கம்பன் காட்டும் சிலம்பு

author
0 minutes, 2 seconds Read
This entry is part 11 of 18 in the series 12 பெப்ருவரி 2017

                                        .கி.வரதராசன்

மாணிக்கப் பரல் உடையவை கண்ணகியின் காற் சிலம்புகள். மாறாக,  பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் முத்துப் பரல் கொண்டவை,  இதை நாம் அனைவரும் அறிவோம். இந்தப் பரல் வேறுபாடுதான் சிலப்பதிகாரத்துக் கதையின் ஆணிவேர் என்பது மறுக்க முடியாத உண்மை.

பரல்களில் வேறுபாடு காட்டி, ஒரு மாபெரும் காப்பியத்தை இளங்கோ அடிகள் படைத்துள்ளதைப் போல, கம்பனும் தன்னுடைய காப்பியத்தில் மிக மிக வேறுபட்ட ஒரு வகைப் பரலைக் கொண்ட சிலம்பைக் காட்டுகிறான். கம்பன் காட்டும் சிலம்பின் உள்ளே வைக்கப் பட்டுள்ள பரல் நம்மால் எந்த விதத்திலும் கற்பனை கூட செய்யவொண்ணா வகையில் அமைந்துள்ளது.

அவன் கவிச் சக்ரவர்த்தி அல்லவா? எனவே அவன் காட்டும் சிலம்பின் உள்ளிருக்கும் பரல்கள் மிகவும் வித்தியாசமான வகையிலும், மிகவும் சிறப்புடையதாகவும்  தானே இருக்க வேண்டும்.

ஆம்! கம்பன் காட்டும் சிலம்பின் உள்ளே வைக்கப்பட்டுள்ள பரல்கள் மலைகள்! ஆமாம் இது மெய்தான். மலைகளைப் பரல்களாக உள்ளே வைத்துக் கட்டிய சிலம்புகளை அணிந்த பாத்திரம் ஒன்றைக் கம்பன் படைத்துள்ளான். மலை என்பதைச் சுட்ட, கம்பன் பயன்படுத்தும் சொல் சிலம்பு”. 

சிலம்பு என்ற சொல்லுக்கு, நாம் எல்லோரும் நன்கு அறிந்த, மகளிர் தம் கால்களில் அணிகின்ற ஒரு அணிகலன் என்ற பொருள் அன்றி, மலை என்ற பொருளும் உண்டு.

இப்படி மலைகளைப் பரல்களாக உள்ளே வைத்துள்ள சிலம்பை ஒரு பாத்திரம் அணிய வேண்டும் என்றால், அப்பாத்திரத்தின் உடல் பரிமாணத்தை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். அப்பாத்திரத்தின் உடல்வாகு, உயரம், பருமன், மார்பு விஸ்தீரணம், உடல் எடை போன்ற அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக, அந்தக் கற்பனை அமைய வேண்டும். கற்பனையில் குறிப்பாக அப்பாத்திரத்தின் கணுக்கால்  எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

அந்தக் கால்களுக்குக் செறித்த என்ற அடை மொழியைக் கம்பன் தருகிறான்.  ”செறிதல்” என்ற சொல்லுக்கு அகர முதலி பல பொருள்கள் தருகின்றது. அவற்றுள் சில :- மிகுதல், திரளுதல், இறுகுதல், பொருந்துதல் என்பனவாகும். ஆக,  மிகவும் திரண்ட, இறுகிய, இத்தகையை சிலம்பை அணிவதற்குப் பொருத்தமான, மிகப்பருமனான, காலை உடைய பாத்திரம் அது. எனவே இந்தச்சிலம்பை அணிந்த கால்களைக் கம்பன் செறித்த கழல் எனச் சுட்டுகிறான்.

சிலம்பு அணிந்த பாத்திரம் என்பதால் அது ஒரு பெண்பாத்திரம் என்பது புலனாகிறது.

கழல் என்பது காலில் அணியும் ஒரு ஆபரணம். பொதுவாக ஆண்கள் அணிவது. பெண்கள் காலில் அணியும் ஆபரணத்தைச் சிலம்பு என்று குறிப்பிடுவது தான் மரபு. கழல் என்ற சொல்லை அங்கே பயன் படுத்துவது இல்லை.

(கழல் என்பது காலில் அணியப்படும் அணிகலனாக இருந்தாலும், அது அணியப்படும் உடல் உறுப்பான  பாதத்தை,  அச்சொல்லால்  சுட்டும் வழக்கம் காலம் காலமாக இலக்கியத்தில் தொடர்ந்து வருகிறது.) 

இப்பெண்பாத்திரம் செறித்த கழல் உடையவள். இதிலேயே, முரண் ஒன்றைத் தெளிவாகக் கம்பன் காட்டிவிடுகிறான். கழல் என்ற சொல்லைப் புகுத்தி, ஆண்மை மிகுந்த (சொல்லப்போனால் பெண்மை இல்லாத) பாத்திரம் என்பதை நன்கு தொனிக்க வைக்கின்றான் கம்பன்.

ஆக அவன் வடித்துள்ள பாடலின் முதல் அடி,

சிலம்புகள்  சிலம்பிடை  செறித்த  கழலோடும்

 

என்று அமைகிறது.

மலைகளைப் பரல்களாகக் கொண்ட சிலம்புகளைத் தன் கால்களில்  அணிந்து கொண்டுள்ள  அப்பாத்திரம் நடந்து வருகின்றது. அடிமேல் அடி எடுத்து வைக்கிறது. மேரு மலை போன்ற வடிவுள்ள- (மிகுந்த  உடல் எடையுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்) – இப்பாத்திரம் ஒரு அடி முன்  எடுத்து வைத்ததும், அதன் பாதம் பதிந்த இடம் அப்படியே நிலத்திற்குள்ளே மிக ஆழமாக அமுங்கிப் போய் விடுகிறது. ”நிலம் புக என்று இதனைக் கம்பன் பதிவு செய்கிறான். சிலம்புகள் அணிந்த பாத்திரம், எனவே பெண் பாத்திரம் என்பது ஐயத்திற்கு இடமின்றிக் புலனாகும் வண்ணம், ”நிலம் புக மிதித்தனள் என்று பாடல் எழுதுகிறான் கம்பன்.

இவ்வாறு அப்பத்திரம் அடி எடுத்து வைக்க, அதன் காலடி பட்ட இட்த்தில் மாபெரும் பள்ளம் ஒன்று உண்டாகி விடுகிறது.  மிகப் பெரிய பள்ளம் இவ்வகையில் ஏற்பட்டு விடுவதால் அந்தக் குறிப்பிட்ட இடம் கடல் மட்டத்தை விட மிகவும் கீழே போய், பெரிய ஒரு குழியாகி விடுகிறது. இதனால், அக்குழிக்குள் மிக வேகமாக வந்து நீர் சேர்ந்து, அந்தக் குழியை நிரப்பி விடுகிறது. இதனைக் கம்பன் குறிப்பிடும் விதம் : ”நெளித்த குழி வேலைச்  சலம் புக” . ( வேலை = கடல்; சலம் = நீர் வடமொழியின் ஜலம் இங்கே சலம் )  நெளிதல் என்ற சொல்லுக்கு அகர முதலி தரும் பல பொருள்களில் சில: சுருளுதல், குழிதல், அதுங்குதல் ஆகியவையும் அடங்கும்.

வேலைச் சலம் என்று சொல்வதால்,  கடல் நீர் வந்து புகுந்தது என்று பொருள் கொள்ளாமல், அக்குழிக்குள் வந்து சேர்ந்த நீர், கடல் நீரை ஒத்த அளவில் அமைந்தது என்று பொருள் கொள்வது சிறப்பானது. 

இந்தப் பாத்திரம் நடந்து வர, அது ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், அந்தக் காலடி பட்ட இடத்தில் எல்லாம்  கடலளவில்  நீர் வந்து புகுந்து விடுகிறது. இந்த நிகழ்வால், பூமியின் நடுநிலை (Equilibrium)  மாறிவிடுகிறது.   இப்பாத்திரம் நடக்க,  நடக்க,  அது முன்னேறிச் செல்லும் இடமெல்லாம் அதல பாதாளத்திற்குச் செல்ல, அதன் பின்னே உள்ள நிலப்ப் பகுதியிலும் மாபெரும்  மாற்றம் ஏற்படுகின்றது.  முன்பகுதி பள்ளம் ஆக ஆக பின் பகுதியில் இருந்த மலைகள் எல்லாம் பெயர்ந்து விடுகின்றன. இவ்விதம் நிலத்திலிருந்து பெயர்ந்த அவை, முன்புறம் பள்ளமாக உள்ள படியால், அந்தப் பள்ளத்தை நோக்கி உருண்டு ஓடி வருகின்றன.  நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்  என்பது கம்பனின் கவி. கிரி என்பது மலை.  நீலகிரி, சதுர கிரி என்று அச்சொல் இன்றும் வழக்கிலே உள்ளது.

மலைகள் எல்லாமே நிலத்தில் தானே உள்ளன. அப்படியிருக்க நிலக்கிரிகள்  (நிலத்தில் உள்ள மலைகள்) எனக் கம்பன் ஏன்  இவ்விதம் குறிப்பாகச் சொல்கிறான் என்ற கேள்வி எழலாம். ஒருசில மலைகள் இப்பாத்திரத்தின் சிலம்பில் பரல்களாக அமைக்கப்பட்டு விட்டன. அவற்றைத் தவிர்க்கும் வண்ணம், அவற்றிலிருந்து வேறுபட்ட இந்த மலைகளை நிலக்கிரிகள் என்று குறிப்பிட்டுச் சொல்கிறான் கம்பன்.  அவனல்லவோ கவிச்சக்ரவர்த்தி!.

இப்பேர்ப்பட்ட மாபெரும் மாற்றங்கள் புவியில் நிகழ்வதைக் கண்ட ஒருவன், மிகுந்த அச்சம் அடைந்து, அங்கிருந்த குகை ஒன்றில் போய் பயந்து ஒளிந்து கொள்கிறான். அவன் வேறு யாருமில்லை. யமன் தான். இந்தப்பாத்திரம் நடந்து வரும் தோரணையைக் கண்டதனால்,  அவள் நடந்து வருவதால் பூமியில் நிகழந்த மாற்றங்களைப் பார்த்ததால், அஞ்சி யமன் ஓடிப்போய் அங்கிருந்த குகை ஒன்றில் மறைந்து கொள்கிறான் ”அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப் பிலம் புக, ( தறுகண் = கொடுமை) என்கிறான் கம்பன். நெருப்புப் போன்ற கொடுமை உடையவன் தான் யமன். அவன் அப்படி கொடுமை உடையவனாக இருந்த போதும், அவன் இப்பெண்ணைப் பார்த்து அஞ்சி குகையில் ஒளிந்து கொண்டான் என்று பாடல் வடித்துள்ளான் கம்பன்.

 

அந்தப் பெண் பாத்திரம் தாடகை.

 

முழுப் பாடலும் இதோ:  ( பாலகாண்டம்- தாடகை வதைப் படலம்- பாடல் எண் 30)

 

சிலம்புகள் சிலம்பிடை செறித்த கழலோடும்

நிலம் புக மிதித்தனள்; நெளித்த குழி வேலைச்

சலம் புக, அனல் தறுகண் அந்தகனும் அஞ்சிப்

பிலம் புக, நிலக் கிரிகள் பின் தொடர, வந்தாள்  ( 368)

 

கம்பனின் சிலம்பு, மிக நன்றாகவே சிலம்புகிறது அல்லவா?

 

Series Navigationஇளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *