உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 13 in the series 13 மே 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால் உருது மொழியில் எழுதப்பட்ட ‘லிஹாப் (மெத்தை விரிப்பு)’ என்ற சிறுகதையை மையக்கருவாய் வைத்து, 1996-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தியப்படமே ஃபையர் (நெருப்பு) திரைப்படம் ஆகும். இந்தப்படம், கனடா மற்றும் இநதியக் கூட்டுத்தயாரிப்பில், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் வெளிவந்த ஒரு உலகப்புகழ் பெற்ற ஓரினத் திரைப்படம் ஆகும். இந்தியாவில், ஒரு ஓரினச்சேர்க்கை விரும்பியை கேலி செய்ய விரும்பினால், “அவன் ஒரு ஃபையர்” என்று கேலி செய்யும் வழக்கம் இன்றளவும் இருக்கிறது. அந்த ஃபையர் என்ற வார்த்தை, இந்தப் படத்தில் இருந்து வந்ததுதானோ என்று என்னுள் ஒரு ஐயம் உண்டு. வெளிநாட்டு ஓரினப்படங்களில் இல்லாத ஒரு முக்கியமான சிறப்பு இந்த இந்திய ஓரினப்படத்திற்கு இருக்கிறது. கிட்டத்தட்ட திரைப்படம் முழுக்க வரும் காட்சிகள் அனைத்தும், ஒரு நடுத்தர வர்க்கத்து வீட்டுக்குள்ளே, அதில் வாழும் இரு குடும்பப் பெண்களை மட்டுமே மையமாக வைத்து கதை சொல்லும் பாங்கினைத்தான் நான் இங்கே சிறப்பானது என்று சொல்கிறேன். இப்படத்தின் கதையை நகர்த்த இரண்டு ஆண்கள் இருந்தபோதும், கதையின் கதாநாயகனாய் உண்மையில் நடிப்பது, பிரான்ஸ் நாட்டின் பிரபல செவாலியர் விருது பெற்ற இந்திய நடிகை நந்திதா தாஸ் என்று சொன்னால் அது  மிகையாகாது. இந்தப் படத்தில், ஒரு பெண்ணின் ஆண் பரிமாணங்களை, நடிகை நந்திதாதாஸ் அழகு மிளிரக் காட்டியிருக்கிறார். படத்தின் கதாநாயகியாய் நடிகை சப்னா ஆஸ்மி வந்து நடிப்பில் அசத்தியிருக்கிறார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை சப்னா ஆஸ்மி, இந்தப்படத்தில், அடுக்களைக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே அல்லாடும் ஒரு குடும்பத் தலைவியாக வருகிறார். படத்தின் இயக்குனர் திருமதி தீபா மெஹ்தா கனடா நாட்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இந்தப் பெண் இயக்குனர் எடுத்த இன்னொரு படமான எர்த் (பூமி) என்ற அமீர்கானின் படம்,  உலகப்புகழ் பெற்ற அகாடெமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒரு படம் ஆகும்.

நெருப்பு என்ற இந்தப்படம் சொல்லும் முக்கியக்கருத்து ஒன்றுதான். “செக்ஸ் என்பது இந்த திசையில் தான் பயணிக்கவேண்டும் என்று சமூகம் எதிர்பார்ப்பது மடமை ஆகும். மாறாய், செக்ஸ் என்பது சம்பந்தப்பட்ட இருவரின் விருப்பத்தை சார்ந்து எந்த திசையில் வேண்டுமானாலும் பயணிக்கலாம். இது ஒரு தனிமனித உரிமை.” இந்தக் கருத்தை நிலைநிறுத்த படத்தின் இயக்குனர், நடிகை நந்திதாதாஸ் மற்றும் சப்னா ஆஸ்மியின் உதடுகளையும் அழகிய கண்களையும் படம் முழுக்க பயன்படுத்தி இருக்கிறார். படத்தின் ஆரம்பம் ஒரு கடுகு விளையும் வயலில் ஆரம்பிக்கிறது. ஒரு தாய் தனது மகளுக்குச் சொல்லும் கதைபோல் ஆரம்பிக்கும் படம் முதலில் மெதுவாய் நகர்கிறது. ஆனால், புதிதாய்க் கல்யாணம் ஆகி புக்ககம் வரும் நந்திதாதாஸ், தனது ஓரகத்தி சப்னா ஆஸ்மியால் கூட்டிச் செல்லப்பட்டு, தனித்து படுக்கையறையில் விடப்படும்போது, தான் கட்டி வந்த சேலையைக் கலைந்து தனது கணவரின் பேண்ட்டினை நந்திதாதாஸ் போட்டுக்கொள்ளும் போது படம் சற்றே உயரே போகிறது. கதை போகும் போக்கிற்கேற்ப நாமும் மெல்ல நிமிர்ந்து உட்காருகிறோம். சில காட்சிகள் நகர்ந்த பிறகு, இதுவரை எந்தப் படத்திலும் நாம் பார்த்திராத காட்சி ஒன்று வருகிறது. பட்டப்பகலில், வாய் பேச முடியாத, வாதம் வந்து படுத்த படுக்கையாய் இருக்கும் தனது வயதான எஜமானி முன்னால், எந்த விதக் கூச்சமும் இல்லாமல் அந்த வேலைக்காரன் கையடிக்கும் காட்சி… “பசியுள்ள மனிதன் எந்த வித சூழ்நிலையிலும் தனது பசி தீர்ப்பதற்காய் முயற்சி செய்வான்.. காலமும் சூழ்நிலையும் அவனுக்கு ஒரு பொருட்டு ஆகாது.. காமமும் அப்படிப்பட்ட ஒரு பசியே” என அந்த வேலைக்காரனின் சுய இன்பக் காட்சி மூலம் நமக்கு இயக்குனர் கதை சொல்கிறபோது, நம் படம் பார்க்கும் ஆவல் இன்னும் உச்சத்திற்குச் செல்கிறது. படத்தின் இசை திரு ஏ ஆர் ரஹ்மான். பாடல்கள் சில இருந்தாலும், படத்தின் பக்கபலம் ஏ ஆர் ரஹ்மானின் பின்னணி இசையே. புல்லாங்குழலுக்குள்ளும், சாரங்கிக்குள்ளும் புகுந்து கொள்ளும் ஏ ஆர் ரஹ்மான், படம் முழுக்க நிலவும் ஒரு மென்மையான சூழல் கெட்டுவிடாதவாறு, படத்தின் அந்த மென்மையை, தனது பங்குக்கு இன்னும் மெருகேற்றி இயக்குனரின் வெற்றிக்கு கைகொடுத்து இருக்கிறார். பெரும்பாலும் இருட்டுக்குள்ளேயே நகரும் கேமரா, ஒரு நடுத்தர வர்க்கத்தின் வீட்டை மட்டுமல்ல, அந்த வடஇந்திய, நடுத்தர வர்க்கத்து பழக்க வழக்கங்களை மட்டுமல்ல.. கூடவே அந்த இரண்டு ஓரினச்சேர்க்கை பெண்களின் அழகிய விழிகள் பேசுவதையும், உதடுகள் துடிப்பதையும் நமக்கு ஒரு துல்லிய ஒவியக்காட்சியாய் காட்டி அசத்துகிறது..

படத்தின் கதை கேட்க உங்களுக்கு இப்போது ஆவல் வந்து இருக்கலாம். அதற்கு முன்னர் படத்தின் கதைக்குக் கருவாய் இருந்த அந்த இஸ்லாமியப் பெண் என்னவெல்லாம் போராட்டங்களை சந்தித்தார், தியேட்டர்களில் இந்தப்படம் திரையிடப்பட்ட போது எப்படியெல்லாம் போராட்டங்கள் நடந்தது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். 1942-ஆம் ஆண்டு, உருது மொழியில் இந்தச் சிறுகதை வந்த போது, இஸ்லாமியர் இடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது இந்தியா பாகிஸ்தான் என்று பிரியாத நேரம். கதையின் ஆசிரியரான திருமதி இஸ்மத் சுக்தை மீது, லாகூர் கோர்ட்டில், வழக்கு ஒன்று, பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் மனம் தளராது நின்ற அந்த இஸ்லாமியப் பெண் ஆசிரியரின் தைரியத்தால், அந்த வழக்கு தோற்றுப்போனது. திரைப்படத்திற்கோ இன்னும் கூடுதலான சோதனைகள். திரைப்படம் திரையிடுவதற்கு, RSS மதவாதிகள் தங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். மும்பையின் ஒரு தியேட்டரில் இந்தப்படம் வெளியானபோது, சிவசேனை ஆட்களால் தியேட்டர் முற்றிலுமாய் நொறுக்கப்பட்டன. ஆயினும், போலிசாரால் வெறும் 25 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டனர். அப்போது மகராஷ்டிராவின் முதல் அமைச்சர் ஆக இருந்த பிஜேபியின் மனோகர் ஜோஷி, இந்தக் கலவரத்தை தற்காத்துப் பேசியது வேதனைக்குரியது. டெல்லியிலும் இதே நிலைதான். ஹிந்து மதத்தின் இன்னொரு பிரிவான பஜ்ரங்தள், டெல்லியில் படம் வெளியான ஒரு தியேட்டரைச் சூறையாடியது. படத்தின் மூலக்கதையின் கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லிம் பெண்களின் பெயர்கள். ஆனால் திரைப்படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களோ ராதா, சீதா என்ற ஹிந்து தெய்வங்களின் பெயர்கள். இதை எதிர்த்த ஹிந்து மதவாதி பால் தாக்கரே, “வேண்டுமென்றால் படம் இஸலாம் பெயர்களைக் கொண்டிருக்கட்டும்” என்று போராட்டத்தை இன்னும் தூண்டினார். இருப்பினும், பல்வேறு எதிர்ப்புகளையும் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம்தான் இந்த நெருப்பு என்ற ஓரினப்படம் என்பதை இங்கே பெருமையாக குறிப்பிடலாம்.

இனிப் படத்தின் கதைக்கு வருவோம். அசோக்கின் நடுத்தர வர்க்கக் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாய் வாழ்கிறாள் ராதா. மாரடைப்பால் வாதம் வந்து படுத்த படுக்கையாய் ஆகிவிடும் தனது மாமியாரைக் கவனிப்பதிலும் சரி..தன் கணவன் நடத்தும் உணவகத்திற்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதிலும் சரி.. ராதா சலிக்காமல் வேலை செய்கிறாள். ஆனால், அவள் வாழ்க்கைக்குள் ஒரு சோகம் வருகிறது. ஒரு பெண் கருவுறுவதற்கு தேவையான முட்டைகள் அவள் வயிற்றுக்குள் இல்லாமல் போக, அவள் குழந்தை பெரும் பாக்கியம் இல்லாமல் வாழ வேண்டியது ஆகி விடுகிறது. நொந்து போகும் அசோக் ஒரு சாமியாரை நாடுகிறான். “செக்ஸ் என்பது பிள்ளை பெறுவதற்கு மட்டுமாய் இருக்க வேண்டுமே தவிர, செக்ஸ் ஒரு சிற்றின்பமாய் இருக்கக்கூடாது” என அந்த சாமியார் போதிப்பதை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்ளும் அசோக், பிள்ளை பெரும் பாக்கியம் இல்லாத தனது மனைவி ராதாவுடன் செக்ஸ் செய்வதை முற்றிலும் நிறுத்தி விடுகிறான். அசோக்கின் மீது அன்பும் மரியாதையும் வைத்து இருக்கும் மனைவி ராதா, தனது ஆசைகளை அடக்கி வாழப் பழகிக்கொள்கிறாள். அசோக்கின் தம்பி ஜாடின். வீடியோ கடை வைத்து நடத்துபவன். ராதாவின் கொழுந்தனான அந்த ஜாடினுக்கு மணம் முடிக்க ஏற்பாடாகிறது. ஆனால் அவன் ஏற்கனவே இன்னொரு சீன யுவதியுடன் உறவு வைத்துக்கொண்டு இருப்பவன். தன மனதுக்குப் பிடிக்காமலே சீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். சீதாவோடு உடல் உறவு கொண்டாலும், பெரும்பாலும் அவன் இரவுகள் அந்த சீனப்பெண்ணோடு கழிகிறது. கொஞ்சம் கொஞ்சமாய், சீதாவோடு உடல் உறவு கொள்வதை நிறுத்தி சீனப்பெண்ணே கதி என்று வாழ முற்படுகிறான் ஜாடின். பார்த்து வெறுப்படையும் சீதாவிற்கு ஒரே ஆறுதலாய் இருப்பது அவளது ஓரகத்தி ராதாதான். ஒருமுறை, கட்டிலில் இரு மருமகள்களும் நெருக்கமாய்  இருக்கையில், காம நெருப்பு பற்றிக்கொள்கிறது. உதடுகளோடு உதடுகள் முத்தங்களை இரு பெண்களும் பரிமாறிக் கொள்கிறார்கள். அசோக்கின் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரன் முண்டுவிற்கு மனைவி கிடையாது. சதா வீட்டிற்குள்ளேயே கிடக்கும் முண்டுவின் ஒரே சந்தோசம், இளைய முதலாளி கடையில் இருந்து கிடைக்கும் செக்ஸ் வீடியோக்கள் ஆகும். வாதம் வந்த தனது கிழ எஜமானியைக் கவனிக்கும் சாக்கில், அந்த நீலப்படங்களைப் பார்த்து, அவள் முன்னாலேயே சுய இன்பம் செய்து கொள்கிறான் முண்டு. ஒரு நாள், ராதா மற்றும் சீதாவின் ஓரின உறவை கண்கூடாகப் பார்த்து விடுகிறான் முண்டு. அவன் தைரியம் கூடுகிறது. நீலப்படம் பார்ப்பதும், கைமுட்டி அடிப்பதும் தொடர்கிறது. அப்படி கைமுஷ்டம் செய்யும்போது, ஒருமுறை, ராதாவிடம் கையும் களவுமாய் மாட்டிக் கொள்கிறான் முண்டு. தன்னை அடித்து அதட்டும் எஜமானி ராதாவை, “உங்களுக்கும் சீதா அம்மாவுக்கும் உள்ள ஓரின உறவை முதலாளியிடம் சொல்லுவேன்” என முண்டு மிரட்ட, பிரச்சினை முற்றுகிறது. முண்டு பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கும் ராதாவின் மாமியார் கோபம் கொள்கிறாள். கடைசியில் விஷயம் அசோக்கிற்கு தெரியவர அவன் ஆத்திரம் கொள்கிறான். ராதா சீதா இருவரும் ஒன்றாய் வாழ முடிவெடுக்கிறார்கள். சீதா முதலில் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ராதா தனது மாமியாரைக் குளிப்பாட்டும் போது, அவள் ராதாவின் முகத்தில் காறி உமிழ்கிறாள். மனம் தளர்கிறாள் ராதா. தனது கணவன் அசோக் தன்னைக் கேவலப்படுத்திப் பேசும்போது எதிர்த்துப் பேசுகிறாள் ராதா. சண்டையின் உச்சக்கட்டமாய் ராதாவின் சேலையில் தீப்பிடிக்கிறது. அசோக் அதைக் கண்டு கொள்ளாமல் போக, ராதா மனம் உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறி சீதாவுடன் சேர்ந்து கொள்கிறாள். ஒரு கோவிலில் சந்தித்துக் கொள்ளும் இருவரும், ஒருவருக்கொருவர் முத்தமழை பொழிகிறார்கள். படம் முடிகிறது.

செக்ஸ் என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை. யாருடன் செக்ஸ் செய்ய வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட இருவர்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சமூகம் அல்ல என்று தந்தை பெரியார் சொன்னார். அந்தக் கருத்துக்கு அச்சாரம் சேர்ப்பது போல அமைந்ததே இந்தப்படம் என்றால் அது சாலப் பொருந்தும்

அழகர்சாமி சக்திவேல்.      .

Series Navigationஉள்ளொளி விளக்கு !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *