கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

This entry is part 6 of 42 in the series 1 ஜனவரி 2012

இன்றைய கல்வி அமைப்பு முறை தங்களின் மூலதனத்தை அதிகரிக்க முடிந்த வரை இலாபத்தைக் கொள்ளையிடுவதையே குறிக்கோளாய் கொண்ட இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டடமைப்பைக் கட்டிக் காத்து வரும் ஆளும் வர்க்க நலன் பேணும் கல்விக் கொள்கைகளின் பிரதிபலிப்பாகவே திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த சமூக நலனுக்கான கல்விஅமைப்பு முறை என்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்க நலனுக்கான கல்வி அமைப்பு முறையாக மட்டும் உருவமைக்கப்படடுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, கல்வியால் மாற்றம் என்பது எதார்த்த நிலையில் நாம் இரண்டாம் நிலை இலட்சியமாகவே உள்ளது.

எனவே கல்வி சார்பான கடமைகளை ஆற்றுவதற்காக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக, அரசியல், இலக்கிய, கல்வி, பண்பாடு சார்பான அமைப்பினரும் ஒன்றிணைந்து கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இன்றைய உலகமய, தனியார் மய சூழலில் கல்விக் களத்தில் நாம் ஆற்றவேண்டிய கடமைகளைப் பற்றி புரிதலை உருவாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் திருப்பூர், அவினாசி சாலையில் அமைந்துள்ள மத்திய அரிமா சங்க கட்டிடத்தில் 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த சுமார் நாற்பதற்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், தொழிற்சங்க வாதிகள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

விவாதத்தில் பேரா. கோச்சடை, நடேசன், கண.குறிஞ்சி, பொதியவெற்பன், நாகராஜன், பாண்டியராஜன், ஆறுமுகம், அய்யாவு, கண்ணன், அன்பரசு, பிரபாகரன், கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டமைப்பின் முதல் கூட்டத்தை திரு மூர்த்தி அவர்கள் செய்திருந்தனர்.
இக் கூட்டத்தில் பல்வேறு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை

1) தொடக்கக் கல்வியை நாட்டில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசமாக, தரமாக, சமமாக வழங்குவது மக்களாட்சி அரசின் கடமை. இதில் எள்ளவும் தனியாரின் பங்களிப்பு தேவையில்லை. எனவே கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் தமிழக அரசு கொண்டு வந்துள்ள கல்வி உரிமைச்சட்டம் 2011 வலியுறுத்தும் தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு ஏழைக் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கவேண்டும் என்ற விதி நீக்கப்படவேண்டும். மேலும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் ஏழைக் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே தனியார் பள்ளிகளுக்கு வழங்கிவிடும் என்றும் கல்வி உரிமைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள விதியும் நீக்கப்பட வேண்டும். மாறாக தேவையான நிதியை ஒதுக்கி அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளிகள் மூலமாக மட்டுமே அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்கப்படவேண்டும். மேற்கண்ட திருத்தங்களை தமிழக அரசும் மத்திய அரசும் செய்ய வேண்டும்.
2) உச்ச நீதிமன்றம் தீhப்;பளித்த பிறகும் இன்னும் சில தனியார் பள்ளிகள் சமச்சீர்க்கல்விப் பாடநூல்களை நடைபடுத்தவில்லை. மாறாக வேறு தனியார் நிறுவனங்களின் பாடநூல்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக கூடுதலாகப் புத்தகக் கட்டணம் வசூலித்தும் வருகின்றனர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் செயல்படும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் இத்தவறுகள் கல்வித் துறையின் தீவிர கண்காணிப்பின் மூலம் தடுக்கப்படவேண்டும்.
3) தாய்மொழி வழியிலேயே தரமான கல்வி வழங்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாகத் தொடங்கப்பட்ட தாய்த்தமிழ்ப் பள்ளிகள் அனைத்தும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளாக ஏற்கப்படவேண்டும்.
4) தனியார் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களும், பதினொன்றாம் வகுப்பிலேயே பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தனியார் பள்ளி மாணவர்கள் முறைகேடான வழியில் பொதுத்தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் பெற வகைசெய்யப்படுகின்றனர். அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத்தேர்வு எழுதும் அரசுப்பள்ளி மாணவர்களை விட தனியார்பள்ளி மாணவர்கள் அதிக விழுக்காட்டினர் கூடுதல் மதிப்பெண் பெற்றுவிடுகின்றனர். உயர்கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதால் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தீவிர கண்காணிப்பின் மூலம் தனியார் பள்ளிகளின் இத்தவறுகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5) அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் விகிதாச்சார ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
6) ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் முழுநேர ஆசிரியர் பணியிடங்களாகவும், நிரந்தர ஆசிரியர் பணியிடங்களாகவும் நிரப்பவேண்டும். தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வித்தகுதிகள் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்.
7) தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள முப்பருவ முறை வரவேற்கத்தக்க மாற்றமாகும். மேலும் வருங்காலத்தில் இம்முறைக்கான பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் போது அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது. மேலும் பாடத்திட்டங்கள் உருவாக்கத்தில், சமூக நீதி, மனித உரிமை, மதச்சார்பின்மை ஆகிய கோட்பாடுகள் பின்பற்றப்படவேண்டும்.

8) மத்திய அரசு பாடத்திட்டத்தைப் (ஊடீளுஊ) பின்பற்றி புதிய தனியார் பள்ளிகள் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது. சமச்சீர் கல்வியை உண்மையாக நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ள தமிழக அரசு இக்கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்க வேண்டும். தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டமும், மத்திய அரசின் பாடத்திட்டமும் எத்தகைய வேறுபாடும் இல்லாததாக மாற்றப்படவேண்டும்.

9) தேசிய இனம் – மொழி வழி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள மாநில அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தும் இருக்க வேண்டும். இக்கொள்கையை நடைமுறைச் சாத்தியமாக்க கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்படவேண்டும்.

10) அனைத்து அரசுப்பள்ளிகளிலும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளாட்சி சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தப்படவேண்டும். அரசுப் பள்ளிகளில் சுகாதாரப் பணிகளை மாணவர்கள் மூலம் செய்ய வைப்பதை தடுக்கவும், சுகாதார சீர்கேடுகளைக் களையவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொ.பாண்டியராஜன்
மதுரை. 3

Series Navigationஓர் பிறப்பும் இறப்பும் ….இருத்தலுக்கான கனவுகள்…
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *