துணைவியின் இறுதிப் பயணம் – 5

This entry is part 1 of 6 in the series 30 டிசம்பர் 2018

 

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

தோற்றம் : அக்டோபர் 24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

[21]

 

எழுதிச் சென்ற ஊழியின் கை !

 

 

முடிந்தது

அவள் ஆயுள் என

விதி

மொழிந்தால் நான்

ஏற்க மாட்டேன் !

முடிந்தது

அவள் வினைகள் எல்லாம்

என் வீட்டில் எனக்

காலன்

ஓலமிட்டால் நான்

காதில்

கேட்க மாட்டேன் !

முடிந்தது

அவள் கடமை யாவும்

இந்த உலகில் என

விதியின் கை

எழுதி இருந்தால்,

ஊழிடம்

ஒரே ஒரு வினா மட்டும்

கேட்பேன் !

அறுவை முறையை

மருத்துவர் சரியாகச் செய்து

ஒன்பது நாள்

உயிர் கொடுத்தாயே ! ஏன்

ஒன்பதாம் நாள் 

சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

சொல் ! சொல் ! சொல் !

 

++++++++++++++++

[22]

 

ஊழியின் எழுத்தாணி

 

 

எழுதிச் செல்லும்

ஊழியின் எழுத்தாணி

எழுதி, எழுதி மேற்செல்லும் !

அழுதாலும், தொழுதாலும்

வழி மாறாது !

விதி மாறாது !

நழுவிச் செல்லும்,

உந்தன்

அழுகை காணாது !

காலன் வந்து

வீட்டு வாசலில் நின்று

சிவப்பு மாவில்

கோலமிட்டுக்

குறி வைத்துப் போவான் !

எமனின் நீள் கயிறு

அவளைக் கட்டி

இழுத்துச் செல்லும்

அவளது இறுதிச்

சடங்கு

ஓலைச் சுவடியில்

ஜோதிடரால்

எழுதப்பட வில்லை, அவளது

மூளைச் சுவரில்

எழுதி வைத்துள்ளது

ஊழ்விதி !

 

+++++++++++++

 

[23] 

 

அன்னமிட்ட கைகள்.

 

 

எனக்கு

அன்ன மிட்ட கைகள்,

ஆக்கி வைத்த

கரங்கள் மூன்று !

முதலாக

முலைப் பால் ஊட்டிய

என் அன்னை !

இருபத்தி யெட்டு வயது வரை

கண்ணும், கருத்துமாய்

உண்ண வைத்து

ஊட்டி வளர்த்த தாய் !

தாயிக்குப் பின்

தாரம் !

ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

தம்பதிகளாய்க்

கைப்பற்றி

இல்லறத்தில் வாழ்ந்து

முடிந்த கதை !

மருத்துவ மனையில்

பிரியும் ஆத்மா

பிணைத்தது ஒரு கையை !

என் இடது கையை !

இணையத் துடித்த

ஆத்மாவோ

இரு கரம் பற்றி

என்னைத்

தன்வசம் இழுத்தது !

முன்பு தனியாக வாழ்ந்த

சமயத்தில்

அரிசிச் சாதம் கிட்டாத

அந்தக் காலத்தில்

முகம் சுழிக்காது, அன்புடன்

புன்னகையுடன்

பன்முறை விருந்தளித்த

பெண்மாது !

உண்டி கொடுத்தோர் வாழ்வில்

உயிர் கொடுத்தோரே.

 

++++++++++++++++++

 

[24]

[ஆயுள் சான்றிதழ்]

[Life Certificate]

 

ஓய்வு ஊதியம் பெறுவதற்கு

ஓவ்வோர் ஆண்டும்

ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்

அவசியம்.

இந்திய அரசாங்க ஆணையர்

நவம்பர் மாதம்

முதல் வாரம் அளிப்பார்

முத்திரை குத்தி !

தம்பதிகள் புறப்பட்டோம்.

இறுதிப் பயணம்.

பாதி வழியில்

இருளும் மாலை நேரத்தில்,

திடீரெனத் துணைவி

இரத்தக் குழல் குமிழி கிழிந்து

நேரும் பெரு வெடிப்பு !

உடம்பில் பூகம்பம் !

நாள் காட்டியில்

காலன் என்றோ குறித்து வைத்த

நவம்பர் ஒன்பதாம் நாள் !

அடுத்தோர் 9/11

அபாய மரண நிகழ்ச்சி

நேரும்

ஓருயிருக்கு !   

முடிவில் நடந்தது என்ன ?

எனக்குக் கிடைத்தது

அரசாங்கத்தின்

ஆயுள் சான்றிதழ்.

என்னருமைத் துணைவிக்கு

எமனின் 

மரணச் சான்றிதழ் !

 

++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன், கனடா

Series Navigationகழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *