‘கதை மனிதர்கள்’ – பேராசிரியர் க. பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ – புதினத்தை முன்வைத்து

This entry is part 5 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

Panju

பேராசிரியர் க.பஞ்சாங்கத்தின் இந்நாவலை படித்து முடித்த கணத்தில் என்னுள் கண்டது: நாம் அனைவருமே  கதைகளால் விதைக்கப்பட்டு, கதையாக முளைவிட்டு, கதைகளால் நீருற்றப்பட்டு, கதைகளை உயிர்ச்சத்துக்களாகபெற்று, கதைகளாக காலத்தைக் கழித்து, கதைகளாக முடிகிற – கதை மனிதர்கள், என்ற உண்மை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் உண்டோ அத்தனை கோடி கதைகள் இருக்கின்றன. ஓவொரு மனிதனும் தனித்தவன் என்பதுபோல அவனுள் உறைகிற கதைகளும் நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து, பொழுதுசார்ந்து தனித்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. புனைவுகளுக்குக் கவர்ச்சியைத் தருவது இத்தனித்த்துவம் தான். எனினும் எல்லோரும் கதை சொல்லிகளாக அவதாரம் எடுப்பதில்லை, கதை சொல்ல முன்வருவதில்லை.  சிலர் மட்டுமே முனைகிறார்கள். இந்தச் சிலரை தூண்டுவது எது? அந்த உந்துதலின் பிறப்பிடம் எது?

உரிய காலத்தை எதிர்பார்த்து, காற்றுடன் இசைந்து முதுமைக் தட்டிய இலைகளை உதிர்க்கும் மரங்களைப் போல,  மறக்க முடியாத நினைவுகளை உதிர்க்க,  இந்தக் கோடானுகோடி மக்கட் திரளில் தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை; தங்கள் வழித்தடத்தை; குறுக்கிட்ட மேடு பள்ளங்களை; அடித்தக் கூத்தை, கும்மாளத்தை; வாங்கிய அடியை; வாழ்க்கை அனுபவத்தின் வடுவாக நிலைத்துவிட்ட புண்ணை, அதன் தீரா வலியை  பிறரோடு பகிர்ந்து கொள்ள,  ஒரு சிலரை மாத்திரம்  பிடறியில் கை வைத்துத்  தள்ளுவது எது?

கதை சொல்லல்  கதை சொல்லிக்கு மனப்புண்ணை ஆற்ற உதவும் சுய மருந்தா?  இன்றைய மானுட வாழ்க்கை வேலைத்திட்டங்களால் ஆனது. எழுதுவோம், படிப்போம், உண்போம், உறவுகளுடன் பேசுவோம், நண்பர்களுடன் தொலைபேசியில் கதைப்போம், இவைகளில் பெரும்பாலானவை படுக்கையை விட்டு எழுந்திருக்கிறபோதே வரையறுக்கப்பட்டவை. ஆனாலும் இவற்றை நிறைவேற்றுகிறபோது சில நேரங்களில் எவ்வித முகாந்திரமுமின்றி செரிக்காத உணவுபோல நெஞ்சில் கடந்த காலச் சம்பவங்கள் குறுக்கிடுகின்றன.

மனிதர்களின் ஆழ்மனது விசித்திரமானது, உறங்கும் பாம்பை ஒத்தது. நமது வெளி நடவடிக்கைகளில் ஏதோ ஒன்றினால் சீண்டப்பட விழித்துக்கொள்கிறது. இது நாள்வரை ஊமைக்காயமாக உணரப்பட்ட ஒன்றை, – (« குறைந்தது இருந்த கடனை மூன்று கூறாகப் போடும்போதாவது “மூத்தவனுக்கு வேணாம்பா” என்று அம்மா சொல்லியிருக்கலாம். மூத்த அக்காவாவது சொல்லி இருக்கலாம். அண்ணன்மார் உழைப்பில் படித்த தம்பியாகிய நான் சொல்லி இருக்கலாம். பாகப்பிரிவினையை முன்னின்று நடத்திய அந்தச் சின்னய்யா சொல்லி இருக்கலாம். யாரும் சொல்லவில்லை ») – உண்மை வலியாக பிரகடனம் செய்வித்து. சிகிச்சைக்கு ஆவன செய் என உத்தரவிடுகிறது. அவ்வாறானறானதொரு கட்டளையை நிறைவேற்ற பிறந்ததே இந்நாவல் என்பதென் ஊகம்.

கதை சொல்லி நாவலை இப்படித் தொடங்குகிறார்:

“காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுகிறேன் ஆறுமணிக்குள் மைதானத்திற்குச் சென்று விடுகிறேன். குறிப்பிட்ட ஒரே இடத்தில் வண்டியை நிறுத்துகிறேன். என்றும் அதே திசையில் அதே பாதையில். ஒவ்வொரு நாளும் வேறு வேறாக மாற்றினால் என்ன ? என்பதோடு சரி. மாற்ற இந்த மனம் இருக்கிறதே அது ஒத்துக்கொள்வதே இல்லை. மாற்றினால் அன்றைக்கு ஏதாவது எதிர்பாராதத் தீங்கு நேரலாம் என்ற அச்சத்தை மனம் விடாபிடியாக வைத்திருக்கிறது ”  பின்னர் அவர் பயந்ததுபோலவே கதை சொல்லியின் சகோதரனிடமிருந்து:’சித்தப்பா, அத்தைக்குப் பல் இடுவுள ஒரு கட்டி வலிக்கினுச்சி, டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போனோம். கேன்சரா இருக்குமோன்னு சந்தேகப்படுறார். எதுக்கும் மதுரைக்குப் போயி டெஸ்டு பண்ணி கன்ஃபாம் பண்ணிக்கங்க என்கிறார்”.

இந்த நாவலின் தொடக்கப் பகுதியை இத்தனை அக்கறை எடுத்து இங்கே சொல்லக் காரணம், ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையொன்றிலும் இப்படியொரு அனுபவம். கதையின் பெயர் ‘சகோதரிகள்’ (The Sisters).  கதைசொல்லியான சிறுவனுக்கு இங்கும் பெயரென்று எதுவுமில்லை. அவன் தனது வழிகாட்டியான கத்தோலிக்க பாதிரியார் இறக்கும் தருவாயில் இருப்பதை : “இம்முறை தேறமாட்டார், அவருக்கே நம்பிக்கை இல்லை” என அவன் கூறுவதாக ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறுகதையைத் தொடங்குகிறார். சாதாரண மனிதர்கள் நம்பிக்கை இழப்பது வேறு விடயம் ஆனால் நம்பிக்கையையே ஆதாரமாகக்கொண்ட சமய நெறியில் நிற்பவர் நம்பிக்கையை இழக்கிறார், என்பது வேறு.

‘அக்காள்’ நாவல் கதைசொல்லி சாதாரண மனிதரல்ல. வாழ்வைப் பகுத்தறிவோடு அணுகக்கூடியவர். நாவலில் இடம்பெறும் அவரது பேச்சும் செயலும் பின்னர் அதனை உறுதி செய்கின்றன, இருந்தும் ஏன் இந்தத் தடுமாற்றம். இது பொதுவில் மேதைமைகளிடம் காணும் பலவீனம்.  மேதமை என்பது சிறிது கறைபடிந்த சித்திரம். அவர்கள் பொதுமக்களில் ஒருவரும் அல்ல, மனோபலம் கொண்ட பராக்கிரமசாலிகளும் அல்ல. அவர்களை அவர்களே சரியாகப் புரிந்துகொண்டதில்லை என்பதாலேயே இதுபோன்றதொரு குழப்பங்களை எதிர்கொள்கிறார்கள். அப்படி அவர்கள் குழம்பாமற்போனால் இதுபோன்ற படைப்புகளுக்கும் வாய்ப்பின்றி போய்விடும். இலக்கியம் இட்டு கட்டியதாக இருக்கக்கூடாது, இயல்பான மனித மனங்களின் வடிகாலாக இருக்கவேண்டும். ‘அக்காள்’ நாவல் தொடக்கம்முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது. பாதிரியார் படுக்கையில் இருப்பதைக்கூறி கதைக்குள் ஜேம்ஸ் ஜாய்ஸ் இழுத்துப்போகும் தந்திரம் க.பஞ்சாங்கத்திற்கும் கூடிவந்திருக்கிறது. புனைவின் ஆரம்பத்திலேயே, அக்காளின் வாய்ப்புற்று செய்தி கதை சொல்லியைப்போலவே அவரது அண்ணன் மகன் மூலம் நமக்குத் தெரியவருகிறது. ‘அக்கா’, நமது இரக்கத்தை தொடக்கத்திலேயேபெற்றுவிடுகிறார், விளைவாக கதைசொல்லி மாத்திரமல்ல கனத்த மனத்துடன் வாசிப்பவரும் அவருடன்  பயணிக்க வேண்டியிருக்கிறது.

‘சிறுவன்’, ‘இளைஞன்’, ‘குடும்பத்தலைவன்’ என்று கதைசொல்லியின் மூன்று வாழ்க்கைப் படி நிலைகளோடு கைகோர்க்கும் அக்காவின் வாழ்க்கை எப்படித் தொடங்கியது, எப்படி வலம் வந்தது, எப்படி முடிந்தது என்பதுதான் நாவல். பனையேறி குடும்பங்களை அதிக எண்ணிக்கையில்கொண்ட கிராமமொன்றில் அம்மா, சகோதரர்கள், சகோதரிகள் என்று வாழும் கூட்டுக்குடும்பம், “அம்மா போன (இறந்த)பிறகு குடும்பங்களை இணைக்கிற ஒரு “சரடு” அறுந்து போனதுபோல் ஆயிற்று. அவரவர் குடும்பம், அவரவர் வாழ்க்கை என்று ஓடியது”. என கதையாசிரியர் கூறுவதைப்போல, குடும்ப உறுப்பினர்கள் திசைக்கொருவராக சிதறுண்டு சடங்கிற்கும் சம்பிரதாயத்திற்கும் கைகோர்ப்பது என்பது புதியதல்ல வென்றாலும்,  கதைக்களனுக்குகந்த எடுத்துரைப்பைக் கையாண்டு எளிமையான, பாசாங்கற்ற மொழியில் கதையை நகர்த்துவதால் கதைமாந்தர்களோடு  ஒன்றிவிடுகிறோம். கதை சொல்லி நினைவுகளை மீட்பதன் மூலம் தன் குடும்பத்துச் சிதைவில் தன்பங்கும் இருக்கிறதெனத் தன்னைத்தானே தண்டித்துக்கொண்டாலும். அச்சவுக்கடி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது விழுகிறது.

நாவலின் பெயராக இடம்பெற்றிருக்கும் மூத்த அக்காள் தான் மையப் பாத்திரம்: வீட்டு வேலைகளை மட்டுமே அறிந்த அந்த அக்காள், தாயும் உறவும் கைகாட்டிய பனையேறி குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு காட்டு வேலைக்குபோவதும், பத நீர் காய்ச்சுவதும்;   பின்னர் ஆற்றில் மூழ்கிய மகனை தேடி ‘காட்டு  ராஜாவைப் பார்த்தியா?’ என்று ஒவ்வொரு வீடாய்த் தேடுவதும், துக்குமாட்டிக்கொண்ட மகளுக்காக  தம்பியிடம் “தூக்கித் தூக்கிச் சுமந்தியே. சுமை வெச்சிட்டுப் போயிட்டாளேடா. நான் என்ன பண்ணுவேன், பாதவத்தி. நான் பாவி. நானிருக்கக் கூடாது.” என்று அழுது புலம்புவதும் ;  “‘என்ன சொல்ற? இருக்காது. மாமாவாக இருக்காது. நீ யாரையோ பாத்துட்டு என்னமோ சொல்ற. கண்ணென்ன குருடாப் போச்சா?”  என புருஷனை கண்மூடித்தனமாக நம்புவதும்  என்று ‘அக்கா’வைக் கதைசொல்லி காட்சிபடுத்துகிறபோதெல்லாம் வெள்ளந்தியான அப்பெண்ணுக்காக நாமும் துடிக்கிறோம்.  அவளே பின் நாளில்  “வெஞ்சனம் கொடுப்பதற்குக் கணக்குப் பார்க்கிறாளே” எனத் தாய் புலம்பும் அளவிற்கு  மாறியதாக கதை சொல்லி தெரிவிக்கிறபோது, கிடைத்த வாழ்க்கையை அணுசரித்துப் போகும் அவள் சூழல் புரிந்து பரிதாபப் படுகின்றோமே தவிர கோபங்கொள்வதில்லை. மாறாக  சந்தர்ப்பம் வாய்க்கிறபோதெல்லாம் அவள் கதைசொல்லியிடம் அன்பைப் பொழியத் தவறுவதில்லை. நாவலுக்கான பிறப்பிடம் அவர் பொழியும் அன்பாகத்தான் இருக்கவேண்டும். « அவள் பாடிய தாலாட்டுப் பாடல்தான் எனது முதல் இலக்கிய சுவை, பின்னாளில் தமிழிலக்கியத்தை எடுத்துப் படிப்பதற்கானத் தூண்டல் கூட அக்காவிடமிருந்து அரும்பி இருக்குமோ ? » என்று கதை சொல்லி தனக்குத் தானே கேட்டுக்கொள்வது நமது ஊகத்தை உறுதி செய்கிறது.

இப்பெண்மணியைத் தவிர  « சின்ன வயசிலேயே தகப்பனை இவந்த பசங்க புருஷனை இழந்த மனைவி என்றுள்ள குடும்பத்தின் வெள்ளைச் சீலை உடுத்திய பேச்சிஅம்மா,மூத்த அண்ணன், சின்ன அண்ணன்,  சின்ன அக்காள், அவர் கணவர்,  கோபம் வந்தால் மூஞ்சை காட்டி விட்டு வெளியேறும் மச்சான், ஆட்டு வியாபாரம் செய்யும் சின்னய்யா, மாங்குடி அண்ணன், ஒன்றுவிட்ட பெரியப்பா மகன் அண்ணாச்சி, அண்ணாமலைப் பல்கலையில் படித்த பிச்சை, பண்ணையார் வீட்டு மைனர் ஜெயராமன் என நாவல் முழுக்க  கதைகளைச் சுமக்கிற மனிதர்கள்.

பனையேறிகளின் வாழ்க்கை முறையை அவர்களுக்குள்ள நெருக்கடியை, எதிர்கொள்ளும் ஆபத்தை வேறு எந்த நாவலிலும் இப்படி வாசித்த அனுபவமில்லை.

இறுதியாக  நூலாசிரியரை அடையாளம் காண ஓர் உதாரணம்.

« மதம் மாறக் காரணமென்ன ?

கோயிலுக்குள்ள நம்மள நுழைய விடாதபோது நாமயேன் அதுல இருக்கனும் ? மரியாதை  எங்க இருக்கோ அங்க போக விரும்புவதுதானே மனித மனசு »

நூலாசிரியரின் படைப்பிலக்கியங்கள் – ஒட்டுப்புல், ஒரு தலித் அதிகாரியின் மரணம், அண்மையில் வாசித்த ஒரு நூல்,  அனைத்துமே ‘தன்னை அறிதல் என்ற தேடல் நோக்கில் இருக்கின்றன.  இப்படைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது. தவிர இ ந்நாவலில்  இரண்டு விடயங்களை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.  முதலாவதாக உண்மை அடுத்தது எளிமை.  நாவலை வெவ்வேறு கோணத்தில் அணுகலாம் என்றுகூட தோன்றிற்று அதற்கு இது இடமல்ல. ஆர்வத்துடனான நண்பர்களின் வாசிப்பிற்கு வேகத்தடையாக இருக்க விருப்பமில்லை. ஒன்றுமட்டும் உறுதி, எவ்வித ஆரவாரமுமின்றி நாவல் தனக்கான இருத்தலைச் சாதித்துக்கொள்ளும், தரமான வாசகர்கள் விரும்பி வாசிப்பார்கள்.

—————————————

Series Navigationஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016கவிஞன் திரு நா.முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *