உமா மகேஸ்வரி கவிதைகள் — ஒரு பார்வை ‘ கற்பாவை ‘ தொகுப்பை முன் வைத்து …

This entry is part 10 of 13 in the series 22 ஜனவரி 2017

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

உமா மகேஸ்வரி கவிதைகளை மிகவும் நிதானமாகப் படிக்க வேண்டும். நெருக்கமான சொல்லாட்சி;
புதிய சிந்தனைகள் வழியாக நல்ல படிமங்களை அமைத்தல் ; சில இடங்களில் இருண்மையும் காணப்படுகிறது.சுயமான மொழிநடை சாத்தியமாகியுள்ளது. கவிதைகள் தலைப்புடன் உள்ளன. சில
தலைப்பற்றவை.
தலைப்பில்லாத முதல் கவிதை ‘ நினைவின் திரிகள் ‘ என்று தொடங்குகிறது. இக்கவிதை காதலின்
இனிமையைப் பேசுகிறது.
நினைவின் திரிகள்
தனிமையிற் சுடரேறும்.
மௌனத்திலிருந்து திரள்கிறது
உன் உரு
— தொடர்ந்து இரண்டு படிமங்கள் பளிச்சிடுகின்றன்.
பிரிந்தோமென்றில்லை
உன் குரலிழைகள் இசையாகும்
கூடிப் பெருகிய அமைதியில்.
இரவை நொறுக்கி ஒளியாய்
என்மீது விண்மீன்கள் பொழியும்
— இரவின் தனிமை அவன் நினைவால் மிகுந்த மகிழ்ச்சி தரும் என்பதைக் கடைசி இரண்டு வரிகள்
காட்டும் என்பதைப் படிமம் அழுத்தமாக , அழகாகச் சொல்கிறது. இவர் சுய சிந்தனையின் நீட்சி
கவித்துவத்தைத் தெளித்துத் தெளித்து இலக்கியப் பாதையைச் சமைக்கிறது.
கணவன் வீட்டைவிட்டுப் போய்விட்டால் அந்த வீட்டின் நிலை என்ன ? அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தின் அம்மாவைப் பற்றிப் பேசுகிறது ‘ முதுமையில் ‘ என்று தொடங்கும் கவிதை. கணவன் பிரிந்து
போனாலும் பேரக் குழந்தைகளின் பாசத்தில் திளைக்கிறாள் அம்மா.
முதுமையில் தளரும்
உடலில் குறுகிய அம்மா
மஞ்சள் பழுத்த கன்னங்களில்
நம்பிக்கையோ அவநம்பிக்கையோ
நிழலிட
குடும்பம் நீங்கியலையும் கணவனின்
காரணமற்ற ஆங்காரங்களை
மௌனமாகச் செரித்தவாறே
பேரக் குழந்தைகளை
அரவணைத்து உயிர்க்கிறாள்
—- பேரக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை அம்மாவுக்கு இருக்கிறது. என்ன செய்ய முடியும்?
காலகாலமாக விரியும் வானத்திலிருந்து
தான் கண்டடைந்ததைப்
பிள்ளைகள் குறுவிழிகளுக்குள்
நட்டுத் தழைக்கவிட முடியுமா
தன் நாள் வரு முன்னர்
என்ற கேள்வி குடையத்
திண்ணையில் சரிந்தவளின்
ஈரத் திட்டிட்ட புடவையில்
ஆரஞ்சு பிம்மத்தை
அசைத்த படியே
நிற்காமல் போகிறது
சித்திரைச் சூரியன்
—- சொற்கட்டு நன்கு அமைந்த சோகச் சித்திரமாய்க் கவிதை முடிகிறது. சூரியன் மறையும் காட்சியில்
அழகைப் பூசிவிடுகிறார் உமா மகேஸ்வரி !
மழை பொழியும்போது கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே இருக்கும் மழைக்காலம் நம் எல்லோருக்குமான அனுபவம். அந்த அனுபவம்தான் ‘ வெளியே பொழியும் மழை ‘ என்ற கவிதையாக
அமைந்துள்ளது. இதில் மழையோடு காதலைக் கலக்கிறார் கவிஞர்.
கேட்டுக் கிளர்ந்து
பார்த்துப் பருகி
பகிர்ந்தும் நுகர்ந்தும் உணர
ஊற்றி நிரம்பி
உடைந்து ததும்பி என்
உயிருள் ஓடும்
மழையும் உன் நினைவும்
மழைக்காலத்தில் வீட்டிற்குள் என்ன நிலைமை ?
சேற்றுத் தடங்களால்
வீட்டில் வருணஜயந்தி
உலராத துணிகளில்
ஈர வாசனை
— கிருஷ்ண ஜெயந்தி என்றால் மாக்கோலக் கால் தடங்கள். மழைக்காலம் என்பதால் சேற்றுக்கால்
தடங்கள்.
வீட்டின் கதவைத் திறந்து வெளியே மழை எப்படிப் பொழிகிறது என்பதைப் பார்க்கும் ஆவல் !
திறந்த கதவோடு காத்திருந்து
ஓயுமோ என்று தவிக்கும் என்னை
நீள் கரங்கள் செலுத்தி தன்னுள்
இழுத்தணைக்கும்
இன்னும் இந்த மழை
— என்று கவிதை இனிமையாக முடிகிறது, சிறப்பான ஒரு படிமத்துடன்…
‘ ஒற்றை வரி’ என்ற கவிதை மின்னலைப் பற்றிப் பேசுகிறது.
ஆயுதம் போன்றது
அதன் கூர்மை
தீபச்சுடர்கள் மிரள்கின்றன
பள பளப்பில் கொலை வெறி
சுடுகாற்றில் நின்றெரியும்
அதன் மூர்க்கங்கள்
இறுதி ஒளியை நீங்கி
இருள்கின்ற மொத்த உலகையும்
உடைத்து நொறுங்கிய
அதன் குரூரம்
கொட்டிக் கிடக்கிறது பாதாளத்தில்
இறுகிய இரவு தேய
முதல் கதிரை
வெட்டித்துத் துண்டித்து எறிந்து
விழுகிறது கீழே
அந்த ஒற்றை வரி
—- மின்னல் கோணல் வரிதான். கவிதையில் ‘ நொறுங்கிய ‘ என்ற சொல் ‘ நொறுக்கிய ‘ என்று இருக்க
வேண்டுமோ ? உமா மகேஸ்வரி சிறுகதைகளில் சொல்லாட்சி சற்றே மந்திர கதியில் தவழும் போக்கு
கொண்டது. கவிதையும் அதே போக்கில்தான் உள்ளது. ‘ இறுகிய இரவு ‘ என்பது புதிய சிந்தனை.
அதன் குரூரம்
கொட்டிக் கிடக்கிறது பாதாளத்தில்
— என்பது பதிய படிமம். ‘ தீபச் சுடர்கள் மிரள்கின்றன ‘ என்ற வரி நல்ல பதிவு. மாலதி மைத்ரியின்
‘ ஊஞ்சல் ‘ கவிதை போல் இதுவும் ஒரு சிறந்த கவிதை.
ரசிக்கத் தக்க பல நயங்கள் இவர் கவிதைகளில் உள்ளன.
உதாசீனமாய் உதறியாடுகின்றன
விதியின் பெரும் பாதங்கள்
— என்கிறார்.
நகரும் வாழ்வில்
மழையாகக் கடக்கின்றன
இனிய நிமிடங்கள்
ஓர் இடத்தில் ‘ எடை கூடிய இறந்த காலத்தை ‘ என்கிறார். குழந்தை ரசனை ஓரிடத்தில் அழகாகப்
பதிவாகியுள்ளது.
மிகவும் சுலபமாக
உருவாக்கிவிடுகிறாய் அதை
உன் குட்டி உதடுகளைக் குவித்து
பளபளக்கிறது அது
சிறிய உலகம் போல
இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மூலம் தன்னை ஒரு நல்ல அழகியல் கவிஞராகப் பதிவு செய்துள்ளார்
உமா மகேஸ்வரி . நல்ல கவிதைச் சக்தி கவிதைகளின் கட்டமைப்பிற்கு மிகவும் உதவியுள்ளது.
வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொகுப்பு. தமிழினி வெளியீடாக 2004 _ இல் வெளியாகியுள்ளது.

Series Navigation‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகையின் 200ஆவது இதழானது, 1000 பக்கங்களில் “நேர்காணல்” சிறப்பிதழாகஜல்லிக்கட்டு – ஒரு தொடக்கமா…………..?
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *