எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்

author
1
0 minutes, 10 seconds Read
This entry is part 16 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

முனைவர் சு.மாதவன், உதவிப் பேராசிரியர்

‘புறநானூற்றின் வாயிலாக எண்வகை மெய்ப்பாடுகளைப் பயிற்றுவித்தல்” எனத் தரப்பட்டுள்ள தலைப்பைப் பொதுத்தலைப்பான “இலக்கியம் பயிற்றுவித்தல்” என்பதற்கேற்ப “எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்” எனும் தலைப்பில் இப் பயிலரங்க உரை அமைகிறது. இதனடிப்படையில் இக் கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் என்பது தெளிவுரை, பொழிப்புரை, விரிவுரை, விளக்கவுரை ஆற்றுவது என்பதாகவே பெரும்பாலும் அமைந்துவிடுகிறது. சிறப்பாக, ஓரிரு இடங்களின் நுட்பங்களை ஆய்வுநோக்கில் அணுகுவதும் எப்போதோ நிகழ்கிறது. பாடத்திட்டம், தேர்வுமுறைக்கேற்பவே பயிற்றுவித்தல் நிகழும். தலைப்பில் கண்டுள்ளதைப் போல், பயிற்றுவிக்க வேண்டுமெனில் புதிய பயிற்றுவித்தல் அணுகுமுறை எனும் நோக்கில் வேண்டுமானால் அவ்வப்போது வகுப்புகளில் முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாறாக, தலைப்பில் கண்டுள்ளவாறே பயிற்றுவிக்க வேண்டுமெனில் பாடத்திட்டங்களின் கலைத்திட்ட அமைப்புமுறையை – அணுகுமுறையைப் புதிதாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஒன்றை தெளிவுறுத்தி வலியுறுத்தியாக வேண்டும். அது, வழமையான பயிற்றுவித்தல் முறைகளைவிட இத்தகைய புதுமையான – தேடுதலை முடுக்கிவிடும் படியான கலைத்திட்டமே இன்றைய தேவையாக உள்ளது.
ஆய்வுக்களம்:
இந்தக் கட்டுரைக்காக, புறநானூற்றின் 400 பாடல்களையும் படிப்பதா? சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதா? ஒரு திணைப் பாடல்களை மட்டும் எடுத்துக் கொள்வதா? அதிலும் ஒரு துறைப் பாடல்களை மட்டும் எடுத்துக்கொள்வதா? அன்றி, ஒரு புலவரின் பாடல்களைப் பயில்வதா? எண்வகை மெய்ப்பாடுகளுக்கும் எட்டுப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஆராய்வதா? எனக் கேள்விகள் பல துளைத்துக் கொண்டிருந்த வேளையில், நாம் பயிற்றுவித்துவரும் – இல்லை – கற்பித்துவரும் – அதுவும் இல்லை – நடத்திவரும் பகுதி – ஐ தமிழ் நான்காம் பருவத்திற்குரிய செய்யுள் திரட்டில் உள்ள 12 பாடல்களையும் எடுத்துக் கொள்வோமே என்று தோன்றியது. இதுவரை, விளக்கவுரையாக – கருத்துரையாக – கொஞ்சம் சமூகப் புரிதலோடு நடத்திவரும் புறநானூற்றுப் பாடல்களை, மெய்ப்பாட்டு நோக்கில் பயிற்றுவித்தால் எப்படியிருக்கும் என ஆராய்வதே மிகச் சரியானது என முடிவெடுத்து, 2013-2014 நான்காம் பருவம், 2008 – 2009 நான்காம் பருவம் ஆகியவற்றிற்கு உரிய செய்யுள்திரட்டு, இவ் ஆய்வுக்கான களமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது (மா.மன்னர் கல்லூரி(த), புதுகை). சில பாடல்கள் இவ் ஆய்வுக்காக வகுப்பறைகளில் மெய்ப்பாட்டு நோக்கில் பயிற்றுவிக்கப்பட்டு, மெய்ப்பாட்டுக் கூறுகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தகுந்தது.
எண்வகை மெய்ப்பாடுகள்
“நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப” (தொல்.பொருள்.247)
எனும் நூற்பா, மெய்ப்பாட்டின் வகைகளை வரையறுத்துள்ளது. மெய்யின்கண் தோன்றும் வெளிப்பாடுகளை ‘மெய்ப்பாடுகள்’ என்றனர். வெளிப்பாடு தோன்றுதற்கு உள்பாடு எனும் உணர்வுநிலைகள் தேவை. உணர்வுநிலைகளைத் தூண்ட – கிளர்ந்தெழச் செய்யக் குறிப்பிட்ட சூழல் தேவையாகிறது. மானுட வாழ்வின் எந்தெந்த சூழல்களில் எந்தெந்த உணர்வுநிலைகள் எந்தெந்த மெய்ப்பாடுகளாகத் தோன்றுகின்றன என்று உலகியல் நுட்பமறி சான்றோர் வரையறுத்துள்ளனர். காலவோட்டத்தில் சான்றோரால் வரையறுக்கப்பட்டனவற்றைத் தொல்காப்பியர் பதிவுசெய்துள்ளார்@ அவை எண்வகை என்று. அவையும், ஒவ்வொன்றின் வெளிப்படு நிலை, சூழல், எதிர்கொள்ளப்படும் நிலை, சூழல் ஆகியவற்றை ஆராய்ந்து எட்டும் நன்நான்கு (8ஒ4ஸ்ரீ32) வகைகள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளன. அவையாவன:
“எள்ளல் இளமை பேதைமை மடனென்று
உள்ளப் பட்ட நகைநான் கென்க” (248)
“இழிவே இழவே அசையே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே” (249)
மூப்பே பிணியே வருத்த மென்மையோடு
யாப்புற வந்த இளிவரல் நான்கே” (250)
“புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு
மதிமை சாலா மருட்கை நான்கே” (251)
“அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே” (252)
“கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (253)
“உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே” (254)
“செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
அல்லல் நீத்த உவகை நான்கே” (255)
இவ்வாறு வரையறுக்கப்பட்ட அகத்திணை, புறத்திணை இரண்டுக்கும் 32 மெய்ப்பாடுகளோடு,
“ஆங்கவை ஒருபால் ஆக வொருபால்
………………………………………
அவையும் உளவே அவையலங் கடையே” (256)
என்ற நூற்பா குறிப்பிடும் ஏனையவையும் சேர்த்து மெய்ப்பாடுகள் எண்ணிலடங்காதனவாய் விரியும். மெய்ப்பாடு தோன்றும் இடம், சூழல், உணர்வு. உணர்ச்சி, எண்ணம், சிந்தனை, செயல் என்றவாறான இன்னபிற கூறுகளின்படிப்படையில் புதிய மெய்ப்பாட்டுக் கூறுகளும் தோன்றுவதற்குரிய இயல்புகளையும் எண்ணத்தில் வைத்தல் தகும். வள்ளுவரின் கூற்றுப்படி, கயமை தவிர்த்த பிற எல்லா எண்ணங்களுக்கும் உணர்வு – உணர்ச்சி – மெய்ப்பாடு – வெளிப்பாடு உண்டு என்பதையும் இங்கு கருதிக் கொள்ளுதல் நலம் (கு.108:1).
மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
அகமல்லாதன எல்லாம் புறம். தலைவன் – தலைவியரின் அகத்திற்குள் மட்டுமே நிகழ்வன எல்லாம் அகம்@ மற்றெல்லாம் புறம். எனவே, அகத்தைவிட புறத்தில் வெளிப்பாடுகள் அதிகம்@ மெய்ப்பாடுகளும் அதிகமே. இங்கு, புறம் என்பது சமூக வாழ்வியலைக் குறிக்கிறது. சமூகத்தின் பன்முகப் பரிமாணங்களிலும் அதனதன் பரிணாமங்களிலும் அவ்வவற்றிற்குரிய மெய்ப்பாடுகள் தோன்றும். எனவே, புறநானூற்றில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் குறித்து தனித்த விரிவான ஆய்வே நிகழ்த்தலாம்.
இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பயிலலுக்கு உட்படுத்தப்படுகின்ற 12 பாடல்களுக்குள் ஊடாடும் – இழையோடும் – இழைந்தோடும் – உணர்வோடும் மெய்ப்பாடுகளை இனங்காணலோடு இப் பாடல்களின் பொருள்கோள்கள் சென்றடையும் வாயில்களையும் இனங்காணலாம்:
1. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
பாடியவர் : ஊன்பொதி பசுங்குடையாh
திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி

வழிபடுவோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
வந்துஅடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தனிதி நீ பண்டையிற் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த ல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தேர் மார்ப
செய்துஇரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கானல் நெடியோய்
எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே (புறநா. 10)
புறநானூற்றுப் பாடல் எண்கள் கட்டுரையாளரால் சுட்டப்பட்டன – கழகப் பதிப்பின்படி.
பெருமிதம் : வழிபடுவோரை வல்லறி தீயே
பிறர் பழி கூறுவோர் மொழிதே றலையே”
“புகழ்மை சேண்விளங்கும் புகழ்”
தறுகண் : “தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே”
மருட்கை – புதுமை “மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப”
மருட்கை – பெருமை “நெய்தலங் கானல் நெடியோய்
ஏய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே”
பிற – அருள் “தண்டமும் தணிதிநீ பண்டையிற் பெரிதே”
பிற – அன்பு “எய்தவந்தனம் யாம் ஏத்துகம் பலவே”
2. சோழன் நெடுங்கிள்ளி
இளந்ததத்தன் என்னும் புலவன் சோழன் நலங்கிள்ளியிடம் வந்தான். நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை உண்டாகியிருந்தது. அதனால் தன்னிடம் வந்த புலவன் இளந்தத்தனை நலங்கிள்ளியின் ஒன்றன் என எண்ணிக் கொல்ல முற்பட்டான். அப்போது கோவூர் கிழார் நெடுங்கிள்ளியை நோக்கிக் கூறிய அறிவுரையே இச்செய்யுள்
“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
நெடியஎன்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஒம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
ஆங்குஇனிது ஒழுகில் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே (புறநா. 47)
பெருமிதம் – கொடை “வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ”
பிற – உடைமை “பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி”
பிற – வாழ்த்தல் “ஆங்குகினிது ஒழுகில் அல்லது ஓங்குபுகழ்
மண்ணாள் செல்வம் எய்திய
நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே”
பிற – நினைத்தல் “வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
………………………………………..
வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை”
பிற – அருள் “வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ”
பிற – நாணம் “நண்ணார் நாண அண்ணாந்து ஏகி”
3. சேரமான் கணைக்கால் இரும்பொறை
திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி
பாடியவர் : சேரமான் கணைக்காலிரும்பொறை
“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் உலகத்தானே? (புறநா. 74)
பெருமிதம் – தறுகண் “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள்அன்று என்று வாளின் தப்பார்”
இளிவரல் – “மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணிய
தாம்இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்வுலகத் தானே”
இளிவரல் – பிணி “வயிற்றுத் தீ”
இளிவரல் – வருத்தம் “ஈன்ரோ”
இளிவரல் – மென்மை “தாம் இரந்து உண்ணும் அளவை”
அழுகை – வறுமை “தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே”
பிற – அருள் “கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்”

4. அதியமான் நெடுமான் அஞ்சி
பாடியவர் : ஒளவையார் ஒருகால் அதியமானிடம் பரிசில் பெறச் சென்றார். அவன், பரிசில் தந்துவிட்டால் ஒளவையார் தன்னைப்பிரிந்து சென்று விடுவார் என்பதால் பரிசிலைத் தாராது காலம் தாழ்த்தினான். அதனால் அவருக்கு உள்ளத்தில் வருத்தம் தோன்றியது. அதனைச் சித்தரிப்பது இச்செய்யுள். திணை : பாடாண்திணை, துறை : பரிசில் கடாநிலை, புலவன் ஒருவன் பரிசில் பெற விரும்பும் விருப்பத்தைப் பரிசில் தருபவனிடத்தில் புலப்படுத்துதல்.
“ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ
இழை அணியானை இயல்தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறூஉங்காலம்
நீட்டினும் நீடடாதாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுஅது பொய்யாகாதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே” (புறநா. 101)
பெருமிதம் – கொடை “இழையணி யானை இயல்தேர் அஞ்சி
அதியமான் பரிசில் பெறுவல் காலம்”
பெருமிதம் – புகழ்மை “ஒருநாள் செல்லலாம் ஒருநாள் செல்லலம்
பன்னாள் பயின்று பலரோடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”
“…………… வாழ்க அவன் தாளே”
பிற – உடைமை “இழையணி யானை இயல்தேர்”
பிற – இன்புறல் “தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”
“கையகத்து அது பொய்யா காதே”
பிற – அருள், அன்ப, வாழ்த்தல், நினைத்தல்
“தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ”
பிற – ஆராய்ச்சி “நீட்டினும் நீட்டாதாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத்து அது பொய்யா காதே”
பிற – விரைவு “அதியமான் பரிசில் பெறூஉம் காலம்”
5. அதியமான்
பாடியவர் : ஒளவையார், அதியமான் தன் முதல் மகன் பிறந்த போது சென்று கண்டான். அப்போது பாடிய பாடல் இது. திணை : வாகை, துறை : அரசவாகை
“கையது வேலே காலன புனைகழல்
மெய்யது வியரே மிடற்றது பசும்புண்
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண்தோட்டு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே அன்னோ
உய்ந்தனர் அல்லர் இவன் உடற்றி யோரே
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே” (புறநா. 100)
பெருமிதம் – தறுகண் “கையது வேலே காலன புனைகழல்
மெய்யது விடரே மிடற்று பசும்புண்”
பெருமிதம் – புகழ்மை “உய்ந்தனர் அல்லர் இவன்உடற்றி யோரே”
வெகுளி – அலைகொலை “செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே”
மருட்கை – புதுமை, பெருமை “வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோட்டு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரிஇரும் பித்தை பொலியச் சூடி
வரியம் பொருத வயக்களிறு போல
இன்னும் மாறாது சினனே”
பிற – அருள் “உய்ந்தனர் அல்லர்இவன் உடற்றி யோரே”

6. வேள் பாரி
பாடியவர் : கபிலர், திணை : பாடாண்திணை துறை : இயன்மொழி “பாரி பாரி என ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே” (புறநா. 107)

பெருமிதம் – கொடை, புகழ்மை
பிற – அருள்
7. மோசிகீரனார்
இதனைப் பாடியவர் மோசிகீரனார். இவரைப் பற்றி முன்னமே கூறப்பட்டுள்ளது. (பார்க்க: செய்யுள் 50) தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும் கொண்கானங்கிழானையும் பாடிப் பரிசில் பெற்றுச் சிறந்தவர் இவர். திணை : பொதுவியல், துறை : பொருண்மொழிக்காஞ்சி
“நெல்லும் உயிர்அன்றே நீரும் உயிர்அன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான் உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே” (புறநா. 186)
பெருமிதம் – கல்வி “…… யான் உயிர் என்பது அறிகை”
பிற – அருள், வாழ்த்தல்
8. ஒளவையார்
இச்செய்யுளின் திணை : பொதுவியல், துறை : பொருண்மொழிக்காஞ்சி, ஒரு நாடு மேன்மை பெறுவதற்குரிய காரணத்தை இச்செய்யுளில் ஆசிரியர் விளக்குகின்றார்.
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அல்வழி நலலை வாழிய நிலனே” (புறநா. 187)
பெருமிதம் – புகழ்மை
பிற – உடைமை, ஆராய்ச்சி
9. பாண்டியன் அறிவுடைநம்பி
இதனைப் பாடியவர் பாண்டியன் அறிவுடை நம்பி. இம்மன்னன் பிசிராந்தையாரால் நன்னெறிப்படுத்தப்பட்டான் என்பது முன்னரே உணர்த்தப்பட்டது.
இல்வாழ்வின் பயனான குழந்தைச் செல்வத்தின் சிறப்பை இம்மன்னன் விளக்குகின்றான். திணை : பொதுவியல், துறை : பொருண்மொழிக்காஞ்சி.
“படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (புறநா. 188)
உவகை – புலன் “குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கல்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்”
உவகை – புணர்வு “மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே”
உவகை – செல்வம் “படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும்……..
……………………………………………..
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைதாம் வாழும் நாளே”
பிற – உடைமை, ஆராய்ச்சி, அன்பு
10. பிசிராந்தையார்
பிசிர் என்ற ஊரில் இப்புலவர் இருந்தார். அப்போது தம் நண்பனான கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்ததை அறிந்தார்.
அவனைக் காணச்சென்றார். அங்கிருந்த புலவர்கள் அவரைப் பார்த்து உங்கட்கு வயது பல ஆகியும் நரை திரை இல்லாதிருப்பது என்ன காரணம் என் வினவினர்
அப்போது அவர் தமக்கு நரை தோன்றாமைக்குரிய காரணங்களைச் சொல்லலானார். அதுவே இப்பாடல், திணை : பொதுவியல், துறை: பொருண்மொழிக்காஞ்சி
“யாண்டுபல வாக நரையில வாகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்
யான்கண்டனையர் என் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும் அதன் தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே” (புறநா. 191)
இளிவரல் – மூட்டி “யாண்டுபல வாக நரையில வாகுதல்”
பெருமிதம் – கல்வி, தறுகண், புகழ்மை, கொடை
“மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பின்
……………………………………………….
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே”
பிற – ஆராய்ச்சி, நினைதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்”
11. கணியன் பூங்குன்றனார்
பூங்குன்றம் என்ற ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன்பட்டி என்பதாகும். இப்புலவர் அவ்வூரினர். மேலும் சோதிடத்தில் வல்லவராதலால் ‘கணியன்’ என அழைக்கப்பெற்றார். இவரும் தாம் வாழ்க்கையில் கண்ட உண்மைகளை இச்செய்யுளில் எடுத்தியம்புகிறார். திணை: பொதுவியல், துறை : பொருண்மொழிக்காஞ்சி
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தலும் அதனினும் இலமே” (புறநா. 195)
பெருமிதம் – கல்வி “………………………… திறவோர்
காட்சியின் தெளிந்தனம்……………”
மருட்கை – புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்தலும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே……………….”
இளிவரல் – மூப்பு, பிணி, வருத்தம், மென்மை
“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிதென மகிழ்தலும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே……………….”
பிற – உடைமை, ஆராய்ச்சி, நடுவுநிலை
பிற – நாணல் “பெரியோரை வியத்தலும் இலமே”
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”
பிற – வெரூஉதல் (தோன்றி மாய்வதொரு குறிப்பு)
“………………….. மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் பமே புணைபொல் ஆருயிர்
முறைவழிப் படூஉம்……………….”
12. நரிவெரூஉத் தலையார்
இப்புலவர் யாது காரணத்தாலோ நரியும் அஞ்சத் தக்க தோற்றத்தை உடையவராக விளங்கினார். நரிவெரூஉம் – நரியும் அஞ்சும், சேரமான் கரூவூரேறிய ஒள்வாய் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னனைக் கண்டால் தம் உடல் தோற்றம் மாறி நலம் பெறும் என்று அறிந்து அவனைக் காண உடல் நலம் பெற்றார் என்று புறநானூற்றின் ஐந்தாம் பாடலின் அடிக்குறிப்பு விளக்குகின்றது. திணை : பொதுவியல் துறை : பொருண்மொழிக்காஞ்சி.
“பல்சான் றீரே பல்சான் றீரே
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல் சான்றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லாரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (புறநா.195)
பெருமிதம் – கல்வி, தறுகண், புகழ்மை, கொடை
“நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
எல்லோரும் உவப்பது அன்றியும்
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே”
இளிவரல் – மூப்பு “பல்சான் றீரே பல்சான் றீரே”
கயல்முள் அன்ன நரைமுதிர் திரைகவுள்
பயனில் மூப்பின் பல்சான் றீரே”
பிற – கைம்மிகல் “கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்
பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ”
பிற – நடுவுநிலை, அருள், அன்பு, ஆராய்ச்சி, அடக்கம், கருதல்
“நல்லாற்றுப் படூஉம் நெறி”

தொகுப்புரை
எண்வகை மெய்ப்பாடுகளின் பன்முகப் பரிமாணங்களில் சிலவற்றை இவ் உரை வெளிக்கொணர்ந்துள்ளது. மேலும் ஆராய இது சிறந்த ஆய்வுக் களமாக உள்ளது எனப் பரிந்துரைக்கலாம்.
இப் பயிலரங்க உரையின் அணுகுமுறை போன்ற பயிற்றுதல் அணுகுமுறைகளைப் பின்பற்றியும் புதுக்கியும் பாடம் நடத்துதல், மாணவரின் கற்கை நெறியை மேம்படுத்துவதோடு ஆசிரியரின் படைப்பாற்றலையும் மாணவரின் படைப்பாற்றலையும் ஒருசேர வளர்க்கும் என்பது திண்ணம்.

முனைவர் சு.மாதவன்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த)
புதுக்கோட்டை 622001
பேச : 9751 330 855 மின் அஞ்சல் : றறற.ளநஅஅழணாi_200269@பஅயடை.உழஅ

Series Navigationஎறும்பைப்போல் செல்ல வேண்டும்முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை
author

Similar Posts

Comments

  1. Avatar
    Mari says:

    நமது செவ்வியல் இலக்கியங்களை இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பயன்படும் விதத்தில்
    மாதவன் அவர்களின் முயற்சி. நன்று. பாராட்டுக்கள்!

Leave a Reply to Mari Cancel reply

Your email address will not be published. Required fields are marked *