கனடியபத்திரிகைகளில் வெளிவந்து நூல்வடிவம் பெற்ற சில ஆக்கங்கள்

author
0 minutes, 2 seconds Read
This entry is part 5 of 12 in the series 13 பெப்ருவரி 2022

 

 
சுலோச்சனா அருண்
 
 
கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம் பெறுகின்றன என்றால், அவை தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கின்றன என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறையினருக்கான ஆவணங்களாகவும் நிலைத்து நிற்கப் போகின்றன என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் தமிழ் இலக்கியத்திற்கு முதலிடம் தந்து, புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் வெள்ளிவிழாக் கொண்டாடும் உதயன் பத்திரிகை, செந்தாமரை, தாய்வீடு, விளம்பரம், மற்றும் இருசு பத்திரிகை, பதிவுகள், திண்ணை போன்ற இணையத்தளங்களில் வெளிவந்த பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் சிறுகதைகள், சில புதினங்கள் பற்றி அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்வதற்காக இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். 
 
இலங்கையில் இருந்து வெளிவரும் ஜீவநதி இதழ் தனது 150வது இதழைச் சமீபத்தில் ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழாக 475 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. அதில் எழுத்தாளர் குரு அரவிந்தனின் கனடியபத்திரிகையில்  தொடராக வெளிவந்த சில நாவல்களும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தன. இதைவிடச் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச ரீதியாக நடந்த சிறுகதை நாவல் விமர்சனப் போட்டியிலும்  குரு அரவிந்தனின் சிறுகதைகள், மற்றும் நாவல்கள் சில, 14 நாடுகளில் இருந்து வாசகர்களால் திறனாய்வு செய்யப்பட்டிருந்தன. அந்த விமர்சனங்களில் இருந்தும் சிலவற்றை இங்கே எடுத்துக்காட்டிக் குறிப்பிட விரும்புகின்றேன்.
 
உதயன் பத்திரிகையில் கடந்த காலங்களில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தனின் நாவல், சிறுகதைகளில்  உறங்குமோ காதல் நெஞ்சம் (2004) உன்னருகே நானிருந்தால் (2004) எங்கே அந்த வெண்ணிலா (2006) சொல்லடி உன் மனம் கல்லோடி (2018) அம்மாவின் பிள்ளைகள் (2019)ஆகிய தொடர் நாவல்கள், மற்றும் குமுதினி போன்ற குறுநாவல்களும் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. இதைவிட உதயன் பத்திரிகையில் வெளிவந்த அனேகமான சிறுகதைகளும் இதுதான் பாசம் என்பதா (2002), என்காதலி ஒரு கண்ணகி (2001), நின்னையே நிழல் என்று (2006), தங்கையின் அழகிய சினேகிதி (2020), சதிவிரதன் (2019), குரு அரவிந்தன் சிறுகதைகள் (2005) போன்ற சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. இந்தத் தொகுப்புக்கள் தமிழ்நாட்டில் உள்ள மணிமேகலைப்பிரசுரம், இனிய நந்தவனம் பதிப்பகம் போன்றவற்றால் வெளியிடப்பெற்றன. கனடிய பத்திரிகையில் வெளிவந்த இந்த ஆக்கங்கள் பற்றிச் சில சான்றோர்கள்,  எழுத்தாளர்கள் குறிப்பிட்டதையும் இங்கே தரவிரும்புகின்றேன்.
 
‘புகழ்பெற்ற புலம்பெயர் தமிழ் எழுத்தாளராக இருந்து கனேடியத் தமிழ் இலக்கியம் படைக்கும் எழுத்தாளராகச் சிறப்புப் பெற்று வருகின்றார் திரு குரு அரவிந்தன் அவர்கள். ‘உரையும் பாட்டும் உடையோர் சிலரே’ என்று புறநானூற்றுப் புலவர் கூறியது போல, கனடாவில் குரு அரவிந்தன் தனிச்சிறப்பு உடையவராக விளங்குகின்றார். எழுத்துலகில் சாதனைகள் செய்து வரும் குரு அரவிந்தன் காதலர் தினத்திற்காக எழுதிய வெவ்வேறு காதலர்தினக்கதைகள் ஐந்து நாடுகளில் ஆறு இதழ்களில் ஒரேவருடம் பெப்ரவரி மாதத்தில் வெளிவந்து சாதனை படைத்திருக்கின்றன’ என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் குறிப்பிடுகின்றார். இந்த ஆறு காதலர்தினக்கதைகளில் ஒரு கதை அதே வருடம் பெப்ரவரி மாதம் காதலர்தின வாரத்தில் உதயன் பத்திரிகையில் வெளிவந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இலக்கிய உலகில் எந்த மொழியிலும், எந்த ஒரு எழுத்தாளரின் காதலர்தினக்கதைகளும் இதுவரை 5 நாடுகளில் 6 இதழ்களில் வெளிவந்ததாக ஆதாரம் இல்லை. குரு அரவிந்தன் தமிழ் இலக்கிய உலகில் இந்த சாதனையைப் படைப்பதற்கு கனடா உதயன் பத்திரிகையும் அப்போது உதவியாக இருந்ததைக் குறிப்பிட வேண்டும்.
 
உதயன் பத்திரிகையில் வந்த சிறுகதைகளின் தொகுப்பான ‘நின்னையே நிழல் என்று..’ என்ற தொகுப்பில் ‘21 ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச்சமூகத்தின் மன, தள நிலைகளைக் குரு அரவிந்தன் தனது புனைவுகள் மூலம் படம் பிடித்துக் காட்டுகின்றார். இதற்காகத் தமிழ் இலக்கியத்திற்கு நல்ல படைப்புக்களைத் தந்த குரு அரவிந்தனை நாம் பாராட்டவேண்டும்.’ என்கிறார் ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியர் அமுது யோசவ்வாஸ் சந்திரகாந்தன் அவர்கள் தனது அணிந்துரையில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார்.
 
உறங்குமோ காதல் நெஞ்சம்: 
 
‘குரு அரவிந்தன் உதயன் பத்திரிகையில் தொடராக எழுதிய முதல் நாவல். தெளிந்த நீரோடை துள்ளாமல், துவளாமல், ஆரவாரப்படாமல் ஓடி தான் அடைய வேண்டிய இடத்தினை அடைகிறதே, அத்தகைய எளிமையான பாணி அவருடையது. அடுத்து என்ன நிகழப்போகிறது என்ற ஒரு பரபரப்பை வாசகனுக்கு ஏற்படுத்தக் கூடியதாக நாவல் அமைந்திருக்கின்றது. ‘குளிர்ந்த காற்றில் ஏற்றி வைத்த தீபச்சுடர் அங்குமிங்கும் ஆடி அசைய, மழைத்துளிகள் பொட்டுப் பொட்டாய் பன்னீர் தெளிக்க, மாலை நேரச் சூரியன் இவளது சோகத்தைத் தாங்கமுடியாது கண்களை மூட, அவள் தன்னையே மறந்து சிவாவின் கல்லறையில் தலைசாய்த்து மெல்ல மெல்ல நினைவிழந்தாள்.’ சிவாவை இழந்து விட்ட சுமதியின் அவல நிலையை எத்துணை தத்ரூபமாக சோக இழையோடு கதையின் ஆரம்பத்திலேயே விவரிப்பதால் வாசகர்கள் சுமதியின் மறு அவதாரமாகி விடுகிறார்கள். முன் நிகழ்வு மீள்பதிவு மூலம் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலோடு கதை பரபரப்பாக நகர்கிறது. எப்பொழுதுமே இப்படியான போராட்டங்களின் போது, பயங்கர இழப்பு ஒரு குற்றமும் செய்யாத பெண்குலத்திற்கேதான். புருஷனை, காதலனை, சகோதரனை, பெற்ரோரை, பிள்ளைகளை எல்லாம் இழப்பர், மேலும் காமுகர்களால் தம்மையும் இழப்பர். இவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டிய பொறுப்பு எமது இளைஞர்களுக்குரியது என்பதை இந்த நாவலில் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றார் குரு அரவிந்தன்.’  ஏன்று மகாஜனக் கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற தொடர் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
 
குரு அரவிந்தன் பலராலும் அறியப்பட்ட, அறிமுகம் தேவையில்லாத எழுத்தாளர். அவருடைய வாசகர் வட்டம் உலகளாவியது. தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மலர்களில் இவருடைய புனைவுகள் பல தடவைகள் வெளிவந்திருக்கின்றன. புனை கதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருக்கின்றன. பல பரிசுகளும், விருதுகளும் பெற்றிருக்கின்றார். குரு அரவிந்தனின் மழலைப் பாடல் குறுந்தட்டைப் பற்றியும் தமிழக எழுத்தாளர் ராமகிருஷ்னன் வியந்து எழுதியது மட்டுமல்ல, நேரிலும் அவரை இங்கு சந்தித்துப் பாராட்டியிருக்கின்றார். ‘உறங்குமோ காதல் நெஞ்சம் என்ற நாவலில் வரும் பாத்திரத்தில் ஒன்றான சாந்தி பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவி. ஒருநாள் பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போது நேரமாகிவிடுகின்றது. ராணுவத்தின் காவல் அரணைக் கடந்த போது அவள் காணாமல் போய்விடுகின்றாள். அவளைத் தேடிச் சென்று அவளுடைய தகப்பன் பொறுப்பான ராணுவ அதிகாரியிடம் விசாரிக்கின்றார். அவர்களிடம் பதில் இல்லை. தகப்பனும் காணாமல் போய்விடுகின்றார். இப்படி விறுவிறுப்பாக நாவல் தொடர்கிறது. ஒரு காலகட்டத்து யாழ்ப்பாண வாழ்க்கையின் ஒரு கூறு வரலாறாக மாறிவிடுகின்றது. நூறு வருடம் கழிந்த நிலையில் ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற இந்த நாவலைப் படிக்கும் ஒருவர் கண்முன்னே போர்க்கால யாழ்ப்பாணமும், மக்களும், அவர்கள் வாழ்வும், வலியும் நிதர்சனமாக விரியும். புனைவு சரித்திரமாக மாறும் தருணம் அது!’ நான் சிறுவனாக வளர்ந்த கிராமத்தில் ஐஸ்கிறீம் அபூர்வமாக எப்போதாவது சாப்பிடக் கிடைக்கும். கூம்புகளின் மேல் உருண்டையாக கிடைப்பதை உருகி வழிய வழிய சாப்பிட்டு முடிக்க வேண்டும். இதன் சுவையையும், சுகத்தையும் தாண்டி இதைச் சாப்பிடும் போது ஓர் பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்து போகும், சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்து விடும். சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும். குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்த போது, எனக்கு இந்த அனுபவம் கிடைத்தது. முடிந்து விடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்து விடும், ஆனால் படிக்க வேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பி இருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம், அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரதை அவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தனின் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன. ஒரு எழுத்தாளருக்கு அவருடைய எழுத்தைவிட சிறந்த நினைவுச்சின்னம் வேறு என்ன இருக்கமுடியும்? – எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
 
உன்னருகே நானிருந்தால்…:
 
உதயன் பத்திரிகையில் தொடராக வெளிவந்த, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் உறவு முறை சார்ந்த பிரச்சனைகளை எடுத்துச் சொல்லும் குரு அரவிந்தனின் நாவலிது. கனடாவுக்கும், அவுஸ்ரேலியாவுக்கும் புலம் பெயர்ந்த இரண்டு சகோதரிகளின் தொடர்புகள் அற்றுப் போன நிலையில் அவர்களின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்த வசீகரன், வைதேகி என்ற இருவர் தற்செயலாக அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்த போது யாரென்றே தெரியாமல் காதல் வசப்படுகிறார்கள். திருமணம் என்று வந்த போது, பேர்த்தியிடம் விசாரித்த பாட்டியம்மா அவள் கொடுத்த புகைப்படத்தில் இருந்து அவர்களின் உறவு அண்ணன்-தங்கை என்ற சகோதர முறையானது என்பதைக் கண்டறிந்து அதிர்ச்சி அடைகிறாள். தொடராக வந்த சர்ச்சைக்குரிய இந்த நாவல் பெருமளவில் விவாதிக்கப்பட்ட போது, அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்வீர்களா என்று வாசகர்களிடமே ஆசிரியர் கேள்வியை எழுப்பி இருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இறுதி அத்தியாயத்தையும்  எழுதியிருந்தார். ஆசிரியரின் கேள்விக்குச் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் சிலர் தங்கள் கருத்தைத் தெரிவித்திருந்தனர். அதில் சிலவற்றை இங்கே தருகின்றேன்.
 
‘சகோதரன் சகோதரி என்று தெரிந்தால் தமிழர் திருமணம் செய்ய மாட்டார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் உறவு முறைகள் பெரிதும் வேண்டப்படாத நிலையில் உறவு முறை என்னவென்று தெரியாமல் இவர்கள் ஒருவரை ஒருவர் விரும்பி விட்டதால் அவர்கள் திருமணம் செய்வதில் தவறில்லை.- கவிஞர் வி. கந்தவனம்.
 
‘வைதேகியும், வசீகரனும் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் பரம்பரை அமைப்பு கணிசமான அளவு கலப்பு அடைந்து விடுவதால் மறுப்பேதும் சொல்வதற்கில்லை. ஆனால் சகோதர உறவு என்று கூறும்போது சற்று உறுத்தவே செய்கிறது.’ – மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர் பொ. கனகசபாபதி.
 
‘பரம்பரை பரம்பரையாகத் துடக்குக் காத்தல் கூட ஆண் வழிக்குத்தான் இருக்கிறது. பெண்கள் அதற்கு விதி விலக்கே! எனவே ஜீன் கவர்ச்சி இருக்கும்போது, அவர்களுக்குள் உடற்கவர்ச்சியும், காதலும் இயற்கையாய் வருகிறது. சகோதரர்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள் என்று சொல்லிப் பிள்ளைகளை வளர்ப்பதால்தான் உடல் உறவுக்கு அப்பாற்பட்ட பாசம் வருகிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதனால் ‘கண்ணே’ என்று அழைத்த வாயால் ‘தங்காய்’ என்று அழைக்க முடியுமா?’ வள்ளிநாயகி இராமலிங்கம் (குறமகள்)
 
‘பரம்பரை ரீதியாக வந்த எமது தமிழர் பண்பாட்டு வழமைகளையும், பழக்கங்களையும் உடைக்காமல் இருப்பதே சிறந்தது. மரபுகள் மூடநம்பிக்கையின் அடிப்படையில் உண்டாக்கப்பட்டால், அவை திருத்தப்படலாம். எனவே பரம்பரை ரீதியான ஒழுங்கான மரபுகள் தமிழர் சமூகத்தால் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.’ முன்னாள் அதிபர் ஆ.பொ. செல்லையா.
 
‘மூன்றாவது தலைமுறையாக இருந்தாலும், காதல் திருமணம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம்.’ ஆசிரியர் இலங்கையர் செல்வா.
 
‘வசீகரனும் வைதேகியும் திருமணம் செய்ய விரும்புவதன் காரணம் என்ன? ஆதியில் இறைவன் ஆதாமைப் படைத்தான், பின் ஆதாமுக்குத் துணையாக ஏவாளைப் படைத்தான். படைத்தவன் ஒருவன் என்றால், ஆதாம் ஏவாளுக்கு என்ன முறை?’ சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன்.
 
எங்கே அந்த வெண்ணிலா?
 
‘எந்த ஒரு படைப்பும் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பை உண்டாக்கும் சக்தி முதலில் அதன் தலைப்புக்கு இருக்க வேண்டும். ‘எங்கே அந்த வெண்ணிலா’ என்று கேள்வி மூலமே வசிகரமாக வாசகர்களை உள்ளே இழுத்து விட்டார் இந்த நூலின் படைப்பாளி திரு. குரு அரவிந்தன். இங்கேயே முதல் வெற்றி அவருக்குக் கிடைத்து விட்டது. உள்ளே நுழைந்தால் படித்து முடிக்கும்வரை கொஞ்சம்கூட விறுவிறுப்பு குறையவில்லை. விக்ரம், மதுமிதா, திலீப், சுபா போன்ற பாத்திரங்களைக் கொண்டு மிகவும் அழகாகக் கதையைக் கையாண்டு சுவை மாறாமல் பரிமாறியிருக்கின்றார். எந்த ஒரு படைப்புக்கும் கதாபாத்திரங்களின் குணாதிசயம் முக்கியம். அதை அழுத்தமாக உருவாக்கிவிட்டால், கதை தானாக நகரும். படிப்பவர்கள் மனதில் பசை ஒட்டிக் கொள்ளும். இதை நன்றாகப் புரிந்து கொண்ட குரு அரவிந்தன் தனது படைப்பை திறம்பட உருவாக்கியிருக்கின்றார். உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வார்த்தைகளை இயல்பாகக் கோர்த்து யதார்த்த நடையில் கதை மாந்தர்களை வாசகர் மனதில் வாழ வைத்திருக்கின்றார். சிறந்த ஒரு எழுத்தாளனுக்கு உரிய எல்லாத் தகுதியும் குரு அரவிந்தனுக்கு நிறையவே இருக்கின்றது. உலகம் போற்றும் பெரிய படைப்பாளியாக அவர் வளர்ந்து உச்சிக்கு வருவார் என்ற நம்பிக்கையை இந்த நாவல் ஏற்படுத்தி இருக்கின்றது.’ உதயன் பத்திரிகையில் வெளிவந்த இந்த நாவல் பற்றி எழுத்தாளர் தேவிபாலா குறிப்பிடுகின்றார்.
 
மனித வாழ்வில் ஏற்படும் சிறு சம்பவங்கள் கூட பாரிய திருப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த யதார்த்தத்தைக் காட்டும் வகையில் விக்ரமினது தொலைபேசியில் அவரது காதலி மதுமிதா பதிவு செய்திருந்த தகவலுடன் நாவல் ஆரம்பமாகின்றது. இதனையடுத்து நாவலில் விறுவிறுப்புத் தன்மை மெல்ல மெல்லக் கூடிக் கொண்டே செல்கின்றது. இனி வாசகர்கள் நாவலை வாசித்து முடிக்காமல் விடமாட்டார்கள் என்ற நிலைக்கு மிகவும் சாதுர்யமாக நூலாசிரியர் குரு அரவிந்தன் தனக்கே உரித்தான பாணியில் வாசகர்களைக் கட்டிப் போடுகிறார். திடீரெனக் கதையின் திசை மாறுகிறது. நாவலை நகர்த்திச் செல்லுவதற்குக் கையாளும் யுக்திகள் பிரமாதம். போராட்டம் நிறைந்த காதலினைச் சித்தரிப்பதாகவும் பணத்தாசை பாசத்தை மறைக்கும் இயல்பான நிலையையும் நன்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது மொத்தத்தில் அனைவரும் விரும்பிப் படிக்கத்தக்க ஓர் அருமையான நாவல். – கவிஞர் சுரேஸ் அகணி
 
சொல்லடி உன் மனம் கல்லோடி?
 
உதயன் பத்திரிகையில் வெளிவந்த தொடரான ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’ என்ற இவரது நாவல் ‘சிவரஞ்சனி’ என்ற பெயரில் இந்திய – கனடிய கூட்டுத் தயாரிப்பில் திரைப்படமாக்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ்நாட்டில் சேலம் தமிழ் சங்கம் ‘சொல்லடி உன் மனம் கல்லோடி’ என்ற குரு அரவிந்தனின் நாவலை 2020 ஆம் ஆண்டு சிறந்த நாவலாகத் தெரிவு செய்திருக்கின்றது. ‘இசையையும் பரதநாட்டியத்தையும் கருப்பொருளாகக் கொண்ட இளம் கலைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்துக் காட்டும் நாவலாக இருக்கின்றது. வெளியுலகிற்கு அவர்கள் புகழ் பெற்ற கலைஞர்களாகத் தெரிந்தாலும், அவர்களும் உணர்வுகளோடு வாழும் மனிதர்கள்தான் என்பதை அழகாகச் சித்தரிக்கும் புதினமிது. வாசித்துப் பாருங்கள், கலையை விரும்பும் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் பிடிக்கும்.’ என்கிறார் கனடா கலைமன்றம் நடனக்கல்லூரி அதிபர் நிரைஞ்சனா சந்துரு.  
 
 
நடன இசைப்பிரியர்களுக்கு இந்த நாவல் ஒரு வரப்பிரசாதம். இசையால் வசமாகும் இதயங்களுக்கு, இந்த நாவலில் கொட்டிக்கிடக்கும் பரதநாட்டியம், இசை பற்றிய குறிப்புகள் போனஸ் மட்டுமல்ல, கனடாவில் பிறந்து வளர்ந்த, புதிய தலை முறையைச் சேர்ந்த ஐஸ்வர்யா சந்துரு இந்த நாவலின் அட்டைப்பட நாயகியாக உயிர் பெற்றிருக்கின்றார். எளிமையான நடை. மனதில் வந்துபோகும் பாத்திரங்கள். நீண்ட நாட்களின் பின்னர் நல்லதொரு குடும்பப் படம் பார்த்தது போன்ற மன நிறைவு நாவலைப் படித்தபோது ஏற்பட்டது. என்று குறிப்பிடுகின்றார் அவுஸ்ரேலிய எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்.
 
‘குரு அரவிந்தனின் ஆக்கங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, ‘தமிழர் பண்பாட்டில் பயிற்றப்படாத பண்புநிலைகளைத் தமிழர் இயைபாக்கம் செய்ய முற்படும்போது ஏற்படும் இன்னல்களை ஆசிரியர் எழுத்திலே பதிவு செய்துள்ள புனைதிறன் பாராட்டிற்குரியது. மனித வாழ்வில் காதல் ஒரு பருவத்திலே தோன்றும் உடலின் உன்னுதல் என்பதை ஆசிரியர் பல இடங்களில் புலப்படுத்தியுள்ளார். ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமாக வாழ்வும் இந்நாட்டிலே எனப் பாரதி காட்டிய புதுமைப் பெண்களின் போக்கிற்குப் புலம்பெயர் நாட்டு வாழ்க்கை வாய்ப்பாக இருப்பதையும் பல இடங்களில் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கூடாகத் தமிழ்ச் சமூகத்திற்கு மறைமுகமாக ஆசிரியர் ஒரு செய்தியையும் சொல்ல விழைகிறார். பால் சமத்துவம் இயற்கை மனிதனுக்கு அளித்துள்ள விழுமியங்களைத் தகர்த்துவிடக்கூடாது.  அது மனித வாழ்வியலில் குறிப்பாகக் குடும்ப வாழ்வியலில் குழப்பத்தையே தரும். பெண்மையின் பண்பு நலன் பேணப்பட வேண்டும்.  அதன் வழிகாட்டல் என்றும் தேவை என்பதைப் பல இடங்களில் நினைவூட்டியுள்ளார். வருங்கால எழுத்தாளர்களான புலம்பெயர் தமிழரின் தலைமுறைகள், பண்டைய செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் படிக்க முன்னர் நவீன இலக்கியங்களை நாடுவர். அவர்களுக்கு குரு அரவிந்தனின் கதைகள் நல்ல ஆற்றுப்படை நூல்கள். அதுமட்டுமன்றி நாங்களும் தமிழில் இலக்கியம் படைக்கலாம் என்ற நம்பிக்கையை ஊட்டும் விண்மீன்கள். அவர்கள் வாழும் சூழலில் நடமாடிய கதை மாந்தரை அடையாளம் கண்டுகொள்வர். ஈழத்து இலக்கிய வரலாற்றில் இணைந்திருக்கும் புலம் பெயர் இலக்கியம் கனடியத் தமிழ் இலக்கியம் என்ற புதிய மரபின் தொடக்கத்திற்கான ஒரு அடித்தளமாக அமைய குரு அரவிந்தன் முக்கியமாகப் பங்காற்றியுள்ளதை அடுத்த தலைமுறையினர் நன்குணர்வர்.’ என்று குறிப்பிடுகின்றார் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்.
 
‘குரு அரவிந்தனின் தமிழ் நடை ஏனைய ஈழத்தமிழ் எழுத்தாளர்களிலிருந்து வேறுபட்டது. சகல வாசகர்களையும் சென்றடையக்கூடிய பொதுத்தமிழ் என்னும் ஒரு வகையை மேற்கொண்டு வெற்றிபெற்ற எழுத்தாளர் சிலருள் குரு அரவிந்தனும் ஒருவர்’ என்று எழுத்தாளர் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம் குறிப்பிடுகின்றார். ‘தொழில்நுட்ப, அறிவியல்சார் பார்வை கொண்ட இவரது அறிவு நுட்பத்தை எழுத்தாளர் சுஜாதாவின் மேதாவிப் படைப்புக்களுடன் முனைவர் கௌசல்யா சுப்பிரமணியன் ஒப்பிட்டிருப்பது குரு அரவிந்தனுக்குப் பெருமை சேர்க்கின்றது. குரு அரவிந்தன் போன்ற எழுத்தாளர்கள் எமது வரலாற்று உண்மைகளை இழைத்து இதுபோன்ற நவீன நாவல்களுடாகக் கொண்டு வரும்போது அவர் கல்கியின் இடத்திற்குத் தன்னை உயர்த்திக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. தடைகளை வென்று வெற்றி கண்ட புலம்பெயர் எழுத்தாளர் குரு அரவிந்தனின் தமிழ் இலக்கிய சேவை வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்.’ என்று முனைவர் பார்வதி கந்தசாமி குறிப்பிடுகின்றார்.
 
குரு அரவிந்தனிடம் நல்ல கதை சொல்லும் வல்லமை இருக்கின்றது என்பதை அறிந்து கொண்டேன். நூலில் உள்ள சில கதைகள் காதற்கதைகளாக இருந்தாலும், காதலுக்கு அப்பால் நல்ல சமூகப் பயனுள்ள செய்திகளைத் தருகின்றன. ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து அமைக்கும் குடும்பங்களுக்கு மாற்றாக ஒரு பாலினச் சேர்க்கைக் குடும்பங்கள் மேலை நாடுகளில் தோன்றி வரும் நிலையை மிக அழகாகவும், நுணுக்கமாகவும் சொல்லும் உங்கள் கதைகளை பாராட்டுகின்றேன். பெண்களின் மார்புப் புற்று நோய் நேரத்தோடு கவனிக்கப்பட வேண்டும் என்ற செய்தியை மற்றொரு காதற்கதை தருகின்றது. நூலில் இறுதியாக உள்ள கதை மிகவும் அருமை. வீட்டில் ஒரு நிலா காத்திருக்க வானத்து நிலாவிற்கு ஏங்கி வாழ்வைத் தொலைக்கும் பலருக்கு அருமையான செய்தி சொல்லும் கதையிது. கட்டிளமைப் பருவத்தினரைக் கவரும் எண்னம் கதைகளில் இருந்தாலும் அவர்கள் பயனடையும் செய்தியைத் தரும் இத்தகைய கதைகளை நீங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டும். உங்கள் எழுத்துப்பணி மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகின்றேன். – கோகிலா மகேந்திரன்.
 
பத்துப் பனிரெண்டு பக்கங்களுக்குள் எழுதப்படும் சிறுகதையானது வாழ்வின் ஏதாவதொரு நிகழ்வைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் பார்த்து, அதன் வழியே நம் சிந்தனைக்குள் சில கேள்விகளை எழுப்பிட முடியும். அப்படியான கேள்விகளை எழுப்பும் கதைகளாக எழுத்தாளர் குரு அரவிந்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன்.எழுத்தாளர் குரு அரவிந்தனின் கதைகளில் பேசப்பட்ட சமூக அக்கறையுடன் கூடிய கேள்விகள் எனக்குள் தொக்கி நிற்கின்றன. என் அன்றாட செயல்களின் ஒவ்வொரு நொடியிலும் குரு அரவிந்தனின் கதைகளின் பேசுபொருளும் கதாமாந்தர்களின் அறிவார்ந்த உரையாடலும்,  அதைவிட்டு லிலகமுடியாமல் மீண்டும் மீண்டும் உள்ளெழுந்து கொண்டேயிருக்கின்றன. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன்; இந்நூலைப் படித்ததும் எழுத்தாளர் குரு அரவிந்தனின் முன்னிருக்கை வாசகனாகிப் போனேன் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. எழுத்தாளர் மு.முருகேஷ்
 
குரு அரவிந்தனின் கதைகளைப் பல லட்சம் பேர் வாசித்திருக்கிறார்கள் என்பது அவரது பலம், அவரது நேர்மறை எண்ணங்கள் தரும் சிந்தனைகளும்,அவற்றின் அடி நாதங்களும் மனதிற்கு ஆறுதல் தருபவை. ஆந்தவகை ஆறுதல் எண்ணங்களைக் குரு அரவிந்தன் விதைத்துக் கொண்டே இருக்கின்றார். – எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
 
கனடிய பத்திரிகைகளில், இணையத்தளங்களில் வெளிவந்த சிறுகதைகள் பற்றியும், தொடர்கள் பற்றியும் சில சான்றோர்கள் குறிப்பிட்டதை இங்கே எடுத்துக் காட்டியிருக்கின்றேன். வரலாற்றை எடுத்துச் சொல்லும் ஆவணங்களாக  இந்த ஆக்கங்கள் என்றும் நிலைத்து நிற்கப் போகின்றன. குரு அரவிந்தனுக்குப் பரந்துபட்ட உலகளாவிய வாசகர்களை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை ஆனந்தவிகடனுக்கும், கனடாவில் உதயன் பத்திரிகைக்கும் உண்டு. புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் கனடிய பத்திரிகைகளும், இணைய இதழ்களும் ஆற்றிக் கொண்டிருக்கும் இந்த அரிய சேவை, பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.
 
சுலோச்சனா அருண்.
செயலாளர், குரு அரவிந்தன் வாசகர் வட்டம்.
09-02-2022
Series Navigationதற்காலத்தில் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் பற்றியதான ஒரு பகிர்வுஇந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *