கண்ணதாசன் அலை

This entry is part 1 of 21 in the series 19 அக்டோபர் 2014

==ருத்ரா

கோப்பைக்கவிஞனென
கொச்சைப்படுத்துவார்
கொச்சைப்படுத்திக்கொள்ளட்டும்.
இவர் கோப்பைக்குள் ஏழுகடலுண்டு.
எழுத்துக்கள் எழுந்துவந்தால்
அத்தனையும் சுநாமிகளே
அதர்மக் கரையுடைக்கும்
ஆவேச அலைகள் தான்.
துலாபாரத்தின்
“துடிக்கும் ரத்தம் பேசட்டும்”
இன்னும் இந்த தேசத்தின்
செங்கொடிகளில்
நரம்போட்டங்களை காட்டுகின்றன.

தத்துவம் என்பது தனியாக இல்லை.
வீடு வரை உறவு வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசி வரை யாரோ?
இந்த இரண்டு வரிகளில்
மனிதனின் தேடல் பற்றிய‌
கேள்வியின் கூர்மை நங்கூரம்
பாய்ச்சி நிற்கிறது.
பிரமனையும் படைக்கும் பிரமனே கவிஞன்.
இதையும் ஆணித்தரமாய் சொன்னான்.
சாவு என்பது பயப்பட அல்ல‌
ஆலிங்கனம் செய்து கொள்ள.
யமன் கூட அவனுக்கு “உமன்” தான்
வா வந்து அணைத்துக்கொள் என்பான்.
மனிதன் தன் நிழலையே படைத்தான்
கடவுள் என்று.
அதனால் தான் அவன் இப்படி எழுதினான்.
“நான் ஆத்திகனானேன் அவன் அகப்படவில்லை
நான் நாத்திகனானேன் அவன் பயப்படவில்லை”

சட்டி சுட்டதடா. கை விட்டதடா.
எறும்புத்தோலை உரித்துப்பார்க்க‌
யானை வந்ததடா..
என்ன ஆழமான வரிகள்?
வேதங்களின் லட்சக்கணக்கான சுலோகங்கள்
முழங்கியா
நம் “லப் டப்”களுக்கு
அர்த்தம் சொல்லப்போகின்றன?

இரவின் கண்ணீர் பனித்துளி என்றான்.
இருட்டுக்கும் கூட உணர்ச்சி உண்டு.
தூங்காத இமைகளில்
கண்ணீரின் வைரங்கள்.
கவலைகளே பட்டை தீட்டும்.

காதல் என்ன பளிங்கு கோட்டையா?
சலவைக்கல் கட்டிடமா?
அந்த தள்ளுவண்டிக்காரியின்
தளுக்குத் தமிழ்கூட
இனிய கலித்தொகை அல்லவா?
“எலந்த பயம்..எலந்த பயம்..”
தமிழ் நாட்டின் ஒலிபெருக்கிகள் எல்லாம்
தொண்டை சுளுக்கிக்கொண்டன.
காதல் கிளுகிளுப்புகள் கூட‌
அந்த கவியரசனுக்கு
விளையாட்டு காட்டும் கிலுகிலுப்பைகள் தான்.

“சுட்ட உடல் கூட எழுந்து நடக்கலாம்.
உப்புக்கடல் கூட சர்க்கரை ஆகலாம்.
அன்னை தந்த பால் விஷமும் ஆகலாம்
நீ சொன்னது எப்படி உண்மை ஆகலாம்?”

காதலியின் காதல் மட்டுமே உண்மை.
அதோ அந்த பாறாங்கல்லில் முட்டி
சுக்கு நூறாக சிதறிப்போகிறேன்.
கவிஞனின் பேனாவுக்குள்
காதல்
டிராகுலாவாகவும் இருக்கலாம்.
மயில்பீலிகளாகவும் வருடலாம்.
கண்ணதாசன் என்ற கவிஞன் மட்டுமே
தன் மைக்கூட்டில்
எரிமலையின் லாவாவை நிரப்பி வைத்து
காதலை கவிதையாக‌
கொப்பளிக்க முடிந்தது.

மெட்டுக்கு சட்டை தைத்து தரவே
பேனாவை ஏந்தினார்.
மெட்டு ஒலி
அவர் கவிதையால்
தமிழ் மண்ணையே எதிரொலிக்கும்
மெட்டி ஒலி ஆனது.

Series Navigation
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *