கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

author
3 minutes, 26 seconds Read
This entry is part 3 of 7 in the series 25 டிசம்பர் 2022

கவிதைத் தொகுப்பு நூல்கள்  – 5

அழகியசிங்கர்

தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு.  புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு என்ற  புத்தகத்திலிருந்து எடுத்தது.

மேனாட்டு இலக்கிய ஆராய்ச்சியாளர்,  ‘ஒரு மொழியில் முதன் முதலில் தனிப்பாடல்களே தோன்றியிருக்கக் கூடும்’  என எண்ணுகின்றனர்.

நம் சங்க இலக்கியங்களை நோக்கும் போது அஃது உண்மையே எனத்  தோன்றுகிறது. ஏனென்றால் சங்க இலக்கியங்கள் எல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே.

அக்காலப் புலவர் பாடல்களைத் தொகுத்து வைத்தாற்போன்று பிற்காலப் புலவர் பாக்களை, அவை  மறைந்து போகாமல் தொகுத்தவர் இல்லை.  அதனால் எண்ணற்ற பாக்களை நாம் இழந்துவிட்டோம்.

தனிப்பாடல் திரட்டு என்ற புத்தகத்தைப் படிக்கும்போது நம் தொகுப்பு நூல்களின் அவசியம் நன்றாகப் புரிகிறது.  எத்தனையோ திறமையாக எழுதப்பட்ட கவிதைகள் இதுமாதிரியான தொகுப்பு நூல்களில்தான் கண்டு பிடிக்க முடியும்,

என் கையில் பூம்புகார் வெளியீடாகத் தனிப்பாடல் திரட்டு என்ற முதல் தொகுதி இருக்கிறது.  இப்பாடல்கள் எல்லாவற்றிலும் உரை இருக்கிறது.

ஒளவையார், காளமேகப் புலவர், ஒட்டக் கூத்தர் பாடல்கள் என்று எல்லாம் கலந்திருக்கிறது.

            சில உதாரணங்களுடன் இந்தப் பாடல்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.

சோழ மன்னன் கம்பரின் பாட்டை வியந்தான்.  அப்போது ஒளவை பாடியது.

            விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்

            விரல் நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்

            பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் – அவர் கவிதை

            நஞ்சேனும் வேம்பேனும் நன்று.

பரிசைப் பெற எண்ணும் கவிஞரைத் தந்திரக்காரர்.  இரண்டு பேர் புகழ்ந்து பேச வேண்டும்; விரல்கள் நிறைய மோதிரங்கள் அணிந்திருக்க வேண்டும்; இடுப்பில் நல்ல பஞ்சாடை அல்லது பட்டாடை அணிந்திருக்க வேண்டும்; அப்படியானால் அவருடைய கவிதை நஞ்சைப் போலக் கொடியதாக இருந்தாலும் வேம்பு போலக் கசப்பானதாக இருந்தாலும் நல்லது என ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒளவையாருக்குக் கம்பன் மீது இவ்வளவு பொறாமை இருக்கக் கூடாது. இங்கு முக்கியமாகச் சொல்ல வேண்டியது இதெல்லாம் தனிப்பாடல் திரட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏகம்பவாணர் பாடல் ஒன்றைப் பாருங்கள்

வேண்டியபோது இன்பம் விளைக்கும் மடந்தையரைத்

தீண்டியகை யால்என்னைத் தீண்டாதே! – பாண்டியா,

முல்லைக்கு அதிபா, முகம்பார்த்து அகலநின்று

சொல்லக் கடவஎல்லாம் சொல்.

பாண்டியனே முல்லை நகர்க்குத் தலைவனே. விரும்பிய நேரத்தில் இன்பத்தைத் தரும் விலைமகளைத் தீண்டிய கையால் என்னைத் தொடாதே.  விலகி நின்று தலையைக் குனியாமல், சொல்ல எண்ணியவற்றையெல்லாம் சொல்வாயாக.

இந்த தனிப்பாடல் திரட்டில் ஒளவையார் பாடல்களையும் காளமேகப் புலவர் பலர் குறிப்பிட்டு கேட்டிருக்கிறேன்.  ஆனால் ஒவ்வொரு புலவர் பாடல்களையும் நிதானமாக வாசித்தால் நமக்கு அற்புதமான அனுபவம் ஏற்படும்.

காளமேகப் புலவர் பாடலை எடுத்துக் கொள்வோம்.

 புலவர் காளமேகம் திருமலைராயன் அவைக் களத்துக்குச் சென்றார். அப்போது அவையிலிருந்த புலவர்கள் அவருக்கு அமர, இருக்கையைத் தரவில்லை.  அப்போது, புலவர் இப்பாடலைப் பாட, திருமலைராயனின் அரியாசனம் நீண்டு இவருக்கு அமர இடம் தந்தது.

வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு

வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை

அரியா சனத்தில் அரசúôôடு என்னைச் 

சரியா சனம் வைத்த தாய்.

வெண்ணிற ஆடை அணிந்து, வெண்ணிற அணிகளைப் பூண்டு, வெண்டாமரை மலரில் வீற்றிருப்பவளாகிய கலைமகள் குற்றம் இல்லாத சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் மன்னர்களுடன் என்னையும் சமமாக வீற்றிருக்கக் கூடிய இருப்பிடத்தை ஏற்படுத்தியவள் தாய் ஆவாள் என அறிவீராக என்கிறார்.

இராமசந்திர கவிராயர் பாடிய பாடலைப் பார்ப்போம்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்

            காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்

பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்

            போர்முகத்தை யறியானைப்புலியே றென்றேன்

மல்லாரும் பயனென்றேன் சூம்பற் றோளை

            வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்

இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்

            யானுமென்தன் குற்றத்தா லேகின்றேனே.

நான் கல்லாத ஒரு செல்வனை நோக்கி கற்றவனே என்றேன்; காட்டினை வெட்டும் குலத்தில் தோன்றிய செல்வனை நாட்டை ஆள்பவனே என்றேன்.  தீய குணம் பெற்றவனை நல்லவனே என்றேன்.  போர்க்களத்தை அறியாத ஒருவனை நீ போர் செய்வதில் புலி  போன்றவனே என்றேன்.  மெலிந்த தோள்களையுடையவனை மல் போர்க்கு ஏற்ற தோள்களையுடையவனே என்றேன்.  பிறர்க்குப் பொருளைக் கொடாத ஒருவனை வள்ளல் எனச் சொன்னேன். இவ்வாறு பொய்யாக இல்லாததை உரைத்ததற்காக எனக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருள் இல்லை என்றான்.  நானும் என் குற்றத்தை உணர்ந்து பொருள் பெறாமல் செல்கின்றேன்.

தனிப்பாடல் திரட்டுப் படிக்கப் படிக்க அற்புதமான அனுபவம் ஏற்படுகிறது.

முன்னுரையில் ஒரு குறிப்பு வருகிறது.  சென்ற நூற்றாண்டு வரையிலும் இந்நூற்றாண்டிலும் இந்நூலை மட்டும் பயின்று, தாம் பெரும்புலவர் எனத் திகழ்ந்தவர் பலர் என்கிறார் புலவர் அ. மாணிக்கம்.

தனிப்பாடல் திரட்டுதான் நம் தொகுப்பு நூல்களுக்கு முன்னோடி என்று தோன்றுகிறது.  

நாம் திரும்பவும் நம் தொகுப்பு நூல்களுக்கு வருவோம்.  கவிதைகளைத் தனியாக நூல்களாகக் கொண்டு வராத எத்தனையோ கவிதை எழுதுபவர்கள் தொகுப்புகள் மூலம் கவிதைகளை அளித்திருக்கிறார்கள்.

            மேல் மாடியிலிருந்து என்ற ந.முத்துசாமி எழுதிய கவிதை கணையாழி தொகுப்பு நூலில் உள்ளது.

            கீழ் முற்றக் குழாய்க்கிணறு வற்றிவிட்டது.

            பாழ் கிணற்றை மேலெடுத்துப்

            புதிதாய் அடிக்க ஆள்வந்தனர்

            சிலகைகள் இரண்டு பைப்பிரிஞ்சுகள்

            இடவலமாய் ஆடின.  விட்டு விட்டு

            அள்ளைபற்றிய ஒரு வெள்ளைக் கட்டை

            மேலும் கீழுமாடிற்று.

            சில கரும்புள்ளிகள் பல குறிக்குக்கோடுகள்

            கற்பித்து வருமொரு குத்துக் கோடு

            உரிய இடத்தில் இணக்கமாய்ப் பொருந்தின

            இனிமேல் தண்ணீர் வரும்.

சிவசங்கராவின் ஒரு கவிதையைப் பாருங்கள்

            பச்சைப் புல்வெளியில் 

            பாங்கான சாலைகளில்

            விரலால் ஸ்பரிசிக்கும்

            வேதனையில், பாயும் என்

            அராஜகத்தில் –

            உன் விழியும், நம் வெறுமை

            ஒன்றியதன் இதமான

            பச்சைப் புல் வெளியில்

“          வாய்ப்பாய் மாறி 

            மரத்துப் போய்க் காற்றில்

            இக்கணமும் சாகும்

            நான் இதைப் 

            புன்னகைக்கும் பொருளாக

            எண்ண வேண்டும் 

            ஏனெனில் நீ

            எப்போதும்

            புன்னகைப்பாய். 

தனிப்பாடல் திரட்டு என்ற தொகுப்பு நுலிற்கும் இப்போது கொண்டு வரப்படுகிற தொகுப்பு நூலிற்கும் பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது.  தனிப்பாடல் திரட்டில் பாடுபொருளாகக் கடவுள் இருக்கிறார்.  இப்போது வரும் தொகுப்புகளில் கடவுள் இல்லை.  இப்போதுள்ள பிரச்சினைகளைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.

                                                                                                                          (இன்னும் வரும்)

Series Navigationஇலக்கில்லாத இலக்குசிறுகதை விமர்சனப் போட்டி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *