கதையல்ல வரலாறு (தொடர்) 1

This entry is part 2 of 46 in the series 26 ஜூன் 2011

“வரலாற்றிற்கு முடிவுமில்லை, ஆரம்பமுமில்லை” லூயி பிலாங், -பிரெஞ்சு வரலாற்றாசிரியர்

வரலாறென்பது இறந்தகால முக்கிய நிகழ்வு. ஓர் இனத்தின் அல்லது நாட்டின் நிர்வாகம், சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் தலைவிதியைத் தீர்மானிப்பதாக அந்நிகழ்வு அமைந்திருக்கவேண்டும். வரலாறு முழுமைபெற நிகழ்வுக்கான காரணங்களும் நிகழ்வின் விளைவுகளும் முன்பின்னாக சேர்க்கப்படுகின்றன. வரலாற்றை எழுத சான்றுகளும் சாட்சியங்களும் போதும், படைப்புதிறன்குறித்த கேள்விகள் அங்கில்லை. வரலாற்றாசிரியர்கள் அரிச்சந்திரர்களாக இருக்க கடமைப்பட்டவர்கள். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு உண்மையை பேசுபவர்களென்ற நம்பிக்கையை அவர்கள்மீது வைத்திருக்கிறோம், அதாவது கணவன் மனைவி மீது நம்பிக்கைக்கொள்வதுபோல அல்லது மனைவி தன் கணவன்மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஒப்பானது அது. சந்தேகித்தால் வரலாற்றையும் மூக்கைப்பிடித்துகொண்டு வாசிக்கவேண்டியிருக்கும். தவிர இன்னொன்றையும் மறந்துவிடமுடியாது, எதையும் அறிவுகொண்டு தீர்மானிக்கும் இனம் மனித இனமென்றாலும், அந்த அறிவையும் புலன்களே பெரும்பாலும் வழி நடத்துகின்றன. அறிவு ஜீவிக்கவேண்டுமெனில் புலன்களின் அவாக்களை பூர்த்திசெய்யும் நிர்ப்பந்தமுமிருக்கிறது, எனவே வரலாற்று உண்மைகள் என எழுதபட்டபோதிலும் வரலாறெல்லாம் உண்மைகளா என்றால் இல்லை. ஒன்றிரண்டு விழுக்காடுகள் திரித்தும், உண்மையை மறைத்தும் வரலாறுகள் சொல்லப்படுகின்றன. செஞ்சியைப் பற்றி நாவலொன்று எழுதுவதற்கான தகவல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தேடிச் சேகரித்து வருகிறேன். கடந்தவருடம் அதன் ஓர் அங்கமாக பாரீஸிலுள்ள புகழ்பெற்ற தேசிய நூலகத்திற்கு சென்றபோது அந்த ஒன்றிரண்டு விழுக்காடுகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பம் வாய்த்தது. நண்பரொருவரின் புதிய இதழொன்றில் இத்தொடரை எழுதவும் விரும்பினேன். என்ன காரணத்தாலோ அவ்விதழ் முதல் இதழிலேயே முடங்கிப்போனது. பல மாதங்களுக்குப் பின்னர் செஞ்சியைப்பற்றிய நாவலை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் மீண்டும் அத்தொடரை எழுத விரும்பினேன்.

1. ருடல்•ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன்

11-5- 1941. தேதியைக்கொண்டு இச்சம்பவத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். ஜெர்மனியின் தென் கிழக்குப்பகுதி. பெஷ்ட்ஸ்காடன் ஆல்ப்ஸ்மலையின் மார்பில் வாய்திறந்திருந்த ஓர் அழகு சிற்றூர். வசந்தகாலத்திற்கென்றே பிரத்தியேக கவனமெடுத்து தகிக்கும் சூரியனால் பொன்முலாம் பூசப்பட்ட ஆல்ப்ஸ் ஜொலிக்கிறது. நமக்கு ஆல்ப்ஸ் மலையோ, அதன் அழகோ முக்கியத்துவமல்ல புனைகதையெனில் ஓர் அரைபக்கத்தை ஆல்ப்ஸ் மலைக்காக மட்டுமே ஒதுக்க முடியும்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் அவ்விடம் அசாதாரணமானது. அன்றைய தேதியில் காற்றுகூட அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக எச்சரிக்கையுடன் உள்ளே வரவேண்டும். பெரிய கூடம். ஐரோப்பாவின் மத்தியிலுள்ள பிற பிரதேசங்களைப்போலவே மரங்களின் அவ்வளவு உபயோகத்தையும் செவ்வனே பயன்படுத்திக்கொண்டிருக்கும் விசாலமான கூடம்; விலையுயர்ந்த சிவப்பு நிற சலவைக் கற்கள் பதித்த தரை; அதற்கு அழகு சேர்த்ததுபோல சாதுவாக தரையிற் கிடந்த விலைமதிப்பற்ற இரத்தின கம்பளம். ஆகஅந்தக் கூடமும், அதன் எழிலங்காரமும், விலை மதிப்பற்ற இரத்தின கம்பளமும் இடத்தின் சொந்தந்தக்காரர்களையும் புழங்கும் மனிதர்களையும் அவர்களின் தராதரத்தையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவலாம் அல்லது ஊகத்திற்குக் காரணமாகவும் இருக்கலாம். உங்கள் ஊகத்தை உறுதிபடுத்த மேலும் சிலபொருட்கள்: நீள்சதுர மேசையொன்று அதன் மீது அவ்வப்போது அந்நபரின் கைபட்டு சுழலும் பூகோள உருண்டை.. நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரை தெரிகிறதா? உலகனைத்தையும் கட்டி ஆளவேண்டுமென கனவுகண்ட •பூரெர்: தலைவன், வழிநடத்துபவன் – தேவ பாஷையில் சொல்லவேண்டுமெனில் அசுரன். அடோல்ப் இட்லர்

உறையிலிருந்த கண்ணாடியை எடுத்தணிந்த அடோல்•ப் இட்லர் உறையிலிருந்த கடிதத்தை எடுத்த வாசிக்கலானார். எதிரில் எந்த நேரமும் தமது உயிருக்கு எதுவும் நேரலாம் என்கிற குலை நடுக்கத்தில் ருடல்•ப் ஹெஸ்ஸின் முதன்மைப் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸ் பிண்ச் (Karlheinz Pintsch). ருடல்•ப் ஹெஸ்(Rudolf Hess). நாசிஸ ஜெர்மனியின் மூன்றாவது முக்கிய பிரதிநிதி. அடோல்•ப் இ¢ட்லரின் உயிர்த் தோழன். நம்மவர்களை கேட்டால் விதிப்படிதான் நடக்குமென்பார்கள், அதற்கான சாத்தியங்கள் பிறருக்கு எப்படியோ. ருடோல்ப் ஹெஸ்ஸை அறிந்தவர்கள் விதி வலியதென துண்டைப்போட்டு தாண்டுவார்கள். இரண்டாவது உலகப்போரை நிறுத்துவதற்காக தமது சுயமான முடிவின்படி இங்கிலாந்திற்கு யுத்த விமான மொன்றில் பறந்துசென்றுள்ளதாக தெரிவித்துக்கொண்ட அக்கடிதம், “எனது இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவு, பலனில்லாமலும் போகலாம் என்பதை அறிந்தே இருக்கிறேன், விதி எனக்கெதிராக ஒருவேளை இருந்தால் அதன் விளைவுகள் ஜெர்மன் நாட்டுக்கோ, உங்களுக்கோ பாதகமாக இருக்ககூடாது என்பதை மனதிற்கொண்டு இத்திட்டத்திற்கும் உங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்று மறுக்கவோ அல்லது என்னை ஒரு பைத்தியக்காரனென விமர்சனம் செய்யவோ…” தொடர்ந்து கடிதத்தில் சொல்லப்பட்டிருந்த வரிகளை முழுவதுமாக இறுக்கமான முகத்துடன் இட்லர் வாசித்து முடித்தார்.

சோவியத் ரஷ்யாவுடன் தாக்குதல் நடத்த ஜெர்மன் திட்டமிட்டிருந்த நிலையில் தமது வலதுகைபோலிருந்த ஹெஸ், பிரிட்டனுடன் சமாதானம் பேசலாம் என்று சென்றிருப்பதை அறிந்த இட்லரின் உண்மையான மனநிலையை விளங்கிகொள்வதில் நாஜி அரசாங்கத்தின் பிற தலைவர்களுக்கே மிகவும் கடினமாக இருந்தது. மேசையிலிருந்த அழைப்பு மணியை பலம்கொண்டமட்டும் தட்டினார், அடுத்த ஐந்து நிமிடங்கள் அவரது அலுவலகம் களேபரத்தில் மூழ்கியது. ரைஷ்மார்ஷல் (Reichmarschall)- தலைமைத் ராணுவ தளபதி- கோரிங் (Goering) என்பவரையும், வெளிவிவகார அமைச்சர் யோவாரின் வொன் ரீபந்த்ரோப்பையும் (Joachin von Ribbentrop) உடனே தம்மை வந்து பார்க்க ஏற்பாடு செய்யும்படி தமது பாதுகாவலர் ஒருவரிடம் ஆணை பிறப்பித்தார். இத்தனை களேபரத்திற்கிடையிலும், அடோல்ப் இட்லர் கோபமின்றி அமைதியாக இயங்கியது ஹெஸ் பாதுகாவலனான கார்ல்ஹைன்ஸை வியப்பிலாழ்த்தியது. உடனடியாக தனது தலைக்கு ஆபத்தில்லை என்று எண்ணிக்கொண்டார். இட்லரின் ஒருசில கேள்விகளுக்கு அவரிடம் பதில்களிருந்தன. முதல் நாள் மாலை ஆறுமணி பத்து நிமிட அளவில் அவுஸ்பூர் என்ற ஊரிலிருந்து ஸ்காட்லாந்திற்கு அவர் பறந்து சென்றதையும், அங்கு ஆமில்ட்டன் பிரபுவை சந்திப்பதென்ற அவரது நோக்கத்தையும் கார்ல்ஹைன்ஸின் சுருக்கமான பதிலிருந்து •பூரெர் பெற முடிந்த தகவல்கள்.

அன்றையதினம் அடுத்துவந்த சந்தர்ப்பங்களில் அடோல்ப் இட்லரின் குணம் வேறாக இருந்தது. செய்தியை அறிந்தபோது இருந்த இட்லர் வேறு என்பதற்கொப்ப பிற சம்பவங்கள் அமைந்தன. தளபதி கேத்தெல் (Keitel) என்பவரிடம் இட்லர், ஹெஸ்ஸின் நடவடிக்கைகளை முற்றாக மறுத்தார், அது பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென்றார். 1946ம் ஆண்டு நூராம்பெர்க் நீதிமன்றத்தில் நாஜி குற்றவாளிகளைக்குறித்த வழக்கு விசாரணையின்போது சம்பவத்தை நினௌகூர்ந்த கேத்தெல், “அன்றைக்கு •பூரெரை அவருடைய மிகப்பெரிய குடியிருப்பில் சந்தித்தது நினைவிருக்கிறது, கால்களை எட்டிவைத்து நடந்தபடியிருந்தார். அவரது சுட்டுவிரல்முனை நெற்றிப்பொட்டிலிருந்தது. இப்படியொரு காரியத்தைச் செய்ய அந்த ஆளுக்கு(‘ஹெஸ்ஸ¤க்கு) பைத்தியம் பிடித்திருக்கவேண்டும். அவரது மூளைக்கு என்னவோ நேர்ந்திருக்கிறது. தனது நடவடிக்கைக் குறித்து நமக்குத் தெரிவித்திருக்கும் கடிதத்தினைவைத்து அப்படியொரு முடிவிற்குதான் என்னால் வரமுடிகிறது என்று சொன்னதை இன்னமும் நான் மறக்கவில்லை”, என்றார்.

இரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பங்களில் இன்றளவும் விளங்கிக்கொள்ளமுடியாத புதிர் நாஜி ஜெர்மனியின் தலைமை பீடத்தைச் சேர்ந்த ஒருவர் இப்படி பின்வாசல்வழியாக எதிரி நாட்டில் இறங்கியது. அப்படிச்சென்றவர் ஏதோ நாஜி ஜெர்மனியின் கெஸ்ட்டாப்போவால் தேடிக் கைதுசெய்யப்படவேண்டியவர்களில் ஒருவருமல்ல. கடிதத்தை முதலில் பார்த்தபோது இட்லர் நடந்துகொண்டவிதத்திற்கும் பின்னர் அவர் நடந்துகொண்ட முறைக்கும் உள்ள வேறுபாடுகளை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அடோல்•ப் இட்லரின் நெருங்கிய சகாக்களில் ஒருவர், போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் இப்படி தன்னிச்சையாக ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துவருகிறேன் எனப் புறப்பட்டுப்போகமுடியுமா என்ற கேள்வி எழுகிறது. நடந்ததெதுவும் எனக்குத் தெரியாதென்ற இட்லரின் சொற்களை எந்த அளவிற்கு நம்புவது? பதிலை ஓரிரு வார்த்தைகளில் விளக்குவது கடினம். ஓரளவு ருடால்ப் ஹெஸ் பயணத் திட்டத்தையும், அப்பயணத்திற்கு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த மரியாதை என்ன என்பதையும், இரண்டாம் உலகபோரின் முடிவுகள் என்ன சொல்லவருகின்றன என்பதையெல்லாம் நினைவிற்குக் கொண்டுவரவேண்டும். நூராம்பெர்க் நீதிமன்றத்தில் வழக்குவிசாரனையில் சில உண்மைகள் வெளிவந்தன என்றபோதும், ருடோல்ப் ஹெஸ்ஸென்ற ஆடு பலிகிடாவாக உபயோகமானதில் இட்லரின் பங்கென்ன என்பது இன்றளவும் புதிராகவே இருக்கிறது. ருடோல்ப் ஹெஸ் இப்பயணத்தைப் பற்றி சொல்லவருவதென்ன?அவர் மனைவி என்ன சொல்கிறார்? •பூரெர் சுற்றியிருந்தவர்களில் குறிப்பாக கேப்டன் பிண்ச், பேராசிரியர் கார்ல் ஹௌஸ்ஷோ•பர் அவரது மகன், ஹெஸ் பயணித்த மெஸ்ஸெர்ஷ்மித் விமானத்தை உருவாக்கியவர் ஆகியோரின் கருத்து இறுதியில் ஆங்கிலேயர்கள் பங்களிப்பென்று அனைத்தையும் சார்பற்று பார்க்கவேண்டியிருக்கிறது.

* * * * *

டேவிட் மக் லீன் என்ற விவசாயிக்கு அன்றையதினம் வரலாற்றில் தனது பெயரும் போகிறபோக்கிலே குறிப்பிடப் படுவதற்கான வாய்ப்பு அமையப்போகிறது என்பதை உணராமலேயே வழக்கம்போல உறங்குவதற்காக தனது அறைக்குத் திரும்பும் நேரம். விமானமொன்றின் எந்திர சத்தம் வெகு அண்மையில்கேட்கவே திகைத்து நின்றான். காரைபூசிய ஆவனது வீடு பூகம்பத்திற்கு உள்ளானதுபோல அதிருகிறது. அதிர்ச்சியிருந்து மீளாமலேயே யுத்தகால வழக்கின்படி முன்னெச்சரிக்கையாக விளக்கினை அணைத்துவிட்டு மெல்ல நடந்து சென்று சன்னல் திரையை விலக்குகிறான். மூர்ச்சையாகாத குறை. பாராசூட்டுடன் ராணுவ அதிகாரிபோலிருந்த ஒருவன் குதிப்பதை முதன்முதலாகப் பார்க்க அவனுக்கு அதிசயமாகவும் இருக்கிறது அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அடுத்த நொடி சுய நினைவுக்குத் திரும்பிய மக் லீன் அவசர அவசரமாக உடையை அணிந்துகொண்டு, தமது தாய் படுத்திருந்த அறைக்காய் குரல்கொடுத்துவிட்டு அவசரமாய் வெளியில் வந்தான்.

பாராசூட்டிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள அதிகாரி முயன்றுகொண்டிருப்பது தெரிந்தது.

– யார் நீ?- மாக் லீன்

பாராசூட்டிலிருந்து விடுபட்ட மனிதன், முகத்தில் வலியால் துடிப்பதற்கான அறிகுறிகள். காலெடுத்துவைக்கையில் தடுமாறினான், இலேசாகத் தாங்கி நடக்கிறான். மெல்ல அடியெடுத்து வைத்து இவனிடம் நெருங்கி வந்தவன் நிதானமாக யோசித்துப் பேசிய ஆங்கிலத்தில்:

– நான் ஜெர்மனியிலிருந்து வருகிறேன். எனதுபெயர் அவுட்மன் ஆல்•ப்ரெட் ஓர்ன். டங்காவெல் அவுஸ் வரை செல்லவேண்டும், ஆமில்டன் பிரபுக்கென்று முக்கியமான செய்தியுடன் வந்திருக்கிறேன். – என்றான்.

இரண்டாவது உலகபோர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் ஜெர்மானியன் ஒருவன் கிரேட் பிரிட்டனுக்குள் வந்திருக்கிறானென்பதை நம்புவதற்கு பிரிட்டிஷ் விவசாயி தயாராக இல்லை. விமான இரைச்சலைக்கேட்டு அதிர்ந்துபோய் அதற்குள் மற்றுமொரு விவசாயியும் வந்து சேர்ந்திருந்தான் பெயர் கிரேக். இப்படியான சிக்கலை இதற்கு முன்பு சாதாரணக் குடியானவர்களான மாக்லீனும், கிரேக்கும் சந்திக்க நேர்ந்ததில்லை. இருவருமாக கலந்தாலோசித்தார்கள். மாக்லீ, ஜெர்மானியனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பத்திரமாக பாதுகாப்பதென்றும், கிரேக் அவர்கள் வீட்டுக்கு வெகு அருகில் முகாமிட்டிருந்த பிரிட்டிஷ் படையின் வான் சமிக்ஞைப் பிரிவுக்குத் தகவல் தெரிவிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்த சில விநாடிகளில், பிரிட்டிஷ் அரசின் ராயல் சிக்னல் படைப்பிரிவின் வீரர்கள் மாக் லீன் வீட்டுக்குள் குவிந்துவிட்டார்கள். அவர்களின் தலைவனான வில்லியம்ஸன் அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் நன்கு குடித்திருந்தான். எனினும் ஜெர்மன் அதிகாரியை முதுகில் துப்பாக்கியை முனையை அழுத்திப்பிடித்தபடி அழைத்துச்செல்ல போதுமான நிதானத்துடன் இருந்தான். அவந் கீழிருந்த ராணுவ அதிகாரிகள் ஜெர்மானிய உயரதிகாரி குதிகால் வலியால் துடிப்பதை அறிந்து அருகாமையிலிருந்த மரிஹில்ஸ் பாரெக்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

ஜெர்மானிய கைதி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட, அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவன் அருகிருலிருந்த சகாவிடம் தனக்கேற்பட்ட சந்தேகத்தைப் பகிர்ந்துகொண்டான்.

– இந்த ஆளை எங்கோ பார்த்தஞாபகம். சண்டைக்கு முன்பாக ஜெர்மனியில் உண்மையில் பார்த்திருக்கிறேன். அநேகமாக அவர் ருடோல்ப் ஹெஸ்ஸாகத்தான் இருக்கக்கூடும், இட்லருக்கு மிகவும் நெருக்கமான நபர்.

அடுத்த கணம் அங்கிருந்த பிறஅதிகாரிகள் வாய்விட்டு சிரித்தனர். “ஆனாலும் உனக்கு கற்பனை அதிகம் ஐயா”, என்றனர்.

(தொடரும்)

 

Series Navigationமுத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்சலனப் பாசியின் பசலை.
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *