எனது இலக்கிய அனுபவங்கள் -1. இலவசக் கரு

This entry is part 18 of 46 in the series 5 ஜூன் 2011

‘தன் மனைவிக்கு மாற்றானிடம் பிறந்த குழந்தையைத் தன் குழந்தைஎன்று கொண்டாடுவது மாதிரி, பிறரது கதையைத் திருடி எழுதி தன் கதைஎன்று சொல்வது பேடித்தனம்’ என்று சொன்ன புதுமைப்பித்தன் – இந்தத் திருட்டை’இலக்கிய மாரீசம்’ என்ற ஒரு புதுப் பிரயோகத்தால் வருணித்தார். பின்னாளில்அவர் மீதும் அத்தகைய குற்றச்சாட்டும், அதன் பேரில் நிகழ்ந்த வாதப் பிரதிவாதங்களும் இலக்கிய உலகில் பிரசித்தம்.

இத்தகைய ‘இலக்கிய மாரீசம்’ அநேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும்தெரிந்தோ தெரியாமலோ, பிரக்ஞை உடனோ பிரக்ஞை இன்றியோ நேர்வதுண்டு.கண், காது, வாய் ஆகிய மூன்று புலன்களையும் இழந்து போன ஹெலன்கெல்லர்தன் வாழ்வின் மீட்புமுயற்சிக் காலத்தில் கதை எழுத முயன்ற போது, அவருக்குஇந்த விபத்து நேர்ந்தது. ‘பனி மனிதன்’ என்று அவர் எழுதிய கதை திருடப்பட்டகதை என்ற குற்றச்சாட்டு எழுந்த போது அவர் துடிதுடித்துப் போனார். உண்மையில்அது அவரது பிரக்ஞை இன்றியே நிகழ்ந்தது. சிறு பிராயத்தில் படித்தோ கேட்டோஆழ்மனதில் பதிந்து போன கதை – அவர் கதை எழுத முற்பட்ட போது தனதுசொந்தக் கற்பனை என்ற பிரமை ஏற்பட்டு, ‘பனி மனிதன்’ என்ற கதையை அவர்எழுதினார். பிறகுதான் தன் மனமே தன்னை ஏமாற்றி விட்டது புரிந்தது. அதற்காகமிகவும் வேதனைப் பட்டார். அது போல எனக்கும் ஒரு விபத்து ஏற்பட்டது.
அண்ணாமலையில் பட்டப் படிப்பு படிக்கும் போது, ஒரு நல்ல இலக்கியநண்பர் கிடைத்தார். நிறையப் படிப்பவர். ரசனை மிக்கவர். ஆனால் படைப்பாளிஅல்லர். நான் கதை எழுதுகிறேன் என்றறிந்தது முதல் என்னை மிகவும் உற்சாகப்படுத்தி எழுத வைப்பவர். முதல் ரசிகராக பத்திரிகைக்கு அனுப்புமுன்பாக கைப்பிரதியிலேயே படித்துப் பாராட்டுவார். என் இலக்கிய வளர்ச்சியில் உண்மையிலேயேஅக்கறை கொண்டவர்.
நான் அப்போது தான் ‘ஆனந்த போதினியி’ல் அறிமுகமாகி, அதில் சிலகதைகள் வந்த பிறகு, அதன் சகோதர பத்திரிகையான ‘பிரசண்ட விகடனி’ல்நிறைய எழுதிக் கொண்டிருந்தேன். அவ்விரண்டு பத்திரிகைகளின் ஆரிரியரானகாலஞ்சென்ற நாரண துரைக்கண்ணன் அவர்கள் மாணவனாக இருந்தாலும் என்கதைகளை ஏற்றுப் பிரசுரித்து வந்தார்.
ஒரு நாள் என் இலக்கிய நண்பர், தன்னிடம் ஒரு அருமையான கதைக் கருஇருப்பதாகவும், அதனைக் கதையாக்கினால் அருமையான சமூக விமர்சனமாகஅது அமையும் என்றும் சொன்னார். ‘ஒரு கலெக்டரின் செல்ல நாய் இறந்துபோகிறது. துக்கம் விசாரிக்க ஊர்ப் பிரமுகர்களும், வியாபாரிகளும் இன்னும்அவரது கடாட்சத்துக்காகக் காத்திருப்பவர்களுமாய்க் குழுமி,  நாயின் சவஅடக்கம் அமோகமாக நடந்தேறுகிறது. பிறகு ஒரு நாள் கலெக்டரே இறந்துபோகிறார். ஏராளமான பேர் துக்கம் விசாரிக்கவும், ஆறுதல் கூறவும் வரப்போகிறார்கள் என்று காத்திருக்கிற கலெக்டரின் மனைவிக்கு, ஏமாற்றமேமிஞ்சுகிறது. ஒரு காக்கை குருவி கூட எட்டிப் பார்க்கவில்லை’. இது தான் கரு.
அற்புதமான சமூக முரண் என்பதால் நான் வெகு உற்சாகத்தோடு ஒரேமூச்சில் அங்கதச்சுவை மிக்கதாய், அந்தக் கதையை எழுதி முடித்தேன். நண்பர்படித்து விட்டு, “பிரமாதமாய் வந்திருக்கிறது. உடனே பத்திரிகைக்கு அனுப்புங்கள்”என்றார். எனக்கு உடனே ஆதரவு தரும் பிரசண்ட விகடனுக்கு அன்றே பிரதிஎடுத்து கதையை அனுப்பி வைத்தேன்.
அனுப்பிய சுருக்கில் அடுத்த இதழிலேயே பிரசுரமாகிவிடும் என்று ஆவலுடன்காத்திருந்த எனக்கு, நான்கு நாளில் கதை திரும்பி வந்தது அதிர்ச்சியாக இருந்தது.ஏமாற்றத்துடன் பிரித்துப் பார்த்த போது கதையின் அடியில் இப்படி ஆசிரியரின்குறிப்பு இருந்தது:
‘நீங்கள் மாணவராக இருந்தாலும் சுயமாகச் சிந்தித்து நன்றாக எழுதுகிறீர்கள்என்பதால் உங்கள் படைப்புகள் பிரசுரிக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்தநம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டீர்கள். இனி பிறரது கதைகளை எடுத்துஎழுதாதீர்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது உதவாது!’
பிடரியில் அறைந்த மாதிரி இருந்தது எனக்கு. யாரோ மண்டபத்தில் சொன்னகவிதையைத் தன் கவிதை என்று மன்னரிடம் காட்டி, அது மறுதலிக்கப்பட்ட போதுபுலம்பிய தருமி போலப் புலம்பாதது தான் பாக்கி!
‘அற்புதமான கரு’ என்று நண்பர் சொன்னது திருட்டுக்் கருவா? நம்மீதுநாரண துரைக்கண்ணன் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இந்த இரவல்கருவை வாங்கி எழுதி, போக்கிக் கொண்டு விட்டோமே என்று இடிந்து போனேன்.உடனே நண்பரை(!)த் தேடிப் போய், சண்டை பிடித்தேன். நண்பர் அதிரவில்லை!அலட்டிக் கொள்ளாமல், ‘எனக்கு ஒரு நண்பர் சொன்ன கருதான் அது. அதைத்தான்உங்களிடம் சொன்னேன்’ என்றார் வெகு சாதாரணமாக! அதற்கு மேல் அவரதுமுகத்தில் விழிக்கக்கூட மனமின்றி, விடுதி அறைக்குத் திரும்பினேன். ஆசிரியருக்குநான் மோசம் போன கதையை பரிதாபமக விளக்கி, மன்னிப்புக் கோரி கடிதம் எழுதிதபாலில் சேர்த்து விட்டு வந்த பிறகு தான் மனம் சாந்தமடைந்தது.
பின்னாளில்தான் தெரிந்தது – அதே கதையை அநேகர் அநேக மொழிகளில் இப்படி’இலக்கிய மாரீசம்’ செய்திருக்கிறார்கள் என்று! நாராண துரைக்கண்ணன் அவர்கள் மிக்கபெருந்தன்மையுடன் என் சமாதானத்தை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை, அதற்குப் பிறகுநான் அனுப்பிய கதைகளை ‘பிரசண்ட விகடனி’ல் வெளியிட்டதன் மூலம் அறிந்தேன்.
இந்த அனுபவத்திற்குப் பிறகு, தெனாலிராமனிடம் சூடு கண்ட பூனை போல ‘இலவசகரு’ என்று யார் உதவ வந்தாலும் காத தூரம் ஓட ஆரம்பித்தேன்!          0

Series Navigationவ.உ.சி வரலாற்றின் ஊடாக வாழ்வியல்செய்திகள்ப.மதியழகன் கவிதைகள்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Comments

  1. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஓர் அருமையான பாடம். எப்போதோ படித்த, கேட்ட விசயங்கள் அடிமனதில் பதிந்து நமது சுயகருவாய் தலை எடுக்கும் மாயாஜாலத்திலிருந்து தப்புவது எப்படி? கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.

Leave a Reply to ஒ.நூருல் அமீன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *