எங்கிருந்தோ வந்தான்

This entry is part 8 of 18 in the series 12 பெப்ருவரி 2017

எனக்கு யாரும் ‘அல்வா’ கொடுக்க முடியாது தெரியுமா? ஏனென்றால் நான் ஏற்கனவே இனிப்பானவன். சர்க்கரை நோயைத்தான் சொல்கிறேன். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. 40 வயது தாண்டிடவர்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயாம். சில பிறந்த குழந்தைகளுக்குக் கூட இருப்பது புதுத் தகவல். சரி. இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்ன சாப்பிட வேண்டும் என்பது ஒன்றாம் வகுப்புப் பிள்ளைக்குக் கூட அத்துபடி. அது போக எங்களுக்காகவே இருக்கும் ஊட்ராம் பார்க் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ‘உள்ளேனய்யா’ சொல்ல வேண்டும். அதற்கு அன்பளிப்பாக ஒரு பெரிய பை நிறைய மிட்டாய்கள், மன்னிக்கவும் மாத்திரைகள் தருவார்கள். ‘சரி. சாப்பிட்டால் குறைந்துவிடுமா?’ என்று கேட்காதீர்கள். சர்க்கரை ஏறாமல் இருந்தாலே நீங்கள் வெற்றியாளர்கள்தான். முற்றிலும் குணமாகிவிட்டால் சொல்லுங்கள். உலக ஆரோக்கிய சபையில் சிறப்பு விருது பெற நீங்கள் தகுதியானவராக ஆகிவிடுவீர்கள். ரத்தக் குழாயில் வாடகைக்கு வந்து தங்கும் சர்க்கரை கொஞ்ச நாளில் உரிமை கொண்டாடத் தொடங்கும். வீட்டுக்கார ரத்தம் சும்மா இருக்குமா? அது கோபத்தில் கொப்பளிக்கும். அதற்குப் பெயர்தான் ரத்தக் கொதிப்பு. ரத்தக்கொதிப்பு வந்துவிட்டால் அவ்வப்போது புவிஈர்ப்பு மையம் விலகி ஒரு பக்கமாக சாய்க்கும். சுதாரித்துக் கொள்ளுங்கள். பின்னாலிருந்து யாராவது கூப்பிட்டால் சடக்கென்று திரும்பாதீர்கள். உங்களோடு ஊரே சுற்றுவதுபோல் இருக்கும். எனக்கு அதுவும் இருக்கிறது. அதைச் சொல்லவும் நான் வெட்கப்படவில்லை. அறிகுறிகள் அவ்வப்போது தெரியும். சமாளித்துக் கொள்வேன். ஆனாலும் தினந்தோறும் காலையில் 3 கிலோமீட்டம் தூரம் நடப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உங்கள் கைப்பேசி இப்போது நடக்கும் தூரத்தையும், எடுத்து வைக்கும் அடிகளின் எண்ணிக்கையையும் கூடச் சொல்கிறது தெரியுமா?

காலை 8 மணிக்கு பஃபலோ ரோட்டிலிருந்து புறப்பட்டு ரேஸ் கோர்ஸ் சாலையை வெட்டி லிட்டில் இந்தியா எம்மார்ட்டிக்கு எதிரே இருக்கும் பேருந்து நிலையத்தில் தொலைபேசியை மேய்ந்து கொண்டே பேருந்துக்காகக் காத்திருக்கும் மக்களிடையே ஓர் ஒத்தையடிப்பாதையை உருவாக்கிக்கொண்டு கூட்டத்தை விலக்கி தொடர்கிறேன். 2006ல் இருந்த புக்கிட் தீமா ரோட்டை கற்பனை செய்கிறேன். அங்கு கம்பீரமாக நடந்த அந்த புக்கிட் தீமா ஆறு அம்பேலாகிவிட்டது. அந்த ஆறுக்கு மேல்தான் இப்போது இந்த வாகனங்கள் ஓடுகிறதாக்கும். என்னது? ஆறு சாலையாகிவிட்டதா? இது என்ன ஆச்சரியம். சிங்கப்பூர் கடல்களுக்கு மேலே கூட ரோடு போட்டுவிடுமய்யா. பக்கவாட்டில் இப்போது புதிய புதிய மரங்கள். தரையை உயர்த்தி அதில் புல் பத்தைகள் விரிப்பு. மரத்திற்கு அட்டிகை அணிவித்ததுபோல் பூக்கொத்தோடு செடிகள். கேகே மருத்துவமனை வரை நம் ஊர்ப்பிள்ளைகள்தான் வேலை செய்கிறார்கள்.

அப்படித்தான் ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். தூரத்து இடி முழக்கம் (விஜயகாந்தின் முதல் படம்) விஜயகாந்த் மாதிரி ஒரு பையன் என்னைப் பார்த்து புன்சிரித்தார். அவர் தினமும் என்னைப் பார்த்து நட்பாக சிரித்திருக்க வேண்டும். நான்தான் சொரணையற்று அவரைக் கடந்து போயிருக்கிறேன். எழுத்தாளனாகிவிட்டால் இது ஒரு பெரிய தொல்லை. வாழும் நொடியில் அவனால் வாழவே முடியாது. அன்று அந்தப் பையன் என் கவனத்தில் சிக்கிவிட்டான். அருகில் செல்கிறேன்.

‘என்ன தம்பீ. இன்னிக்கு என்ன வேலை?’

‘எல்லாச் செடிக்கும் ஒரம் வைக்கணு சார்.’

‘கருப்பா மண்ணு மாரி இருக்கே. அதான் ஒரமா?’

‘ஆமா சார்’

‘என் வீட்ல கருவேப்பல மொழங்கூட வளரலே. அதுக்குள்ள பூத்துருச்சி தம்பீ. எனக்குத் தெரியும் பூத்துட்டா கெள வெடிக்காது. இந்த ஒரத்த வச்சா வெடிக்குமா?’

‘இந்த ஒரமா? வச்சா வெந்து போயிடும் சார். இது தரயில வக்கிற மரத்துக்குத்தான் சரி. அப்புடியே நா குடுத்தாலும் எவனாவது போட்டுக் குடுத்துருவாங்கெ சார்.’

‘குடுத்துருவாங்கே. அட! மதுர. தம்பீ நீங்க மதுரயா?’

‘ஆமா சார். மதுரக்கு பக்கத்துல மேலூர்’

‘நா அறந்தாங்கி தம்பி. 40 வருஷத்துக்கு முன்னால மேலூர்ல எங்க பாத்தாலும் வாழத் தோட்டந்தா தம்பீ. அறந்தாங்கி சந்தைக்குத்தான் அந்த வாழ எல, வாழப்பூ, வாழக்கா எல்லாம் வந்து லோடு லோடா இறங்கும். மேலூர் யாவாரமே அறந்தாங்கிய நம்பித்தான் இருந்துச்சு தம்பி. போன மாசம் மதுரக்கிப் போனே. சாப்பாட்டுக்காக மேலூர்ல ஒதுங்கினோம். பிளாஸ்டிக் எலய விரிச்சான் தம்பி. பாத்த ஒடனே கண்ணுக்குட்டி செத்தே பொறந்தது மாரி துடிச்சிட்டே தம்பி’

‘எங்க ஊரப் பத்தி என்னவிட ஒங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சிருக்கு சார். ஒடம்பே ஆடுது சார்.’

அப்போது துளிர்த்த கண்ணீர் கண்ணுக்கு வெளியே ஆடி மின்னியது. அவர்தான் தொடர்ந்தார்.

‘எங்க பாட்டி சொல்லுவாங்க சார். புதுசா மொளச்சிருக்க கட்டடமெல்லால் ஒரு காலத்தில எங்க தாத்தாவோட வாழத்தோப்பு தானாம். தண்ணி நின்னு போச்சாம். எல்லாத்தயும் அள்ளு கொள்ளக்கி வித்துட்டு அந்த ஏக்கத்திலயே செத்துட்டாராம்’

‘அதெல்லாம் ஒரு காலம் தம்பீ. சரி. என் கருவப்பிலக்கு ஒரு வழி சொல்லுங்க?’

‘சார். தேங்கா நார எரிச்சு அதுல மண்ணு கலந்து கொண்டு வாரென் சார். வச்சாப் போதும் கெளக்கிக் கெள குப்புன்னு கெளம்பும் சார்.’

‘இப்பவே கெளம்பிட்ட மாரி இருக்கு தம்பி. கொண்டு வந்துட்டா எனக்கு அடிங்க தம்பி 90016400. காலைல 12 மணி வரக்கும் வீட்ல தான் தம்பி இருப்பேன். ப்ளாக் 661 பஃபலோ ரோடு. அந்த இந்தியன் பேங்கு மேல. 10வது மாடி. C லிஃப்ட்ல வாங்க. கதவு தொறந்தா நம்ம கருவப்பல தொட்டிய நீங்க பாக்கலாம்.’

‘சரிங்க சார்.’

ஒரு வாரம் ஓடியது. சொன்னதுபோலவே ஒரு புது நம்பர் ‘எடுடா ஃபோனெ’ என்றது. எடுத்தேன்.

‘சார் கீழ நிக்கிறேன்’

‘வாங்க. மேல வாங்க.’

வந்தார். அட! என்ன சார். நொச்சி, மின்னல, முருங்க, பெரண்ட, கருசலாங்கண்ணி, சோத்துக் கத்தாழ. அடேங்கப்பா! நீங்கல்லாம் தர வீட்ல இருக்கணும் சார். மண்ணு கும்புடு சார்.’

தொட்டியிலிருந்த மே மண்ண கொத்திவிட்டு வேரிலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு சிற்பம் வடிப்பதுபோல் பரப்பி மீத மண்ணை மற்ற செடிகளுக்கும் வைத்து இலைக்கு வலிக்காமல் நீர் தூவினார். ஒரு பத்து வெள்ளியை சட்டைப் பையில் திணிக்க முயன்றேன்.

‘இது என் ஊருக்குச் செய்யுற மரியாத. காசு வாங்கினா காசுக்கு செஞ்சது மாரி ஆயிரும். வேணாங்கிற அளவுக்கு நா வசதியானவனில்ல. ஆனா இப்ப வேணாம் சார்.’

உயிர்த்துடிப்பான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு லிஃப்டில் இறங்கி மறைந்துவிட்டார். சே! அந்தப் பையனின் பெயரைக்கூடக் கேட்கவில்லை. இருந்தாலும் அந்த எண்ணை ‘மேலூர்’ என்று பொத்திக்கொண்டேன்.

பத்து நாட்கள் கடந்துவிட்டன. இப்படித்தான்  ஒரு நாள் அதே மாதிரி ஒரு  ஒத்தையடிப்பாதையைக் கண்டு கைப்பேசியில் கரைந்தபடி நடக்கிறேன். கையிலிருந்த தொலைபேசி நழுவி விழுகிறது. சடக்கென்று குனிந்தேன். கால் பெரு விரல் ரத்தம் தலைக்கு ஏறுகிறது. புக்கிட்தீமா ரோடே புரள்வதுபோல் இருக்கிறது. அதற்கு மேல் என்ன நடந்தது என்று எனக்கெப்படித் தெரியும்?

அன்று மாலை 4 மணிக்குத்தான் கண் விழித்து வெளிச்சம் பார்க்கிறேன். ஏதோ ஒரு  மருத்துவமனை படுக்கையில். என்னைச் சுற்றி என் துணை வாழை வாழையடி வாழையான பிள்ளைகள். பழைய சினிமாக்களில் அடிக்கடி கேட்கும் வசனம். இப்போது கூட கேட்கப்படும் வசனம். அதே வசனத்தை நானும் பேசினேன். ‘இப்ப நா எங்க இருக்கேன்?’

என் மகன் சொன்னார்.

‘டான் டாக் செங் ஆஸ்பிடல் அத்தா. காலைல நீங்க வாக்கிங் போனபோது மயங்கி விழுந்திட்டீங்க.அங்க வேல செஞ்ச பையன் யாரோ ஆம்புலன்சுக்கு சொல்லிட்டு நம்ம வீட்டுக்கு ஓடி வந்தாரு. சேதியக் கேட்டதும் எல்லாரும் ஓடினோம். அதுக்குள்ள ஆம்புலன்ஸ் டான் டாக் செங் ஆஸ்பிடலுக்கு பறந்திருச்சு. இங்க வந்தோம். கா ..கா..காலைலேருந்து இங்கதான் இருக்….. ‘ பேச்சை முடிக்காமல் தொண்டை அடைக்க மௌனமாகிவிட்டார்.

‘அந்தப் பையன் வெளில நிக்கிறாரான்னு பாருங்க தம்பீ. ஒடனே பாருங்க தம்பீ.’ நா எழுந்திருக்க முயன்றேன். எல்லாரும் சேர்ந்து பலமற்ற என்னை எளிதாகச் சாய்த்துவிட்டனர்.

‘யாரையும் காணாம் அத்தா’

‘நிச்சயம் அந்த மேலூர் பையனாகத்தான் இருக்கும். என் தொலைபேசி எங்கே? தம்பீ. என் தொலைபேசி எங்கே?’

‘என்ன பேசுறதுன்னாலும் பிறகு பேசிக்கலாம்தா. டாக்டர் அமைதியா தூங்கச் சொன்னாருத்தா. அந்தப் பையன் இங்கதான் இருப்பாரு. மெதுவா பேசிக்கலாமே’

நாலைந்து நாட்கள் உப்பில்லாக் கஞ்சியைக் குடித்துவிட்டு அங்கிருந்து ஒரு பை நிறைய வித்தியாசமான மிட்டாய்களை மன்னிக்கவும் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். மிகக் கவனமாக நடந்தேன். தூங்கினேன். சாப்பிட்டேன். ஏதோ உடம்பு பழைய நிலைக்கு வந்துவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. தெம்பும் வந்துவிட்டது. சரி. மெதுவாக நடக்கலாமே. அடுத்த நாள் 8 மணிக்கு வெளியே கிளம்பினேன்.  அந்த கருவேப்பிலை செடி. அடடா! அந்தப் பையன் சொன்னதுபோல் இணுக்குக்கு இணுக்கு கிளைத்து என்னைப் பார்த்து சிரித்தது. மெதுவாக வருடினேன். அந்த மேலூர் பையனோடு கை குலுக்குவது போல் இருந்தது. அந்தப் பையனோடு எப்படியாவது பேச வேண்டும். ஆயிரமாவது முறை அழைக்கிறேன். அந்தத் தொலைபேசி கூவிக்கொண்டுதான் இருக்கிறது. டெலிபோனுக்கு காசு கட்டவில்லையோ? அவ்வளவு ஏழ்மையா? இருக்காது. அப்படி இருந்தால் அப்போது கொடுத்த பத்து வெள்ளியை வாங்காமல் அந்த பதில் சொல்லி இருக்க முடியாது. ஏதேதோ கேள்விகள். எனக்குள்ளேயே கேட்டு என்ன பயன். இதோ வழக்கம்போல் அந்தப் பேருந்து நிலையக் கூட்டத்தைக் கடக்கிறேன். நம்ம ஊர்ப் பிள்ளைகள்தான்.  வழக்கம்போல் அதே வேலை. நான் கடக்கும்போது வணக்கம் சொன்னார்கள். பதில் வணக்கம் சொல்லிக் கொண்டே அந்தப் பையனைத் தேடுகிறேன்.

‘எங்க தம்பீ. அந்த மேலூர் பையன்?’

‘ஓ ராஜாவா சார். அவனுக்கு பர்மிட் முடிஞ்சு அன்னிக்கே ஊருக்குப் போயிட்டா சார். அன்னிக்கு ஆம்புலன்ஸ அவந்தா சார் கூப்பிட்டான். ஒங்க வீட்டுக்கு ஓடி வந்து சேதிய சொன்னா. அன்னிக்கு சாய்ந்தரமே ஊருக்குப் போயிட்டா சார். வேற கம்பெனில விசா எடுத்துக்கிட்டு சீக்கிரம் வர்றதா சொன்னா சார். ஒங்களப் பாத்தா ஒடம்பப் பாத்துக்கிறச்  சொன்னா சார்.’

அந்தப் பையனின் கையைப் பற்றிய போது உதடுகள் துடித்தன. முட்டிக் கொண்டு கண்ணீர் வந்தது.

‘தம்பீ. நிச்சயம் வந்துருவார்ல?’

‘என்ன சார் ஒங்க வயசென்ன? அவ வயசென்ன? அவனெப்போயி அவரு இவருன்னு. நிச்சயம் வந்துருவா சார்.’

அங்கிருந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். அந்தச் செய்தியே என்னை கீழே தள்ளிவிடுமோ என்று பயந்தேன். வாழ்க்கையில் நம்ம கைகள் மாதிரி கால்கள் மாதிரி நம்மலோட இருந்தவங்கல்லாங்கூட காணாம போயிர்றாங்க. எங்கிருந்தோ வந்து எந்தத் தேவையுமில்லாமல் இப்படி உயிரையே காப்பாற்றி விட்டும் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி என் உயிர் காப்பாற்றப்பட்டது இது மூன்றாவது தடவை. மற்ற இரண்டு தடவை எப்போது என்று கேட்டுவிடாதீர்கள். அது பெரிய கதை. அப்போது என்னைக் காப்பாற்றிய அந்த இருவரையும் இன்றுவரை தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது நான் மூன்று பேர்களைத் தேட வேண்டும். கிடைப்பார்களா? இவர்கள் எதற்காக என் வட்டத்திற்குள் வந்தார்கள்? என் வட்டத்திற்குள் வருவதற்காகவே படைக்கப் பட்டார்களா? எனக்கு இப்படி யெல்லாம் ஆபத்து வரும் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டதா? என்னைக் காப்பாற்ற வேண்டிய கடமை அவர்களுக்குத் தரப்பட்டதா? அப்படி யெல்லாம் காப்பாற்ற வேண்டிய அளவுக்கு என் சேவை எதுவும் இந்த பூமிக்குத் தேவைப்படுகிறதா? அது என்ன சேவை? அதை நான் செய்வேனா? அல்லது அவர்கள் காப்பாற்றியது அனாவசியமா? மண்டையே உடைகிறது. அதற்கு விடை எனக்கு நிச்சயமாகக் கிடைக்காது. ஆனால் இப்போது என் தேடல் ஒன்றுதான். எங்கிருந்தோ வந்தானே. என் கருவேப்பிலைச் செடிக்கும் எனக்கும் உயிர் தந்தானே. அவனைத் தேட வேண்டும்

யூசுப் ராவுத்தர் ரஜித்  

 

Series Navigationமாமா வருவாரா?LunchBox – விமர்சனம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *