‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’

This entry is part 5 of 29 in the series 18 நவம்பர் 2012

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

E. Mail: Malar.sethu@gmail.com

இருபதாம் நூற்றாண்டு கண்ட தமிழ்க் கவிஞர்களில் மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவியரசர் கண்ணதாசன் ஆகிய மூவரும் தலைசிறந்த கவிஞர்கள் ஆவர்.

இந்தப் புகழ்வரிசையில் மூன்றாவதாகத் தோன்றிய கண்ணதாசன் இன்றளவும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராய் நிலைத்த புகழுடன் விளங்கிக் கொண்டிருக்கிறார். முன்னவர்கள் இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.

பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். கவியரசர் கண்ணதாசன் தான் வாழ்க்கையில் அனுபவித்து உணர்ந்த சம்பவங்களை, காதல், ஏமாற்றத்தை, வேதனையை, சோதனையை, பக்தியை அப்படியே பாட்டாக வடித்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால் தமிழ் மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டது. காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.

தனது மொழி ஆளுமையினாலும், கற்பனை நயத்தாலும், கருத்துச் செழுமையாலும், எளிய நடையினாலும் தனது இசைப் பாடல்களை காலத்தால் அழியாத காவியங்களாக்கிவிட்டார் கவியரசர். எந்த ஒரு மனிதனும் தான் வாழ்க்கையில் செய்துவிட்ட தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். கூறவும் மாட்டான். ஆனால் கவியரசரோ ஒழிவு மறைவின்றி தனது திரையிசைப் பாடல்கள் வாயிலாகவும் பிற படைப்புகளின் வாயிலாகவும் தனது தவறுகளையும் உண்மைகளையும் தெரிவித்திருக்கின்றார். மேலும் தமிழக சட்டசபையில் அரசவைக் கவிஞராக இருந்து புகழ் பெற்றவர் கவியரசர் கண்ணதாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

“நான் மனிதரைப் பாடமாட்டேன்” என்ற அவரது கவிதையின் சிலபகுதிகள் அவரது உள்ளக்கிடக்கையைக் காட்டும் சிறப்பான பகுதியாகும்.

‘‘மானிடரைப் பாடிஅவர்

மாறியதும் ஏசுவதென்

வாடிக்கை யான பதிகம்

மலையளவு தூக்கிஉடன்

வலிக்கும் வரை தாக்குவதில்

மனிதரில் நான் தெய்வ மிருகம்’’

என்று பாடுகின்றார்.

இக்கவிதையின் தலையங்கமே நமக்கு ஒரு கதை சொல்லுகிறது. தான் மனிதரைப் பாடமாட்டேன் என்கிறார். அப்படியானால் என்ன அவர் மனிதரைப் பாடவேயில்லை என்று பொருளா? இல்லை. பாடிய மனிதர்கள் பின்பு அவர் மனதில் சிறப்பினை இழக்கும் சந்தர்ப்பத்தில் விரக்தியின் உச்சிக்குத் தள்ளப்பட்டு அங்கே தன் உள்ளத்தின் ஓலத்தை வெளிப்படுத்துகிறார்.

மனிதரை பாடுகிறாராம். ஆனால் பாடிய மனிதர் மாறிவிடும் போது ஏசுகிறாராம். ஆனால் இதிலிருந்து தான் மறுவதில்லையாம். ஏனெனில் இதுதான் தனது வழக்கமாம். புகழும் போது அவர்களை மலையளவு உயரத்தில் துக்கிக் கொண்டாடி, பின்னர், வலிக்கும்படித் தொப்பெனத் தரையில் போடும் தனது பாங்கை இம்மியளவும் மறைக்காது, தனது வார்த்தை ஜாலங்களில் வடித்திருக்கிறார் கவியரசர். கவிஞரின் தமிழ் அங்கு வலிக்கும்படி விழுவோருக்குக் கூட ஒத்தடம் கொடுக்கிறது.

“காலக்கணிதம்” எனும் கவிதையொன்றிலே

“கவிஞன் யானோர் காலக்கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்

இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது,

புகழ்ந்தால் என்மனம் புல்லரிக்காது”

என்று கவியரசர் குறிப்பிடுகிறார். அது மட்டுமல்ல இந்த உலகில் பல செயல்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. அதனால் நாம் கொண்ட கருத்து பிழையென்று உணர்ந்த மாத்திரத்தில் அதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை,

“மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.”

என்று கூறுகிறார்.

தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைக்கிறாள் தாய். அவள் பாடும் தாலாட்டில் தமிழ் மணம் கமழ்ந்து வருகின்றது. தாய்க்குக் குழந்தை எப்படித் தெரிகின்றது தெரியுமா?

‘‘நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளந்தென்றலே வளர்

பொதிகை மலைதோன்றி

மதுரை நகர்கண்டு பொலிந்த தமிழ் மன்றமே’’

என தமிழ் மன்றத்தைப் போன்று தெரிகின்றதாம். தமிழுடன் குழந்தையை ஒப்பிட்டுப்பாடும் தாயின் மனம் போற்றுதற்குரியதாக உள்ளது. கவிஞரின் இக்கூற்று இளங்கோவடிகள் தமிழைப் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகப் போற்றும் தன்மையுடன் ஒப்புநோக்கத்தக்கதாக அமைந்துள்ளது.

‘தான்’ என்ற சொல்லுக்குத் தமிழில் தனிப் பெருமை உண்டு. இராமச்சந்திர கவிராயர் ‘தான்’ என்ற சொல்லை வைத்து,

‘‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்

குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்

கொடுத்துத்தான் இரட்சித்தானா?’’

என்று சித்திரம் ஒன்றை அமைத்துக் காட்டுகிறார். இந்தப் பாடலில் மயங்கிய கண்ணதாசன் தானும் ‘தான்’ என்ற சொல்லை வைத்து,

‘‘அத்தான்….என்னத்தான் அவர்

என்னைத் தான்…எப்படிச் சொல்வேனடி – அவர்

கையைத் தான் கொண்டு மெல்லத்தான் வந்து

கண்ணைத்தான் – எப்படிச் சொல்வேனடி!’’

என்ற பாடலைப் பாடுகின்றார்.

காலனைக் காலால் உதைத்த பாரதியார் போல் கண்ணதாசனும் துன்பம் வந்தால் அதைத் தூர எட்டி உதை என்று கூறுகிறார். துவளாத நெஞ்சுரமும் இடைவிடாத முயற்சியும் இருந்தால் இறுதியில் வெற்றிதானே. அப்படிப்பட்டவர்களை நெருங்கும் துன்பம் தானே துன்பப்பட்டு ஓடிவிடும். எதிர்காலம் இனிமையாகவும் வளமாகவும் அமைய வேண்டும் என்ற நம்பிக்கையும் நல்லாசையும் கண்ணதாசனுக்கு இருந்தது. வாழ்வை வரவேற்று அவர் எதிர்காலத்தின் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது நல்லெதிர்கால நம்பிக்கையே அவருக்குத் தெம்பும் திறனும் அளித்தன.

ஊக்கமும், உற்சாகமும் ஊட்டின. அதனால் தான் கண்ணதாசன்,

‘‘என்னடா துன்பம் அதை

எட்டி உதை வாழ்ந்துபார்

எப்போதும் உன்னை நம்பி’’(கண்ணதாசன் கவிதைத் தொகுதி4ப.84)

என்று நமக்கு ஆணையிடுகிறார். இதுவெறும் ஆணவத்தின் வெளிப்பாடல்ல. எதிர்காலத்தில் ஏற்றமுற வாழ வேண்டும் என்ற பெருமித நோக்கின் வெளிப்பாடாகும்.

மனித வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு விதமாக விவரித்துச் செல்வர். ஆனால் கவியரசு கண்ணதாசனோ கந்தல் துணியை வைத்து அழகுற விளக்கிச் செல்கிறார்.

மனிதனும் துணியும் ஒன்று. அதன் பிறப்பும் மனிதப் பிறப்பும் ஒத்து வருகின்றது. துணி எவ்வாறு உருவாகிறது என்பதை,

‘‘கரிசல் காட்டுக் கழனியில் சில

கால்கள் உழுத உழவு –சில

கைகள் கனிந்த கனிவு –குடிசை

எரிக்கும் விளக்கின் ஒளியைப் போல

இலைகள் இரண்டு வரவு-அதில்

இயற்கை கலந்த அழகு

பருத்தி என்றொரு செடி வளர்ந்தது

பருவப் பெண்ணைப் போலே –அந்தக்

கரிசல் கழனிமேலே –அது

சிரித்த அழகில் காய் வெடித்தது

சின்னக் குழந்தை போலே –அந்த

வண்ணச் செடியின் மேலே!’’

என்று பருத்தி உருவான விதத்தை எடுத்துரைக்கின்றார்.

பருத்தி துணியானது. துணி ஆடையானது. அந்தத் துணி கிழிந்து அடுப்பங்கரைக்கு வந்தது. அவ்வாறு வந்த துணி,

‘‘சலவை செய்து வாசம் போட்டுத்

தங்கம் போல எடுத்து-பின்

அங்கம் பொலிய உடுத்து-தன்

நிலைமை மாறிக் கிழிந்த பின்பு

நிலத்தில் என்னை விடுத்து-சென்றார்

நீண்ட கதை முடித்து’’

என்று தான் வாழ்ந்த வாழ்வை எடுத்துக் கூறுகிறது.

இந்தத் துணியின் நிலைபோன்றதுதான் மனித வாழ்க்கையும். துணி புதிதாக இருக்கும்போது அதனை எவ்வாறு பாதுகாப்போம். எவ்வாறு வைத்துக் கொள்வோம். அது கிழிந்து விட்டால் அதனை நாம் கையாள்கின்ற முறையே வேறு. அதுபோன்று மனிதன் நன்றாக வளமுடன் இருக்கும்போது அவனை அனைவரும் மதித்து வருவர். பொருள் வளம் வீட்டில் குன்றுமாயின் அனைவரும் அவனை விட்டுச் செல்வர். இதுதான் உலக இயல்பு. கவியரசர் கவிதையின் வழி மனித வாழ்வைப் பற்றிய கண்ணோட்டத்தை ,

‘‘சுட்ட சோற்றுப் பானை சட்டி

தூக்கி இறக்க வந்தேன்-என்

தூய உடலைத் தந்தேன்-நிலை

கெட்டுப் போன செல்வர் போலக்

கேள்வியின்றி நின்றேன் –இன்று

கேலி வாழ்க்கை கண்டேன்!

என்று எடுத்துரைக்கின்றார். மனிதர்கள் தம் நிலை தாழ்ந்துவிட்டால் அவர்களை யாரும் மதிக்கமாட்டார்கள். இதனை உணர்ந்து மக்கள் வாழ வேண்டும் என்ற நீதியை,

‘‘பந்தல் போட்டு மணம் முடித்த

பருவ உடலில் துள்ளி –வாழ்ந்த

பழைய கதையைச் சொல்லி –ஏங்கும்

கந்தல் கதையைக் கேட்ட பின்பும்

காலம் அறிந்து கொள்வீர்! –வாழ்வைக்

காவல் காத்துக் கொள்வீர்!’’

என்று எடுத்துரைக்கின்றார்.

பொருள் இல்லாதவரை உலகம் எப்படியெல்லாம் பார்க்கும்? அவரது நிலை என்ன? அதனை,

‘‘மேனி அழகும் காசு பணமும்

இருக்கும் வரைக்கும் லாபம் – அதை

இழந்துவிட்டால் பாபம்! –பின்

ஞானி போலப் பாடவேண்டும்

நாய்களுக்கும் கோபம் – அதுதான்

நான் படிக்கும் சோகம்’’

என்று நயம்பட எடுத்துரைக்கின்றார் கவிஞர்.

இவ்வுலகில் யாருக்கும் வாழ்வு இல்லையா? என்று எண்ணிவிடுதல் கூடாது. உலகில் பிறந்த ஒவ்வொரு பொருளுக்கும் பயன் உண்டு. அதை மக்கள் உணர்தல் வேண்டும். நிலை தாழ்ந்தாலும், தவறினாலும் தமக்கென்று ஒரு கொள்கையை மக்கள் கைக் கொள்ள வேண்டும். அதுதான் வாழ்க்கை. கொள்கையின்றி மக்கள் வாழ்தல் வெறுமையான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வியல் தத்துவத்தை,

‘‘கந்தலுக்கும் வாழ்வு வரும்

காலம் என்று உண்டு! –ஒரு

கையளவுத் துண்டு! –மேனிப்

பந்தல் தன்னை மூடிக் கொள்ள

வேண்டும் வேண்டும் என்று –ஏழை

வேண்டி நிற்பான் அன்று

கோவணமாய் ஆன போதும்

கொள்கை எனக்குண்டு – மானக்

கோட்டைக் காப்பதென்று –இன்று

கேவலமாய் ஆன போதும்

கேள்விக்குறி ஒன்று – பதில்

கேட்கிறது நின்று’’

என்று கவிதையாய் வடிக்கின்றார். வாழ்வின் உண்மையை, அதன் உட்பொருளை இவ்வளவு தெளிவுற எவரும் எளிமையாக விளக்கியிருக்க மாட்டார்கள். இது கவியரசு கண்ணதாசனுக்கு மட்டுமே கைவந்த கலையாகும். இதுவே கவியரசரின் கவிதைச் சிறப்புமாகும்.

கண்ணதாசன் தமக்குத் துன்பம் வந்தபோது அழுதார் அரற்றினார். அழுதால் துன்பச் சுமை குறையும் என்பது உளவியலறிஞர்கள் கண்டறிந்த உண்மையாகும். தனக்குள்ளிருக்கும் துயர வெள்ளத்தை வெளியேற்ற இவர் கைக்கெள்ளும் ஒரு நெறி அதைப் பாட்டாக்கி மற்றவர்களையும் அதில் பங்கு கொள்ளச் செயவதுதான் எனலாம். அப்படி மற்றவரோடு துயரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இவரது துயர் அழிவது மட்டுமல்லாது, அதன்பின் இவரிடம் பிறக்கும் கவிதைகளில் உற்சாகம் கரை புரள்கிறது.

‘‘என்னை அழவிடு என்னை அழவிடு

அன்னை என்னை அழவே படைத்தாள்

வானம் அழுவது மழையெனும்போது

வையம் அழுவது பனியெனும் போது

கானம் அழுவது கலையெனும் போது

கலைஞன் அழுவது கவிதையாகாதோ?’’

(தொகுதி-3)

என்று தன் அழுகையையே கவிதையாக எண்ணி நம்பிக்கையோடு பாடுகிறார். கண்ணதாசன் அழுவதால் குறை ஏதுமில்லை. மாறாக அழகிய கவிதைகள் பிறக்கின்றன.

கண்ணதாசன் துன்பங்களில் அமிழ்ந்துவிடுகிறார். அழுவது சிறந்த சுகமாக அவருக்குத் தோன்றுகிறது. அவர் பிறப்பிலும் அழுதார். வந்து பிறந்த பின் அழுதார். வாழ்க்கைச் சிறப்பிலும் அழுதார். தன்னிரக்கத்தால் கண்ணீர் சிந்தினார். இந்தக் கண்ணீர்க்கிடையேயும்,

‘‘சாலையில் போவதோ தனிவழிப் பயணம்

சாலையின் முடிவில் சந்திப்பு மரணம்’’(தொகுதி-5)

என்று அழகிய கவிதையைப் படைக்கின்றார். இது கண்ணதாசனின் கவிதையில் மிளிரும் தனிச்சிறப்பாகும்.

துன்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. துன்பப்படாத மனிதர்களே இல்லை எனலாம். சராசரி மனிதர்கள் துன்பப்பட்டால் சருகாகக் கசங்கி விடுகிறார்கள். சரித்திரம் படைக்கும் மனிதர்கள் துன்பப்பட்டால் சாதனைகள் படைக்கிறார்கள். கவிஞர்கள் துன்பப்பட்டால் இனிய கவிதைகள் பிறக்கின்றன.

ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் வேதனை வானம்பாடியாகப் பிறந்தது. பாரதியின் வேதனை குயில்பாட்டாகப் பிறந்தது. அதுபோன்றே கவியரசர் கண்ணதாசனின் சோகமும் துன்பமும் சுகமான கவிதைகளை வழங்கியுள்ளன. அவை நம்மை நெகிழ வைப்பதோடு மட்டுமன்றி நினைத்து நினைத்து மகிழவும் வைக்கின்றன.

கண்ணதாசனுடன் அண்ணன் என்று அன்புடன் நெருங்கிப் பழகிய பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம் இளம் வயதில் இறந்துவிடுகிறார். கவியரசருக்குக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவருடன் பழகியதை நினைத்துப் பார்க்கிறார். பட்டுக்கோட்டையாரின் உருவம் கண்முன்னே வந்து நிற்கிறது.

‘‘வெற்றிலையும் வாயும் விளையாடும் வேளையிலே

நெற்றியிலே சிந்தை நிழலோடி நின்றிருக்கும்

கற்றதமிழ் விழியில் கவியாக வந்திருக்கும்

அண்ணே என உரைத்தால் அதிலோர் சுவையிருக்கும்!’’

‘‘கல்யாண சுந்தரனே! கண்ணியனே! ஓர் பொழுதும்

பொல்லாத காரியங்கள் புரியாத பண்பினனே

வாழும் தமிழ் நாடும் வளர் தமிழும் கலைஞர்களும்

வாழ்கின்ற காலம் வரை வாழ்ந்துவரும் நின்பெயரே!’’

என்று பாடுகின்றார்.

கிராமப் புறங்களிலே ஒப்பாரி வைத்தழும் தாய்மார்கள் இறந்தவரின் பெருமைகளை எண்ணி எண்ணிப் பாடுவார்கள். கேட்போரின் நெஞ்சம் இளகி விடும். தன்னையறியாமலேயே கண்ணீர் ஓடி வரும். கவிஞரின் இந்தப் பாடலும் பட்டுக்கோட்டையாரின் வெற்றிலை போடும் பழக்கத்தையும் தம்மை அண்ணே என அழைப்பதையும் நினைவூட்டுகின்றன.

போன உயிர் மீண்டும் வருவதில்லை. தன் உயிரைக் கொடுத்தாலாவது அவர் பிழைப்பார் என்றால் அதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறார் கவிஞர்.

‘‘தன்னுயிரைத் தருவதனால் தங்கமகன் பிழைப்பானோ?

என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?’’

எங்கினிமேல் காண்போம்? எவர் இனிமேல் புன்னகைப்பார்?

தங்கமகன் போனபின்னர் தமிழுக்கும் கதியிலையே!’’

என்று கண்ணதாசன் கவிதையில் கதறி அழுகின்றார். எளிய சொற்கள் தாம். எல்லார்க்கும் தெரிந்தவைதாம். எனினும் கவிஞரின் கைவண்ணத்தில் அச்சொற்கள் அழகான கவிதையாக உருவெடுக்கின்றன.

பாரதப் பிரதமராயிருந்த ஜவஹர்லால் நேரு இறந்தார். உலகப் பெருந்தலைவர்கள் அனைவரும் உள்ளம் உருகினர். இந்திய மக்கள் என்ன செய்வதென்று அறியாது திகைத்தனர். தலைவர்கள் தடுமாறினர். நேருவின் பிரிவால் நெஞ்சு பொறுக்காத கவிஞரும்,

‘‘மாதர்கள் அழுத கண்ணீர்

மழைஎனப் பொழிந்த தையா

தூதர்கள் வடித்த கண்ணீர்த்

துளியெல்லாம் வெள்ளம் ஐயா!’’

என்று பாடுகின்றார்.

மாதர்களும் பிறநாட்டுத் தூதர்களும் நேருவின் பிரிவால் அழுத கண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்தோடியதாகக் கவிஞர் கற்பனை செய்திருப்பது நம் உள்ளத்தைத் தொடுகின்றது.

சங்க இலக்கியத்துப் புறநானூற்றுப் பாடலொன்று புலவர் ஒருவரின் சோகத்தைப் பிழிந்து படிப்போரின் இதயத்தைத் தொட்டுவிடுகிறது. ஒல்லையூர் நாட்டினை ஆண்டுவந்த அரசன் சாத்தன். அவன் இறந்ததும் அவனால் பரிசளித்துப் பாராட்டப்பட்ட புலவர் ஒருவர் பாடிய பாடல்அது. எப்போதும் போல் அந்நாட்டிலே முல்லைப் பூக்கள் பூத்துக் கிடக்கின்றன. ‘மன்னன் இறந்த சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்த நாட்டு மக்கள் உன்னைச் சூடிக் கொள்ள மாட்டார்களே. முல்லைப்பூவே நீ ஏன் பூத்திருக்கிறாய்? என்னும் பொருள்பட, ‘‘முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாடே’’ என்று புலவர் பாடினார். அந்தப் புலவரைப் போலவே கவியரசரும்,

‘‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் – எங்கள்

ராஜா இல்லையே மார்பினில் சூட’’

என்று நேரு விரும்பி அணிந்த ரோஜாவைப் பார்த்துக் கேட்கிறார். நேருவின் மறைவு கவிஞரின் நெஞ்சை உலுக்கியது. சோகம் ததும்புகிறது. வேகம் பிறக்கிறது. கூற்றுவன் மீது கோபம் கொப்பளிக்க,

‘‘சாவே! உனக்கொருநாள்

சாவு வந்து சேராதோ?’’

என்று கேட்கிறார். அத்துடன் அவர் விட்டுவைக்கவில்லை. நேருவின் பொன்னான உடம்பைச் சுட்டெரித்த நெருப்பை,

‘‘தீயே உனக்கொருநாள்

தீமூட்டிப் பாரோமோ?’’

என்று சாடுகின்றார். மேலும் நம்மையெல்லாம் தேம்பியழ வைத்த தெய்வத்தைப் பார்த்து,

‘‘தெய்வமே உன்னையும் நாம்

தேம்பியழ வையோமோ?’’

என்று கேள்விக் கணை தொடுக்கின்றார். காலனை எட்டி உதைத்த கவிஞரைத்தான் படித்திருக்கிறோம். தீக்கே தீமூட்டவும், தெய்வத்திற்கே சவால் விடவும் நெஞ்சழுத்தம் கொண்ட ஒருவர் உண்டென்றால் உலகிலேயே கவியரசர் கண்ணதாசனாகத்தான் இருக்கமுடியும்.

கவிஞர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதனால்தான் மிகவும் வேதனையான சூழல்களில் கூட அவரிடமிருந்து அமுதம் போலத் தமிழ்ப் பாடல்கள் பொங்கி வந்திருக்கின்றன. அதைக் கேட்கும் ரசிகர்கள் அவர் நீந்திய அந்த சோக நதியில் தாமும் நீந்துவது போன்ற உணர்வையடைகிறார்கள். “நெஞ்சில் ஓர் ஆலயம்” எனும் படத்திற்காகக் கவிஞர் எழுதிய “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்” எனும் பாடலில் இடம்பெறும்,

“எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்?

இதுதான் பாதை இதுதான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது”

என்ற வரிகள் எத்தனை சத்தியமானவை. கவியரசர் பிறந்தது சிறுகூடல்பட்டியில், ஆனால் இந்த உலகை விட்டு மறைந்ததுவோ எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சிக்காகோ நகரில். அவர் எழுதிய வரிகளே அவரது வாழ்விற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ன.

கவிஞரின் இதுபோன்ற எத்தனையோ பாடல்களும் கவித்துவமான கவிதைகளும் ஆண்டுகள் பல ஆனாலும் அனைவருடைய மனதையும் விட்டு அகலாது. என்றென்றும் அவை மக்களின் மனதில் நிலைத்திருக்கும்.
—————

Series Navigationஎங்கள் ஊர்ரகசியத்தின் நாக்குகள்!!!
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

14 Comments

  1. Avatar
    kavignar ara says:

    மாங்கனி கண்ணதாசனின் காவியம் அதில் <
    -தென்றலது சென்றதற்கு சுவடு ஏது,கைத்திறத்தால் தரை தடவி அன்னாள் கால் பட்ட இடத்தில் இளஞ்சூடு கண்டான்,- என்பார்,பார்வை அற்ற சிற்பி /கலைஞன் தன் காதலி ஆடிய இடத்தின் தன்மையை தரை தடவி உணர்ந்தான் என்பது கதை .கவிஞர் கவியரசு ஆனவர்.வாழ்க அவர் புகழ்.கட்டுரை மிக நன்று கவிஞர்ஆரா

  2. Avatar
    C.R.Baskaran says:

    kavingar Kannadasan oru makkal kavingaraaga vazhdadhutaan sirapppu. ovoruvar vazhkaiyilum nerum ikkattugalil avar paadal varigal otthadam kodduthu manappunnai aara vaikkum enbhate unmai. oru kaalatil enakku panichumaiel nerdha mana irrukkathil Thandai tavaru seithaan Thaayum idamduttaal vandhu piranthuvitthom vaazha theriyailai enra vaira varigal amaidi kodutthana.

  3. Avatar
    K A V Y A says:

    முழுக்கட்டுரையையும் படிப்பதை இப்போது தள்ளி வைத்துவிட்டேன். காரணம் படித்தமட்டுமே பல கருத்துக்களிடப்படவேண்டுமாதாலால். இல்லாவிட்டால் நீண்ட மடல் நானெழுத ஆசிரியர் குழு என்னைத் தனிக்கட்டுரை வரைக என்றுரைக்க, இங்கே கட்டுரையாள்ர் தன்னைக்கேட்க ஆளில்லை போலும் என நினைத்துவிடுவார்.

    //இருவரும் தங்களது கவிதைகள் மூலமாகப் படித்தவர்களிடமும் அறிஞர்களிடமும் சென்று சேர்ந்தார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசனோ படிக்காத பாமரர்களிடமும் சென்று சேர்ந்தார்.//

    தப்பு. பாரதியார்தான் முதல் மக்கட்கவிஞர். அவர் படிக்காத எளிய மனிதருடன் நன்றாகப்போய்ச்சேர்ந்தார். பாரதிதாசன் புரட்சிக்கவிஞர். அதாவது பழமைவாதிகளுக்குப் பிடிக்காக்கருத்துக்களை க்விதையில் பரப்பியவர். எளிய தமிழே.

    எனவெ கண்ணதாசனே முதலில் பாமரரகளால் படிக்கப்பட்டவர் என்பது உண்மையன்று.

    //ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும். //

    அவரின் விசிறிகளின் ஆர்வமும் காரணம். அவர்கள் பலதளங்களில் அதைச்செய்தார்கள். இன்றும் செய்கிறார்கள். மற்ற கவிஞர்களுக்கு இவ்வாய்ப்பு இல்லை. திரைப்படம் என்ற் வேகமான படகில் பயணிக்கும் வாய்ப்பில்லை. எனவே அவர்கள் காணாமல் போனார்கள்.

    // காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல் சொல்ல அவரே மீண்டும் பிறந்து வந்தால் தான் உண்டு.//

    இப்படி மிகையாக எழுதுவது அருவருக்கத்தக்கது. குறிப்பாக ஆசிரியர்கள் செய்யக்கூடாது. ஒருவர் மின்சாரம் கண்டுபிடிதத்தார். அவரில்லையென்றால் இன்னொருவர் இன்னொரு காலத்தில் செய்திருப்பார் எனப்துவே இயற்கை. கண்ணதாசன் போய்விட்டால் தமிழும் தமிழ்க்கவிதையும் செத்துவிடா நண்பரே. தமிழுக்கு சாவுப்பா பாடுவதை நிறுத்துங்கள். கண்ணதாசம் சிற்ப்பான தத்துவங்களைச்சொல்லும் கவிதைகள் புனைந்தார் என்று மட்டும் எழுதுவதே சிறப்பு.

    அடுத்த மடல் நான் மனிதனைப்பாடமாட்டேன் என்பதைப்பற்றி. பின்.

    For some time, will stay here.

  4. Avatar
    K A V Y A says:

    நான் மனிதர்களைப்பாட மாட்டேன் என்ற கவிதை பற்றி:

    இப்படிச் சொல்பவர்கள் இறைப்புனிதர்களாக (Saints) இருந்தால் மட்டுமே இச்சொற்கள் நம் கவனத்தைக் கவரும். எ.கா: நம்மாழ்வார் மானுடம் பாட மாட்டேன் என்றார். அதன்படியும் அவர் செய்தார். அவரின் காரணம் அவர் தன்னை இறைவன் அவனைப்பற்றிப்பாடவே படைத்தான் எனபதாகும். ஆண்டாள், மானுடருக்கெனில் வாழ்க்கைப்பட மாட்டேன் என்றார். அதன்படி இரங்கநாதரையே மணப்பேன் என உறுதிபூண்டு அதன்படி செய்ததாக அவர் வரலாறு.

    இப்படிப்பட்டவர்கள் சொன்னால் நாம் அப்படியே படிக்கிறோம். ஒரு சாதாரணப்பெண், மானிடருக்கெனில் வாழ்க்கைப்பட மாட்டேன் என்று சொன்னால் எப்படியிருக்கும்? அன்றாடம் பிறர் மனிதர்களோடு வாழ்ந்து அவர்களிடம் சம்பளம் வாங்கும் ஒரு ஆஸ்தானகவி இப்படிப்பேசினால்? A court poet should sing the praises of the ruler. That is the duty attached to the post. Why did he accept that post?

    ஒரு கட்சி, ஒரு மதம், பல தலைவர்கள் என்று வாழ்ந்த கண்ணதாசன், அவற்றில் வரும் மனிதர்களைப்பற்றி எவ்வளவு பாடியிருக்கிறார்! அவர் பாடியவர்கள் அவர் கணிப்பில் மட்டுமே என்றும் நல்லவர்கள். மற்றபடியில்லை.

    இறுதிச்சொல் ‘தெய‌வ மிருக‌ம்” இந்த‌த் த‌மிழ் ஒத்த‌ட‌ம் கொடுக்கிற‌து என்று ஒரு த‌மிழாசிரிய‌ர் சொல்வ‌து மிக‌வும் விய‌ப்பு. எப்ப‌டி இது த‌மிழாகும்? தெய்வ‌மும் மிருக‌மும் ஒன்றாகுமா? ”மிருகம்” என்றும் ”வில‌ங்கு” என்றும் இரு சொற்க‌ள் த‌மிழில் உள‌. இல்லையா? விஞ்ஞான‌த்த‌மிழ், வில‌ங்கு என்ற‌ சொல்லை வைத்து எழுதும். மிருக‌ம் என்ற‌ சொல் ம‌னித‌ர்க‌ளைத் தூற்ற‌வே ப‌ய‌ன்ப‌டும். பிற‌ர் உண‌ர்ச்சிக‌ளை ம‌திக்காம‌ல் அவ‌ர்க‌ளைத் துன்புறுத்துவ‌னை, ”அவ‌னொரு மிருகம்” என்பர். ”அவ‌னொரு வில‌ங்கு” என‌மாட்டார். ஆக‌, மிருக‌ம் என்ற‌ த‌மிழ்ச்சொல் ம‌னித‌னைக் குறிப்பிடும்போது என்னவொரு அசிங்க‌மான‌ பொருளைத்த‌ந்து ந‌ம்மை முக‌ஞ்சுளிக்க‌ வைக்கிறது! அச்சொல்லை வைத்து, ”தெய்வ‌ மிருகம்” என்கிறார். ஆங்கில‌த்தில் ஆக்ஸ்மோரோன் (Oxymoron) என்ற‌ மொழிய‌ணி உண்டு. அத‌ன்ப‌டி இரு எதிர்ம‌றைச்சொற்க‌ள் இணைந்து வ‌ந்து ஒரு புதிய‌ பொருளைத்த‌ரும். எ.கா. தோற்ற‌ வெற்றியாள‌ன். Defeated Victor இத‌ன் பொருள் தோற்ற‌வ‌ன் இல‌குவாகத் தோற்க‌வில்லை. க‌டும் போராட்டம் செய்யும்போது ஒரு சிறிய‌ இடைவெளியில் தோற்றுப்போனான். எனினும் பார்வையாள‌ர்க‌ளின் ஏகோபித்த‌ பாராட்டும‌ழை அவ‌னுக்குத்தான் என்ற‌ பொருள்ப‌டி ஆங்கில‌ம் கையாளுகிற‌து. அதே ஆங்கில‌ம் ”பிசாசான‌ க‌ட‌வுள்” Devilish God அல்ல‌து ”க‌ட‌வுள்த‌ன்மையான‌ பிசாசு” Godly Devil என்றெழுதாது. அந்த‌ விந்தை நிக‌ழ்த்தி த‌மிழ்ப்பாழ்ப‌டுத்த‌ப்ப‌டுகிறது இங்கே !! அதைத் த‌மிழாசிரிய‌ர் பாராட்டுகிறார். க‌ட‌வுள் ம‌னித‌னாக‌ப் பிற‌க்க‌ வேண்டும்; அவ‌ன் காத‌லித்து வேத‌னையில் சாக‌ வேண்டுமென‌ எழுதி பிற‌ரால் க‌ட‌வுள் சாவாரா என்ற‌வுட‌ன் மாற்றிக்கொண்ட‌வ‌ர், க‌ண்டிப்பாக‌ தெய்வ‌ மிருக‌ம் என்ற சொற்பிழையை மாற்றிக்கொள்வார். ஆனால் அப்ப‌டிச் சுட்டிக்காட்ட‌ எவ‌ரும் முன்வ‌ர‌வில்லை போலும். Emperor has no clothes என்று சொல்ல‌ ந‌ம‌க்கு ஹீரோ வ‌ர்ஷிப் இருந்தால் முடியாது.

  5. Avatar
    punaipeyaril says:

    கண்ணதாசன் ஒரு அற்புத கவிஞர் தான் சந்தேகமில்லை… ஆனால், அவரே ஆரம்பமும் முடிவும் என்று எழுதத் தோணவில்லை. எல்லாம் தீர்ந்து போய் விட்டது , இனி அவ்வளவு தான் எனும் போது, “அந்தி மழை பொழிகிறது… “ எனும் வைரமுத்து கவிதைப்பாடல் , பின், “ காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது” எனும் முத்துக்குமார் வரிகள் என்று வந்து கொண்டே தான் இருக்கிறது.
    உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அவர் கவிதைகள்/ பாடல்கள் இருந்திருக்கலாம்… ஆனால், உணர்வுகளுக்கு..? உ-ம்: நான் ஆணையிட்டால் பாடல்…

  6. Avatar
    லெட்சுமணன் says:

    **//ஆங்கில‌த்தில் ஆக்ஸ்மோரோன் (Oxymoron) என்ற‌ மொழிய‌ணி உண்டு.//*

    தமிழிலும் “முரண்தொடை” உண்டு.

    செய்யுள் சிறப்பாக இருக்க மொத்தம் 34 உறுப்புகள் அழகாக அமையவேண்டும். அதில் ஒன்று தொடை – இங்கே அர்த்தம் “தொடுக்கப்படுவது!”

    தொடையை பலவாகப் பிரிப்பர் – அதில் இங்கே நாம் பார்ப்பது
    முரண்தொடை

    அடிதோறும் சொல்லையும் பொருளையும் மாறுபடத் தொடுப்பது அடிமுரண் என்பர். எனவே முரணைச் சொல்முரண் தொடை, பொருள்முரண் தொடை என இரண்டாகப் பகுக்கலாம்.

    “மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே”
    இது தொல்காப்பியம்.

    சொல்லும் பொருளும் முரணுதல் ஐவகையில் அமையும் என்கின்றனர் –

    1.சொல்லும் சொல்லும் முரணுதல்
    2.பொருளும் பொருளும் முரணுதல்
    3.சொல்லும் பொருளும் சொல்லொடு முரணுதல்
    4.சொல்லும் பொருளும் பொருளோடு முரணுதல்
    5.சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளோடும் முரணுதல்

    என்பன அவையாகும்.

    ஆனந்தவிகடனில் சுஜாதா ” கற்றதும் பெற்றதும் ” தொடரில் Oxymoron பற்றி எழுதி தமிழில் சில உதாரணங்கள் கொடுத்து வாசகர்களிடம் மேலும் கேட்டபோது அவர் தேர்ந்தெடுத்தவை கீழே –

    1.கருணைக் கொலை – (நான் எழுதியதாக்கும்.)
    2.சிங்காரச் சென்னை – (நான் எழுதியதாக்கும்.)
    3.எல்லா இலவசச் சேனல்களும் ரூ.72க்கு கிடைக்கும்
    4.இன்று நிறைவுவிழா ஆரம்பம்
    5.ஒரே குத்து! சதக்! சதக்!
    6. வெள்ளைக் கலர்
    7. சற்றே பெரிய சிறுகதை
    8. ஊர் அறிந்த ரகசியம்
    9. நெனைச்சேன் மறப்பேன்னு
    10. சுத்தப் பொறுக்கி

    http://malajps.blogspot.in/2012/08/oxymoron.html

    ”ஆமால்ல!?”

    ——–

    திருப்பாவை – 14

    நாள் பதினான்கு – பாடல் பதினான்கு

    உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பினகாண்
    செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்.

    இப்பாடல் முழுக்க முரண்தொடை அழகைக் காணலாம்.

    1. Avatar
      K A V Y A says:

      Excellent effort. A fine grammar class taken. We are benefited. At least I.

      ஆங்கில ஆக்சிமோரோன் இருசொற்களை மட்டும் கொண்டது. ஒரு வாக்கியத்தில் வரும் முரண்பட்ட இரு கருத்துக்கள் கிடையா. அதன்படி சுஜாதாவின் பட்டியலில், கருணைக்கொலை மட்டுமே சரி. 3, 4, 5, 7, 8, ஆங்கில ஆக்ஸிமோரோனுக்குச் சமமல்ல. மேலும் ஆக்ஸிமோரொன் பெயர்ச்சொல்லே. வினைகள் கிடையா. 9 வினைகள். சொற்களின் பொருள்கள் வேறுபொருளைத்தருமாயின் அஃது ஆக்சிமோரோனாகாது. எ.கா 6. வெள்ளைக்கலர். கலர் என்ற பதம் வெள்ளைக்கு முரண்படும் பொருளாகப் பயன்படவில்லை. சுஜாதா கேலி பேசுகிறார். நீங்கள் ஸீரியசாக எடுத்துக்கொண்டுவிட்டீர்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளராகயிருந்தாலும், நாமும் சிந்தித்துத்தான் ஏற்கவேண்டும். Otherwise, we will be like the mice led by the boy in the German story Pied Piper of Hamelin.

      ஆண்டாளின் பாடல்கருத்து முரண்தொடைகளாக இருக்க, ஆக்சிமோரோன்களாகவில்லை.

      //தெய்‌வ மிருகம்// எவ்வளவு அசிங்கமானச் சொல் என்பதை ஒரு தெய்வத்தின் பெயரைப்போட்டு எழுதிப்பாருங்கள் புரியும். அதிர்ச்சியடைவீர்கள்.

      எவருக்கும் தமிழைக்கொலை செய்ய உரிமை கிடையாது. அறியாமற் செய்த பிழையெனில் விடலாம் சுட்டிக்காட்டிவிட்டு. ஒரு கவிஞனை மாபெரும் கவிஞன் எனப்புகழ்ந்தால் சரி. அவனில்லாவிட்டால் தமிழில் கவிதையே மரணித்துவிடும் என்பதைக்கூட நான் விடுகிறேன்.

      காதல் கண்ணை மூடும். காதலி அழகாக மட்டுமே தெரிவாள். Love is blind; and the lover is brain dead.

      ஆனால், அவன் 100/100 சரியாகத்தான் எழுதுவானெனக்கொண்டு, இப்படிப்பட்ட அசிங்கங்களையும் உயர்தமிழ் என்றால் என்ன செய்ய?

  7. Avatar
    K A V Y A says:

    //“மாறாதிருக்க யான் வனவிலங்கல்ல!
    மாற்றம் என்பது மானிடத் தத்துவம்!
    மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்.”//

    எல்லா இயற்கைப் படைப்புக்கள் மாறும். வனவிலங்குகள் பரிணாம தியரிகள் தங்கள் உருவங்களையும் செயல்பாடுகளையும் மாற்றிக்கொண்டு வந்தன. வரும் என்பது விஞ்ஞானம். மாற்றம் என்பது மானிடத்தத்துவமென்பது சரியன்று. மாற்றம் என்பது இயற்கைத் தத்துவம். இறைவனே அருளியது எனலாம். அவ்வியற்கையில் ஒரு சிறிய புள்ளியே மனிதன். ஆக, கவிதையின் முதல் இரு வரிகள் பொருட்பிழை. இறுதிவரியை மாறும் இயற்கையின் மகத்துவம் அறிவேன் என்றிருக்கலாம். It is not a scientific fact that treats Man exclusively. In science, Man is not exclusive. He is a link in the chain only, unlike in religions where Man is unique from other beings. How will they run the religious shops if they treat Man only as a life form on earth.

    Kanndasan, having not got his school properly, wd not have known Darwin theory of Evolution which treats Man as the member of the evolution which includes all beings. Being a poet he cares only for Man, that is the mistake. His knowledge is very limited. Dont get scientific facts from him.

    //‘தான்’ என்ற சொல்லுக்குத் தமிழில் தனிப் பெருமை உண்டு. இராமச்சந்திர கவிராயர் ‘தான்’ என்ற சொல்லை வைத்து,

    ‘‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்

    குடிக்கத்தான் கற்பித்தானா?

    இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்

    கொடுத்துத்தான் இரட்சித்தானா?’’

    என்று சித்திரம் ஒன்றை அமைத்துக் காட்டுகிறார்
    //

    இப்பாடலை எழுதியவர் பாரதிதாசன் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். இராமச்சந்திரக் கவிராயர் என்கிறாரே! தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.‌

    இப்பாடலில் உள்ள ‘தானை’க் கண்டு கவிஞர் மயங்கி ‘அத்தான்’ பாடலை எழுதினார் என்று கட்டுரையாளர் எப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. இரு ‘தான்’களுக்கும் பொருள் மட்டுமன்றி, தொனி, இறைச்சி (உள்ளுறை பொருள்) வெவ்வேறு. எப்படி முடிச்சுப்போடுகிறார் தமிழாசிரியர் எனப்புரியவில்லை.

    முதல்பாடலில் உள்ள தான் ஒரு தார்மீகக்கோபத்தை வெளிக்காட்ட; அது ஒரு வேதனைப்பாடல். வறுமையின் கொடுங்கரங்களில் சிக்கிய அப்பாவி மக்கள் பாடுவது. அதிலுள்ள ‘தான்’கள் நம் நெஞ்சைப்பிழிகின்றன்.

    இரண்டாவது பாடல் ‘தானை’க் காதலை வெளிப்படுத்த. முற்பாட‌லின் தானை, பிற்பாட‌ல் தொனியும் இறைச்சியும் க‌லையாம‌ல் ப‌ய‌ன்ப‌டுத்தினாலொழிய‌ எப்ப‌டி அதைப் ப‌ய‌ன்ப‌டுத்தினார் என‌லாம்? அதுவும் ம‌ய‌ங்கி?

    Than here is not a word proper. It is just an elongation. Stand separately it does not give any meaning.

    (Dont mistake me for such crticisms. I take adavantage of the free space afforded here. The essay contains some matter worthy of praise, which I will mention in my last mge)

    Tks.

    1. Avatar
      நா.முத்துநிலவன் says:

      இராமச்சந்திரக் கவிராயர் (தனிப்பாடல்) தொகுப்புகளில் உள்ள பாடலின் கடைசி நான்கு வரிகள்-
      “அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் —……அய்யோ எங்கும்,
      பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான்
      …….பண்ணி னானே“ என்பதாகும். (இது நான்கு காய்ச்சீர் இரண்டு மாச்சீர் கொண்ட ஒரு வகை அறுசீர் விருத்தமாகும் என்பதால் மனப்பாடமாக இருந்ததில் சொல்கிறேன்) கண்ணதாசன் பற்றிய தங்களின் வாதம் நன்றாகத்தான் இருக்கிறது. எனவே தான் இந்தப் பாடல்பற்றிய தங்களின் கேள்விக்கு பதில் தந்தேன். நன்றி.

      1. Avatar
        ஷாலி says:

        //அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் —……அய்யோ எங்கும்,
        பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான்
        …….பண்ணி னானே“ என்பதாகும்…//

        அய்யா நா.முத்து நிலவன் அவர்களே தங்கள் மனப்பாட பாடலில் சிறிது பிழை உள்ளது.சரியான பாடல்.

        கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா
        இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா
        அல்லைத்தான் சொல்லித்தான் அரைத்தானோ அத்தானையோ வெங்கும்
        பல்லைத்தான் றிறக்கத்தான் பதுமத்தான் புவியிற்றான் பண்ணினானே. (19)

        இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள்,
        https://ta.wikisource.org/s/3ob

  8. Avatar
    K A V Y A says:

    //பொதுவாக திரைப்படப் பாடல்கள் காலத்தால் வென்று நிலைத்து நிற்கக் கூடிய ஆற்றல் உள்ளவை அல்ல. புதிய பாடல்கள் பிறக்கப் பிறக்கப் பழைய பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மறக்கப்படும். ஆனால் கவியரசரின் பாடல்கள் இன்றளவும் நிலைத்து நிற்பதற்கு அவரது அனுபவமும், கவிதை நயமும் தான் காரணம் ஆகும்//

    சில‌ உண்மைக‌ளைச் சொல்லியே ஆக‌ வேண்டும். க‌ண்ண‌தாச‌னின் க‌விந‌ய‌ம் கார‌ண‌மென்ப‌த‌ற்கு மாற்றுக்க‌ருத்தில்லை. அவ‌ர‌து அனுப‌வ‌ம் என்ப‌த‌ற்கு உண்டு. பலருக்கு அனுபவம் உண்டு. அதை அவர்களும்தான் தம் கவிதைகளில் தோய்த்தெடுத்தனர். அத‌ற்கு முன் திரைப்ப‌ட‌ப்பாட‌ல‌கள் ப‌ற்றி.

    இன்றைய‌ ஊட‌க‌ உல‌கில், திரைப்ப‌ட‌ப்பாட‌ல்க‌ளும் தொட‌ர்ந்து ஒலி/ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்டாலன்றி ப‌ல‌ ந‌ல்ல‌ பாட‌ல்க‌ளும் காணாம‌ல் போய்விடும். பூக்க‌டைக்கு விள‌ம்ப‌ர‌ம் தேவையில்லையென்ற‌ பாச்சா ப‌லிக்காதிங்கே.

    இதைச்சொல்ல‌ கார‌ண‌ம் நான் ப‌ல‌பாட‌ல‌களைக்கேட்டு ம‌கிழும்போது அவ‌ற்றில் ப‌ல‌ வ‌ந்து காண‌ம‌ல் போன‌வைதான். ஏன் இவ்வ‌ள‌வு இனிமையான‌ பாட‌ல் இன்று கேட்க‌ப்ப‌ட‌வில்லை என்று விர‌க்தியே மிஞ்சும். க‌ண்ண‌தாச‌னின் பாட‌ல்க‌ள் க‌விந‌ய‌மிக்க‌து. ம‌ற்ற‌வ‌ரின் பாட‌ல்க‌ளும்தான். ஆனால் அவ‌ரின் பாட‌ல‌கள் ம‌ட்டுமே இன்று பிர‌ப‌ல‌ம்.

    ஒரு ப‌ழைய‌ ப‌ட‌ சிடியைப்பார்த்தேன். பெய‌ர், க‌வ‌லையில்லாத‌ ம‌னித‌ன். பாட‌ல்க‌ள் தேன்ம‌ழைதான். ச‌மீப‌த்தில் லீலா அவ‌ர்க‌ள‌ அப்துல் ஹ‌மீதின் நிக‌ழ்ச்சியில் த‌ன‌க்குப்பிடித்த‌ பாட‌லாக‌ இப்ப‌ட‌த்தின் பாட‌லைத்தான் பாடினார். இப்ப‌ட‌த்தின் பாட‌ல‌கள் அனைத்தையும் எழுதிய‌வ‌ரும் இப்ப‌ட‌த்த‌யாரிப்பாள‌ரே: க‌ண்ண‌தாச‌ன்.

    ஆனால் என்ன‌ செய்ய? எவரேனும் இப்படப்பாடலகளைக் கேட்டதுண்டா? சிரிக்கும்போதும் அழுகின்றான் பாடலைத்தவிர. தாசனின் பாட‌ல‌க‌ளில் எது திரும்ப‌த்திரும்ப‌ ஊட‌க‌ங்க‌ளால் ஒலி/ஒளி ப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ன‌வோ அவைதான் ந‌ம் த‌மிழாசிரிய‌ர் சொல்லும் இன்ற‌ள‌வும் நிலைத்து நிற்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் என்றால் பொய்யில்லை.

  9. Avatar
    K A V Y A says:

    Let me bring it to a close.

    முனைவர் சேதுராமன் எடுத்துக்காட்டுக்களாகப் போட்ட கவிதைகள், அவற்றின் கருப்பொருட்களும் கையாண்ட சொற்களும் வியந்து சொல்லும்படியில்லை. யாக்கை நிலையாமை, அற்ற குளத்தை விட்டோடும் அருநீர்ப்பறவைகளாக வறியவர்களை விட்டொதுங்கும் உறவும் நட்பும் இவையெல்லாம் எளிய தமிழிலும் சங்கத்தமிழிலும் தமிழ் கவிதையுலகு ஏற்கனவே பார்த்து படித்து மகிழ்ந்து விட்டது. தமிழாசிரியருக்குத் தெரியாமலிருக்காது. சித்தர்களை விட பாமரத்தமிழ் எவரே எழுத வல்லார்? அவர்களை விட யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை இத்யாதிகளை எவரெழுதிவிட்டார்?

    கண்ணதாசன் எழுதியவையும் இனிமையாகத்தானிருந்திருக்கும். ஆனால் முனைவர் எடுத்துக்கொண்ட கவிதைகள சரியில்லையென்பதே என் பார்வை.

    முதலில் காட்டிய திரைப்படப்பாடலில் குழந்தையைத் தமிழுக்கு ஒப்பிட்டு உகந்தது மட்டுமே இக்கட்டுரையைப் பொறுத்தமட்டில் கண்ணதாசனை சிறப்பான இடத்தில் வைக்கிறது. மிகவும் இரசிக்கப்படவேண்டிய உவமை. தெயவத்தையும், ஒரு மலரையும் குழந்தையுடன் இணைப்பர். மொழியின் அழகுடன் இணைத்துப்பார்ப்பது ஒரு நிகழா விடயம் இளங்கோ அதற்குமுன் சொல்லியிருந்தாலும்.

    க‌விஞ‌ர் அழுகிறார் என்ப‌தெல்லாம் மிகை. பார‌தியின் கையறுநிலைப்பாடல்களும் (பிஜித்தீவினிலே…), பார‌திதாச‌னின் கோப‌மும் (ஓடப்பர் உடையப்பார் பாடல்), ப‌ட்டுக்கோட்டையாரின் பாட்டாளி வ‌ர்க்க‌ப் பொதுவுடைமைச்சிந்த‌னைக‌ளும் (காடுவிளைந்த மச்சான் நமக்கு, கையுங்காலுந்தானே மிச்சம்), ஜீவாவின் பாட‌ல்க‌ளின் தெரியும் வேதனை உணர்ச்சிக‌ளும், விநாய‌க‌த்தின் ம‌னித நேய‌மும் (குதிரைப்பாடலைப் படியுங்கள் தெரியும்! பிச்சுப்பூ சூட்டிடம்மா பாடல்), வ‌ள்ள‌லாரின் இர‌க்க‌மும் (வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன். கடை விரித்தேன் கொள்வாரில்லை)- இவையெல்லாம் உண்மையுண‌ர்வுக‌ளாக‌ ந‌ம்மைத் தாக்குகின்ற‌ன. என் கல்லிதயத்தை இவை தவிடுபொடியாக்குகின்றன. உங்களையும்தான் நிச்சயமாக) க‌ண்ண‌தாச‌னின் பாட‌ல்க‌ள் ப‌ல‌ அதே க‌ருப்பொருள‌க‌ளைப்ப‌ற்றிப்பேசினாலும், அவ‌ற்றின் ஒரு ப‌ண‌க்கார‌ன் ஒரு ஏழையைப்பார்த்து ஒரு சில‌ சில்ல‌றைக‌ளைப்போட்டு இர‌க்க‌ம் கொள்வ‌தைப்போல‌த்தான் என‌க்குத் தோன்றுகிற‌து.

    க‌விஞ‌ர்க‌ள் ஒப்பிடப்படக்கூடா. அத‌ன்ப‌டி, க‌ண்ண‌தாச‌ன் க‌ண்ண‌தாச‌னாக‌வே இருக்க‌ட்டும்.

  10. Avatar
    கவிஞர் தாரை கிட்டு says:

    கவியரசு கண்ணதாசனின் கவிதைகளும் பாடல்களும் சாகா வரம் பெற்றவை.நம் வாழ்வின் கூடவே வரும் அவரது வார்த்தைகள். அவரே சொல்லியிருக்கிறார் “தனிமனித வாழ்வில் எங்கு ஒரு சம்பவம் நடந்தாலும் அங்கு என் பாடல் ஒன்று ஒலிக்கும்” என்று. அவரவர் வாழ்வை திரும்பிப் பார்த்தீர்களானால் கவியரசரின் வாக்கு 100 சதம் உண்மை என்பதை உணரமுடியும்.
    அவர் நான் “மானிடரைப் பாட மாட்டேன்” என்றார்.அடடா அதுவே ஒரு கவிதை!”நான் நிரந்தரமானவன் அழிவதில்லை”என்றார்.அதைப் போலவே அவரது கவிதையும் பாடலும் நிரந்தரமானவை.கவியரசு எந்த மனிதரைப் பாடினாரோ அந்த மனிதர் மாறிவிட்டார்.அதன் கோபம் தான் “நான் மனிதரைப் பாடமாட்டேன்”என்றார். அவரே சொல்கிறார்.”மனிதரைப் பாடமாட்டேனேயன்றி புனிதரைப் பாடுவேன்” என்றும் பாடியுள்ளார்!காற்றுள்ளவரை கவியரசே உன் பாட்டிருக்கும்.அலையோசை இருக்கும்வரை உன் பாட்டோசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.நீ நிரந்தரமானவன் தான்.உனக்கு மரணம் இல்லை.கவிஞனும் காற்றும் மரணித்ததாக வரலாறில்லை!!

Leave a Reply to punaipeyaril Cancel reply

Your email address will not be published. Required fields are marked *