கணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?

This entry is part 11 of 31 in the series 11 ஜனவரி 2015

 

ரவி நடராஜன்

வணிக நிறுவனங்களில், வேலை நீக்கம் என்பது ஒரு சாதாரண நிகழ்வு. பல காரணங்களுக்காகவும், வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது, என்று ’நிறுவனங்கள்’ என்ற அமைப்பு உருவானதோ, அப்பொழுதிலிருந்து நடை பெறும் ஒரு நிகழ்வு. சிறு கடையிலிருந்து ஒரு உதவியாளரை நீக்கம் செய்வதும், மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கும் ஒருவர், நீக்கப்படுவதும், இன்று நேற்றல்ல, என்றும் உள்ள ஒரு தொழிலாளர் பிரச்னை.

ராசச இந்திய கணினி மென்பொருள் நிறுவனமான டி.சி.எஸ்., 25,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போகிறது என்று செய்தி வெளியானவுடன், நம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் ஒரே செண்டிமெண்டைக் கொட்டி எழுதத் தொடங்கியுள்ளார்கள். இந்த அணுகுமுறையில், நம்முடைய சில பலவீனங்களை எளிதில் வெளிப்படுத்தி விடுகிறோம். அத்துடன், நம் கல்விமுறையின் அடிப்படை கோளாறையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுகிறோம். இப்படி ஏராளமான குற்றச்சாட்டுக்களைச் சும்மா அடுக்காமல், விவரமாக ஒவ்வொன்றையும் அலசுவோம்.

இக்கட்டுரையின் நோக்கம், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் எண்ணமல்ல. ஆனால், செண்டிமெண்டல் பூசி மொழுகலை விட்டு, இந்த நிகழ்வுகள் நமக்குப் புகட்டும் சில முக்கிய பாடங்களைப் புரிந்து கொள்வது அவசியம். மேலும், உருப்படியான மேற்கத்திய அனுபவங்களிலிருந்து, சில யோசனைகளையும் சொல்லலாம் என்றும் தோன்றியது. இந்த யோசனைகள் மிகவும் கடினமானவை. எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் ஏற்பட்டால், இளைஞர்களைத் தயார் செய்யும் முயற்சிகள். மிகவும் சீரியஸான பிரச்னைக்குத் தீர்வும் மிகவும் சீரியஸாகவே இருக்கும் என்று நம்பலாம்.

விரிவாக இந்த பிரச்னையை அலசும் முன்பாக, இத்தகைய கணினி மென்பொருள் நிறுவனங்களின் தொலை நோக்கற்ற அணுகுமுறையைப் பற்றி, ‘திண்ணை’ பத்திரிகையில் 4 வருடம் முன்பு எழுதிய கட்டுரையை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்;

http://puthu.thinnai.com/?p=5761

முதலில், முதலாதித்துவம் என்பது சமூகத்தில் திருமணம் போன்ற ஒரு வியாபார ஏற்பாடு. திருமணம் என்ற ஒரு அமைப்பு வந்த நாளிலிருந்து, அந்த அமைப்பைப் பற்றிய விவாதங்களும் ஓயவில்லை; அதன் பெருமையை பேசுபவர்களும் ஓய்வதாகத் தெரியவில்லை. சமூகம் என்ற அமைப்பில், ‘திருமணம்’ என்ற ஒரு ஏற்பாடு, அதைவிட சிறந்த ஏற்பாடு ஒன்று இல்லாததால், பல்லாண்டுகளாக, நாம் அதை தொடர்ந்து ஆதரித்தும், எதிர்த்தும் வருகிறோம். அதைப் போலவே, வணிகம் என்ற அமைப்பு வந்த காலத்திலிருந்து, ’முதலாதித்துவம்’ என்ற ஏற்பாடு அதன் குறை, நிறைகளோடு உலா வந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 25 ஆண்டு காலமாக, முழுவதும் ஒப்புக் கொள்ளாமல், எப்படியோ, நாம் பின்கதவு வழியாக முதலாதித்துவத்தைத் தழுவி, இன்று அத்துடன் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு முதலாதித்துவத்தின் நல்முகம் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், அதன் தீயமுகம் சற்றும் பிடிக்கவில்லை. திருமணமான புதிதில், மனைவியை பிடித்த கதைதான் இது! முதல், எவ்வளவு சீக்கிரம் உள்ளே வருகிறதோ, அத்தனை சீக்கிரம் வெளியேறவும் அமைப்பு தேவை என்பது முதலீட்டளர்களின் வாதம். வியாபாரம் விரிவானால், அந்த வியாபாரத் தேவைக்கேற்ப, வேலை வாய்ப்புகளும் விரிவடைகிறது. வியாபாரம் சோர்வடைந்தால், வாய்ப்புகளும் குறைகிறது. இதை படிப்பதற்கு எளிதாக இருந்தாலும், போன அந்த வேலைவாய்ப்பு நம்முடையதாக இருந்தால், வலிக்கத்தான் செய்கிறது.

முதல் பாடம்

மேற்குலகில், இந்த அமைப்பின் முழு வீச்சும் பலரும் அறிந்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, சில கணினி மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வதை, நாம் ஒரு வரப்பிரசாதம் போலப் பார்த்ததுண்டு. அதாவது, மைக்ரோசாஃப்டில் வேலை பார்த்தால், அது மோட்சத்திற்கு சமானம் என்று நினைத்ததுண்டு. என்னுடைய மேற்கத்திய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில், அவருக்கு அப்படியொரு எண்ணமே இல்லை என்று தெரிய வந்தது. அவரைப் பொருத்த வரையில், அது ஒரு வணிக நிறுவனம். அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதைப் பற்றிய பெருமையோ/ கவலையோ அவருக்குக் கிடையாது. நம்மை நாம் வேலை செய்யும் நிறுவனம் எப்படி நடத்துகிறதோ, அதன்படியே நமக்கு அதன் மீது மதிப்பு இருக்க வேண்டும், என்றார். இந்தியர்கள், சில நிறுவனங்களில் வேலை செய்வதை மிகவும் பெருமையாக நினைக்கிறார்கள். முதலில், இதைத் துறக்க வேண்டும். இந்த குருட்டு அந்தஸ்தால், வேலையில் உள்ள அநீதிகளைப் பொறுத்துக் கொள்கிறார்கள். லாபத்திற்காக நிறுவனம் நடத்துகிறார்கள். உங்களை சரியாக நடத்தினால், அங்கு தொடருங்கள். இல்லையேல் வெளியேறுங்கள். டாடாவாகட்டும், விப்ரோவாகட்டும், உங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். சரியில்லையென்றால், வரட்டு சமூக அந்தஸ்து பார்க்காதீர்கள். இது முதல் பாடம்.

இரண்டாம் பாடம்

இந்திய கணினி மென்பொருள் ராணுவங்களில் (அதாவது, நிறுவனங்களில்), பல இளைஞர்கள்/இளைஞிகள், 5 முதல் 6 வருடங்களில், மேலாளர்கள் ஆகிவிடுகிறார்கள். அதன் பின், ஏராளமாகப் படித்திருந்தாலும், அதிக பயன்பாடு இல்லாமல், பல்லாண்டுகள் உழைத்து, வளர்த்த, தொழில்நுட்பத் திறன்கள், வெகு எளிதில் தொலைந்துவிடும். என்னதான் மேலாளர் பொறுப்பு இந்திய சமூகத்தில் அந்தஸ்தைக் கொடுத்தாலும், ஆள் மேய்க்கும் வேலை வெகு எளிதில், இன்னொருவருக்கு மாறும் அபாயம் கொண்டது. இன்று டி.சி.எஸ், -ல் வேலை இழந்தவர்களில் கணிசமானவர்கள் இப்படிப்பட்டவர்கள். மேலாளர் என்ற வரட்டு பொறுப்பின் மேல் மோகம் கொள்ளாதீர்கள். உங்களுடைய இத்தகைய பலவீனம், மென்பொருள் ராணுவங்களின் பலம்! அலுவலக நேரம் போக, திறந்த மூல மென்பொருள் முயற்சிகளுக்கு உங்களது 2 முதல் 3 மணி நேரத்தை< நாளொன்றுக்கு ஒதுக்குங்கள். மேலாளர் பொறுப்பு போனால், உங்களது நிரலும் (programming) திறமை இன்னும் உங்களுக்குக் கை கொடுக்கும். இதைக் குறைந்த பட்சம், உங்களது கணினி மென்பொருள் தொழில்நுட்ப வாழ்க்கையின் முதல் 20 வருடங்களில் செய்வது அவசியம். ஒன்றை மட்டும் மறவாதீர்கள் கணினி மென்பொருள் துறையில், உள்ள ஆதார அடித்தளப் பணி நிரலை உருவாக்குவது. மற்றவை எல்லாம், நிரல் என்ற ஒன்று இருப்பதனால் உருவாகும் வேலைகள். இது இரண்டாம் பாடம்.

மூன்றாம் பாடம்

இந்தியர்கள் 25 முதல் 28 வயது வரை, நிறைய படிக்கிறார்கள், ஆனால், அதன் பிறகு, படிக்கத் தயங்குகிறார்கள். என் பார்வையில், கணினி மென்பொருள், மேலாண்மைத் துறைகளில், 60 வயது வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்று, Coursera போன்ற இணைய தளங்கள் வழியாக எதைப் பற்றி வேண்டுமானாலும் படிக்கலாம். குறைந்த பட்சம் உங்களது துறை சார்ந்த பல பாடங்களை படிக்கும் தன்மை உங்களுக்கு இருக்க வேண்டும். நேற்றைய விஷுவல் பேசிக் உதவாது – இன்றைய Cloudera பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? இது மூன்றாம் பாடம்.

அடுத்த பாடங்களுக்குப் போவதற்கு முன், என்னைப் போன்ற ஒரு கொடுமைக்கார எழுத்தாளர் இருக்க முடியாது என்று நீங்கள் முடிவு செய்தால், எனக்கு எந்த வியப்பும் இருக்காது. மேற்குலகில் உடகார்ந்து கொண்டு, இப்படி எழுதுவது மிகவும் எளிதாக இருக்கும் என்று தோன்றலாம். இந்திய அலுவலக வாழ்க்கை, போக்குவரத்து நெரிசல் பற்றி எழுத்தாளருக்கு என்ன தெரியும் என்றும் தோன்றலாம். அவை எல்லாம் சாக்கு போக்குகள். நான் மேலே சொன்ன மூன்று பாடங்களை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அடுத்த வேலைநீக்க அலையில் சிக்கி நீங்கள் தவிப்பீர்கள். இந்த மூன்று பாடங்கள் உங்களுக்கு ஒத்து வராது என்றால், கணினி மென்பொருள் துறையை விட்டு விலகுங்கள். அட, வேலையை விட்டு நீக்கிய மனிதவள துறை ஆசாமிகளே தேவலாம் என்று தோன்றலாம். இக்கட்டுரையில் இடம்பெரும் எந்த பாடமுமே எளிதாக இருக்கப் போவதில்லை.

கணினி மென்பொருள் துறையில் என்றும் வெற்றி பெற்ற நிறுவனம் என்ற ஒன்று கிடையாது. இது, இன்று, நம் சமூகத்தில், டிவி தொடர்வரை, ஏகத்தும் ஊதப்பட்ட ஒரு பலூன் தொழில். பலூன் வெடிப்பதற்குள் நீங்கள் இன்னொரு உடையாத பலூனில் இருக்கும் வழியைத் தேடுங்கள்.

நான்காம் பாடம்

இந்தியர்கள், மேலாளர்களுக்கு மிகவும் அடங்கி, வாங்கும் சம்பளத்திற்காக 14 மணி நேரம்வரை உழைக்கிறார்கள். முதலில், உங்களது வேலை முடிந்தால்,அலுவலகத்தில் இருக்காதீர்கள். மற்றவர்கள் இருக்கிறார்கள் என்று யுடியூப் பார்த்து, நேரத்தை வீணாக்காதீர்கள். எவ்வளவு தேவையோ, அவ்வளவே உழையுங்கள். உங்களது திறமை மேம்பாட்டிற்கு, நீங்களே பொறுப்பு. அரசாங்கத்தை எதிர்பார்ப்பதைப் போன்றது இது. அரசாங்கத்திற்கு, நம் வரிப்பணம் தேவை. உங்களது நிறுவனத்திற்கு, உங்களது உழைப்பு மட்டுமே தேவை. உங்களது மேம்பாட்டில் லாபமிருந்தால் மட்டுமே, உங்களைப் பயிற்சிக்கு அனுப்புவார்கள். அதுவரை காத்திருக்காதீர்கள். உங்களிடம் படிக்க பணமில்லையேல், சில இணைய இலவச கல்வி முறைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணதிற்கு, Coursera மற்றும் MIT Open Education போன்ற தளங்க்ளில், பல புதிய நுட்பங்களை கற்கலாம். ஆனால், இம்முறைக்கு நிறைய சுயக் கட்டுப்பாடும், திட்டமிடலும் தேவை. இது நான்காம் பாடம்.

 

 

ஐந்தாம் பாடம்

அடுத்தது, நம் கலாச்சாரத்திற்கு சற்றுப் புதிய விஷயம். முதலாதித்துவத்தை தழுவி விட்டோம் – இந்த விஷயத்தையும் தழுவுவது ஒன்றே உசிதம். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். மின் வேலை, மெஷினிங், குழாய் ரிப்பேர், வாகனத் திருத்தம், மர வேலை என்று எதையாவது கற்று, வாரக் கடைசியில் ரஜினியைத் துறந்து ஏதாவது சிறிய வேலைகளைச் செய்யுங்கள். சற்றும் கெளரவம் பார்க்காதீர்கள். உங்களது வேலை போனால், அடுத்த வேலை கிடைக்கும் வரை இந்த கைத்தொழிலைத் தொடரலாம். இது எல்லோருக்கும் சரிப்பட்டு வராது. ஆனால், சிலரால், இப்படிச் செய்ய முடியும். கணினி மென்பொருள் துறையில் இருப்பதால், இதைத் தாழ்ந்த வேலையாக, பலரும் நினைக்கிறார்கள். இந்த கைத்தொழில் நன்றாக அமைந்தால், தாராளமாக, கணினி மென்பொருள் துறையை விட்டு விலகுங்கள். இது ஐந்தாம் பாடம்.

ஆறாம் பாடம்

உங்களின் நல்ல பணி நாட்களில், உங்களது திறமையை ஏராளமாக உயர் அதிகாரிகள் புகழுவதைக் கண்டு, உங்களது குறிக்கோள்களிலிருந்து விலகாதீர்கள். இந்த ஏற்பாட்டில், உங்களை விட்டால், இன்னொருவர் உங்களது வேலையை நேர்த்தியாக செய்ய முடியாது என்று உங்களுக்கும் தோன்றும் – மற்றவர்களும், அவ்வாறே சொல்வார்கள். இதில் சற்றும் மயங்க வேண்டாம். வியாபாரம் சோர்வடைந்தால், உங்களது ஜொலிக்கும் திறமை மறக்கப்படும். வியாபாரங்களில், யாரும் எப்பொழுதும் தேவையானவர்கள் என்ற எதுவும் கிடையாது. உங்களது வேலையை, அறைகுறையாக, பாதி சம்பளத்தில் செய்ய இன்னொருவர் இருக்ககூடும் என்றே செயல்படுங்கள். அந்த மாற்று தொழிலாளரின் இயக்கத்திறனை சமாளித்து சாக்கு போக்கு சொல்ல உங்களது நிறுவனம் சற்றும் தயங்காது. ஏனென்றால், காசேதான் கடவுள்! இது ஆறாம் பாடம்.

 

இப்படிப் பல பாடங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், மேல் சொன்ன ஐந்து பாடங்களை இளைஞர்கள்/இளைஞிகள் சரியாக அணுகினால், வெற்றி நிச்சயம். ஏனென்றால், இந்த செண்டிமெண்டல் கட்டுரைகள் இன்னும் கொஞ்சம் நாட்களில் அடங்கி விடும். ஆனால், வேலை நீக்கம் என்பது, வணிகமும், முதலாதித்துவமும் இருக்கும் வரைத் தொடரும். இன்றில்லையேல், நாளை ஒவ்வொருவரையும், இந்த பலூன் வெடித்துத் தாக்கும். எப்படி இன்னொரு பலூனுக்குள் புகுவது என்பதுதான் முக்கியம் – வெடிக்காத பலூன் என்ற ஒன்று கிடையாது.

Series Navigationடொக்டர் நடேசனின் சிறுகதைத்தொகுதி மலேசியன் ஏர்லைன் 370 கருத்துக்களையும் அனுபவங்களையும் வெளிக்கொணரும் கதைகள் – முன்னுரைபொங்கலும்- பொறியாளர்களும்
author

ரவி நடராஜன்

Similar Posts

3 Comments

  1. Avatar
    Renga says:

    மிகச் சிறந்த முறையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை. ரவி நடராஜனுக்கு என் பாராட்டுக்கள். நான் ஏழாவது பாடமாக ஒன்றைச் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
    சேமிப்பு. அதித சம்பளம் வழங்கப்படுவது உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் அல்ல. எனவே முதல் மாச சம்பளம் வ்ரும் போதே முப்பது வருட சம்பளத்தின் அடிப்படையில் கடன் வாங்குவது சரியல்ல.
    இந்தியாவில் மேற்குலகம் போல் எம்ப்ளையிமென்ட் இன்சுரன்ஸ், சோஷியல் செக்யூரிட்டி எல்லாம் கிடையாது. இன்று வேலைக்கு சேரும் இளைஞன் 40 வயது வரை வேலையிருக்கும் என்று திட்டமிடுவதுதான் சரியாகயிருக்கும்.

  2. Avatar
    Mylsamy Mohanasundaram says:

    மிக மிக தைரியத்துடன் எழுதப்பட்ட அற்புதமான கட்டுரை. இன்றைய மாணவர்களும் மென்பொருள் துறையில் உள்ள பொறியாளர்களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.

  3. Avatar
    Bandhu says:

    சிறந்த கட்டுரை. இதோ என் 2 சென்ட்கள்..

    நான் கடைபிடிக்கும் மூன்று விதிகள்.
    1. நான் வேலை செய்யும் கம்பெனி எந்த அளவு நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்றால் அபாய மணி மனதில் அடிக்க வேண்டும்.
    2. நான் வேலை செய்யும் ப்ராஜக்ட் கம்பெனிக்கு எந்த அளவு முக்கியம்? நான் இருப்பது எல்லாம் ஆட்டோமேஷன் போன்று தேவையான ஆனால் அதி முக்கியமில்லாத ப்ராஜக்ட் என்றால் நாட்களை என்ன ஆரம்பிக்க வேண்டியது தான்!
    3. நான் செய்யும் வேலை எந்த அளவுக்கு ப்ராஜக்டில் முக்கியமானது?

    இதில் எது சரியாக இல்லாவிட்டாலும் கஷ்டம்தான்!

Leave a Reply to Bandhu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *