கதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)

This entry is part 22 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

‘ஹெஸ்’ ஐ வேறொரு பிரிட்டிஷ் அமைச்சரும் சந்திக்கிறார். லார்ட் பீவர் ப்ரூக் என்றழைக்கப்பட்ட அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எரிசக்திதுறை அமைச்சர் பொறுப்பை வகித்தவர். இட்லரின் நண்பரும் ரெய்ஷ் அரசாங்கத்தின் தலைவர்களுள் மூன்றாவது இடத்தை வகித்திருந்தவருமான ‘ஹெஸ்’ பிரிட்டனுக்குள் பிரவேசித்து, நான்கு மாதங்கள் கழிந்திருந்தன. இருபத்து நான்கு மணிநேரமும் உளவியல் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை வைத்திருந்த நேரம். தமது பயணம் தாம் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்பதில் ஹெஸ்ஸ¤க்கு மிகவும் வருத்தம், இந்த வருத்தத்துடன் பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியவிதமும் அவரை எரிச்சல் கொள்ள செய்தன. தமது கோபத்தை சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் வெளிப்படுத்தினார். பிரிட்டிஷ் யூதர்கள் அவரை கொல்ல திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறி, வழங்கப்பட்ட உணவுகளையும் பானங்களையுங்கூட பிடிவாதமாக மறுத்தார். தமது நாட்டு எல்லைக்குள் ‘ஹெஸ்’ திடீரென்று பிரவேசித்ததுகுறித்து பலரும் சந்தேகித்ததுபோலவே சர்ச்சிலும் சந்தேகிக்கிறார். ஹெஸ்ஸின் சொந்த யோசனையா? அல்லது இட்லரின் யோசனையில்பேரில் நமது எல்லைக்குள் பிரவேசித்துவிட்டு இவர் நாடகமாடுகிறாரா என்பதுபோன்ற கேள்விகள் அவரிடமிருந்தன. 1959ம் ஆண்டு இங்கிலாந்து தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், ஹெஸ் விடுத்த எச்சரிக்கைகளென பீவர் ப்ரூக் மூன்றை குறிப்பிடுகிறார், அதன்படி:

” யுத்தத்தில் ஆங்கிலேயருடைய வெற்றி என்பது போக்ஷ்விக்குகள் வெற்றியென்றும் அவ்வெற்றியே பின்னாளில் எஞ்சியிருக்கிற ஐரோப்பாவை ஜெர்மன் ஆக்ரமிக்க காரணமாகுமென்றும், வரலாற்றின் இந்நிகழ்வினை உலகில் பிற நாடுளைப்போலவே பிரிட்டன் முயன்றாலும் தடுத்து நிறுத்தவியலாதென்பது”, முதலாவது.

“ஐரோப்பாவிற்கு குறிப்பாக பிரிட்டிஷ் சாம்ராச்சியத்திற்கு இனி ஆபத்துகளேதுமில்லை என்பது உறுதிபட்டால் ஜெர்மனுக்கும் போல்ஷ்விக்குகளுக்குமிடையே நிலவும் பகை முடிவுக்கு வந்துவிடுமென பிரிட்டன் நினைப்பது தவறென்பது”, இரண்டாவது”

“சோவியத் யூனியனின் பலத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும், தவறினால் உலகமே சோவியத் யூனியனின் காலடியில் நாளை கிடக்க வேண்டிவருமென்றும், அதன் விளைவாக கிரேட் பிரிட்டனின் ஏகாபத்திய வலிமையும் இனியில்லையென்றாகுமென எச்சரித்தது மூன்றாவது.

பீவர் ப்ரூக் இலண்டன் திரும்பியதும் அன்றிரவே சர்ச்சிலை சந்தித்து மேற்கண்டவற்றை கூறினார். சர்ச்சிடமிருந்து வந்த பதில்:

– அந்த ஆளுக்கென்ன பைத்தியமா?

– அதுதான் இல்லை. ஆள் தெளிவா இருக்கிறார். வார்த்தைகளெல்லாம் தெள்ளத்தெளிவாக வருகின்றன. அவரது செயல்பாடுகள் முட்டாள்தனமாக இருந்திருக்கலாம், ஆனால் மனிதர் பேசுவதைக்கேட்கிறபொழுது, அப்படியொரு முடிவுக்கு நம்மால் வரசாத்தியமே இல்லை.

பீவர் புரூக் கூற்றில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது. 1941ம் ஆண்டு மே மாதம் பத்தாம்தேதி உலக வரலாற்றை உலுக்கிய அக்காட்சியை அரங்கேற்றியது பலரும் நினைப்பதுபோல ஒரு பைத்தியத்தின் செயல்பாடல்ல. ஒரு கதைபோல இச்சம்பவத்தை எழுத்தில் சொல்லியிருந்த ஜேம்ஸ் லீசர் (James Leasor)1 என்பவர், இத்திட்டம் மிக நுணுக்கமாக தீட்டப்பட்டதென்றும் அதற்கான ஒத்திகை பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்தாயிற்றென்றும் கூறுகிறார்

பீவர் புரூக் ஹெஸ்ஸை சந்தித்துபோனபிறகு நடந்தெதுவும் ஹெஸ்ஸ¤க்கு சாதகமாக இல்லை. இதுவரை உங்களோடு நடத்தியதெல்லாம் நாடகம், உங்கள் கூற்றையெல்லாம் நம்பி, உங்களோடு பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தமுடியாது. எங்களைப் (பிரிட்டனை) பொறுத்தவரை நீங்கள் ஒரு யுத்த கைதி அவ்வளவுதான், என தங்கள் நிலையை இங்கிலாந்து அரசு அவருக்குத் தெளிவிபடுத்திவிட்டது. இப்படியொரு முடிவைச் தமது திட்டம் சந்திக்குமென்பதை ஹெஸ் எதிர்பார்க்கவில்லை. ஹெஸ்ஸின் நிலமையில் மிகப்பெரிய மாற்றம், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார். இம்முறை அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மன உளைச்சலில் இருப்பதை உறுதி செய்கிறார்கள். விளைவு தற்கொலைக்கு ஒரு முறை ஹெஸ் முயற்சியெய்ய தக்க சமயத்தில் காப்பாற்றப்படுகிறார். பிறகு நடந்தவற்றை நூரெம்பர்க் வழக்கின் முடிவினை அறிந்தவர்கள் அறிவார்கள். நாஜிக்குற்றவாளிகள் அவரும் ஒருவராக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டார். மறதி நோயில் அவதிப்படுவதாகவும் நடந்தெதுவும் தமக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் சாதித்தார். அவருடைய முன்னாள் நண்பர்கள் பலருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோதும் இவர் சுலபமாக தப்ப முடிந்தது. எனினும் நீதிபதிகள் அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பெழுதினார்கள்.

இப்பிரச்சினையில் சர்ச்சிலுக்கு மட்டுமல்ல மேற்கண்ட சம்பவத்தை பின்னர் அறியவந்த வரலாற்றறிஞர்களில் பெரும்பாலானோர் பிரிட்டனுடன் சமாதானம் பேசுவதற்காக ஹெஸ் மேற்கொண்ட திடீர்ப்பயணம் இட்லருக்குத் தெரியாமல் நடந்திருக்காதென சந்தேகிக்கிறார்கள்.

ஹெஸ் இலண்டனுக்கு திடீரென்று புறப்பட்டுப் பறந்துபோன செய்தியை இட்லர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைக்குறித்து இன்றுவரை அபிப்ராய பேதங்கள் உள்ளன. முகத்தில் எவ்வித பாவத்தையும் காட்டாமல் இட்லர் உள்வாங்கிக்கொண்டார் என்பதைத்தான் அன்றைய சாட்சியங்கள் வலுப்படுத்துகின்றன. இட்லரின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு இதில் வியந்தோதவோ, விமர்சிக்கவோ ஒன்றுமில்லை. கார்ல் போடென்ஷாட்ஸ் என்ற ஜெர்மன் படைத் தளபதி,” இட்லரின் முகம் வியப்பு, கசப்பு இரண்டையும் நன்றாகவே வெளிப்படுத்தியதென்கிறார். அரசியலிலும் ராணுவத்திலும் மிக முக்கிய பொறுப்பிலிருந்த கோரிங் (Goering) இட்லரின் உத்தியோக பூர்வ இருப்பிடமான பெர்கா•வ்(Berghof)விலிருந்து மற்றொரு ராணுவ தளபதியுடன் வெளியேறியபோது, ‘நல்ல வேடிக்கை!’ என அலுத்துக்கொண்டிருக்கிறார்.

நாஜிப்படையின் மூத்த தளபதி கோரிங்கிற்கு, ‘இட்லரும் ஹெஸ்ஸ¤ம் சேர்ந்தே இத்திட்டத்தை ரகசியமாக பரிசீலித்திருக்கவேண்டும்’ என்கிற சந்தேகமிருக்கிறது. கோரிங்கின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை பேசும் நூலொன்றில்,” மிக மிக முக்கியமான பல யோசனைகளை, அவ்யோசனைகளை செயல்படுத்துகிறவர்களன்றி பிறருடன் இட்லர் கலந்தாலோசிப்பதில்லை. தவிர ருடோல்ப் ஹெஸ்ஸ¤ம் ஏதோ நாஜி நிர்வாகத்தில் பத்தோடு பதினொன்றல்ல, மூளையாக செயல்பட்டவர்களில் அவரும் ஒருவர், பிறகு பலரும் அறிந்ததுபோல இட்லருக்கு நண்பர்”, எனச்சொல்லப்பட்டிருக்கிறது. ரஷ்யா சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஹெஸ் முன்வைத்த ஜெர்மன் யுத்த தந்திரத்தை பிரிட்டன் ஏற்றுக்கொண்டிருப்பின் ஒருவேளை மேற்கு ஐரோப்பாவில் அமைதி நிலவியிருக்கக்கூடும். இப்பிரச்சினையில் கோரிங்குடைய ராஜ தந்திரமும், விமானப் படையும் ஏற்கனவே தோற்றிருந்தது என்பதைப் பலரும் இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள். கோரிங் மட்டுமல்ல கோரிங்கை சுற்றியிருந்த நெருங்கிய சகாக்களும், அதிகாரிகளும் “இட்லருக்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே சமாதானமாக போகவேண்டுமென்ற எண்ணத்தோடு, யூனியன் சோவியத்தின் மீதான ஜெர்மன் தாக்குதலுக்கு பிரிட்டனும் ஒத்துழைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பும் நிறைய இருந்தது”, என்றனர்.

இச்சம்பவத்தைப் பற்றிய வேறு சில சாட்சிகளின் பதிவுகளும் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவை. ரேடியோ-பெர்லின் பத்திரிகையாளர் ஒருவர் கூற்றின்படி, ஹெஸ் இங்கிலாந்துக்கு பயணப்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பாக இடலரும் ஹெஸ்ஸ்ஸ¤ம் ம்யூனிச் நகரில், நாஜிகட்சியின் தலமை அலுவலகமான பிரவுன் ஹௌஸ்(Brown House)ஐ விட்டு சந்தோஷமாக உரையாடிக்கொண்டு வெளியில் வந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார். அவ்வாறே தகவல் மற்றும் செய்தி தொடர்பின் தலமை கேந்திரத்திலும் ஹெஸ் பயணித்த அன்று பணியிலிருந்த அதிகாரிகள், “ஏதாவது செய்தி கிடைத்ததா?” விமானம் நல்லவிதமாக தரையிறங்கியதா?”, என்பதுபோன்ற உரையாடல்களை நடத்தியதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன.

1943ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஒட்டோ ஸ்கோர்செனி(Otto Skorzeny) என்ற தற்கொலைப்படை தளபதியிடம் கிரான் சஸ்ஸோ (Gran Sasso) மலையுச்சியில் சிறைவைக்கபட்டிருந்த முஸோலினியை விடுவிக்கின்ற பொறுப்பை இட்லர் ஒப்படைத்தபோது, “உங்கள் முயற்சிக்கு தோல்வி ஏற்படுமெனில் ஹெஸ்ஸ¤க்கு நேர்ந்த கதிதான் உங்களுக்குமென”, எச்சரிக்கை விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. கார்ல் ஹௌஸ்ஷோபெர், திட்டத்தின் தோல்விக்கு ஹெஸ்ஸை இட்லர் பலிகொண்டுவிட்டார்’, என்று திடமாக நம்பினார். இப்பிரச்சினையில் மிகவும் குழப்பத்தை தருவது: இட்லர் எடுத்திருந்த நடவடிக்கையும் ஹெஸ் அதனை எதிர்கொண்டவிதமும். ஏற்கனவே இக்கட்டுரையின் குறிப்பிட்டதுபோன்று, •பூயூரெர் தம் நண்பர்கள் கோரிங்கையும், ஹெஸ்ஸையும் அனுமதியின்றி விமானங்களைத் தொடக்கூடாது என்றனுப்பியிருந்த புதிரான சுற்றறிக்கை. அச்சுற்றறிக்கையாவது சம்பந்தப்பட்ட ஹெஸ் மதித்தாரா என்றால் அதுவுமில்லை. பயனத்திற்கு விமானத்தை பயன்படுத்திக்கொண்டது ஒருபுறமெனில், சம்பவத்திற்கு முன்பாக இட்லரின் தனிப்பட்ட விமானியான ஹன்ஸ் போயெர் என்பவரை அழைத்து, ஜெர்மன் அரசால் எந்தெந்த பகுதிகள் மேல் பறக்கக்கூடாதென தடைவிதிக்கப்பட்டிருக்கிறதென்று கேட்டு அதற்குண்டான வரைபடத்தைக் கொண்டுவரசொல்லி பார்த்திருக்கிறார். இட்லரின் விமானிக்கு தமது எஜமான் கோரிங்கிற்கும், ஹெஸ்ஸிற்கும் விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மை தெரியும், இருந்தும் ஹெஸ்ஸ¤க்கு கேள்விகளின்றி கேட்ட வரைபடத்தை தயக்கமின்றி கொடுத்தாரென்ற சந்தேகம் எழுகிறது. இட்லரின் விமானியைப்போலவே, ஹெஸ் பயன்படுத்திய யுத்தவிமானத்தின் தயாரிப்பாளரான மெஸ்ஸெர்ஷ்மிட்டிற்கும், இத்தடையுத்தரவின் முழுவிபரங்களும் தெரியும். முறைப்படி அவருக்கும் அரசாங்கத்தின் உத்தரவு நகல் அனுப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் ஹெஸ் அவரை அணுகியபோது மறுப்பின்றி கதவுகள் திறக்கப்பட்டன. ஹெஸ் கேட்ட விமானத்தைக் கொடுத்ததோடு, விமானத்தின் அப்போதையை எரிசக்தி கொள்கலனின் அளவை ஹெஸ்ஸின் வேண்டுகோளுக்கிணங்க அதிக அளவு பிடிக்குமாறு மாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார், அது தவிர திசைகாட்டி ஒன்றையும், தகவல் பெறுல் கருவியொன்றையும் கொடுத்து உதவியிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக விமானம் 1500 கி. மீ பறப்பதற்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அவர் செய்திருந்தார். தவிர மே பத்தாம் தேதிக்கு முன்பாக அவ்வப்போது அங்குள்ள விமானதளத்திற்கு வருவதும் பறப்பதற்கான ஒத்திகை முயற்சிகளை மேற்கொள்வதுமாக இருந்திருக்கிறார். ஒத்திகையின் போது இங்கிலாந்துக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இருமுறை அமைந்திருந்தது என்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தட்பவெப்பம், கால நிலை ஆகியவற்றைபற்றிய முழுவிபரங்களையும் கேட்டுப்பெற்றிருக்கிறார். இதுதவிர இங்கிலாந்தில் பிரிட்டிஷ் அரசாங்க பிரதிநிதிகளிடம் அவர் நடத்திய உரையாடல்கள் ஏதோ வழி தவறி இங்கிலாந்து எல்லைக்குள் பிரவேசித்த ஒருவரின் பேச்சுபோலவே இல்லை, ஏற்கனவே பலமுறை விவாதித்துத் தெளிவுபடுத்திக்கொண்ட யோசனைகளை முன்வைப்பதாகவே இருந்திருக்கின்றன. ஆக ஹெஸ் தமக்கிட்ட பணியை நிறைவேற்றவந்தவர், தவறி வந்தவரல்ல. இட்லருக்கு நெருக்கமான நண்பராகவும், நாஜி தலமையின் மூத்தஆசாமிகளுள் ஒருவருமாக இருந்த மனிதர், எடுத்தமுடிவில் இட்லர் தனக்குப் பங்கில்லையென்று தமது உடன்பிறப்புகளை ஏமாற்றலாம், சொந்த மனிதர்களை ஏமாற்றலாம் ஊர் உலகத்தைக்கூட அதிகாரத்தில் இருக்கிறபோது ஏமாற்றலாம் ஆனால் உண்மையென்று ஒன்றிருக்கிறதே. சில வாரலாற்றாசிரியர்கள் இட்லர் இங்கிலாந்துடன் எடுத்த சமாதான முயற்சி நம்பக்கூடியதுதான் ஆனால் ரஷ்யாவின் மீதான தாக்குதலுக்கு தேதிகுறித்துவிட்டு சமாதானத்திற்கு அழைத்தவிதந்தான் யோசிக்க வைக்கிறதென்கிறார்கள். ஒருவேளை ஒருபக்கம் இங்கிலாந்து, இன்னொருபக்கம் ரஷ்யா என இரு யுத்தமுனைகளை எதற்காக ஏற்பபடுத்திக்கொள்ளவேண்டும், ஒன்றை தற்போதைக்கு தவிர்க்கலாமேயென்ற யுத்த தந்திரமாக இருக்கலாமோ, என சந்தேகிக்கிறவர்களுமுண்டு.

சம்பவம் நடந்து சிறிது காலம் கழிந்திருந்தது. ம்யூனிச்சைச் சேர்ந்த பத்திரிகையாளர் இறந்திருந்தார். அவருடைய துணைவியாரைச் சந்தித்து ஆறுதல் வழங்கிய இட்லர், “எந்த இரண்டுபேரை எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்று நினைத்து வாழ்ந்துவந்தேனோ அவர்களை இழந்திருக்கிறேன் எனக்கூறி வருந்தியிருக்கிறார். அவர் குறிப்பிட்ட அந்த இருவரில் ஒருவர் •ப்ரிட்ச் டோட்'(Fritz Tod), மற்றவர் ஹெஸ். முன்னவர் பொறியாளர், நாஜி தலைவர்களுள் ஒருவர். பத்திரிகையாளரின் துணைவி இட்லர் குடுபத்திடம் நெருக்கமாக இருந்தவர். அந்த உரிமையில், “அதனால்தான் ஹெஸ்ஸ¤க்கு பைத்தியக்காரனென்ற பட்டத்தை கொடுத்தீர்களோ?” என்று கேட்க, இட்லர் பெண்மணியைச் சமாதானப்படுத்தும் வகையில், எனது துயரத்தைத்தான் சற்று முன்பு வெளிபடுத்தினேனே அதுபோதாதா?, என்றாராம்.

நூரெம்பெர்க் வழக்கு விசாரணை முடிவில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை தவிர்த்து மற்றவர்களை பெர்லினுக்கருகிலுள்ள ஸ்பாண்டௌ (Spandau) சிறைக்குக் கொண்டுபோனார்கள். 1947ம் ஆண்டு அவர்களின் எண்ணிக்கை 9ஆக இருந்தது. ஒருவர்பின் ஒருவராக அனைவரும் விடுதலை பெற்றனர், எஞ்சியவர் ஹெஸ் மட்டுமே. அவர் மிகவும் நேசித்த மனைவியையும், மகனையும்ங்கூட பார்க்க மறுத்து 1987ம் ஆண்டு ஆகஸ்டுமாதம் பதினேழாம் தேதி தற்கொலை செய்துகொள்ளும்வரை 30 ஆண்டுகள் சிறையிலிருந்தார். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் உடைந்துபோவேன், நான் ஓர் அசாதாரனப்பிறவி எனவே பார்க்கவிருப்பமில்லை என்றிருக்கிறார்.

ருடோல்•ப் ஹெஸ் இறக்கையில் வயது 93. அவரது இறப்பு தற்கொலையென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மகன் Wolf Rudiger Hess இதனை ஒரு திட்டமிட்டகொலை என்கிறார், மகனின் கருத்துப்படி பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த SAS (Special Air Service அல்லது அமெரிக்காவின் CIA கொலைகாரர்கள். ஹெஸ் நிறையிலிருந்தபோது 1984ம் ஆண்டிலிருந்து மூன்றாண்டுகாலம் அதாவது 1987 வரை அவருடைய மருத்துவ பராமரிப்புகளை கவனித்துவந்த அப்துல்லா மெலவியென்ற துனீசியர் எழுதிய I looked into the Murderer’s Eyes என்ற நூலில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் M16 என்ற உளவுபடை காரணம் என்கிறார். The Murder of Rudolf Hess (1979) என்ற நூலை எழுதிய Dr. Hugh Thomas நூரெம்பர்க் வழக்கில் விசாரிக்கப்பட்டவரும் பின்னர் ஸ்பாண்டௌ சிறைவாசத்தை அனுபவித்தவரும் ஒரு போலி ஆசாமியென்றும் அசலான மனிதரை எப்போதோ கொன்றுவிட்டார்களென்றும் சத்தியம் செய்கிறார். உலகில் எதுவும் நடக்கலாம்.

இச்சம்பவத்தின் பின்னால் இட்லர் இருந்தாரா இல்லையா? ஹெஸ் எனக்கூறப்பட்டு நூரெம்பர்க் சிறையில் அடைக்கபட்டவர் அசலா போலியா? அவர் இறப்பு தற்கொலையா? கொலையா?

நம்மால் சொல்ல முடிந்த பதில் வரலாறென்பது எப்போதும் உண்மையைப் பேசுவதல்ல. நாஜிகளில் சமாதானத்திற்கு முயன்றவர் அல்லது அந்த யோசனைக்காக உயிரைப் பணயம் வைத்து எதிரி நாட்டுக்குள் நுழை,ந்தவர் இவர் மட்டுமே, என்ற காரணத்தைக்காட்டிலும் இந்த வரலாற்றுக் கதையில் நமக்கு நெருடலாகப்படுவது: தெருச்சண்டையை விலக்கப்போனாலும், யுத்தத்தை நிறுத்த யோசனைகளென்றாலும் சம்பந்தப்பட்டவர்கள் கவனமாக இருக்கவேண்டுமென்ற உண்மை. சர்ச்சில் தமது Memoires என்ற சுய சரிதையில், ஹெஸ்ஸின் முடிவுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல என்கிறார். இட்லருக்கு மிக நெருக்கமாகவிருந்த ஹெஸ்ஸின் தண்டனைக்கு என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படினும் அவற்றில் சிலவற்றை முட்டாள்தனாமான காரியங்களால் அவரே சம்பாதித்துக்கொண்டவைதானென்ற சர்ச்சில் வார்த்தைகளையும் மறுப்பதற்கில்லை.
– முற்றும் –
———————————————————-

1. Leasor, J. (1962). Rudolf Hess : the uninvited envoy. London: Allen & Unwin [©1962]

நாகரத்தினம் கிருஷ்ணா

Series Navigationபூனையின் தோரணைநானும் ஸஃபிய்யாவும்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *