கடவுளும் கம்பியூட்டர்ஜியும்

This entry is part 19 of 21 in the series 23 நவம்பர் 2014

ருத்ரா

சன்னலை ஊடுருவிப்பார்க்கிறாய்.
தூரத்துப்புள்ளியில்
ஒரு புள்ளின் துடிப்பு.
வானக்கடலில் சிறகுத்துரும்பு.
கனவு அப்படித்தான் சிறகடிக்கிறது.
அதற்கு காலம் சட்டை மாட்டுவதில்லை.
நினவு
ரத்த சதையை கழற்றிய நிர்வாணம் அது.
சித்தர்கள்
உள்ளத்தையே குகையாய் செதுக்கி
குடியிருந்தார்களாம்.
அதில் வெளிச்சம் தெரியும்போது
அவர்களே புத்தர்கள்.
மனிதனுக்கு தனி முயற்சிகள் தேவையில்லை.
அவனது கவலைகள் ஆசைகள்
பொறாமையில் சுரக்கும்
அட்ரீனலின் அமில ஊற்றுகள்…
இவை போதும்.
குகை வெட்டும்.பகை மூளும்.
குழி வெட்டும்.
அவனது நாட்கள் எல்லாம்
மண் மூடி மக்கிப்போகும்.
அவன் கண்களில் மட்டும் ஊழித்தீ.
ஒருவன் இன்னொருவனை
ஆகுதியாக்கி எரிக்கும் வேள்வித்தீ.
தான் மட்டுமே
தசை தடித்து நரம்பு புடைத்து
தன்னையே கூட தின்கின்ற வெறியோடு
வேட்டையாடும் கொடூரம்.
டிவி செல்ஃபோன்
எப்படி சொல்லிக்கொண்டாலும்
மின்னணுக்காட்டில்
ஒரு காட்டுத்தீ வளர்த்துக்கொண்டு
தன் சாம்பல் தேடுகின்றான்.

கோவில்களில்
தன் மலஜலம் கழிக்கின்றான்.
மும்மலம் மூடிக்கொண்டு
முறிந்து சிதைந்து போன‌
தன் மன நலம் தேடும்
வழி இழந்து போய்
அங்கு இறந்து நின்றான்.
குப்பைகளை கொட்டிக்கவிழ்த்து
தினம் தினம் கும்பாபிஷேகம்.
யார் யாரை தேடுவது?
மனிதன் கடவுளையா?
கடவுள் மனிதனையா?

ஈசல்களின் ஈசாவாஸ்யங்களில்
டாலர்கள் மட்டுமே எச்சில் வடிக்கின்றன.
உள்ளூர் “உண்டியல்களும்” கூட இங்கு
உலகப்பொருளாதாரம் தான்.
விசைப்பலகையைச் சுற்றி
விட்டில்களின்
இறகுக்குவியல்கள்.

கௌன் குரோர்பதி பனேகா?
கம்பியூட்டர்ஜி
இதற்கு விடை சொல்லுங்கள்.
தினந்தோறும் இங்கு
பட்டன்கள் மட்டுமே தட்டப்படுகின்றன.

Series Navigationயாமினி கிரிஷ்ணமூர்த்திஒரு சொட்டு கண்ணீர்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *