கங்குல்(நாவல்)

This entry is part 25 of 41 in the series 8 ஜூலை 2012

07 டிசம்பர் 1052

மிஹிராவாலி

அமர்சிங் பேனிவால்

இன்று மஹராஜ் என்னை அழைத்து இருக்கிறார். ஏதோ மிகவும் அவசியமாகவும் ரகசியமாகவும் பேச விரும்புகிறார் என்று அந்த ஒற்றன் சொல்லிப் போனான்.

எப்போதும் என்னிடம் செய்திகளை சுமந்து வரும் ஒற்றன் இல்லை இவன். மஹராஜ் முன்பு என்னிடம் எப்போதும் வழக்கமாக அனுப்பி வைக்கும் ஒற்றன் என்னுடைய தூரத்து உறவினன். அவனுடைய தகப்பனை எனக்கு நன்றாகத் தெரியும். அவனும் தன் தகப்பனைப் போலவே சற்று திக்கித் திக்கிப் பேசுவான். இந்த அனங்பால் மஹராஜின் தந்தையார் காலத்தில் இருந்தே அவனுடைய தகப்பன் சேவகத்தில இருந்தான். எங்கள் மூத்த மஹராஜ் அனங்பால் தோமர் பாண்டவர்கள் ஆண்ட பூமியை தன்னுடைய தலைநகராக வரித்து மாளிகைகள் கட்டியபோது அவருக்குப் பெரிதும் விசுவாசமாக சேவகம் செய்த குடும்பம் அது. அந்த ஒற்றன் சில நாட்களாகத் தென்படவில்லை.

இதுபற்றி இன்று அரண்மனையில் ஞாபகமாக விசாரிக்க வேண்டும்.

முற்றிலும் பரிச்சயம் அற்ற இந்தப் புது ஒற்றன் மஹராஜின் அழைப்பை மட்டுமே என்னிடம் வழித்துத் துடைத்து எறிந்து விட்டு அடர்ந்த புகைபோலப் படர்ந்த அதிகாலைப் பனியின் அடர்த்தியில் காணாமல் தொலைந்து போனான்.

இந்த அனங்பால் தோமர் மஹராஜூம் தன்னுடைய தந்தையார் நிர்மாணிக்கத் துவங்கிய நகருக்கு மேலும் மெருகூட்டி வருகிறார். சந்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் இந்த இந்த அனங்பால் தோமர் மஹராஜ்கள். மஹாபாரதத்தின் யயாதி மற்றும் புருவின் வம்சாவளியினர் என்று எப்போதும் தங்களைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறார்கள்.

இந்த அனங்பால் தோமர் மஹராஜின் தந்தையாரின் பெயரும் அனங்பால் தோமர் தான். எங்கள் கிராமங்களில் எங்களுடைய மொழியில் இவர்களை தன்வர் என்றும் துவ்வர் என்றும் அழைப்பார்கள். எங்கள் மஹராஜின் தந்தையார் பெரிய அனங்பாலர் தான் ‘திலி’ என்றும் மிஹிர்வாலி என்றும் அழைக்கப்படும் இந்த நகரை நிர்மாணிக்கத் துவங்கியவர்.

பெரிய அனங்பால் தோமர் மஹராஜ் பற்றிய ஒரு கதை என்னுடைய பூர்வீக கிராமத்தில் மிகவும் பிரசித்தமாகும். பெரிய அனங்பால் மஹராஜ் அப்போது கன்னோஜியை ஆண்டு கொண்டிருந்த காலத்தில் ஒருமுறை வேட்டைக்குக் கிளம்பியிருக்கிறார். வேட்டைக்குப் போன கானகத்தில் எப்போதும் அரச குடும்பத்தினர் ஓய்வு எடுக்க படுக்கை வசதிகளுடன் கூடிய மண்டபங்கள் இருக்கும்.

அதுபோன்ற ஓய்வு மண்டபம் ஒன்றில் மஹராஜ் படுக்கையில் சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அந்த மண்டபத்தின் சாளரத்தின் அருகில் ஒரு ஆட்டுக்குட்டி தன் தாயின் மடியில் இருந்து பாலைப் பருகிக் கொண்டிருந்தது. பாவம். குட்டி ஆடு. மிகவும் சுவாரசியத்துடனும் சுவையுடனும் தாயின் முலையை உறிஞ்சிக் கொண்டிருந்தது. தாய் ஆடும் கண்களை மூடிக் கொண்டு தன் குட்டிக்கு முலையைக் காண்பித்துக் கொண்டிருந்தது.

திடீரென்று பின்புறமாக எதிர்பாராத வகையில் வலிய ஓநாய் ஒன்று பாய்ந்து கிளம்பியது- பாலருந்திக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை அதன் தாயிடமிருந்து பிரித்து இழுத்துக் கொண்டு ஓடப் பார்த்தது. இந்தக் காட்சியைக் கண்ட எங்கள் பெரிய அனங்பால் மஹராஜ் சடாரென்று பதறிப்போய் அமர்ந்து கொண்டார். ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆனது என்பதை விட தாய் ஆடு என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க மிகவும் ஆவல் கொண்டார்.

தன்னுடைய குட்டி இழுபடுவது கண்ட தாய் ஆடு சிலிர்த்து எழுந்தது. ஏதோ ஆவேசத்தில் ஆட்கொண்டது போல, ஓநாய் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது அந்தத் தாய் ஆடு. அந்த ஆட்டுக்குள் ஏதோ ஒருவகையான அமானுஷ்யமான சக்தி பிரவேசம் கொண்டது போலத் தோன்றியது அவருக்கு. தாய் ஆட்டின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பற்றியிருந்த ஆட்டுக்குட்டியை அப்படியே விட்டு விட்டு பிடறியில் கால்பட ஓடியது அந்த ஓநாய்.

மஹராஜூக்கு பிரமிப்பில் இருந்து மீளவே வெகுநேரம் ஆயிற்று. அப்படியே திக்பிரமை பிடித்தது போல நின்று கொண்டிருந்தார். ஒருவாறு சமாளித்துக் கொண்டு ஓநாயின் பிடியில் இருந்து விடுபட்ட ஆட்டுக்குட்டியையும் ஆக்ரோஷமாக எதிர்த்து விரட்டிய தாய் ஆட்டையும் அருகில் நின்று பார்த்தார்.

தாய் ஆடு இவரையே முறைத்துக் கொண்டு நின்றதாம். அதன் கண்களை அவர் நேரடியாக சந்தித்தபோது பளீர் என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. “ஓஹோ… நீதான் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடமையை சுமந்து திரியும் க்ஷத்திரியனோ? ரொம்ப சந்தோஷம். இப்போது எதற்கு இங்கே வந்தாய்? எங்களை வேடிக்கை பார்க்க வந்தாயோ?” ஒரு ஷத்திரியனுக்கு இது அழகோ?” என்று அந்தத் தாய் ஆடு தன்னிடம் சொன்னதுபோலத் தோன்றியது.

ஆட்டுக்குட்டி பாவம் விட்டதைத் தொடரும் வகையில் தன்னுடைய தாயின் முலையை இன்னும் வன்மையாக உறிஞ்சிப் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. வாயடைத்துப் போய் நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தார் மஹராஜ்.

அரண்மனைக்குத் திரும்பி வந்த மஹராஜ் உறக்கம் இழந்தார். அந்தத் தாய் ஆட்டின் கண்கள் அவரைத் துரத்திக் கொண்டே இருந்தது. ராஜகுருவை உடனடியாக அரண்மனைக்கு வரவழைத்து அவரிடம் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார். ஒரு நிமிடம் மஹராஜை உற்றுப் பார்த்த ராஜகுரு அங்கேயே நிஷ்டையில் அமர்ந்து கொண்டார். நிஷ்டை கலைந்து கண்களைத் திறந்த ராஜகுரு மஹராஜை அருகில் அழைத்துக் கூறினாராம்.

“ஹே ராஜனே… நீ வேட்டைக்காகச் சென்று ஓய்வெடுத்த இடம் ஒரு சக்தி ஸ்தலம். சக்தி பீடம் அது. அன்னை அந்த இடத்தில் ஆவாஹனமாகி இருக்கிறாள். அதே இடத்தில் உன்னுடைய தலைநகரை உருவாக்கு. இந்த ஜெகத்தை ஆளும் சக்ரவர்த்திகளின் தலைநகராக நீண்ட காலம் அமோகப் பெயருடனும் அதீத கீர்த்தியுடனும் அந்த நகரம் திகழும்” என்றாராம் ராஜகுரு.

ராஜகுருவின் ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்து தாய் ஆடானது, ஓநாயிடம் போராடித் தன்னுடைய குட்டியை மீட்ட ஸ்தலத்தில் தலைநகரை உருவாக்கும் நோக்குடன் உடனடியாக ஒரு நகரை உருவாக்கத் துவங்கினார் மஹராஜ்.

தலைநகரம் உருவாக்கும் பணி தொடங்கி விட்டது. இந்த நகரத்தை கீர்த்தி பெற்ற நகரமாக மட்டுமன்றி இந்த நகரத்தை ஆளுபவர்கள் யாராலும் வெல்ல முடியாத சர்வ சக்தி பெற்ற சக்ரவர்த்திகளாகத் திகழ ஏதேனும் செய்தாக வேண்டுமே என்று ராஜகுருவின் பாதம் பணிந்து வேண்டினார் ராஜா.

மஹராஜின் இச்சையை நிறைவேற்றும் வகையில் அதர்வண வேதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அபிச்சார யாகத்தைத் துவங்கினார் ராஜகுரு. தாந்த்ரீக ரீதியான சடங்குகள் கொண்டது இந்த யாகம் என்று சொல்வார்கள். ராஜாக்களும் ஸ்திரீகளும் இந்த அபிச்சார யாகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள். தங்கள் ராஜ்ஜியத்தை சத்ருக்களின் துராக்கிரமத்தில் இருந்து காக்கும் பொருட்டு மஹராஜ்கள் இந்த யாகத்தை நடத்த ஏற்பாடு செய்வார்கள். ஸ்திரீக்கள் தங்களின் பர்த்தாக்களின் பூரண ஆயுசுக்கும் சத்ருக்களின் பார்வை அவர்களின் மீது படியாத படிக்கும் இந்த அபிச்சார யாகத்துக்கு ஏற்பாடு செய்வார்கள்.

அனங்பால் மஹராஜூக்காக செய்யப்படும் இந்த அபிச்சார யாகத்தின் ஒரு பகுதியான ‘கீலக்’ என்னும் சடங்கையும் தொடங்கினார் ராஜகுரு. ‘கீலக்’ என்றால் ஆணி என்று பொருளாகும். அளவில் மிகவும் பருத்து நீண்ட ஆணி ஒன்றைத் தயார் செய்தார்கள். உரத்த மந்திர உச்சாடனங்களுக்கு இடையில் அந்த ஆணியை பூமியில் பெரிய ராட்சசத்தனமான சுத்தியல் கொண்டு அறைந்தார்கள். ஆணி பூமியில் சுத்தமாக இறக்கப்பட்டதும் மன்னரை அருகில் அழைத்தார் ராஜகுரு.

“ஹே ராஜனே… இனி உன்னுடைய நகரம் எண்ணற்ற தலைமுறைகளுக்கு சீரும் சிறப்புமாக செழித்தோங்கும். இந்தப் பெரிய ஆணியானது ஆதிசேஷனின் சிரசின் மீது இறக்கி அடிக்கப்பட்டிருக்கிறது. ஆதிசேஷன் இந்தப் பூமண்டலத்தைத் தன் சிரசுகளால் தாங்கி வருகிறான். எனவே அவன் எப்போதெல்லாம் இந்த பூமியை ஒரு தலையில் இருந்து தன் எண்ணற்ற வேறு தலைகளில் ஒன்றுக்கு மாற்றிக் கொள்கிறானோ அப்போது விபரீதமான பூகம்பம் ஏற்படும்.

இந்தப் பூஜையின் வழியாக ஆதிசேஷனின் உச்சந்தலையில் இந்தப் பெரிய ஆணி வைத்து அறையப்பட்டு இருக்கிறது. அதனால் இந்த ஸ்தலம் தற்போது மிகவும் பலமாகவும் ஸ்திரமாகவும் மாறிவிட்டது. இந்தக் காரணத்தால் இந்த ஸ்தலத்தில் பூகம்பம் போன்ற பேரழிவுகள் ஏதும் வராது. இங்கு பல தலைமுறைகள் அழிவுகள் ஏதுமின்றி வளமுடன் செழித்தோங்கும்” என்றார்.

பொதுவாகவே ராஜவம்சத்தை சேர்ந்தவர்கள் எப்போதும் கொஞ்சம் சந்தேகப் பேர்வழிகள். தங்களைத் தவிர வேறு யாரையும் அத்தனை விரைவில் நம்ப மாட்டார்கள். உள்ளே குறுங்கத்தி புதைந்துள்ளதோ என்று கூப்பிய கரங்களைக் கூட சந்தேகிக்கும் நிர்மூடர்கள் என்று என்னுடைய பாட்டனார் சொல்வார். அது எங்கள் மஹராஜின் விஷயத்தில் ஸ்திரமாக நிரூபணமானது.

ராஜகுரு சொன்ன வார்த்தைகளில் மஹராஜுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. அது எப்படி ஒரு சாதாரண இரும்பால் செய்யப்பட்ட ஆணி இந்த பூமியின் நடுக்கத்தை நிறுத்தி வைக்க முடியும்? இந்த ராஜகுரு ஏதோ பம்மாத்து செய்கிறார் என்று சந்தேகப்பட்டார். சேவகர்களை அழைத்து அந்த ஆணி அடிக்கப்பட்ட இடத்தைச் சுற்றித் தோண்டச் சொன்னார். தரையில் இருந்து அந்த ஆணியை வலுக்கட்டாயமாகப் பிடுங்க ஆணையிட்டார். சுமார் ஐந்து நாட்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகு தரையில் அறையப்பட்ட அந்த ஆணி பிடுங்கப்பட்டது.

ஆணி பிடுங்கப்படும்போது மஹராஜ் அங்கே இருந்தார். ஆணியைப் பிடுங்கிய மறுகணம் மஹராஜ் கண்ட காட்சி அவரைப் பெரும் திகைப்பில் ஆழ்த்தியது. பிடுங்கப்பட்ட ஆணியில் குருதி வடிந்தது. ஆணி பிடுங்கப்பட்ட இடத்தில் இருந்து குபீல் என ரத்தம் மேல்நோக்கி பெரும் வெள்ளமாகப் பீய்ச்சி அடித்தது. ஸ்தம்பித்துப் போனார் மஹராஜ்.

அடடே… இப்படிச் செய்து விட்டோமே… இந்த நகருக்கு என்ன கேடு விளையுமோ என்று அச்சப்பட்டார். ராஜகுருவை உடனே அங்கு வரவழைத்தார். நடந்து முடிந்த அசம்பாவிதத்தை மன்னித்து அருளுமாறும் மேற்கொண்டு வரும் கேடுகளைத் தடுத்து நிறுத்த ஏதேனும் உபாயங்கள் உரைக்குமாறும் ராஜகுருவின் கால்களில் விழுந்து மன்றாடினார்.

ராஜகுரு மஹராஜை மிகவும் இகழ்ச்சியாகப் பார்த்து. “நிர்மூடனே… என்ன காரியம் செய்து விட்டாய்? இது ஆதிசேஷனின் தலையில் இருந்து பீறிடும் ரத்தம். இந்தப் புனிதமான ஆணியை வேரோடு பிடுங்கியதால் இப்போது எல்லாம் சர்வ நாசமாகிப் போனது. நான் செய்த யாகத்துக்கும் பூஜைக்கும் சடங்குகளுக்கும் யாதொரு பயனும் இருக்காது. இனி ஒன்றும் செய்ய முடியாது” என்றார் ராஜகுரு.

“ஒரு க்ஷத்திரியன் தன்னுடைய ராஜ்ஜியத்தைக் காப்பதற்கு நீ பார்த்த அந்தத் தாய் ஆட்டின் வீரமும் விவேகமும் மட்டுமே தேவைப்படும். நீ ஆசைப்பட்டது போன்று மந்திரங்களும் தந்திரங்களும் பலவீனமானவர்களுக்கும், நிர்மூடர்களுக்கும் மட்டுமே தேவைப்படும்” என்று உரக்கக் கூச்சலிட்டார்.

க்கில்லி தீலி பாயீ..

தோமர் ஹூவா மத் ஹீன்…

(ஆணி இங்கு இளகிப் போனதே..

தோமர் மூளை பிசகிப் போனதே…

என்று பாடிக் கொண்டே அந்த இடத்தை விட்டு சென்றாராம். இப்படியாக பெரிய அனங்பால் மஹராஜ் தனக்கான தலைநகரம் கட்டும் பணியை நிறுத்திக் கொண்டார் என்று சொல்வார்கள்.

ஆனால் அவருடைய புத்திரரான இந்த அனங்பால் மஹராஜ் தந்தையின் விருப்பமான புதிய தலைநகரை மீண்டும் புதுப்பிக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். லால்கோட் என்னும் பெயரில் நகரைச் சுற்றி ஒரு பெரிய அரணை பிரம்மாண்டமாகக் கட்டினார். பகைவர்களின் தாக்குதலைத் தாக்குப் பிடிக்கும் வகையில் பெரும் அரணாக இந்த லால்கோட் திகழ்கிறது. அதைத் தொடர்ந்து அவருக்கு மிகவும் பிடித்தமான இடத்தைத் தேர்ந்தெடுத்து மிஹிர்வாலி என்று பெயரிட்டு அங்கங்கு மாளிகைகளையும் ஆலயங்களையும் நிர்மாணித்து வருகிறார்.

இடையில் சில துர்புத்தி கொண்ட அமைச்சர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பதால் மக்களுக்கு சந்துஷ்டி அளிக்காத காரியங்களையும் செய்து விடுகிறார் எங்கள் அரசர். சந்திரகுப்த விக்ரமாதித்ய மஹராஜ் நிர்மாணித்த இரும்புத் தூண் ஒன்று இருந்தது. அந்தத் தூணில் சந்திரகுப்தரின் கீர்த்திகள் மிகவும் விரிவாகவும் அலங்காரமாகவும் பொறிக்கப்பட்டு இருக்கிறதாம். எத்தனை காலம் கடந்தாலும் துருப்பிடிக்காது இந்தத் தூண் என்று பேசிக் கொள்கிறார்கள். எந்த அளவில் இது உண்மை என்று தெரியவில்லை. அதனை நிர்மாணித்த சந்திரகுப்த விக்ரமாதித்யர்தான் சொல்ல வேண்டும். மதுராவில் சந்திரகுப்தர் நிர்மாணித்த இந்தப் பிரபலமான தூணை அங்கிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து எடுத்து வந்து மிஹிராவாலியின் ஆலயங்களுக்கு இடையில் நிறுவியிருக்கிறார்.

இந்தத் தூணை மிஹிராவாலியில் ஸ்தாபித்த தினத்தில் ஜனத்திரள் மிரள வைப்பதாக இருந்தது. வேடிக்கை பார்க்க வந்த எல்லோரும் வழுவழுப்பான அந்தத் தூணை ஏதோ மிருதுவான ஒரு ஸ்திரீயைத் தொட்டுப் பார்ப்பது போல ரொம்பவும் நாசூககாகத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்தத் தூணில் இன்னோரு அதிசயமும் இருந்தது. எத்தனைதான் பிரயத்தனப்பட்டாலும் இருகைகளில் அணைத்தாலும் அகட்டிப் பிடிக்க முடியாது என்று சொல்லி மாய்ந்து போகிறார்கள். அதே போல அண்டை தேசங்களில் எந்த அழகான சிற்பம் அல்லது தூண்கள் இருந்தாலும் பெயர்த்து எடுத்து வந்து மிஹிர்வாலியில் நட்டுவிடுகிறார் மஹராஜ்.

எதையாவது செய்து இந்த நகரை சௌந்தர்யமாக்க வேண்டும் என்று வெறிபிடித்து அலைகிறார் மஹராஜ் என்று நகரத்தில் பரவலாகப் பேசிக்கொள்கிறார்கள். மக்களிடையில் உலவும் இந்த வகையான பேச்சுக்களை ஒற்றர் படையினர் அவரிடம் ஒழுங்காகக் கொண்டு சேர்க்கிறார்களா என்பது தெளிவாகவில்லை.

தன்னுடைய ஒற்றர் படையில் ஷத்தியர்களைவிட பிராம்மணர்களை அதிகமாக வைத்திருக்கிறார் மஹராஜ். இந்த பிராமணர்கள் சரியாக வேவு பார்த்து ஒற்று சொல்வதை விட்டு தங்களின் ஹேஷ்யங்களையும், தாங்கள் கற்ற ஜோதிடக் கணிப்புக்களை மட்டுமே அதிகமாக மன்னரின் காதுகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். நட்சத்திரங்களையும் குளிகைகளையும் கணக்கிட்டு அவற்றின் பலாபலன்களை சொல்லிவரும் இவர்கள் மன்னரின் பின்புறமாகப் பதுங்கிப் பாயக் காத்திருக்கும் பகையைப் பற்றி சொல்வதைத் தவிர்க்கிறார்கள்.

இவர்கள் சொல்வதைக் கேட்டு இந்த மஹராஜ் எங்கெங்கிருந்தோ சிலைகளையும் ஸ்தூபிகளையும் பிடுங்கி வந்து தன்னுடைய மிஹிர்வாலியின் மூலை முடுக்கெங்கும் நட்டுக் கொள்கிறார். அண்டை கிராமங்களில் உள்ள ஆலயங்களின் விக்கிரகங்களையும் விட்டு வைக்க வில்லை.

இந்த பிராம்மண ஒற்றர்கள் தங்கள் கண்களில் பட்ட பெண்களின் பிறந்த நாள், நட்சத்திர பலன் கணித்துக் குறிபார்த்து இன்னார் வீட்டுப் பெண்கள் மஹராஜுக்கு ராசியானவர்கள் என்று சொல்வார்கள். இந்தப் பெண்ணுடன் இந்த நேரத்தில் கூடினால் இந்தப் பலன் கிடைக்கும் என்றும் கணித்துச் சொல்கிறார்கள். ஒற்றர் படையினர் சுட்டும் பெண்களை அவர்களின் வீடுகளில் இருந்தே வலுக்கட்டாயமாகத் தூக்கி வந்து தன் அந்தப்புரத்தின் அறைகளை அலங்கரித்துக் கொள்கிறார் மஹராஜ்.

தங்கள் இல்லங்களின் ஸ்த்ரீக்களையும் புத்திரிகளையும் இழந்து சோகத்தில் அலையும் பலரை இப்போது நகரத்தில் அதிகமாகக் காண நேருகிறது.

அவ்வப்போது இதுபோன்ற துர்க்காரியங்கள் ஒன்றிரண்டு செய்தாலும் மிஹிராவாலி நகரம் முழுதும் ஆலயங்களாக நிர்மாணித்து வருகிறார் அனங்பால் தோமர் மஹராஜ். இப்போது அவர் உருவாக்கி வரும் ஜோக்மாயா ஆலயத்தின் நிர்மாணத்தில் இந்த தேசத்தின் சகலரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார்கள். பஞ்ச பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும் இந்த ஆலயத்தை முற்றாக இடித்து வேறு புதிய வடிவில் நிர்மாணித்து வருகிறார். அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த ஆலயத்தின் அழகு சொக்க வைப்பதாக இருக்கிறது என்று அனைவரும் வியந்து மாள்கிறார்கள். ஆலயம் நிர்மாணிப்பதற்கு முன்பே இங்கு கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லாமல் அமர்க்களப்பட்டு வருகிறது.

மன்னரின் புதிய ஒற்றர் படை வழங்கும் ஜோதிட ஆலோசனையின் துணையில் புதிதாக அந்தப்புறத்தில் ராணி அந்தஸ்து பெற்ற பெண்களும் இந்தக் கோயிலுக்கு நள்ளிரவில் வந்து பூஜைகள் செய்து விட்டுச் சொல்வதாக என் மனைவி ஒருமுறை சொன்னாள்.

இல்லத்தில் இருந்தே மாயாதேவியை வணங்குமாறும் முடிந்த வரை அந்தக் கோயிலின் பக்கம் அதிகம் போகவேண்டாம் என்றும் என் மனைவியை நான் எச்சரித்து வைத்திருக்கிறேன். ஒற்றர் படையின் கண்களில் படவேண்டாம் என்று தங்கள் வீட்டுப் பெண்களையும் எச்சரித்து இருப்பதாக தலைமை அமைச்சர் என்னிடம் ஒருமுறை ஆதங்கப்பட்டுக் கொண்டார்.

மஹராஜ் சந்திக்க விரும்புவதாக செய்தியை சுமந்து வந்த இந்தப் புதிய ஒற்றன் என்ன காரணத்தினாலோ நேராகக் கண்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தது போல இருந்தது எனக்கு. மாலை மயங்கும் நேரத்தில், இரவும் இருளும் கட்டியம் சொல்லி வரும் நாழிகையில் வெண்பனி அடர்ந்து படர்ந்த என் தோட்டத்தின் முகப்பில் என்னை சந்தித்தான் அவன். அந்த நேரத்தில் அவனுடைய முகலாவண்யங்கள் சற்றுத் தெளிவில்லாமல் இருந்ததாலும் அப்படித் தோன்றியிருக்கலாம். அவன் எனக்குக் காண்பித்த அரச முத்திரையை வாங்கி வைத்திருக்கலாமோ என்று தோன்றியது. இப்போது அரச முத்திரைகளும் அரசாங்க நாணயங்களும் அண்டை தேசத்தில் கள்ளத் தனமாகத் தயாரிக்கப்பட்டு எங்கள் தேசத்தில் புழக்கத்தில் உள்ளதாக செய்திகள் உள்ளன.

தோமர் மஹராஜ் இவை போன்ற செய்திகளில் எல்லாம் கவனம் வைக்க மாட்டேன் என்கிறார். அவருக்கு அந்தப் பாழாய்ப் போகும் புது நகரமும் பர நாரீமணிகளின் அங்க லாவண்யங்களும், சாமுத்ரிகா லட்சணங்களும் நட்சத்திரப் பொருத்தங்களும் யோனிப் பொருத்தங்களும் மட்டுமே முக்கியமாக இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது.

இந்த சந்திப்பின் போது அவருக்கு எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். நாளை எந்த வகையிலும் அவர் என்னைக் குறை கூற இடம் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

மாலைப்பொழுது மயங்கத் துவங்கியிருந்தது.

இல்லத்தின் பண்டிதரை வெளியில் அனுப்பி சரியான சகுனம் பார்க்கச் சொல்லிக் காத்திருந்து அவருடைய சமிக்ஞை கிட்டியதும் மெல்ல வெளியில் வந்தேன்.

எனக்கான ரதம் பூட்டிய குதிரைகளுடன் தயாராக நின்றிருந்தது. காந்தாரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நான்கு குதிரைகள். நன்கு தேய்த்துக் கழுவப்பட்டு காலை இளங்கதிரில் தகதகவென ஜொலிப்புடன் மதர்த்து நிற்கும் குதிரைகள்.

வழக்கமாக வருகிறவன் இல்லாமல் தேரோட்டியின் இடத்தில் இன்று வேறொருவன் ஆரோகணித்து இருந்தான்.

இவன் யாரென்றும் நேற்று வரை இருந்தவன் என்ன ஆனான் என்றும் இந்தப் புதிய தேரோட்டியை வினவினேன்.

தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் உபசேனாபதி இன்றிலிருந்து அடுத்து ஆணை வரும் வரை தன்னை எனக்குத் தேரோட்டப் பணித்திருக்கிறார் என்றும் மிகவும் பணிவாகத் தெரிவித்தான். தேரில் ஏறுவதற்கு முன்பு அவனுடைய அரசு முத்திரையைக் கேட்டு வாங்கி என் வசம் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.

அவனுடைய சாட்டையின் முதல் வீச்சில் கனைத்துப் பாய்ந்தன அசுவங்கள். வழியெங்கும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. இந்தப் பொழுது சாயும் நேரத்தில் வழக்கத்தை விட இந்தக் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததைப் போலத் தோன்றியது. அங்கங்கு தீப்பந்தங்களைச் சுமந்து இருளுடன் போரிட்டுத் துரத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

தேரோட்டியைக் கேட்டதில் ஜோக்மாயா ஆலய வளாகத்தில் புதிதாக ஒரு ஸ்தூபியை எங்கிருந்தோ இருநாட்களுக்கு முன்பு கொண்டு வந்து நட்டுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தான். மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த அந்தத் தூண் பெரும் செலவில் கங்க தேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது என்றும் பலவகையான கோலங்களிலும் கோணங்களிலும் மைதுனக் காட்சிகள் அந்தத் தூண் எங்கும் செதுக்கப்பட்டுள்ளதால் இளைஞர்களும் வயோதிகர்களும் முண்டியடித்துக் கொண்டு அங்கேயே அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்றான். நேற்று மாலை அந்த இடத்தில் ஏற்பட்ட நெரிசலில் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் உடல் நசுங்கி செத்தான் என்றும் பல வயோதிகர்கள் வலுவாகக் காயம் அடைந்தார்கள் என்றும் சொன்னான். நள்ளிரவானாலும் தீப்பந்தங்களின் துணையுடன் இந்த ஸ்தூபியைப் வயது வித்தியாசம் இன்றி இளைஞர்களும் வயோதிகர்களும் கண்டு கணித்து வருவதாகச் சொன்னான்.

இந்த அனங்பால் தோமருக்கு எந்த ஒற்றன் இந்தத் தூணின் மகிமை பற்றி எடுத்துச் சொன்னான் என்று விசாரிக்க வேண்டும்.

வழியெங்கும் புதுநகர் உருவாகும் பரபரப்பு தென்பட்டது. யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒரு பணியை மேற்கொண்டு ஓடுவதைப் போலத் தென்பட்டார்கள். அடர்ந்து துரத்தும் இருளில் கண்ணுக்குப் புலப்படாத ஏதோ ஒரு மாயச்சாட்டை இந்த மனித பம்பரங்களைச் சுழலவிடுவது போலத்தோன்றியது எனக்கு.

ஒருவழியாக மன்னரின் மாளிகையை அடைந்தோம். வாயிலில் எனக்காகவே காத்து இருப்பது போல தலைமை அமைச்சர் ஒரு ஆசனத்தில் வீற்றிருந்தார். என்னுடைய ரதம் நின்றதும் எழுந்து வந்து என்னுடைய கரம் பற்றி வாழ்த்துத் தெரிவித்தார். தேரோட்டியை அங்கேயே காத்திருக்குமாறும் என்னைப் பின் தொடரவேண்டாம் என்றும் உத்தரவு பிறப்பித்து விட்டு தலைமை அமைச்சர் வழக்கமாக ஓய்வு எடுக்கும் மண்டபத்துக்குள் அவருடன் நுழைந்தேன். நாங்கள் சொல்லும் வரை யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று தலைமை அமைச்சர் வாயிலில் நின்று கொண்டிருந்தவனிடம் உத்தரவிட்டார்.

அவருடைய அறையின் வாயிலில் எப்போதும் வழக்கமாக நிற்கும் காவலன் அங்கு இல்லை. இன்று வேறு எவனோ நிற்கிறான். எல்லாமே புதிராக இருக்கிறது. சரி. மஹராஜை சந்திப்பதற்கு முன்பு தலைமை அமைச்சரிடம் ஆலோசித்து விட்டுச் சென்றால் சரியாக இருக்கும் என்று தோன்றியது. மஹராஜ் ஏதாவது விநோதமாக சொன்னார் என்றால் முட்டாள்தனமாக திகைத்து நிற்கத் தேவை இருக்காது.

மண்டபத்தில் அந்தரங்கமான பகுதிக்குச் சென்றதும் தலைமை அமைச்சரை ஆவலுடன் கேட்டேன். “பண்டிட்ஜி… இன்று எல்லாம் விநோதமாகத் தோன்றுகிறது எனக்கு. வழக்கமாக எனக்கு அரசரின் அந்தரங்க செய்தியை சுமந்து வரும் ஒற்றன் இன்று வரவில்லை. வேறு யாரோ ஒரு அந்நியன் வந்துவிட்டுப் போனான். என்னுடைய தேரோட்டியும் மாறி இருக்கிறான். இப்போது உங்கள் மண்டபத்தின் வாயிலில் நிற்பவனும் வேறு ஒருவனாக இருக்கிறான். என்ன நடக்கிறது இங்கே? பிரச்னை ஏதும் இல்லையே?” என்று வினவினேன்.

தலைமை அமைச்சர் பரிதாபமாகப் புன்னகைத்துக் கொண்டே “மஹராஜை சந்திக்கும்போது உங்களுக்கு எல்லாம் தெரியும். என்னை சந்தித்து விட்டு அவரை சந்திக்கச் செல்வது பற்றி அவராகக் கேட்டால் ஒழிய நீங்களாக எதுவும் சொல்ல வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். எனக்கு எதுவும் புரியவில்லை.

“இந்த அரசு இலச்சினை பொறித்த முத்திரையைப் பாருங்கள். என்னுடைய புதிய தேரோட்டியிடம் இன்று மாலை நான் வாங்கி வைத்துக் கொண்டது. இது உண்மையான இலச்சினைதானா அல்லது நகல் செய்யப்பட்டிருக்கிறதா என்று உறுதிப்படுத்துங்கள்” என்று வேண்டினேன்.

இலச்சினையை தீவிரமாகவும் நிதானமாகவும் ஆய்ந்து விட்டு என்னிடம் திருப்பித் தந்தார்.

“இலச்சினையில் ஒன்றும் பிரச்சினை இல்லை அமர்சிங். இது நகல் அல்ல. அசல்தான். இப்போது ஆட்கள் மட்டுமே மாற்றப்பட்டு வருகிறார்கள். முத்திரைகள் அசலாகத்தான் இருக்கின்றன. மஹராஜை சந்தித்து வாருங்கள். நீங்கள் திரும்பி வரும்போது நானே தலைமை அமைச்சராக நீடித்து இருந்தால் உங்களை இங்கே சந்திக்கிறேன். இல்லை என்றால் இரவு என் மாளிகைக்கு வாருங்கள். அங்கே பேசுவோம்” என்றார்.

அவர் குரலில் மிகுந்த வேதனையும் அக்கறையும் தொனித்தது. மிகவும் பரிதாபமாகவும் கவலையாகவும் இருந்தது எனக்கு. தலைமை அமைச்சர் நன்கு கற்றறிந்த அறிஞர். பிராம்மணனின் நுண்ணறிவும் க்ஷத்ரியனின் மனத்திண்மையும் ஒருங்குசேர வாய்க்கப்பட்டவர். இவருடைய தகப்பனார் பெரிய அனங்பால் தோமரின் ஊழியத்தில் இருந்திருக்கிறார். எங்கள் அனங்பால் தோமர் மஹராஜுக்கு பல மனைவிகள் வழியாகப் பிறந்த இருபத்து மூன்று சகோதரர்கள். வேறு வேறு பிரதேசங்க்ளைத் தனித்தனியாக ஆண்டு வருகிறார்கள். அவர்கள் அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் இந்தத் தலைமை அமைச்சர். தனக்கென்றோ தன் குடும்பத்துக்கு என்றோ என்றுமே எதையும் பிரித்து வைத்து நடக்காதவர் இந்தத் தலைமை அமைச்சர். தன் வாழ்நாள் முழுதையும் அரச சேவகத்திலேயே கழித்தவர். அவருக்கே ஆதங்கம் அளிக்கும் வண்ணம் ஏதாவது அரண்மனையில் நிகழ்ந்திருந்தால் நிச்சயமாக அது இந்த தேசத்துக்கு ஊறுவிளைவிக்கும் விஷயமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

தலைமை அமைச்சரின் மண்டபத்தை விட்டு வெளியே வந்து வழக்கமான பாதையில் அல்லாது விலகிச் சென்று வேறு பாதையில் நடந்து மஹராஜ் பிரதானிகளை சந்திக்கும் மண்டபத்துக்கு வந்தேன். அங்கு காவலில் இருந்த தலைமைக் காவலனுக்கு என்னைத் தெரியவில்லை. என்னிடம் அடையாள முத்திரையைக் கேட்டான். அவனுக்கு என்னுடைய வாளை எடுத்துக் காண்பித்து எச்சரித்து விட்டு அவனை விலக்கி நடந்தேன்.

அவனுக்குப் பின்புறமாக சற்றத்தள்ளி பழைய காவலன் ஒருவன் நின்றிருந்தான். அவன் மிகவும் பதட்டமாக புதுக்காவலனை அணுகி, “மன்னரின் தலைமை ஆலோசகர் இவர். இவரையா நிறுத்துகிறாய்?” என்று அவனிடம் சண்டைக்குப் போனான். அவர்கள் இருவரையும் அமைதி காக்குமாறு பணித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.

என்னை ரகசியமாக வந்து சந்திக்குமாறு ஒற்றனிடம் சொல்லி அனுப்பி விட்டு எதற்கு இத்தனை ஆட்கள் காவலுக்கு இருக்கும் மாளிகையில் மஹராஜ் தன்னை சந்திக்கச் சொல்ல வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. மஹராஜ் காக்க விழையும் வாய்ப்பு கிட்டவில்லையா அல்லது வேறு ஏதாவது நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிவிட்டாரா என்றும் புரியவில்லை.

அவருக்கு அந்தரங்கப் பணிவிடைகள் செய்யும் தாசி பிரதான வாயிலில் உட்கார்ந்தவாறே கண்ணயர்ந்து இருந்தாள். அவளை லேசாகத் தொட்டதும் திடுக்கிட்டு விழித்தாள். “மஹராஜ் என்னை வரப்பணித்திருக்கிறார்” என்றேன்.

கண்களில் இருந்த மிரட்சி குறையாமல் மெலிதாகப் புன்னகைக்கும் முயற்சியுடன், “தங்களுக்காகத்தான் மஹராஜ் காத்து இருக்கிறார்” என்று பணிவுடன் என்னை வழிநடத்திச் சென்றான்.

சாம்ராட் அனங்பால் தோமர் மஹராஜ் மஞ்சம் போல இருந்த ஆசனம் ஒன்றில் களைப்புடன் சாய்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தார். சேடியர் மூவர் அவரைச் சுற்றி அமர்ந்து அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தனர். மண்டப அறையின் உள்ளே ஒருமூலையில் தஸாங்கப் புகை சுழன்று சூழலை வெகு ரம்மியமாக மாற்றிக் கொண்டிருந்தது. மஹராஜ் சயனித்து இருந்த மஞ்சத்தின் அருகில் நான் நின்றதும் அவருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த சேடியர்கள் அறையை விட்டு மெல்ல வெளியேறினார்கள். என்னை வழிநடத்தி அழைத்து வந்த சேடியும் சத்தமின்றி வெளியேறினாள்.

நானும் அவரும் தனித்து விடப்பட்டோம்.

சுரத்து இல்லாமல் மஹராஜ் சிரிக்க எத்தனித்தது போல இருந்தது. அவரே பேச்சைத் துவங்கட்டும் என்று காத்திருந்தேன். எங்கள் இருவருக்கு இடையில் அடர்த்தியான மௌனம் நிலவியது. மௌனத்தை ஒருவழியாக மஹராஜின் பேச்சு கலைத்தது.

“அமர்சிங், நானும் மஹாராணியும் விரைவில் கங்கைக் கரைக்குப் புனிதப் பயணம் மேற்கொள்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்லி விட்டேன். நாங்கள் திரும்பி வரும்வரை பொறுப்புக்களை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லத் தீர்மானித்து இருக்கிறோம். இன்னும் இதனை யாருக்கும் தெரிவிக்க வில்லை. உங்களை எல்லாம் கலந்து ஆலோசித்து விட்டு அதிகாரபூர்வமாக அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்று இருக்கிறோம்”

மஹராஜ், இந்தச் சிறியவனின் பொறுப்பற்ற வார்த்தைகளை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆனால் என் மனதில் உதிக்கின்ற சம்சயத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த அடிமைக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும்”

“பரவாயில்லை. நீ எங்களிடம் சொல்ல நினைப்பதை தாராளமாக சொல்லலாம் அமர்சிங்”

“மஹராஜ், உங்கள் புனித யாத்திரை பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே, பொறுப்பை நீங்கள் வேறு யாரிடமாவது ஒப்படைப்பதற்கு முன்பே அதற்கான பூர்வாங்க வேலைகள் துவங்கி விட்டது போலத்தோன்றுகிறது”

“எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்?”

“வழக்கமாக எனக்கு செய்திகளை சுமந்து வரும் உங்கள் அந்தரங்க ஒற்றன் மாற்றப்பட்டிருக்கிறான். என்னுடைய தேரோட்டி மாற்றப்பட்டு இருக்கிறான். தலைமை அமைச்சரின் மண்டபக் காவலாளி மற்றும் உங்கள் மண்டபத்தின் காவலாளி வரை மாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒரே நாளில் பல மாற்றங்களைப் பார்க்க நேர்ந்து விட்டது மஹராஜ்”

அரசர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது போன்று நீண்ட மௌனம் எங்கள் இடையில் தவழ்ந்தது. தஸாங்கம் வைக்கப்பட்டிருந்த குவளையில் கரித்துண்டுகள் உயிரிழந்ததால் முன்பு சுழல் சுழலாக மண்டிய புகை மண்டலம் இப்போது சற்று தீய்ந்த வாடையைக் கிளப்பியது.

“புரிகிறது. இங்கு எம்முடைய மண்டபத்திலும் சில மாற்றங்களை உணருகிறோம். அது ஒருபக்கம் இருக்கட்டும். அரசப் பணியின் பொறுப்புக்களை யார்வசம் நாம் ஒப்படைக்கிறோம் தெரியுமா?”

ஒன்றும் கூறாது மௌனம் காத்தேன்.

“எங்கள் இரண்டாவது குமாரியின் மூத்த குமாரர், எங்கள் பேரன் பிரித்விராஜ் சௌஹான் வசம் நம் அரசப்பணியை ஒப்படைக்கப் போகிறோம். நாங்கள் திரும்பி வரும் வரை இளவரசர் எங்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அரசை வழிநடத்துவார். எங்கள் பயணம் முடிந்ததும் மீண்டும் நாமே அரசப் பொறுப்பை மீண்டும் எடுத்துக் கொள்வோம். இது குறித்து எம்முடைய மாப்பிள்ளையான அஜ்மீர் மன்னருக்கு செய்தி அனுப்பினோம். அவர் தன் புதல்வரை கையோடு இங்கு அனுப்பி வைத்தார். கடந்த இரு நாட்களாக இளவரசர் எம்முடன் தான் இருக்கிறார். அவருக்கு இந்த மிஹிர்வாலி நிர்மாணம் குறித்த முக்கியமான விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்தோம். உன் வழியாக இந்தத் தகவலை அரசின் ஆலோசனைக் குழுவுக்கும், சபை மூப்பர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அரசு ரீதியாகத் தெரிவிக்கலாம் என்று எண்ணித்தான் உம்மை வரவழைத்தோம்”.

மஹராஜ் தீர்மானித்து விட்டார். இது மஹராஜ் சுயமாக எடுத்த முடிவா அல்லது அவருடைய ஜோதிடம் கணிக்கும் ஒற்றர் படையின் பரிந்துரையா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இப்போதைக்கு ஆரோக்கியமான முடிவாகத் தெரியவில்லை.

தன்னுடைய தீர்மானத்தை, ஏற்கனவே முடிந்த முடிவைத் தெரிவிக்க என்னை அழைத்திருக்கிறார். என்னுடைய வேலை இனி அந்த முடிவினை அதிகாரபூர்வமாக அனைவருக்கும் தெரிவிப்பது. இதற்கு எதற்காக இத்தனை ரகசியமாக வரச்சொல்லி ஒற்றனை அனுப்பினார் என்று தெரியவில்லை. ஏற்கனவே முடிந்து போன ஒரு விஷயத்துக்கு எந்தவகையில் ரகசிய நடவடிக்கைகளும் ஆலோசனையும் தேவைப்படுகிறது என்றும் உண்மையாகவே புரியவில்லை.

“என்ன யோசிக்கிறாய் அமர்சிங்? எம்முடைய முடிவில் உனக்கு உடன்பாடு இல்லையா?”

“அதிகாரபூர்வ அறிவிப்புக்கு முன்னரே பூர்வாங்க வேலைகளை இளவரசர் துவங்கி விட்டார் போலத் தெரிகிறது மஹராஜ். நான் ஏற்கனவே சொன்னது போல பல இடங்களில் திடீர் மாற்றங்கள் துவங்கி இருக்கின்றன. அது பற்றித்தான் யோசிக்கிறேன். மஹராஜ் புனிதயாத்திரை முடித்துத் திரும்பி வரும்போது தன்னுடைய பொறுப்பை மீண்டும் மஹராஜிடம் ஒப்படைக்கும் வகையில் உடன்படிக்கை போல ஏதாவது செய்திருக்கிறீர்களா மஹராஜ்?”

அரசர் உரக்க சிரித்தார். என்னை ஏளனம் செய்வது போல இருந்தது அவருடைய சிரிப்பு. “மகள் வயிற்றில் பிறந்த பேரனுடன் உடன்படிக்கையா? யாரும் சிரிக்க மாட்டார்களா அமர்சிங்? இளவரசர் இளரத்தம். புதுமைகள் செய்யத் துடிக்கும் வயது. மேலும் வருங்காலத்தில் அஜ்மீர் ராஜ்யத்தின் பொறுப்பை முழு அளவில் ஏற்றுக் கொள்ள ஒரு ஒத்திகை போல இந்தப் பொறுப்பு அவருக்கு அமையும் அல்லவா?”

ஒத்திகைகள் ஏற்கனவே துவங்கி விட்டன என்று சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

“மஹராஜின் விருப்பத்தை, ஆணையை எழுத்து வடிவில் நாளை தயாரித்து வருகிறேன். மஹராஜ் கையொப்பமும் முத்திரையும் இட்டபின் ஆலோசனைக் குழுவைக் கூட்டி மஹராஜின் முடிவைத் தெரிவித்து விடுகிறேன். மக்களுக்கும் பறையறிவித்து விடுகிறேன். பொறுப்பைக் கைமாற்றும் நாளை நீங்கள் அந்த ஆணையில் அறிவித்து விடுங்கள் மஹராஜ்”

“நாளை இரவுக்குள் அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை எடுத்து வா அமர்சிங். அது சரி, தலைமை அமைச்சரை வழியில் சந்தித்தாயா?”

மஹராஜே கேட்டதால் நான் தயங்கிச் சொன்னேன். “ஆமாம் மஹராஜ். அவருக்கு விஷயம் தெரியும் போல இருக்கிறது. சற்றுக் கலங்கி இருந்தது போலக் காட்சியளித்தார்”.

“அவசியம் ஏதுமின்றி அந்த பிராம்மணர் சந்தேகம் கொள்கிறார். தேவையே இல்லாத கலக்கம் அவருக்கு. சிலர் சுயமாக அச்சத்தையும் கலக்கத்தையும் சுமந்து வாழ்வதில் தனி சுகம் காண்கிறார்கள். நாங்கள் புனிதப் பயணம் முடித்துத் திரும்பும்போது எல்லாம் சரியாகிவிடும். நாளை ஜோக்மாயா ஆலயத்தில் விசேஷ பூஜைகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். அங்கு வரும்போது எம்முடைய முடிவு குறித்த ஆணையை எடுத்து வரவேண்டும். சரி. ஜோக்மாயா ஆலயத்தில் நாளை இரவு சந்திக்கலாம். இளவரசரும் அங்கு வருவார். நீ கிளம்பலாம் என்றார்.

மஹராஜைப் பணிந்து பின்னகர்ந்து மண்டப அறைக்கு வெளியில் வந்தேன்.

மண்டபத்தின் முற்றம் வெறிச்சோடியிருந்தது. நேராகத் தலைமை அமைச்சரின் மண்டபத்துக்குச் சென்றேன்.

அங்கு அவர் இல்லை. இப்போது வேறொரு காவலன் நின்றிருந்தான். மாளிகை வளாகத்தை விட்டு வெளியில் வந்தேன். என்னுடைய தேரோட்டியும் தேரும் அங்கு இருக்க வில்லை. அவனை சுற்றுமுற்றும் தேடிப் பார்த்தபோது என் பின்னால் நிழலாடியது போல இருந்தது.

திரும்பிப் பார்த்தேன் – முகக் கவசங்கள் அணிந்து ஈட்டியும் வாளும் ஏந்திய வீரர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். அவர்களில் ஒருவன் முன்வந்து “ஐயா எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைக் கைது செய்து காவலில் வைக்குமாறு மேன்மை தங்கிய பிருத்விராஜ் சௌஹான் மஹராஜ் பணித்து இருக்கிறார்”

எனக்குப் புரிந்தது. காரியங்கள் முன்னோக்கி நகரத் துவங்கி விட்டன. விஷயம் எதுவும் தெரியாமல் அனங்பால் தோமர் மஹராஜ் மெல்லிய இடைகொண்ட சேடிகளிடம் தன் பாதங்களை வருடக் கொடுத்து விட்டு தன்னுடைய மண்டபத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார். அதிகாரபூர்வமான அரசாங்க ஆணைக்கு இனி தேவை எதுவும் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.

எனக்கு முற்றிலும் பரிச்சயம் இல்லாத வீரன் இவன். ஒருவேனை அஜ்மீரில் இருந்து இளவரசருடன் வந்தவனாக இருக்கக் கூடும். மௌனமாக நின்ற என்னுடைய கண்களை கறுப்புத் துணியால் மிகவும் பவ்யமாகக் கட்டினான். என் கண்களை இருள் கவ்வுவதற்கு முன்பு என் கண்ணில் பட்ட இறுதிக் காட்சி – வெளியில் யாருக்கும் தெரியாத வண்ணம் என்னைச் சுற்றி நெருங்கிய வட்டமாகச் சூழ்ந்த வீரர்களின் கூட்டம். ஏதும் அறிந்து கொள்ள முடியாத திசை நோக்கி என்னை வழிநடத்திச் சென்றார்கள். கண்கள் கட்டப்பட்ட நிலையில் என்னை ஒரு சிறிய கூடத்தில் கொண்டு வந்து தள்ளிவிட்டு கதவைப் பூட்டிச் செல்லும் ஒலி கேட்டது.

கண்களில் கட்டியிருந்த கறுப்புத் துணியை மெல்ல விலக்கினேன். கண்ணில் கட்டியிருந்ததை விட அடர்த்தியான இருளை என்னால் காண முடிந்தது.

இரவு மெல்லக் கரைந்து கொண்டிருந்தது.

________________________________________________________________________

குறிப்பு-

இது தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு நாவலின் இரண்டாவது அத்தியாயம்.

டெல்லியின் வரலாறு பற்றி தமிழில் ஒரு சிறிய நூலாக எழுத வேண்டும் என ஒரு பதிப்பகத்தில் இருந்து என்னைக் கேட்டார்கள். இதற்காக டெல்லி பற்றிய நூல்களை நூலகங்களில் எடுத்து வாசித்தேன். பிறகு ஏதோ வெறி வந்தது போல டெல்லி தொடர்பான நிறைய நூல்களை விலைக்கு வாங்கினேன். இப்படி விளையாட்டாக வாங்கிய நூல்கள் வீடு நிறையக் குவிந்து விட்டன. ஆவல் மேலும் அதிகரிக்க வலைத்தளங்களிலும், டெல்லியின் பல நூலகங்களிலும் பழைய நூல்கள் விற்கும் கடைகளிலும் என் தேடல் தொடர்ந்தது.

ஒரு கட்டத்தில் சரித்திரமாக எழுதினால் மிகவும் வறட்டுத்தனமாக இருக்கும் என்று அடிக்கடி மனதில் பட்டது. இன்னொன்று ஒரு கச்சிதமான சரித்திர நூலாக அது வருமா என்ற சந்தேகமும் அச்சமும் மனதில் தொடர்ந்து கொண்டே இருந்தது. அந்தப் பதிப்பகத்தில் இருந்தும் டெல்லி வரலாறு பற்றி என்னை ஒன்றும் கேட்கவில்லை. அவர்களுடைய அமைதி எனக்கு மிகவும் சௌகர்யமாகிப் போனது.

டெல்லி பற்றிய வரலாற்று நூல்கள் படிக்கத் தொடங்கிய போதும் அந்த இடங்களுக்கு அடிக்கடி போய் நின்று கொண்டிருந்தபோதும் அந்த இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த பலரும் என் மனப்பரப்பில் நிழலாடத் துவங்கினார்கள். வரலாற்று நூலாக அல்லது வரலாறு கூறும் கையேடாக எழுத மனம் வரவில்லை. டெல்லியின் சிறப்பு என்று மிகப் பெரிய பட்டியலையே பல பக்கங்களுக்கு அடுக்கிக் கொண்டே செல்லலாம். அதே போல பல்லாயிரக்கணக்கான சரித்திர நிகழ்வுகளைத் தனக்கு அடியில் புதைத்துக் கொண்டு வாழும் நகரம் டெல்லி. அந்த சரித்திர நிகழ்வுகளுடன் புனைவுகளை பிணைத்தால் சுவாரசியம் கூடும் என்று தோன்றியது.

எனவே, சரித்திரத்தையும் புனைவையும் ஒன்றிணைத்து ஒரு நாவலாக எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றியது. இந்த நாவலின் கதையை மன்னர்கள் சொல்லாமல் அவர்களை சுற்றியிருந்தவர்கள், பல நிலைகளிலும் இருந்த மாந்தர்களை வைத்துச் சொல்லலாமே என்றும் தோன்றியது.

ஆழமான மர்மங்களை, சுவாரசியங்களை, திருப்பங்கள் நிறைந்த அரசியல் சூழ்ச்சிகளை, ஏற்றங்களை தாழ்வுகளைத் தங்களுக்குள் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருக்கின்றன டெல்லி நகரமும் அதன் இரவுகளும். டெல்லி நகரமும் ஒற்று வேலைகளும் இந்த நகரம் துவங்கிய நாளில் இருந்து பிரிக்க முடியாத பந்தத்துடன் தொடர்ந்து வருபவை. எனவே இந்த நாவலுக்கு ‘கங்குல்’ என்ற பெயரிட்டு இருக்கிறேன். இந்த நாவலின் பல திருப்பங்கள் இருளில் நடப்பவை. பதினோராம் நூற்றாண்டில் தோமர்களின் ஆட்சியில் துவங்கி, காமன்வெல்த் வரையில் டெல்லியின் பலவித மக்களும் அதன் வரலாற்றைச் சொல்லிச் செல்வார்கள்.

இந்தக் கதை சொல்லும் பாணியில் புதிதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை. எனக்கு முன்னோடிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை விட என்னால் நன்றாக எழுதமுடியாது என்றாலும் அவர்கள் கொண்டு சென்ற சில விஷயங்களை கெடுக்காமல், கதையோட்டத்தின் சுவாரசியம் குறையாமல் எதையாவது முயற்சிக்க முடியும் என்று தோன்றியது. தற்கால நிகழ்ச்சிகளும் சரித்திர நிகழ்ச்சிகளும் இந்த நாவலில் மாறிமாறி வருமாறு திட்டதிட்டு இருக்கிறேன்.

நாவல் என் மனப்பரப்பிலும் கணிணியிலும் சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறது. இன்னும் ஆறு மாதங்களில் முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

ராகவன் தம்பி

kpenneswaran@gmail.com

Series Navigationதீவிரவாதம் ஆக்கிரமித்த முஸ்லீம் மனம்சிரியாவில் என்ன நடக்கிறது?
author

ராகவன் தம்பி

Similar Posts

5 Comments

  1. Avatar
    இளங்கோ says:

    இதன் முதல் அத்தியாயம் எங்கு வெளியானது? சுட்டி தந்தால் படிக்க வசதியாக இருக்கும்.

  2. Avatar
    இளங்கோ says:

    அதி சுவாரஸ்யமாய் இருக்கிறது. சோம்பேறித்தனமின்றி தொடருங்கள் பென் சார்..

  3. Avatar
    Geetha Sambasivam says:

    அருமைனு சொல்றதா? அற்புதம்னு சொல்றதா! என்னனு சொல்லத் தெரியலை. நான் அறிந்த ப்ருத்விராஜ் செளஹான் வேறே; இங்கே பார்ப்பவன் முற்றிலும் வேறு. என்றாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இப்படியும் நடந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. முழுப்புத்தக்த்தையும் ஒன்றாகப் படித்துவிடவும் ஆசையாக இருக்கிறது. :))))

  4. Avatar
    Geetha Sambasivam says:

    //தாய் ஆடு இவரையே முறைத்துக் கொண்டு நின்றதாம். அதன் கண்களை அவர் நேரடியாக சந்தித்தபோது பளீர் என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. “ஓஹோ… நீதான் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் கடமையை சுமந்து திரியும் க்ஷத்திரியனோ? ரொம்ப சந்தோஷம். இப்போது எதற்கு இங்கே வந்தாய்? எங்களை வேடிக்கை பார்க்க வந்தாயோ?” ஒரு ஷத்திரியனுக்கு இது அழகோ?” என்று அந்தத் தாய் ஆடு தன்னிடம் சொன்னதுபோலத் தோன்றியது.//

    ராஜ தர்மம் என்ன என்பதை ஆடு கூடச் சொல்லி இருக்கும்; இது உண்மை என்றே தோன்றுகிறது. அந்தக் காலத்தில் தர்மம் என்பது கடைப்பிடிக்கப் பட்டு வந்தது. மன்னர்களும் மனசாட்சியோடு விளங்கினார்கள்.

    // ஆதிசேஷன் இந்தப் பூமண்டலத்தைத் தன் சிரசுகளால் தாங்கி வருகிறான். எனவே அவன் எப்போதெல்லாம் இந்த பூமியை ஒரு தலையில் இருந்து தன் எண்ணற்ற வேறு தலைகளில் ஒன்றுக்கு மாற்றிக் கொள்கிறானோ அப்போது விபரீதமான பூகம்பம் ஏற்படும்.//

    சின்ன வயசிலே கேட்டு நிஜம்மாவா? னு அதிசயப்பட்டது நினைவில் வருது. பள்ளிக்குப் போனதும் அதுவே ஹெர்குலிஸ் என மாறிப்போனது. :))))

    //மதுராவில் சந்திரகுப்தர் நிர்மாணித்த இந்தப் பிரபலமான தூணை அங்கிருந்து வலுக்கட்டாயமாகப் பெயர்த்து எடுத்து வந்து மிஹிராவாலியின் ஆலயங்களுக்கு இடையில் நிறுவியிருக்கிறார்.//

    அட? அப்படியா?

    // நன்கு தேய்த்துக் கழுவப்பட்டு காலை இளங்கதிரில் தகதகவென ஜொலிப்புடன் மதர்த்து நிற்கும் குதிரைகள்.//

    இந்த இடத்தில் மட்டும் கொஞ்சம் காலை, மாலை மயக்கம். கதை தானே எழுதிக் கொண்ட சுவாரசியத்தில் இதைக் கவனிக்கவில்லைனு நினைக்கிறேன். :))))))

  5. Avatar
    charusthri says:

    Novels starting gives the great expectation that this will be agrand success.Do it and plan properly,Penneswaran!

Leave a Reply to இளங்கோ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *