‘கா•ப்கா’வின் பிராஹா -1

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

-நாகரத்தினம் கிருஷ்ணா

பாரீஸ் புறநகர் பகுதியிலுள்ள ‘வொரெயால்’ தமிழ்க் கலாசார சங்கம் என்றதொரு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த செக் (Czech) நாட்டு தலை நகரம் ‘பிராகு'(Prague)விற்கு மூன்று நாட்கள் பயணமாக சென்றுவந்தேன். பிரான்சுநாட்டில், எல்லா நாடுகளையும் போல தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் சங்கங்கள் வைத்துள்ளனர். உழைப்பு, ஊதியம், பிள்ளைகள் கல்வி என தாயகத் தமிழர்களைப்போலவே வாழ்க்கையை செலுத்துகிற அயலகத் தமிழர்களுக்கு இடைக்கிடை உற்சாகமூட்ட பண்டிகை தினங்களைக் கொண்டாடுதல், உள்ளூர் நகர நிர்வாகங்களின் உதவியுடன் வார இறுதியில் தமிழ்க் கற்பித்தல், இசை, நாட்டிய வகுப்ப்புகளுக்கு ஆவன செய்தல், வருடத்திற்கு ஒரு முறை, பெரும்பாலான அங்கத்தினர்களின் விருப்பத் தேர்வுக்கு உட்பட்ட ஊர்களுக்கு அழைத்துச்செல்லுதல் போன்றவற்றில் சில சங்கங்கள் ஆர்வமுடன் செயல்படுகிறார்கள்.

வொரெயால் பகுதி தமிழ்ச் சங்க அங்கத்தினர்களுடன் பேருந்தில் ஏற்கனவே, ரோம், ஜெனீவா, பைசா, வெனீஸ் என்றெல்லாம் பயணித்த அனுபவம் உண்டு. பின்னர் பேருந்தைத் தவிர்த்து இடையில் சில ஆண்டுகள் வேறுவகைப் போக்குவரத்து சாதனங்களில் சுகம் கண்டாயிற்று. வொரெயால் தமிழ்ச்சங்க தலைவர் இலங்கைவேந்தன் சில நெருக்கடிகளால் நிறம்மாற வேண்டியிருக்கிறதென்கிற குறையத் தவிர்த்து, தமது கடின உழைப்பு காரணமாக பாரீஸ் இந்தியத் தமிழர்களிடை அறிமுகம் பெற்றவர். மார்ச் மாத இறுதியில் அவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிராகு போகும் திட்டம் இருக்கிறது, நீங்களும் கலந்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்குமென்றார். மனதில் அழுக்கின்றி, அவர் உண்மையைத் தொட்டு; உரையாடலைத் தொடர்ந்தபோது, சுவாசத்தின் இடைவெளிகளில் இரண்டு பயணிகள் குறைந்தார்கள் அதனால் அழைத்தார் என்ற நினைப்பினை ஒதுக்கிவிட்டு, சம்மதித்தேன்.
Prague 008

Prague 018

Prague 019

Prague 024

Prague 028

Prague 031
வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் பேருந்தில் பயணிப்பதில் உள்ள சங்கடங்கள் அச்சுறுத்தின. பிரான்சு நாட்டின் வடகிழக்கில் இருக்கும் எனது நகரமான ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg)நகருக்கும் செக் நாட்டின் தலைநகரான பிராகு நகருக்கும் அதிக தொலைவில்லை; கிட்டத்தத்த 600 கி.மீ. பாரீஸ் செல்ல 500 கி.மீட்டர் ஆகிறது. அதுவும் தவிர பாரீஸிருந்து அவர்கள் செல்லும் பேருந்து பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியைக் கடந்தே போகவேண்டும், அதாவது எனதுப் பிரதேசத்தைத் தொட்டுச் செல்லவேண்டும். ஆக ஸ்ட்ராஸ்பூர்கிலிருந்து பாரீஸ் சென்று பிராகு செல்லும் பயணம் மலையைக்கெல்லி எலியைப் பிடிப்பதற்குச் சமம். ஆறுமனி நேரத்தில் சென்றடையக்கூடிய பயணத்திற்கு பதினெட்டு மணி நேரம் செலவிட்டதை நீங்கள் எப்படி எடுத்துகொள்கிறீர்களோ ஆனால் எனக்கெப்போதும் எலிக்கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மலையைக் கெல்லிப்பார்ப்பதில் விருப்பம் அதிகம். அதிலும் கடந்த சில வருடங்களாக எனது தினசரிகள் வாசிப்பு, எழுத்து, இணையம் என்ற சொற்களோடு பிணைந்த வெளியாக இருந்து வருகிறது. மனிதர்களோடு கலப்பதும், கைகோர்ப்பதும், உரையாடுவதும் குறிஞ்சிப்பூவிற்குக் காத்திருக்கும் நிலமைதான். எழுத்தென்கிற காரியம் தனிமையை வலியுறுத்தினாலும்; சலவை செய்த, ஞானம் பூசிய, மேட்டிமைத்தன சொற்கள் அலுப்புறுகிறபோது சராசரி மனிதர்கள், அவர்கள் முகங்கள், கண்கள்; குரல்கள், அவற்றின் ஏற்ற இறக்கங்கள்; குறும்புகள், கலகலப்புகள்; கேட்டறியாத பேச்சுகள், எளிமையான வார்த்தையாடல்கள் தேவைப்படுகின்றன. அவற்றை வழங்கியதில் நாராயணன் அவர் சகோதரர் திருநாவுக்கரசு இருவருக்கும் பெரும் பங்குண்டு. சக பயணிகளில் கிருஷ்ணராஜ் என்னை அதிகம் நேசிக்கும் ஒருவர். அவரது தொடர்பு முகநூல் வழியாக சிற்சில வார்த்தை பரிவர்த்தனைகளுடன் இருந்துவந்தது. கூடுதலாக சிறிது நேரம் ஒதுக்கி பேச இப்பயணம் வாய்ப்பை அளித்தது. இராமலிங்கர்மீது தீராக் காதலும் பக்தியும் கொண்டுள்ள இளைஞர் அறிவழகன் ( குறிப்பாக தமிழ் மொழிமீது அவர்வைத்திருக்கும் அளப்பரிய அன்பை மறக்காமல் இங்கே குறிப்பிடவேண்டும். அவர் உரையாடலின் பெரும் பகுதி நமது மொழிக்கு ஏதேனும் செய்யவேண்டுமே என்கிற தொனியில் இருந்தது.), குமார், சங்கர், குரோ என பயணத்திற்கு மகிழ்ச்சியூட்ட பலர் இருந்தனர்.

மே 8 2014

பாரீஸிலிருந்து பேருந்து மே 7ந்தேதி இரவு சுமார் 11.30 மணி அளவில் புறப்பட்டது. இரவு 9.30 அல்லது அதிகபட்சமாக 10 மணிக்கெல்லாம் உறங்கிவிடும் பழக்கம் கொண்டிருந்த எனக்கு இது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ‘நேரத்தில் தூங்கத் தவறினால் உனக்கு உறக்கம் வராது’ எனத் தூக்கவாச முனிவரின் சாபத்தை வாங்கிவந்திருக்கிறேன். போததற்கு சில பயணிகள் வேட்டுச்சத்தம் கேட்ட வௌவால்களாக ஆர்ப்பரிக்க, கண்களைத் தொட்ட உறக்கம் இமைகளை எட்டாமலேயே கூடுதலாக அலைக்கழித்தது. பாரீஸிலிருந்து குறைந்தது 1000 கி.மீதூரமாவது பிராகு இருக்கும். ஜெர்மன் வழியாகச் செக் நாட்டிற்குள் புக வேண்டும். மறுநாள் அதாவது மே 8 அன்று பிராகு நகரிலுள்ள ஓட்டலை அடைந்தபோது பிற்பகல் இரண்டு மணி. காலைக்கடன்கள், உணவு எடுத்துக்கொள்ள, இருநூறு கி.மீட்டருக்கு ஒருமுறை பேருந்து ஓட்டுனர்கள் மாறிக்கொள்ள என வாகனம் இடைக்கிடை நிறுத்தப்பட்டது.

கா•ப்கா வின் பிராகு நகரத்தை பிராஹா(Praha) என செக் மொழியில் அழைக்கிறார்கள். செக் நாடு வெளித்தோற்றத்தில் வளர்ந்ததொரு ஐரோப்பிய நாடுபோலவே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருப்பதால் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுள்ள எங்களுக்கு நுழைவு அனுமதி தேவையில்லை. நாங்கள் தங்கிய ஓட்டல் நான்கு நட்சத்திர ஓட்டல் எனச்சொல்லப்பட்டது. IATA அந்த ஓட்டலுக்கு நான்கு நட்சத்திரத் தகுதியை அளிக்க வாய்ப்பில்லை. ஓட்டல் கட்டிடத்தின் வெளி பராமரிப்பு கம்யூனிஸ பிடியிலிருந்த கிழக்கு ஐரோப்பியத்தின் கடந்தகாலத்தை நினைவூட்டியது. இரவானால் இருளில் பதுங்கிக்கொள்கிறது. 19வது மாடியில் எங்களுக்கு அறை ஒதுக்கியிருந்தார்கள். ஓரளவு விசாலமான அறை, சலவைமணம் குறையாத வெண்பனியை தூவியதுபோல விரிப்புகள், ஒருக்களித்து படுத்து கை நீட்டினால் வானத்தைத் தொட்டு நட்சத்திரங்களில் இரண்டொன்றை பறித்துவிடலாம், விழிமூடினால் சட்டென்று துயில்கொள்ள முடியும், சில சில்லறை அசௌகரியங்களை சகித்துக்கொண்டால், இரவை சுகமாக கழிக்க முடியும்.

மதியம் 3 மணிக்கு ஓட்டலைவிட்டு வெளியில் வந்தோம். அறையின் வெப்பத்திற்கு எதிர்பாட்டுபோல சிலுசிலுவென்று எதிர்கொண்ட காற்றைத் தழுவியபடி வீதிகளைக் கடக்கவேண்டியிருந்தது. மனிதர் நடமாட்டத்தை அதிகம் தவிர்த்த தெருக்கள். அடர்ந்த புல்வெளிகள், மரங்கள் இடையே வெளிர் பச்சை அல்லது காவிநிற மூப்படைந்த வீடுகள்; வீட்டு எண்கள் புதிதாகத் தரப்பட்டிருக்கின்றன. பழைய எண்கள் இரத்தசிவப்பு தகட்டில் இன்னமும் பளிச்சென்று மின்னுகின்றன. எதிர்ப்பட்ட இரண்டொரு முகத்திலும் மனிதர்கள் இல்லை. பெண்கள் உட்பட சிறுவர்களிடத்திலுங்கூட சின்னதாய் ஒரு மத்தாப்பு சிரிப்பு ம்..இல்லை. பெண்கள் ஏதோ யுத்த நிழலில் இருப்பவர்கள்போல முகத்தை இறுக்கிக்கொண்டு நடக்கிறார்கள். பிரான்சு நாட்டில் செக் பெண்கள் அழகாய் இருப்பதாக நினைப்பதுண்டு. பிராகு நகரத்தில் அது பொய்யென்று தோன்றியது. தங்கியிருந்த ஓட்டலில் அதற்கான விடையும் கிடைத்தது. உள்ளூர் மனிதர்களிடம் செக் அல்லது ஸ்லாவ் மொழி பேசுகையில் அழகின்றி இருக்கிற பெண் வரவேற்பாளருக்கு பிரெஞ்சில் பேசுகிறபோது ஒரு களை வந்துவிடுகிறது. புறப்படும் நாளன்று, “அதிகம் பிரெஞ்சு பேசிப் பழகிக்கொள், அழகாய் இருப்பாய் என்றேன்.

பிற்பகல் மூன்றரையிலிருந்து நான்கு மணி அளவில் Strasnicka என்கிற இடத்திலிருந்து ஒரு மூன்று அல்லது நான்கு வழித்தடங்களைக் கடந்து ம்யூசியம் என்ற இடத்திற்கு வந்தோம். பிராகு நகரத்தின் புது நகரம் என்ற பகுதியில் அது இருக்கிறது. அங்கிருந்து பார்க்க வேண்டிய இடங்களில் அனேகம் கூப்பிடு தூரத்தில் என்றார்கள். இப்பகுதி பிராஹா நகரத்தின் இதயப்பகுதி. பொதுவாக ஐரோப்பிய நகரங்களுக்கென்று ஓர் சிறப்பு இருக்கிறது. கலை, இலக்கியம், அறிவியல் என எத்துறையை எடுத்துக்கொண்டாலும் புதிய தேடலில் அக்கறைகொண்ட ஆர்வலர்களைக் கொண்டவை அவை. புதிய தேடலில் ஆர்வத்துடன் இயங்கும் இம்மக்கள்தான் தங்கள் பழமையைக் போற்றுவதிலும் பராமரிப்பதிலும் முன் நிற்கிறார்கள். இப்பண்பிற்கு செக் நாடும் அதன் தலைநகரான பிராஹாவும் ஓர் உதாரணம். கோத்திக், மறுமலர்ச்சிக் காலம், பரோக், நவீனம் அவ்வளவும், வெகுகாலம் கம்யூனிஸத்தின் பிடியில் கட்டுண்டு அண்மையில் தான் அவை சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றன என்பதை உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. முரட்டுக் கணவனிடம் வாழ்க்கைப்பட்ட பெண் விடுதலை பெற்றதுபோல அவை இருந்தன.

நேஷனல் மியூசியமும் வென்ஸ்லஸ் சதுக்கமும் (Wenceslas Square)

நேஷனல் ம்யூசியத்திலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தால் மிகப்பெரிய சதுக்கமொன்று வருகிறது. பிராஹா நகரின் முக்கியமான சதுக்கங்களில் ஒன்று என்றார்கள். அதன் தலைமாட்டில் பொஹீமிய வம்சத்தில் வந்த புனித வென்ஸ்லஸ் (St.Wencesles) குதிரையில் ஆரோகனித்திருப்பதுபோன்றதொரு சிலை. தீவிர பக்திமான் ஆனால் குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருப்பதற்கும் அவர் சுயவரலாற்றிர்க்கும் சம்பந்தமில்லை. தந்தை இறந்தவுடன் அம்மாவின் பரமரிப்புக்கு அஞசி பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவராம். இந்தப்பாட்டிக்கு மருமகளே எமனாக வந்திருக்கிறாள். கிறித்துவ மத போதனைகளைக் கேட்டுக் கேட்டு, கிறித்துவ மதத்தில் ஆழ்ந்த பற்றுடன் வளர்ந்த வென்ஸ்லஸ், ஓர் அமைதி விரும்பி. யுத்தத்தைத் தவிர்க்க எதிரிகளுக்குக் கப்பம் செலுத்தியவர். அதனைச் சகித்துகொள்ளாத அவ்ர் சகோதரனே சதி செய்து, அவர் எழுப்பிய தேவாலயத்திலேயே வைத்து கொலைசெய்கிறான். பின்னர் அவருக்கு புனிதர் பட்டம் கிடைக்கவும் அவனே காரணம் என்கிறார்கள். எல்லாக் காலத்திலும் அதிகாரத்திற்கென்று பிரத்தியேக மூளையுண்டு என்பதை வரலாறு இங்கே மீண்டும் தெரிவிக்கிறது. வென்ஸ்லஸ் சிலையிலிருந்து இருபது அல்லது இருபத்தைந்து மீட்டர் தூரத்தில் இரண்டு கறுப்பு நிற சலவைகல்லினால் ஆன பாளங்கள் (slabs) இருக்கின்றன. மெழுகு திரியைகொளுத்திவைத்துவிட்டு ஓர் இளம்ஜோடி படம்பிடித்துக்கொண்டது. சுற்றிலும் அணைக்கப்படாமல் நிறைய மெழுகுத் திரிகள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன. அருகிற் சென்று பார்த்தேன். செக் மொழியில் எழுதியிருந்தார்கள். இரவு இணைய தளத்தில் தட்டிபார்த்தபோதுதான், சோவியத் யூனியன் ஆக்ரமிப்பின்போது அவ்விளைஞர்கள் இருவரும் உயிர்ர்த் தியாகம் செய்தவர்கள் என விளங்கிக்கொண்டேன். அதில் ஒருவர் தீக்குளித்தவராம். இன்றைக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் மக்கள் குதிப்பதெனில் இச்சதுக்கத்தில்தான் கூடுகிறார்களாம். வெகுகாலம் இச்சதுக்கத்தில் குதிரை வியாபாரமும் நடைபெற்றுள்ளது. இச்சதுக்கத்தின் இரு பக்கமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆக்ரமித்திருக்கின்றன. மிச்சமுள்ள இடங்களில் துரித உணவகங்கள், தாய் மஸாஜ் நிறுவனங்கள் (9.99 யூரோவுக்கு உடம்பைப் பிடித்துவிட தாய்லாந்துபெண்கள்(?) காத்திருக்கிறார்கள்), நாணயம் மாற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைப் பார்க்க முடிந்தது. ஐரோப்பிய யூனியனில் இருந்தாலும் இங்கிலாந்தைப்போல யூரோ உபயோகத்தில் இல்லை. க்ரோனா என்கிற கிரௌன் தான் தேசிய நாணயம் ஒரு யூரோவுக்கு 27 கிரௌன். தேசிய விலை அதிகமாக தெரிகிறது. கிரிஸ்டல் பொருட்கள், வில உயர்ந்த கற்கள் அவற்றில் தயாரான மணி மாலைகள், காதணிகள், கழுத்தணிகள், கைவளைகள். பிராஹாவில் இப்பகுதியிலும் இதனை ஒட்டிய பழைய நகர வீதிகளிலுமே உல்லாசப்பயணிகளையும் உள்ளூர் மக்களையும் சுறுசுறுப்பான வியாபாரத்தையும் பார்க்க முடிகிறது. தேசிய வாக்கியம் ‘Pravda vítězí’ அதாவது வாய்மையே வெல்லும்.

(தொடரும்)

Series Navigation
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *