குதிரே குதிரே ஜானானா

This entry is part 22 of 47 in the series 31 ஜூலை 2011

நாலு நாளாக நிலை கொள்ளாமல் தவித்தார் சங்கரன். மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. ஒன்றுமில்லை. வழக்கமான விசாரிப்புகளுக்காக மகளிடம் தொலைபேசியில் பேசிய போது தொலைபேசியை எடுத்துப் பேசிய பேரனின் குரல், தாத்தா எப்படி இருக்கே என்ற அந்த மழலைக் குரல் தொடர்ந்து அவர் காதில் ரீங்காரமிட்டு ஈர்த்தது. பேரனைப் பற்றி பேசிப் பேசி வாய் ஓயவில்லை. போய் பார்த்து விடுவது என்று தீர்மானித்தார் சங்கரன். பேரனை பார்த்து விட்டுத் தான் மறு வேலை.
மனைவி பாரு தயங்கினாள். இது விடுமுறைக் காலம் இல்லை. இப்போ அங்கே போனால் அவங்களுக்கு தொந்திரவா இருக்காதா? தடுத்துப் பார்த்தாள். நியாமாகப் பட்டது சங்கரனுக்கு. ஆனால் ஒரு நாள் கூட அதற்கு மேல் தாங்க இயலாமல் தூக்கத்தில் கூட பேரன் வந்து தாத்தா, தாத்தா என்றான்.
புறப்பட்டு விட்டார் சங்கரன். பாருவுக்கும் ஆசை தான். ஆனால் நாம போய் வேலைக்கு போற அவங்களை சங்கடப்படுத்தக் கூடாது என்று ஒதுங்கிக் கொண்டாள்.
அவர் மகள் வீடு வந்து சேர்ந்தது சனிக் கிழமை ஆனதால் ஒரே சந்தோசம். தாத்தாவும் பேரனும் ஆசை தீரக் கொஞ்சிக் கொண்டார்கள். விளையாடித் தீர்த்தார்கள். நாலு காலில் கால் மடக்கி பேரனுக்காக யானை ஆகிப் போன அப்பாவைக் கண்டு நித்யாவுக்கு ஆச்சர்யம்.
யானை யானை அரசன் யானை
குட்டி யானை கொம்பன் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சதாம்
பட்டணம் எல்லாம் சுத்தி வந்ததாம்
தாத்தா சொல்லிக் கொடுத்த பாட்டை மழலையில் பாடிக் கொண்டு தாத்தா மேல் சவாரி செய்யும் மகனை கொஞ்சம் அடக்கி தாத்தாவுக்கு வயசாச்சு இறங்கு. வேற விளையாடு என்று கடிந்து கொண்டாள்.
வேற விளையாட்டா இல்லை? காலில் தொத்திக் கொண்டு,
குதிரே குதிரே ஜானானா
கும்பகோணம் போனானா
கட்டுச் சாதம் கட்டிண்டு
கண்ணி மாங்கா தொட்டுண்டு
என்ன ராகவ் இது? தாத்தா கால் போச்சு. அப்பா உட்க்கார வைச்சு விளையாடும் விளையாட்டு ஏதாவது விளையாடக் கூடாதா?
பதறினாள் நித்யா.
கதை சொல்றேன் வா. குட்டிக் கிருஷ்ணன் என்ன பண்ணினான் தெரியுமா? என்று இவர் கதை சொல்ல சொல்ல ராகவ் கண் மலர்த்தி முகம் எல்லாம் சிரிப்பாக சொல்லு சொல்லு இன்னும் சொல்லு என்று கேட்டுக் கொண்டிருந்தான்.
இரண்டு நாள் எப்படிப் போனதென்றே தெரியவில்லை. தாத்தாவுடன் குளித்து, தாத்தாவுடன் சாப்பிட்டு, தாத்தாவுடன் தூங்கிப் போனான் ராகவ்.
தன் மேல் கிடந்த பேரன் காலை மெதுவாக எடுத்து வைத்து விட்டு அவன் உறக்கம் கலையவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு எழுந்து வந்தார் சங்கரன்.
வார முதல் நாள் என்பதால் அதற்குள் வீடு பரபரத்துக் கொண்டு இருந்தது. மள மள என்று வேலைகளை முடித்துக் கொண்டு மகனை எழுப்பினாள் நித்யா.
“ராகவ் எழுந்திரு”
அங்கே ஒரு சிறு போராட்டமே நடக்கத் துவங்கியது. ஸ்கூல் போக மாட்டேன் என்று ஒரே அழுகை.
நான் வேணா… என்று முன் வந்த சங்கரன், நீங்க முந்திரிக் கொட்டையாட்டுமா அவங்க வேலையிலே தலையிடாம ஒதுங்கி இருங்க என்று மனைவியின் எச்சரிக்கை ஞாபகத்துக்கு வர அடக்கிக் கொண்டார்.
ராகவை எழுப்பி, பல் தேக்க வைத்து அரைகுறையாக எதையோ உண்ண வைத்து சீருடை அணிவித்து, பையை தயாராக்கி பள்ளி வாகனத்தில் ஏற்றுவதற்குள் அங்கே ஒரு யுத்தமே நிகழ்ந்து விட்டது போல இருந்தது. முந்தின நாள் இருந்த கணவன் மனைவி இடையிலான சிரிப்பு பேச்சு காணாமல் போய் முகத்தில் வருத்தம், கோபம், இயலாமை எல்லாம் தாங்கி ஒரு வழியாக தாங்களும் கிளம்பி சென்றனர் நித்யாவும் அவள் கணவனும்.
சங்கரன் பாருவின் தயக்கத்தை நினைத்துக் கொண்டார்.
தாத்தா வீட்டில் இருந்ததால், பள்ளி முடிந்து க்ரெச்சுக்கு செல்லாமல் குழந்தை வீட்டுக்கு வந்து விடுவது என்று முடிவாகி இருந்தது.
பள்ளி வாகனத்தில் இருந்து பாதி தூக்கத்தில் இறங்கிய குழந்தையை தூக்கிக் கொண்டு உள்ளே வந்தார் சங்கரன். காலில் உள்ள ஷூ சாக்ஸை கழற்றும் போது, அது என்ன சிவப்பாக பட்டையாக, அடடா சாக்சின் அழுத்தத்தால் காலில் தடம் பதிந்துள்ளது.
டை பெல்ட் மற்றும் உடைகளை கழட்டும் போதே அவசர அவசரமாக குழந்தை கழிவறை நோக்கி ஓடினான்.
ஏண்டா கண்ணா பள்ளியிலே போகலியா?
தாத்தா சில சமயம் அங்கே ஒரே நாத்தமா இருக்கும். அப்போ போகாம வந்துடுவேன்.
டப்பாவில் ப்ரெட் சான்விட்ச் பாதிக்கு மேல் மீதமிருந்தது.
ஏன்பா சாப்பிடலை?
பிடிக்கலை. பட்டென்று வந்தது பதில்.
தாத்தா சாதம் ஊட்டட்டுமா.
வேண்டாம்.
குட்டி கிருஷ்ணன் கதை சொல்லுவேன்.
ம்ம்.. அப்படீனா சரி.
மள மளவென்று கொஞ்சம் சாதத்தை சிறிது நெய் விட்டு சிட்டிகை உப்பு போட்டு மையப் பிசைந்து, சாம்பாரை மேலாக தெளிவாக எடுத்து சாதத்தில் சிறிது விட்டு தளர்த்திக் கொண்டு, கொஞ்சம் பொரியலை வைத்துக் கொண்டு
கண்ணன் வெண்ணையை திருடி திங்கறான்னு எப்பப் பாரு யாராவது சொல்லிண்டே இருக்காளா, யசோதா என்ன பண்ணினா தெரியுமா?
உரலிலே கட்டி போட்டா ? அப்போ …
என்று கதை சொல்லிக் கொண்டே ஒவ்வொரு வாயாக ஊட்டி விட, கண்ணனின் குறும்புத் தனத்தில் தன்னை மறந்து வாயில் போகும் உணவை குழந்தை முரண்டு பிடிக்காமல் சாப்பிட்டது.
கொஞ்ச நேரத்தில் அப்படியே கண் அயர்ந்து விட்டது. குழந்தையை தூக்கி படுக்கையில் போடும் போது அந்த சாக்ஸ் தடம் கண்ணில் பட்டது. தடவிக் கொடுக்கும் போது அவர் கண்ணில் கண்ணீர் உருண்டோடியது.
ச்சே. வெள்ளைக்காரன் போய் எத்தனை வருஷம் ஆச்சு. நம்ம ஊரு தட்ப வெட்பத்துக்கு இந்த ஷூவும் டையும் எதுக்கு? காத்து போக வழி இல்லாம. முணுமுணுத்துக் கொண்டார் சங்கரன்.

மாலை முழுவதும் விளையாட்டு என்று சொன்னானே பாரதி, அது போல் தாத்தாவும் பேரனும் விளையாடி மகிழ்ந்தனர். கண் முன்னே சோபாவுக்கு பின் ஒளிந்திருக்கும் குழந்தையை வீடு முழுக்க, காணுமே … நான் எங்கே போய் தேடுவேன்… என்று சொல்லிக் கொண்டே தேடினார். தன் பெரிய உடம்பை சிறு கதவிடுக்கில் செலுத்தி ஒளிந்து கொண்டார்.

நித்யாவும் மாப்பிள்ளையும் வந்து சேர்ந்தார்கள். கொஞ்ச நேரத்தில் மறுபடி அமளி.
ராகவ் ஹோம் வொர்க் எழுத மறுத்து அடம் பிடித்தான்.
இப்படி செய்யறான்னு தான் கிரேச்சில் டூஷனுக்கும் ஏற்பாடு செய்திருந்தேன்.
ஏம்மா மூணு வயசு குழந்தைக்கு டூஷனா? முன்னே எல்லாம் அஞ்சு வயசுக்கு மேலே தான் ஸ்கூலுக்கே அனுப்புவோம்.
அப்பா, நீங்களே பார்த்தீங்களே இப்போ. எப்படி அடம் பண்ணறான்? இவனை எப்படி படிக்க வைக்கிறது? ஸ்கூல் போக தினமும் அழுது அடம் பிடிக்கிறான். ஆரம்பத்திலே நல்லா தான் போய்கிட்டு இருந்தான். கொஞ்ச நாள் ஆனதும் அழுது அடம் பிடிக்கிறான். ஓரிரு முறை வாந்தி எடுத்து ஜுரம் கூட வந்துது. நீங்களும் அம்மாவும் கவலைப்படுவீங்கனு சொல்லலை.
ஏண்டா கண்ணா. நீ சமர்த்தாச்சே.
போ தாத்தா. கையை பிடிச்சு யாராவது எழுதினா வலிக்குது.
ஏம்மா மதியம் சான்ட்விச் வைச்சிருந்தே குழந்தைக்கு.
அவனுக்கு சாதம் எடுத்து சாப்பிடத் தெரியாதேப்பா.
கையிலே எடுத்து சாப்பிடவே தெரியாத குழந்தை பென்சில் பிடிச்சு எப்படி எழுதும் என்று நினைத்துக் கொண்டார். சொல்லவில்லை.
மறு நாள் பள்ளியில் இருந்து பெற்றோர் வந்து பார்க்கும் படி உத்தரவு. போய் விட்டு வந்த நித்யா மிகுந்த கோபத்தில் இருந்தாள்.
ராகவின் வீட்டுப் பாடம் எப்போதும் சரியாக முடிக்கப்படுவதில்லையாம். வகுப்பிலும் அவன் எழுத மறுக்கிறானாம். அவங்க மிஸ் எல்லார் எதிரிலும் சொல்றா. அவமானமா இருந்தது.
இவனை…. என்று குழந்தையை அடிக்க கை ஓங்க, சங்கரன் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியில் வந்தார்.
வா, நாம கோவிலுக்குப் போய் விட்டு வரலாம்.
வழி முழுவதும் அவரை கேள்விக் கணைகளால் துளைத்துக் கொண்டு வந்தான். சில சமயம் அவனாக ஒரு பதிலைக் கற்பித்துக் கொண்டு பேசியது அவரை பிரமிக்கச் செய்தது. என்ன ஒரு புத்தி?
ஆனால் ஏன் பள்ளிக்குச் செல்ல அழறான்? ஏன் எழுத மறுக்கிறான்? அவரின் மனதில் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

கோவில் பிரஹாரம் சுற்றி வரும் போது, அங்கிள், பின்னால் இருந்து கேட்ட குரலுக்கு திரும்பினால் அவர் நம்பர் மகள் மைதிலி. பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு, ஏம்மா நீ ஸ்டூடண்ட்ஸ் கவுன்சிலர் வேலை தானேம்மா பார்க்கிறாய். இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் கவுன்செலிங் குடேன் என்று விவரம் சொன்னார்.
மைதிலி சிரித்தாள். அங்கிள் கவுன்செலிங் தேவை தான். ஆனா குழந்தைக்கு இல்லே. அவன் டீச்செருக்கும் அவன் பெற்றோருக்கும்.
என்னமா சொல்றே?
குழந்தை ரொம்ப இயல்பா அவன் வயசுக்கேத்தா மாதிரி தான் இருக்கான். பெரியவங்களுக்குத் தான் அவசரம். வயசுக்கு அதிகமானத படிக்கறது தான் தரமான படிப்புன்னு இப்போ ஆகிப் போச்சு.
குழந்தைக்கு இப்போ மோட்டார் ஸ்கில்ஸ் வளரும் நேரம். அதற்கு உதவும் விஷயங்கள் தான் சொல்லித் தரணும். அவனுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவனுக்கு நீங்க செய்ய வேண்டியது ரொம்ப சுலபம். குழந்தையால் மெல்லிசான பென்சில் பிடித்து எழுத கஷ்டம். அதே சாக் பீஸ் அல்லது க்ரயான்ஸ் போன்ற தடித்த எழுகோல் தான் இப்போ உதவும்.
இதை வைத்துத் தான் எழுத வேண்டும் படிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லாமல் அவன் முன் இந்த வித விதமான எழுதுகோல்களை வைங்க. அப்புறம் சிலேட், போர்டு, நோட், சார்ட் ஏன் சிமென்ட் தரை இருந்தா சாக்பீஸ் குடுத்து சுதந்திரமா விடுங்க. இதிலே தான் இப்படித் தான் எழுதணும்னு ரூல் எதுவும் இல்லாம சுதந்திரமா விடுங்க. குழந்தை அவனே முன் வந்து எதையாவது எடுத்து முயற்சி செய்யட்டும். அப்புறம் பாருங்க. ஆச்சர்யப்படுவீங்க. குழந்தைகள் முதலில் தான் பார்ப்பதை வரைய முயற்சி செய்வார்கள். சிறு கிறுக்கல் போல் முதலில் தோன்றினாலும் மெல்ல மெல்ல கோடுகள்,வளைவுகள், வட்டம் என்று போடத் துவங்குவார்கள்.
ஆரம்பத்தில் பெரிதாக தான் அவர்களுக்கு எழுத வரைய வரும். நீங்க பென்சில் கொடுத்து குறிப்பிட்ட கட்டம், இரு கோடுகள் அல்லது நான்கு கோடுகள் என்று எல்லை வைத்து எழுதச் சொல்லும் போது அதை ஏற்க அவர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்கு எல்லைகள் பிடிக்காது. எழுதுவதை திருத்துவதும் பிடிக்காது. சுதந்திரமா வரையத் தான் விரும்புவார்கள். அப்படியே விட்டு நிறைய பாராட்டி பிறகு மெல்ல சிறு சிறு திருத்தங்கள் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள்.
ஸ்கூலிலே .. என்று இழுத்தார்.
அவங்க பள்ளி நிர்வாகத்திடம் பேசி குழந்தையை கொஞ்ச நாள் எழுத கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று கூறி விடுவது தான் அவனுக்கு நல்லது.
வீட்டுக்குத் திரும்பும் போதே சகலத்தையும் வாங்கிக் கொண்டு தான் திரும்பினார்.
மைதிலி சொன்னது சரி தான். குழந்தை ஒவ்வொன்றாக முயற்சி செய்து பார்த்தான்.
தாத்தா, பாம்பு வரைஞ்சிருக்கேன் பாரு.
தோ பாரு, இது சூரியன். இது பூ, இது மரம் என்று ஆர்வமாக ஏதோதோ கோடுகள் வளைவுகள் இட்டான்.
ஓரிரு நாளில் எங்க மிஸ் இப்படித் தான் A போடுவாங்க என்று முயற்சி செய்து பார்த்தான்.
என்ன ஒரு வியக்கத் தக்க முன்னேற்றம். நித்யாவால் நம்பவே முடியவில்லை. நோட்டில் எழுத மறுத்த குழந்தை போர்டில் அத்தனையும் எழுதினான்.
எப்படிப்பா? அதிசயித்தாள்.
கொஞ்சம் தடிமனான எழுகோல் தான் குழந்தைக்கு சுலபம். மேலும் அவனுக்கு கிடைக்கும் அளவற்ற சுதந்திரம். நீ நோட்டில் எழுதும் போது எத்தனைக் கட்டுப்பாடுகள் விதிக்கிறே பாரு. கோடு போட்டு எல்லை வகுத்து கட்டத்துக்கு வெளியிலே வரக் கூடாது. கீழ் கோட்டில் தொடணும், மேல் கோட்டில் தொடணும் …

முதலில் எழுத்துக்களை அடையாளம் காணத் தெரியணும். பின் எழுது கோலை பிடிக்கத் தெரியணும். உங்களுக்கு அதுக்குள்ளே அவசரம். போர்டு பரீட்சை மார்க்ஸ் பாழாய் போறதுனு குழந்தை ஸ்கூலுக்கு போறதுக்குள்ளே படுத்தினா அது தான் என்ன பண்ணும்?

இப்போதெல்லாம் ராகவ் ஸ்கூல் போக அழுவதே இல்லை. அம்மா பெல்ட் போட மறந்துட்டே பாரு. என் டைரிய பையிலே வச்சியா ? என்று அவனே பொறுப்பாக கிளம்பி விடுகிறான்.
virutchaminfo@gmail.com

Series Navigationஎன் அப்பாவுக்கும் ஒருகாதல் இருந்தது!”முந்தானை முடிச்சு.”
author

விருட்சம்

Similar Posts

2 Comments

Leave a Reply to Sathya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *