எத்தகைய முதிர்ந்த ஞானம்!

This entry is part 14 of 23 in the series 6 ஜூன் 2021

ஜோதிர்லதா கிரிஜா

 

     23.5.2021 பிரபல எழுத்தாளரும் அமுதசுரபி ஆசிரியருமான திருப்பூர் கிரிஷ்ணனின் குடும்பத்துக்கு மிக மோசமான நாள். அவருடைய ஒரே மகன் இளைஞர் அரவிந்தன் கொரொனாவுக்குப் பலியானார். செய்தி அறிந்து துடித்துப் போனோம்.

 

      நான் முகநூல் பயன்படுத்துவதில்லை. எனவே என் வேண்டுகோளின் படி எழுத்தாளர் அம்பை திருப்பூர் கிருஷ்ணனின் முகநூல் பதிவை அனுப்பி வைத்தார். அதில் ததும்பும் ஞானச் செறிவைத் திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

…….

 

உண்மையாகவே உயர்ந்த மனிதர் கிரிஜா. மிகவும் பெரிய ஞானி. 

 

ஒரே மகன் போய்விட்டான். எப்படித்தான் தாங்கிக்கொண்டு இப்படி எழுதுகிறாரோ தெரியவில்லை. எம்கிறார் எழுத்தாளர் அம்பை.

 

உள்ளத்தை உலுக்குகிறது அவரது பதிவு, லக்ஷ்மி.

இந்த அளவுக்கு ஞானம் பெறுதல் இயலுமா? –

கிரிஜா

 

 திருப்பூர் கிருஷ்ணனின் இன்றைய உருக்கும் பதிவு:

 

*உறங்கி விழிப்பது போலும் பிறப்பு!*

*திருப்பூர் கிருஷ்ணன்*

 

  *வாழ்க்கை நிலையற்றது என்பதை உரத்துப் பேசுகின்றன நம் மதங்கள். நெற்றியில் திருநீறு இடுவதே `இந்த உடல் என்றேனும் ஒருநாள் இப்படித்தான் சாம்பலாகப் போகிறது` என்ற வாழ்வின் நிலையாமையை நாள்தோறும் நினைத்துக் கொள்ளத்தான். 

 

   இந்த வாழ்வே நிலையற்றது என்கிறபோது, இருக்கிற கொஞ்ச காலத்தை நல்லவிதமாக வாழ்ந்து முடிக்கலாமே என்ற சிந்தனை திருநீறு இடுவார் மனத்தில் எழவேண்டும் என்பதே திருநீற்றுத் தத்துவத்தின் பின்னணி. நீறில்லா நெற்றிபாழ் என்றதும் இந்த அடிப்படையில் தான்.  

 

   வாழ்வின் நிலையாமையை வள்ளுவம் நகைச்சுவை உணர்ச்சியோடு அழகாகப் பேசுகிறது. இந்த உலகிற்கு ஒரு பெரிய பெருமை உண்டு. அது என்ன தெரியுமா? நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமைதான் அது என்று சொல்லி நகைக்கிறார் வள்ளுவர். 

 

 `நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

  பெருமை உடைத்திவ் வுலகு!`

 

   உடம்பு முட்டை ஓட்டைப் போன்றது. உயிர் அதிலிருந்து வெளிவந்து பறக்கும் பறவையைப் போன்றது. முட்டையை விட்டு வெளியே பறவை பறப்பதுபோல் உடலை விட்டு உயிர் ஒருநாள் பறந்துவிடும் என்று எச்சரிக்கிறது குறள்.

 

  `குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே 

  உடம்போடு உயிரிடை நட்பு` என்பன குறளின் அடிகள். 

 

  ஆனாலும் மரணத்தைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்கிறார் வள்ளுவர். மரணம் உறங்குவதைப் போன்றதுதான் என்கிறார். மறுபடி விழிப்பதைப் போன்றது பிறப்பு என்கிறார். 

 

 `உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 

 விழிப்பது போலும் பிறப்பு!`

 

  *புத்தரது வாழ்வில் ஒரு சம்பவம் வருகிறது. அவர் ஞானியாகித் தவ முனிவராகப் புகழ்பெற்றிருந்த காலகட்டம். ஒரு மரத்தடியில் அவர் தியானத்தில் ஆழ்ந்திருக்கிறார். 

 

  அப்போது அவரைத் தேடி வருகிறாள் கிசாகெளதமி என்ற பெண்மணி. அவள் கையில் ஒரு குழந்தையின் சடலம். கண்களில் ஆறாய்ப் பெருகும் கண்ணீர். 

 

 `சுவாமி! என் அன்பு மகன் இறந்துவிட்டான். இவனைத் தாங்கள் உயிர்ப்பிக்க இயலுமா? எத்தனையோ பேரைக் கேட்டுவிட்டேன். எல்லோரும் இயலாது எனக் கைவிரித்து விட்டார்கள். தாங்கள் மாபெரும் முனிவர் என்றும் தங்களிடம் சென்று வேண்டுமாறும் பலரும் அறிவுறுத்தினார்கள். தாங்கள் இந்த உதவியைச் செய்ய முடியுமா சுவாமி?`

 

  பேதைமையோடு கேள்வி கேட்ட அந்தப் பெண்ணைக் கனிவுடன் பார்த்தார் புத்தர். 

 

  `அதற்கென்ன? இறந்த குழந்தைக்கு உயிர்கொடுக்கலாம் அம்மா. அது ஒன்றும் சிரமமில்லை. ஆனால் அதற்கு ஒரே ஒரு பிடி எள் வேண்டும்! அக்கம்பக்கத்தில் கேட்டு வாங்கிவா. `

 

  கிசாகெளதமி விழிகளைத் துடைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு உடனே புறப்பட்டாள். புத்தர் அவளைச் சற்று நிறுத்தினார்:

 

 `பெண்ணே! எள்ளைப் பெறுவதில் ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. நீ வாங்கும் எள் இதுவரை சாவே நடக்காத வீட்டிலிருந்து பெற்றதாக இருக்க வேண்டும். 

 

  அப்போதுதான் அந்த எள் வேலை செய்யும். இறந்த குழந்தைக்கு உயிரைக் கொடுக்கும். போ. சாவே நடவாத வீட்டிலிருந்து எள்ளைப் பெற்று வா!`

 

  கிசாகெளதமி அவசர அவசரமாக நடந்தாள். வீடு வீடாக ஏறி இறங்கினாள். ஒரு பிடி என்ன ஒரு மூட்டை எள் வேண்டுமானாலும் கொடுப்பதற்குப் பலர் தயாராயிருந்தார்கள். ஆனால் சாவே நடக்காத வீட்டிலிருந்து வேண்டுமாமே? 

 

  எல்லார் வீட்டிலும் ஏதோ ஒரு சாவு எப்போதோ கட்டாயம் நடந்திருந்தது. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தங்கை, கணவன், மனைவி என  யாரையோ நிரந்தரமாக இழந்த துக்கத்தை எல்லோரும் அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார்கள். 

 

  சாவில்லாத வீடே இல்லை என்பதைக் குழந்தையை இழந்த அந்தத் தாயின் மனம் உணர்ந்துகொண்டது. இறப்பது இயல்புதான் என்பதைப் புரிந்துகொண்டாள் அவள். தன் குழந்தையை அடக்கம் செய்த அந்தத் தாய், பின்னர் வந்து புத்தரை வணங்கி அவர் சங்கத்தில் இணைந்தாள் என்கிறது புத்தரின் திருச்சரிதம்….

 

  *ச.து.சு. யோகியார் தம் ஆகச்சிறந்த மரபுக் கவிதைகளின் மூலம் தமிழ்மொழியை வளப்படுத்தியவர். அவரது `தமிழ்க் குமரி` என்ற நூல் உயர்ந்த கவிதைத் தொகுதியாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.

 

  ராஜம் என்ற சிறுமி அவரது செல்ல மகள். எட்டே வயதில் இறந்துவிட்டாள். அந்த இழப்பின் சோகத்திலிருந்து மீள அவர் எழுதிய உன்னதமான கவிதைதான் `கண்மணி ராஜம்`. 

 

  `பூப்போலக் கன்னங்கள், 

    பூப்போலப் புன்சிரிப்பு, 

  பார்ப்போர் செவிக்குத்தேன் 

    பாய்ச்சும் குதலை மொழி, 

  பம்பு மலைக்காட்டில் 

    பாய்ந்தோடா தென்மனைவி 

  கும்ப முலைக்காட்டில் 

    குதித்தோடும் மான்குட்டி`

 

  என்றெல்லாம், மாய்ந்த தன் மகளைப் பற்றிச் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோகிறார் யோகியார். ஆனால் அவரின் ஆழ்மனத்திற்கு ஓர் ஆறுதல் வேண்டுமே? அதற்கும் அந்தக் கவிதையிலேயே அசைக்கமுடியாத ஒரு வாதத்தை முன்வைத்துக் கொள்கிறார்.  

 

  `உயிர் என்பது பறவை மாதிரி. பறவையின் இயல்பு ஓர் இடத்தில் நிரந்தரமாய்த் தங்காது பறத்தல். உயிரின் இயல்பும் அதுவே. ஒரு பறவை ஒரு மரக்கிளையில் அமர்ந்துவிட்டுப் பறந்தால், தன்னிடம் வந்து அந்தப் பறவை கொஞ்ச நேரம் அமர்ந்ததைப் பற்றி மரக்கிளை மகிழ்ச்சி அடைய வேண்டுமே அல்லாது அது பறந்து சென்றதைப் பற்றி வருந்தலாமா? 

 

  என் மகள் என்கிற அழகிய சின்னஞ்சிறு பறவை சில ஆண்டுகள் என் குடும்ப மரத்தில் இளைப்பாறியதற்கு நான் மகிழவேண்டுமே அல்லாது அவள் உயிர் பறந்துசென்றது பற்றி நான் வருந்துவது என்ன நியாயம்?` என்று கேட்டு அமைதி அடைகிறார் யோகியார். 

 

`தேசமெலாம் சுற்றும் சிறுபறவை சின்னேரம் வீசும் கிளையொன்றில் வீற்றிருந்து போவதுபோல்` அல்லவா நீ போயிருக்கிறாய் என்று உருகி உருகித் தன்னைச் சமாதானம் செய்துகொள்கிறது தத்துவக் கண்ணோட்டம் நிறைந்த அவரது உயர்ந்த உள்ளம். 

 

 `ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மானிடரே?` என்று கேட்டு நம்மைச் சிந்திக்க வைக்கிறாள் அவ்வைப் பாட்டி. 

 

  `இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா? உறவைச் சொல்லிப் புலம்புவதாலே உயிரை மீண்டும் தருவானா?` என்று வினவுகிறார் கவிஞர் கண்ணதாசன். 

 

 `இப்படிப் பிறர் சாவுக்கு நாம் அழுகிறோமே? நாமே நம் வாழ்வில் பலமுறை செத்திருக்கிறோமே? அதற்கு மட்டும் நாம் ஏன் அழுவதில்லை?` என்று கேட்டு வியக்கிறது குண்டலகேசிப் பாடல். 

 

  குழந்தையாகவும் சிறுவனாகவும் வாலிபனாகவும் நடுத்தர வயதினனாகவும் இருந்து இன்று முதியவனாய் மாறியிருக்கிறான் ஒருவன். அதுசரி, அந்தக் குழந்தை எங்கே? அந்தச் சிறுவன் எங்கே? அந்த வாலிபன் எங்கே? அந்த நடுத்தர வயது மனிதன் எங்குபோனான்? 

 

  அவர்களெல்லாம் தான் இன்று முதியவனாய் உருவாகியிருக்கிறார்கள் என்றால், நாமே செத்துச் செத்துப் பிறக்கிறோம் என்பதுதானே உண்மை?  நம் வாழ்வில் நாம் சாவதை அறியாமல் சாகிறோமே, அந்தச் சாவுகளுக்கு நாம் ஏன் அழுவதில்லை? 

 

  என்ன விந்தையான கேள்வி! உலக இலக்கியத்தில் எங்கும் கேள்விப்படாத அற்புதமான கேள்வி இது. வள்ளுவரின் நிலையாமைத் தத்துவத்திற்குக் குண்டலகேசி மிக அழகாய் விளக்கம் தருகிறது. அந்தப் பாடல்:

 

 `பாளையாம் தன்மை செத்தும் 

   பாலனாம் தன்மை செத்தும்

 காளையாம் தன்மை செத்தும் 

   காமுறும் இளமை செத்தும்

 மீளுமிவ் வியல்பு மின்னே 

   மேல்வரும் மூப்பு மாகி 

 நாளும் நாம் சாகின்றோமால் 

   நமக்கு நாம் அழாததென்னே?`

 

  நிலையில்லாத வாழ்வில், இருப்பதைக் கொண்டு நிறைவுகண்டு வாழ்வை அனுபவிக்காமல், பணம் பணம் என்று பறக்கும் கேடுகெட்ட மனிதர்களைப் பற்றி அவ்வையார் நினைத்து நினைத்து வியக்கிறார்:

 

 `பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்த

 கேடுகெட்ட மானிடரே, கேளுங்கள்! – கூடுவிட்டிங்கு 

 ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் 

 பாவிகாள் அந்தப் பணம்?`

 

 என்ற அந்த அவ்வைப் பாட்டியின் கேள்வியை நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பது நல்லது….

 

  *அதுல் என்ற அழகிய வாலிபன் காலமானான். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும் சாரதாதேவிக்கும் சொந்தக்காரப் பையன் அவன். தான் பார்த்த மனிதர்களிலேயே அதுல் மிக அழகானவன் என்று பரமஹம்சர் ஒருமுறை சொல்லியிருக்கிறார். 

 

  அப்போது சாரதாதேவிக்குத் திருமணம் நடந்து சிறிதுகாலம் தான் சென்றிருந்தது. அதுலின் சடலத்தருகே சிறுமி சாரதாதேவியும் மற்றும் பலரும் அமர்ந்து கண்ணீர் விட்டுக் கதறிக் கொண்டிருந்தார்கள். 

 

  பரமஹம்சர் அங்கே வந்தார். சடலத்தை உற்றுப் பார்த்தார். கடகடவென்று உரக்கச் சிரித்தார். பின்னர் வெளியேறிச் சென்றுவிட்டார். 

 

  இழவு வீட்டில் வந்து சிரிக்கிறாரே? இவர் என்ன பைத்தியமா? உறவினர்களின் மனத்தில் ஓடிய கேள்வி சாரதாதேவியின் கண்களுக்குத் தப்பவில்லை. 

 

  அன்று மாலை குருதேவரை நேரில் சந்தித்தாள் சிறுமி சாரதா. `பிரேதத்தைப் பார்த்து நகைத்தீர்களே? நீங்கள் என்ன பைத்தியமா?` என்று நேரடியாகக் கேட்டாள். 

 

 குருதேவர் தன் மனைவியான அந்தச் சிறுமியையே உற்றுப் பார்த்தார். பின் மீண்டும் கடகடவென நகைத்தார். 

 

  `நீ பைத்தியம். அங்கே அழுதவர்கள் அத்தனைபேரும் பைத்தியங்கள். எதற்காக அழுகை இப்போது? உடல் என்பது, ஆன்மா என்கிற அழிவே இல்லாத வாள் வைக்கப்பட்டிருக்கும் தற்காலிக உறைதானே? 

 

  உறை இனி உதவாது என்பதால் அழியும் உறையிலிருந்து அழியாத ஆன்மா என்னும் வாளை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டுவிட்டான் இறைவன். 

 

  அழிவே இல்லாத ஆன்மா நிலையாகத் தானே இருக்கிறது? அப்படியிருக்க என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியக் கூடிய இந்த உடல் என்ற உறை, எப்போது அழிந்தால்தான் என்ன? அதற்கு எதற்கு அழுகை?`

 

  பரமஹம்சரின் கேள்வியைக் கேட்ட சாரதைக்குப் பரவசம் ஏற்பட்டது. அவள் ஒன்றைப் புரிந்துகொண்டாள். உலகத்தில் பைத்தியத் தன்மையே இல்லாத மிகச் சரியான மனநிலையில் இருக்கக் கூடிய ஒரே ஒருவர் தன் கணவர்தான் என்ற உண்மைதான் அது. 

 

  சாரதாதேவி புரிந்துகொண்ட உண்மையை நாமும் புரிந்துகொண்டால் இறப்புக்காக அழமாட்டோம். `உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு` என்று வள்ளுவர் சொல்லும் தத்துவத்தைப் புரிந்துகொள்வோம். 

Series Navigation‘‘ஔவை’’ யார்?( தொடர் கட்டுரை)ஒரு கதை ஒரு கருத்து
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

  1. Avatar
    செல்வா says:

    திருப்பூர் கிருஷ்ணன் ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *