கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்

author
0 minutes, 16 seconds Read
This entry is part 7 of 13 in the series 8 நவம்பர் 2020


அழகர்சாமி சக்திவேல்


கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம்
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்,
மலை கெழு நாட மா வண் பாரி,
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என்
புலந்தனை ஆகுவை புரந்த யாண்டே  
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது,
ஒருங்கு வரல் விடாஅது ‘ஒழிக’ எனக் கூறி,
இனையை ஆதலின் நினக்கு மற்று யான்
மேயினேன் அன்மையானே, ஆயினும்,
இம்மை போலக் காட்டி, உம்மை  
இடை இல் காட்சி நின்னோடு
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே. (புறநானூறு 236)


லண்டனில் இருக்கும் அந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அரங்கம், டென்னிஸ் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இது பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டி. விறுவிறுப்பான அந்த இறுதிப்போட்டியில், ஒரு புறம் தமிழகத்தின் சங்கவை டென்னிஸ் மட்டையோடு, ஆவேசமாய் நின்று கொண்டு இருக்கிறாள். எதிர்ப்புறத்தில், அமெரிக்காவின் ஸ்டெல்லா வில்லியம்ஸ், தனது மட்டையோடு, புலியாய் உறுமிக்கொண்டு, சங்கவை போடும் பந்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறாள். 


ஏற்கனவே இரண்டு சுற்றுக்கள் முடிந்து விட்டன. ஒரு சுற்றை, சங்கவை வென்று இருந்தாள். இன்னொன்றை ஸ்டெல்லா வில்லியம்ஸ் கைப்பற்றி இருந்தாள்.  இறுதிச் சுற்றுதான், இப்போது நடந்து கொண்டு இருக்கிறது. 


இந்த முறை, சங்கவை ஆரம்பித்தில் இருந்தே விட்டுக்கொடுக்காமல் ஆடினாள். டென்னிஸ் ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையில், யுத்தகளமாய் மாறியிருந்த அந்த அரங்கத்தில், இப்போது செட் நிலவரம் 5-3 ஆகும். 


5 செட்கள் கைப்பற்றிய சங்கவை, இன்னும் ஒரு செட் எடுத்தால் போதும். விம்பிள்டன் வெற்றிக் கேடயம் அவளுக்குத்தான். கடைசி செட் ஆன இந்த செட்டில், தான் போட்ட, நான்கு சர்வீஸ்களில், மூன்று சர்வீஸ்களை ஆவேசமாக அடித்து வெற்றி பெற்ற சங்கவை, இப்போது செட் புள்ளிகளை 40-15 என்று, தனது வெற்றிக்கு சாதகமாக வைத்து இருக்கிறாள். 


இதோ அந்தக் கடைசிப் பந்துடன், சங்கவை உக்கிரமான, ஒரு சர்வீஸ் போட, மட்டையை உயர்த்தி விட்டாள். அரங்க ரசிகர்கள், தங்களது மூச்சை உள்ளுக்குள் இழுத்துகொண்டு, அமைதி காத்தார்கள். 


சங்கவை, ஆவேசமாக சர்வீஸும் போட்டு விட்டாள். பீரங்கியில் இருந்து, குண்டு போல் வந்த அந்தப் பந்தை, ஸ்டெல்லா வில்லியம்ஸால் தொடக்கூட முடியவில்லை. 


“வாவ்” அரங்கமே இப்போது சங்கவையைப் பார்த்து எழுந்து நின்று கைத்தட்டுகிறது. ஆம் சங்கவை வெற்றிபெற்று விட்டாள். 


சந்தோசத்தில் மட்டையை உயரே தூக்கிப் போட்ட சங்கவை, குனிந்து அரங்கத்து மண்ணை முத்தமிட்டாள்.  இதோ, அவளுக்கு வெற்றிக்கேடயம் கொடுக்கும் நிகழ்ச்சியும் ஆரம்பம் ஆகிவிட்டது. 


அரங்கத்தின் நிருபர் இப்போது கேள்வி கேட்கிறார். “உலகத்தின் மாபெரும் டென்னிஸ் வீராங்கனை ஆகி விட்டீர்கள் சங்கவை. உங்களின் இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?”. 


சங்கவை, நிறுத்தி நிதானமாகப் பதில் சொன்னாள். “எனது இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்கக் காரணம் எனது கபிலர் மாமாதான். உண்மையில் அவர் எனக்கு மாமா அல்ல. அவர் எனக்கும், எனது அக்கா அங்கவைக்கும், ஒரு பாசமுள்ள தாய்”. சொல்லிக்கொண்டே அழுதாள் 

சங்கவை. அரங்கமே கைதட்டியது. சிலர் சங்கவைக்காக அழுதார்கள். 


அவர்கள் மட்டுமல்ல. எனது வீட்டில் உட்கார்ந்து, விம்பிள்டன் டென்னிஸ் நிகழ்ச்சியை, தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்த, நானும் அழுதேன். நான், அழுதுகொண்டே, பாரியின் புகைப்படம் அருகே சென்றேன். 


“என் ஆருயிர்ப் பாரி.. உன் கனவுகளை, இந்தக் கபிலன், சொன்னபடியே நிறைவேற்றி விட்டேன். இப்போது உனக்கு சந்தோசமா பாரி?”. நான், புகைப்படத்தில் கம்பீரமாக இருந்த பாரியின் உதடுகளில் முத்தமிட்டேன். 

நான் முத்தமிட்ட அந்தப் பாரியின் உதடுகளில் இப்பொது ஈரமில்லை. நான் முத்தமிட்ட பாரியின் உதடுகளுக்கு மேல் இருந்த அந்த அடர்ந்த மீசை, இப்போது என் மெல்லிய மீசையைக் குத்தவில்லை.
“கபிலா.. உன் கைகள் மலரினும் மெல்லியது” என்று என் கைகளைப் பிடித்துகொண்டு, எங்கள் இருவருக்கும் நண்பனான சேரமான் செல்வக்கோ, ஒரு முறை அன்புடன் சொன்னபோது, “உண்மை உண்மை” எனப் பலமுறை, உணர்ச்சியில் உரைத்த பாரியின் அந்த ஆண்மை உதடுகள், இப்போது பேசாமல், மௌனம் காக்கிறது.  


நானும் பாரியும், காதலில் கலந்த கேண்மையைப் பேச, இப்போது பாரி உயிரோடு இல்லை. மறுபடியும் நான் நாற்காலியில் உட்கார்ந்து முடங்கினேன். ஆனால் எனது நினைவுகள் மட்டும் முடங்காது, நாங்கள் இருவரும் காதலர்களாக வாழ்ந்த, அந்த பழைய காலத்துக்குள் பயணிக்க ஆரம்பித்தது.      
திண்டுக்கல்லில், கலெக்டர் ஆபிஸ் பங்களாவுக்குள்தான், அந்த டென்னிஸ் மைதானம் இருந்தது. கலெக்டர் மற்றும் நிறையப் பெரிய மனிதர்கள் விளையாடும் அந்த டென்னிஸ் மைதானத்தில், வெளியே விழும் பந்துக்களைப் பொறுக்கிப் போடுவதுதான், எனக்கும், பாரிக்கும் வேலை. 


விளையாட, ஆட்கள் குறைவாய் வரும் நாட்களில், பாரிதான் டென்னிஸ் மட்டையோடு கூட விளையாடுவான். நானோ, என் மெல்லிய கைகளால், பந்து பொறுக்கிப் போடுவேன். அவ்வளவே.

 
ஆனால் வலிமை மிகுந்த கைகால்கள் கொண்டு, வீரமாக விளையாடிய பாரியை, திண்டுக்கல், சீக்கிரமே ஒரு டென்னிஸ் வீரன் ஆக, மாற்றி விட்டது. கலெக்டர் சிபாரிசில், நிறைய டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியதால், அவன் புகழ், திண்டுக்கல் முழுவதும் பரவியது. 


”கபிலா.. ஒரு நாள், நான் விம்பிள்டனில் கலந்து கொண்டு, வெற்றி பெறணுமடா.. அது என் கனவுடா” என்று, நாங்கள் இருவரும், தனிமையில் இருக்கும்போது, பாரி சொல்லுவான். “நிச்சயம் நடக்கும் பாரி”. நான், பாரியை முத்தமிட்டுக் கொண்டே சொல்லுவேன். இருவரும், சந்தோசமாய், ஒருவராகிக் கலந்து போவோம். 


பாரிக்குக் கல்யாணம் ஆன போதும், நாங்கள் எப்போதும் போலவே பழகினோம். அங்கவை, சங்கவை பிறந்தபோது எல்லாம், நான் எனக்கு மகள்கள் கிடைத்து விட்டதாகவே பூரித்தேன். 


பாரியின் மனைவி ஒரு நாள், நோயில் இறந்து போனாள். அதன்பின், நான்தான் பிள்ளைகளைக் கவனித்துக் கொண்டேன். 


ஐயகோ.. எங்கள் இருவரின் சந்தோசமான அந்த வாழ்க்கையில், விதியானது, எங்கள் ஊர்க் கோவில் கட்டும் ரூபத்தில், ஒரு நாள் வந்து சேர்ந்தது.


“கடவுள் இல்லை.. இல்லவே இல்லை”. இப்படிப் பாரி பேசாத நாளே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் அப்படி இல்லை. “கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. நமக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையும் ஒரு பகுத்தறிவுதான்” என்பது எனது வாதம். 

பாரியோ, தந்தை பெரியாரின், தீவிரத் தொண்டன். பெரியார் கருத்தைப் பரப்பும், எல்லா கூட்டங்களிலும் அவன் இருப்பான். நானும், பெரியார் கூட்டங்களுக்கு, அவனைப் பின் தொடர்வேன். 


என்னைப் பொறுத்தவரை, பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை தவிர, மற்ற பெரியாரது கருத்துக்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். 


எல்லாப் பெரியார் கூட்டங்களிலும், பாரிதான் தளபதி போல இருப்பான். ஒரு தீவிரமான செயல்வீரனாய், பாரி அங்கும் இங்கும், அலையும் கம்பீரமான காட்சியைப் பார்த்து ரசிப்பதுதான் எனது வேலை. 


நாட்டுப்புறப் பாடல்கள்களை, கவிதைகள் போல எழுதிப் பாடுவதில், நானோ வல்லவன். எனது, கவிதைத் திறமையைப் பார்த்து பூரித்துப் போகும் பாரி, “பாடு கபிலா.. பாடு கபிலா” என்று என்னை நச்சரித்து, பெரியார் கூட்டங்களில் பாடச் சொல்லுவான். நானும் மேடை ஏறிப் பாடுவேன்.


கைத்தடி பேசுதடி கண்ணாடி முழங்குதடி
பைத்திய சாதி மதம் பஞ்சாய்ப் பறக்குதடி
ஆத்தாடி அவன்தாடி அசைஞ்சாலேப் போதுமடி
கூத்தாடும் மூடத்தனம் குப்பைக்குள்ளே முடங்குதடி


என் பாடலுக்கு, ஊரே கைதட்டும். பாரிக்கோ பெருமை தாங்காது.
அங்கே எதுவும், என்னிடம் பேச மாட்டான். ஆனால், விழா முடிந்து, வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே, தனிமையில், என்னை முத்த மழையாலேயே பாராட்டித் தள்ளிவிடுவான். 


எல்லாம் நல்லபடியாகவே போய்கொண்டு இருந்தது/ ஒருநாள், ஊரின் மையத்தில் இருந்த, ஒரு கிரவுண்டு புறம்போக்கு நிலத்தில். “கோவில் கட்டவேண்டும்” என்று ஒரு கூட்டமும், “இல்லை.. நூலகம் கட்டவேண்டும்” என்று கபிலனின் பகுத்தறிவுக் கூட்டமும். ஒன்றை ஒன்று தாக்கிக்கொண்டபோது, நான் கலங்கிப் போனேன். 


“பாரி.. உனக்கு முக்கியம், உனது பகுத்தறிவு மட்டுமல்ல. உனது டென்னிஸ் வாழ்க்கையும் மிக முக்கியம். உன் பிள்ளைகளும் முக்கியம், நானும் முக்கியம் பாரி”. பாரியிடம், நான் கெஞ்சினேன். 


பாரியோ பிடிவாதமாகப் பேசினான். “இல்லை கபிலா.. அறிவை வளர்க்கும் இந்த நூலகம்தான், நம் ஊருக்குத் தேவை. கோவிலை, இன்னொரு இடத்தில் கட்டிக்கொள்ளட்டுமே. நம் ஊரில் ஏற்கனவே நான்கு கோவில்கள் இருக்கிறது. ஆனால், ஒரு நூலகம் கூட இல்லை”. பாரியின் உறுதியான வார்த்தைகள் முன்னால், எனது கெஞ்சல்கள், எடுபடாமல் போனது. 


அவனது, பகுத்தறிவுத் தீயை, அணைக்க, ஒரு கூட்டம், பல திரைமறைவு வேலைகள் பார்த்தது. மதவாதிகள், தங்கள் சுயநலங்களை நிலைநிறுத்திக் கொள்ளச் செய்யும் தகிடுதத்தங்களைக் கண்டு நான் பயந்து போனேன். 


ஒருநாள் இரவில், உடல் நிறையக் கத்திக்குத்துக் காயங்களோடு,வீட்டிற்குள் வந்து விழுந்தான் பாரி. “ஐயோ..” நான் அலறினேன். நான், சாய்ந்து தூங்கி மகிழ்ந்த அந்த மார்பு முழுதும் இப்போது ரத்தம். “ஐயோ பாரி.. பாரி”, நான் வேதனையில் துடித்தேன்.   


அங்கவையும், சங்கவையும் உள்ளே தூங்கிக் கொண்டிருந்ததால். அவர்கள் தூக்கம் கலையாமல் இருக்க, கதவை மூடினேன். 


“பாரி.. பாரி” நான் மூடிய அறைக்குள் கதறினேன். பொங்கும் ரத்தத்தோடு இருந்த பாரி, “கபிலா.. நான் இனிப் பிழைக்க மாட்டேன்” என்று சொன்னபோது, என் நெஞ்சம் பதறியது.
“பாரி.. பாரி..நீ நிச்சயம் பிழைப்பாய் பாரி… அப்படி உன் உயிர் போனால், எனது உயிரும் போய்விடும் பாரி. உன்னோடு என்னையும் கூட்டிக்கொள் பாரி” நான் அழுகையில் அரற்றினேன்

.
பாரி, என்னை அமைதியாய்ப் பார்த்தான். “கபிலா… அங்கவை சங்கவை என் பிள்ளைகள் அல்ல. நம் பிள்ளைகள். எனது டென்னிஸ் கனவு முடிந்து போய்விட்டது. ஆனால், நம் பிள்ளைகளின் கனவு” சொல்லிக்கொண்டு  இருக்கும்போதே, பாரியின் தலை கவிழ்ந்தது. 


“பாரி..” நான் கதறிய, கதறலில் பிள்ளைகள் விழித்துக்கொண்டன. நான் கதவைத் திறந்தேன். “என்னை மட்டும் இந்த உலகத்தில் விட்டு விட்டுப் போய் விட்டாயே பாரி.. நீ செய்தது நியாயமா,, இதுதான் உன் தர்மமா?” நான் கேவிக் கேவி அழுதபோது, பிள்ளைகள் இரண்டும், எனது தோளைப் பிடித்துக்கொண்டன.


இந்த இருபது வருடங்களில், எவ்வளவோ மாற்றங்கள். சென்னை வந்து, நான் சின்னத் தள்ளுவண்டி உணவகம் ஆரம்பித்தது, கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து, வியாபாரத்தை பெரிய ஹோட்டல் ஆக மாற்றிக்காட்டியது. மகள் அங்கவையை வக்கீலுக்குப் படிக்க வைத்தது. அவளுக்கு ஏற்ற ஒரு நல்ல டாக்டர் கணவனைத் தேடிப்பிடித்து கல்யாணம் செய்து வைத்தது. 


இதோ இப்போது, மகள் சங்கவை, விம்பிள்டனும் வென்றுவிட்டாள். “பாரி உன் டென்னிஸ் கனவை, நான் நிறைவேற்றிவிட்டேன்”. எனது கண்கள் பனித்தது. 


திடீரென, எனது தொலைபேசி மணி அடித்தது. எதிர்முனையில், மகள் சங்கவை, லண்டனில் இருந்து பேசினாள். “கபிலன் மாமா.. நான் வென்றுவிட்டேன் மாமா. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் மாமா” என்று உணர்ச்சிபொங்கச் சொன்னபோது, நான் அமைதியாய் புன்னகைத்தேன்.


 “மாமா… கடவுள் என்னைக் கைவிடவில்லை மாமா” என்று அவள் சொன்னபோது, நான் அடைந்த ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. 

“சங்கவையா இப்படிப் பேசுகிறாள்?” எனது மனம் சற்றே ஆனந்தமடைந்தது. 


அப்பா பாரியோ, கடவுள் மறுப்பாளன். மகள் சங்கவையிடமோ, நான் கடவுள் குறித்து, ஒருபோதும் பேசியதேயில்லை. “அப்புறம் எப்படி?” எனக்குப் புரிந்தது.
நான் பாரியின் புகைப்படத்தின் முன்னால், இப்போது நின்று கொண்டேன்.


“பாரி.. கடவுள் என்பது மனிதனின் ஒரு நம்பிக்கை. அது யார் சொல்லிக் கொடுத்தும் வருவது இல்லை. கோபம், மகிழ்ச்சி, துன்பம், பயம் போன்ற எல்லா உணர்ச்சிகளும் கலந்த ஒரு இயற்கையான கலவையே, கடவுள் நம்பிக்கை.” 


“ஆதியிலே பிறந்த எந்த மனிதனும், ‘கடவுள் இருக்கிறான்’ என்று சொல்லிக்கொண்டு பிறக்கவில்லை. ஆதியிலே பிறந்த எந்த மனிதனும், ‘கடவுள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டும் பிறக்கவில்லை. ஆனால், இருளைக் கிழித்துக்கொண்டு, ஆதவன் வெளியே வந்தபோது, ஆதியிலே பிறந்த மனிதன், கையெடுத்துக் கும்பிட்டானே, அந்த நம்பிக்கைதான், இன்றளவும் தொடரும் கடவுள் நம்பிக்கை பாரி”


“கடவுள் மறுப்பாளன்தான், கடவுள் நம்பிக்கை என்ற இந்த இயற்கை உணர்வுக் கலவையைக் கடந்து வாழப் பழகிக் கொண்டவன். ஆக, கடவுள் மறுப்பாளன் என்பவன், ஒரு செயற்கையானவன். அப்படி அவன் வாழ்வதில் தவறேதும் இல்லை”


“கடவுள் நம்பிக்கையை, எந்தக் கடவுள் மறுப்பாளனாலும் முற்றிலுமாய் எடுத்துவிட முடியாது. இயற்கையை, செயற்கை, எல்லா வகையிலும் கட்டுப்படுத்திவிட முடியாது என்பதை, கடவுள் மறுப்பாளனும், புரிந்துகொள்ள வேண்டும்” 


“அதே நேரத்தில், மனிதனின் இந்தக் கடவுள் நம்பிக்கையை, மதவாதிகள், பலவகையில் வியாபாரங்கள் மட்டுமே செய்யமுடியும்”. 


“ஒழுக்க நெறிகளைப் படைத்தவன் மனிதன்தான். அவன் படைத்த ஒழுக்க நெறிகளை, தனது சொத்துக்களைப் போல் பாவித்து, மதங்கள் வியாபாரம் செய்வதில் தவறில்லை.. ஆனாலும் வியாபாரம் வியாபாரம்தான்”


“மதங்கள், வியாபார  ஆசைப்படும்போது, நாம் அனுமதிக்கிறோம். ஆனால், அந்த ஆசை, பேராசையாய் மாறினால், நாம் அதை எதிர்க்கிறோம். இந்த வாழ்வியல் தத்துவமே, உண்மையான பகுத்தறிவு பாரி”. 


இப்போது நான், கடவுளை நினைத்தேன்.
“கடவுளே.. நான் உங்களை முழுமையாக நம்புகிறேன். அடுத்த பிறவியிலாவது.. என்னையும் பாரியையும் நிரந்தரமாகச் சேர்த்து வையுங்கள் ஆண்டவரே.” 


நான் இப்போது, பாரியை அன்புடன் முத்தமிட்டுவிட்டுத் தூங்கப்போனேன்,


அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200திருவாலி, வயலாளி மணவாளன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *