ஒரு கதை ஒரு கருத்து

author
0 minutes, 1 second Read
This entry is part 15 of 23 in the series 6 ஜூன் 2021

ஜெயகாந்தன்

ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

         

அழகியசிங்கர்
‘ஜெயகாந்தனின் கதை.  இரண்டாம் உலக மகா யுத்த காலம்.  அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது.  முடியவில்லை.  ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பிவிட்டான். உண்மையில் அவன் ஊருக்குப் போக விரும்பவில்லை.  அவன் விருப்பத்துக்கு மாறாக அவன் வீட்டுக்கு அனுப்பப் பட்டான். ராணுவத்திற்கு இனிமேல் அவன் உபயோகப்பட மாட்டான்.’

          இப்படி ஆரமபிக்கிறது இந்தக் கதை

          இதில் வேடிக்கை என்னவென்றால் அவன் வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை.

          இங்கு ஜெயகாந்தன் இப்படி எழுதுகிறார்.

          ‘தான் வெறுத்து உதறிவிட்டப் போன அந்தத் தாழ்ந்த சேரிக்கே அவன் திரும்ப வேண்டி நேர்ந்தது.’

          தாழ்ந்து கிடந்த தன் சமூக வாழ்க்கையை நினைத்து வெறுத்துப் போய் முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்தில் சேர்ந்து பதினெட்டு வயதிலேயே கடல் கடந்து செல்லும் பேற்றினை அடைந்தவன் அம்மாசி.

          அப்போது அம்மாசி ஒரு முறை சில காலம் கழித்து அவன் சேரிக்கு வந்தான்.  அவன் அவர்களுடன் ஒட்டவில்லை.  

          இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது அவன் திருப்பி அழைக்கப்பட்டான். திரும்பவும் அவன் சேரிக்கு சாலமடித்துவிட்டுப் போய் விட்டான்.

          எதிரிகளுடன் போராடும்போது எதிரிகளின் குண்டு வீச்சுக்கு ஆளாகி சில மாதங்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் கிடந்தான். 

          ராணுவத்துக்கு உபயோகமற்றவனாக மாறிவிட்டான். அவன் ஊருக்குக் கிளம்பிவிட்டான்.  அவனுக்கு யாருமில்லை.  அவனை வரவேற்க ஊரிலும் யாருமில்லை.  அவன் ராணுவத்தில் இருக்கும்போதுதான் அவன் அம்மா இறந்து விட்டாள். அவனால் அப்போது வரக்கூட முடியவில்லை.

          தன் கான்வாஸ் பைச்சுமையுடன், தான் பிறந்த ஊருக்குள்ளே போய் நான்கைந்து தெருக்களை அர்த்தமற்றுச் சுற்றிப் பார்த்தான். பின் 

ஊருக்கு வெளியே வந்து தனது சேரியை தூரத்திலிருந்து  பார்த்தான்.

மதகில் அமர்ந்திருந்தபோது தன் தாயைப் பற்றி நினைத்துக்கொண்டான்.  

          சேரியைச் சார்ந்த முண்டாசு கட்டிய ஒருவன், அங்கு வந்து அவனை விசாரிக்கிறான்.  அம்மாசிக்கு தன் ஒன்றுவிட்ட தங்கச்சி காசாம்பூவின் நினைவு வந்தது.  உடனே அவள் கணவன் சடையாண்டியின் பேரைச் சொல்ஙூ அவர்களைத் தேடி வந்ததா கூறுகிறான். அவன் பட்டணத்துக்குப் பூட்டானே என்கிறான் அவன்.  அம்மாசிக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

          திரும்பவும் ரயில்வேஸ்டேஷனுக்குப் போகிறான்.  அவன் அந்தக் கிராமத்தை விட்டு பட்டணம் போகிறான்.  அதே பாசஞ்சர் வண்டியில்.

          வண்டியில் கூட்டமில்லை. அவன் உட்காரப்போகும் எதிரில் ஒரு தாய் தூங்குகின்ற பெண் குழந்தையை மடியில் கிடத்தித் தானும் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

          அந்தப் பெண்ணைப்பற்றி ஜெயகாந்தன் இப்படி வர்ணிக்கிறார். 

          ‘அம்மாசி அவளை வெறித்துப் பார்த்தான். 

 அவளது தோற்றத்திலிருந்து அவள் ஓர் இளம் பிராமண விதவை என்று தெரிந்தது.  நாட்பட்ட க்ஷயரோகத்தால் அரிக்கப்பட்டு வெறும் ஆஸ்திக் கூடே உயிர் தரித்து அயர்ந்தது போல் தோற்றம்.’

          டிக்கட் பரிசோதகர் அந்தப் பெண்ணைப் பார்த்து டிக்கட் கேட்கிறார்.  அவள் டிக்கட் வாங்கவில்லை என்று தெரிகிறது. அம்மாசி அவளுக்காக டிக்கட் வாங்கினான்.  

          அந்த விதவைப் பெண் அம்மாசியை வாழ்த்துகிறாள். இந்தக் கதை பாசஞ்சர் வண்டியிலேயே நடக்கிறது.  அவளிடம் இருக்கும் குழந்தைக்கு எதாவது வாங்கலாமென்று நினைக்கிறான்.

          ‘குழந்தைக்கு எதாவது வாங்கித் தரட்டுமா?’ என்று கேட்கிறான். அவள் சம்மதிக்கிறாள்.

அம்மாசி வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பாரத்திலிருந்து ஸ்டாலுக்குச் சென்றான்.  ஒரு பன்னும் ஒரு கப் பாலும் வாங்கினான்.கொஞ்சம் யோசித்து இன்னொரு கப் பாலும் பன்னும் வாங்கினான்.

          அவன் பன்னை அவளிடம் நீட்டினான்.  அவள் வேண்டாம் என்றாள்.  பாலாவது குடிக்கச் சொல்கிறான்.  அவள் முழுவதும் குடித்து விட்டாள்.  பசி. குழந்தையை தன் மடியில் வைத்துக்கொண்டு ஒரு பன்னும், பாலும் கொடுத்தான்.  

          திரும்பவும் குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கிக்கொடுத்தான் அம்மாசி. ஒரு வாத்து பொம்மை. குழந்தை அவனோடு வெகு நாள் பழகியிருந்தவள் போல் சிரித்து விளையாடினாள். . . 

          வெகுநேரமாய் நின்றிருந்த பாசஞ்சர் வண்டி அந்த ஸ்டேஷனிலிருந்து கிளம்பியது.

          அவளுடைய கதையை மூக்கைச் சிந்திக்கொண்டு அம்மாசியிடம் பேசினாள். இந்தக் குழந்தையின்   அப்பாவுக்கு ஓட்டிலிலே வேலை.  அவருக்கு க்ஷயரோகம்.  அவரை வேலையை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளுக்கு நாலு குழந்தைகள்.  ஒவ்வொன்றாகப் பிறந்து வாரிக் கொடுத்து விட்டாள்.  கடையிலே இந்தக் குழந்தை மட்டும் மிஞ்சியது.  

          சற்று நேரத்துக்கு முன் அருந்திய பாலி னால் விளைந்த தெம்பும் மாலை நேரக் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவளுக்குப் பேசச் சக்தி அளித்தன.  ஆனால் பேசிய பிறகு அவளுக்கு மூச்சுத் திணறியது.  

          அவள் சிறிது நேரத்தில் இறந்து விடுகிறாள்.  சாவதற்கு முன், “உங்க குழந்தைகள்லே ஒருத்தியா….வளர்ப்பீங்களா ஐயா” என்று அவள் குழந்தையை அவனிடம் ஒப்படைக்கிறாள்.

அந்த ரயில் வண்டி நின்ற இடத்தில் அவள் பிணத்துடன் இறங்குகிறான் அம்மாசி.  அந்த வண்டியில் டிக்கட் எடுக்காமல் வந்திருந்த பிச்சைக்காரர்கள் அவனுக்கு உதவி செய்தார்கள். 3 நாட்கள் அந்த ஊரில் தங்குகிறான்.  அவளுடைய இறுதிச் சடங்கை முடிக்கிறான். இந்த இடத்தில் ஜெயகாந்தன் அவன் எங்கே தங்கினான். அவளுடைய குழந்தையை வைத்துக்கொண்டு எப்படித் தடுமாறினான் என்பதையெல்லாம் கதையில் சொல்லவில்லை. கதையில் இது சௌகரியம் வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு வேண்டாததை விட்டுவிடலாம்.

          இந்த நிகழ்ச்சி நடந்து மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ் சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.

          இந்த இடத்தில் ஜெயகாந்தன் இப்படிக் கூறுகிறார்.

          தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக்கடன்களையெல்லாம்  ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டான்.

          வண்டியிலிருந்தவர்கள் எல்லோரும் குழந்தையும் அம்மாசிக் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.  இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு. 

          பொன்னா, பேத்தியா என்று கேட்கிறார்கள்.

          பேத்தி என்கிறான்.

          ‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்கிறார்கள். ஒரு நிமிடம் யோசிக்கிறான்.  அந்தப் பெண்ணின் தாயிடம் இந்தக் குழந்தையின் பெயர் கேட்கவில்லை. பின் சுதாரித்துக் கொண்டு,          ‘பாப்பாத்தி’ என்கிறான்.  இனிமேல் அது ஒரு பெயர்தான் என்று முடிக்கிறார் ஜெயகாந்தன்.

          இந்தக் கதையில் என்ன சொல்ல வருகிறார் ஜெயகாந்தன்.  

          தாழ்ந்த ஜாதியில் பிறந்த ஒருவனுக்கு எந்த மதிப்பும் அவன் ஊரில் இல்லை.  அவன் மதிப்பைப் பெறுவதற்கு ராணுவத்தில் சேர்கிறான்.  திரும்பவும் அவன் ஊருக்கு வரும்போது யாரும் அவனை வரவேற்கவும் இல்லை, என்ன என்று கேட்கவுமில்லை. அதற்குக் காரணம் அவன் ஊரை விட்டு சிறுவயதிலேயே போய் விட்டான்.  தாழ்ந்த ஜாதி என்ற குழப்பம் அவனிடம்   இருக்கிறது. ஆனால் இந்தக் கதையில் திருப்பு முனையாக க்ஷயரோகம் பாதித்த ஒரு பிராமணப் பெண்ணின் குழந்தையை வாங்கிக் கொண்டு வளர்க்கிறான்.  அவனுக்கு வாழ்க்கையில் ஒரு அர்த்தம் கிடைக்கிறது. அந்தப் பெண்ணிற்குக் கொல்லிப் போடும்போது தன் அம்மாவிற்கு அது மாதிரி செய்ததாக நினைத்துக் கொள்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்பட்டதாக நினைக்கிறான்.

          ஜெயகாந்தன் அந்தக் காலத்தில் இப்படி புரட்சிகரமான கதையை எழுதியிருக்கிறார்.

         

Series Navigationஎத்தகைய முதிர்ந்த ஞானம்!சொல்லேர் உழவின் அறுவடை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *