ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

author
1
0 minutes, 8 seconds Read
This entry is part 7 of 29 in the series 12 மே 2013

ssivakumarஎஸ். சிவகுமார்

 

 

11-02-2012 சனிக்கிழமை.

1. கும்பகர்ணன்.

“குட் மார்னிங் சார் ! எல்லா ஒர்க்கும் முடிஞ்சு ஜாலியா உக்காந்திருக்கீங்க; ஏதாவது தின்க் பண்ணிட்டு இருக்கீங்களா ? “ என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டுக்காரர். பெயர் கும்பகர்ணன்.

அவர் பெற்றோர் வைத்த பெயர் ராமசாமி. ஆனால், சாமி பிடிக்காத ஒரு கட்சியில் சேர்ந்து, தலைவர் பெயர் ராவணன் என்பதால் தன் பெயரை மயில்ராவணன் என்று மாற்றிக் கொண்டபிறகு, எல்லோரும் மயிலு என்று கேலி பேசியதாலும், மயிர்-ராவணன் என்று கேவலப்படுத்தியதாலும், மறுமுறை தன் பெயரைக் கும்பகர்ணன் என்று மாற்றிக் கொண்டதும், இப்போது நண்பர்கள் அவரை கர்ணன் என்றும், தலைவர் செல்லமாக கும்பு என்றும் அழைப்பதும் இப்போது நான் எழுத இருக்கும் விஷயத்துக்குச் சம்பந்தம் இல்லை என்பதால், தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன்.

“இந்தாங்க தினத் தந்தி படிங்க “ என்று இன்றைய செய்திதாளைக் கொடுத்தேன்.

“ஒசியாக் கெடைக்கற பேப்பர் ஈசியா கெடைச்சா சூப்பர் “ என்று கையில் வாங்கிக் கொண்டார்.

“வேணும்னா நாளைலேர்ந்து உங்க வீட்லேயே போடச் சொல்லட்டுமா “ என்றேன்.

(எங்கள் வீட்டில் சோறு சாப்பிடும் தெருநாய் எப்போதும் அவர் வீட்டில்தான் படுத்துக் காவல் காக்கிறது என்ற கோபத்தை இப்படிக் கேட்டுத் தணித்துக் கொண்டேன்.)

“அது ரைட் இல்லை சார்; நீங்கதானே பே பண்றீங்க! “ என்றார்.

“ரொம்ப அவசரமா நேத்திக்கி எங்கயோ போனீங்களே என்ன விஷயம் ? “ என்று கேட்டேன்.

“அதை ஏன் சார் கேக்குறீங்க, என்னோட பைக்கை காணோம்; கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு போலீஸ் ஸ்டேஷன் போனேன். ‘இன்ஸ்பெக்டர் இருக்காரா’ன்னு கேட்டதுக்கு, ‘ஐயா’ன்னு சொல்லுங்கறான். சரி, ‘இன்ஸ்பெக்டர் ஐயா இருக்காரா’ன்னு கேட்டேன். ஒக்காரச் சொல்லிட்டான். ஃபோர் ஓ கிளாக் தான் அவரு வந்தாரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுத்துருக்கேன். பாத்து செய்றேன்னு சொல்லியிருக்கார் “ என்று பெருமூச்சு விட்டார்.

தெரியாத்தனமாக “கவலைப்படாதீங்க, உங்க வண்டி கிடைச்சிடும், கடவுள் காப்பாத்துவார்” என்று சொல்லிவிட்டேன்.

“ஏன் சார் டென்ஷன் ஏத்துறீங்க ? பைக்கை இன்ஸ்பெக்டர்தான் கண்டு பிடிச்சு குடுப்பார்; உங்க கடவுள் இல்லை “ என்று அவர் குரல் உயர்ந்த்தது.

“கோபப்படாதீங்க கர்ணன், உங்களுக்கு ஆய்வாளர், எனக்குக் கடவுள், அவ்வளவுதான் “ என்று சொல்லி அவருக்குப் பிடித்த விஷயம் பேசலாமே என்று, “கட்சிக் கூட்டத்திலே பேசும் போது மட்டும் அவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்களே, அது எப்படி ? “ என்று ஆரம்பித்தேன்.

“அது ஒன்னும் ப்ராப்ளம் இல்ல சார்; தமில் டீச்சர்ஸ் ரெண்டு மூணு பேர் இருக்காங்க; பேஜ்ஜூக்கு ஹன்ட்ரெட் ருபீஸ்தான். பியூட்டிஃபுல்லா எழுதிக் குடுத்திருவாங்க. அப்படியே பைஹார்ட் பண்ணிப் பேசிடுவேன். “ என்று தன் ரகசியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

“அப்படியே, அவங்க கிட்ட தமிழ் நல்லா பேச, எழுத கத்துக்கிட்டீங்கனா, அப்பறம் சொந்தமா பேசலாமே” என்று ஒரு ஆலோசனையை முன் வைத்தேன்.

“போங்க சார், உங்களுக்கு வேற வேலை இல்லை; இப்படியே பிராக்டிஸ் ஆயிருச்சு; இதை எல்லாம் சேஞ்ச் செய்யறது ரொம்ப டிஃபிகல்ட் “ என்று செய்தித்தாளை எடுத்துக்கொண்டு தன் வீட்டுக்குக் கிளம்பினார்.

2. தொலைக்காட்சி.

நண்பர் கும்பகர்ணன் சென்றதும் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்தேன்.

தொலைக்காட்சியில் ‘ இட்ஸ் பெட்டர் யு னோ ‘ என்று குல்லாய் போட்ட ஒரு பையன் நூடுல்ஸ் கடித்துக் கொண்டிருந்தான். அடுத்து அஜினோ மோட்டோ இப்போது சிறிய ‘பேக்’கிலும் (அந்நிய நாட்டில் தடை செய்யப்பட்டிருந்தாலும் ) நம் நாட்டில் கிடைக்கிறது என்றார்கள். பால், நெய் என்று எல்லா விளம்பரங்களும் முடிந்ததும், நவநாகரிகப் பெண்மணி ஒருவர் வந்து சமையல் குறிப்பு சொல்ல ஆரம்பித்தார்.

“இன்னிக்கி நான் செய்யப்போறது கேஷு ரைஸ் கீர் . இதுக்கு தேவையானது ரைஸ் ஒன் கப், ஷுகர் ஒன் கப், ……பால் டூ கப்ஸ், மில்க் மெய்ட் ஒன் டின், கீ ஹன்றேட் கிராம், கேஷு டென், கிஸ்மிஸ் டென், ஏலம் ஃபோர்.

ஃபர்ஸ்ட் ஸ்டவ்வை ஆன் பண்ணி லைட்டராலே பத்த வைங்க. நல்லா திக்கா இருக்கர வெஸல் அது மேல வச்சு அதிலே பாதி கீ ஊத்தி கேஷு, கிஸ்மிஸ் ரெண்டும் ஆட் பண்ணி லைட்டா ஃப்ரை பண்ணுங்க. “

சமையல் குறிப்பு தொடருமுன் மறுபடி விளம்பரம் வந்தது.

“இதைத் தானே போன வாரம் கிராமத்து சமையல்லே பறவை முனியம்மா ‘பால் பாயாசம்’னு செஞ்சாங்க” என்று மனைவியிடம் சொன்னது தப்பாய்ப் போனது.

“தப்பு கண்டு பிடிக்கறதே உங்களுக்கு வேலையாப் போச்சு; அது சாதாரண பாயசம், இது ரிச் பாயசம். பாக்கப் பிடிக்கலேனா, ஈசிசேருல ஒக்காந்துண்டு வழக்கம்போல ஏதாவது கிறுக்க வேண்டியதுதானே “ என்று கன்னத்தில் ஒரு இடி இடித்தாள்.

என் உடம்பில் சர்க்கரையின் அளவு ஐநூறைத் தாண்டியதால், இனிப்பு எனக்கு மறுக்கப்பட்ட பொருள் ஆயிற்று. அவ்வப்போது இந்த மாதிரி சமையல் செயல் விளக்கங்களைப் பார்த்து மனதை ஆற்றிக்கொள்வது என் வழக்கம் ஆனது. ஆனால் இந்த சமையல் குறிப்பைத் தொடர்ந்து பார்த்தால், தமிழ் மொழி மறந்து போகக் கூடிய நிலைமை எனக்கு ஏற்படலாம் என்ற காரணத்தால் எழுந்து என் அறைக்குச் சென்று, பாதி படித்து நிறுத்தியிருந்த ஜெயமோகனின் கதைத் தொகுப்பை விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.

எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.

“பகல்ல என்ன தூக்கம் வேண்டியிருக்கு ? ரிடையர் ஆனப்பறம் இதே வேலையாப் போச்சு ! சாப்படர நேரம் ஆச்சு, எழுந்திருங்கோ “ என்று கலைத்தாள் மனைவி. இன்னமும் தொலைக்காட்சிப் பெட்டி பேசிக் கொண்டிருந்தது. ஏதோ ஒரு தொடர், ‘மீண்டும் மலரும்’ என்று சொல்லி அந்த நிகழ்ச்சியை அளித்த விளம்பரதார்களின் பெயர்கள் படித்தார்கள்.

தலைப்புச் செய்திகளைக் கேட்டுக் கொண்டே மதிய உணவு சாப்பிட்டோம். இது மாதிரி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே உணவு சாப்பிடுவது நல்லதல்ல என்று ஹீலர் பாஸ்கர் சொல்லியிருந்தாலும், சாப்பிடும் உணவின் குறைபாடுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க இது ஒரு நல்ல வழி என்றே எனக்குத் தோன்றும். மேலும், இதன் மூலம் கணவன் மனைவி சண்டை குறைய வாய்ப்புகள் அதிகம். சாப்பிட்டபின், சிறிது நேரம் படித்துவிட்டு மறுபடி ஒரு குட்டித் தூக்கம்.

மாலையில் காப்பி குடித்துவிட்டு நடைப்பயிற்சி செல்லக் கிளம்பினோம். கதவைப் பூட்டும்போது வேகமாக வந்து, “சார், என் வண்டி கிடைச்சிடுச்சி, உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று இருசக்கர வாகனத்தை எங்கள் வீட்டின் முன் நிறுத்தினார் பக்கத்துக்கு வீட்டு கும்பகர்ணன். பயந்து கொண்டே நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். “சரி, சரி. வாக்கிங் வராதததுக்கு ஏதோ ஒரு சாக்கு; நான் போறேன் “ என்று என் முகத்தில் குத்தாத குறையாக அவளுடைய கைப்பேசியை என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு விடுவிடுவென நடந்தாள்.

அவள் சென்றதும் இரண்டு நாற்காலிகளை எடுத்துபோட்டு கர்ணனை உட்காரச்சொல்லி “ ம்….சொல்லுங்க” என்றேன்.

3. வரலாறு.

“சார், நீங்க சொன்னா மாதிரியே ஒரே நாள்லே என் வண்டி கெடச்சிடிச்சு. ஈஸ்வரன் கோயில் வாசல்லே இருந்ததுன்னு இன்ஸ்பெக்டர் சொன்னாரு. கையெழுத்துப் போட்டு இப்பதான் எடுத்துகிட்டு வரேன் “ என்று மூச்சிரைக்கப் பேசினார் கர்ணன்.

“அப்ப ஆய்வாளர் வரவரைக்கும் அந்த ஈஸ்வரந்தான் உங்க வண்டிய பத்திரமா பாத்திகிட்டு இருந்தார்னு சொல்லுங்க “ என்றேன்.

“மறுபடி மறுபடி சாமியப் பத்தியே பேசி என்னை டென்ஷன் ஆக்காதீங்க” என்று காட்டமாகப் பதில் வந்தது.

“சரி சரி சூடாகாதீங்க! கொஞ்சம் ஜூஸ் குடிங்க சரியாயிடும், கொண்டு வரேன்” என்று உள்ளே சென்று இரண்டு கோப்பைகளில் குளிர் நீருடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சேர்த்து எடுத்து வந்தேன்.

குளிர்பானம் தொண்டையில் இறங்கியதும் கொஞ்சம் சாந்தமானார். “சார், நீங்க எப்படிப் பேசினாலும், உங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு; ஏன் தெரியுமா ? எப்ப நான் வந்தாலும், சீட் குடுத்து ஒக்காரச் சொல்றீங்க, உபசாரம் பண்றீங்க, என்னோட சேர்ந்து ஜூஸ் குடிக்கிறீங்க, சாப்பிடுறீங்க. பக்கத்து வீட்டுக்கு நாங்க குடி வந்து இவ்வளவு நாளாச்சு; ஒரு நாள் கூட என்ன சாதின்னு என்னைக் கேட்டதில்ல. உங்களாலே எப்படி இந்த மாதிரி இருக்க முடியுது?” என்று விடாமல் பொழிந்தார்.

எனக்கு இந்த பாராட்டு கூச்சமாக இருந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேற்கூரையைப் பார்த்துக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணும் இல்லை, நான் சாதாரணமானவன்தான்; உங்களுக்கு அப்படித் தோணுது” என்று மழுப்பினேன்.

“சார், நீங்க பெரியவங்க; அடக்கத்தினாலே இப்படிச் சொல்றீங்க. ஜெயமோகன் கதைங்க படிச்சிருகீங்களா, வணங்கான், நூறு நாற்காலிகள் மாதிரி ? எங்க பாட்டன் முப்பாட்டன் இருந்ததெல்லாம் அப்டித்தான். காசு, வசதி, ஆள்பலம் வச்சுதான் மேல்சாதி, கீழ்சாதி எல்லாம். அந்தக் காலத்திலே எங்களுக்கு சாதியே கெடயாது. வசதியானவங்க எங்களுக்குன்னு ஒரு சாதி பேர் வச்சு கூப்டாங்க. இப்ப இருக்கறா மாதிரி சனங்களுக்கு நல்ல பேர்கூட கெடயாது.”

“பாட்டன் எங்க அப்பாரை கொஞ்சம் படிக்க வச்சார். படிச்சவரு வேலைக்கு போயி கொஞ்சம் காசு பார்த்தார். கொஞ்சம் நெலம் வாங்கினார். சாகுபடி செஞ்சார். என்னைய படிக்க வச்சு இப்ப நல்ல நெலமயிலே இருக்கோம். ஆனாலும், ஆபீஸ்லையோ, மற்ற இடங்கள்ளயோ பாகுபாடு இன்னும் இருக்குங்க சார். அத்தனை பேரும் மாறிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் சுத்த ஏமாத்து வேலை சார்” என்று முன்னுக்கு வந்த பிறகும் நாட்டு நிலைமை வெகுவாக மாறவில்லை என்று வருத்தப்பட்டார்.

கொஞ்ச நேரம் அமைதி. மற்றவர் அதைக் கலைக்கட்டும் என்று இருவருமே பேசவில்லை. நல்லவேளை, நடைப்பயிற்சி சென்றிருந்த என் மனைவி வீடு திரும்பினாள்.

“மணி ஆறு ஆச்சு , இருட்டிப்போச்சு; வெளக்கு ஏத்தலாமில்ல. இன்னும் போர்டிகோலயே ஒக்காந்துண்டு பேசியாறது ! “ – கோபமாக உள்ளே சென்று கால் அலம்பி, இறை அறையுள் விளக்கு ஏற்றி, தான் வழக்கமாக சொல்லும் சில பாடல்வரிகளைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“உங்க வீட்லயும் நல்ல மாதிரிதான்; அவங்ககூட நீங்க வாக்கிங் போகாதது அவங்களுக்கு கோபம போல” என்று என் மனைவியின் காதுபடச் சொல்லி எரிகிற விளக்கில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணையைச் சேர்த்தார் கர்ணன்.

பேச்சைத் திசை திருப்ப “ உங்களுக்கு நல்ல தமிழ் பெயரா வச்சுகிட்டு, உங்க மகனுக்கு வடக்கத்திப் பேரா வச்சிருக்கீங்களே” ன்னு கேட்டேன்.

“இல்லையே; எங்க பாட்டன் பேரைத்தான் வச்சிருக்கேன் ராக்கேஷ்ன்னு” என்று புறப்படத் தயாரானார்.

“உங்க தாத்தா பேர் என்ன? “ – புரியாமல் விழித்துக் கேட்டேன்.

“கல்லு <*சாதிப் பெயர்> ” – சிரித்துக்கொண்டே கிளம்பினார் கர்ணன்.

4. நிழல் யுத்தம்.

கல்லு என்கிற தமிழ்ப் பெயருக்கும் ராக்கேஷ் என்கிற வடநாட்டுப் பெயருக்கும் என்ன உறவு இருக்க முடியும் என்று சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, “பாறாங்கல்லாட்டம் அங்கேயே ஒக்காந்துண்டிருந்தா எப்படி? வெளி லைட் போட்டுட்டுக் கதவைச் சாத்திண்டு உள்ள வாங்கோ; கொசுப்படை காத்திண்டிருக்கு உள்ள வர “ என்று உள்ளிருந்து வேகமாகக் குரல் வந்தது.

கல்லு பாறாங்கல் ஆகி, பாறாங்கல் ROCK –ஆகி ராகேஷ் ஆனது என்ற உண்மை என் புத்திக்கு இப்போது எட்டியது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்தக் குரலில் இருந்த வேகம், அதன் சொந்தக்காரிக்கு இருந்த கோபத்தையும் ஏந்தி வந்ததை உணரும்போது, இன்று இரவு நடைபெறக் கூடிய ஒரு நிழல் யுத்தத்தை எதிர் நோக்கி ஒருவித பயத்துடன் உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு உள்ளே வந்தேன்.

தொலைக்காட்சியில் கர்நாடக இசை. ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு பாடகி அன்னமய்யாவின் தெலுங்குப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். நாராயணனின் பாதத்தைப் போற்றி முகாரி ராகப் பாடல். நாற்காலியில் அமர்ந்துக் கேட்கச் சித்தமானேன். பத்து நிமிடத்தில் பாட்டு முடிந்தது.

பாடல் முடிந்தும்கூட என் மனைவி என்னிடம் ஏதும் பேசவில்லை. இந்த மௌனத்தை நான்தான் கலைக்கவேண்டும் என்பது போல பேசாமல் இருந்தாள். சமையல் அறையிலிருந்து வெளிவரவும் இல்லை.

கோபம் வந்தால் அதை வெளிப்படுத்துவதில் ஒவ்வொருவரும் தனித்தனி வழிமுறைகள் வைத்திருக்கிறார்கள்.

ஆண்கள் என்றால் கத்துவது அல்லது பேசாமல் உர்ரென்று இருப்பது; அல்லது செருப்பைக் காலில் சரக்கென்று மாட்டிக்கொண்டுக் கதவை வேகமாகச் சாத்திவிட்டு வெளியில் சென்றுவிடுவது.

பெண்கள் என்றால் கைக்குக் கிடைக்கும் பாத்திரங்களைப் போட்டுடைப்பது அல்லது மற்றவர்க்குக் கேட்காத ஒலியளவில் திட்டுவதாக நினைத்துக் கொண்டு யாருக்கு அது கேட்கவேண்டுமோ, சரியாக அந்த ஒலி அளவில் பேசுவது.

சின்னப் பையன்கள் என்றால் கைக்குக் கிடைத்ததைப் போட்டு உடைப்பது; அல்லது யார்மேல் கோபமோ, அவர்களை உதைப்பது.

சின்னப் பெண்களாயிருந்தால் அறைக்கதவை அறைந்துச் சாத்திவிட்டுப் படுக்கைமேல் குப்புறக் கிடந்துக் குமுறுவது.

என் மனைவியோ வேறு மாதிரி. நாமாய்ப் போய்ப் பேசினாலும், பதில் ஓரெழுத்து, ஒற்றைச்சொல், அல்லது அதிகபட்சம் ஒரு வாக்கியத்தோடு நிற்கும், நீதிமன்றத்தில் வழக்குரைஞர் கேள்விகளுக்குச் சாட்சி பதில் சொல்வதுபோல.

“ ராத்திரிக்கு டிபன்தானே? “

“ ம் “

“ என்ன டிபன்? “

“ சப்பாத்தி “

“ தொட்டுக்க உண்டா? “

“ ம் “

“ என்னது ? “

“ டால் “

“ எனக்குப் பசிக்கறது “

“ பத்து நிமிஷம் “

பத்து நிமிடம் காத்திருக்க வேண்டியதுதான். இதற்குமேல் இப்போதைக்கு எதுவும் பேச முடியாது, யுத்தம் தொடங்கும்வரை.

தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்பட, அமைதியாகக் கேட்க ஆரம்பித்தேன்.

விளம்பர இடைவேளை.

“ சாப்பிட வரலாம் “ என்று சமையலறையிலிருந்து பொது அறிவிப்பு வந்தது. தட்டில் இரண்டு சப்பாத்தியும், ஓரமாக இரண்டு கரண்டி பருப்பையும் வைத்தாள்.

இதுவே சாதாரணமான மனோபாவத்தோடு இருந்தால், மேற்கண்ட உரையாடல் வேறு விதமாக இருந்திருக்கும்.

“ ராத்திரிக்கு டிபன்தானே? “

“ சாதம் கூட இருக்கு, சாப்பிடறேளா ? “

“ வேண்டாம்; உப்புமா பண்ணிடு. “

“ சப்பாத்தி பண்ணட்டுமா ? “

“ தொட்டுக்க மசால் பண்றியா ? “

“ கிழங்கு இல்லே, டால் பண்ணட்டுமா ? “

“ என்னது ? “

“ பாசிப் பருப்பும் தக்காளியும் போட்டு டால் “

“ எனக்குப் பசிக்கறது “

“ இதோ பத்து நிமிஷத்திலே தரேன் ! “

பத்து நிமிடத்தில் முதல் சப்பாத்தி செய்த உடனே “ சாப்பிட வாங்கோ, ஒரு சப்பாத்தி ஆயிடித்து “ என்று அன்பான அழைப்பு வரும். “டால் கொஞ்சமா போட்டுக்கோங்கோ, காரம் அதிகமாயிடித்து. ஏற்கனவே நெஞ்சு எரியறதுன்னு சொன்னேள் “ என்று கரிசனமும் சேர்ந்து வரும்.

இப்போதைய நிலைமையே வேறு.

நான் சாப்பிட ஆரம்பிக்கும்போது, “நாளையிலிருந்து நான் தனியாவே வாக்கிங் போறேன்; நீங்க ஒண்ணும் கூட வரவேண்டாம்“ என்று யுத்தம் தொடங்கியது.

இது அறிக்கையா, முடிவா, கேள்வியா என்று புரியாமல் தடுமாறி, சாப்பிடுவதா அல்லது இதற்கு ஏதேனும் பதில் சொல்லிவிட்டுச் சாப்பிடுவதா என்று விழித்தேன்.

“ஏதாவது சொன்னா பதில் சொல்ல மாட்டேளா ? உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம் ? “ இந்தக் கேள்விகளில் அவளின் கோபத்தின் உச்சம் தெரிந்தது.

எனக்கு வந்த கோபம்,

பதிலுக்கு நீயும் திரும்பிக் கத்து என்றது;

பயம்,

இதை வளர்க்க வேண்டாம்,

சமாதானமாய்ப் பதில் சொல் என்றது;

பசியோ,

பேசாமல் சாப்பிடு, சாப்பிடு என்றது;

இறுதியில் பயமே வென்றது.

“நான்…… நான் வேணும்னா வராமவிட்டேன் ? ….. பக்கத்துக்கு வீட்டுக்காரர் பாவமேனு இருந்துட்டேன். அதுக்காக நீ மூஞ்சியத் தூக்கி வச்சுக்கறது நியாயமில்லே …. “ என்று மெல்லிய குரலில் சமாதானம் சொல்லி, “நாளைலேர்ந்து தவறாமப் போலாம் “ என்று வேகமாக ஒரு வாக்குறுதியும் கொடுத்தேன்.

“ என்னமோ பண்ணுங்கோ ; என்னமோ எனக்காகத்தான் வாக்கிங் வராமாதிரி ! உங்க உடம்பு நன்னா இருக்கணும்னுதானே இவ்வளவு சொல்றேன்; கேக்க மாட்டேங்கறேளே “ என்று கொஞ்சம் இறங்கி வந்தாள்.

ஏழடி எடுத்துவைத்து ‘ உன்னை என்றும் பிரியேன்; உன் சுகதுக்கங்களில் சமபங்கு கொள்வேன் ‘ என்றெல்லாம் சத்தியம் செய்துவிட்டு, இத்தனை தூரம் இவளைத் தனியே நடக்கவிட்டது சரியல்ல என்று என்னமோ உள்ளே உறுத்தியது. இனி என்ன ஆனாலும் இவளைத் தனியே விட்டுத் தவிக்க விடக்கூடாது என்று மனதுக்குள் உறுதி செய்துகொண்டேன்.

இரண்டு சப்பாதிக்குமேல் சாப்பிட முடியவில்லை.

ஏதோ தொண்டையில் அடைத்தது.

12.02.2012 ஞாயிற்றுக்கிழமை.

5. மறுபடியும் கர்ணன்.

“எத்தனை தரம் எழுப்பறது? மணி ஒம்பது ஆச்சு. பக்கத்து வீட்டுக்காரர் ஒங்களோட பேசணும்னு ரெண்டு தடவை வந்துப் பாத்துட்டுப் போயிட்டார். எழுந்திருங்கோ !“

ஒலி அளவு அதிகமாக இருக்கவே, கண்ணைச் சற்றே திறந்து பார்த்தேன். குளித்து முடித்துவிட்டுக் காப்பிக் குடித்துக் கொண்டே என்னை எழுப்பினாள் என் மனைவி. நேற்று இரவு சரியாகச் சாப்பிடாதது இப்போது பசி எடுத்தது. இதற்குமேல் எழாமல் இருந்தால் வழக்கமான காலைக் காப்பியும் கிடைக்காமலே போய்விடலாம் என்ற பயத்தில் உடனே எழுந்து பல்துலக்கி வந்தமர்ந்தேன்.

“மறுபடியும் சுடவைக்க வேண்டியதாப் போச்சு ! “ என்றுக் காப்பிக் கோப்பையை அருகே இருந்த சிறு மேசை மேலே ‘நங்’ என்று வைத்தாள். இது சலிப்பா கோபமா என்று சிந்தித்தபடியே, காப்பியை உறிஞ்சினேன். நடந்த நிகழ்வுகளை எல்லாம் எழுதி முடித்துக் நாட்குறிப்புக் கையேட்டை மூடி வைக்காமல் நேற்றைய இரவு அப்படியே உறங்கிவிட்டது இப்போது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அதைப் பார்த்துப் படித்திருப்பாளோ? எப்படி இருந்தாலும் முதல் பந்தை நான் வீசி விளையாட்டை ஆரம்பிக்க விரும்பவில்லை. எதுவென்றாலும் அவளே ஆரம்பித்துப் பேசட்டும் என்று தயாராய்க் காத்திருந்தேன். என் எதிர்பார்ப்பு வீண்போகவில்லை.

“எத்தனை நாளா நடக்கறது இது? ஏதோ கவிதை எழுதிண்டிருக்கேள்னு நெனச்சேன். இப்படி இல்லாததும் பொல்லாததுமா என்னைப் பத்தி எழுதி இருக்கேளே ! இதுலே கடைசி நாலு வரில்லே சென்டிமென்ட் வேறே ! நீங்க ரொம்ப நல்லவர்னு எல்லாரும் நெனைக்கணும்; நான் சண்டக்காரி, கோவக்காரிங்கணும் ! அப்படித்தானே? “ என்று பொரிந்துத் தள்ளினாள்.

“நடந்ததை எல்லாம் முழுக்க முழுக்க அப்படியே எழுதினால் சுவாரஸ்யமாக இருக்குமா? கொஞ்சம் அப்டி இப்டிக் கற்பனையைக் கலந்து எழுதினாத்தான் நன்னா இருக்கும். அதுவுமில்லாம இது என் சொந்த வாழ்க்கைக் கதைன்னு எங்கேயும் சொல்லலியே ! அதனாலே இதுலே நான்கறது நான் இல்லை; நீங்கறது நீ இல்லை. தப்பாப் புரிஞ்சிண்டு தேவை இல்லாம சண்டை போடாதே “ என்று சமாதானம் சொன்னேன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. மொதல்லே என்னைப் பத்தி எழுதறதை நிறுத்துங்கோ. உங்களைப் பத்தி என்ன வேண்ணா எழுதிக்கோங்கோ, இந்திரன் சந்திரன்னு ! “ என்று கூர்முனைக் கத்தியாக என் சுய தம்பட்டத்தைத் தாக்கி என்னைக் கிழித்தாள்.

“சரி, சரி ! என் எழுத்துச் சுதந்திரத்திலே கைவைக்காதே ! ‘இதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே; இருந்தவர்களையோ, இருப்பவர்களையோ, இனிமேல் பிறக்கப் போகிறவர்களையோ – முக்கியமாக என்னையும், என் மனைவியையும் – குறிப்பன அல்ல ’ அப்டின்னு ஒரு அறிக்கை விட்டுடறேன். சந்தோஷந்தானே? “ என்று கிண்டலடித்தேன்.

முகத்தைத் தோள்பட்டையில் ஓர் இடி இடித்துவிட்டுக் குடித்து முடித்தக் காப்பிக் கோப்பையை எடுத்துக் கொண்டுக் காலைச் சிற்றுண்டி செய்யச் சமையல் அறைக்குள் கால் வைத்தாள். வாசலில் அழைப்புமணி ஒலித்தது. எழுந்து சென்று யாரென்றுப் பார்ப்பதற்குள் உள்ளே வந்தார் நண்பர் கர்ணன்.

“உங்களைப் பாக்கணும்னு காலைலேயே ரெண்டு தரம் வந்தேன்; சார் தூங்கிட்டிரிந்தீங்க. எளுப்பவேண்டாம்னு போயிட்டேன்…” என்று பேசிக் கொண்டே நுழைந்தார்.

அன்றைய தினசரிச் செய்தித்தாட்கள் எல்லாம் மேசை மேல் அப்படியே இருந்தன. இருமுறை என்னைத் தேடிவந்தும் அவை எதையுமே அவர் எடுத்துச் செல்லவில்லை என்பதைக் கவனித்து “வாங்க! என்ன பேப்பர் எதுவும் படிக்கலியா? “ என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

“அது கெடக்குது விடுங்க; தெனம் படிச்சு என்னத்தக் கண்டோம்? என் பையனைப் பத்தி உங்ககிட்டக் கொஞ்சம் பேசலாம்னு வந்தேன் “ என்று ஆரம்பித்தவர், “என் வண்டி காணாமப் போயித் திரும்பக் கெடைச்சிதில்லே; உண்மையிலே அதை எடுத்திட்டுப் போயிக் கோவில் வாசல்லே விட்டிட்டுப் போனது என் பையந்தான். அது தெரியாம, நான் கம்ப்ளைன்ட் குடுத்திட்டேன். நல்ல வேளை, இன்ஸ்பெக்டருக்கு இது தெரியாது. காச்சியிருப்பாரு, நான் தப்பிச்சேன் “ என்று நிறுத்தினார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. மேற்கொண்டுச் சொல்லுங்கள் என்பதுபோல் தலையாட்டி வைத்தேன்.

“வெள்ளிக் கெளம அவன் பொண்டாட்டிக்குப் பொறந்த நாள். இருபத்திரண்டு முடிஞ்சிது. அவ அம்மா வீட்டுலே அளைச்சிருந்தாங்க. ராக்கேஷும் காலைலே நேரத்திலேயே வண்டிய எடுத்துக்கிட்டு அவளோட கிளம்பிப் போய்ட்டான். அந்த வெவரம் எனக்குத் தெரியாது. வண்டி காணோம்னு நெனைச்சுக்கிட்டுக் கம்ப்ளைன்ட் குடுத்திட்டேன் ” – நான் ஏதாவது பேசுவேன் என எதிர்பார்த்து ஒரு இடைவெளிவிட்டு என் முகத்தைப் பார்த்தார். இதற்கும் பேசாமலிருந்தால் நாகரிகமாக இருக்காது எனக் கருதி “அப்ப எதுக்கு வண்டியைக் கோவில்கிட்ட விட்டுட்டுப் போனார்? “ என்றுக் கதை கேட்கும் சிறுபையன் போல ஒரு கேள்வியைப் போட்டேன்.

“அவன் மாமியா வீடு இருபது கிலோமீட்டர். ராக்கேஷ், அவன் அம்மா மாதிரி. கோவில், சாமி எல்லாம் உண்டு அவனுக்கு. போற வழியிலே ஈஸ்பரன் கோவிலுக்குப் போயிட்டுப் போகலாம்னு வண்டியக் கோவில் வாசல்லேயே நிறுத்தியிருக்கான், கூட்டம்தான் இல்லையேன்னு; ஸ்டாண்டிலே நிறுத்தல்லே! கோவிலுக்குள்ளே என் மருமக வரமாட்டேன்னுருக்கா. ஆனாலும் இவன் கம்பெல் செஞ்சு உள்ளே கூட்டிக்கிட்டுப் போயிட்டான். எல்லா சந்நிதியிலேயும் இவன் உளுந்து உளுந்துக் கும்பிடும் போதெல்லாம், அவ மரம் மாதிரி நின்னுருக்கா. கண்டுக்காம இருக்க வேண்டியதுதானே இவன். கோவிலுக்கு வெளியிலே வந்ததும் ‘இவ்வளவு பிடிவாதம் ஒனக்கு ஆகாது’ன்னு சத்தமாத் திட்டியிருக்கான். அதுவும் போதாதின்னுக் கையிலே மீதி வச்சிருந்த விபூதி, குங்குமத்தை அவ நெத்தியிலே தன் கையாலேயே வச்சுவுட்டிருக்கான். உடனே வெறி வந்தவ மாதிரி அதை அளிச்சிட்டு ஒரு ஆட்டோவைப் பிடிச்சு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா. இவனும், என்ன செய்யறதின்னுத் தெரியாமத் தெகச்சிப் போயி அப்படியே வேற ஆட்டோ புடிச்சி அவ பின்னாடியே போயிட்டான். இன்னைக்குக் காலைலேதான் வந்தான். வெவரமெல்லாம் சொன்னான்.”

நான் நடுவில் எதுவும் கேள்வி கேட்கமாட்டேன் என்று நினைத்தாரோ என்னவோ, தொடர்ச்சியாக விவரத்தைச் சொல்லிக் கொஞ்சம் மூச்சு வாங்கினார். “அவங்களுக்குப் பிடிக்காமே கல்யாணம் செஞ்சி வச்சீங்களா என்ன ? எல்லாரும் சம்மதிச்சுச் செஞ்ச கல்யாணம்தானே? அப்பறம் என்ன பிரச்னை? “ என்று என் சந்தேகங்களைக் கேட்டேன்.

“நாங்க எங்கே செஞ்சுவச்சோம்? ஒண்ணரை வருஷமாக் காதலிச்சுட்டு ரெண்டு பேரும் எங்களைக் கம்பல் செஞ்சுக் கல்யாணம் செஞ்சிகிட்டாங்க.” என்றவரிடம், “உங்க மருமக உங்க மாதிரியே கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களா? “ என்று கேட்டேன்.

“இல்லை; அவ வேற மதம் ! “ என்று முகம் மாறினார். அவரின் மாறிய முகத்தை நான் விவரித்து உங்களையும் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அவரை மேலும் கேள்வி கேட்டுச் சங்கடப்படுத்த வேண்டாம் என எண்ணி, “இதில் நான் என்ன உங்களுக்கு உதவ முடியும்?” என்று மெதுவாகக் கேட்டேன்.

“அந்தப் பொண்ணப் புடிச்சிப் போய்த்தான் கல்யாணம் கட்டிக்கிட்டான். ஆனா கல்யாணம் ஆன ஆறு மாசத்திலேயே எப்பப் பார்த்தாலும் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம், சண்டை. அப்புறம் அந்தப் பொண்ணு அவனையும் எங்களையும் எப்படி மதிக்கும்? ராக்கேஷுக்கு ஏதாச்சும் புத்தி சொல்லுங்களேன். “ என என்னைப் பெரிய மனிதனாக்கி, “நாளைக்கும் அவன் ஆபீசுக்கு லீவுதான்; காலைலே வந்து ஒங்களைப் பார்க்கச் சொல்றேன் “ என்று என் கையைப் பற்றிக் குலுக்கி விடை பெற்றுக் கொண்டார்.

அவர் சென்றதும் கொஞ்சம் பயம் வந்தது. எனக்கு என்ன தெரியும் என்று இவர் தன் மகனுக்குப் புத்திமதி சொல்லச் சொன்னார் என்றுப் புரியவில்லை. நான் ஒரு மூத்தக் குடிமகன் என்பதைத் தவிர வேறு தகுதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மாதிரியான மனநல ஆலோசனைகள் சொல்வதற்கென்றே தனியே பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களே; அதுமாதிரி ஒருத்தரைப் போய்ப் பாருங்கள் என்று சொல்லிவிடலாமா என்று யோசித்தேன். இருந்தாலும் நம்மை மதித்து ஒரு உதவி கேட்டவருக்கு வேறு பக்கம் கைகாட்டுவது மரியாதையாக இருக்காது என்று முடிவு செய்து, திருமண உறவுகள் பற்றியப் புத்தகங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்று என் புத்தகப் பெட்டியைக் குடைய ஆரம்பித்தேன்; ஒன்றிரண்டு கிடைத்தன. குறிப்புகள் எடுக்கலாம் என்னும்போது,
“குளிச்சிட்டு வாங்களேன், டிபன் சாப்பிடலாம்” என்றழைத்த மனைவியின் அன்பு வேண்டுகோளுக்கிணங்கிப் புத்தகங்களை அப்படியே வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றேன்.

குளித்துமுடித்துக் காலைச் சிற்றுண்டிச் சாப்பிட்டபின், எடுத்து வைத்திருந்த புத்தகங்களை விரித்துக் குறிப்புகள் எடுத்தேன். ஏற்கனவே படித்திருந்தாலும், இப்போது புதிதாகப் படிப்பது போலவே இருந்தது. நேரம் போனது தெரியவில்லை.

நாளை ராக்கேஷிடம் என்ன பேசலாம், எப்படிப் பேசலாம் என்று ஒரு சின்ன ஒத்திகை என் மனதிலேயே அரங்கேறியது.

13.02.2012 திங்கட்கிழமை.

6. ராக்கேஷ்.

ராக்கேஷிடம் பேசும் அந்த நேரமும் வந்தது. (இடைப்பட்ட நேரத்தில் நடந்த விஷயங்கள் எல்லாம், என் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்கத் தணிக்கை செய்யப்பட்டன.)

“குட் மார்னிங் அங்கிள்! “ என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்து, வெளி வாசலில் அமர்ந்திருந்த எனக்கு எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான் ராக்கேஷ். முழங்காலுக்குச் சற்று கீழிறங்கிய ஃபர்முடாக் கால்சராய்; மேலே மஞ்சளும் பச்சையும் குழப்பமாய்க் கலந்த வண்ணத்தில் ஒரு அரைக்கைச் சட்டை. கலைத்துவிடப்பட்ட தலை. வசீகரமான முகத்தில் சிரிப்பு. இருபத்தைந்து வயது இளைஞன்.

“வாங்க ராக்கேஷ்!” என வரவேற்ற என்னை இடைமறித்து, “நான் ரொம்பச் சின்னவன் அங்கிள்; வாங்க போங்கன்னு சொல்லாதீங்க; ஒருமையிலேயே கூப்பிடுங்க” என்றான். அவன் கண்களைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டே “மரியாதை கொடுத்துதானே மரியாதை வாங்கணும் ! இல்லையா ராக்கேஷ் ? “ என்று அர்த்தத்தோடு கேட்டேன். அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

“நாளைக்குப் போயி பக்கத்து வீட்டு அன்கிள்கிட்டச் சும்மாப் பேசிட்டுவான்னு நேத்திக்கி அப்பா என்கிட்டச் சொன்னபோது எனக்கு விளங்கலே. இப்பத்தான் புரியிது, அப்பா எல்லாக் கதையையும் உங்ககிட்டக் கொட்டிட்டார்னு ! என் மேல எந்தத் தப்பும் இல்ல அங்கிள் ! ஆறு மாசத்தில அவதான் ரொம்ப மாறிட்டா ! “ என்றுத் தரையைப் பார்த்துக் கொண்டே பேசினான். தன்மேல் ஏதேனும் தப்பிருக்கலாமோ என நினைத்தானா அல்லது தன் காதல் மனைவியை நினைத்தானா, எதை நினைத்துத் தலைகுனிந்தான் என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“உங்க மனைவி மாறிட்டாங்கன்னு ரொம்ப வருத்தப்படுறீங்க. ஒருத்தர்கிட்ட ஏற்படற மாற்றம் நமக்குப் பிடித்ததாகவோ, சாதகமாகவோ இருந்தா சந்தோஷப்படறோம். அதற்கு மாறாக இருந்தா வருத்தப்படறோம். சரிதானே, ராக்கேஷ் ? “ எனக் கேள்வி கேட்டு அவனை நிமிர வைத்தேன்.

“நீங்க ரெண்டு பேருமே உங்க கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ அப்படியேதான் இருப்பீங்க; ஆனால் காதலிக்கும்போது ஒருவரின் இயற்கையான குணங்கள் என்னன்ன என்பதை இருவருமே மற்றவரிடம் மறைச்சிருக்கீங்க, அல்லது இருவருமே கவனிக்கத் தவறிட்டீங்க. அதனாலே இப்போ மாறிட்டதா நினைக்கிறீங்க.

ஒருத்தர்கிட்ட பிடிச்ச விஷயம் எவ்வளவு சின்னதா இருந்தாலும் அதை மற்றவர் ரொம்பப் பெருமையாப் பேசியிருப்பீங்க. பிடிக்காத விஷயம் எவ்வளவு பெரிசா இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் காலடியிலே போட்டு மிதிச்சி மறந்திருப்பீங்க. அதனாலே இப்போ மாறிட்டதா நினைக்கிறீங்க.

ஒருத்தர் மனசிலே மற்றவர் முழுசா இடம் பிடிக்கணும்னு எதையும் இழக்கத் தயாரா இருந்திருப்பீங்க; உங்க அம்மா மொட்டை மாடியில் மிளகாயைக் காயவைத்து வந்திருப்பாங்க. எதிர்பாராம மழை வந்தா, ‘ராக்கேஷ், ஓடிப்போய் மிளகாயை எடுத்துகிட்டு வா’ன்னு சொல்லும்போது, ‘போம்மா, நீயே போய் எடுத்துக்கோ, எனக்கு மழையில நனஞ்சாச் சளி பிடிச்சுக்கும்’னு சொல்லி மறுத்திருப்பீங்க. அதுவே, காதலியோட பூங்காவுக்குப் போய்ட்டு வரும்போது திடீரென்று மழை வந்து, தன் இரண்டு கைகளையும் இணைத்து இறுக்கித் தாடைக்கடியில் வைத்துக் கொண்டு இருமுழங்கைகளும் விலாஎலும்பில் ஒட்டியிருக்கத் தோள்களிரண்டையும் முன்புறம் குவித்துக் கண்களை இறுக மூடி, ‘ஜாலியா ஜில்லுன்னு மழையிலே நனைஞ்சிகிட்டே போகலாம், ப்ளீஸ் ராக்கேஷ்’னு உங்க காதலி சொல்லும்போது மறுக்காம நடந்திருப்பீங்க. இல்லையா?

ஆனா இப்போ அந்த வேகம் குறைஞ்சிருக்கும். ஒரு இலக்கையோ பொருளையோ அடைய முயற்சி செய்யும்போது இருக்கும் வேகம், அடைந்தவுடன் அனுபவமாகும் மகிழ்ச்சி, இரண்டும் அதை அடைந்தபின்னே குறைந்து போகும். இதுதான் இயற்கையின் விதி. அடைந்த இலக்கையோ, பொருளையோ நாம் எப்போதும் கொண்டாடினால் இது நிகழாது.”

நீண்ட பிரசங்கம் போல் பேசிவிட்டோமோ என்று வெட்கப்பட்டு நிறுத்தி ராக்கேஷைப் பார்த்தேன்.

“நாங்க மழையிலே நனஞ்சது உங்களுக்கு எப்படித் தெரியும் அங்கிள் ? “ –ஆச்சர்யத்துடன் என்னைப் பார்த்தான் ராக்கேஷ்.

“ராக்கேஷ் இங்கதான் இருக்காரா ?” என்று வாசலில் ஒரு குரல் கேட்டது. ஒரு பெண் கதவைத் திறந்துத் தலையை மட்டும் உள்நீட்டிப் பார்த்தாள்.

“இங்கதான் இருக்கார்; உள்ளே வாம்மா ! “ என்று அழைத்ததும், உள்ளே வந்து எனக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “உங்களைப் பாக்காம இருக்க முடியல; அதான் வந்திட்டேன்” என்று ராக்கேஷைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே காலியாக இருந்த மோடாவை அவனருகில் இழுத்துப் போட்டுகொண்டு அமர்ந்தாள்.

சந்தோஷம், கோபம், பயம், வருத்தம் என எல்லா உணர்ச்சிகளும் ஒருமித்த முகத்தோடு, “என் ஒய்ஃப் சஞ்சிதா“ என எனக்கு அறிமுகப்படுத்தினான் ராக்கேஷ்.

நெளிநெளியாய் அடர்த்தியான கூந்தலைக் ‘கிளிப்’ போட்டு அடக்கியிருந்தாள். வட்ட முகம். சீரான புருவம். சிவந்த உருவம். காதிலே தொங்கட்டான்கள் தோள்களைத் தொட முயன்று கொண்டிருந்தன. கழுத்திலே சோழிகளைவிடப் பெரிய அளவில் மணிகளைக் கட்டிய வண்ண மாலை. சுரிதாரின் வண்ணம் அவள் அழகைக் கூட்டியது. முன்பே அவளைப் பார்த்திருந்தாலும், இத்தனை அருகாமையில் இப்போதுதான் பார்க்கிறேன்.

“உங்க மனைவி ரொம்ப அழகா இருக்காங்க” என்ற என் பாராட்டுக்கு ஒருபுறம் வெட்கப்பட்டுக் கொண்டே, “என்னைப் பத்தி புகார் எல்லாம் சொல்லியாச்சா ? நான் இவரோட எத்தனை அனுசரிச்சுப் போனாலும், இவருக்குத் திருப்தியே இல்லை, அங்கிள். சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னோட சண்டை போடறார். கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே மாறிட்டாரு” என்று அவள் பக்கத்துக் குற்றச்சாட்டுகளை எடுத்து வீசினாள்.

“இவர் எதுவுமே இதுவரை சொல்லலைம்மா. நேற்றைக்கு இவங்க அப்பா வந்து ரெண்டொரு வார்த்தை சொல்லிட்டுப் போனாரு. அவ்வளவுதான். இப்ப நீயே வந்திட்டே. அதனாலே என்ன நடந்ததின்னு நீயே உன் வாயாலே சொல்லு” என்றேன். கர்ணன் சொன்னதையே இவளும் சொன்னாள், நடுநடுவே கொஞ்சம் கண்ணைக் கசக்கிக் கொண்டு.

“காதலிக்கும்போதே ரெண்டு பேரும் வெவ்வேற மதம்னு தெரியுமில்லே? கோவில், கடவுள் பற்றி அப்போ ஏதாவது பேசியிருக்கீங்களா? “ என்ற என்னுடைய கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.

“நல்ல விஷயங்களை எல்லா மதமும் ஒண்ணு போலவேதான் சொல்லியிருக்கு. அந்த விஷயங்களை வேற வேற மொழிகள்லே, வேற வேற வார்த்தைகள்லே எழுதிவச்சதுகூடத் தப்பில்லை. ஆனா வேற வேற பெயர் வச்சதுதான் இப்ப இருக்கும் பிரச்சினை எல்லாத்துக்கும் காரணம். மக்களை அவங்கவங்க பக்கம் இழுப்பதற்காகக் குருமார்கள், விஷயங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவச்சிட்டு, விவாதங்களையும், மதவெறியையும் மட்டும் முன்னிலைப்படுத்திட்டாங்க. மற்ற மதக் கடவுள்களை மறுப்பதும், விமரிசிப்பதும், கேவலப்படுத்துவதும்கூட கடவுள் தத்துவத்தையே மறுப்பது மாதிரிதான். கடவுளை மறுத்தத் தலைவர்கள்கூட மற்றவர்களின் கூட்டங்களில் நாகரிகம் கருதிக் கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்னுருக்காங்க. இன்னைக்கு இருக்கும் இளைஞர்களாவது இதைப் புரிஞ்சிகிட்டு நடந்தாங்கன்னா எல்லாம் சரியாயிடும்.

“நீங்க ரெண்டு பேரும் கையப் பிடிச்சிகிட்டு ஆளுக்கொரு தண்டவாளத்திலே காலை வச்சு நடந்துபோனாலும், போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்திடலாம். ஆனா உங்களுக்கிடையிலே இருக்கற இடைவெளி மாறாம அப்படியேதான் இருக்கும். அதுவே, கீழே இறங்கி இரண்டு தண்டவாளத்துக்கும் நடுவே நடந்து போய்ப் பாருங்க. போகப் போக நெருக்கம் அதிகமாகும். அதற்கும் மேலே தண்டவாளமே வேண்டாம்னு முடிவு பண்ணிச் சாலைல இறங்கி நடந்தா பலதரப்பட்ட மக்களையும் சந்திக்கலாம்; அனுபவம் அதிகமாகும்“

நான்மட்டும் பேசிக்கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று நினைத்துச் சற்று இடைவெளி விட்டு, அவர்கள் இருவரையும் ‘ஏதாவது பேசுங்கள்’ என்பது போலப் பார்த்தேன்.

யாரோ தட்டி எழுப்பியது போலச் சடாரென்று எழுந்த சஞ்சிதா, நான் பேசிய விஷயங்களுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, “இவங்க அம்மா சமையல் செஞ்சிட்டுருந்தாங்க; இதோ இவரைப் பார்த்திட்டு உடனே வரேன்னு சொல்லிட்டு வந்தேன்; தேடுவாங்க. நான் போய் ஏதேனும் ஹெல்ப் செய்யறேன்” என்றுக் கிளம்பத் தயாரானாள்.

இவளின் குரல் சமையல் அறையில் இருந்த என் மனைவிக்குக் கேட்டிருக்க வேண்டும். “உள்ளே வந்துக் குங்குமம் வாங்கிண்டுப் போகச் சொல்லுங்கோ” என்று அங்கிருந்தே என்னிடம் சொன்னாள். “இல்லை மாலா வேண்டாம்; அவங்க வேற மதம்” என்று மறுத்துரைத்த என்னிடம், “பரவாயில்லை அங்கிள்! “ எனச் சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு உள்ளே சென்றுக் குங்குமம் வாங்கிக் கொண்டாள். “வரேன் ஆன்டி! வரேன் அங்கிள்! சீக்கிரம் வந்திடுங்க ராக்கேஷ்!” என்று விடைபெற்றாள்.

“என்ன ஒண்ணும் சொல்லாம உக்காந்திருக்கீங்க? “ என்று நான் கேட்ட பிறகு, ஏதோ கனவுலகத்திலிருந்து மீண்டவன் போல விழித்தான் ராக்கேஷ். இதுவரை சொன்ன விஷயங்களையே இன்னும் ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைப் படுபவன் போல அவன் முகம் தோன்றியதால், “சரி, ஒரு நிமிஷம் இருங்க” என்று சொல்லி, ஏற்கனவே தயார் செய்துக் கையேட்டில் செருகி வைத்திருந்தக் காகிதத்தை உள்ளே சென்று எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தேன்.

“இந்தப் படிவத்தை** நல்லாப் படிச்சிப் பாருங்க. உங்க பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம்” என்று சொல்லி, “ பன்னிரண்டு மணிக்கு என் நண்பர் வீட்டுக்குப் போகணுமே, நாளைக்குப் பார்க்கலாமா, ராக்கேஷ்?” என்றதுமே புரிந்துகொண்டுத் தயங்காமல் “தேங்க்ஸ் அங்கிள்!“ என்றுக் கிளம்பிச் சென்றான். நானும் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நான்கு மணியளவில் திரும்பிவந்த பிறகு மாலைச் சிற்றுண்டி, நடைப்பயிற்சி, தொலைக்காட்சி, இரவு உணவு என வழக்கமான விஷயங்கள். மறுபடியும் அதே புத்தகங்கள். நாட்குறிப்புக் கையேட்டில் எதுவும் எழுதாமல் இரவு உறங்கச் சென்றேன்.

14.02.2012. செவ்வாய்க்கிழமை

7. ஆத்மா

காலை ஒன்பது மணி. “நாங்க வரோம் ஆன்டி! அங்கிள் கிட்டச் சொல்லிருங்க” என்ற குரல்கள் என் உறக்கத்தை முறித்தன. வாசற் கதவைச் சாத்திவிட்டு உள்ளே வந்த என் மனைவியின் கைகளில் இருந்த பூச்செண்டு, படுக்கை அறையிலிருந்து வெளியே வந்த என்னைப் பார்த்துச் சிரித்தது.

“அந்தப் பையன் ராக்கேஷும் அவன் ஓய்ஃபும் வந்திருந்தா. ஏதோ வாலன்டைன்ஸ் டேயாமே, இந்த பொக்கேயைக் குடுத்துட்டு நமக்கு வாழ்த்துச் சொல்லிட்டுப் போனா.” என்று நமட்டுச் சிரிப்புடன் என் கைகளில் தந்துவிட்டு, “சீக்கரம் பல் தேச்சிட்டு வந்தேள்னா காப்பி, இல்லேன்னா…” என்றதற்கு நானும் சிரித்துக் கொண்டே, “காப்பி கட்” என்று முடித்தேன்.

பல்விளக்கி வந்ததும் காப்பி. “ஏன் நேத்திக்கி ஒண்ணுமே எழுதலே நீங்க?” என்ற மனைவியின் கேள்வி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நேற்றைய இரவும் நான் உறங்கியபின் என் நாட்குறிப்புக் கையேட்டை எடுத்துப் பார்த்திருக்க வேண்டும். இவள் என்ன என் முதல் வாசகியாகிவிட்டாளா அல்லது இவளைப்பற்றி ஏதேனும் எழுதி இருக்கிறேனா என்று உளவு பார்த்தாளா என்று யோசித்தேன்.

“இல்லை, பேசின எதுவும் பெரிய விஷயமாப் படலை. ஏதோ வேகமாப் பேசிட்டேன். அத்தனையும் ஞாபகமும் இல்லை. அவங்க ரெண்டு பேரும் ஒண்ணாச் சேர்ந்து இன்னைக்கு வந்து சந்தோஷமா வாழ்த்துச் சொல்லிட்டுப் போனாங்களே, அதுவே போதும் எனக்கு.” என்னுடைய சோம்பேறித்தனத்துக்கு ஏதாவது சாக்குச் சொல்லவேண்டுமே என்று நொண்டிச் சமாதானம் சொன்னேன்.

“பரவாயில்லே, இந்தாங்கோ. நேத்து ராத்திரி நீங்க ஒண்ணுமே எழுதலேன்னு பார்த்ததும், ஏதோ என் காதில விழுந்தவரைக்கும் ஞாபகப்படுத்தி எழுதினேன். உபயோகப்படும்னா வச்சுக்கோங்கோ. ராக்கேஷ்கிட்ட ஏதோ ஃபாரம் குடுத்தேளே, அதுமட்டும் என்னன்னு தெரியாது எனக்கு” என்று சில காகிதங்களை என் அருகில் வைத்தாள்.

என் நாட்குறிப்புக் கையேட்டின் அளவிலேயான நான்கு காகிதங்கள். குண்டூசி குத்தப்பட்டிருந்தது. படித்துவிட்டுப் பதிலேதும் சொல்லாமல் எழுந்துசென்றுப் பசை எடுத்து வந்து, அந்தக் காகிதங்களை என் கையேட்டில் ஓட்டத் தலைப்பட்டேன்.

“ஐயோ! என் கையெழுத்து நன்னா இருக்காது. அதைக் கிழிச்சிட்டு நீங்களே எழுதுங்கோ. நான் சும்மாதான் எழுதினேன்” பதற்றத்துடன் ஓடிவந்து என்னைத் தடுத்தாள் என் மனைவி.

“கையெழுத்து முக்கியமில்லே; எல்லாருக்கும் புரியறா மாதிரி எழுதணும் – எழுத்து, கருத்து ரெண்டுமே. இனிமே நான் சொல்லச் சொல்ல நீயே எழுது. கொஞ்ச நாள் போனா நீயாவே ஏதாவது எழுதுவே. நான் எழுதறதுகூட எதுவும் நானா சிந்தனை பண்ணி எழுதற விஷயங்கள் இல்லை. கேட்ட விஷயங்களை, படிச்ச விஷயங்களை வேற வேற வார்த்தைகள் போட்டு எழுதறேன். அவ்வளவுதான். நேத்திக்கிப் படிச்ச புஸ்தகத்திலே ஒரு இங்லீஷ் கவிதை***. என் மனசை என்னமோ பண்ணித் தமிழில் எழுது எழுதுங்கறது. அப்பிடியே சொல்றேன். அடுத்த பக்கத்திலே எழுது. ‘ஆத்மா’ன்னு தலைப்புப் போட்டுக்கோ. எழுதிட்டுப் புரியறதான்னு சொல்லு.” என்று நான் அமைதியாகக் கவிதை சொல்ல அவள் எழுத ஆரம்பித்தாள்.

“காலையின் அமைதி – வெள்ளை மனதில்

நீல மலர்களாய் நினைவின் சாரலாய்ப்

பொங்கித் ததும்பும்! இன்ப அலைகளாய்!!

மாலைச் சூரியன் மறையும் வரையில்

மாசில் இதயக் கூட்டில் ஆத்மா

மயங்கிக் கிடக்கும் பிரிவை நோக்கி!

இரவுத் தாய்மடிக் குழந்தை நிலவின்

இனிமைச் சிரிப்பு இருளைக் கிழிக்கும்;

வளர்ந்த சிரிப்பால் வானமும் தாரகைக்

கண்கள் சிமிட்டிப் பூமியைத் தழுவும்;

புன்னக விரியும் பொன்னுலகதிலே

புதுப்புதுக் கனவுடன் இதயம் உறங்கும்.

புரியாப் பிரிவின் இடைவெளியதனில்

பிரியினும், நாளை இணையும் ஆத்மா! “ (நிறைவுற்றது)

*** “Stand With Your Lover On the Ending Earth” by E.E.Cummings.

** இணைப்பு : கணவனுக்கு ஒரு கேள்வித்தாள்.

கணவனுக்கு ஒரு கேள்வித்தாள்.

மொத்த மதிப்பெண்கள் : 7 ( சந்தோஷமான நாட்கள் / வாரத்துக்கு)

ஏதேனும் ஒரு பகுதிக்குப் பதில் அளிக்கவும்.

உண்மையான பதிலைப் பதிவு [ √ ] செய்யவும்.

பகுதி – 1. (ஆம்) (இல்லை)

உன் மனைவி உன்மேல் காதல் கொள்ள

வித்தியாசமான ஏதோ ஓன்று உன்னிடம் உள்ளது.

அவளிடம் அளவுகடந்த அன்பு காட்டுகிறாய்.

அவள் சொல்லை, செயல்களை முழுமையாகப்

புரிந்துகொள்கிறாய்.

அவளுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கிறாய்.

அவளிடம் எப்போதும் வெளிப்படையாக இருக்கிறாய்.

அவளுடைய உணர்வுகளை எளிதில் தெரிந்துகொள்கிறாய்.

அவளிடம் பரிவுடன் கவனம் காட்டுகிறாய்.

அவளுடன் அன்றாடம் உரையாடி மகிழ்வூட்டி,

புத்துணர்ச்சியோடும் ஊக்கத்தோடும் ஆவலைத் தூண்டி

தெளிவுபடுத்திக் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிறாய்.

காதல், வீரம், கற்பனை நிறைந்த சின்னச் சின்ன

சந்தோஷங்களை அவளுக்குக் கொடுக்கிறாய்.

அவள் பசித்திருக்கும்பொழுது உணவு சமைத்துக் கொடுக்கிறாய்.

அவள் தனித்திருக்கும்பொழுது முழுப் பாதுகாவலனாகிறாய்.

அவளுடைய முழு நம்பிக்கைக்குரியவனாக இருந்து

அவளின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கிறாய்.

மன அழுத்தங்களிலிருந்து அவள் விடுபட அவளுக்குத்

தஞ்சம் கொடுத்துத் தேற்றுகிறாய்.

அனைத்துக்கும் மேலாக அவளைவிட்டு என்றும் பிரியாத

நண்பனாகத் திகழ்கிறாய்.

( மதிப்பெண் : ஆம் ½ இல்லை -½)

பகுதி – 2. (ஆம்) (இல்லை)

பகுதி 1-இல் கண்ட கேள்விகளுக்கு உனது பதில் ‘இல்லை’ என்று இருந்தால்

அனைத்தும் ‘ஆம்’ என்று அமைய உன்னை மாற்றிக்கொள்ள உன்னால் முடியும்.

( மதிப்பெண் : ஆம் 7 இல்லை -7 )

_______________________________________________________________________________________________________

Series Navigationவிளையாட்டு வாத்தியார் – 1வாழ்வியல் வரலாறு கடைசிப்பக்கம்
author

Similar Posts

Comments

  1. Avatar
    கவிஞர் இராய. செல்லப்பா says:

    கவிஞர் சிவகுமாரின் எழுத்து மயக்கவைக்கும் எழுத்து. படிக்கப் படிக்க அருவி போலக் கொட்டுகிறது. மிகவும் ரசித்தேன். -நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *