கட்டுடைத்தlலும் அன்பு செய்தலும் (ஆர். சூடாமணியின் அர்த்தங்கள் ஆயிரம்)

author
0 minutes, 32 seconds Read
This entry is part 2 of 18 in the series 21 ஜூன் 2020

                        எஸ்.ஜெயஸ்ரீ

  பெண்ணுரிமை பற்றி முண்டாசுக் கவிஞன் பேச ஆரம்பித்தான். பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்று. ஆனால், உடனடியாக இந்த தைர்யம் பெண்களுக்கு வந்ததா என்றால் அப்படி இல்லை. ஒரு இந்திரா காந்தி, ஒரு சரோஜினி நாயுடு, ஒரு ஜெயலலிதா சட்டங்கள் இயற்றும் நிலைக்கு வந்து விட்டதாலேயே, பெண்கள் முழு விடுதலை அடைந்து விட்டார்கள் என்று இந்த தேசம் முழுக்கவே ஒரு உற்சாகம் கொப்பளிக்க மேடைதோறும் முழக்கம் கேட்டது. ஆனால், உண்மையில் பெண்களுக்கான சுதந்திரம் என்பது  முதலில் அவளும் ஆணுக்குச் சரியாக சக உயிராக மதிக்கப்படுவதும், ஆண்கள் போன்று இந்த சமுதாயத்தில் மரியாதையுடன் நடத்தப்படுவதும், அவளுடைய உணர்வுகளும் மதிக்கப்படுவதுமாகும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் அவளும் ஆண்களுக்குச் சரி நிகர் சமானமாக மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மையான பெண் சுதந்திரம் ஆகும். ஆங்காங்கே பெண் சுதந்திரக் குரல்கள் எழுந்து வந்தாலும், அது சரியான விஷயமாக வெளிவரவில்லை. அது ஏதோ பெண்கள், அவர்களுடைய வெளித் தோற்றத்திற்கான சுதந்திரம் என்றோ, பழக்க வழக்கங்களில் ஆணுக்குச் சரியாக தாங்களும் இருக்க வேண்டும் என பெண்கள் விழைகிறார்கள் என்பதாகவுமே புரிந்து கொள்ளப் பட்டது.    

மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட பெண்ணியப் பார்வை என்பது பெண்களை ஒரு இரண்டாந்தரக் குடியாக அவளைப் பார்க்கிறது, பெற்றோர் தம் மகளின் வீட்டில் இறுதி காலத்தைக் கழிக்க நேர்ந்தால், சாக்கடை வழியாகத்தான் அந்த ஆத்மா நரகம் போகும், எனவே ஆண் வாரிசு என்பதே பெரிய சம்பத்து, பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றால் பெரும் வரதட்சிணை கொடுக்க வேண்டும், பெண் என்பவள் ஆணுக்குக் கட்டுப்பட்டவள், அவள் மேல் ஆணுக்கு அதிகாரம் உண்டு, ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கவே முடியாது என்றெல்லாம் காலம் காலமாக சமூகப் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக் கொண்டே குழந்தை வளர்ப்பு இங்கே நடைபெறுகிறது. எனவே, பெண் சுதந்திரம் என்பதும் இங்கே தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது

     பெண் சுதந்திரம் என்பது கருத்தால், உணர்வுகளால், அறிவால், மனதால், கண்ணியாமாக நடத்துவதால், மரியாதையாக நடத்துவதால் என் இவற்றின் மூலம்தான் வெளிப்பட வேண்டியது. ஆனால், இந்தப் புரிதல் இன்றளவும் கூட இந்தச் சமுதாயத்தில் இல்லை என்றே சொல்லலாம். பெண்கள் என்பவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே பார்க்கும் பார்வை என்பதே நிலவி வருகிறது. மகளிர் இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்தில் கூட பெண்களுக்கெதிரான வன்முறையை எல்லாம் முழுவதுமாக இந்தச் சமுதாயத்தில் ஒழித்து விட முடியவில்லை. மனித மனங்களின் சிந்தனை மாறாத வரைக்கும் இவற்றை முற்றிலுமாக ஒழித்து விட முடிவது எளிதானதுமல்ல. இன்றளவும் ஆணாதிக்கச் சிந்தனைதான் பெண்களுக்கெதிரான பாகுபாட்டிற்கான காரணம். ஆணாதிக்கச் சிந்தனைகள் என்பதைப் பலரும் அது ஆண்கள் மத்தியில் நிலவுவது என்று நினைத்துக் கொண்டு, ஆண்களை எதிரிகளாகப் பார்க்கும் பார்வை இருக்கிறது. ஆனால், அது அப்படியல்ல. பெண்களை அடிமையாக நினைக்கும், அவர்களுக்கெதிராக செயல்படும் எவருமே,( அது ஆணோ, பெண்ணோ) அப்படிப்பட்டவர்கள்தான். இந்த ஆணாதிக்கச் சிந்தனை மாற வேண்டும் என்பதுதான், உண்மையான பெண் சுதந்திரம் வேண்டுபவர்கள் முன் வைப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு, ஆர். சூடாமணி அவர்கள் எழுதியுள்ள நான்கு கதைகள், சமீபத்தில், “ அர்த்தங்கள் ஆயிரம் ” என்ற தலைப்பில் சிறுவாணி வாசகர் மையத்தின் மூலம், பவித்ரா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

       ”அர்த்தங்கள் ஆயிரம்”  கதையில் வரதட்சிணைக் கொடுமையால் அவதியுறும் சவீதாவைக் காட்டுகிறார் சூடாமணி. அதைக் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் அவளுடைய அண்ணன் உபேந்திரன் அதை எதிர்த்த போராட்டத்தின் குறியீடாக வாசகரால் உணர முடிகிறது. ஒரு அளவு வரை கணவனும், மாமியாரும் படுத்தும் கொடுமைகளையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் சவீதா, அவர்கள் தன்னைக் கொல்வதற்காக சதித் திட்டம் தீட்டுவது தெரிந்த போது, தப்பித்து வந்ததுதான், பெண் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் இடம். கணவனே கண் கண்ட தெய்வம், அவன் கையால் சாவதே மேல் என்றெல்லாம் நினைக்காமல், தானே தன் விடுதலையைத் தேடிக் கொள்ளும் இடம் மிகவும் அருமை. தன் தாய் வீட்டுக்கே வந்த பிறகு,, “ என் அன்புக்குப் பலன் இருக்கும்னு கொடுமையையெல்லாம் சகிச்சுண்டு காத்திருந்தேன். அந்த அன்பைப் புறக்கணிச்சுட்டு, கட்டின புருஷனே கேவலம் ஒரு காருக்காகக் கொலை செய்யத் துணிஞ்சப்புறம், கல்யாணம் பவித்ரமானதுன்னும், புருஷன் தெய்வம்னும் சொல்றதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?” சவீதா சொல்லும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவை. அன்பால் கட்ட முடியாத வாழ்க்கை வெறும் பணத்தாலும், பொருட்களாலும் எப்படி நிலைக்கும்?

 நிறைய கதைகளில், வீட்டில் பெண் குழந்தைகள் சம்பாதிப்பவர்களாக இருந்தால், அந்தப் பெண்ணிற்குத் திருமணம் செய்யத் தயங்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். சூடாமணியோ இந்தக் கதையில் உபேந்திரன் என்கிற ஆண் பாத்திரத்தை அப்படிப் படைத்துக் காட்டுகிறார். உபேந்திரனை அவருடைய தாயார், உணர்வுச் சித்திரவதை ( EMOTIONAL TORTURE) செய்கிறார். தன்னுடைய பெண் குழந்தைகளுக்கு தாம் செய்ய வேண்டிய கடமைகளை  செய்து முடிக்க, தன் ஒன்றுக்கும் உதவாத, குடிகாரக் கணவனைக் கொண்டு எதுவும் செய்ய முடியாத நிலையில், தன் மகனை இப்படி உணர்வுச் சித்திர வதையின் மூலமே பயன்படுத்திக் கொள்கிறார். கடைசியில் மரணப்படுக்கையில் இருக்கும்போது கூட, கொள்ளி போட ஆண்பிள்ளை என்ற சிந்தனை கொண்டே இருக்கிறாள் அந்தத் தாய். அவனுடைய திருமணம் பற்றியெல்லாம் அந்தத் தாய்க்கு கவலையே இல்லை. ஆண் என்பவன் ஒரு குடும்பத்துக்கு உழைத்துக் கொட்டவும், பெற்றோருக்குக் கொள்ளி வைக்கவும் மட்டுமே என்றும், பெண் என்பவள் திருமணம் செய்து கொண்டு, கணவன் வீட்டில் அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டியவள் என்றுமாக இந்த சமுதாயத்தின் ஆணாதிக்கச்  சிந்தனையை அந்தத் தாயார் பாத்திரத்தின் வழியே சூடாமணி மிக அழகாகப் படைத்துக் காட்டுகிறார்.

பூமாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய  பண பலத்தை வைத்துக் கொண்டு உபேந்திரனை விலைக்கு வாங்க நினைக்கும் சிறிய மனம் படைத்தவராக இருக்கும்போது, அவருடைய மகள் மனுஷ தர்மத்தைப் பற்றிப் பேசுபவளாக இருப்பது நல்ல முரணான பாத்திரப்படைப்பு. தன் மகளுக்குச் சுதந்திரம் கொடுப்பது போல அவள் வங்கிக் கணக்கில் பணம் போட்டு வைக்கும் கிருஷ்ணமூர்த்தி, அதை அவள் அடுத்தவர்க்குக் கொடுக்க முன் வரும்போது தடுக்கும் நடவடிக்கை, ஆணாதிக்கத்தை உணர வைக்கும் நல்ல இடம். தன் தந்தையின் வார்த்தைகளைப் பொருட்படுத்தாமல், கட்டுடைத்து, பூமா உபேந்திரனுக்கு உதவும் இடம் அழகானது.

அன்புள்ள மனம் வாய்க்கப் பெறுவதுதான் பாக்கியம். அன்புக்கு சாதி, மதம், இனம் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது. அப்படி ஒரு அன்பான மனுஷியாக, பக்குவமாக மனிதர்களைப் புரிந்து கொள்பவளாக இருப்பவள் மாலதி, உபேந்திரனின் மனம் கவர்ந்தவள். தன் குலவழக்கம் மீறுவது, தன் தாயின் வார்த்தை என்ற கட்டுக்குள்ளும் அடங்காமல், உபேந்திரன் மாலதியைக் கரம் பிடிக்கத் துணிந்து முடிவெடுப்பது,  அன்பு என்பது வேறு எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காமல், தான் மட்டுமே வெல்லும் என்பதைச் சொல்லாமல் சொல்லும் இடம். அம்மாவின் அத்தனை உணர்வுவதைகளையும் தாங்கிக் கொண்டு, உபேந்திரன், அம்மா மேல் அன்பு காட்டுவது அன்பு மட்டுமே. அன்பு மட்டுமே எதை விடவும் பெரியது என்பதை சூடாமணி மீண்டும் மீண்டும் சொல்ல வருகிறார்.

ஓர் உயிர் ஆபத்தில் இருக்கும்போது உதவி செய்வதற்கு, இரு உயிர்களுக்கிடையில் கண்டிப்பாக ஏதோ ஒரு உறவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற எவ்விதக் கட்டாயமுமில்லை. அந்த இடத்தில் உதவி செய்வது மட்டுமே மனுஷ தர்மம் என்ற பூமாவின் வார்த்தைகள் மிகவும் உயர்ந்தது

     அர்த்தநாரி கதையில் ஆண்களும், பெண்களும் வீட்டு வேலைகளப் பகிர்ந்து கொண்டு செய்வதில் தவறே இல்லை என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். அப்பா செய்தித்தாள் படிக்கவும், அம்மா சமையல் கட்டுக்குள் இருக்கவும் மட்டும்தான் என்ற சிந்தனையை மாற்றி, குடும்பம் என்பது இருவரும் சேர்ந்தது என்பதையும், வீட்டு வேலைகளையும் ஆண்களும் பகிர்ந்து செய்வதில் தவறே இல்லை என்பதையும், சமையல் உட்பட வீட்டு வேலைகள் எதுவாயினும் இருபாலரும் பகிர்ந்து செய்ய வேண்டியது என்பதையும், பெற்றோரே முன்னுதாரணமாக இருந்து   இவற்றை தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டியவர்களாக இருக்க வேண்டியதையும் குழந்தைப் பாத்திரங்கள் வழியாகவே சொல்லி விடுகிறார். ஆண்களும் சமைக்கலாம் என்று ஆண்களுக்கு இப்போது சொல்லித்தர வேண்டியிருக்கிறது. ஆண்கள் பலர் தாங்கள் சமையலறைப் பக்கமே போனதில்லை என்றும், தங்களுக்கு காப்பி கூட போடத் தெரியாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொள்வதை இப்போது கூட கேட்கலாம். அர்த்தநாரி கதையில், தன் வீட்டில் தாயும் தந்தையும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்வதைப் பார்க்கும் ஒரு பையன் தன் சிநேகிதன் வீட்டுக்குப் போகும்போது, தனக்காக அவன் அம்மா, சாப்பபாடு தயாரிப்பதைப் பார்த்து இரக்கம் கொள்கிறான். ஆனால், அதெல்லாம் பொம்பளைகளுக்கு கஷ்டமே இல்லடா என்கிறான் இவன். இதை அவன் தன் தந்தையைப் பார்த்தே கற்றுக் கொள்கிறான். இவன்  தந்தை,  தாயை அவர்  சிநேகிதர்களுக்காக, வீட்டில் உணவு தயாரிக்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அவள் உடம்பு முடியவில்லை என்று சொன்ன பிறகும் கூட அவன் வற்புறுத்துகிறான்.  அவள் எல்லாம் செய்து முடித்து, பரிமாறி உடம்பு சுத்தமாய் முடியாமல் படுத்து விடுகிறாள். அடுத்த நாள், காய்ச்சலும், தலை சுற்றலுமாக இருப்பவளை எழுப்பி காப்பி தயாரித்துத் தரச் சொல்லி வற்புறுத்துகிறான். எழுந்தவள் தலை சுற்றி விழுந்ததில் தலை இடித்து, அது அவளுடைய மரணத்திற்கே காரணமாகி விடுகிறது. ஒரு சிறிய விஷயம், காப்பி தயாரித்து குடிக்கத் தெரியாத, அல்லது தெரியாது என்று நடித்து, பெண்கள்தான் செய்ய வேண்டும் என்கிற பிடிவாதத்தோடு இருக்கும் ஓர் ஆண்மகனின் செயல், ஒரு மரணத்திற்கே காரணமாகி விடுகிறது.  வீட்டு வேலைகளைப் பெண்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகளும் எழுத வேண்டியிருக்கிறது. ஆனால், சூடாமணி,  ஒரு சின்ன விஷயம் மரணத்திற்கே இட்டுச் செல்வதைக் காட்டி, மண்டையில் உரைக்கும்படி சொல்கிறார்

     ஆண் வாரிசு மட்டுமே ஒருவரின் மண வாழ்க்கையின் லட்சியம் என்பதைப் பலரும் கொண்டிருக்கிறார்கள்.    இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, அடுத்த பெண்ணைத் தேடுவதும், அந்தப் பெண்ணை இணங்க வைக்க அவன் செய்யும் ஜாலங்களையும் மிகவும் யதார்த்தமாக விவரிக்கிறார் “ ஓ…குழந்தைக்காக” என்ற கதையில். தன் மனைவிக்குத் தெரியாமல், வேறொரு பெண்ணை தன்வசப்படுத்த ஓர் ஆண் செய்யும் அத்தனை திருகுதாளங்களையும் அழகாக விவரிக்கிறார் சூடாமணி. சுகுமாரின் மனைவி அவனுக்கு இருக்கும் இன்னொரு பெண் தொடர்பு பற்றிக் கண்டிக்கும்போது, “ இன்னொரு பெண்ணைக் கட்டணும்னா என்னை எரிச்சுட்டு அப்புறம் கட்டுங்க “ என்று சொல்கிறாள்.அப்போது, அவன், “ உன்னைக் கொன்னாலும் நாந்தான் எரிக்கணும்; அதுக்கு உன் பிள்ளை கிடையாது “ என்று சொல்வது ஒரு ஆண் வாரிசு என்பதற்காக ஈரமற்ற வறட்டு இதயம் கொண்டவனாக இருப்பதைக் காட்டும் இடம்.  இந்த இடத்தில், ” அர்த்தங்கள் ஆயிரம் “ கதையில் உபேந்திரனின் அம்மா கடைசித் தருணத்தில், ”என்னம்மா வேணும்?’ என்று கேட்கும்போது,” என் பிள்ளை…எனக்குக் கொள்ளி போட வேண்டியவன்; வேற யாரும் எனக்கு வேணாம்” என்று சொல்வதை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. காலம் பூராவும், தான் பெற்ற பெண்களுக்காகச் செய்ய வேண்டியவன் தன் மகன் என்றவள், மரணிக்கும் தறுவாயில், தனக்குக் கொள்ளி போட மகன் மட்டுமே போதும் என்பது ஆண் வாரிசு என்பது மட்டுமே வாழ்க்கையின் வெற்றி என்பது எந்த அளவுக்கு மனிதர்கள் மனங்களில், ஆண், பெண் பாகுபாடின்றி ஊன்றப்பட்டிருக்கிறது என்பதை சூடாமணி அழகாகப் பதிவு செய்திருப்பதை வாசிப்பவர்களால் உணர முடிகிறது.    

   ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாது, அப்படி இருவர் பழகினால் அவர்கள் இருவரும் காதலர்களாகவோ, அல்லது தவறான உறவு கொள்பவர்களாகத்தான் இருக்க முடியும் என்பது இன்றும் கூட பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. இந்தச் சிந்தனை, குழந்தைகளாக இருக்கும்போதிலிருந்தே ஊன்றப்படுகிறது. “ஆம்பிளையும் பொம்பிளையும் எப்படி ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியும்” என்று குழந்தை கேட்பதிலிருந்து இதை நம்மால் உணர முடியும். அப்படிக் கேட்கும் குழந்தைக்கு குழந்தையின் தந்தை முரளி குழந்தை மனது ஏற்றுக்க்கொள்ளும்படியாகச் சொல்லும் பதில் குறிப்பிடத்தக்கது. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியும் என்பதை இப்படிக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது அவர்கள் ஆண் பெண் உறவு பற்றிய தெளிவோடு வளர்வார்கள். இன்னொரு இடத்தில் துரைராஜுவிடம் அனுபமா  “, ஓர் ஆண் பெண் மேல் அன்பு காட்டுவதாலேயே அவளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்றவனில்லை”  என்பதைப் பொட்டிலடித்தாற்போல் சொல்கிறார். “ அன்பு இருக்கிறதால நீங்க என் விஷயங்களிலெல்லாம் தலையிட்டு அதிகாரம் செய்யலாம்னு அர்த்தமில்லையே “ என்று அனுபமா சொல்வது ஒட்டு மொத்தப் பெண் குலத்தின் குரலாகவே அது ஒலிக்கிறது. “ பாலுணர்வோடு பார்க்கவில்லை என்றால் உடனே ஒரு பெண் சகோதரியாகத்தான் ஆகி விட வேண்டுமா?ஆண் பெண்ணிடையே வேறு வகையான பால் கலப்பற்ற உறவுகள் நிலவ முடியாதா என்ன? “ என்ற அனுபமாவின் வார்த்தைகள் நட்புக்காக மட்டுமே ஆண்களோடு பழகும் பெண்களின் குரல் என்றே சொல்லலாம். “ கல்யாணம் என்றால் கணவன் – மனைவி இருவருள் யாரேனும் ஒருவரின் ஆளுமை மற்றவரை அமுக்கி விடத்தான் வேண்டுமா? என்ற  கேள்வியை சூடாமணி, அனுபமாவின் மூலம் கேட்கும்போது வாசிக்கும் எல்லாப் பெண்களின் மனமும் உடனே சூடாமணியின் கைகளைப் பிடித்துக் குலுக்கவே ஆசைப்படும்.’ இருசாராரும் ஒருவரால் மற்றவர் நிறைவு பெற்று மேலே மேலே ஒன்றாய் வளர்ந்து பூர்ண சமத்துவத்தில் உண்மையான தாம்பத்யம் நடத்துபவர்களாக விளங்க முடியாதா? இது அனுபமாவின் மனதில் தோன்றும் அடுத்த கேள்வி. இந்த வரி படிக்கும்போது சூடாமணியுடன் கை கோர்த்துக் கொண்டு தட்டாமாலை சுற்றலாம் போல இருக்கிறது.

இப்படித் தெறிக்கும் வரிகளில் கட்டிப் போடும் சூடாமணி, பாலுறவு என்பதே குழந்தை பெற்றுக் கொள்ள மட்டும்தானா என்ன? அது ஏன் ஓர் அழகான அனுபவமாக இருக்கக் கூடாது என்று கேட்பதைகூட இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமோ ஏற்றுக் கொள்ளாதோ, ஆனால், சுதந்திரச் சிந்தனைகள் உள்ள பெண்கள் ஏற்பார்கள்.

இந்தக் கதையிலும், அவர் முடிக்கும்போது “ வாழ்க்கையில எத்தனையோ துன்பங்கள் வருது. மனுஷங்களுக்குப் பரஸ்பரம் இருக்கற அன்பின் பிணைப்பினால்தான் அதையெல்லாம் எதிர்த்து நின்னு சமாளிக்கணும்”  என்று சொல்வது ஆண், பெண் ,உறவு இவை எல்லாம் அன்பு என்ற சொல்லில் மட்டுமே அடங்கிப் போகிறதே தவிர இதில் யார் பெரியவர், யார் இளையவர் என்ற கேள்விகளே தேவையில்லை என்பதை ஒவ்வொரு கதையிலும் வலியுறுத்துகிறார்.

   இந்தக் கதைகள் நான்குமே பெண்ணுரிமை பற்றிப் பேசுவதாக அமைந்திருக்கிறது. இவைகள் அவருடைய கதைகளின் முழுத் தொகுப்பில் இடம் பெறாதவை. இந்தக் கதைகளை அவர் எழுதிய காலம் என்பது பெண்கள் ஏற்கனவே திணிக்கப்பட்டிருக்கும் கருத்துருவாக்கத்தில் மூழ்கித் திளைத்திருந்த காலம். அப்போது இந்தக் கதைகள் நிச்சயம் ஒரு புதிய சிந்தனையை பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போதும், இவற்றைப் படிக்கும்போது, ( நிலைமைகள் கொஞ்சம் பரவாயில்லையே தவிர) உயிர்ப்புடனேயே இருக்கின்றன. பெண்கள் என்றொரு இனம் இருக்கும் வரை இந்தக் கதைகள் வாசிக்கப் பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிக் கொணர்ந்த சிறுவாணி வாசகர் மையத்தாரும், சிறந்த முறையில் அச்சிட்டிருக்கும் பவித்ரா பதிப்பகத்தாரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

                         ——————————

(அர்த்தங்கள் ஆயிரம் – 4 குறுநாவல்கள் – ஆர். சூடாமணி – வெளியீடு…பவித்ரா பதிப்பகம், சிறுவாணி வாசகர் மையத்துக்காக) – விலை ரூ.160/-)                          

Series Navigationதிருப்பூரில் தமிழறிஞர் புலவர் மணியன் மரணம்.சங்க இலக்கியத்தில் விருந்தோம்பல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *