ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை

author
0 minutes, 3 seconds Read
This entry is part 10 of 10 in the series 26 செப்டம்பர் 2021

அழகியசிங்கர்


 

            கு.ப.ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ கதையைத் தொடர்ந்து சிட்டி ‘அந்திமந்தாரை’ என்று கதை எழுதி உள்ளார்.  இந்தக் கதையைப் படிக்கும்போது கு.ப.ரா கதைக்குப் பதில்சொல்வதுபோல் தோன்றுகிறது.

          முப்பதுகளில் ஒரு கல்யாணமான பெண், கணவன் இல்லாதபோது கணவனின் நண்பனுடன் பேசுவதைக் கணவன் விரும்பமாட்டான் என்பதுபோல் படுகிறது.

          சிட்டியின் அந்திமந்தாரையிலும் நண்பர்கள் வைத்து கதைதான்.

பட்டாபியைப் பார்க்க சேஷாத்திரி வருகிறான்.  பட்டாபி இல்லை. சேஷாத்திரி மாடிப்படியில் ஏறி கதவைத் திறந்தான்.  பட்டாபியின் மனைவி புடவை த் தலைப்பை முழங்கையால் சரி செய்து கொண்டாள். திடுக்கிட்டுப் பின் வாங்கினான் சேஷாத்திரி.

          பட்டாபி வரவில்லையா என்று கேட்டான் சேஷாத்திரி.  அதற்குப் பதில் சொல்லவில்லை பட்டாபி மனைவி.  ஆனால் எதையோ சொல்வதுபோல் தோன்றியது.  

          சேஷாத்திரி அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டான். சேஷாத்திரி போய்க்கொண்டே எப்போது பட்டாபி வருவான் என்பதைக் கேட்க மறந்து விட்டோமே என்று தோன்றியது. 

          புது மனுஷி.  அவளிடம் என்ன சொல்வது என்று அவனுக்குத் தோன்றியது.

கால்மணிநேரம் கழித்து பட்டாபி வருகிறான்.  மளிகைக் கடையிலிருந்து.  

          ‘கடுகு வாங்க மறந்து விட்டேளா?’ என்று கேட்கிறாள் பட்டாபி மனைவி.  ஆற்று மணலில் சேஷாத்திரி உலாவிக் கொண்டிருக்கிறான்.எப்போதும் அவனுடைய நண்பன் பட்டாபியை அங்குச் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பான்.  

 

          பட்டாபி மனைவி காமாட்சி அவனுடைய நண்பன் வந்ததைப் பற்றிச் சொல்ல மறந்து விட்டாள்.  அதை அவள் முக்கியமாகக் கருதவில்லை.  பட்டாபி அவளை சினிமாவிற்கு அழைத்துக்கொண்டு போகிறான்.

          சினிமா முடிந்து ஜட்கா வண்டியில் பட்டாபியும் காமாட்சியும் திரும்பி வரும்போது ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தச் சொல்கிறான் பட்டாபி.   சேஷாத்திரியைப் பார்த்து விடுகிறான்.  அவனை ஓடிப்போய்ப் பிடிப்பதற்குள் அவன் ஒரு சந்தில் திரும்பிவிடுகிறான்.

          “அவன் யார்?” என்று காமாட்சி கேட்க, “சேஷாத்திரி” என்று பதில் சொல்கிறான்.  

          “நீங்கள் கடைக்குப் போய்விட்டு வருவதற்குள் இவர் வந்தார்,” என்கிறார் காமாட்சி. 

          பட்டாபிக்கு மனைவி மீது கோபம் வருகிறது.  “நண்பன் வந்திருக்கிறான் ஏன் சொல்லவில்லை?” என்று.

          “சினிமாவுக்கு வந்ததற்கு வெட்கமில்லையா?” என்று கூக்குரலிடுகிறான். 

          “நீங்க வந்தவுடன் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்,” என்றாள்.  அதைக் கேட்டு அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அவளுடன் பேசவில்லை.

          சிட்டி எழுதுகிறார் இப்படி.

          ‘காமாட்சி சுவரோரத்தில் தலைகுனிந்தவாறு நின்று கொண்டிருந்தாள்.  கால் கட்டைவிரலில் இரண்டு துளி கண்ணீர் சொட்டின’. 

          அவள் வருந்தினாள்  ஆனால் புதிதாகப் பார்க்கும் ஒருவரிடம் தான் எப்படிப் பேசியிருக்கக் கூடும் என்று அவளுக்குத் தோன்றுகிறது. சேஷாத்திரி வந்துவிட்டுப் போனதை சொல்லாமலிருந்தது அவளுக்கு உறுத்தலாக இருந்தது.

          அடுத்தாள் பட்டாபியைப் பார்த்துவிட வேண்டுமென்று நினைக்கிறான் சேஷாத்திரி.  பட்டாபியும் அவனைப்  பார்க்க தல்லாக்குளம் வருகிறான்.  சேஷாத்திரி பட்டாபியைப் பார்க்க ஊருக்குப் போகிறான்.

          திரும்பவும் பட்டாபி வீட்டில் இல்லை.  “இன்னும் வரவில்லையா?” என்று கேட்கிறான் காமாட்சியைப் பார்த்து.  உடனே காமாட்சி சுதாரித்துக் கொண்டாள்.  அவனை எங்கும் போக வேண்டாமென்றும், இன்னும் சிறிது நேரத்தில் பட்டாபி வந்து விடுவான் என்று சொன்னாள்.  அவர் உங்களைக் காத்திருக்கச் சொன்னார் என்று சொன்னாள்.

 

          காமாட்சி மீது கோபம் தீர வில்லை.  அவளைப் பார்த்துப் பேசவில்லை.  சேஷாத்திரியும் பட்டாபியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  கிளம்பும் சமயத்தில் உள்ளே போய் சட்டையை மாட்டிக்கொள்ள வருகிறான்.

          அவர்கள் இருவரும் சாப்பிட இரண்டு இலைகளைப் போட்டு தண்ணீர் வைத்திருக்கிறாள். அவரையும் சாப்பிடச் சொல்லுங்கள் என்கிறாள்.  இது அவனிடம் சொல்லாமலேயே செய்தது.

சேஷாத்திரியும் பட்டாபியும் சாப்பிடுகிறார்கள்.  சேஷாத்திரி ஆங்கிலத்தில் ‘சாப்பாடு நன்றாக இருந்தது’ என்றான்.

          காமாட்சி வெற்றியின் பலனான அலட்சியத்துடன் இந்த சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்தாள் என்று முடிக்கிறார் சிட்டி.

          இந்தக் கதையைப் படிக்கும்போது இரண்டு வித கோணங்களில் ஒரே கதையை எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. 

          மணிக்கொடி காலத்தில் இப்படியெல்லாம் ஒரே கதையை இரண்டு வித கோணத்தில் எழுதிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

          கு.ப.ரா கதையில் பெண்ணியத்தைப்பற்றி இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் என்று வரும்.  சிட்டி கதையில் அதெல்லாம் கிடையாது. 

          ஒரு இடத்தில் புகைப்படத்தில் உங்களுடன் இருப்பவர் உங்கள் நண்பர் சேஷாத்திரியா?’ என்று கூறுகிறாள் .  ஆனால் நேரிடையாக சேஷாத்திரியைப் பார்க்கும்போது ஏன் அவளுக்கு அடையாளம் தெரியவில்லை.

          கல்யாணம் ஆகி ஒருவாரம்தான் குடும்பம் நடத்துகிறான் பட்டாபி.  ஆனால் சேஷாத்திரியோ அவன் திருமணம் செய்துகொண்டபின் பட்டாபியையும், அவன் மனைவியையும் பார்க்கவில்லை என்று வருகிறது. சேஷாத்திரியுடன் பழக்கம் பட்டாபிக்கு 6 மாதமாகத்தான் ஒரு இடத்தில் வருகிறது.

          கால சுப்ரமணியனின் குறிப்பையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

          ‘சிட்டி சொன்ன நிகழ்வைக் கேட்டு, நான் இதை ஒரு சிறுகதையாக்குகிறேன் என்று கு.ப.ரா சொல்ல, நானே எழுதுகிறேன் என்று சிட்டி சொல்ல, அதனாலென்ன அவரவர் போக்கில் இருவரும் எழுதலாம் என்று கு.ப.ரா சொல்லி  ஒரே சமயத்தில் தனித்தனியா எழுதப்பட்ட கதைகள். கனகாம்பரமும், அந்திமந்தாரையும் குபராவின்  பாணிக்குக் கச்சிதமாக இந்த நிகழ்வு கதையாகி அவரது சிறந்த கதையாகியது கனகாம்பரம்.  சிட்டியின் பாணியில் அமைந்த கதையல்ல அந்திமந்தாரை.  ஆனால் சிட்டி எழுதிய சிறுகதைகளில் அந்திமந்தாரை மட்டுமே நல்ல கதையாக வந்திருக்கிறது. 

          சிட்டியின் புதல்வர் வேணுகோபாலன் கூறியதிலிருந்து.          கு.ப.ரா வீட்டிற்குச் சிட்டி போனார்.  அப்போது கு.ப.ரா இல்லை. உடனே திரும்பி விட்டார். நண்பர் வந்ததை வைத்துக்கொண்டுதான் கனகாம்பரம் என்று கு.ப.ரா எழுத, சிட்டியும் அந்திமந்தாரை என்று கதை எழுதினார்.                 சிறுகதைகளை கு.ப.ராவும் சரி, சிட்டியும் சரி, சிறப்பாகவே எழுதியிருக்கிறார்கள்.

         

 (25.09.2021)

Series Navigationகுரல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *