ஒரு கதை ஒரு கருத்து  மா. அரங்கநாதனின் பூசலார்

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 13 in the series 21 பெப்ருவரி 2021

 

அழகியசிங்கர்

 

 

         

      இந்தக் கதை சற்று வித்தியாசமானது.  இந்தக் கதையின் தலைப்பு எந்தவிதத்தில் கதையுடன் பொருந்தி வருகிறது என்பது தெரியவில்லை.

          நான் பார்த்தவரை கதையிலிருந்து கதையை வெளியேற்றுவதுதான் மா.அரங்கநாதனின் உத்தி என்று தோன்றுகிறது.

          பூசலார் என்ற கதையைப் படிப்பவருக்குப் பல சந்தேகங்கள் எழும்.  ஏன் மா. அரங்கநாதன் கதைகளில் பல சந்தேகங்கள் வரத்தான் வரும். 

          முத்துக்கறுப்பன் என்ற பெயர் இவர் கதைகள் முழுவதும் நிரம்பி வழிகிறது. 

 

          23 வயது இளைஞன் முத்துக்கறுப்பன்.

          கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டு அவன் ஊருக்கு வருகிறான்.

          தாயார் எதுவும் தெரிவிக்கவில்லை.  கடைத்தெருவில் மாமனைப் பார்க்கிறான். மாமா வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார். மாமன் மீது மரியாதை அதிகம்.  உறவு முறையாக அவன் பேசும்போது இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்று தோன்றும்.அவன் ஊருக்கு வந்ததே அவர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகத்தான்.

          ஆனால் கடைத்தெருவில் மாமாவைப் பார்த்தபோது  அவர் பெண் வடிவை வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிக்கப் போகிறேன் என்று குறிப்பிடுகிறார்.  “இப்ப உனக்கு வேற இடம் பார்க்கணூம்..வடிவுக்கும் வேற இடம் அமைஞ்சிருக்கு..” என்று சாதாரணமாகப் பேசிவிடுகிறார்.  

      “உனக்கு வேற இடம் பார்க்க வேண்டும்,” என்று கூறும்போது முத்துக்கறுப்பன் அவனுடைய தகப்பனாரை நினைத்துக்கொள்கிறான்.

          ஒருமாதம் லீவு முடிந்து காஞ்சிபுரம் திரும்பியதும், அலுவலக நண்பர்களிடம் மன்னிப்பு கோரினான். யாருக்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று.

          இங்கு முத்துக்கறுப்பன் பொய் சொல்கிறான்.  தனக்குத் திருமணம் நடந்து விட்டதாக.  மனைவியை 3 மாதம் கழித்து அழைத்து வரப்போவதாகவும் கூறுகிறான். இந்தப் பொய் ஏன் கூறுகிறான் என்பது இந்தக் கதையில் ஆச்சரியமாகிறது.  உண்மையில் அவன் நாடகமாடுகிறான்.  மனைவியை அழைத்து வரப்போவதால் தனி வீடு பார்க்க வேண்டுமென்று கூறி தனி வீடு பார்க்கிறான்.  அங்கு குடிபோகிறான். வீட்டுக்காரர்களிடமும் மனைவியை 3 மாதம் கழித்து அழைத்து வரப்போவதாகக் கூறுகிறான்.

          இதைப் பொய்யாக முத்துக்கறுப்பன் நினைக்கவில்லை.  இதனால் எந்தக் கவலையோ, பயமோ இல்லாதிருந்தான்.  அதை அமைதி என்பதைத் தவிர வேறு எப்படிச் சொல்ல முடியும் – அமைதியான ஒருவன் சொல்வது எப்படிப் பொய்யாகிவிட முடியும் என்றெல்லாம் முத்துக்கறுப்பன் குறித்து கதையாசிரியர் குறிப்பிடுகிறார். 

          அவன் திருமணம் ஆகி மனைவியை அழைத்துக்கொண்டு வரப்போவதாகப் பொய்க் கூறியவன், அந்த வீட்டில் குடி வந்ததை, நிச்சிந்தையாக – எவர் துணையின்றியும் – மனக் கசப்பற்றும் அவன் தனது இல்லத்தைப் பரிபாலித்துக்கொண்டிருந்தான் என்று கதாசிரியர் வர்ணிக்கிறர்.

          சில சமயங்களில் கைலாச நாதர் கோவில் பக்கமாக நடந்து செல்கையில் சினிமா பார்த்துக்கொண்டிருக்கும்போது ஏற்படும் உணர்வு முன்பு பஸ் பிரயாணத்தில் ஏற்பட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது என்றும் கூறுகிறார்.

          இவையெல்லாம் அமைதியை இழக்காத சூழ்நிலையில் அவனை ஆழ்ந்திருக்கக் கூடும். 

          இடையில் அவன் தயார் மறைவுக்காக ஊருக்குச் சென்றான். ஆறுதல் சொன்ன மனிதர்கள் பெரிய மனிதர்களாகத் தோன்றினார்கள். ஊர்ப்பெண்டுகள் தயாரின் கடைசி நாட்களை விவரித்து, மாமன் அவன் தயாரிடம் ஐயாயிரத்தை வாங்கிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். 

          ஊரிலிருந்து திரும்பி வரும்போது மாமாவைப் பார்க்கிறான். தன் தோளில் போட்டு வளர்த்த தங்கையைப் பற்றி வானத்தைப் பார்த்தபடியே கூறுகிறார். மாமாவைப் பார்க்கும்போது கல்யாணம் நிச்சயமான வடிவையும் பார்க்கிறான்.  மாமாவிடம் ஐயாயிரம் கேட்கவில்லை. 

          ஊருக்குத் திரும்பியவுடன் வீட்டுக்கார அம்மா அவனிடம் துக்கம் விசாரிக்கிறாள். அவளிடம் வீடு ஒழுகுவது பற்றிக் கூறுகிறான்.  சீக்கிரமாகப் பழுதுபார்க்கும்படி கேட்டுக்கொண்டான்.

          திடுக்கிட்டு எழுந்தான் முத்துக்கறுப்பன்.  இரவுகள் எப்போதும் சாதாரணமாக இருந்து விடப் போவதில்லை என்கிறார் கதாசிரியர் இங்கு.

          அவன் வடிவு என்று முனகியிருக்கக் கூடும்.  இந்த இடத்தில் கதாசிரியர் ஒன்று குறிப்பிடுகிறார்.  தவம் கலைந்து விட்டாற்போல் மலைத்தான்.  தவம் செய்வதின் காரணம் அது கலையும்போதுதான் தெரியும் போலிருக்கிறது என்கிறார். 

          “என்ன சார் இன்னும் வீட்டிலிருந்து வரவில்லையா?” என்று கேட்கிறார்கள் அலுவலகத்திலிருப்பவர்கள்.   

          “அழைத்து வருவதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறதுüü என்கிறான் பதட்டப்படாமல். இங்குத் திரும்பவும் தவம் கலைந்து விடவில்லை என்று குறிப்பிடுகிறார் கதாசிரியர்.

          நாள் குறிக்கப்பட்டதுபோல் முத்துக்கறுப்பன் நடமாடினான். அடைமழை பெய்த நாளில் சென்னைக்குப் போய்விட்டு இரவு நேரத்திலேயே திரும்பி வந்து விட்டான்.

          வழக்கம்போல் எண்ணெய் குளியல் வாரத்திற்கு ஒரு முறை நடைபெறுகிறது.  தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோயிலுக்கும் போகிறான்.

           மாசக் கடைசியில் சென்னைக்கு முத்துக்கறுப்பனுக்கு மாற்றல் கிடைக்கிறது.  அலுவலக நண்பர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தலைகீழாக நின்றாலும் கிடைக்காத மாற்றல் அவனுக்குக் கிடைத்ததைக் கேள்விப்பட்டதும் சிலருக்கு எரிச்சலாக இருந்தது.  

          அலுவலகத்தில் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டான்.  வீட்டிற்குத் திரும்பியவுடன் அவனைப் பார்க்க மாமா வந்திருந்தார்.  மாமாவிற்குப் பேச்சுத் தடுமாறியது. அவரிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை.  அவன் அமைதியாக இருந்தான்.  அவர் வராமலிருந்தாலும் அப்படியே இருந்திருப்பான்.

கடைசியில் இந்தக் கதையை முடித்திருக்கும் விதம் சிறப்பாக உள்ளது.  வேள்விகள்தான் சிலசமயம் கூடங்களையே அழித்துவிடும். இது அப்படிப்பட்டதாகத் தெரியவில்லை.  இங்குதான் கதாசிரியர் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.          ஆனால் ஊருக்குப் போவதோ – சென்னைக்குப் போவதோ –      மாமாவை ரயிலேற்றி அனுப்புவதோ வீட்டைக்காலி பண்ணுவதோ ஆகிய எல்லாமே சுதந்திரமானவைதான்.  அற்புதமான சிவம்தான் என்று எண்ணியபோது தவம் கலைந்து விட்டது என்று முடிக்கிறார்.

          இந்தக் கதையே மொத்தமே 5 பக்கங்கள்தான். 1986 கணையாழியில் இந்தக் கதை பிரசுரமாகியிருக்கிறது. இந்தக் கதையைப் படிக்கப் படிக்க முத்துக்கறுப்பனின் செயலே வேடிக்கையாக இருக்கிறது. 

          மாமா மீது அவன் அன்பு கடைசி வரை இருக்கிறது.  அம்மாவை ஏமாற்றி ரூ.5000த்தை வாங்கிய மாமாவிடம் அவன் கடைசி வரை கேட்கவில்லை.  அவருடைய பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளத்தான் அவன் ஊருக்கு வந்தான்.  வேறு யாருக்கோ அவர் நிச்சயம் செய்து விட்டார்.  அதைப் பற்றியும் அவன் வருந்தவில்லை.  அலுவலகத்தில் தனக்குத் திருமணம் நடந்ததுபோலவே சொல்கிறான். தனிவீடு பார்த்துத் தங்குகிறான்  எதைப்பற்றியும் அவன் பெரிதாகக் கவலைப்படவில்லை.

          தவ வாழ்க்கையில்  உள்ள ஒருவர்தான் இப்படி வாழ முடியும் என்று பூசலார் கதை குறிப்பிடுகிறது.  எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கிறான்.  திருமணம் நடக்காததைத் திருமணம் ஆனதாகச் சொல்வதையும் அதனால் பதட்டமடையாமல் இருப்பதையும் இந்தக் கதை விவரிக்கிறது.  மா. அரங்கநாதனின் சிறப்பாகக் கூறப்பட வேண்டிய கதை இது. இந்தக் கதை எல்லாவற்றையும் அப்படி அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற இருத்தலியல் தத்துவத்தைக் கூறுகிற கதையா?

 

 

 

Series Navigationவெற்றுக் காகிதம் !தக்கயாகப் பரணி [ தொடர்ச்சி]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *