காலமும் கணங்களும் – பேராசிரியர் கைலாசபதி – இன்று டிசம்பர் 06 நினைவு தினம்

author
1
15 minutes, 27 seconds Read
This entry is part 10 of 10 in the series 6 டிசம்பர் 2020

முருகபூபதி

“  கைலாசபதியை மீள வாசிப்போம்   “

இன்று முதல் ஐந்து நாட்கள் தொடர்  பன்னாட்டு கருத்தரங்கு

                                                                        

நம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.

அவருக்கு    கடிதம்    எழுதினேன் –  பதிலே இல்லை.

கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.

கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.

இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.

எப்பொழுது?

மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு     முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  –   டுவிட்டர்  –  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.

ஆனால்  –   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல்,  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.

அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.

கடிதம்     எழுதுவதும்   ஒரு   கலைதான்   என   உணர்த்திய   இலக்கிய வாதியாக   அவரை   நான்   இனம்   காண்கின்றேன்.

தனக்கிருந்த   பல  முக்கிய  பணிகளில்  ஒன்றாக  கடிதங்கள் எழுதுவதையும்  அவர்  கருதியிருக்க வேண்டும்.  பல  வருடங்களுக்கு முன்னர்  கைலாசபதி  எழுதிய  கடிதங்கள்  பலவற்றை  மிகவும்   பத்திரமாக பாதுகாத்து  ஒரு   கோவையில்   பிணைத்து   வைத்திருந்த    கவிஞர்    முருகையனிடம்தான்    கைலாசபதியைப் பற்றிய   இந்த   உண்மையை   அறிந்து கொண்டேன்.

இதுவரையில்    கைலாசபதி    தமது    நண்பர்களுக்கு    இலக்கிய   நயத்துடன் எழுதிய  கடிதங்கள்   நூலாக   வெளிவரவில்லை.   கைலாஸின்   நண்பர்கள் இணைந்தால்    இப்படியொரு   முயற்சியிலும்   இறங்கிப் பார்க்கலாம்.

எழுத்தாளர்களுக்கு   ஆலோசனை   கூறும் ,  அபிப்பிராயம்  தெரிவிக்கும் கருத்துக் கருவூலங்களான   அவை   எதிர்காலத்தில்   தொகுக்கப்படலாம்  என்ற   எதிர்பார்ப்பும்   எனக்குண்டு.

இன்றைய  மின்னஞ்சல்   யுகத்தில்   மறைந்துவரும்  கடிதக்கலை   என்று சில    மாதங்களுக்கு   முன்னர்   ஒரு   கட்டுரை   எழுதியிருந்தேன்.  அதனை பல   ஊடகங்கள்   மறுபிரசுரம்   செய்திருந்தன.   அக்கட்டுரையிலும் கைலாசபதியின்   கடிதக்கலையைத்தான்   விதந்து   பதிவுசெய்திருக்கின்றேன்.

இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கம்  தேசிய  ஒருமைப்பாட்டு மாநாட்டை    கொழும்பில்  1975   காலப்பகுதியில்    நடத்துவதற்கு ஆலோசித்துக்கொண்டிருந்த   வேளையிலேயே   கைலாஸ்   அவர்களை  பம்பலப்பிட்டி    இந்துக் கல்லூரியில்   சந்தித்தேன்.

அவர்  பெரிய   எழுத்தாளர்!  பேராசிரியர்! அவருக்கு அருகில் சென்று     பேசுவதற்கு   தயங்கி   ஓரமாக   அமர்ந்திருந்தேன்.

ஆலோசனைக் கூட்டம்    முடிந்த பிற்பாடு,  “    இன்று    ஒரு   புதுமுகத்தைக் காண்கின்றேன்.    எனது     பெயர்     கைலாசபதி உங்கள்  பெயர்     என்ன?   “  என்று   என்னருகில்     வந்து    தோள்பற்றி    அவர்   கேட்டபோது,   “  உங்களைத் தெரியும்   பல  இலக்கியக் கூட்டங்களில்  நீங்கள்     பேசியதைப் பார்த்திருக்கின்றேன்  “   எனக்கூறி    என்னை    அறிமுகப்படுத்தினேன்.

இச்சந்திப்பின்   பின்னர்    பல  தடவைகள்   நாம்   பேசிக் கொண்டோம். எனினும்   நீண்ட   கலந்துரையாடலாக   அமையவில்லை.  

சிறுகதைகளும்  நாவல்களும்    படிப்பதில்   நான்   கொண்டிருந்த   ஆர்வம்  படிப்படியாக    விமர்சனங்களைப்   படிப்பதற்கும்   தாவியதற்கு   கைலாசபதியே    காரணம்.

ஆரம்பகாலங்களில்   சிலரது   விமர்சனக் கட்டுரைகள்  எனக்குப் புரியவில்லை.    அவற்றைப் புரிந்து   கொள்வதில்   சிரமங்கள் இருந்தமையால்   படிப்பதை   தண்டனையாகக் கருதி,   அந்தப் பக்கத்தைப் பார்ப்பதையே    தவிர்த்துக் கொண்டேன்.

ஆனால்,   கைலாசபதியின்   எழுத்துக்கள்   எளிமையாக   இருந்தமை  கண்டு அவற்றைப்  படிப்பதில்   ஆர்வம்   வளர்ந்தது.

கைலாசபதியின்   விமர்சனங்கள்   எளிய   முறையில்   படிப்பவர்கள்  புரிந்து கொள்ளத்தக்கதாய்    அமைந்தமைக்கு  அவர்   ஓர்   பத்திரிகை  ஆசிரியராக வாழ்ந்தமையும்    காரணம் என்று   பின்னாளில்  வெளியான   முடிவுகள் முற்றிலும்   சரியானவை.

கைலாஸ்,  கவிஞர் மஹாகவி  உருத்திரமூர்த்தி,  சிந்தனையாளர்  மு.தளையசிங்கம்  எழுத்தாளர்   எஸ்.பொ.    முதலானோரை   ஆய்வு செய்யவில்லை,   விமர்சிக்கவில்லை,  அவர்களை   ஏனோ   புறம்   ஒதுக்கி விட்டார்   என்ற   குற்றச்சாட்டு   இன்றும்   நிலவுகின்றது.

இக்குற்றச்சாட்டு   ஆய்வுக்குரியது.    மஹாகவி  உருத்திரமூர்த்தி   தவிர்ந்த ஏனைய   இருவரும்   கைலாசபதியை   விமர்சித்தவர்கள்தான்.

மு.தளையசிங்கம்    நயமாகவும் , எஸ்.பொ.   வக்கிரமாகவும்    கைலாசபதியை    விமர்சித்திருக்கிறார்கள்.    இந்த   விமர்சனங்களுக்கெல்லாம்  கைலாஸ்   பதில்   கூறியதில்லை.  சமகாலத்தில்  கைலாஸை ஜெயமோகனும்  விமர்சிக்கிறார்.  அந்த விமர்சனங்களுக்கெல்லாம்   கைலாஸின்    அபிமானத்துக்குரிய   அவரது   இலக்கிய   மாணவர்களே   பதில்    கொடுத்தார்கள்.

கைலாசபதியின்   எழுத்தைப்   போன்றே   அவரது   மேடைப் பேச்சுக்களும்  எளிமையானவை.   பார்வையாளர்களை    மாணாக்கர்களாகக்    கருதும் தன்மையை   ஒத்ததாக   அவரது   மேடைப்   பேச்சுக்கள்   அமைவதுண்டு. அவரின்   எளிமையான   எழுத்து நடைபற்றி   பேராசிரியர் துரை  மனோகரன் குறிப்பிட்டுள்ளதைப்   பார்க்கலாம்.

 “ கைலாசபதியும்  தெளிவினையே     பிரதான    இலக்காகக்    கொண்டு எழுதியவர்.     கைலாசபதியின்     நடை    என்று    கூறத்தக்க    அளவுக்கு தமக்கெனத்   தனித்துவம்   வாய்ந்த   நடையொன்றினை   அவர்    கையாண்டார். எளிமையும்   கனதியும்   கவர்ச்சியும்   நிறைந்த   நடையாக  அது  மிளிர்கிறது. கவிதையில்   பாரதியும் ,   சிறுகதையில்   புதுமைப்பித்தனும் ஏற்படுத்தியிருப்பது   போன்ற   நடைக் கவர்ச்சியை   தமது   எழுத்தின் வாயிலாக   கைலாசபதியும்   ஏற்படுத்தினார்.   சான்றுகளை    கோவைப்படுத்தி   தர்க்கரீதியாகத்   தெளிவுடனும்    மனங்கவரும்  முறையிலும்   எழுதிச் செல்வது   கைலாசபதியின்    பாணியாகும்.

( நூல் – பன்முக   ஆய்வில்   கைலாசபதி)

 இ.மு.எ.ச.   தேசிய   ஒருமைப்பாட்டு   மாநாட்டை   ஒழுங்கு    செய்திருந்த வேளையில்   அது   தொடர்பான   பிரசாரக்   கூட்டம்   ஒன்றுக்கு    நீர்கொழும்பு வருமாறு    கைலாசபதியை   அழைத்தேன்.   மறுப்புத் தெரிவிக்காமல்    பஸ் ஏறி புறப்பட்டு   வந்தார்.    நீர்கொழும்பில்   சில   அன்பர்களுக்கு    இந்தக் கூட்டம்    உவப்பாக   இருக்கவில்லை.

முதல்   நாளே   சில  எதிர்ப்பு   சுவரொட்டிகளை   கூட்ட   மண்டபத்தின் முன்னாலிருந்த   சுவரில்   ஓட்டிவிட்டனர்.   இரவோடிரவாக   தன்னந்தனியாக   நின்று   அச்சுவரொட்டிகளை   அகற்றினேன்.    கூட்டத்தை ரத்துச் செய்யுமாறு     சில   நண்பர்கள்   தனிப்பட்ட    முறையில்   கூறினர்.

முன்வைத்த    காலை    பின்னிழுக்க   விரும்பாத   நான்,    திட்டமிட்டவாறு  கூட்டம்  நடைபெறும்    என்றேன்.

நண்பர்    மு.பஷீர்   தலைமை.    கைலாசபதி   மு.நித்தியானந்தன்,  பிரபல சிங்கள    எழுத்தாளர்    குணசேனவிதான   ஆகியோர்    உரை நிகழ்த்த   வந்தனர்.

இறுதிப்    பேச்சு   கைலாஸினுடையது.   சபை   அமைதியாக    செவிமடுத்தது.    அந்தக் காலப்பகுதியில்தான்   எம்.ஜி.ஆர்  –  தி.மு.க.வை விட்டு    வெளியேறி    அ.தி.மு.க   ஆரம்பித்து    திண்டுக்கல்   இடைத்தேர்தலில்    அவரின்   புதிய   கட்சி   அதிகப்   பெரும்பான்மையுடன்  வெற்றியீட்டிருந்தது.

எம்.ஜி.ஆர்   ஒரு   மலையாளி   என்றும்   தமிழ்நாட்டை    தமிழன்தான் ஆளவேண்டும்   என்றும்    துவேஷம்   பேசத்    தொடங்கியிருந்தது கலைஞரின்   தி.மு.க.

கைலாசபதி  தமது   பேச்சிற்கிடையே   இந்த  துவேஷம்   குறித்தும் சிலேடையாகக் கூறினார்.   எம்.ஜி.ஆரின்    முகத்தைக் காட்டி    வாக்குகள் பெற்ற    தி.மு.க.   இன்று    அவர்   வெளியேறியதும்   மலையாளி   கோஷம் எழுப்புகிறது   என்றார்.

 தீவிரவாதிகள் சந்தர்ப்பவாதிகளாக   மாறுவார்கள்   என்பதற்கு   இதனை உதாரணமாகவும்   குறிப்பிட்டார்.

கைலாசபதி    பேசிக் கொண்டிருக்கும்போது   மண்டபத்தின்   கூரையை நோக்கி    கற்கள்   வீசப்பட்டன.    நெஞ்சுறுதிமிக்க    கைலாஸ்    தொடர்ந்து  பேசி   அமர்ந்தார்.   தெருவிலே   எம்மோடு   நடந்து   பஸ்  நிலையம்  வந்து அன்று    இரவு    கொழும்புக்குப்    பயணமானார்.

மறுநாள் கொழும்பில் வெளியான அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளிலும்   முகப்பில்   தலைப்புச் செய்தியாக   புதிய  யாழ்.  பல்கலைக்கழக  வளாகத்தின்    தலைவராக  கைலாசபதி    தெரிவு   செய்யப்பட்டார்    என்றிருந்தது. 

கைலாஸ்     மறைந்துவிட்ட    பின்பு     அவரைப் பற்றிய    ஆய்வு    நூல்கள்   பல வெளியாகி விட்டன.    அவரது   பல்துறை  சார்ந்த    பன்முகப்பட்ட    பணிகள் இன்றும்    ஆய்வு செய்யப்படுகின்றன.

இலங்கையிலும்    தமிழகத்திலும்     அவரது     கருத்துக்கள்  கனதியான அந்தஸ்தைப் பெற்றுள்ளன.     பாரதியியல்     என்ற     ஆய்வு     முறையை  அறிமுகப்படுத்தியவராகவும்    கருதப்படுகின்றார்.

இத்தனை    சிறப்புகளுக்கும்    சொந்தக்காரரான     கைலாசபதியை தூற்றியும்  அவதூறு    பொழிந்தும்     அவர்     காலத்திலேயே    சிலர்  பேசினர் எழுதினர்.     எனினும்     அவற்றுக்கெல்லாம்    பதில்    அளித்து    காலத்தை விரையம்     செய்யாமல்  கருமமே     கண்ணாக   வாழ்ந்து   இலக்கிய விமர்சனப் பரம்பரை    ஒன்றை    அவர்  உருவாக்கினார்.

    அவரது    கருத்துக்களுடன்   முரண்பட்டவர்களும் கூட  தமது   படைப்புகள்  தொடர்பாக    கைலாசபதி   என்ன சொல்கிறார்  ?   என்ன   நினைக்கிறார் ?    என்பதை    அறிவதில்    ஆர்வம்    காண்பித்தார்கள்.

தமிழ்  நாவலுக்கு     நூற்றாண்டு     வந்து விட்டது    என்பதை    கைலாசபதி,  யாழ்  பல்கலைக்கழகத்தில்    ஆய்வரங்கு     மூலம்      தெரிவித்த பின்புதான்   நாமும்     அதுபற்றிச்     சிந்தித்தோம்       என்றார்    தமிழக  இலக்கிய     விமர்சகர்    சிட்டி  சுந்தரராஜன்.

1976    இல்   நடந்த   குறிப்பிட்ட    நாவல்    நூற்றாண்டு    ஆய்வரங்கில்   நானும்     கலந்துகொண்டேன்.     தமிழ்நாட்டிலிருந்து    பேராசிரியர்   தோதாத்திரியையும்     படைப்பாளி     அசோகமித்திரனையும்      கைலாஸ்  அழைத்திருந்தார்.       எனினும்      அசோகமித்திரன்     மாத்திரமே    வந்தார். தோதாத்திரியின்     கட்டுரை    ஆய்வரங்கில்    சமர்ப்பிக்கப்பட்டது.

பெரும்பாலான    பல்கலைக்கழக     பேராசிரியர்கள்   விரிவுரையாளர்கள்தான்     அந்த     இரண்டு  நாள்    ஆய்வரங்கில் கட்டுரைகளை     சமர்ப்பித்தனர்.    தமிழக    இலங்கை    நாவலாசிரியர்கள்   பலரது    நாவல்கள்    ஆய்வுக்கு    எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையின்    பிரபல    நாவலாசிரியர்கள்    டானியல்  –   இளங்கீரன்  – செங்கை ஆழியான்  –  சொக்கன்    முதலானோர்      பார்வையாளர்களாகவே   சபையில்     அமர்ந்திருந்தனர்.    அவர்களுக்கு    பேசும்    சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை.

அதனை     அவதானித்துக்கொண்டிருந்த    மல்லிகை     ஆசிரியர்    டொமினிக் ஜீவா    ஆய்வரங்கு     நிறைவுபெற்ற   தருணத்தில்   வெகுண்டு    எழுந்து   தனக்கே   உரித்தான      தர்மாவேசத்துடன்     நாவலாசிரியர்கள்    இந்த ஆய்வரங்கில்   புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்     என்று     குரல்   எழுப்பினார்.

எனினும் ,    கைலாஸ்     அதற்கு     எந்தக்கருத்தும்    கூறவில்லை. அமைதியாக    இருந்தார்.

குறிப்பிட்ட    நாவல்    நூற்றாண்டு     ஆய்வரங்கு      நாவல்   குறித்தும்   பயிலும்    பல்கலைக்கழக      மாணவர்களின்    ஆய்வேடுகளுக்கு உசாத்துணையாகத்தான்     நடத்தப்பட்டிருக்கிறது     என்ற     கருத்தும் வெளியானது.    எனினும்    கைலாஸ்    பயனுள்ள   பணியையே  இன்றும் பேசப்படும்     ஆக்கபூர்வமான     செயலையே    அன்று    மேற்கொண்டார்.    இயங்கிக்கொண்டிருப்பதுதான்     அவரது     இயல்பு.

ஆய்வரங்கின்     மதிய     உணவு    இடைவேளையில்    யாழ். பல்கலைக்கழகத்தில்     தமது    பிரத்தியேக    அறையில்    அசோகமித்திரனை   நான்     பேட்டி   கண்டு    எழுதுவதற்கும்   கைலாஸ்    பக்கத்துணையாக  நின்றார்.     அசோகமித்திரனிடம்      எத்தகைய    கேள்விகளை     கேட்டால்   சிறப்பாகவிருக்கும்    என்று     எனக்கு     ஆலோசனைகளும்   சொன்னார்.

குறிப்பிட்ட     பேட்டிக்கட்டுரை    மல்லிகையில்    வெளியானது.

தானும்    இயங்கி     தன்னைச்சுற்றியிருப்பவர்களையும்   இயங்கச்செய்வதில்     அவர்    வல்லவர்.

தினகரனில்     அவர்    பிரதம   ஆசிரியராக   பணியாற்றிய  காலத்திலும் தேர்ந்த     இலக்கிய  ரசனையை    அந்த   ஏரிக்கரைப்பத்திரிகையின்  ஊடாக வளர்த்தவர்.      தனது     நண்பர்களான    சில்லையூர்     செல்வராசன்   – காவலூர்     ராஜதுரை   –  இளங்கீரன்     உட்பட     பலரை     ஏதாவது     ஒரு இலக்கியத்தலைப்பில்    எழுதவைத்தார்.     பலரும்     தமக்குப்பிடித்தமான படைப்பாளிகள்      பற்றிய    தொடரில்    எழுதினார்கள்.

அக்காலப்பகுதியில்     யாழ்ப்பாணத்தில்     முற்றவெளியில்     தினகரன்  விழா   வெகு சிறப்பாக   நடந்தமைக்கும்  பிரதம     ஆசிரியராகவிருந்த    கைலாசபதியே     காரணம்    எனச்சொல்வார்கள்.   சிவாஜிகணேசன்   முதல் தடவையாக     இந்த  தினகரன்   விழாவுக்கு   வருகைதந்து   கலைக்குரிசில் பட்டமும்    பெற்றுக்கொண்டு    திரும்பினார்.

தினகரனில்    கேலிச்சித்திரங்களை   வரையுமாறு    சிரித்திரன் சிவஞானசுந்தரனுக்கு   களம்   கொடுத்து   ஊக்கமளித்தார்.    கைலாஸின்   இந்த    சிறப்பியல்புகளை   சிரித்திரன்   சிவஞானசுந்தரம்   தனது சுயசரிதையில்    விரிவாகப்  பதிவுசெய்துள்ளார்.

ஏரிக்கரைப்பத்திரிகைகளை    ஏகபோக   முதலாளித்துவ   சக்திகள் நடத்தியதாகவும்    அதில்   எப்படி   ஒரு   ஷோசலிஸவாதி   பிரதம ஆசிரியராகப்    பணியாற்றினார்?    என்றும்   கைலாஸ்   பற்றிய   விமர்சனங்கள்   (பூரணி  இதழில்)   வெளியானது.

கைலாஸ்    அதற்கும்   பதில்   சொல்லவில்லை.   அவரது   மௌனமும்  ஒரு பாஷைதான்.

தினகரன்   ஆசிரியர்   பொறுப்பிலிருந்து   விலகியதும்   பல்கலைக்கழக விரிவுரையாளரான   கைலாஸ்   இலக்கியத்துறை   ஆய்வுகளுக்கும் பல்கலைக்கழக   மாணவர்களுக்கும்   ஒரு   பாலமாகவே   விளங்கியவர்.   இலக்கியத்தில்   திறனாய்வு   முறையை  அவர்  ஊக்கப்படுத்தினார்.

 தமிழகத்துக்கும்  ஈழத்துக்கும்    நெறிப்படுத்தப்பட்ட   இலக்கிய   விமர்சனத் துறையை  வளம்படுத்தி  வளர்த்த    பேராசிரியராகவே   கைலாசபதி   தமிழ் இலக்கிய   வரலாற்றில்   என்றும்    பேசப்படுகிறார்.

அவரது    பல   இலக்கிய   விமர்சன   நூல்கள்   தமிழ்நாட்டில்   இன்றும் மறுபதிப்புசெய்யப்படுவதற்கும்   அதுவே    அடிப்படை.

அவர்    ஒரு   சிறந்த   நிருவாகி.   தான்   சார்ந்திருக்கும்   பணிகளை நிருவாகத்திறமையுடன்   முன்னகர்த்துவார்.   இதுபற்றி   ஒரு   நாள்   அவரிடம்    கேட்டேன்.

“  முதலில்   ஒரு   மனிதன்   தன்னைத்தான்   நிருவகித்துக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும் . உமக்கு   ஒரு  சிறு  உதாரணம்  சொல்கின்றேன். எனக்கு   தொழில்   நிமித்தம்   ஏதும்   பயணம்  இருந்தால்  அதற்கு ஒரு  வாரத்திற்கு   முன்பே   தயாராகிவிடுவேன்.   தேவைப்படும்   ஆவணங்களை தயார்படுத்திக்கொண்டு   பயணத்தை    எதிர்நோக்குவேன்.   அவ்வாறு   செய்து பழகினால்   சென்ற   இடத்தில்   அதனை   விட்டு  விட்டேன்    அதனை மறந்துவிட்டேன்   என்று   எம்மை   நாமே   நொந்துகொள்ள வேண்டிய அவசியம்   இருக்காது    அல்லவா?

ஒரு   இதழுக்கு   இந்தத்திகதியில்   கட்டுரை   தருவதாக   ஒப்புக்கொண்டால்   அதே   திகதியில்   அந்த   இதழுக்கு   சேர்ப்பித்துவிடுவேன்.   அதற்காக   இரவு நீண்ட   நேரம்   விழித்திருந்தும்   எழுதுவேன்.   எதனையும் நாளைக்குச்செய்யலாம்   என்று   ஒத்திப்போடுதல்தான்   மிகப்பெரிய    தவறு    “   என்றார்.

கைலாஸ்     எனக்கும்     முன்னுதாரணமாகத்    திகழ்ந்தவர்     என்பதற்காகவே     இந்தத்தகவலை   இங்கு     பதிவுசெய்கின்றேன்.

மல்லிகை      யாழ்ப்பாணத்திலிருந்து     வெளிவந்த     காலப்பகுதியில் கைலாசபதி    யாழ்ப்பாணம்    திருநெல்வேலியில்    குடும்பத்தினருடன்  பல்கலைக்கழக     நிருவாகம்     வழங்கிய    வீட்டில்    வசித்தார். மல்லிகைக்குரிய     அவரது    கட்டுரையை    அவரே    நேரில்    வந்து  ஆசிரியர் டொமினிக்ஜீவாவிடம்    கொடுப்பார்.     ஜீவா     இல்லையென்றால்    அங்கு அச்சுக்கோர்த்துக்கொண்டிருக்கும்     சந்திரசேகரம்    அண்ணரிடம்   கொடுத்துவிட்டுப்போவார்.

நீர்வேலியிலிருந்து     சந்திரசேகரம்    யாழ்ப்பாணம்      கே.கே.எஸ். வீதியில்   ஸ்ரீலங்கா     அச்சகத்திற்கும்    ராஜா    தியேட்டருக்கும்    இடையில்   இருந்த  ஒழுங்கையில்     மல்லிகை    காரியாலயத்திற்கு    சைக்கிளில்    வரும்பொழுது பலாலி    வீதியில்    எதிர்ப்படும்    கைலாஸ்      தமது    காரை    நிறுத்திவிட்டு சந்திரசேகரத்துடன்    சுகநலன்    கேட்டு      உரையாடுவாராம்.    தனது கட்டுரைகளுக்கு     களம்    தரும்     மல்லிகை   ஆசிரியர்    ஜீவா    மாத்திரமல்ல அவரது     கொம்போசிட்டரும்     கைலாஸின்     நண்பராகத்தான்    விளங்கினார்.

கைலாசபதியின்     திடீர் மறைவு    என்னையும்     உலுக்கியதற்கு     முக்கிய காரணம்     இருந்தது. 1982    டிசம்பர்    மாதம்    ஒரு    வெள்ளிக்கிழமை   மாலை     நானும்    நண்பர்      சபா.ஜெயராசாவும்     கைலாஸ் அனுமதிக்கப்பட்டிருந்த     கொழும்பு     பெரியாஸ்பத்திரியில்    அவரைப் பார்த்துவிட்டு  வந்தோம்.     மறுநாள்  சனிக்கிழமையன்று    ஞாயிறு    வீரகேசரி  வாரவெளியீட்டிற்காக    ஒரு   செய்தி     எழுதிக் கொடுத்தேன்.

செய்தியின்    சாராம்சம்     இதுதான்.    பேராசிரியர்       கைலாசபதி குணமடைகிறார்.

செய்தியும்     பத்திரிகையில்     பிரசுரமாகி      இலங்கையின்     அனைத்து  பாகங்களுக்கும்    போய்விட்டது.    யாழ்ப்பாணத்தில்    கைலாசின்   நண்பர்கள் , மாணவர்கள்,                   “ சேர்    உங்களைப்     பார்க்க     கொழும்பு    வருகிறோம் “   என்று      அந்தச் செய்தியைப்     படித்துவிட்டு      கடிதங்களும் Get Well   மடல்களும் அனுப்பி விட்டனர்.

கைலாஸ்     அந்தப் பத்திரிகைச்     செய்தியை     ஞாயிறன்று     படித்தார். ஆனால்,   அந்தக் கடிதங்கள் மடல்களைப்     பார்க்காமலேயே      கண்களை மூடிக்கொண்டார்.     அவரது    பூதவுடல்      வீட்டில் வைக்கப்பட்டிருந்தபொழுது     அவற்றை     தபால்சேவகர் கொடுத்துவிட்டுச்சென்றார்.

                இலங்கை      வானொலியில்      நண்பர்கள்      நுஃமானும்    செ. கணேசலிங்கனும்       இரங்கலுரை     நிகழ்த்தினார்கள்.     நுஃமான் கைலாசின்    மாணவர்.    தனது     இழப்பின்    துயரத்தை      அடக்கியவாறு பேசினார்.     ஆனால்  –    கணேசலிங்கன்     வானொலி     ஊடகம்     என்றும் பாராமல்    தனது     துயரத்தை     அடக்கமுடியாமல்    கதறி     அழுதவாறே கைலாஸ்     பற்றிய    நினைவுகளை   பகிர்ந்துகொண்டார்.

நண்பர்கள்    குமுறிக் குமுறி     அழுதனர்.    கனத்தை     மயானத்தில்   நெஞ்சை     உருக்கிய     அந்தக் காட்சி     இன்றும்     நெஞ்சமதில்    பசுமையாக உள்ளது.

கைலாசபதியின்   மறைவு     ஈடு   செய்யமுடியாத    இழப்பு       என்று வழக்கம்போன்று      பொதுப்படையாக      எழுதாமல்   –    ஈடு செய்யப்பட வேண்டிய    இழப்பு    என்றே    எழுதினேன்.

கைலாஸின்    மரணப்படுகையருகே      அவரது    அருமை   மனைவி  திருமதி.சர்வமங்களம்    கைலாசபதி   அந்த     இழப்பைத் தாங்கிக் கொண்டு  மன உறுதியுடன்   செயற்பட்டவிதம்     குறித்து   பின்னாளில்    நண்பர் பிரேம்ஜி   மல்லிகையில்   எழுதியதாக   ஞாபகம்.

இலங்கை   செல்லும்   சந்தர்ப்பங்களில்   கொழும்பில்   கைலாஸின் இல்லத்துக்குச்சென்று   திருமதி   சர்வமங்களம்   கைலாசபதியுடன்   பழைய நினைவுகளை   மீட்டி   உரையாடுவது  எனது  வழக்கம்.   அவர்  ஒரு   தொண்டு    நிறுவனத்தில்   செயற்படுவது   அறிந்து   எனது வாழ்த்துக்களைச்  சொன்னேன்.

எமது   இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்  சங்கம்  1983   மார்ச்   மாதம் பாரதிநூற்றாண்டு    விழாவை   நாடளாவிய   ரீதியில்   கொண்டாடியபொழுது   பம்பலப்பிட்டி     சரஸ்வதி      மண்டபத்தில்    பாரதி  நூல் கண்காட்சியும்  படைப்பாளிகளின்   ஒளிப்படக்கண்காட்சியும்    நடத்தினோம்.   அதற்கு   சில மாதங்களுக்கு   முன்னரே   கைலாசபதி   மறைந்தார்.   கைலாசபதியிடமிருந்த பெறுமதியான   பல   பாரதி   ஆய்வு   நூல்களை   அந்தக்கண்காட்சியில் வைப்பதற்கு   விரும்பினோம்.   எமது   விருப்பத்தை    திருமதி சர்வமங்களம்  கைலாசபதியிடம்   சொன்னவுடன்   எந்த   மறுப்போ   தயக்கமோ   இன்றி  கணவரின்   சேகரிப்பிலிருந்த  அனைத்து   பாரதி   சம்பந்தப்பட்ட நூல்களையும்   அவரே   எடுத்து   வந்து   மேசைகளில்   பரப்பி   கண்காட்சி  சிறப்பாக   நடப்பதற்கு   உதவினார்.

அவர்   கைலாசுடன்   இணைந்து   ஒரு  நூலும்   எழுதியிருப்பவர். கைலாஸின்   வெற்றிகளுக்கு   பின்புலமாகத்திகழ்ந்தவர்.          

திருமதி   கைலாசபதியை    குறிப்பிடும்பொழுது –

காதலொருவனைக்   கைப்பிடித்தே   அவன்

காரியம்   யாவிலும்   கைகொடுத்து…

– என்ற   மகாகவி   பாரதியின்   கவிதை   வரிகள்தான்   நினைவுக்கு வருகின்றன.

கைலாஸின் ஆளுமையை நினைவுகூரும் வகையில் கைலாசபதியை மீள வாசிப்போம் என்ற தலைப்பில்  இன்று டிசம்பர் 06 ஆம் திகதி முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில்  ஐந்து நாட்கள் தொடர்  கருத்தரங்கு  இணைய வழி காணொளி ஊடாக  நடைபெற ஏற்பாடாகியுள்ளது.  லண்டனிலிருந்து  பேராசிரியர் பாலசுகுமார் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்.

இலங்கை சேனையூர் அனாமிகா களரி பண்பாட்டு மையம், தமிழ்நாடு திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை , சென்னை டிஸ்கவரி புக்பெலஸ் ஆகியன இணைந்து குறிப்பிட்ட தொடர் காணொளி அரங்கினை முன்னெடுத்துள்ளன.

—0—

letchumananm@gmail.com

Series Navigationகவிதையும் ரசனையும் – 6
author

Similar Posts

Comments

  1. Avatar
    jananesan says:

    பேரா.கைலாசபதி தமிழ் இலக்கியத் திறானாய்வு முன்னோடிகளில் ஒருவர் .அவரது தமிழ் வீரயுகக் கவிதைகள் எனும் ஆய்வு சங்கத் தமிழ் பாடல்களுக்கு
    மேற்குலகில் அறிமுகம் செய்தது ; தமிழின் இலக்கியத் தனித்துவதையும்,தமிழின் தொன்மையையும் செம்மொழிக்கான கூறுகளையும் உலகறியச் செய்தது. ஆகவே கைலாசபதியின் ஆளுமைகளை நினைவுகூருவது என்பது தமிழையும் கொண்டாடுவது மட்டுமல்ல, கைலாசபதியின் ஆய்வுமுறைமைகளை இன்றைய அவசரயுகத்திற்கு மீள் அறிமுகம் செய்வதுபோலாகும்.இம்முயற்சிகள் வெல்லட்டும்.

Leave a Reply to jananesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *