எழுந்திருங்க தாத்தா….. ப்ளீஸ்……

author
1
0 minutes, 1 second Read
This entry is part 17 of 19 in the series 28 மே 2017

சோம.அழகு

“நுரையீரல் புற்று….நான்காம் நிலை…..இன்னும் ஆறு மாசம்தான் சார்….” – கனத்த இதயத்தோடு மருத்துவர் தாத்தாவை நோக்கி வரும் பாசக்கயிற்றின் வேகத்தைக் கணித்துக் கூறினார். அப்பாவும் கோமதிநாயகம் சித்தப்பாவும் உள்ளுக்குள் சுக்குநூறாக நொறுங்க ஆரம்பிக்கும் சத்தத்தை உணர்ந்தவராய் , “ஒரு மருந்து இருக்கு. அத குடுத்தா அப்பாவுக்கு ஒத்துக்கிடுமான்னு பரிசோதனை செய்யணும். அதோட முடிவுகள் வர பத்து நாள் ஆகும். அது மட்டும் நல்ல விதமா வந்துச்சுன்னா அந்த மருந்த வச்சு இன்னும் ரெண்டு வருஷத்துக்காவது எமன வெரட்டீரலாம்” என்றார். அந்த ஒற்றை நம்பிக்கைக் கீற்றைப் பற்றிக் கொண்டிருந்தோம் அனைவரும்.

“எங்க அப்பாவுக்குத்தான் சிகரெட் முதலான எந்த கெட்ட பழக்கமுமே கிடையாதே! அப்புறம் எப்பிடி சார்?”- அப்பா கேட்டதற்கு, “அதற்கு என்னிடம் பதில் இல்லை….ஸாரி சார்” என சுருக்கமாக முடித்துக் கொண்டாராம் மருத்துவர். யாரிடமுமே பதில் இருக்க வாய்ப்பில்லைதான். இருப்பினும் ‘என் தாத்தாவிற்கு ஏன் இப்படி?’ என்ற கேள்வி மண்டைக்குள் சுற்றிக்கொண்டே இருந்தது.

தாத்தாவின் உடல்நிலை மோசமாகி வருவது அப்பாவையும் சித்தப்பாக்களையும் தவிர வேறு யாருக்கும் (ஆச்சி தாத்தாவிற்குக் கூட) தெரியப்படுத்தப் போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. ஏனெனில் மற்றவர்களுக்குத் தெரிந்தால் வந்து பார்க்கிறேன் பேர்வழி என்று பார்வையில் பரிதாபத்தைக் குழைத்து தாத்தாவை நோகடிப்பார்கள். ஆச்சிக்குத் தெரிந்தால் ரொம்ப வருத்தப்படுவாள். அதுமட்டுமல்லாமல் அவள் தாத்தாவுடனேயே இருப்பதால் அவளது பார்வையில் இருந்து தாத்தா கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயம் இருந்தது. தாத்தாவிற்குத் தெரிய வந்தால் நமது சாதாரணப் பார்வைக்கும் அர்த்தம் கற்பிக்கத் துவங்குவார்கள். நானும் என் தங்கையும் வீட்டிலேயே வளைய வந்ததால், எங்களுக்குத் தற்செயலாகத் தெரியவந்தது.

வீட்டின் மாடியில் உள்ள பெரிய அறையில் தாத்தாவிற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. நானும் என் தங்கையும் முழுக்க முழுக்க மாடியில் தாத்தா ஆச்சியுடனேயே பொழுதைக் கழித்தோம். ஒவ்வொரு முறை தாத்தாவைப் பார்க்கும் போதும் அடக்கிய அழுகையை இரவு தூங்குவதற்காகக் கீழே வந்த பிறகு தலையணைகளைத் தொப்பலாக நனைத்துத் தீர்த்துக் கொண்டோம். கடந்த மூன்று வருடங்களாகவே பெரியவர்களிடம் பேச்சை வள்ளிசாகக் குறைத்துவிட்ட தாத்தா என்னிடமும் தங்கையிடமும் மட்டும் கொஞ்சம் பேசுவார்கள். அதிலும் தமது பணிக்கால கதைகள் என்றால் தாத்தாவிற்குத் தனி உற்சாகம் பிறக்கும். நாங்களும் நேரம் போவதே தெரியாமல் நாள் முழுக்கக் கேட்டுக்கொண்டிருப்போம். நூறு முறை தாத்தாவால் சொல்லப்பட்டாலும் இக்கதைகள் எங்களுக்கோ தாத்தாவிற்கோ ஒருபோதும் அலுப்புத் தட்டியதே இல்லை.

ஆச்சி ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்குச் சென்ற மறுநாளில் இருந்தே தாத்தாவின் உடல்நலம் வேகமாகக் குன்ற ஆரம்பித்தது. கடந்த சில ஆண்டுகளாக உண்பது உறங்குவது போக தொலைக்காட்சியின் உதவியோடு பெரும்பாலான நேரத்தைக் கஷ்டப்பட்டு ஓட்டியவர்கள் தற்போது அதற்கும் தெம்பில்லாமல் உறங்குவதிலேயே நேரத்தைக் கழித்தார்கள். ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு பின்னடைவு.

நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இறுகப்பற்றியிருந்த விரல்கள் முதன்முதலாக நடுங்க ஆரம்பித்தபோது ஒரு நொடி என் உடல் நடுங்கி அமர்ந்தது. நடையில் தள்ளாட்டம் ஏற்பட்டு ஒவ்வொரு அடிக்கும் தாத்தா எடுத்துக்கொண்ட நேரமும் அவர்களது இயலாமையும், எனது குட்டிக் குட்டிப் பாதங்கள் தத்தித் தத்தி எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டுக்கும் ஈடு கொடுத்து மெதுவாகவும் பொறுமையாகவும் உடன் வந்த தாத்தாவை நினைவூட்டியது. நான் மேலும் கீழும் ஏறி இறங்கி சீசா விளையாடுவதற்கு ஏதுவாய் ஏறி நின்ற தாத்தாவின் கால்களும் பிடித்திருந்த கைகளும் தற்போது குழலாடின. என்னை உப்புமூட்டை சுமந்த பஞ்சு போன்ற முதுகில் இப்போது முதுகெலும்பு துருத்திக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கழிவறைக்குக் கூட்டிச் செல்ல அப்பாவைத் தேடும் தாத்தா, பேத்தியாகிய என்னிடம் எல்லா தாத்தாக்களையும் போல் இயற்கையாக சங்கோஜப்பட்டார்கள். அதைக் களையும் வண்ணம், “தாத்தா! இதுல என்ன இருக்கு? சின்ன புள்ளைல நான் எத்தன தடவ ஒங்க மேல சூச்சு போயிருப்பேன். உங்களுக்கு என்ன அருவருப்பாவா இருந்துச்சு? அதுமாதிரிதான் எனக்கும். இனிமே நான் கூட்டிட்டுப் போறேன். சரியா?” என்றவுடன் “ம்ம்…” என்றவாறே கண்களின் ஓரம் எட்டிப்பார்க்க ஆரம்பித்த கண்ணீரை மறைக்கும் பொருட்டு அந்தப் பக்கமாகப் புரண்டு படுத்தார்கள் தாத்தா.

இப்படியாக ஒரு வாரம் தாத்தாவின் உடல் நிலையில் ஏற்பட்ட வேகமான பின்னடைவு எங்களை வெகுவாக நிலைகுலையச் செய்தது. ஏனெனில் இப்பின்னடைவுகள் மாதக்கணக்கிலோ நாட்கணக்கிலோ அல்ல, சிற்சில மணித்துளிகளில் ஏற்பட்டன. ஒரே நாளின் காலைக்கும் மாலைக்குமே சொல்லத் தகுந்த மாற்றங்கள். ஒரு நாள் மதியம் வரை தானாக எழுந்து அமர்ந்து சாப்பிட்ட தாத்தாவால் அன்று மாலை தேநீருக்கு எழ இயலவில்லை. எங்களது மழலைப் பருவத்தில் எங்களை அலுங்காமல் குலுங்காமல் அள்ளியணைத்துக் கொஞ்சும் தாத்தாவை நானும் என் தங்கையும் ஆளுக்கு ஒரு புறம் நின்று தூக்கி நிமிர்த்தி அமர வைத்தோம். தாத்தா அண்ணாந்து குடிக்கையில் பின்புறம் சரிந்து விடாமல் இருக்க முதுகைத் தடவி விடும் சாக்கில் கைகளால் அரண் அமைத்தோம். ‘மூப்பு என்பதே ஒரு பிணிதான்’ என்பதை தாத்தா எங்களுக்கு உணர்த்திக்கொண்டு இருந்தாலும் அதை அவர்கள் உணர்ந்துவிடாதவாறு கவனித்துக்கொண்டோம்.

ஒரு வாரம் கழித்து ஆச்சி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாள். சித்தப்பாவிடம், “அம்ம நல்லா இருக்கால்லா? எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? Very good” என்று ஆச்சியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொண்டு மீண்டும் தூங்கிப் போனார்கள் தாத்தா. உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜனைச் சரியாகச் செலுத்தாமல் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது நுரையீரல். படுக்கையிலிருந்து உன்னி எழவும் நடக்கவும் சிரமப்படுகிறார்கள் என்பதால் தாத்தாவை அடிக்கடி நடக்க வைக்க வேண்டாம் என டயாப்பர் மாட்டிவிடப்பட்டது. உணவு உண்பதையே தண்டனையாகக் கருத ஆரம்பித்துவிட்ட தாத்தாவிற்கு அன்று மாலை கொஞ்சமே கொஞ்சம் தேநீர் எடுத்துச் சென்றேன். “தாத்தா! தூக்கி உக்கார வைக்கட்டுமா? டீ குடிக்கணும்ல?” என்று கேட்டதற்கு “ம்…பொறு” என்று சைகையில் காட்டியவாறே படுத்திருந்தார்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் கேட்ட போது கஷ்டப்பட்டு என்னைப் பார்க்கப் புரண்டு படுத்து மீண்டும் “பொறு” என்னும் சைகை. சில நொடிகளில் தாத்தாவின் நெஞ்சுக்கூடு கடும் வேகத்துடன் ஏறி இறங்க ஆரம்பித்தது. 108 அழைக்கப்பட்டது. அவ்வளவு எளிதாக மருத்துவமனை செல்ல ஒப்புக்கொள்ளாத தாத்தா அன்று சம்மதித்தார்கள்……. சைகையில்தான். ஸ்ட்ரெச்சரில் தாத்தா சென்ற காட்சி….. அவ்வளவு சீக்கிரம் காண வேண்டி வரும் என எண்ணவில்லை. யாரோ தொண்டையை நெறித்துப் பிடிப்பது போல் தொண்டை அடைத்துக் கொண்டதை முதன்முறையாக உணர்ந்தேன். மனதினுள் ஒரு திகிலையும் அழுகையையும் ஒரு சேரக் கொணர்ந்த தருணம் அது. மாடிப்படியில் இறக்கிக் கொண்டிருக்கையில் கைப்பிடிச்சுவரை இறுகப்பிடித்துக் கொண்ட தாத்தாவின் கைகளை மெதுவாக எடுத்து விட்டாள் சித்தி. ஒரு சில நொடிகளில் சுனைகளாகிப் போன எனது கண்களை நன்றாகத் துடைத்துவிட்டு மேலேயிருந்து மாடிப்படியில் சென்று கொண்டிருக்கும் தாத்தாவைப் பார்த்தேன். தாத்தாவும் இறங்கும் வரை என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தாத்தாவின் மருண்ட கருவிழிகளை அதற்குமேல் காண இயலாமல் தள்ளிச் சென்று அழுது தீர்த்தேன். அவசர ஊர்தியின் அருகில் நின்ற என் தங்கையிடம், “இன்னிக்கு காலைல பரீட்சைன்னு என்ட்ட திருநீறு பூசிட்டு போனியே? நல்லா எழுதுனியா?” என்று பேத்தி பேரன்களின் பெயர் மறந்து போன அந்த நிலைமையிலும் ஞாபகமாகக் கேட்டார்கள். “ஆமா தாத்தா…. நல்லா எழுதிட்டேன்…..” – அதற்கு மேல் நா எழாமல் அவசர ஊர்தி கிளம்பும் முன்னரே அழுது கொண்டே வீட்டிற்குள் ஓடிச்சென்று அறையைத் தாழிட்டுக் கொண்டாள்.

மாடியில் இருந்து நான் தாத்தாவைப் பார்த்ததும் தாத்தா தங்கையிடம் தேர்வு பற்றி பேசியதும் கடைசியாக இருந்துவிடக்கூடாது என மனதினுள் நான் கரைந்து கூப்பாடு போட்டதை எந்தத் தெய்வமும் கண்டுகொள்ளவில்லை போலும். மறுநாள் அதிகாலை, தாத்தா மருத்துவமனையிலேயே……… . ஆறு மாதங்கள் என்ற மருத்துவரின் கணக்கும் பொய்த்துவிட்டது. மூன்றே வாரங்கள்தான். முதன்முதலாக எங்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பேரிழப்பினை எதிர்கொள்ள எங்களை நன்றாகவே தயார் செய்திருந்தார்கள் தாத்தா. எங்களுக்குத்தான் மனத்திடம் போதாது போலும். தாத்தா அடிவயிற்றில் இருந்து இருமும்போது நெஞ்சலும்பு பாதி வெளிவருவதைக் காண்கையில் எனக்கே வலியெடுக்கும். கேட்டால் ‘ஒன்னுமில்ல….ஒன்னுமில்ல…’ என்பார்கள். கடைசியாக ஏற்பட்ட மூச்சுத்திணறலின் போதும் இதே பதில். ‘வலி’ என்ற சொல்லைத் தாத்தா அறிந்திருந்தார்களா? மருத்துவமனையிலும் கூட , “நான் நல்லா இருக்கேன்டா…. இந்த ஆக்ஸிஜன் மாஸ்க் எதுக்கு? சிரமமில்லாமதான் மூச்சு விடுறேன்” என்று இறுதி மூச்சு வரை எங்களைத் தேற்றி எங்களுக்கு தைரியம் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ‘மரண பயம்’ என்ற ஒன்று தாத்தாவிடம் எப்போதுமே வெளிப்பட்டதில்லை. மருத்துவ ஆலோசனையின் போது அப்பா மருத்துவரிடம், “சார்….ஒருவேளை அந்த மருந்து வேலை செய்யாதுன்னு ரிசல்ட் வந்ததுன்னா அப்பாவோட கடைசி காலம் வலி இல்லாததா இருக்கட்டும்….. அதுக்கான மருந்தையாவது கொடுப்போம்” என்று தாத்தாவின் உடல்வலியைக் குறைக்கக் கேட்டிருந்தார்கள். தாத்தாவோ எங்கள் மன வலியைக் குறைக்கத் தமது இறுதி நொடியை, எங்களை நேரில் பார்க்க வைத்து வருத்தத்தை அதிகப்படுத்த விரும்பாமல், தனிமையில் கழிக்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்று விட்டார்கள். ‘வயதானாலே ஏதாவது ஒன்று வந்துதான் தீரும்’ என்பதெல்லாம் ஓட்டை வாதமாகப் படுகிறது. புற்றுநோய் – இதெல்லாம் ஒரு காரணமா? எனக்கு என் தாத்தா பழைய மாதிரி ஆரோக்கியமாக வேண்டும். அவ்வளவுதான்.

அதிகாலையில் தாத்தா வீட்டிற்குக் கொண்டுவரப்படுகையில் கண்கள் மூடியிருந்தது. முந்தைய நாள் மாலை இதே கண்கள் வெறித்த பார்வையோடு என்னிடம் என்ன சொல்ல நினைத்தன? ஐயோ….. நீங்கள் திரும்பி வந்த பின் கேட்கலாமென்று நினைத்தேனே! மருத்துவமனையில் இறுதி வரை உங்கள் கைகளைப் பற்றியிருக்கக் கூட கொடுத்து வைக்கவில்லையா எனக்கு? சாய்வு நாற்காலியில் சாய்ந்திருக்கும் தாத்தாவின் அன்பான அரவணைப்பில் நிம்மதியாக உறங்கிய காலத்தில் எனக்குக் கதகதப்பளித்த நெஞ்சு இப்போது சில்லிட்டிருந்தது. தாத்தாவின் பரந்து விரிந்த தோள்களை விட உலகில் பாதுகாப்பான இடம் இருக்க இயலாது என்ற எனது நம்பிக்கை தாத்தாவின் குறுகிப் போன தோள்களால் ஏளனம் செய்யப்பட்டது. தாத்தாவை ஐஸ் பெட்டியில் வைத்த சிறிது நேரத்தில் வாய் தானாக மூடிக்கொண்டவுடன் சிறுபிள்ளைத்தனமான நைப்பாசையில் மேலே கிடந்த மாலைகளை விலக்கி தாத்தாவின் வயிற்றையே உற்று நோக்கிக் கொண்டிருந்தேன், தாத்தா மூச்சு விடுகிறார்களா என அறிய. என்னையும் அறியாமல் எவ்வளவு நேரம் நின்றேன் எனத் தெரியாது. “ஐயா! ராசா! நான் இருக்க நீ போய்ட்டியே? இதக் காணவா இன்னும் இருக்கேன்? எனக்கு கொள்ளி போட நீ இருக்கேன்னு தெம்பா இருந்தேனே?” என்று உருக்கமாக ஒப்பாரி வைத்த பூட்டி ஆச்சியின் குரல்தான் என்னை உசுப்பியது. சுற்றி இருப்பவர்கள் பொய்யுரைக்கிறார்கள். தாத்தா என்னிடம் விளையாட்டு காட்டுகிறார்கள். எவ்வளவு நேரம்தான் விளையாடுவார்கள்? பார்த்துவிடுவோமே…… அன்று மாலை வரை முகம் வீங்க அழுத போதும் உண்மையை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இதுபோன்ற செய்திகளை மூளையில் இருந்து மனதிற்குக் கடத்துவதுதான் பெரும்பாடாக இருக்கும். ஆனால் என் மூளையே இச்செய்தியைத் தொடர்ந்து நிராகரித்து வந்தது.

“என்னைய நல்லா ஆக்கி வச்சுட்டு போய்ட்டீகளா?” என்று அழுத ஆச்சி ஒரு கட்டத்திற்கு மேல் அழவும் சக்தியற்று விரக்தியுடன் அமர்ந்திருந்தாள். தாத்தா – ஆச்சி ஆதர்ச தம்பதி என்றெல்லாம் சொல்ல முடியாது. தமது உள்ளார்ந்த அன்பை பெரிதாய் வெளிப்படுத்தியதில்லை. ஆனாலும் பாசமும் அக்கறையும் இருவருக்குள்ளும் உறைந்திருந்தது அத்தருணத்தில் வெளிப்பட்டது. ஆச்சி ஊர் திரும்பும் நாள் வரை தாத்தா உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருந்தார்கள் என்றே தோன்றியது. அன்று துக்கத்தைப் பலரும் பலவாறாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தாத்தாவிடம் ஒட்டுதல் உள்ள சிலர் தாத்தாவைப் பார்ப்பதும் அழுவதுமாக இருந்தோம். “மேலே இருக்குற கண்ணாடிய கொஞ்சம் எடேன்” – தாத்தா ஒருமுறையாவது இப்படி சொல்லிவிட மாட்டார்களா எனத் துடித்தது மனது. அப்பாவும் சித்தப்பாக்களும் மருத்துவமனையில் அழுததை சிவந்தும் வீங்கியும் இருந்த கண்கள் காட்டிக் கொடுத்தன. ‘ஆண்கள் அழக்கூடாது’ என இந்த முட்டாள் சமூகம் கிறுக்குத்தனமாக வகுத்து வைத்திருப்பதனால் சொந்த பந்தங்கள் வந்த பிறகு அழ இயலாது துக்கத்தை அடக்கிக் கொண்டு வருபவர்களைக் கவனிப்பதும் சடங்குகளுக்கான வேலைகளில் மூழ்குவதுமாக இருந்தனர். நேரம் கிடைத்த போதெல்லாம் கிடைத்த இடத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கைகளைக் கொண்டு கண்களை மறைக்கும் வண்ணம் நெற்றியில் கை வைத்து யாரும் அறியாத வகையில் அமைதியாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அடுத்த வேலைக்கென யாரேனும் அழைக்கையில் முகத்தைத் துடைக்கும் சாக்கில் கண்களை அழுத்தித் துடைத்து எழுந்து சென்றார்கள். அப்போது தெறித்த ஒன்றிரண்டு கண்ணீர்த்துளிகளில் மலையளவு சோகம் பொதிந்திருந்தது.

குடும்ப நண்பர்கள் கூட உள்ளார்ந்த அன்புடனும் கரிசனத்துடனும் அனுதாபங்களாய்த் தெரிவித்து வருத்தப்பட்டார்கள். சில சொந்த பந்தங்களோ ‘ரொம்ப நாளா ஒடம்புக்கு முடியாம இருந்தாகளோ?’ எனக் கேட்டு அதற்கென நாம் கூறுபவற்றைப் பெரிய மனதுடன் கேட்டு முடித்த பின், மற்றொரு பக்கமாகத் திரும்பி அமர்ந்து அவர்களுக்குள் ‘ஒம் புள்ள எந்த கிளாஸ்/காலேஜ்?’ , ‘எத்தன மார்க்?’ , ‘என்ன குரூப்பு?’ , ‘பொண்ண எங்க கட்டி குடுத்துருக்க?’ என்பன போன்ற ‘அக்க்க்க்கறையான’ விசாரிப்புகளின் மூலம் துக்கத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்!!!!! தாத்தா கிடத்தப்பட்டிருந்த ஐஸ் பெட்டி – அருகே நாற்காலியில் உலகமே சூன்யமாகிப் போன பார்வையுடன் ஆச்சி – சுற்றிலும் தரையில் அமர்ந்து கதை பேசும் கூட்டம்!?!? இதை எப்படி எடுத்துக் கொள்வது எனப் புரியவில்லை. ஆனால் வலித்தது, கோபம் வந்தது, இன்னும் என்னென்னவோ செய்தது. முன்பெல்லாம் துக்க வீட்டில் ஒப்பாரி வைப்பார்கள். பிற்காலத்தில் யாரும் அழுவதில்லை. மௌனமாய் அமர்ந்திருந்தார்கள். இப்போது இவ்வளவு சகஜமாய் ஊர்க்கதை……. என் தாத்தாவின் பிரிவிற்காய் வருத்தப்படாதவர்களுக்கு இங்கு என்ன வேலை? தாத்தாவின் பிரிவு எங்களுக்கு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். மற்றவர்களுக்கு அது வெறும் செய்தி, அவ்வளவே! இச்’செய்தி’யைக் கேட்டதும் ‘உள்ளேன் ஐயா’ சொல்ல வந்தவர்களின் மீது எரிச்சலே வந்தது. பிரிந்த ஓர் உயிருக்காக உள்ளத்திலிருந்து அழும் பிரியமானவர்கள் சிலர் இருப்பார்கள். இந்த ‘உள்ளேன் ஐயா’ கோஷ்டிகள் வருத்தப்படாவிட்டாலும் பரவாயில்லை. வருத்தப்படுபவர்களின் முன் சிரித்துப் பேசி புண்படுத்தாமலாவது இருக்கலாமே? அல்லது சிறிது நேரத்திற்குச் சோகமாக இருப்பதைப் போல நடிக்கக் கூடவா முடியாது?

மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்றுதான் தாத்தாவிற்கு சடங்குகள் செய்யப்பட போகின்றன என்பதே உறைக்காமல் ‘தாத்தா உறங்குகிறார்கள்’ என்பதை மனது இப்போது முழுமையாக நம்பத் தொடங்கியது. மூளையோ எதையும் பகுத்துப் பார்க்கும் மனநிலையில் இல்லை. தாத்தாவின் முகத்தில் எப்போதுமே கண்டிராத மனதிற்கு இதம் தரும் ஒரு அமைதி. அப்படி என்ன ஆழ்ந்த உறக்கம்? எந்திரி தாத்தா….. ஏதாவது பேசு….. என்ன திட்டவாச்சும் முழியேன்…… ரொம்ப நேரம் தூங்கிட்ட….. போதும் நடிச்சது…. பயமா இருக்கு தாத்தா…. சின்னப் பிள்ளையா இருக்கும்போது சொன்ன மாதிரி என் விரலை பிடிச்சு ‘பயப்படாத’னு சொல்லு…… முழிச்சுக்கோ…..ம்ஹூம்…அசைந்தே கொடுக்கவில்லை. சுப்பராயனா? கொக்கா? தாத்தாதான் பிடிவாதக்காரர்களாயிற்றே?

ஆண்கள் நீர்மாலைக்குக் கிளம்பினார்கள். முதல் சங்கு சத்தம் உடலினுள் இருந்து எதையோ உருவி வெளியே எறிந்ததைப் போல இருதயத்தைத் திருகியது. கண்கள் சில நொடிகளுக்கு இருண்டு மீண்டது. தாத்தாவுடனான கடைசி சில மணித்துளிகள் என்பதை உணர்த்திய முதல் அபாயச் சங்கு. அப்போது அப்பாவின் கைபேசி ஒலித்தது. பரிசோதனையின் முடிவு பற்றிக் கூறினார்கள். “அந்த மருந்து குடுக்கலாம் சார்…. கண்டிப்பா வேலை செய்யும்”. தாத்தாவிற்கான உடல்நலக் குறைவை சீக்கிரமே கண்டுபிடித்திருக்கலாம். சீக்கிரமே பரிசோதனைக்கான முடிவு வந்திருக்கலாம். சீக்கிரமே மருந்து கொடுத்திருக்கலாம்……லாம்…..லாம்….லாம்….அந்தக் கணத்தின் கனத்தைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

தாத்தாவிற்குப் பேத்திகள் செய்யும் சடங்குகள் முடிந்த பின் அப்பாவைத் தனியாக அழைத்துச் சென்று, “அப்பா! நானும் உங்க கூட மயானத்துக்கு வரேனே. தாத்தா கூட கடைசியா ஒரு பயணம். பிளீஸ் பா….”. “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லடா…. நீ தாரளமா வரலாம். ஆனா பெண்பிள்ளை நீ வேன்ல ஏறுறதப் பாத்தா இந்தக் கூட்டம் ‘ஓ ராமா’னு அலறும். இங்கயே தாத்தாவுக்கு பை பை சொல்லிடுடா…. ஸாரிடா…”. கலங்கிய கண்களும் வெற்றுச் சிரிப்புமாக நகர்ந்து கொண்டேன்….. இந்தக் கூட்டத்திற்கு பயந்து அல்ல. நாளை எனக்கு தரப்போகும் ‘திமிர்பிடித்தவள்’, ‘அடங்காப்பிடாரி’ பட்டங்களையும் தாண்டி, தாத்தாவின் பெயரைச் சொல்லி அவர்களது சடங்குகளில்தான் இப்படி செய்துவிட்டேன் என தாத்தாவின் பெயரைக் களங்கப்படுத்துவார்கள் என்ற ஓரே காரணத்திற்காக என்னை நானே நொந்து ஒதுங்கிக் கொண்டேன்.

ஆணாய்ப் பிறக்காததற்காய்…….. அதிலும் இச்சமூகத்தில் ஆணாய்ப் பிறக்காததற்காய் முதன்முறையாகக் கண்ணீர் விட்ட தருணம் அது. அன்பையும் பாசத்தையும் மீறிய அர்த்தமற்ற சடங்குகள் யாருக்காக? எதற்காக? எவ்வித உணர்வுகளுமின்றி நின்ற சிலருக்காக நான் ஏன் கட்டுகளையும் வழக்கங்களையும் பின்பற்றிப் பாதுகாக்க வேண்டும்? என் தாத்தா….நான் போகிறேன். இவர்களுக்கென்ன போச்சு…..? மிஞ்சி மிஞ்சிப் போனால் கண்களை உருட்டி உருட்டி, “பொம்பளப் புள்ள அங்கல்லாம் போகக் கூடாது… கூடாதுன்னா கூடாது” என்று பூச்சாண்டி காட்டி ஏமாற்றுவதைத் தவிர வேறு என்ன தெரியும் இவர்களுக்கு?

தாத்தாவிற்கு யாராவது அழுதால் பிடிக்காது. தாத்தாவைத் தூக்குகையில் ‘ஓ’வென்று நாங்கள் கதற ஆரம்பிக்கவும் மேகம் இருண்டு இடி மின்னலுடன் மழை பெய்யவும் சரியாக இருந்தது. மழையென்றால் சாதாரண மழையல்ல….கோடை மழை, பலத்த மழை. எங்கள் கண்ணீர் இனங்காண இயலாத அளவிற்கு மழைத்துளிகளோடு கரைந்து சென்று கொண்டிருக்க எங்கள் அழுகுரலை இடி முழுவதுமாய் உள்வாங்கிக்கொண்டது. தாத்தா நாங்கள் அழுதது தமது காதுகளில் கேட்காதவாறு பார்த்துக் கொண்டார்களோ? அதற்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் சுட்டெரித்த வெயிலுக்கு நடுவில் மிகச் சரியாக அன்று அப்பொழுதில் பெய்த மழை இன்னும் புரியாத புதிர்தான். வீட்டின் முன் உள்ள சாலையின் இடது புறத்தில் தாத்தா கம்பீரமாக நடந்து வீட்டை நோக்கி நடந்து வர, எட்டு வயதுள்ள நான் அவர்களது கைகளில் எனது மணிக்கட்டை ஒப்படைத்துவிட்டு எவ்விதக் கவலையுமின்றி துள்ளிக் குதித்து நடை போட்டு உடன் வந்துகொண்டிருக்கிறேன். சாலையின் வலது புறம் தாத்தா மட்டும் வினோதமான கோலத்தில் ஒரு கூட்டத்தால் இட்டுச்செல்லப்படுகிறார்கள். இரு காட்சிகளும் ஒரு சேரத் தோன்றி தலை சுற்ற ஆரம்பித்தது. இடது புறம் மட்டுமே நிஜமாகவும் வலது புறம் பொய்யாகிப் போகவும் ஆசைப்பட்டு ஸ்தம்பித்து நின்றேன். ஆனால் கண்களோ தம் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்ததைக் கண்ட (தாத்தா வளர்த்த) வேப்பமரங்கள் அங்குமிங்குமாக ஆடி இலைகளை உதிர்க்கச் செய்து என் கண்களின் ஓரம் பெருகிய நீரைத் துடைத்துச் சென்றன.

வீட்டிற்குள் அழுது கொண்டே செல்ல ஒவ்வொருவராக “தாத்தா கஷ்டப்படாம போய்ட்டாகன்னு நினைச்சுக்கோ” , “82 வயசு வரை தாத்தா ஒங்க கூட இருந்ததே பெரிய ஆசீர்வாதம்” அப்படி இப்படி எனப் பல விதமாக ஆறுதலுரைக்க முற்பட்டார்கள். தாத்தாவிற்கு 100 வயதில் உடம்பிற்கு முடியாமல் போனால் கூட எனது 45வது வயதிலும் இதே மாதிரிதான் அழுவேன். தாத்தாவிற்கான காலம் எவ்வளவு நீட்டிக்கப்பட்டாலும் போதாது எனக்கு. இந்த விஷயத்தில் ‘பிராக்டிகலா யோசி’ என்பதில் அர்த்தமே இல்லை. அப்படிப்பட்ட வறட்டுத்தனமான நிதர்சனம் எனக்கு வேண்டாம். அவர்கள் பேசுவது எதுவும் என் காதில் விழாமல் மனது இவ்வாறாக ஓடிக்கொண்டிருந்தது. திடீரென தாத்தாவின் அறையைச் சுத்தம் செய்வது பற்றிய பேச்சுக்கள் காதில் விழ, என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர்களை மறந்து அனைவரையும் இடித்துத் தள்ளி தாத்தாவின் அறைக்கு ஒரே ஓட்டமாக ஓடினேன். தாத்தா இறுதியாகப் பற்றியிருந்த கைப்பிடிச் சுவரைச் சிறிது நேரம் பற்றியிருந்தேன். சுவர் ரகசியமாக என்னிடம் கதைத்தது…..தாத்தா அன்று பிடித்திருந்தது தாம் கட்டிய வீட்டை இறுதியாக ஆசையோடு தடவிப் பார்க்க என்று. ஏங்கியவாறே மேலே சென்று அறைக்கதவில் கை வைத்தேன். “தாத்தா இல்லாத இந்த அறையின் வெறுமையைத் தாங்குவாயா?” – மூளை எச்சரிக்கை தொனியில் கேட்டது. படாரென கதவைத் திறந்து டெட்டால் மற்றும் மருந்து நெடிகளுக்கிடையில் தாத்தாவின் வாசத்தைத் தேடினேன். நடு அறையில் கண் மூடி நின்று முழுமையாக நுகர்ந்தேன். கண்கள் திறக்கையில் கைகள் கன்னத்தைத் துடைத்துக் கொண்டன. தாத்தாவின் கைகளில் கடைசி வரை தவழ்ந்த கைபேசியைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். முந்தைய நாள் வாங்கப்பட்ட புதிய டயாப்பர் பாக்கெட்டுகளின் அருகில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார்கள் தாத்தா. “எனக்கெல்லாம் இது சரிபட்டு வராது. இத மாட்டுற நெலம வந்ததுக்கப்புறமும் நான் இருக்கணுமோ? போதும் போதும்…போங்கடா போக்கத்த பயலுகளா…..” …..எக்காளச் சிரிப்பு. கீழே யாரோ ஏறி வரும் சத்தம். இறுதியாக ஒரு முறை தாத்தாவை உணர முற்பட்டேன். என் வாழ்வில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதை எண்ணியவாறே ஓர் ஆழ்ந்த உணர்வுப்பூர்வமான ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் தாத்தா படுத்திருந்த கட்டிலைப் பார்த்தேன். படுத்திருந்த தாத்தா துள்ளி எழுந்து அமர்ந்து, “என்னய தாங்குறதுக்கு அந்த ஒடம்புல இதுக்கு மேல சக்தியில்ல…. தூக்கி எறிஞ்சிட்டேன்…. அதான் ஒம் மனசுல பெரிய்ய்ய்ய (கைகளை விரித்து கண்களை அகலமாக்கியவாறே கூறினார்கள்) எடம் குடுத்துருக்கியே? அப்புறம் எனக்கு வேறென்ன வேணும்?”.

“நான் சாகற வரை என் கூடவே இருப்பீங்கள்ல தாத்தா? பிராமிஸ்….”

தாத்தாவின் அலைபேசியில் மாலை 6 மணிக்கும் (!) அலாரம் ரீங்காரமிட்டு ஆமோத்திதது.

நிஜமாகவே அலைபேசிதானா?

– சோம.அழகு

Series Navigation“மும்பை கரிகாலன்”சீதா கவிதைகள்
author

Similar Posts

Comments

  1. Avatar
    பேரா.ந.கிருஷ்ணன் says:

    எழுந்திருங்க தாத்தா… ப்ளீஸ்……
    ..படிக்கவே முடியவில்லை!
    பனிக்கும் கண்கள் விழித்திரையை மறைத்ததனால்
    படிக்கவே முடியவில்லை!
    பனித்திரையில் பாசில்தந்த ‘பூவே பூச்சூட வா!’ கண்கள்
    பனிக்க வைத்து உயிர்ப்பு கொண்ட நிகழ்வு தந்த சோகம்!
    பதைக்க உன்னைத் தவிக்கவிட்டு படிந்த உயிர் பறந்தது!
    பாசப்பிணைப்பில் பேத்தி என்றாலும் நீதான் அவர் தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *