ஒரு சொட்டுக் கண்ணீர்

This entry is part 4 of 16 in the series 9 ஜூலை 2017

 rajid

என்னைக் கடந்து மெதுவாகச் சென்று கொண்டிருந்த கார் நின்றது. கதவைத் திறந்துகொண்டு அவர் இறங்கினார். கணுக்காலுக்கு மேல் கட்டிய வெள்ளைக் கைலி, வெள்ளை முழுக்கைச் சட்டை, தோளில் துண்டு, வெள்ளைத் தொப்பி, அத்தனையும் மடிப்பறியாத கசங்கல். கைப் பக்குவத்துல் துவைத்த சுத்தம். அட! அன்வர்பாய் மாதிரி இருக்கிறதே. கொஞ்சம் வேகமாக நடந்தேன். 60 டிகிரி கோணத்தில் திரும்பிப் பார்த்தேன். அட! அன்வர்பாய் தான். ‘அன்வர்பாய்’  என்று கத்தினேன். திரும்பிப் பார்த்தார். ‘சீமானே’ என்று கட்டித் தழுவிக் கொண்டார். அவரின் இதயத் துடிப்பு எனக்குள் எதிரொலித்தது. அவரை இறக்கிவிட்ட கார் மெதுவாகக் கடந்து கொண்டிருக்கிறது. ‘சீமானே’ . இந்த வார்த்தைதான் அன்வர்பாயை எனக்கு மிக நெருக்கமாக்கியது. டன்லப் ஸ்ட்ரீட்டில் உள்ள பள்ளிவாசலுக்கு எதிரே நடந்த சந்திப்பு அது. ஓராண்டுக்குப் பிறகு அன்வர்பாயைப் பார்க்கிறேன். அவரிடமே ஒரு தடவை கேட்டிருக்கிறேன். ‘என்னிடம் பங்களா வீடில்லை. பெரிய தொழிலோ காரோ இல்லை. எனக்குக் கீழே வேலை செய்ய எடுபிடிகள் இல்லை. என்னைப் போய் சீமானே என்கிறீர்களே அன்வர்பாய். சீமான் என்றால் பெரிய செல்வந்தன் இல்லையா?’ அவர் சொன்னார். ‘ஒங்க தேவக்கி நீங்க யாரிடமும் போய் நிக்கலியே சீமானே. நீங்க வாத்தியாரு. ஒங்கக்கிட்ட படிச்ச எத்தனையோ பேரு சீமானா இருப்பாங்க.  நீங்கதான் உண்மையான சீமான் சீமானே’ அவர் சிரித்ததில் சில்லரைக் காசுகள் கொட்டிச் சிதறின. அந்தச் சிரிப்பும் ‘சீமானே’ என்ற வார்த்தையும் எனக்கு சுகமாக இருந்தது. இந்த அன்வர்பாயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள  வேண்டும்.

அவர் வாழ்க்கையில் நமக்குப் பல சேதிகள் கிடைக்கும். சொந்த ஊர் பத்துமடை, திருநெல்வேலி மாவட்டம். பத்துமடை என்றால் ‘பாய்’ ஞாபகம் வருகிறதா? ஆம் பத்துமடை பாய்த் தொழிலுக்கு மிகவும் பிரசித்தம். அந்தப் பத்துமடை தான். இட்லிக்கடை அன்வர்பாய் என்றால் எவருக்குத் தெரியாது? அங்கு உள்ள ஒன்றாம் வகுப்புப் பிள்ளைகளுக்குக் கூட அ .. அன்வர்பாய். ஆ… ஆடு என்றுதான் தெரியும். அம்மாவைவிட அன்வர்பாய் நெருக்கமானவர் என்று சொல்லவில்லை. அந்த அளவுக்கு எல்லாருக்கும் தெரியும் என்பதற்காகச் சொன்னேன். ஒரு நாளைக்கு 500 இட்லி அன்வர்பாயின் இலக்கு. ஒரு இட்லிக்கு ஒரு ரூபாய் லாபம் கிடைக்குமாம். அது போதும் அவர் குடும்பத்துக்கு.

அன்வர்பாய்க்கு என் வயதுதான். 65. அவர் குடும்பம் பற்றிச் சொல்லவில்லையே.  55 வயது மனைவி. சாம்பார் சட்னி வேலைகள் அவரின் பொறுப்பு. கணவரை இழந்துவிட்டு விதவையாக இரண்டு வயது மகனுடன் அடித்த பந்துபோல் தன் வீட்டுக்கே திரும்பிவிட்ட மகள். இதுதான் குடும்பம். இட்லி சுடுவதில் டாக்டர் பட்டம் உண்டென்றால் கொடுக்க வேண்டிய முதல் நபர் அன்வர்பாய்தான். என்ன மாதிரி அரிசி? பழசா ? புதுசா? பழசு என்றால் எத்தனை வருடப் பழசு? உளுந்து உடைத்ததா? முழுசா? கலவை விகிதாச்சாரம் என்ன? எவ்வளவு நேரம் ஊறவேண்டும்? எவ்வளவு நேரம் அரைக்க வேண்டும்? தண்ணீர் எவ்வளவு? பிசுபிசுப்பு எவ்வளவு? அரைப்பான் சூடாகிவிட்டால் இட்வி கல்லாகிவிடும். இதைத் தவிர்க்க சிலர் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரைப்பார்கள். அன்வர்பாயின் அறிவே தனி. ஈரத்துணியை மின் விசிறிக்குப் பின்னால் தொங்கவிட்டு, அரைப்பானுக்குக் கீழே ஓடவிடுவார். அரிசி உளுந்து போடும்போதே மின்விசிறிகள் சுழலத் தொடங்கிவிடும். சோடா உப்பு எவ்வளவு? சாதா உப்பு எவ்வளவு? எப்போது போடுவது? இன்னும் இன்னும் எத்தனையோ நுணுக்கங்கள். எல்லாம் அன்வர்பாய்க்கு அத்துபடி. மல்லிகைப் பூ கூடைக்குள் கைவிட்டுப் பார்த்ததுண்டா? இல்லை யென்றால் அன்வர்பாயின் இட்வியைத் தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.  அத்தனை வெள்ளை. அத்தனை மென்மை. அந்தப் பக்குவத்தை யெல்லாம் அன்வர்பாய் ரகசியமாக வைத்துக் கொள்ள  விரும்பியதே இல்லை. எல்லாருக்கும் சொல்வார். ஆனால் அந்தப் பக்குவம் அன்வர்பாயைத் தவிர யாருக்கும் வராது. அவர் இட்லி அவித் தெடுக்கும் அழகே தனி. ஒரே ஈட்டில் 30 இட்லி. இரண்டு அடுக்கு. சரியாக வெந்திருக்கும் என்று அவருக்கு எப்படித்தான் தெரியுமோ? வெந்து விட்டதா என்று அழுத்திப் பார்ப்பது குச்சியால் குத்திப்  பார்ப்பது இந்த வேலையெல்லாம் அன்வர்பாய்க்குத் தெரியாது. இட்லிச் சட்டியைத் திறக்கிறார் என்றால் வெந்துவிட்டது என்றுதான் அர்த்தம். திறந்தவுடன் புராணப்பட விண்ணுலகக் காட்சிபோல் குபுகுபு என்று ஆவி. நம்மால் நெருங்கக்கூட முடியாது. அதற்குள் கைகளை இறக்கி இட்லித்தட்டை அலக்காகத் தூக்குவார். விரித்திருக்கும் பாயில் இருக்கும் அலுமினியத் தட்டில் இறக்குவார். அப்படியே 180 டிகிரி சுழற்றி இட்வித் தட்டை ஒரு பக்கம் ரஜனி ஸ்டைலில் சுண்டிவிடுவார். மேல் துணியை  அப்படியே அப்படியே உரிப்பார். ஒரு பட்டாணித் தோல் அளவுகூட இட்லி, துணியில் ஒட்டாது. துணியில் நல்லெண்ணை தடவுவாராம். அது எப்போது எப்படி என்ற விபரமெல்லாம் கேட்க மறந்துவிட்டேன். மன்னித்துவிடுங்கள். இட்லிக் குழியில் அவர் மாவு வார்க்கும் அழகைப் பார்க்க இன்னொரு கண் யாரிடமாவது வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு ஆப்பை. ஒரு குலுக்கு. மாவு அப்படியே அகன்று அடுத்த இட்வியோடு சேர்ந்து கொள்ளும் கதையெல்லாம் இவரிடம் நடக்காது. இந்தக் கதையெல்லாம் அவர் எனக்குச் சொன்னதுதான். அந்த 500 இட்லி வெந்து முடியும் போது அத்தனையும் விற்று முடிந்திருக்கும்.

ஒரு அட்டைப் பெட்டி ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஒரு இட்லி 5 ரூபாய். இட்வி வாங்குபவர்கள் காசை அவர்களே போட்டுவிட்டு  பாக்கியை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் போடுகிறார்களா என்று அவர் பார்த்ததில்லை. ஒரு  தடைவை யாரோ ஒருவர் காசு போடவில்லை என்று  அவர் மகள் சொன்னார். ஆள்காட்டிவிரலை உதட்டின் மேல் வைத்து ‘உஸ். யார்கிட்டேயும் சொல்லாதே.’ என்று அவரை அடக்கிவிட்டார். வியாபாரம் முடிந்து காசை மகள்தான் எண்ணுவார். சுத்தமாக 2500 ரூபாய் இருக்கும். அதில் 500 அவரின் லாபம். 10 மணிக்குள் எல்லாம் முடிந்துவிடும். அதற்குப் பிறகு அதிகப்படியான நேரம்  அவரைப் பள்ளிவாசலில்தான் பார்க்க முடியும். உலகத்திலேயே மகிழ்ச்சியான ஒரு மனிதர்  எவருமே  இல்லை என்று நான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறேன். அன்வர்பாயைச் சந்தித்த பிறகு இப்போது  எல்லாரிடமும் சொல்கிறேன். உலகத்திலேயே மகிழ்ச்சியாக இருக்கும் ஒரே  மனிதர் அன்வர்பாய்தான்  என்று..

இரண்டு வயதில் அன்வர்பாயிடம் வந்த அவரின் பேரன் கமாலுக்கு இப்போது வயது  19. ப்ளஸ் 2 இரண்டாம் ஆண்டு. தேர்வு முடிவுகள் வந்துவிட்டன. கொட்டாங்கச்சியில் தேன் இருப்பதுபோல் அந்தக் குடும்பத்தில் கமால் ஒரு அறிவுஜீவி. 1200க்கு 1180 மதிப்பெண்கள். மாவட்டத்திலேயே  முதல் மாணவனாகத் தேர்ச்சி. அடுத்து அவன் ஆசைப்பட்டது பொறியியல் கட்டடக்கலை. அருகிலுள்ள ஒரே கல்லூரி ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிதான். ஆண்டு ஒன்றுக்கு 1,43,000 கட்டணம். ஒரு லட்சத்து நாற்பத்து மூன்றாயிரம். அரசாங்க உதவி 20,000. பாக்கியை அன்வர்பாய் எப்படிச் சமாளிப்பார். திருகும் கம்பியுமாக கிடந்த சில பழைய தங்கங்களை  விற்றார். ஒரு மனைக்கட்டு இருந்தது. அதையும் விற்றார். எல்லாமும் கமாலின் ஓராண்டுப் படப்புக்கு தீனியாகிவிட்டது. ‘இன்னும் 4 ஆண்டுகள் எப்படி ஓடும் அன்வர்பாய்?’ எல்லாரும் கேட்டார்கள். ‘அடுத்த ஆண்டு வரட்டும். எப்படி ஓடும் என்பது தெரியும்.’ இது அன்வர்பாயின் பதில். அன்வர்பாய்க்குள்ள இறைநம்பிக்கை. அப்பப்பா! அப்படி ஒரு அழுத்தமான நம்பிக்கை. நீங்கள் எவரிடமும் அதைப் பார்க்க முடியாது. ‘அந்த நேரம் வரும்போது ஏதாவது ஒரு கதவை அல்லாஹ் திறப்பான்’ என்பார். இதோ ஓராண்டு  முடியப்போகிறது.

பத்துமடையில் பஷீர் என்பருக்கு சிங்கப்பூரில் தொழில். அவருக்கு அன்வர்பாயைப் பற்றி நன்றாகத் தெரிபும்தானே? சிங்கப்பூரில் இருக்கும் அக்பரலியிடம் அன்வர்பாயைப்பற்றிச்  சொன்னார். அந்த அக்பரலி காசு இல்லாததால் கல்வியை இழந்தவர். இன்று வசதியாக  இருக்கிறார். துணி மொத்த வியாபாரம். வறுமையால் யாரும் படிக்க முடியாமல் போவதை அவரால் சகித்துக் கொள்ள முடியாது. மாவட்டத்திலேயே முதல் மாணவன். அவன் படிக்க வேண்டும். அக்பரலி உடனே ஏற்பாடுகள் செய்தார். இதோ  அன்வர்பாய் சிங்கப்பூருக்கு வந்துவிட்டார். அக்பரலியின் நெருங்கிய உதவியாளராக அவர்  கூடவே இருக்கிறார். ‘அழைத்ததும் எப்படி  அன்வர்பாய் உடனே ஒப்புக் கொண்டீர்கள்?’ என்றேன். ‘அதுதான்  சொன்னேனே. நேரம் வரும்போது அருட்கொடையை அல்லாஹ் கொட்டுவான் என்று.’ அவர்[ சிரித்தார். திருநெல்வேலி அல்வாவில் பதிந்த முந்திரி போல் ஒரு பல் தனியாகச்[ சிரித்தது. . அவர்[ சிங்கப்பூருக்குப் புறப்பட்ட அந்தக் கடைசி மணித்துளிகளை அவர் சொன்னார்.

அத்தனை இட்லிக்கடைப் பாத்திரங்களையும் பளபளவென்று கழுவி ஒரு தனி அறையில் வைத்துப் பூட்டுமுன் அந்தப் பாத்திரங்களைப் பார்த்துச்[ சொன்னார். இந்த அறை  என்னோட  இருதயம் மாதிரி. நான் வரும்வரை இங்கேயே இருங்கள். மனைவியைவிட மகளைவிட என்  பேரனைவிட  உஙகளின் பிரிவை என்னால் தாங்கமுடியவில்லைதான். அப்படியே அந்தப் பூட்டை தன் நெஞ்சோடு  வைத்துக்hகொண்டு கலங்கினார். அவரின் அந்த நிலையைப் பார்த்து எல்லாரும் அழுதார்கள். அடுத்த விநாடி. இரு கைகளையும் உயரே தூக்கினார் ‘நீ அழைக்கிறாய். நான் செல்கிறேன்’. அதோடு புறப்பட்டுவிட்டார்.

இப்படி வந்த அன்வர்பாய் சிங்கப்பூரில் நான்கு ஆண்டுகள் இருந்தார். 2000 வெள்ளி சம்பளமாம்.  கல்லூரிக் கட்டணம் நேராகக் கல்லூரிக்குப் போய்விடும். வீட்டுச் செலவுக்கு அன்வர்பாயின் மகள் கணக்குக்கு பணம் பறந்துவிடும். மீதி அன்வர்பாயின் கணக்கில் சேர்ந்துவிடும். எல்லாவற்றையும் அக்பரலி பார்த்துக் கொண்டார். இதையெல்லாம் அன்வர்பாய் விசாரிப்பதே கூடக் கிடையாது. அவ்வளவு நம்பிக்கை. இந்த நான்கு ஆண்டுகளில் எனக்கும் அன்வர்பாய்க்கும் நெருக்கம் ஏற்பட்டது ரமலான் மாதத்தில்தான். நோன்பு திறக்கும் நேரத்தில் இஃப்தார் என்கிற விருந்துக்கு டன்லப் பள்ளிக்கு 1000 பேர் வருவார்கள். அத்துனை பேருக்கும் உணவு பரிமாற வேண்டும். அந்த வேலையைச் செய்த தொண்டூழியர்களில் நாங்கள் முக்கியமானவர்கள். தவறாமல் வருபவர்கள். சுருக்குப் பைகளில் பழத்துண்டு பேரிட்சம்பழம். நுரை ரப்பர் டப்பாக்களில் மீகோரிங் அல்லது, இடியப்பம் அல்லது சோறு கறி அதோடு பொத்துக் குடிக்கும் குடிதண்ணீர் கிண்ணங்கள் என்று 1000 பேருக்கும் 6.45க்குள் தயாராக வைத்து விடுவோம். கூட்டம் வர வர தாம்பாளத்தில் வைத்து அனுப்பிக் கொண்டே இருப்போம். நுரைரப்பர் டப்பாவில் சாப்பாடு வைத்து மூடும் வேலை அன்வர்பாயுடையது. நீங்களோ நானோ வைத்தால் கொஞ்சம் எண்ணெய்ப் பிசுக்கு ஒரு சோறு என்று டப்பாவுக்கு வெளியே ஒட்டிக்கொள்ளும். அன்வர்பாய் வைத்தால் திறந்து பார்த்தால்தான் தெரியும் உள்ளே சாப்பாடு வைக்கப்பட்டுவிட்ட தென்று. நீங்கள் ஒரு டப்பாவில் வைக்கும் நேரத்தில் அன்வர்பாய் 5 டப்பாக்களில் வைத்துவிடுவார். அது ஒரு வசந்தகால அனுபவமாக நெஞ்சில் இனித்துக் கொண்டே இருக்கிறது. நான்கு ஆண்டுகள் அப்படி. ரமலான் மாதம் முழுவதும் நாங்கள் பள்ளிவாசலில் நெருங்கி இருப்போம். அக்பரலி மாலை 4 மணிக்கே அன்வர்பாயை பள்ளிக்கு அனுப்பிவிடுவார். கடந்த ஓராண்டுக்கு முன் அன்வர்பாய் ஊருக்குப் போய்விட்டதாக அக்பரலி சொன்னார். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்க்கிறேன்.. அவரை காரில் இறக்கிவிட்டுப் போனது வேறு யாருமல்ல. அவருடைய பேரன் கமால்தான். பொறியியல் படிப்பு முடிந்தவுடன் அங்குள்ள சாயா கார்ப்பொரேஷன் அவரை போட்டிபோட்டு எடுத்துக் கொண்டது. உடன் சிங்கப்பூரிலுள்ள அதன் கிளைக்கு கமாலை அனுப்பிவிட்டது. மரீன் பெரேடில் இருக்கும் ஒரு காண்டோவில் வீடு, டயோட்டா கார் என்ற எல்லா வசதிகளையும் அந்தக் கம்பெனி ஏற்றுக்கொண்டது. ராஜமரியாதையுடன் கமாலை வைத்துக் கொண்டார்கள். கமால் வரும்போதே எல்லாரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். ஒரு குட்டி  வீட்டுக்குள் இட்லியால் வாழ்ந்தவர்கள் இன்று காண்டோ, கார் என்று சிங்கப்பூரில் வாழ்கிறார்கள். இந்தத் தகவலையெல்லாம் அன்வர்பாய் சொல்லி முடித்தபோது அவரின் விழிகள் கண்ணீரில் மின்னியது. அவரின் கைகளைப் பிடித்து நான் சொன்னேன். ‘நீங்கள் போட்ட விதை அடுத்த தலைமுறைக்கு மட்டுமல்ல, இன்னும் பல தலைமுறைகளூக்குப் போதுமானது. உங்களின் உள்ளமும் உழைப்பும் அல்லாஹ்வுக்கு போதும் அன்வர்பாய். எனக்குக் கிடைத்த  மாபெரும் சொத்து நீங்கள் மட்டும்தான் அன்வர்பாய்.’ அவரை அணைத்துக் கொண்டு அழுதேன். 5 அடி உயர அன்வர்பாய் உடல் என் கைக்குள் அடங்காமல் மாபெரும் மலைபோல் திமிறியது. அவரின் இதுதயத் துடிப்பு எனக்குள் எதிரொலித்தது. ஒரு சொட்டுக் கண்ணீரை அவரின் தலைத் தொப்பி தாங்கிக் கொண்டது. இறைவனின் படைப்பிலேயே மிக உயர்ந்த படைப்பு,  ஒரு சொட்டுக் கண்ணீர் தான்.

யூசுப் ராவுத்தர் ரஜித்

 

Series Navigationதொடுவானம் 177. தோழியான காதலி.சொல்லாத சொற்கள்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *