கவிதைத் தொகுப்பு நூல்கள் 4

author
0 minutes, 7 seconds Read
This entry is part 5 of 7 in the series 11 டிசம்பர் 2022

 

அழகியசிங்கர்

 

          ‘புதுக்குரல்கள்’ என்ற தொகுப்பு நூல் சி.சு செல்லப்பா தொகுத்தாலும், தொகுப்பாசிரியரின் குறிப்புகளில் தெளிவு இல்லை.

 

          இதே போல் பல தொகுப்பு நூல்களைப்  படித்திருக்கிறேன்.தொகுப்பு நூலாசிரியனின் கருத்துகளும், தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் முரண்பாடாக இருக்கும்.

 

          இன்னும் சில தொகுப்பு நூல்களில் தொகுப்பாசிரியர் ஆணவத்துடன் கருத்துக்களைத் தெரிவித்திருப்பார்.  அவர் தேர்ந்தெடுத்த கவிதைகளைப் படிக்கும்போது தொகுப்பாசிரியர் கருத்துக்கள் பொருந்தாமல் இருப்பதுண்டு.

 

          என் நண்பர் கவிஞர் எஸ்.வைத்தியநாதன் (வைதீஸ்வரன் இல்லை) சிற்றேடுகளான ழ, விருட்சம், கால், மையம் என்று தன் கவிதைகளை எழுதியிருக்கிறார்.

 

          அவர் கவிதைகள் எல்லாம் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டேன்.

 

          ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார்.

 

          ‘ஏன்?’ என்று கேட்டேன்.

 

          ‘கவிதைப் புத்தகம் யாரும் மதிப்பதில்லை.  புத்தகமாகக் கொண்டு வந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை. ‘

 

          அவருடைய கூற்று உண்மைதான். 

 

          நகுலன் அவருடைய ‘புத்தகப் பிரதிகள் 32க்கு மேல் போக வேண்டாம்’ என்று குறிப்பிடுவார்.

 

          ‘என் நண்பர்களுக்குக் கொடுத்து விடுகிறேன் போதும்,’ என்பார்.

 

          வைத்தியநாதன் அதைக் கூட அனுமதிக்க வில்லை.

 

          ஆனால் வைத்தியநாதனின் கவிதைகள் தொகுப்பு நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன.

 

          விருட்சம் கவிதைகள் தொகுதி 2 ல் வெளிவந்துள்ள எஸ் வைத்தியநாதன் கவிதையை இங்கு அளிக்கிறேன்.

         

          விடுப்பு

 

          பேருந்து

          நகரின் மைய சதுக்கத்தைக் கடந்து

          பெரிய பாலத்தையடைந்ததும் –

          உஷார் !

          யாரிடம் கொடுத்தது?

          யார் பெற்றது?

          டெலிபோன் எங்கே –

          முக்கியமாக 

          நிர்வாகியிடமாவது

          தெரிவிக்க வேண்டும்

          இன்று

          பணிக்கு

          வர இயலாது

          விடுப்பு.

          ஏழரைப்பவுன் தாலிச்சரடு

          களவு போனது.

 

          வைத்தியநாதனின் ஒருசில கவிதைகளைத் தொகுப்பு நூல்களில்தான் பார்க்க முடியும்.

 

          இப்படி பலருடைய கவிதைகள் தொகுப்பு நூல்களில் மாட்டிக்கொண்டு விடுகின்றன.

 

          நான் திரும்பவும் ‘கசடதபற’ என்ற சிற்றேடு வெளியிட்ட ‘புள்ளி’ என்ற தொகுப்பு நூலைக் கொண்டு வந்தேன்.

 

          அப்போது ஒரு சில கவிதைகள் எழுதிய ‘ஜரதுஷ்டன்’ கவிதையை அதில் சேர்த்தேன்.

         

                    பரிணாமம்

 

                    நாலு வயதில் 

                    நர்ஸரிக் கவிதையும்

                    பின்னர் சில நாள்

                    ஆத்திச் சூடியும்

                    கோனார் நோட்ஸில்”

                    கம்பனும் கபிலனும்

                    படித்துக் குழம்பி

                    பாட்டு எழுத 

                    பேப்பரும்

                    பென்ஸிலும்

                    எடுத்த வேளை

                    குட்டிச் சுவராய்

                    போவாய் நீயென

                    பெற்றதுகளிடம்

                    பாட்டுக் கேட்டேன்

 

          எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது இந்தக் கவிதை.  இதுமாதிரியான தொகுப்பு நூல்களில் இவர்களுடைய கவிதைகளைப் பதிவு செய்கிறேன்.

 

          உண்மையில் தொகுப்பு நூலின் குறிக்கோள் இம்மாதிரியான கவிதைகளைக் கண்டுபிடித்துப் பதிவு செய்வதுதான்.

 

          கணையாழி தொகுப்பில் வெளிவந்த ஒரு கவிதை.  ம.ந.ராமசாமி எழுதியது.

 

          தூணிலும், துரும்பிலும்

 

          கடவுள் இல்லை

          இல்லவே இல்லை

          என்ற 

          சாலை ஓரக் 

          கல்வெட்டை

          சிவமாக மதித்து

          மலர் தூவி

          கற்பூரம் காட்டி

          வணங்கினான் 

          தமிழன்

 

          கணையாழி தொகுப்பில்  ‘ஆர். முஸ்தபா’ எழுதிய கவிதையைப் பார்ப்போம்.

 

                    நாய்கள்,நாய்கள்

 

                    அங்கே ஒரு நாய் இருக்கிறது.

                    கிட்டப்போனால் கடிக்கிறது.

                    எட்டி நடந்தால் குரைக்கிறது

“                   தட்டி வளர்த்த எசமானர்

                    ஒட்ட நறுக்கிக் கட்டிப் போட்டார்

 

                    ஆனாலும்

 

                    கயிற்றை க

                    டித்து தோலைக் க

                    டித்து ஆளை க

                    டிக்க வருகிறது.

 

          நான் என்ன சொல்ல வருகிறேனென்றால் இம்மாதிரியான கவிதைகளைத் தொகுப்பு நூலில்தான் கிடைக்கும்.  

 

          நாம் தொகுப்பு நூல்களை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம்.  

 

          ‘மனதுக்குப் பிடித்த கவிதைகள்’ என்று ஒரு தொகுப்பு நூலைக் கொண்டு வந்தேன்.  100 கவிதைகள் 100 கவிஞர்கள்.  நூலின் முன்னுரையில் நான் எழுதிய வாசகத்தை இங்குக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். 

 

          ‘இந்தத் தொகுதிக்கு எந்த முன்னுரையும் எழுத உத்தேசம் இல்லை. கவிதைகள்தான் முன்னுரை. 

          இன்னும் தொகுப்பு நூல்களை அலசுவோம்.’

 

                                                                                                                                                                   (இன்னும் வரும்) 

Series Navigationபுலன்கடவுள் – சிறுகதை நூல் விமர்சனம்நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் நூற்றாண்டு நிகழ்ச்சி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *