‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’

This entry is part 4 of 42 in the series 1 ஜனவரி 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
     இறைவன் படைத்த உயிரினங்களுள் மிகவும் உன்னதமானவன் மனிதனாவான். அம்மனிதன் பண்பாலும், நடத்தையாலும் உயர்நிலையை அடைதல் வேண்டும். இறைவன் மனிதன் உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பியே உலகில் அவனுக்கு உதவியாக இயற்கையையும், உயிரினங்களையும் படைத்தான். ஆனால் மனிதன் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு அவற்றையெல்லாம் விடுத்துப் பல்வேறு கீழான குணங்களைக் கைக்கொண்டான்.
இத்தகைய கீழான எண்ணங்கொண்ட மனிதனை நல்வழிப்படுத்த நமது முன்னோர்கள் பல்வேறு கருத்துக்களையும், அறங்களையும் தங்களின் அனுபவ மொழியால் கூறிச் சென்றனர். அவைதாம் பொன்மொழியாக வாழ்வைப் பூரிக்க வைக்கும் நல்மொழியாக விளங்குகின்றது. அத்தகைய பொன்மொழிகளுள் ஒன்றுதான், ‘‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’’ என்ற பழமொழியாகும்.
வாய்ப்புகள்
நெற்கதிர்களை அறுத்து அதனைக் களத்தில் அடித்துப் பதரினைப் போக்கக் காற்றுவீசும்போது தூற்றுதல் வேண்டும். அவ்வாறு தூற்றினால் பதறினைக் காற்று அடித்துத் தூரத்தில் கொண்டுசென்று போட்டுவிடும். நல்ல நெல்மணிகள் தனியாக ஒதுங்கும்.
காற்றடிக்காத போது நெல்லைத் தூற்றினால் பதரானது அப்படியே நல்ல நெல்மணிகளுடன் கலந்து அப்படியே இருக்கும். அதுபோலவே மனிதன் வாய்ப்புகள் இருக்கம்போது கடுமையாக உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்.
இயற்கையைத் துணையாகக் கொள்ளல்
இயற்கையைப் பயன்படுத்தி நமது செயல்களைச் செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். நம்முன்னோர்கள் இயற்கையைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர்.அதனால் அதன் செயல்படுகளக்க ஏற்பத் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் வாழ்வில் வெற்றியாளர்களாகத் திகழ்ந்தனர். இயற்கையை மீறி நாம் செயல்படுகின்ற போதுதான் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. அதனால் நமது செயல்பாடுகளை இயற்கையின் அதாவதுஇறைவனின் துணை கொண்டு செய்து நாம் நம்முடைய செயல்களில் எளிதில் வெற்றி பெறலாம் என்ற சீரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.
‘‘ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடிஇருக்குமாம் கொக்கு’’
எனக் கொக்கானது காத்திருந்து தனக்கென்று சரியான மீன் வரும்போது அதனைக் கவ்வித் தனது பசியைப் போக்கிக் கொள்வதைப் போன்று மனிதனும் வாய்ப்புகளுக்காகக் காத்திரந்து சரியான வாய்ப்புக் கிட்டும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
     காற்றாகிய வாய்ப்புகள் கிடைக்கிறபோது அதனைப் பயன்படுத்தி நம்வாழ்வின்போது அதனைப் பயன்படுத்தி நம் வாழ்வில் பல முன்னேற்றங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினை இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது.
தீய பழக்க வழக்கங்களைக் கைவிடல்
     மேலும் மனிதனிடம் நல்ல பழக்கங்களும், தீய பழக்கங்களும் கலந்து உள்ளனள. வாய்ப்பு நேரும்போது நம்மிடம் உள்ள தீய பழக்கங்களைக் கைவிட்டுவிடுதல் வேண்டும். அவ்வாறு செய்தால் இவ்வுலகில் வாழ்வாங்கு வாழலாம்.
     ‘‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
     தெய்வத்துள் வைக்கப் படும்’’
என வள்ளுவப் பெருந்தகை கூறியதைப் போன்று தீயனவற்றை அகற்றி நல்லனவற்றைக் கைக்கொண்டு வாழ்ந்தால் வானுறையும் தெய்வத்துள் ஒருவனாக நாம் வாழலாம்.
     காற்றுள்ளபோது என்பது உடலில் வலு உள்ளபோது என்பதையும் தூற்றிக்கொள் என்பது தீயனவற்றை அகற்றிக் கொள்ள வேண்டும் என்பதையும் குறிக்கும். பின்னாளில் நாம் நல்லவனாக மாறுவோம் என்றிருந்தால் உடல் வலுக் குறைந்தபோது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது வருந்த நேரிடும். இத்தகைய அரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு உணர்த்துவது குறிப்பிடத்தக்கது.
தீவினையை அகற்றுதல்
     நமது உடம்பில் மூச்சுக் காற்று இருக்கும்போதே நல்லனவற்றை நாம் செய்தல் வேண்டும். நம்மால் இயன்றதைப் பிறருக்கு ஈந்து நம்முடைய ஊழ்வினையை, தீவினையை அகற்றி உயிருக்கு ஊதியத்தை ஈட்டுதல் வேண்டும். இத்தகைய ஊதியத்தை,
     ‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
     ஊதிய மில்லை உயிர்க்கு’’.
என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.
     நம்முடம்பில் மூச்சுக்காற்றுள்ளபோது நல்லனவற்றைச் செய்து நம்மைத் தொடரும் தீவினையை நீக்கி உயிருக்கு ஊதியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற உயரிய சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு வழங்ககின்றது.
இறைவனது நாமத்தைக் கூறுதல்
     இறைவனது நாமத்தைக் கூறினால் நம்மைத் தொடர்ந்து வரும் பாவங்கள், கர்மவினைகள் அனைத்தும் நீங்கி விடும். நம் வாழ்நாளில் இறைவனது நாமத்தைத் தொடர்ந்து கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அங்ஙனம் இருந்தால் நமக்குப் புண்ணியம கிடைக்கம். ஏனெனில் இறைவன், ‘‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்’’ அல்லவா ! அவனை நாம் சிக்கனப் பிடித்துக் கொண்டால் நம்மையும் அவ்வினைகள் பற்றாதன்றோ? அதனால் தான்,
     ‘‘பற்றுக பற்றற்றான் பற்றினை’’
என்று வள்ளுவர் கூறினார்.
     நமது உடலில் மூச்சுக் காற்று உள்ளபோது இறைவனது பெயரைக் கூறி நமது பாவங்களை, கர்மவினைகளைத் தூற்றிக் கொள்ள வேண்டும். அதாவது போக்கிக் கொள்ளவேண்டும் என்ற சிந்தனையையும் இப்பழமொழி நமக்கு நல்குகின்றது. இங்கு தூற்றுதல் என்பது வழக்கில் ஒருவரைப் பற்றி எதையாவது கூறித்திரிவது என்ற பொருளில் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. காற்றுள்ளபோது-உயிர் மூச்சு உள்ளபோதே, தூற்றிக் கொள்-இறைவனது பெயரினைக் கூறி நல்வழியைத் தேடிக்கொள் என்று நமக்கு நல்ல வாழ்வியல் நெறியையும் நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். காற்றுள்ளபோது தூற்றிக் கொண்டு வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோம்.
Series Navigationதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா? புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்ஓர் பிறப்பும் இறப்பும் ….
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *