குப்பண்ணா உணவகம் (மெஸ்)

This entry is part 17 of 19 in the series 25 ஜனவரி 2015

மாம்பலம் பேருந்து நிலையத்தை ஒட்டி இருக்கும் காவலர் குடியிருப்பின் ஓரம், கொஞ்ச தூரம் நடந்தீர்களானால், உங்களுக்கு குப்பண்ணா உணவுக்கூடத்தைப் பார்க்காமல் இருக்கமுடியாது. இப்போது பெரும் வியாபார மையமாக மாறி விட்ட தியாகராய நகரின் பூர்வாசிரமப் பெயர்தான் மாம்பலம். அன்று காலாற கைவீசி நடக்கலாம். இன்று அடிப்பிரதட்சணம் கூட பிரம்மப்பிரயத்தனம்தான்.
குப்பண்ணா தன் பனிரெண்டாவது வயதில் மதராசுக்கு, அதாவது இன்றைய சென்னைக்கு வந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அன்றைக்கு ஆந்திராவுடன் இணைத்து தமிழ்நாடு, சென்னை மாகாணம் என்று தான் அழைக்கப்பட்டிருந்தது. குப்பண்ணாவின் தகப்பனார் திருவேங்கடம் கும்பகோணத்தில் பலகாரக்கடை நடத்திக் கொண்டிருந்தார். ஓரணா ரெண்டணா வியாபாரம். ஆனாலும் சுபிட்சமாக இருந்தது வாழ்க்கை. அம்மா அலர்மேல் மங்கை, வயிறு ஒட்டி, எலும்பும் தோலுமாய் காட்சியளிப்பாள். வயிறைப் போலவே அவள் பெயரும் சுருங்கி அலமேலு ஆகிவிட்டாள் காலப்போக்கில். குப்பண்ணா திருவேங்கடத்திற்கும் அலமேலுவுக்கும் ஏழாவது பிள்ளை. முன்னது அத்தனையும் பெண் பிள்ளைகள். அக்காலத்தில் கள்ளிப்பால், நெல்மணி வழக்கமெல்லாம் இல்லை. எல்லாம் பெருமாள் கொடுத்தது. ஆனால் பிள்ளை பிறந்தால் வரம், பெண் பிறந்தால் சாபம் என்று ஒரு எண்ணம் அந்தணர்களிடையே இருந்தது என்னமோ உண்மை. குப்பண்ணா பிறந்த ஒரு வருடத்திற்குள், அவருடைய அத்தனை அக்காமார்களுக்கும் கலியாணம் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட அவரது பெற்றோரின் அந்திமக் காலத்தில் பிறந்த அருமைப் புத்திரன் அவன்.
திருவேங்கடத்திற்கு தன் பிள்ளையும் தன்னைப்போலவே விறகில் கிடந்து வேகக் கூடாது என்றொரு வைராக்கியம் இருந்தது. ஆனால் விதி யாரை விட்டது?
குப்பண்ணாவிற்கு ஆறு வயது வரை பேச்சே வரவில்லை. ஊர் வைத்தியர் வந்து பார்த்தார். நாக்கு தடித்திருக்கிறது. தினமும் வசம்பு வைத்துத் தேய்க்க வேண்டும். கோரைப்புல்லை நுனியாக எடுத்து நாக்கு வழிக்க வேண்டும். கூடவே இந்தச் சூரணமும் என்று ஏதேதோ சொல்லிவிட்டு, நாலணா காசைக் கறந்து கொண்டு போய் விட்டார்.
அலமேலு தனக்கிருக்கு சொற்ப பலத்தை வைத்துக் கொண்டு, தினமும் வசம்பு தேய்த்தாள். கோரைப்புல்லால் நாக்கு வழித்தாள். கொஞ்சம்போல பேச்சு வந்தது. அவர் முதல் வார்த்தை பேசும்போது திருவேங்கடம் கடையை மூடிவிட்டு மதிய உணவுக்கு வீடு வந்தார். குப்பண்ணா வாயைத் திறந்து குழறினார்.
‘ ஏன்னா கொழந்த பேசறது ‘ என்றாள் அலமேலு. திருவேங்கடமும் ஆவலுடன் வந்து காதை குப்பண்ணாவின் வாய்க்கருகே வைத்துக் கொண்டார். காதை நனைக்கும் அளவிற்கு எச்சிலுடன் குப்பண்ணா பேசிய முதல் வார்த்தை ‘ அலுவா ‘
‘ என்னடி இது அம்மான்னு கூப்பிடுவான்னு பார்த்தா இவன் அல்வாங்கறான். இவன் சமயக்காரன் தான். விறகுதான் இவனுக்கு தலவிதி ‘ என்று தலையிலடித்துக் கொண்டார் திருவேங்கடம்.
‘ பேச்சு சரியா வரலைன்னா.. அலமேலுன்னு என் பெயரைத்தான் அலுவான்றான் ‘
தாயை விட குழந்தையின் மழலையைச் சரியாக புரிந்து கொண்டவர் எவரேனும் உண்டோ?
விடாப்பிடியாக, குப்பண்ணாவை, மன்னார்குடியில், ஏழு வயதில் குருகுல வாசத்திற்கு அனுப்பினார் திருவேங்கடம். ஒரு பத்து வருடம் அங்கேயே இருந்தானானால், உபாத்தியாயம் தொழிலாகி விடும். அதைவிட, சமையல் விலகிப் போகும். சொற்ப ஜீவனத்தில் ஒரு உருப்படி வெளியேறினால் சுமை குறையும்.
குருகுல வாசத்தில் சேர்ப்பது அப்படி ஒன்றும் சுலபமான காரியம் இல்லை. குருவின் வீட்டிலேயே தங்கி, அவருடைய பிள்ளைகள் போல இருப்பார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். அவரது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பவர்கள் அவர்கள். இன்றைய மேலை நாடுகளில், இந்திய சிறுவர்கள் வீட்டு வேலைக்குச் சென்று சித்ரவதைப்படுவதின் ஆரம்பக்கட்டம் இது. குரு கோபமாக இருந்தால், இவர்கள் பாடு திண்டாட்டம். மகிழ்ச்சியாக இருந்தால், இவர்கள் பாடு கொண்டாட்டம்.
குருவின் வீட்டில், அந்தக் காலத்தில் ஒரு கூட்டமே இருக்கும். பயிற்சிக்கு வந்த சிறுவர்கள் போக, அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என்று ஒரு கூட்டம். ஒரு கூட்டத்திற்கே அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் கல்வி பயில முடியும் அங்கே. இன்றும் பள்ளியாசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களைப் பற்றி படித்துக் கொண்டு தானே இருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் கீழ்த்தரமான செய்கைகள் எல்லாம் கிடையாது.
பணியாத மாணவர்களுக்கு தண்டனைகள் உண்டு. நூறு குடம் தண்ணீர் கேணியிலிருந்து இழுத்து உள்தொட்டியில் நிரப்ப வேண்டும். தோட்டம் சுத்தம் செய்ய வேண்டும். வீடு பெருக்க வேண்டும். துணி துவைக்க வேண்டும். இப்படி. மேற்சொன்ன வேலைகள் தினமும் உண்டு. ஆனால் எல்லா மாணவர்களும் பகிர்ந்து கொண்டு செய்வார்கள். ஆனால் தண்டனைக் காலங்களில் மற்ற மாணவர்கள் வேலை அனைத்தையுமே தண்டனைக்குரிய மாணவனே செய்ய வேண்டும்.
குப்பண்ணா மன்னார்குடி திருமலாச்சாரி வீட்டில் விடப்பட்டார். அவருடன் இருந்த மாணவர்கள், திருமலாச்சாரியின் கெடுபிடியைத் தாங்க முடியாமல் ஒன்றிரண்டு வருடங்களிலேயே ஓடிவிட்ட போது, குப்பண்ணா மட்டும் ஐந்து வருடங்கள் தாக்குப் பிடித்தது ஆச்சர்யம். அதற்குக் காரணம் அவருக்கு சுபாவமாகவே வந்து விட்ட சமையற்கலை.
மன்னார்குடி வந்த போது, குப்பண்ணாவிற்கு சமையலெல்லாம் தெரியாது. பேச்சும் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசும் அளவிற்குத்தான் இருந்தது. என்ன தைரியத்தில் திருவேங்கடம் அவரை குருகுலவாசத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதுதான் அந்தப் பகுதி அந்தணர்களின் மனதில் கேள்வியாக இருந்தது. அதைவிட ஆச்சர்யம் திருமலாச்சாரி அவரை ஏற்றுக் கொண்டது.
‘ இன்று கடை விடுமுறை ‘- என்றொரு பலகையை தொங்கவிட்டு விட்டு, மன்னார்குடி பேருந்தேறினார் திருவேங்கடம், குப்பண்ணாவுடன். கையில் ஒரு சம்புடம் நிறைய திரட்டுப்பால் இருந்தது. திருமலாச்சாரிக்கு அது நிரம்பவும் பிடிக்கும் என்று அவருக்கு யாரோ சொல்லியிருந்தார்கள். கூடவே பேருந்து நிறுத்தத்தில், ஒரு கவுளி கும்பகோணம் கறுப்பு வெற்றிலையும், பன்னீர் புகையிலையும், நெய்யில் வறுத்த சீவலும் வாங்கிக் கொண்டார். ஓலைப் பெட்டியில் அதை எல்லாம் வைத்து மேல்துண்டால் சுற்றிக் கொண்டார்.
நல்ல மத்தியான வெயிலில் குப்பண்ணாவும் திருவேங்கடமும் மன்னார்குடி வந்திறங்கினர். திருமலாச்சாரி வீடு அக்ரஹாரத் தெருவில் மேலண்டையில் இருந்தது. தெற்கு பார்த்த வீடு. வாசற் திண்ணை. இவர்கள் போகவும், திருமலாச்சாரி மதிய உணவு முடித்து விட்டு திண்ணையில் அமரவும் சரியாக இருந்தது. அவர் கையில் ஒரு பழைய ஓலைப்பெட்டி இருந்தது. துண்டால் விசிறியபடியே, ஒரு கையால் மூடியைத் திறந்து, ஓலைப் பெட்டியின் உள்ளே விரல்களால் துழாவினார். வெறும் விரல்கள் தான் வெளியே வந்தன. தன் மனைவியைக் கூப்பிட நிமிர்ந்த போதுதான் அவர் திருவேங்கடத்தையும் குப்பண்ணாவையும் பார்த்தார். அவர் பார்வை அவர்களை எடை போட்டது. தலையிலிருந்து ஆரம்பித்த பார்வை கைகளுக்கு வந்தபோது, கைகளைக் கூப்புவதற்காக தூக்கிய திருவேங்கடத்தின் கரங்களில் இருந்த துண்டு பிரிந்து லேசாக ஓலைப்பெட்டி கண்ணில் பட்டது.
நமநமவென்ற வாய்க்கு நாலாயிரமே கிடைத்த மாதிரி ஆகிவிட்டது திருமலாச்சாரிக்கு.
‘ ஷமிக்கணும்.. அடியேனுக்கு கும்பகோணம். இவன் என் பிள்ளையாண்டான். குப்புசாமின்னு பேரு. ஒங்களாண்ட உபதேசத்துக்கு விடலாம்னு.. ‘
ஓலைப்பெட்டியைப் பார்த்துக் கொண்டே தலையாட்டினார் திருமலாச்சாரி. புதுத் துண்டில் கட்டிய ஓலைப்பெட்டி, சம்புடத்தில் இருக்கும் திரட்டுப்பால் இரண்டையும் அவர் காலடியில் இருக்கும் திண்ணையில் வைத்து விட்டு, வாய் பொத்தி நின்றார் திருவேங்கடம் . சாடையாக மகனையும் வணங்கச் சொன்னார். அவன் ஒரு படி மேலே போய், காலில் விழுந்து வணங்க ஆரம்பித்தான்.
‘ இதெல்லாம் எதுக்கு? ‘ என்று ஓலைப்பெட்டியை தன்னருகில் இழுத்துக் கொண்டார் திருமலாச்சாரி. ஒரு கையால் மூடியையும் திறந்து விட்டார்.
‘ கும்பகோணம் கறுப்பு வெத்தல.. நெய் சீவல், பன்னீர் புகையிலை.. சுண்ணாம்பு தரப்படாது.. ஒறவு விட்டுப்போகும்பா.. அதான் காலணா வச்சிருக்கேன்.. ‘
சுண்ணாம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார் திருமலாச்சாரி. அவருடைய பழைய ஓலைப்பெட்டியில் அது மட்டும்தான் இருந்தது.
0
குப்பண்ணா வேதம் கற்றுக்கொண்டாரோ இல்லையோ, திருமலாச்சாரி மனைவியிடமிருந்து அனைத்து சமையல் கலைகளையும் கற்றுக் கொண்டார். ‘ குர்ப்பிரம்மா, குரு விஷ்ணுகு .. ‘ என்று மற்ற சிறுவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது மாமி, உப்பு போடு, புளி போடு என்று சொல்லிக்கொண்டிருந்தார். திருமலாச்சாரிக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது. அதனால் ‘ டேய் குப்பு.. அங்கிருந்தே இவா சொல்றதா கூடவே சொல்லிண்டு வா ‘ என்று சொல்லுவார். குருவின் சொல்லைத் தட்டாமல் குப்புவும் ‘ குருப்பிரம்மா.. உப்பு இருக்கு, குரு விஷ்ணுகு புளி இருக்கு ‘ என்று அதே ராகத்தில் சமையலும் செய்து கொண்டிருப்பான்.
குப்பண்ணாவின் பனிரெண்டு வயதில், திருமலாச்சாரிக்கு மதராசிலுள்ள மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோயிலில், அர்ச்சகராக வேலை கிடைத்தது. மாசச் சம்பளம், கோயில் வீடு என்று சுபபோக வாழ்க்கை அவரை அசைத்தது. குருகுலப் பொறுப்பை தன் பிரதம சீடன் தேவநாதனிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ரயிலேறினார். தேவநாதன் இருபது வயதில் அசாத்திய பாண்டித்யம் பெற்றிருந்தான். அது மட்டும் தன் வீட்டையும் குருகுலத்தையும் அவனிடம் ஒப்படைக்க திருமலாச்சாரியைத் துண்டவில்லை. தன் ஒரே ஒரு பெண் மைதிலியும் அவனைக் கலியாணம் செய்து கொண்டதால், பூர்வீக வீட்டை மாப்பிள்ளையிடம்தான் கொடுத்து விட்டுப் போகிறோம் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு அவர் ரயிலேறினார். அவரும் அவரது மனைவியையும் தவிர, ஒரு இலவச இணைப்பாக குப்பண்ணாவும் பட்டணம் பார்க்க ரயிலேறினார்.
திருமலாச்சாரிக்கு ஆண்டவன் சேவை. குப்பண்ணாவிற்கு மடப்பள்ளி வேலை. தட்டுக் காசில் ஒரு பகுதி குப்பண்ணாவிற்கும் வரும். சாயங்காலம் புளியோதரையும், சர்க்கரை பொங்கலும், தயிர்சாதமும் வீட்டுக்கு வரும்.
‘ நேக்கு வயசாயிண்டே போறது. கொஞ்சமானும் மந்திரங்களைக் கத்துக்கடா குப்பு. ஈ ஓ கிட்ட சொல்லி உள்ளே சேத்துண்டடறேன். ‘ என்று கெஞ்சிப் பார்த்தார் திருமலாச்சாரி. ஆனால் குப்பண்ணா ‘ மாலே மணிவண்ணா, மத்தியானம் பொங்கல்ணா ‘ என்று எதுகை மோனையோடு பாடினான். அவனுக்கு மந்திரம் உருப்போடுவதை விட, பாத்திரம் உருட்டுவது பரமானந்தமாக இருந்தது.
திருமலாச்சாரி காலம் முடிந்து, அவர் மனைவி தேவநாதனோடு போய் சேர்ந்து விட்ட பிறகு, கோதண்டராமர் கோயில் கவனிப்பார் இல்லாமல் சிதிலமாகிப் போனது. பெருமாளுக்கே விளக்கில்லாத பொழுது, மடப்பள்ளிக்கு ஏது விறகு. அப்போதுதான் வாழ்க்கையின் பெரிய கேள்விக்குறி குப்பண்ணாவின் முன் எழுந்து நின்றது.
கும்பகோணம் போகமுடியாது. அப்பா போயாச்சு. அம்மா அக்கா வீடுகளில் முறை வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளால் சில வேலைகள் ஆகும் என்பதால் அவர்களும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியக்கா பத்மா ஒருமுறை வந்தபோது சாடையாக சொல்லிவிட்டுப்போனாள்.
‘ குப்பு.. ஊருக்கெல்லாம் வந்துடாதே.. அங்க இப்ப ஒண்ணுமில்ல.. அத்திம்பேருக்கு பெரிசா வருமானம் இல்ல. அவரே மதராஸ் போலாமான்னு கேட்டுண்டிருக்கார். இங்கேயே எதையாவது ஒண்ணைப் புடிச்சிண்டு இருந்துக்கோ ‘
குப்பண்ணாவிற்கு அழையா விருந்தாளியாக எங்கும் செல்ல விருப்பமில்லை. கோயில் வீட்டை அடுத்த பட்டருக்குக் கொடுத்து விட்டார்கள். கண்ணம்மாப்பேட்டை மயானத்திற்கு அருகில், ஒற்றை வீடு பூட்டிக் கிடப்பதாக யாரோ சொன்னார்கள். பார்த்துவிட்டு வந்தார். மயானம் அருகில் என்பதால் யாரும் வர அஞ்சினார்கள். வீட்டு உரிமையாளர் ஒரு தெலுங்கு நாயுடு.
‘ மீரு தீஸ்கோண்டி.. பத்திரம் ராசி இஸ்தானு ‘ என்று சொல்லி, அப்படியே செய்தும் விட்டு, நெல்லூர் போய்விட்டார். தினம் தினம் கோயில் பிரசாதம் ருசித்ததில், அரங்கன் மகிழ்ந்து கொடுத்த வரம் அது என்று எண்ணிக் கொண்டார் குப்பண்ணா.
மயானத்தில் நுழைவாயிலில் எல்லாம் மேட்டுக்குடி மக்கள், உயர் சாதி பிரேதங்கள் எரிக்கப்பட்டன. ஏழைகள், சேரி வாசிகள், கீழ்த்தட்டு மக்களின் பிரேதங்கள் குப்பண்ணாவின் வீட்டின் பின்னால்தான் எரிந்து கொண்டிருக்கும். ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாட்களில் மாறிப்போயிற்று. பேருந்து நிலையம் வந்தது. காவல் நிலையம் வந்தது. குப்பண்ணாவின் வீட்டுக்கு அருகில் காவலர் குடியிருப்பு வந்துவிட்டது. மயானம் சுருங்கிப் போயிற்று. திராவிட ஆட்சியில் பிரேதங்களின் பாகுபாடு மறைந்து போய்விட்டது.
போக்குவரத்து அதிகமாக, குப்பண்ணா பலகாரக் கடை ஆரம்பித்தார். சுத்தமான சைவம். நெய் ஒழுகச் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, தயிர்சாதம். அவருக்குத் தெரிந்தது அதுதான். ஆனால் அதிலிருக்கும் சுவை அனைவரையும் கட்டிப்போட்டது. ஏனேன்றால் அவை தினமும் அரங்கனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டவை. முதல் கரண்டி உணவில் ஒரு துளசி கண்டிப்பாக இருக்கும்.
0
குப்பண்ணாவிற்கு இப்போது எண்பது வயது. வீடை இடித்து பெரிய உணவகமாக மாற்றியிருக்கிறார். அவரிடம் இப்போது இருபது ஆட்கள் வேலை செய்கிறார்கள். கொஞ்சம் உணவுப்பட்டியல் நவீனமாக மாறியிருந்தாலும், தொடர்ந்து கொண்டே இருக்கிறது சர்க்கரைப் பொங்கலும், வெண் பொங்கலும், புளியோதரையும். அதே போலத்தான் முதல் கரண்டி துளசியும்.
0

Series Navigationநாடற்றவளின் நாட்குறிப்புகள்“ எதுவும் மாறலாம் “ குறும்படம்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *