாரப் என்றால் கோபம்.

என் கணவனின் உடல்நிலையில் மாற்றம் இல்லை. ஆனால் பெரும்பாலான கணவன் மனைவியரை விட நாங்கள் சந்தோஷமாகவே இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். காரணம் எங்கள் இருவருக்கு இடையே இருந்த கம்யூனிகேஷன். ஏதாவது விதண்டாவாதம் செய்யும் போது தவிர மீதி நேரங்களில் ஆசிப் போன்ற நபர் கணவனாக கிடைத்தது அதிர்ஷ்டம். என் தந்தை போன்ற பெரும்பாலான கணவன்மார்களை விட, அவன் என்னிடம் நடந்துகொள்ளும் முறை சிறப்பாக இருந்து வந்தது.

இதுபோல் சில நாட்கள் கழிந்தன.

தன் உடல்நிலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் போனதும் யாரையாவது சைக்ரியாடிஸ்டை பார்க்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான் ஆசிப். அவன் இத்தனை காலம் பொறுத்து இருந்ததற்கு காரணம் நான்தான். எனக்கு ஏனோ இன்னும் நம்பிக்கை தளர்ந்துபோக வில்லை. அவனிடம் ஆண்மைக்கு உரிய மாற்றங்களை மனைவியாக என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஆனாலும் எங்கேயோ ஏதோ புதிர் இருந்தது. அதுதான் தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போது…

ஒரு நாள் பன்னிரண்டு மணிக்கு எங்கள் வீட்டு போன் ஒலித்தது.

ஆசிப் அவசர அவசரமாக கிளம்பிப் போனான். நான்கு நாட்கள் வீட்டிற்கு வரவே இல்லை. அப்பொழுதுதான் வெடிகுண்டு வெடித்தது போல் செய்தி தெரிந்தது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஜ் ஷரீபை ராணுவம் சிறை பிடித்து விட்டது!

நான்கு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த ஆசிப் எரிச்சலுடன் இருந்ததை கவனித்தேன்.

“என்ன ஆயிற்று?” கேட்டேன்.

“பிரதமர் நவாஜை எங்கள் ராணுவ அதிகாரி சிறையில் வைத்திருக்கிறான்!”

“ஆமாம். பேப்பர்களில் எல்லாம் அதே செய்திதானே. இத்தனைக்கும் இந்த நான்கு நாட்கள் நீங்க எங்கே இருந்தீங்க?”

“புரட்சி எதுவும் நடக்காமல், சிறைச்சாலையின் முன்னால் செக்யூரிட்டி பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.”

“யார்?”

அவன் எரிச்சலுடன் என் பக்கம் பார்த்துவிட்டு, “வேறு யார்? முஷாரப் தான்” என்றான்.

“நீங்க யாருக்குக் கீழே வேலை பார்க்கிறீங்க? பிரதமர் நவாஜ் ஷரீபின் கீழேயா? ராணுவ அதிகாரி முஷாரபின் கீழேயா?” கேட்டேன்.

ஆசிப் முகம் படிப்படியாக சிவப்பு நிறத்திற்கு மாறத் தொடங்கியது. அவனுள் வந்து கொண்டிருந்த இந்த பரிணாமத்தை அடையாளம் கண்டு கொண்டாலும் நான் மிரண்டு போகவில்லை. நான் சொல்ல நினைத்ததை அவனிடம் சொல்ல வேண்டியதுதான் அந்த நிமிடம் என் லட்சியமாக இருந்தது. அதான் மேலும் தொடர்ந்தேன். “ஏதாவது ஒரு பிரதேசத்தையோ, ஒரு பிரிவைச் சேர்ந்த மக்களையோ, வேறொரு பலமான நாடு அடக்கி வைத்திருந்தால், அண்டை நாடோ, இரக்கம் மிகுந்த மற்றொரு நாடோ அந்த மக்களுக்கு உதவி செய்வது நியாயம். பங்களாதேஷ் விஷயத்தில் இந்திய நாடு அதைத்தான் செய்தது. ஆனால் காஷ்மீரில் மக்கள் யாரும் கஷ்டங்களில் தவித்துப் போகவில்லையே? இந்திய மக்களை போல் அவர்களும் முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய தலையெழுத்து நமக்கு இல்லை!”

“ஆனால், காஷ்மீர் ஒரு முஸ்லிம் நாடு!” கத்தினான்.

நான் அதே அளவு ஆவேசத்துடன், “பாகிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட இந்திய நாட்டில் இருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்!” என்றேன்.

அவன் தன் குரலை மேலும் உயர்த்தி, “ஜிஹாத் என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? போராட்டம்!” என்றான்.

நானும் அதைவிட குரலை உயர்த்தி, “அதைப்பற்றி எனக்குத் தெரியும். அல்லா எப்போதும் அந்த போராட்டத்தை நீங்கள் சொல்லுகின்ற போராட்டத்தோடு ஒப்பீடு செய்யவில்லை. அந்த விஷயம் உங்களுக்கும் தெரியும். உங்களிடம்  இருக்கும் ஒரு பெரிய நல்ல குணம் என்னவென்று தெரியுமா? உங்களால் வாதம் புரிய முடியாத போது அதிகாரத்தை காட்டுவீங்க. அதை விட்டு விடுங்கள்” என்றேன்.

அவன் வாயடைத்துப் போனவனாக குழப்பத்துடன் என் பக்கம் பார்த்தான். எதுவும் பேச முடியாதவன் போல் மௌனமாக இருந்து விட்டான்.

நான் மேலும் தொடர்ந்தேன். “அன்று ஒருநாள் சொன்னேன், நினைவு இருக்கிறதா? கோதாவரி கரையையும் பார்த்திருக்கிறேன். இன்டஸ் நதியையும் பார்த்திருக்கிறேன். அதனால் உங்களை விட என்னால் கூடுதல் நம்பிக்கையுடன் சொல்ல முடியும். நம் நாட்டில் எழுபத்தி ஐந்து சதவீதம் மக்கள் கூலிகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். உண்பதற்கு சரியான உணவு இல்லை. கடன் என்ற புதைகுழியில் மூழ்கிக்கொண்டு இருக்கிறோம், அந்த கசப்பு உண்மையிலிருந்து மக்களை தொலைவாக வைப்பதற்கு நம் ராணுவம், நம் அரசாங்கம், மதத்தை, யுத்தத்தை இரையாக காட்டுகிறது. பன்னிரண்டு லட்சம் சிப்பாய்களை கொண்ட இந்திய ராணுவத்துடன், ஆறு லட்சம் பேர் கூட இல்லாத பாகிஸ்தான் ராணுவம் போராடி ஜெயிக்க முடியாது என்று உங்களுக்குக்கூட தெரியும். அதனால்தான் உங்களுக்கு இந்த திருப்தியின்மை. ஒரு முறை யோசித்துப் பாருங்கள்!”

என் கணவன் திகைத்துப் போனவனாக என் பக்கம் பார்த்தான்.

“ஒரு ராணுவ அதிகாரி உங்களை யுத்தத்திற்கு அனுப்பி வைத்தான். இன்னொரு பிரதமர் உங்களை யுத்தத்திலிருந்து பின்னுக்கு வரவழைத்தார். இதற்கு இடையில் நீங்கள் உங்கள் நண்பனை இழந்து விட்டீர்கள். போர்க்களத்தில் உங்கள் நண்பனின் பிணம் தங்களைச் சேர்ந்தது இல்லை என்று சொன்னதற்கு முஷாரப்பை நீங்கள் வசை பாடினீர்கள். அதே முஷாரப் திரும்பவும் இப்பொழுது பிரதமரை வீட்டில் சிறை வைக்கச் சொல்லி ஆணையிட்டால், அதனை மேற்கொண்டீர்கள். உங்களுக்கு ஆணையிடுவது யார்? நீங்கள் வேலை செய்வது யாருக்காக? இத்தனைக்கும் உங்கள் மேலதிகாரி யார்?” என்று கேட்டேன்.

அவன் ரொம்ப நேரம் மௌனமாக இருந்துவிட்டு, பிறகு என் அருகில் வந்து கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்துக்கொண்டே, “நீ சொல்வது நிஜம்தான் என்று தோன்றுகிறது” என்றான்.

அன்று இரவு அவன் என்னை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டான். அவனுள் எனக்கு புதிய ஆசிப் தென்பட்டான். இதயத்திலிருந்து பொங்கி வரும் திருப்திக்கு உடல்மீது தோன்றும் வியர்வைத்துளிகள் தான் எடுத்துக்காட்டு என்றால், அவன் தாக்குதலுக்கு என் மேனி வியர்வையில் தொப்பமாக நனைந்து விட்டது. அணைக்கட்டு உடைந்து போனதும் நதி நிமிடங்களில் எப்படி வெள்ளம்போல் பொங்கி பாயுமோ, அதுபோல் விருப்பம் கட்டுகளை உடைத்துக்கொண்டு பாயந்தது. என் கணவன் முழுமையான ஆண்மகன் ஆகிவிட்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து இருவரும் மல்லாந்த வாக்கில் படுத்திருந்தோம். தலைக்குக் கீழே கைகளை வைத்துக்கொண்டு அவன் திருப்தியுடன் கண்களை மூடியிருந்தான்.

மேற்கூரையை பார்த்துக்கொண்டே நான் சொன்னேன். “முதலிரவில் நீங்கள் என்னை ஒரு கேள்வி கேட்டீங்க. நினைவு இருக்கிறதா? சரஸம் என்றால் என்னவென்று. அதன் பிறகு நான் அகராதியைத் தேடினேன். ரஸம் என்றால் பாசம். சரஸம் என்றால் நெருக்கம். ஆனால் இது வெறும் சிருங்காரத்திற்கு சம்பந்தப்பட்டது மட்டும் இல்லை. மனிதனுக்கு சம்பந்தப்பட்டது. தன்னிடம் தனக்கு பிரியம் இல்லாதவன், தன்னுடைய எண்ணங்களைப் பற்றி தனக்கே நம்பிக்கை இல்லாதவன், தான் யாருக்காக வேலை செய்கிறானோ, அந்த நபர் மீது மதிப்பும், பிரியமும் இல்லாதவன் சரஸத்திற்கு லாயக்கற்றவன்! ‘எனக்கு இன்று மூட் இல்லை’ என்று சிலசமயம் நாம் நினைத்துக்கொண்டு இருப்போம். ஏதோ நிகழ்ச்சியின் காரணமாக நமக்கு அந்த நாள் மூட் இல்லாமல் போய் விடும். பரவாயில்லை… ஏன் என்றால் அது தற்காலிகமான அதிருப்தி! அதுவே வாழ்க்கையிடம் அதிருப்தி என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது என்ன ஆகும்? சாசுவதமாக மூட் இல்லாமல் போய் விடும். மனதளவில் பேடித்தன்மை வந்து விடும். எதிரி நாட்டு ராணுவ வீரனை கொல்வது, அந்த நாட்டு பிரதமருக்கு செக்யூரிட்டி தருவது… இவையெல்லாம் காரணம் இல்லாமல் ஏற்படும் அதிருப்தி. அதனால்தான் இந்திய பிரதமருக்கு செக்யூரிட்டி தரவேண்டி இருக்கிறது என்று தெரிந்ததும் நம் முதலிரவு சந்திப்பில் தோல்வி அடைந்தீங்க. தான் யாரென்று சுயபரிசோதனை செய்துகொள்ளாதவன், தன்னையே தான் விரும்பாதவன், மற்றவர்களை எப்படி சந்தோஷப் படுத்துவான்? அடுத்தவரிடம் எப்படி நெருக்கமாவான்? சரஸம் என்றால் வெறுமே நெருக்கமாவது மட்டுமே இல்லை. தன்னைத்தானே அறிந்துகொண்டு, அந்த திருப்தியை அடுத்தவருக்கு புரிவது போல் சொல்வது!”

மல்லாந்து படுத்திருந்தவன் மெதுவாக என் பக்கம் திரும்பி நீர் நிறைந்த விழிகளுடன் கொஞ்ச நேரம் என் முகத்தையே பார்த்து விட்டு, குனிந்து என் இதழ்கள் மீது முத்தம் பதித்தான்.

இனி வாழ்க்கையில் எப்போதும் அவன் முகம் சிவப்பு நிறத்திற்கு மாறாது என்று எனக்கு ஏனோ அளவு கடந்த நம்பிக்கை ஏற்பட்டது.

*****

Series Navigationரசவாதம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    இராய செல்லப்பா says:

    அட, எண்டமூரியால் கூட இந்த மாதிரி காதல்கதை எழுதமுடியுமா? சுவாரசியமாக இருக்கிறது. மொழிபெயர்ப்பாளரின் சரளமான நடை நம்மைக் கவர்ந்திழுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *