எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

author
14
0 minutes, 6 seconds Read
This entry is part 21 of 29 in the series 19 ஜூலை 2015

முனைவர் பி.ஆர். இலட்சுமி

 

தமிழ்மொழி காலத்தால் மிகவும் பழமையானது. ஆனால், சமீப காலமாகத் தமிழ் கற்க மாணவர்கள் உலகளாவிய அளவில் குறைந்து வருகின்றனர். தமிழ்பேசும் குடும்பத்தினர் தொழில் காரணமாகவோ,அல்லது வேறு காரணங்களினாலோ புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழ்வதால் அச்சமூகநிலையை ஒட்டி வாழவேண்டிய கட்டாயத்திலும், தொழில் அடிப்படையிலும் வாழ வேண்டியிருப்பதால் தமிழ்மொழி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. பண்பாட்டுச் சீரழிவு குடும்பத்திலும், சமுதாயத்திலும் பிரதிபலித்துக்கொண்டிருப்பது உலகளாவிய அளவில் சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.

வாழ்க்கையின் தேவையே பணமாகிவிட்ட நிலையில் சுயநலம், மனிதநேயமின்மை,பொறாமை,தீவிரவாதம் போன்றவை நச்சுவேர்களாகப் புரையோடிக் கிடக்கின்றன. இந்நச்சுவேர்கள் பாடம் இயற்றும் வல்லுநர் குழு முதல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வரை

பரவிக் கிடக்கின்றன. கற்றுக் கொடுக்கும் நிலையில் இந்நிலை காணப்பட்டால் சமுதாயம் எவ்வாறு திருந்தும்?

அன்பே உருவான புத்தரும், பிறர் வாழத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசாவும் மக்களுக்கு மறந்து வெகுநாட்களாகிவிட்டன.

நாட்டைத் திருத்திய உத்தமர் வரலாறும், உபதேசித்த கருத்துகளும் ஆண்டிற்கு ஒருமுறை சுயமுன்னேற்றத்திற்காகத்தான் திருப்பிப் பார்க்கப்படுகின்றன.

இதற்காகத் தமிழ்மொழி பயின்றவர்கள் செய்ய வேண்டிய தொண்டுகள் பல உள்ளன. தமிழ் அறியாதவர்களுக்குத் தமிழினைக் கற்றுத் தர முன்வரவேண்டும்.தமிழ்மொழியின் பெருமையினைப் புத்தகமாக எழுதவேண்டும். தமிழ்ப்பேராசிரியர்களும், தமிழ் ஆசிரியர்களும் மொழியின் பெருமையை மாணவர்கள் விளங்கும்வண்ணம் வெளிப்படுத்திக் கற்பித்தல்திறனை வெளிப்படுத்தவேண்டும். ஒரு மொழி தேய்வடைகிறது என்றால் முதற்காரணம் அம்மொழிக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்புத்தன்மை வெளிப்படுத்தப்படாதிருப்பதாகும்.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அவற்றில் உள்ள சிறப்பான கருத்துகள் யாவும் பாமர மக்களிடம் சென்று சேராதிருத்தலாகும்.

உயரிய நடையில் எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகளும், ஆராய்ச்சி ஏடுகளும் பாமர மக்களால் வாசிக்கப்பெறுவதில்லை. இன்றைய மனித சமுதாயம் படிக்கும் அளவிற்கு நூல்கள் தரம் வாய்ந்தவையாக அமைக்கப்பெறுதல்வேண்டும்.

நூல் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கும் இதுவும் ஒரு காரணமாகிறது.

ஊடகங்களின் தாக்கம் சராசரி மக்களைச் சென்றடையும்போது நூல்களினால் சாதிக்க ஏன் இயலவில்லை என்பதை எழுதும் நூலாசிரியர்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

சமுதாயத்திற்கும், அரசியல் மாற்றங்களுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்ட பாடத்திட்டங்களும் இதற்கு முக்கியக் காரணங்களாக  அமைகின்றன.

பாடங்கள் படிப்பது மாணவர்களை நன்னடத்தைக்கு உட்படுத்துவதற்கும், மொழியில் உள்ள பிற நற்கருத்துகளை அறிந்து நாட்டிற்கும், உலகிற்கும் நன்மை அளிக்கத்தான் இருக்கவேண்டும். சமீப காலமாக நடைபெற்றுவரும் தீய நிகழ்வுகள் வருந்தற்குரியது.

தமிழ்மொழி

  • பண்பாடு
  • வரலாறு
  • அறிவியல்
  • உடல்நலம்
  • இயற்கை
  • நுண்கலைகள்

போன்ற அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது. பிற மொழிகளில் இல்லாத பல சிறப்புகள் தமிழ்மொழியில் மிகுந்து காணப்படுகிறது.

காணாமற்போனதாகக் குறிக்கப்பெறும் குமரிக்கண்டம் குறித்து இன்னமும் ஆய்வுகள் நடத்தப்பெறவேண்டும்.

ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சு சர்ச் க்வார்டு 1931 இல் எழுதிய காணாமற்போன மூ எனும் கண்டம் என்ற நூலில் இலெமூரியாக் கண்டம் தொடங்கிப் பிஜித்தீவு வரைக்கும்,ஈஸ்டர் தீவுகளில் தொடங்கி மரியானாவரை பரவியிருந்ததாகக் குறிப்பிடுகிறார். தொடர்ச்சியான கடற்கோளின்விளைவாக மனிதன் தென்னமெரிக்கா வழியாக அட்லாண்டிக் கண்டத்தின் கடலோரம் வழியாக ஆப்பிரிக்காவரை பரவியதாக ஆய்வுச் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆப்ரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும், சாவாத்தீவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளும்,தமிழ்நாட்டில் கிடைத்த எலும்புக்கூடுகளும் மிகவும் பழமைவாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.தொடர்ச்சியாகத் தாய்லாந்தில் காணப்படும் பெரிய கல்தூண்களும்,ஈஸ்டர் தீவுகளில் காணப்படும் கல்தூண்களும் குமரிக்கண்டத்தைச் சார்ந்தவையாக இருந்திருக்கலாம்.மரபு சார்ந்த சோதனைகளின்வழி பெறப்பட்ட தகவல்கள் தமிழ்மொழிபேசும் மனிதனின் பழமையை உறுதிப்படுத்தியுள்ளது. இன்னமும் இது குறித்த ஆய்வுகள் நடந்தேறி வருகின்றன.

தமிழ்ப்பழமை வரலாறு காட்டும் ஆண்டுக்கணக்கு அட்டவணை(ஆய்வு அடிப்படை)

கி.மு9990 முதல்ஊழி
கி.மு1850 மூன்றாவது ஊழி
கி.மு6087 குமரிக்கண்டம் மூழ்குதல்
கி.மு6000-3000 இரண்டாம் தமிழ்ச்சங்கம் தொடங்குதல்(கிருஷ்ணர் கலந்து கொள்ளவில்லை)
கி.மு5000 சிந்துசமவெளி தொடக்கம்
கி.மு 4500 இராமாயண காலம்(வேதங்கள்-ரிக்,யசூர்,சாமம்)
கி.மு 4000 நாட்குறிப்பு ஆரம்பம்-உலகம்
கி.மு 3200 சிந்துசமவெளியினர்-27 விண்மீன்கள் இடத்தொடர்பு
கி.மு 3113 அமெரிக்கத் தமிழினத்தவராகிய மயன் கணக்கு தொடக்கம்
கி.மு 3100-3000 ஆரியர் வருகை
கி.மு 2600 எகிப்தியப் பிரமிடு-ஆரம்பம்
கி.மு2387 இரண்டாம்முறை கடல் கொந்தளிப்பு
கி.மு 2381 கபாடபுரம் அழிவு-ஈழம்-பிரிதல்
கி.மு 2000 ஆரியர்-வடபுலத்தமிழ்மன்னர்கள்,சிந்துவெளித்தமிழர்-போர்
கி.மு 1915 திருப்பரங்குன்றம்-3ஆவது தமிழ்ச்சங்கம்
கி.மு 1900 வேதகாலமுடிவு(சரஸ்வதிஆறு வற்றியது)
கி.மு 1500 துவாரகை மூழ்குதல்
கி.மு1500-300 ஆண்டுகளுக்குப் பின் ரிக் வேதம் பாடப்படுதல்

தமிழ் மன்னன் பற்றிய குறிப்பு-இருத்தல்

கி.மு 1316 மகாபாரதக்கதை அமைக்கப்படுதல்
கி.மு 623 புத்தர்காலம்
கி.மு 302 அர்ததசாஸ்திரக்காலம்
கி.மு 302 மெகஸ்தனீஸ்

இன்னமும் கண்டறியப்படாத சிந்துசமவெளிக்குறியீடுகள் குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டுக்கூறுகளாக இருக்கலாம்.உடலை மூடும் ஆடையின் பயன்பாட்டினையும், இரும்பின்பயன்பாட்டினையும், மரக்கலங்களை உருவாக்கத் தெரிந்த பழமையான குமரிக்கண்டமக்கள் குறித்த  ஆய்வுகள் வெளிவர வருங்காலச் சமுதாயத்தினருக்குத் தகுந்த தரவுகள் அளிக்கப்படவேண்டும்.

பத்துவயதுள்ள மாணவனால் திக்கித் திணறி ஒரு பாடலைப் படிக்கின்றநிலை  இருந்தால் உலகெங்கிலும் விரவிக்கிடக்கும் தமிழ் தொடர்பான ஆவணங்களை வருங்காலச் சமுதாயத்தினரால் வெளிக்கொணர இயலுமா? இந்நிலை மாற

 

அடிப்படைக்கல்வி முழுமையாகப் படைப்பாற்றலுடன் அளிக்கப்பட்டால் தமிழ்மொழியின் பெருமை தழைத்தோங்கும்.

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்-என்பது வருங்காலச் சந்ததியினருக்கு என்ன பொருள் என்பதே புரிபடாமல் போகும் நிலை உருவாகாமல் இருக்கத் தமிழ்மொழி வளர உலகெங்கிலும் மாற்றங்கள் நிகழ வேண்டும். ஒவ்வொரு தமிழ் கற்ற மனிதனும் நம் தாய்மொழிக்கு இன்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதளவில் உணர்ந்து வாழ்தலே சிறந்தது. தன்னாலான சிறு தமிழ்ப்பணிகளைச் செய்து வாழ்ந்தாலே தமிழ்மொழி உலகளவில் தழைத்து வளரும். முனைவர் பி.ஆர் இலட்சுமி.,

பி.லிட்.,எம்.ஏ(தமிழ்,மொழியியல்,ஜெஎம்சி).,எம்ஃபில்.,டிசிஎஃப்இ(டிப்.ஆங்கிலம்).,புலவர்.,பிஎச்.டி.,(பிஜிடிசிஏ).,

தமிழ்த்துறை வல்லுநர்

சென்னை.

 

 

 

 

Series Navigationசொல்லின் ஆட்சிதறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
author

Similar Posts

14 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    முனைவர் பி.ஆர். இலட்சுமி அவர்களின் ” எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை? ” எனும் இக்கட்டுரை இக்காலத்துக்கு மிகவும் உகந்தது. உலகளாவிய நிலையில் நாம் வளர்ந்துவரும் இக் காலகட்டத்தில் தமிழ் மொழியை நாம் நம்மையறியாமலேயே மறந்தது வருகிறோம். நம் வீடுகளில் தமிழ் பேசாத பிள்ளைகள் பெருகிவருகிறார்கள். தமிழில் பத்திரிகை அல்லது நூல்கள் வாங்கிப் படிக்கும் பழக்கம் இல்லாமல் போகிறது. படிக்கும் பழக்கம் படிப்படியாகக் குறைந்துவருகிறது.
    தமிழைப் பேணிக் காப்பது முதலில் நம் இல்லங்களில் துவங்கவேண்டும். இப்போதெல்லாம் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசுவது பெருமையாகக் கருதப்படுகிறது. சில வீடுகளில் வளர்ப்பு செல்ல நாய்களிடம்கூட ஆங்கிலத்தில்தான் பேசவேண்டியுள்ளது! தமிழில் பேசினால் நாய்களுக்குக்கூட புரியாமல் போகிறது. நம்முடைய ஆங்கில மோகம் அப்படி!
    முனைவர் பி . ஆர். இலட்சுமி அவர்கள் சில நல்ல செயல்திட்டங்களைக் கூறியுள்ளார். பள்ளிப் பருவத்திலிருந்தே நம்முடைய மாணவர்களிடத்தில் தமிழ் உணர்வை ஊட்டவேண்டும். தமிழின் சிறப்புகளைக் கூறும் பாடங்களும், பாடல்களும், தமிழின் தொன்மையான வரலாறும் பயிற்றுவிக்கப்படவேண்டும். பள்ளி ஆசிரியர்களுக்கும் கல்லூரி விரிவுரையாளருக்கும். பேராசிரியர்களுக்கும் தமிழ் உணர்வு வளரவேண்டும்.
    கல்லூரி மாணவர்களுக்கும், படித்து பட்டம் பெற்று வெளியேறும் பட்டதாரிகளுக்கும் தமிழ் உணர்வு நீடிக்கவேண்டும். அவர்கள ஆங்கிலம் கற்றிருந்தாலும் தமிழ் பேசுவோரிடம் அவர்கள் தமிழில் உரையாடுவதை தரக்குறைவாகக் கருதக்கூடாது.
    இந்த பொருள் பற்றி இன்னும் நிறைய கூற ஆசை. நேரம் கிட்டும்போது தொடர்வேன்.
    சிந்தனையைத் தூண்டச் செய்துவிட்ட முனைவர் பி .ஆர். இலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  2. Avatar
    ஒரு அரிசோனன் says:

    தமிழ்ப் பற்று தமிழரிடத்தில் தோற்றுவிக்கப்படவேண்டும்.

    தமிழ் பயிற்றுவிக்காமல் எந்த கல்வி நிறுவனமும் தமிழகத்தில் இயங்கக்கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.

    தமிழை எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் ஒரு கட்டாயப் பாடமாக்கவேண்டும்.

    தமிழில் பயின்றவருக்கே அரசு வேலை என்று உறுதி செய்யவேண்டும்.

    தமிழரைப் பிரித்தாளும் அரசியலை ஒழித்து, தமிழரை இணைக்கும் வழியில் செயல்படவேண்டும்.

  3. Avatar
    paandiyan says:

    //தமிழ்ப்பழமை வரலாறு காட்டும் ஆண்டுக்கணக்கு அட்டவணை(ஆய்வு அடிப்படை)//

    இந்த அட்டவணை க்கு எல்லாம் குறைந்த பட்ச ஆதாரம் காட்ட முடியுமா ? எங்கு இருந்து இந்த தகவல் சேகரிக்கப்பட்டது . என்ன ஆதாரம் சரிபார்கபட்டது ?

  4. Avatar
    Lakshmi says:

    தமிழ் இலக்கியங்களும்,ஆய்வேடுகளும்,இது குறித்து முன்னர் வந்த நூல்களில் எடுத்த பயனுள்ள செய்திகளும் இதற்கு ஆதாரங்கள்.

  5. Avatar
    paandiyan says:

    /தமிழ் இலக்கியங்களும்,ஆய்வேடுகளும்,இது குறித்து முன்னர் வந்த நூல்களில் எடுத்த பயனுள்ள செய்திகளும் இதற்கு ஆதாரங்கள்.//

    இதுவா ஆதாரம் . பேஷ் . உங்களளால் அந்த ஆதாரம் எதன் அடிபடையில் authendicate பண்ணப்பட்டது என்று சொல்ல முடியுமா ?

  6. Avatar
    ஷாலி says:

    கட்டுரையாசிரியை முனைவர் அவர்களின் பெயருக்குபின் ஏராளாமான தகுதி பட்டங்கள் இருந்தாலும் கட்டுரையின் வீச்சு அந்தளவு இல்லை.ஏதோ ஒப்புக்கு அம்மி கொத்தினது போல் உள்ளது.நண்பர் பாண்டியன் அவர்கள் கேட்ட ஆதார தரவுகளுக்கும் அவர் அளித்த பதில்….””எல்லா எடத்திலும் கூட்டம் போட்டு பேசனாங்கள்ள…..அதேன்.’”இப்பிடி உள்ளது.

    தரவு கொடுப்பதில் பேராசிரியர்.அறிவியற் கவிஞர்.ஜெயபாரதன் அவர்களை பின்பற்ற வேண்டும்.

    எப்படியோ இன்றைய தமிழ் மொழி நிலை குறித்து சங்கு ஊதியது மகிழ்ச்சி….

  7. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இது முடிவிலா விவாதத்துக்குரிய விஷயம். (கட்டுரைத்தலைப்பிலேயே எனக்கு ஒரு ஐயம். ‘எங்கே செல்கிறது தமிழின் நிலை’ என்பது சரியான வாக்கியமா ? ’எங்கே செல்கிறது தமிழ்’ அல்லது ’எப்படி இருக்கிறது தமிழின் நிலை’ என்பதுதானே சரியாக இருக்க இயலும் ?)

    கற்போர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் கற்பதற்கு ஆர்வம் அருகிப்போவதும் மிக மிக கவலைக்குரிய விஷயமே. இந்நிலை தமிழ் போன்ற வளமான செம்மொழிக்கு ஒரு சாபக்கேடு.

    இன்றைய சூழலில் யதார்த்த தளத்தில் ‘தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் ?’, ‘தமிழை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் ?’ போன்ற கேள்விகளை நம்மால் நேர்மையாக எதிர்கொள்ளவே இயலாது. தமிழாசிரியப்பணி தவிர வேறு என்ன வேலை கிடைக்கும் ?

    தமிழ் முதலில் காலத்தோடு ஒட்டி வளரவேண்டும். உங்களது கட்டுரை வாக்கியங்களையே உதாரணமாகக் கொள்வோமே :

    // ”ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் சேம்சு சர்ச் க்வார்டு”, ”சாவாத்தீவில்”, //

    இவற்றை முறையே “ஆங்கில அமெரிக்க ஆய்வாளர் ஜேம்ஸ் சர்ச்வார்ட்”, “ஜாவாத்தீவில்” என்று எழுதுவதில் என்ன அவஸ்தை ? ஏன் இப்படி படுத்தவேண்டும் ? (ஜே.ஜே.சில குறிப்புகள் நாவலில் ’ஜே.ஜே’ என்பதை ‘சே.சே’ என்றுதான் தனது பத்திரிகையில் அச்சடிப்பேன் என்று அடம்பிடிக்கும் நாயகனின் நண்பன் பாத்திரம்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது) அது யார் “சேம்சு சர்ச் க்வார்ட்” என்று கூகுளில் தேட முனைந்தால் எது சரியான பெயர் என்பதில் குழம்பி கடைசியில் கூகுளே ’இதுவா அதுவா’ என்று வேறு வேறு பெயர்களை கேட்டு உதவவே, பெயரை கண்டுபிடிக்க இயன்றது.

    அப்படியே நீங்கள் தனித்தமிழ்வாதியாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் எல்லா வடமொழி எழுத்துகளுக்கும் இணையான தமிழ் எழுத்துக்களை பயன்படுத்தியிருக்கவேண்டும். “ஜாவா”த்தீவு “சாவா”த்தீவாக மாறுகையில் “பிஜி”, மட்டும் “பிசி”யாகாமல் நிற்கிறது. ”ஜேம்ஸ்” “சேம்சு” ஆகும்போது, ஈஸ்டர்-ம், மெகஸ்தனிஸ்-ம் முறையே “ஈசுடர்”, “மெகசுதனிசு” ஆகாமல் அப்படியே உள்ளன.

    முதலில் இப்படி பெயர்ச்சொற்களை பெயர்க்காமல் அப்படியே பயன்படுத்துங்கள், அல்லது குறைந்தபட்சம் அடைப்புக்குறிகளுக்குள் சம்பந்தப்பட்ட ஆய்வாளரின் பெயரை ஆங்கிலத்திலாவது கொடுங்கள், மேல் விபரம் தேடித்தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

    நீங்கள் குறிப்பிடும் இந்த ஆய்வாளரது நூல் தொல்லியல் மற்றும் மண்ணியல் ரீதியாக நிறைய பிழைகள் கொண்டது என்றும் அவருடையது போலி விஞ்ஞானம் (pseudoscience) என்று துறை வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர். (ஆதாரம் : விக்கிபீடியா)

    முதலில் நம்மால் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கட்டாயம் தமிழ் கற்பிக்கவேண்டும் என்றுகூட சட்டமியற்ற இயலவில்லை. இயற்றினால் நீதிமன்றம் போக தயாராக இருக்கிறார்கள் “கல்வி” முன்னொட்டோடு திகழும் தந்தை, சித்தப்பா, ஒன்றுவிட்ட பெரியப்பா, தாத்தா, கொழுந்தன், சகலை, மாமன், மச்சான்கள் எல்லோரும். தனது குடிமக்களுக்கு தரமான கல்வி தரவேண்டிய கடமையிலிருந்து வேகமாக வழுவி தனியாருக்கு அதை தாரை வார்த்துவிட்டு அவர்களை கொழுக்கவைத்து அதன்மூலம் தானும் கொழுக்க தனது கல்வித்துறையையே நாசப்படுத்தும் நாதாறித்தனத்தில் அரசே இறங்கினதன் விளைவு இது.

  8. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // உயரிய நடையில் எழுதப்படும் ஆய்வுக்கட்டுரைகளும், ஆராய்ச்சி ஏடுகளும் பாமர மக்களால் வாசிக்கப்பெறுவதில்லை. இன்றைய மனித சமுதாயம் படிக்கும் அளவிற்கு நூல்கள் தரம் வாய்ந்தவையாக அமைக்கப்பெறுதல்வேண்டும். //

    எந்தத்துறையின் ஆய்வுக்கட்டுரைகளும் ஆராய்ச்சி ஏடுகளும் பாமர மக்களால வாசிக்கப்படுகின்றன ? அவையெல்லாம் பெரும்பாலும் சம்பந்தப்பட்ட துறையில் பயில்பவர்களுக்கும் பணியாற்றுபவர்களுக்குமானவை, பாமர மக்களுக்கானவை அல்ல. பாமர மக்களுக்காக எழுதப்படவேண்டுமானால் அறிவியலை நீங்கள் சொல்லும் “பாமர” மக்களிடையே கொண்டுசென்று ஆர்வத்தை உருவாக்கிய எழுத்தாளர் சுஜாதா போல ஆராய்ச்சிக்கட்டுரையில் உள்ள ஆர்வமூட்டும் செய்திகளை ஆர்வமூட்டும் நடையில் பாமர மக்களுக்கு கொண்டு செல்ல எழுத்தாளுமை கொண்டவர்கள் வேண்டும்.

    இன்னொன்று, எத்தனை தமிழ் மாணவர்கள் up-to-date ஆக உள்ளார்கள் ? கல்லூரியில் தமிழ் மாணவர்கள் நிச்சயம் இலக்கியமும் இலக்கிய வரலாறும் நிச்சயம் பாடமாக இருக்கும். (இளநிலை இயற்பியல் படித்த காலத்தில் எங்களுக்கே தமிழிலக்கிய வரலாறு பாடமாக இருந்தது) எத்தனை தமிழ் மாணவர்களுக்கு நவீன தமிழிலக்கிய எழுத்தாளர்களைப்பற்றி தெரியும் ? சுந்தர ராமசாமி ? ஞானக்கூத்தன் ? நாஞ்சில் நாடன் ? ஜெயமோகன் ? சென்ற ஆண்டு என்று நினைக்கிறேன். விஜய் டி.வி. நீயா நானா நிகழ்வொன்றில் ஒரு எம்.ஏ தமிழ் மாணவன் தனக்குத்தெரிந்த நவீன தமிழிலக்கியவாதி மு.வ என்றானாம்.

    நாஞ்சில் நாடன் எழுதுகிறார் : (http://www.nanjilnadan.com/)

    // கேரளப் பல்கலைக்கழகத்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர் ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார்.

    ‘‘ஐயா! நாஞ்சில் நாடன் படைப்புலகம்னு ஆய்வுத் தலைப்பு’’

    ‘‘வண்ணதாசன், வண்ணநிலவன், பா.செயப்பிரகாசம், பூமணி, ராசேந்திர சோழன் எல்லாம் வாசிச்சிருக்கேளா தம்பி?’’

    ‘‘ஐயா! அந்தப் பேருல எல்லாம் நீங்க எழுதறீங்களா?’’ //

    முனைவர் பட்ட மாணவனின் லட்சணம் இது. (”தமிழாய்வு” என்ற அவரது கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது இது. முழுக்கட்டுரையையும் படிக்க வேண்டுகிறேன்)

    மட்டுமில்லாமல் ஒரு ஆண்டில் எல்லா தமிழ் பல்கலைக்கழகங்களிலும் செய்யப்படும் தமிழாய்வுத்தலைப்புகளை பாருங்கள். இதோடு மேல் நாட்டு பல்கலைகளில் செய்யப்படும் மொழியியல் ஆய்வுக்கட்டுரைகளது தலைப்புக்களை ஒப்பிட்டுப்பாருங்கள். அவ்வளவு ஏன், நம்மூரிலேயே அறிவியல்துறையில் செய்யப்படும் முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்புகளோடு ஒப்பிட்டுப்பாருங்கள். (மேற்படி நாஞ்சில் நாடன் அவர்களது தளத்திலேயே ”சிறியன செய்கிலாதார்” என்ற சிறுகதையையும் படித்துவிடுங்கள்)

  9. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    நம்மூரின் தெருக்கூத்து பற்றி நூல் எழுத ஒரு அமெரிக்கன் வரவேண்டியதாயுள்ளது. ஆராய்ச்சி மாணவராக உதவித்தொகையோடு சென்னை வந்த ரிச்சர்ட் ஃப்ராஸ்கா (Richard A.Frasca) ஐந்தாண்டுகள் தமிழகத்தில் செலவிட்டிருக்கிறார். அவரது அர்ப்பணிப்புணர்வு அவரை தமிழகத்தில் அலைந்து திரிந்து, என்னென்னவெல்லாம் கற்றுக்கொள்ளவைத்தது, தெருக்கூத்து தொடர்பாக எவ்வளவு ஆராய வைத்தது என்றெல்லாம் இதே திண்ணையில் மூன்று வாரங்களாக ”தெருக்கூத்து” என்ற தலைப்பில் எழுத்தாளரும், கலை இலக்கிய விமர்சகருமான திரு.வெ.சா அவர்கள் எழுதியிருக்கிறார் படித்துப்பாருங்கள். ஹார்வர்ட் பல்கலையில் பணியாற்றும் ஒருவனுக்கு தமிழகத்து தெருக்கூத்து பற்றி என்ன அக்கறை ? அவனுக்கு இருக்கும் அர்ப்பணிப்பு நமக்கு உள்ளதா ?

    ஆண்டுதோறும் தமிழுக்கு சாகித்ய அகாதமி வழங்கும் விருதுகளில் பெரும்பாலானவை கடும் விமர்சனத்துக்கும் அயல் மொழியினரின் ஏளனத்துக்கும் உள்ளாகின்றன என்று எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். சில விருதுகளுக்கு அவரே கடும் கண்டனமும் தெரிவித்திருக்கிறார். மேலும், தரமற்ற படைப்புக்கள் பரிசு பெற இயலாதவாறு கேரளத்தில் கல்வித்துறையே அரணாக இருக்கிறது என்கிறார். நம்மில் அப்படி கூற இயலுமா ?

    மொழியை வைத்து நாம் ஆடியதுபோல உலகில் எங்குமே பகடையாட்டம் ஆடப்பட்டிருக்காது என்றுதான் நினைக்கிறேன். போராட்டங்கள், தடியடி, சிறையடைப்பு, தார்பூசுதல், உயிர்த்தியாகம் …. மொழியை வைத்து இத்தனை பெரும் கொந்தளிப்பு நிகழ்ந்திருக்கும் ஒரு சூழலின் அறிவுப்புலத்தில் நியாயமாக என்னென்ன நடந்திருக்க வேண்டும் ? என்ன நடந்திருக்கிறது ? கன்னி, அன்னை, சித்தி, அத்தை என்று கொஞ்சிவிட்டு குப்பையிலல்லவா கடாசி எறிந்திருக்கிறோம் ? கல்வியாளர்கள் செய்யவேண்டிய பணியைக்கூட தனது எளிய வாழ்வுக்கிடையே ஒரு இலக்கியவாதிதானே செய்கிறான் ! (நடு நாட்டு சொல்லகராதி – கண்மணி குணசேகரன்)

    உண்மையிலேயே தியாகமும் பல்லாண்டு அனுபவமும் உள்ள தமிழ் படித்தவன் எவனுக்குகிடைக்காத மத்திய மந்திரியாகும் வாய்ப்பு எந்த மொழிக்கெதிராக அடிமைகள் உயிர்த்தியாகம் செய்தனவோ அதே ஹிந்தி மொழி பேசத்தெரிந்த (மற்றும் ரோஜா நிறத்திலிருக்கும்) காரணத்தால் நேற்று முளைத்த காளானுக்கல்லவா கிடைக்கிறது !

  10. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    // நூல் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கும் இதுவும் ஒரு காரணமாகிறது ஊடகங்களின் தாக்கம் சராசரி மக்களைச் சென்றடையும்போது நூல்களினால் சாதிக்க ஏன் இயலவில்லை என்பதை எழுதும் நூலாசிரியர்கள் சிந்தித்துச் செயலாற்றவேண்டும் //

    ஊடகங்கள் மேலோட்டமானவை, வெறும் நுனிப்புல் மேயமட்டுமே உதவும். சில நிமிடங்களில் அல்லது மணிகளில் ’சதக்-சதக்’ என்று கத்தியால் குத்தினதையோ, ‘கதறக்கதற’ கற்பழிக்கப்பட்டதையோ, ’தலைவர்’ கட்டவுட்டுக்கு பாலபிஷேகமும் பீரபிஷேகமும் செய்யும் கோமான்கள் பற்றியோ, ‘ஒன்றாம் நம்பர் நடிகை’ வளர்க்கும் நாயின் தீண்டல் நின்றுபோனதையோ வாசிக்க மட்டுமே நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். காட்சி ஊடகமென்றாலோ, கேள்வியே வேண்டாம். தமிழ்க்கொலை புரிவதில் முன்னணியிலிருப்பது எந்த ஊடகம் என்று பந்தயமே வைக்கலாம். ஆங்கிலத்தில் மிழற்றுவதே அங்கு தகுதி, சிறப்பாக மிழற்றி தமிழ்மொழி சிதைப்போருக்கே முன்னுரிமை. தமிழை வைத்து ஆட்சிபீடம் ஏறியவர்களின் குடும்ப ஊடகமே இதில் முன்னிலை. கொள்கை வேறு வணிகம் வேறு. இல்லையா பின்னே !

    எத்தனை பிள்ளைகளுக்கு பாடத்திற்கு வெளியே படிக்க பெற்றோராகிய நாமும் கல்விக்கண் திறக்கும் ஆசிரிய பெருந்தகைகளும் அவர்களை ஆளும் அரசும் ஆவன செய்யவேண்டிய அதிகாரவர்க்கமும் ஊக்குவிக்கிறோம் ? சிறார்களுக்கென தனியே சிறப்பான தயாரிப்பில் அவர்கள் விரும்பி வாசிக்கும் வண்ணம் எத்தனை நூல்கள் தமிழில் வருகின்றன ? அவற்றுள் எத்தனை, பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு வாங்கித்தருகின்றனர் ? (இலவச இணைப்பை எல்லாம் உதாரணம் காட்ட மாட்டீர்கள் என்று நம்புகிறேன்) இங்கே நான் வசிக்கும் அமெரிக்காவில் நிறைய பள்ளிகள் கோடை விடுமுறையில் பிள்ளைகள் நூல்கள் படிக்க ஊக்குவிக்கின்றன. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும்போது தாம் படித்த நூல்களைப்பற்றி கட்டுரை எழுதச்சொல்கின்றன. நிறைய பெற்றோர்கள் குழந்தைகளோடு நூல் நிலையம் வருகின்றனர். வாசிப்பை சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்தி அது ஒரு இயக்கமாகவே வளருகிறது. நூலகம் செய்யும் வருடாந்திர நூலக விற்பனையின்போது – எங்களூர் நிலவரத்தை உதாரணமாக காட்டி – பெற்றோர்கள் நிறைய சிறுவர் நூல்கள் வாங்கிச்செல்வதை பார்க்கும்போது சூடாக ஏக்கப்பெருமூச்சுதான் எழுகிறது.

    நம்மூரில் எத்தனை நூலகங்கள் ஒழுங்காக செயல்படுகின்றன ? சினிமா கொட்டகை எங்கிருக்கும் என்று தெரிந்திருக்கும் நம்மில் எத்தனை பெற்றோருக்கு நூலகம் எங்கிருக்கிறது என்று தெரியும் ? எத்தனை முறை போயிருப்போம் ? பெரும்பாலான பதிப்பகங்கள் நூலக ஆணையை மட்டுமே நம்பி இயங்கிக்கொண்டிருக்கின்றன. வெறும் ஆயிரம் (அ) ஆயிரத்தைநூறு படிகளுக்கு கொடுக்கப்படும் இந்த நூலக ஆணையிலும்கூட பாரபட்சம். (’ஏன் சுந்தர ராமசாமி நூல்களை நூலகங்களுக்கு அரசு வாங்கவில்லை ?’ என்று கேட்டதற்கு ‘சுந்தர ராமசாமி நல்ல எழுத்தாளரில்லை என்று நினைப்பவர்களும் இருக்கலாம்’ என்று சொன்ன அமைச்ச பிறவியின் பெயர் ‘தமிழ்க்குடிமகன்’)

  11. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    வெறும் குறை சொல்ல மட்டும் வரவில்லை. நமது மொழியின் இன்றைய அவல நிலைக்கு அரசு தொடங்கி நாம் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது. பிறரை மட்டும் கை காட்டி நாம் தப்பித்துக்கொள்ள இயலாது. ஒரு ஆண்டு முழுதும் கேளிக்கைகளுக்கு நாம் செய்யும் செலவில் சிறு பகுதியாவது நூல்களுக்காக செலவு செய்திருப்போமா என்று எண்ணிப்பார்க்கவேண்டும்.

    பெற்றோராகிய நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப்படவேண்டும். பாடப்புத்தகங்களுக்கு வெளியேயும் தமிழில் வாசிப்பது முக்கியம் என்ற எண்ணத்தை நாம்தான் ஊட்டவேண்டும். பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே தமிழ் நூல்களை வாங்கித்தந்து வாசிக்கப்பழக்க வேண்டும். தமிழ் மொழியின் செம்மொழித்தன்மை பற்றி அறிமுகம் செய்யவேண்டும். குழந்தைக்கதைகள் மற்றும் பாடல்களை வாசிக்கச்செய்யவேண்டும். கொஞ்சம் பெரியவர்களாகும்போது வள்ளுவன், பாரதி என்று நம் மொழியின் முன்னோடிகளையும் அவர்களது படைப்புகளையும் அறிமுகப்படுத்தலாம். பின்னர் பதின்வயது வரும்போது நல்ல எழுத்தாளர்களை – அவர்களது படைப்புக்களை வாசிக்க வைத்து அவர்களோடு அதுகுறித்து உரையாடலாம். தீவிர வாசிப்பும் உரையாடலும் அறிவார்ந்த விவாதமுமே நல்ல ஆளுமைகளை உருவாக்கும்.

    மாற்றத்திற்கான முதலடியை நாம்தான் எடுத்துவைக்கவேண்டும்.

  12. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள் / தரவுகள் குறித்து முனைவர் பட்டம் வாங்கிய கட்டுரையாசிரியராகிய நீங்களே முதலிலேயே கொடுத்திருக்கவேண்டும். ஆனால், கேட்ட பிறகும்கூட “தமிழ் இலக்கியங்களும், ஆய்வேடுகளும், இது குறித்து முன்னர் வந்த நூல்களில் எடுத்த பயனுள்ள செய்திகளும்” ஆதாரங்கள் என்கிறீர்கள். (எந்த இலக்கியம், எந்த தலைப்பில் யார் எழுதிய எந்த ஆய்வேடுகள், முன்னர் வந்த எந்த நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட எந்த செய்திகள் …. ???)

    ஆதாரங்கள் கொடுக்கும் முறை இதுவல்ல.

    // தரவு கொடுப்பதில் பேராசிரியர்.அறிவியற் கவிஞர்.ஜெயபாரதன் அவர்களை பின்பற்ற வேண்டும். //

    வலுவாக ஆமோதிக்கிறேன்.

  13. Avatar
    paandiyan says:

    //நம்மூரின் தெருக்கூத்து பற்றி நூல் எழுத ஒரு அமெரிக்கன் வரவேண்டியதாயுள்ளது.//

    வெ சா , MDM அவர்களை எல்லாம் நீங்கள் மதித்தீர்கலா?

  14. Avatar
    Dr.G.Johnson says:

    பொன். முத்துக்குமார் அவர்களே, நீங்கள் கூறியுள்ள அனைத்துமே உண்மைகள்தான். தமிழ் மொழியின் எதிர்காலம் நம்முடைய பிள்ளைகளிடம்தான் உள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் ஆங்கில மோகத்தில் தங்களை அறியாமலேயே மூழ்கியுள்ளனர்.வேலை வாய்ப்புகளும் உலகளாவிய நிலைகளும் ஆங்கில மொழியைத் தவிர்க்க இயலாமல் செய்துவிட்டது. வெறும் தமிழைப் படித்துக்கொண்டிருந்தால் நல்ல எதிர்காலம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இல்லை என்பதை இளைஞர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் தமிழை ( தாய் மொழியை ) உதாசீனம் செய்யும் அவலம் பெருகிவருகிறது. ஒரு சிலருக்கு தமிழ்த் திரைப்படங்கள்தான் தமிழை மறக்காமல் நினைவூட்டுகிறது. ( அனால் அங்கும் வசனங்களில் ஆங்கிலம் புகுந்து விளையாடுகிறது ) தமிழ் பத்திரிகையோ அல்லது நூலையோ வாங்கிப் படிக்கும் பழக்கம் மறந்து போனது பலருக்கு. பல பிள்ளைகளுக்கு தமிழ் படிக்கவே தெரியாது ( சில வெளி நாடுகளில் ).
    இங்கேதான் தமிழ் உணர்வை ஊட்டும் பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே தமிழில் பேசக் கற்றுத்தரவேண்டும். அவர்கள் ஆங்கிலம் பயின்றாலும் வீட்டில் தமிழில் பேசும் பழக்கம் வேண்டும். பெற்றோர் அவர்களிடம் தமிழில் பேசலாம். தமிழ் பத்திரிகையும் நூல்களும் வாங்கி வீட்டு நூலகத்தில் வைத்து அவர்களைப் படிக்குமாறு ஊக்குவிக்கலாம்
    தமிழ் படிக்காத வளர்த்துவிட்ட பிள்ளைகளிடம் ,.தமிழ் நமது தாய்மொழி என்றும், அது தொன்மையானது, இனிமையானது என்றெல்லாம் நாம் கூறி அவர்களிடம் இனிமேலும் தமிழ் ஆர்வத்தை உண்டுபண்ண இயலுமா என்பது பெரிய சந்தேகமே!
    இனி வருங்காலத்தில் தமிழை வாழவைக்க தமிழ் எழுத்தாளர்களும், கவிஞர்களும்,ஆசிரியர்களும், பேராசிரியர்களும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை காலந்தான் சொல்லவேண்டும். இது ஒரு தீராத பிரச்னை. இதுபற்றி நாம் தீர சிந்தித்து கருத்துகள் பரிமாறிக்கொள்வது எல்லாருக்கும் நல்லது.இதில் நமக்குள் சர்ச்சைகள் தேவையில்லை.உலகளாவிய திண்ணை வாசகர்கள் இந்தக் களத்தைப் பயன்படுத்தி தங்களுடைய கருத்துகளைக் கூறினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்……..,அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *