கரோனாவை சபிப்பதா? ரசிப்பதா?

author
8
0 minutes, 3 seconds Read
This entry is part 14 of 14 in the series 26 ஏப்ரல் 2020

நவின் சீதாராமன், அமொிக்கா

உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன. வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள். பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது. சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது. வாடிக்கையாளர்களின் மூலம் வரும் ‘டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம். ஆனால், தற்போது உணவகங்களில் உணவு பரிமாற முழுவதுமாகத் தடை. பிறகெங்கே பரிமாறுபவர்கள் பிழைப்பது? வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன. உணவுப்பொருட்கள் அல்லாத பிற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் சில கடைகள் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமல், அவர்களுக்கு வேண்டிய பொருட்களை இணையத்தின் வாயிலாகக் கோரச் செய்து, அவைகளை கடைகளின் பணியாளர்கள் மூலம் வாசலிலேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறார்கள். இவற்றிற்கெல்லாம் பிரதானக் காரணம் மக்கள் நடமாட்டத்தின் மூலம் நோய் பரவாமல் இருக்கவும், கரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும்தான். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் அளவோடு விற்கப்படுகின்றன. பால், ரொட்டி, முட்டை, தண்ணீர், சோடா போன்றவைகள் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவுதான் என்ற நிலை. மீன், கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டன. பொதுவாக வருட இறுதியில் வரும் “தேங்க்ஸ் கிவிங்” என்று சொல்லப்படுகிற பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் வான் கோழி இறைச்சி இப்போதே விற்பனைக்கு வந்து விட்டன. இறைச்சி இறக்குமதியும், இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் விற்பனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் கூடுதலாக வாங்கி, சேமித்து வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கழிவறைப் பொருட்கள், கிருமி நாசினிகள் போன்றவற்றைக் கடைகளில் பார்த்து பல நாட்களாகிவிட்டது.  குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் குறைந்துகொண்டே வருகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே இயங்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர். சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. ஆயிரமாயிரம் கார்கள் பறக்கும் அதிவேக சாலைகளில் ஐம்பதுக்கும் குறைந்த கார்களேயே பார்க்க முடிகிறது. அனைவர் கண்களிலும் மரணபயம் தொிகிறது. செல்லப் பிராணிகளை, வெளியில் அழைத்துச் சென்று காலாரக்கூட முடியாமல் கதி கலங்கிக் கிடக்கின்றனர். தவிர்க்க இயலாமல் கடைகளுக்குச் சென்றாலும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஆறு அல்லது ஏழு அடி இடைவெளியில் நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பரிதாபத்தை நினைக்கையில், அவர்கள் எண்ண ஓட்டத்தில் இப்படித்தான் சிந்தனை ஓடுமோ எனத் தோன்றுகிறது. அது “சாகப்போவது முதலில் நீயா அல்லது நானா” என்பதுதான். யாரைப் பார்த்தாலும் இவருக்குக் “கரோனா இருக்குமோ” என்ற சந்தேகமே தோன்றுகிறது. இப்படியே போனால் இன்னும் எத்தனை நாட்கள் நாம் உயிரோடிருக்கப் போகிறோம் என்ற மரண பயம் ஒரு புறம். பெற்றோர்கள் தன் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குழந்தைகளை யார் காப்பாற்றுவார் என்ற ஏக்கத்தை ஒவ்வொருவர் கண்களிலும்  காண முடிகிறது. காரணம் நாளுக்கு நாள் வேகமாய்ப் பரவி வரும் கரோனா புள்ளி விவரங்களே!

இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இந்த நிலை?

யார் ஒருவர் இயற்கைக்கு புறம்பான ஒன்றைச் செய்தாலும் ஒட்டு மொத்த உலகமும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. அந்தப் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஏனெனில் மனிதனைத் தவிர வேறெந்த ஜீவராசியும் இயற்கைக்குப் புறம்பானவற்றைச் செய்வதில்லை. இந்தப் பிரபஞ்சத்தில், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏன் இயந்திரங்களுக்கும்கூட ஓய்வு என்பது மிக மிக அவசியம். இப்படி பிரபஞ்சம் தொடங்கி இயந்திரம், செடி, கொடி, மரம், மனிதர்கள் என அனைத்து ஜீவன்களுக்கும் இயற்கை கொடுத்த தற்காலிகக் கட்டாய ஓய்வுதான் இந்தக் கரோனா தந்த  ஓய்வு. யாரோ, எங்கோ ஒரு மூலையில் செய்த தவற்றின் காரணமாக இன்றைக்கு ஒட்டு மொத்த உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. பீதியில் கிடக்கிறது. வரலாறு காணாத இழப்பு. ஒவ்வொரு வினாடியும் யார் பிழைக்கப்போகிறோம், யார் உயிரோடு இருக்கப்போகிறோம் என்று மரணத்தை நோக்கி நிற்கும் மனிதக்கூட்டத்தின் வரிசையில் எப்படியும் நாம் பிழைத்து விடுவோம் என்ற அசட்டு நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறோம். பிழைப்போமா அல்லது இருப்போமா? போராடினாலும் சாவோம், போராடா விட்டாலும் சாவோம் ஆனால், போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. அதனால் நாம் போராடத் தயாராவோம் ! உயிரோடு இருந்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? தொடர்ந்து வாசியுங்கள் !

உங்கள் வயது இருபதோ, எழுபதோ அல்லது இடைப்பட்டதோ ! நில்லுங்கள் ! நன்றாக மூச்சை இழுத்து விடுங்கள். நீங்கள் இதுவரை பின்னங்கால்கள் பிடரியில் அடிக்க ஓடி வந்திருக்கிறீர்கள். இதுவரை ஓடி வந்த அந்த கரடு முரடான பாதையைச் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். பிரமிப்பாய் இருக்கிறதா? மறுபடியும் நன்றாக மூச்சை இழுத்து, அந்தப் பெரும்ம்….. மூச்சை வெளியே… விடுங்கள். இப்போது யோசித்துப் பாருங்கள்.

அதீத சக்தி படைத்தவர் நீங்கள்! ஆனால், உங்களால் வழக்கம்போல் இன்று இயங்க முடிகிறதா? முடியவே முடியாது. இயற்கை அதுவாகவே தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இந்த பிரபஞ்சத்துக்கே கொடுத்த கட்டாய ஓய்வுதான் இது. அதில் நீங்களும் அடக்கம் !

கரோனாவால் ஆயிரக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரியதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அதே சமயம் உயிர்ச்சேதம் குறைய வேண்டுமெனில் நாம் இப்போது போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டியிருக்கிறது. அதாவது நாம் செயல்படாமல் இருக்க வேண்டியிருக்கிறது. வாரத்தின் ஏழு நாட்களுக்கே இரண்டு நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. ஏன்? ஒரு பகல் என்றால் ஓர் இரவு தேவைப்படுகிறது. பன்னிரண்டு மணி நேர இயக்கத்திற்கு பன்னிரெண்டு மணி நேர ஓய்வு தேவைப்படுகிறது. நாம் ஓய்வெடுக்க நினைத்தாலும் கால ஓட்டம், விஞ்ஞான வளர்ச்சி நம்மை அனுமதிப்பதில்லை. எத்தனை வருடங்கள் நாம் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்! எத்தனை தசாப்தங்கள் இந்த பிரபஞ்சம் ஓய்வின்றி சுழன்று கொண்டே இருக்கிறது? இந்தப் பூமி தன்னைத்தானே சுத்திகரித்து, புதுப்பித்துக்கொள்ளவும், ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு உதவவும் எடுத்துக்கொண்ட கட்டாய ஓய்வுதான் இந்தக் கரோனாக்காலம்.

எதிர்மறையான எண்ணங்களை விடுத்து நோ்மறையான நிதர்சனங்களை நினைவில் ஏற்றுங்கள். உங்கள் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், தம்பி, தங்கைகள் இப்படி ஒட்டு மொத்தக் குடும்பத்தோடு உட்கார்ந்து மகிழ்ச்சியாகப் பேசிச் சிரித்து, மகிழ்ந்து எத்தனை வருடங்களாகி விட்டது. நினைத்துப் பார்த்தால்கூட நினைவில் வரவில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறோமே…. எங்கே ஓடுகிறோம்? எதற்காக ஓடுகிறோம்? ஓடி ஓடி உழைத்து நாம் அடைந்தது என்ன? பணம், புகழ், வசதி, வீடு, கார், சொத்து, சுகம், உறவு, உல்லாசம்…… இவற்றில் ஏதாவது ஒன்று இன்று உங்களைக் காப்பாற்றுமா?

உங்களைக் காப்பாற்ற ஒரு சக்தியாலும் முடியாது. ஏன்? நீங்கள் வணங்குகிற எந்தக் கடவுளாலும் முடியாது. ஆனால், உங்களால் மாத்திரமே அது முடியும். உங்களுக்கு ஓய்வு கொடுங்கள். நீங்கள் நினைத்தாலும் கிடைக்காத இந்த அற்புதமான தருணம் இனியொருமுறை கிடைக்குமா? ஓடி ஓடி உழைத்தீர்களே…. உங்கள் முதலாளிகள் உங்களுக்குத் தேவையேற்படுகிறபோது ஓரிரு நாட்களுக்கு மேல் விடுப்புத் தந்தார்களா? நீங்கள் நினைத்தபோது நிம்மதியாக உங்கள் குழந்தைகளோடு உட்கார்ந்து உணவருந்த முடிந்ததா? ஒட்டு மொத்தக் குடும்பத்தோடு ஓரிடத்தில் அமர்ந்து ஒரு மூன்று நாட்கள் முழுமையாக செலவழிக்க முடிந்ததா? முப்பதுக்கும் மேலான ஆண்டுகள் மூச்சிறைக்க ஓடியிருக்கிறீர்களே ! உங்களை ஓய்வெடுக்கச் சொல்லி உங்கள் உறவுகள், ஏன்? சில வேளைகளில் மருத்துவர்கள் அறிவுறுத்தியும்கூட உங்களால் அது முடிந்ததா?

ஆனால், இதோ…. இயற்கை அன்னை அவற்றை அள்ளி வழங்கி அனுபவிக்கப் பணித்திருக்கிறது. இதை நிராகரித்தால் நீங்கள் நிரந்தரமாகப் நிராகரிக்கப்படுவீர்கள். நன்றாக ஓய்வெடுங்கள். அம்மாவின் மடியில் தலை வைத்து சிறிது நேரம் ஓய்வெடுங்கள். அவளை உங்கள் மடியில் குழந்தையாய் பாவியுங்கள். அண்ணன் தம்பிகளோடு அரட்டையடியுங்கள். சகோதரிகளோடு சடுகுடு விளையாடுங்கள். குழந்தைகளோடு குழந்தைகளாய் குதூகளியுங்கள். மனைவியோடு மகிழ்ந்திருங்கள். பள்ளிக் கல்லூரி, பால்ய கால நண்பர்களை அலைபேசியில் அழைத்துப் பேசுங்கள். பிறகு, கைப்பேசிகளுக்கு கரோனா வந்து விட்டதால் அவைகளுக்கு ‘குவாரண்டைன்’ கொடுத்து, கொல்லைப் புறத்தில் காய்த்துத் தொங்கும் பீர்க்கங்காய், பாகற்காய், புடலங்காய்களுக்கு கற்கள் கட்டிவிட்டு கவிதை எழுதுங்கள். வாசலில் சாணம் தெளித்து அக்கா இட்ட அழகுக் கோலத்தின் நடுவில், பூசணிப்பூவை சாண உருண்டையில் வைத்தது சரியா என அம்மாவிடம் கேளுங்கள். அவள் அள்ளி முகர்வதை அகமகிழ்ந்து அனுபவியுங்கள். பற்பசை தவிர்த்து வேப்பங்குச்சியில் பல் துலக்கி கண்மாயில் குளித்துப் பாருங்கள். அந்த அனுபவத்தை அழகானதொரு சிறுகதையாய் அச்சேற்றுங்கள். சிறு வயதில் குடும்பத்தோடு மாட்டு வண்டி கட்டி, பட்டணத்து டென்ட் கொட்டகையில் பார்த்த படங்களை ஹாலில் இருக்கும் காஸ்ட்லி ஹைடெஃபெனிஷன் டி.வி.யில் பார்த்து மகிழுங்கள். பக்கத்துக் கிராமத்துப் பஞ்சாயத்து ஒலிபெருக்கியிலும், இலங்கை வானொலியிலும் வயல்காட்டில் நின்று, கேட்டு ரசித்த இசைஞானியார், மெல்லிசை மன்னரின் இசையை, வேப்பமரத்தடியில், கயிற்றுக் கட்டிலில் கண்ணை மூடிப் படுத்துக்கொண்டு நீங்களும், உங்கள் காதுகளும் மாத்திரம் கேட்டு மகிழுங்கள். அதிகாலையில் அடி வயிறு எரிய அவசர அவசரமாய் அலுவலகம் நோக்கி ஆம்புலன்ஸைவிட அதிவேகத்தில் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் எத்தனை நாட்கள் காலைச் சிற்றுண்டியை கைகழுவியிருப்பீர்கள்? இப்போது அதிகாலை எழுந்ததும் அடுப்பங்கறைக்குச் செல்லுங்கள். அமிர்தமாய் ருசிக்கும் அம்மா கைப்பக்குவத்துப் பழைய சோற்றில், கடைந்தெடுத்த மோர் கலந்து, சின்ன வெங்காயம், வறுத்தெடுத்த மோர் மிளகாய், மிதுக்க வத்தல், கொத்தரைவத்தல், பாவக்காய் வத்தல், புழுங்கலரிசிக்கூழ் வடகம், நாட்டுக்கோழி முட்டையோடு சோ்த்துப் பொறித்த பீர்க்கங்காய்ப் பிஞ்சு, சுட்ட கருவாடு, முந்தாநாள் வைத்த மொச்சை-கருவாட்டுப் பழைய குழம்பை பக்குவமாய்ச் சுட வைத்து, அனைவரும் சுற்றி அமர, நடுவில் அமர்ந்திருக்கும் அம்மா, அனைவருக்கும் பரிமாற, தரையில் சம்மணமிட்டு, உட்கார்ந்து சாப்பிடும் தருணம் இனி எப்போது வாய்க்கும். இதற்காகவாவது நாம் கரோனாவிற்கு கை கொடுக்க வேண்டாமா?

என் அன்பான தமிழுறவுகளே ! நான் உங்கள் அனைவரிடமும் கைகூப்பி வேண்டி நிற்பது ஒன்றே ஒன்றுதான். வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் என்னைப் போன்றவர்கள் உயிரோடிருப்போமா, இல்லையா என்பது இன்னும் ஒரு சில வாரங்களில், அல்லது மாதங்களில் தொிந்துவிடும். ஆனால், எங்களுக்கு ஏற்பட்டிருக்கிற உயிர் பயத்தையும், உண்மை நிலவரத்தையும் ஒப்பிடுகையில், தாயகத்தில் வாழும் நீங்கள் மிகுந்த பாதுகாப்பு வட்டத்தினுள்தான் இருக்கிறீர்கள். இன்னும் ஓரிரு வாரங்களில் பூரண நிலைக்கு வந்துவிடுவீர்கள் என்று கைதோ்ந்த மருத்துவர்கள் கவலை அகற்றியிருக்கிறார்கள். இத்தருணத்தில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

அது “ஒன்றும் செய்யாமல் இருப்பது”. சும்மா இருப்பது சுலபமில்லைதான். சுபமாய் வாழ சொற்ப நாட்களுக்கு சும்மாதான் இருப்போமே !

மரணபயத்தில் உங்களுக்காக மன்றாடி நிற்கும் எத்தனையோ புலம்பெயர்வாழ் தமிழர்களில்

நான் உங்கள் நவின் சீதாராமன் – அமொிக்கா
—————————————-

Series Navigationகரையைக் கடந்து செல்லும் நதி – ஸிந்துஜா
author

Similar Posts

8 Comments

  1. Avatar
    s.neelacantan says:

    நவீன் நீங்கள் நலமுடன் நாடு திரும்புவீர்கள்.புத்தம் புதிய சுத்தமான பூமியில் வாழப் போகிறீர்கள் நீங்கள். நல்ல உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறீர்கள். எல்லோரும் நலமாகவே இருப்போம். take care and be safe

  2. Avatar
    ஷாலி says:

    // மரண பயத்தில் உங்களுக்காக மன்றாடி நிற்கும் எத்தனையொ புலம் பெயர்வாழ் தமிழர்களில் நான் உங்கள் நவின் சீதாராமன்- அமெரிக்கா…//

    வாசல் என்றால் ஆயிரம் இருக்கும்
    வாசல் தோறும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எது வென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
    இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்.

    ஏழை மனதை மாளிகையாக்கி
    இரவும் பகலும் காவியம் பாடி
    நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
    நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

    உனக்கும் கீழே உள்ளவர் கோடி
    நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு!
    மயக்கமா…கலக்கமா..மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையில் நடுக்கமா?

    ……………

    உள்ளம் என்றும் எப்போதும்
    உடைந்து போகக்கூடாது…
    என்ன இந்த வாழ்க்கை என்ற
    எண்ணம் தோன்றக் கூடாது.

    எந்த மனித நெஞ்சுக்குள்
    காயம் இல்லை சொல்லுங்கள்
    காலப்போக்கில் காயமெல்லாம்
    மறைந்து போகும் மாயங்கள்!

    உளி தாங்கும் கற்கள்தானே
    மண் மீது சிலையாகும்
    வலி தாங்கும் உள்ளம்தானே
    நிலையான சுகம் காணும்…

    யாருக்கில்லை போராட்டம்
    கண்ணில் என்ன நீரோட்டம்
    ஒரு கனவு கண்டால்
    அதை தினம் முயன்றால்
    ஒரு நாளில் நிஜமாகும்!

    மனமே ஒ மனமே நீ மாறிவிடு
    மலையோ அது பனியோ நீ மோதி விடு!

    ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
    வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே..
    இரவானால் பகலொன்று வந்திடுமே

    நம்பிக்கையோடு நாமின்று பாடுவோமே
    கொலவெறி கொரோனோ குலை நடுங்கி ஓடிடுமே!

  3. Avatar
    BSV says:

    //உங்களைக் காப்பாற்ற ஒரு சக்தியாலும் முடியாது. ஏன்? நீங்கள் வணங்குகிற எந்தக் கடவுளாலும் முடியாது//

    இன்னினைப்பு மரண பயத்தை இறுக்கும். இளக்காது. க்ரோனாவை ஒன்றும் அவர் செய்ய மாட்டார். செய்தால், மனிதன் திருந்தவே மாட்டான். அதே சமயம், தனிமனிதன் விரும்பினால் அவனுடன் தொடர்பில் இருப்பார். சிலர், விரும்பாமலும் இருப்பார் என்பார்கள். தட்டுங்கள் திறக்கப்படும் என்பவரும் தட்டாமலேயே கூட திறக்கப்படும் என்பவரும் உண்டு. இரண்டுமே சரி. அவரவர் கடவுளை அவரவர் நம்ப வேண்டும்.

    மரணமே நிச்சயம் என்றிருப்பவர்களும் (டைட்டானிக் படத்தில் பார்த்திருக்கலாம்); குஷ்டரோக காலனிகளிலும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கிடையாது. நான் அப்படியொரு காலனி அருகில் வாழ்கிறேன். கிருத்துவ, இசுலாம், சாய்பாபா, சிவன் என்று எல்லாருக்கும் கோயில் உண்டு. பண்டிககளும் பூஜைகளும் கனஜோர். ஆனால் கையும் இல்லை. காலும் இல்லை. அழுகிவிட்டன. குட்டரோகிகள் கூட்டம் நிறைந்த கோயில்களை கடந்து செல்லும்போது, இவர்களுக்கு இருக்கும் கடவுள் பிடிப்பு எனக்கில்லையே என்று பொறாமைப்படுவதுண்டு. உங்கள் பிரச்சினைக்குக் காரணமே நீங்கள் எழுதி நான் காட்டிய வரிகள்தான்.

    உங்களைப் போன்றவர்களுக்கு ஒரே வழி: ஊரடங்கு இல்லை. வீடடங்கு மட்டுமே. எப்பவும் இறைவனைத் தியானம் பண்ணச்சொல்லவில்லை. கடவுள் வியாபாரம் செய்யும் கபோதிப்பயலுகளை நம்பச்சொல்லவில்லை. ஆனால் இறையருள் உண்டு தனக்கு என்ற உள்ளுணர்வு போதும். The habit of despair is worse than despair itself என்பார் அல்பர்ட் காமஸ். எப்போதாவது எதற்காவது டிஸ்பேர் இருக்கலாம். மாசக்கணக்கில் …வருஷக்கணக்கில்? கரொனா வராமலேயே செத்துவிடுவான் எனபதுதான் காமஸ் சொல்வது.

    கடவுளிடம் உண்மையான நிரந்தர நம்பிக்கை மனோபலம் தரும். நிம்மதி உருவாக்கும் என்று நான் சொல்லவில்லை. பேரறிஞர்களும் நம்மவூர் சாமியார்களும் சொல்கிறார்கள்.

  4. Avatar
    BSV says:

    அமெரிக்காவோடு பிறனாடுகளை ஒப்பிடமுடியாது. டிசம்பரிலே பலர் இறக்க அரசு கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் க்ரோனா அட்டாக என்று பிப்ரவரியில் தெரிய அப்பவும் துரித நடவடிக்கை இல்லை. அமெரிக்க‌ பாமர ஜனங்களுக்கு இந்தியா, பிரிட்டன் நாடுகளில் கிடைக்கும் இலவச மருத்துவ சிகிச்சை இல்லை. ந்யூ யார்க் சாவு எண்ணிக்கைக்கு இதுவே காரணம். மற்றும் crona வைரஸ் strain வேறுவகை. அது விரைவில் பரவும் தன்மை கொண்டது. தமிழ்னாட்டு ஸ்ட்ரெயின் வேறு. அடக்க முடியும். தொலைகாட்சி செய்திகள்; செய்தித்தாள்கள் தவிருங்கள். It will spike your despair.

    ஜனரஞ்சக நிகழ்ச்சிகள் மட்டும் பாருங்கள்

  5. Avatar
    நவின் சீதாராமன் (நவநீ - திண்ணை) says:

    தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சகோ! தொடர்ந்து என்னுடைய பதிவுகளை வாசியுங்கள். ‘நவநீ’ என்ற பெயரிலும் எழுதுகிறேன். குறிப்பாக பழைய திண்ணையில் என் பதிவுகள் நிரம்ப உள்ளன. மகிழ்ச்சி…. நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் :)

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *